1.
கதவைத் திறக்கிறேன்
சொடக்குப் போடும் நேரத்திற்குள்
ஒரேயொரு சத்தம்.
2.
பூட்டிக் கிடக்கும் வீடு
நேற்றைய பூ மேல் விழுகிறது
இன்றைய பூ.
3.
கொஞ்சம் கூட சிமிட்டாமல்
பார்க்கிறது ஆந்தை
தாழிடப்படுகிறது அறை.
4.
அறையைத் திறக்கிறேன்
வெளியேறிப் பறக்கின்றன
ஒரு ஜோடி வண்ணத்துப்பூச்சிகள்.
5.
துண்டான சாலை
சலனம் இன்றி
உறங்குகிறது நாய்.
6.
புதர் மண்டிக் கிடக்கிறது
பயனற்ற பாதை
பறக்கிறது வண்ணத்துப்பூச்சி.
7.
வீழ்ந்து கிடக்கிறது மீப்பெரு மரம்
துகள்கள் பறக்கின்றன
பழைய பாதை நோக்கி.
8.
வேறொரு புதிய ஒலி
பழைய சக்கரம் சுழல்கிறது
இரவு நகர்கிறது.
9.
திருடன் ஒளி பாய்ச்சுகிறான்
மூலை வெளிச்சம்
அறையெங்கும் பரவுகிறது.
10.
முழுக்க வெற்றிடமாகும் வரை
எந்தக் கோப்பையையும் நிரப்பவில்லை
தேயிலை மணம்.
11.
கண்ணுக்குள் நுழைய முற்படுகிறது
ஒரு பூச்சி
அதன் பாதை நீளமானது.
12.
அருவி விழுகிறது
ஓங்கி விழுகிறது
ஓசைப்படாமல் பனி.
13.
வெறும் கோப்பை
நிரம்பி இருக்கிறது
யாரும் ஏதும் ஊற்றாமலே.
14.
பசி தீர்ந்த பறவை
அலகை நீவுகிறது
ஒரு சொட்டு வற்றுகிறது குளம்.
எழுதியவர்
– மா. காளிதாஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

