மரக்கறி (The Vegetarian) – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல்: “மரக்கறி ” (புலால் மறுத்த பெண் ) – The Vegetarian
ஆசிரியர்: ஹான் காங்
ஆங்கிலத்தில்: டெபோரா ஸ்மித்
தமிழில்: சமயவேல்
வெளியீடு: தமிழ் வெளி பதிப்பக வெளியீடு
முதல் பதிப்பு : அக்டோபர் 2020
பக்கம்: 224 பக்கங்கள்
விலை: ரூபாய் 220/-
புத்தகம் வாங்க: www.thamizhbooks.com
இந்த ஆண்டு நோபல் இலக்கியப் பரிசு பெற்ற நாவல். ஆசிரியர் தென்கொரியாவை சேர்ந்தவர். இந்த நாவல் 2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மேன் புக்கர் விருது பெற்றது.
*மனித பலவீனங்களையும், வரலாற்று பேரதிர்வுகளையும் அழுத்தமாக கவித்துவத்துடன்எழுதியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது என நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது .
ஆங்கிலத்தில் ” தி வெஜிடேரியன்” என்பது தமிழில் “மரக்கறி (The Vegetarian)” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாவலின் உள்ளடக்கத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக உள்ளதா என்பது விவாதத்திற்கு உரியது.
உளச்சிதைவு /மனச்சிதைவு பற்றி முக்கியமாக பேசும் நாவல் .பெண்ணியம்… பெண்ணுரிமை தீவிரத்தால் நாயகி எப்படி( நமது கண்ணோட்டத்தில் ) மனச்சிதைவுக்கு ஆளாகி துயரங்களை அனுபவிக்கிறாள்(அவளது பார்வையில்
சுதந்திரமாக.. மகிழ்ச்சி அடைகிறாள்) என்பதை
விறுவிறுப்பாக விளக்குகிறது.
“நான் ஒரு கனவு கண்டேன் ”
இருண்ட காடு.. மனித சஞ்சாரம் இல்லை ..
வழி தெரியாமல் தவித்தேன். எங்கு திரும்பினாலும் ரத்தம் சொட்டும் மாமிசத்துண்டுகள்..
பயங்கர கொடும் கனவு..
இந்த கனவு பற்றி நாவல் முழுதும் நாயகி மீண்டும் மீண்டும் பேசுகிறார்.. ஆனால் யாராலும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.
அனைத்து விதமான சைவப்பண்டங்களையும் விரும்பி ருசித்து சாப்பிட்டவள்..ருசிபட சமைக்கத் தெரிந்தவள்… தினசரி சமைத்து போட்ட நாயகி.. திடீரென “சைவி”ஆகிறார் இந்த கொடுங்கனவால்..
ஃபிரிட்ஜில் இருந்து.. சேர்த்து வைக்கப்பட்டிருந்த பால்.. முட்டை உட்பட மாட்டிறைச்சி, சிப்பி மீன் .கிம்ச்சி என்று சகலவித அசைவ பண்டங்களையும் திடீரென ஒரு நாள் காலை ..காலி செய்து விடுகிறாள் நாயகி இயாங்-ஹை..
இது ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்ட நாவல் என்று வாசகன் உணர முடியாத அளவிற்கு மிகச் சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார் திரு சமயவேல் அவர்கள்..
மிகவும் அடக்கமான பெண்.. அழகியுமல்ல.. அழகற்றவளும் இல்லை.. மையமானவள்.. நல்ல சமையல்காரி.. கணவனை கண்டபடி கேள்வி கேட்க மாட்டாள்..ஏன் லேட்டா வர்ற..எங்க போயருந்த.. யாருகிட்ட இவ்வளவு நேரம் மணிக்கணக்குல பேசுற ..ஏன் குடிச்சிருக்கிற ..இப்படி எந்த தொந்தரவும் தராதவள் . அவனை கவர்ந்து இழுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ள மாட்டாள்.
திடீரென ஒரு நாள் தான் கண்ட கொடும் கனவின் விளைவாக திடுமென சைவமாக.. சுத்த சைவமாக மாறிவிடுகிறார்.. கணவனுக்கு காலை உணவு மட்டுமே வீட்டில் இவள் அசைவமாக சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. திடீரென முழுக்க முழுக்க சைவமாக மாறிவிடுகிறாள்.. மதியம் நீ ஹோட்டலில் நீ விரும்பியதை சாப்பிட்டுக் கொள்.. நான் இனி அசைவம் சாப்பிட மாட்டேன்.. அசைவம் சமைக்கவும் மாட்டேன் என்று உறுதியாக மாறி விடுகிறார்.. திருமணம் ஆன புதிதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றுஇருவரும் முடிவு எடுத்தது .. நிரந்தரமாகவே ஆகிவிடுகிறது.. தரையில் தனியாக படுக்கிறார்.. வீட்டில் நிர்வாணமாகவே இருக்கிறாள்.. உள்ளாடை அணிவது உடலுக்கு இம்சையாக இருப்பதாக உணர்கிறாள்..
கணவன், தன் மாமனார் ..மாமியார் தன் மனைவியின் அக்கா.. அக்கா வீட்டுக்காரர் என இவர்களிடம் தன் மனைவிக்கு ஏற்பட்ட மாற்றத்தை முறையிடுகிறான் .இதை கேள்விப்பட்ட இவளின் அப்பா ஒரு கட்டத்தில் வன்முறையை கையாண்டு அவள் வாய்க்குள் மாட்டிறைச்சி துண்டை திணித்து விடுகிறார். அதை உமட்டி.. வாந்தி எடுத்துவிட்டு.. கையில் கத்தியை எடுக்கிறாள். தங்களை குத்த வருகிறாள் என்று சுற்றி உள்ளவர்கள் மிரளும்போது.. தன் மணிக்கட்டை.. தானே கத்தியால் அறுத்துக் கொள்ள இரத்தம் பீறிட்டுப் பாய்கிறது. இவளின் அக்காள் கணவன் உடனடியாக துணியால் கட்டுப்போட்டு.. அவளை தன் முதுகில் தூக்கி போட்டுக் கொண்டு ஓடி.. ஆம்புலன்ஸில் ஏற்றி ..ஆஸ்பத்திரியில் சேர்த்து கவனிக்கிறான் ..(இதையே பின்னொரு நாளில் எப்படி தவறாக பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை நாவலில் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.)

2. நாயகியின் அக்காள் கணவன் ஒரு ஓவியக் கலைஞன்.. வித்தியாசம்.. வித்தியாசமாக முயற்சித்து வெற்றி பெறுகிறான். அதன் உச்சக்கட்டமாக.. தன் மனைவியின் தங்கையின் நிர்வாண உடலில் மலரோவியம்.. பின் தன் பணியிடத்தில் சகாவாக உள்ளவனின் நிர்வாண உடலிலும் மலர்ஓவியம் ..பின் இருவரையும் இணையச் செய்து.. மலர் ஓவியங்கள் ஒன்றிணைவதாக.. காட்சிப்படம் எடுக்கிறான்.. இது போர்னோகிராஃபி அல்ல.. எனஆசிரியர் விளக்கமாக வாசகருக்கு விளக்குகிறார்..
இதற்கு எப்படி நாயகி சம்மதித்தாள்.. சம்மதிக்க வைக்கப்படுகிறாள் என்பதையும் வாசகருக்கு விரசமின்றி நாகரிகமாக விளக்குகிறார் கதாசிரியர்.
‘சைவப்பெண் “எனும் முதல் அத்தியாயத்தில் நாயகியின் கணவன்.. தன் கதையை தானே விளக்குவதாக நாவல் உள்ளது.. கனவு மட்டும் தனியே விளக்கப்படுகிறது.
இரண்டாவது அத்தியாயம் “மங்கோலிய மச்சம்” என்ற தலைப்பில் நாயகியின் அக்காள் கணவன் கதையை விளக்குகிறார்..
” கொழுந்து விட்டு எரியும் மரங்கள்” என்ற மூன்றாவது அத்தியாயத்தை நாயகியின் அக்கா கூறுவதாக நடை உள்ளது. இதை கொஞ்சம் கவனித்து வாசித்த பின்பு தான் வாசகர் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் ஒரு முறை மறுவாசிப்பு செய்யும்போது கதை தெளிவாக விளங்குகிறது.
“மணிக்கு 40 பக்கம்” என்ற வேகத்தில்.. விறுவிறுப்பாக வாசிக்கும் வகையில் ..கதையின் திருப்பங்கள் அமானுஷ்ய நாவல் போல் வேகமாகச் செல்கிறது.
இந் நூலின் மைய நோக்கம் அசைவத்தை மறுத்தலா.. இயற்கை சூழலை பாதுகாப்பதா.. பெண்ணின்உரிமைக்கான போரா.. மனச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வா.. என்றால்.. எல்லாமே கலவையாக அடங்கி உள்ளது. நாயகியின் விடாப்பிடியான.. பிடிவாதமான.. உரிமைக்கான போராட்டம்.. நாவலாகி உள்ளது.
3. தன் கணவன் ஆனாலும் சரி ..தன் அக்காள் கணவன் ஆனாலும் சரி… தன் விருப்பப்படிதான் நடப்பேன்.. இது போல தான் நம்பும் அனைத்து கொள்கைகளிலும்.. தன் மன உறுதியிலும் இறுதிவரை உறுதியாக இருக்கிறாள் இயாங்-ஹை!..
மனநல மருத்துவமனை காட்சிகள் தத்ரூபமாக விரிவாக இடம் பெற்றுள்ளது.. மனிதநேயத்தின் மகத்துவம் வியாபித்துள்ளது. தன்னை ஒரு தாவரமாக.. மரமாக நினைத்துக் கொள்ளும் நாயகி.. தலைகீழாக நின்று கை விரல்களை தரையில் ஊன்றி வேர் விடுவதாக …வேர் பரப்புவுவதாக உணர்கிறாள்..இப்படி மணிக் கணக்கில் விரதமாக இருக்கிறாள் ..தன் தங்கைக்காக பாசப் போராட்டம் நடத்தும் அக்காவும்.. ஒருவிதத்தில் மன நோயாளியாகவே மாறிப் போகிறாள்..தன் மனைவியின் தங்கையின் வாழ்வை சீர்கெடுத்த அவனும் அழிந்து போகிறான்.. இப்படி எல்லோருடைய வலிகளும்.. வாசகனின் வலிகளாக மாறிப் போகின்றன.
நூலின் இறுதியில் கனியமுது அமுதமொழி கூறுவது போல… இயாங்-ஹைக்காக கண்ணீர் சிந்தாமல் இந்த புதினத்தை கீழே வைக்க முடியாது.. என்பதை நானும் அனுபவித்தேன்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
