போபால் விஷவாயு பேரழிவை ஹிரோஷிமாவுடன் இணைத்து ‘போபோஷிமா’ என்று புகழ்பெற்ற நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யர் வர்ணித்திருக்கிறார். அது ஹிரோஷிமாவை விட எந்தவிதத்திலும் குறைவானதல்ல – இரண்டுமே மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளாகும். ‘சட்டத்தின் ஆட்சி’யால், எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரை முழுமையான பொறுப்பேற்புக் கொள்கையின் அடிப்படையில் பொறுப்பேற்க வைக்க முடியுமா? விசாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தியிருப்பதைத் தவிர, 11 மனித உயிர்களைக் கொன்று, 25 நபர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா?
சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல், மிகவும் ஆபத்தான தொழிலை நடத்தியதன் மூலம், எல்ஜிபிஐ நிறுவனம் ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகராக இருக்கின்ற விசாகா மக்களுக்கு மரண தண்டனையை வழங்கியிருக்கிறது. அபாயகரமான ரசாயனங்களின் உற்பத்தியானது, 1989ஆம் ஆண்டு அபாயகரமான ரசாயனங்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த விதிகளின்படி ஸ்டைரீன் என்ற ரசாயனப் பொருள் ‘அபாயகரமான மற்றும் நச்சு ரசாயனம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது “A வகை”யின் கீழ் வருவதால், அடஹ்ன் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமே இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு எந்தவொரு அனுமதியையும் அமைச்சகம் வழங்கியிருக்கவில்லை.
இந்த உண்மை நிறுவனத்தின் இயக்குனர் (செயல்பாடுகள்) பிட்சுக பூர்ண சந்திர மோகன் ராவ் தாக்கல் செய்த 9.5.2019 நாளிட்ட உறுதிமொழி பத்திரத்தின் மூலமாகத் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியின் வரம்பிற்கு மீறி ஆலையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதையும், 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணைய (EIA) அறிவிப்பின் கீழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், தயாரிப்பு கலவையை மாற்றியதையும் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த உறுதிமொழி வாக்குமூலத்துடன், ஹைதராபாத்தில் உள்ள மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் (SEIAA) தலைவருக்கு 2019 மே 10 அன்று சுற்றுச்சூழல் அனுமதி கோரி மோகன் ராவ் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். ’எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு விதிமீறலையும் மீண்டும் செய்யமாட்டோம்’ என்ற உறுதிமொழியை அந்த கடிதம் உள்ளடக்கி இருக்கிறது.
ஒப்புதல் வாக்குமூலம்
பாலிஸ்டைரீன் மற்றும் விரிவாக்கக்கூடிய பாலிஸ்டைரீன் உற்பத்திக்கு அபாயகரமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் என்று எல்ஜி பாலிமர் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உடல்நலத்தின் மீது, அது குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. ’அனைத்து அபாயகரமான பொருட்களும் எம்.எஸ் (லேசான எஃகு) டிரம்களில் வைத்து மூடப்பட்ட கொட்டகையில் சேமித்து வைக்கப்படும். இந்த பொருளால் மண்ணில் எந்தவிதமான மாசும் எதிர்பார்க்கப்படுவதில்லை.
இதே நடைமுறை விரிவாக்கத்திற்குப் பிறகும் பின்பற்றப்படும்’ என்று அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கத்தின் போது ஏற்கனவே இருக்கின்ற அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், ’சுற்றுச்சூழலுக்கோ அல்லது மனித உடல்நலத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ’வழங்கப்பட்ட உற்பத்தி அளவை உறுதிப்படுத்துகின்ற வகையில், நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தொடர்வதற்கான, தகுதிவாய்ந்த அதிகார மையத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி எங்கள் தொழில்நிறுவனத்திடம் இப்போது இல்லை.

இருப்பினும், ஆந்திரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து (APSPCB) பெறப்பட்டுள்ள செயல்படுவதற்கான முறையான ஒப்புதலுடன் எங்கள் ஆலை நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். மேலும், தொடங்குவதற்கான அனுமதி/ செயல்படுத்துவதற்கான அனுமதி (சி.எஃப்.இ / சி.எஃப்.ஓ) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஆந்திரப்பிரதேச மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்தியடையும் வகையில் நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை நான் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்’ என்று அந்த உறுதிமொழிப் பத்திரத்தின் 6ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி மீண்டும் உற்பத்தியை அந்த நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இந்த உற்பத்தி அலகை நிறுவுவதற்கான ஒப்புதல் 16.11.2001 அன்று ஆந்திரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து கிடைத்ததாகவும், ஒரு நாளைக்கு 233.3 டன் (233.3 டிபிடி) பாலிஸ்டைரீன் மற்றும் விரிவாக்கக்கூடிய பாலிஸ்டிரீன் 45 டிபிடி ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான ஒப்புதலை 8.5.2002 அன்று ஆந்திரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து பெற்றதாகவும் இயக்குனர் கூறுகிறார். ஆந்திரப்பிரதேச மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் 2004 மார்ச் முதல் 2018 ஜூன் வரையிலும், இதேபோன்ற ஏழு ஒப்புதல்களை வழங்கியிருக்கிறது.
பலிகடாக்களாக்கப்பட்ட மக்கள்
போபோஷிமாவின் 36 ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகும், எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளாத நிலையில், நடைமுறைப்படுத்தக்கூடிய சர்வதேச நாடுகடந்த பொறுப்பேற்பு இல்லாமையால், உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின்படியான கடமைகளைச் செயல்படுத்துவதில் விசாகா வாயு கசிவு இருண்டதொரு எதிர்காலத்தையே எதிர்நோக்கி இருக்கிறது.

தனது சொந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் உயிரைப் பற்றி கவலைப்படாதிருக்கிற அரசால், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை எவ்வாறு இத்தகைய பேரழிவுகளுக்கு பொறுப்பேற்க வைத்து விட முடியும்? போபால் முதல் விசாகப்பட்டினம் வரை, அடுத்தடுத்து வந்திருக்கும் அரசாங்கங்கள் வெட்கமின்றி லாப பசி கொண்ட, மனிதாபிமானமற்ற பெருநிறுவனங்கள் இழைக்கின்ற குற்றங்களுக்காக தன்னுடைய மக்களையே தியாகம் செய்து வருகின்றன. ஊழல் நிறைந்த ஆட்சிகளால், இந்தப் பெருநிறுவனக் குற்றங்களை சரிசெய்ய முடியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான தீர்வுகளையும் வழங்க முடியாது. இத்தகைய பொறுப்பற்ற அரசாங்கங்கள் ’சட்டத்தின்படியான தீர்வு’ என்ற முதுமொழியை கட்டுக்கதை என்றே நிரூபிக்கின்றன.
எல்ஜிபிஐயின் உண்மையான உரிமையாளர்கள் யார்?
லாபம் எங்கே போகிறது?உரிமையாளர்கள் யார்? சர்வதேச நிறுவனங்கள் பொறுப்பேற்பதில் இருந்து தப்பிக்கின்றன. உள்நாட்டு அரசாங்கங்கள் பணத்தின் சக்தியால் அடங்கிப் போகின்றனவா?
1997ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸைக் கையகப்படுத்திய எல்ஜி கெம் (தென் கொரியா) நிறுவனம், எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா (எல்ஜிபிஐ) என்று மறுபெயரிட்டுக் கொண்டது. ரசாயனங்கள், ரசாயனப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ ரசாயனங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து கிடைக்கின்ற பொருட்களைத் தயாரிப்பதாக நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் பாலிஸ்டைரீன் மற்றும் விரிவாக்கக்கூடிய பாலிஸ்டைரீன் தயாரிக்கின்ற முன்னணி உற்பத்தியாளர்கள் பட்டியலில் தானும் இடம் பெற்றிருப்பதாக எல்ஜிபிஐ கூறுகிறது.
பொதுநோக்கத்திற்கான பாலிஸ்டைரீன், விரிவாக்கக்கூடிய பாலிஸ்டைரீன் மற்றும் பொறியியல் பிளாஸ்டிக் கலவைப் பொருட்களை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. 1968ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் நிறுவனம், மதுபானத் தயாரிப்பில் முக்கிய நிறுவனமான யுபி குழுமத்தின் மெக்டொவல் கைகளுக்கு 1978 ஆம் ஆண்டு சென்றது. தென்கொரியாவின் எல்ஜி கெம் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் இருந்த பிரிவின் செயல்பாட்டை தன்வசம் எடுத்துக் கொண்டது.

இதனால் தென்கொரியாவில் பட்டியலிடப்பட்டுள்ள எல்ஜி பாலிமர்ஸின் தாய் நிறுவனமான எல்ஜி கெம் நிறுவனத்தின் பங்கு 1.94 சதவீதம் சரிந்தது. 1996 டிசம்பரில் அமைக்கப்பட்ட. அதன் மதிப்பு 23 பில்லியன் டாலர் என்று இருந்தது. தென்கொரியாவைச் சார்ந்த இந்த எல்ஜி குழுமம், 1990களின் மத்தியில், இந்திய நுகர்வோர் சந்தையில் தனது தடத்தைப் பதிக்கத் தயாரானது. 100 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்து, பங்கு பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆலையை அந்த நிறுவனம் வாங்கியது.
அந்த நிறுவனத்தின் முந்தைய உரிமையாளருக்கும், ஆந்திர அரசிற்கும் இடையிலான நிலப் பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை, எல்ஜி மற்றும் மாநில அரசு இரண்டையும் நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருந்தது. தொழில்துறை நோக்கங்களுக்காக வழங்கப்படும் நிலத்தில் சொகுசு ரிசார்ட்டை அமைப்பது, மாநிலத்தின் நில உச்சவரம்பு விதிமுறைகளை மீறுவது போன்று நிலத்தை அங்கீகாரமற்ற முறைகளில் பயன்படுத்துவது குறித்தே இருவருக்குமிடையே இருந்து வந்த சர்ச்சையின் மையம் இருந்தது.
எல்ஜி இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் எல்ஜி கார்ப்பரேஷன் போன்ற முக்கிய கொரிய நிறுவனங்களை உள்ளடக்கிய, தென்கொரிய நிறுவனமான எல்ஜி கெம்மிடம் இருந்த எல்ஜி வர்த்தக முத்திரையை இங்கே இருந்த எல்ஜி கெமிக்கல் இந்தியா பயன்படுத்துவது தொடர்பாக 2010இன் தொடக்கத்தில் மற்றொரு சட்ட சர்ச்சையும் இருந்து வந்தது.
இரண்டு இந்திய மற்றும் நான்கு கொரிய இயக்குநர்கள்
எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஹூன்சுங் சுங் இருக்கிறார். பெருநிறுவன விவகார அமைச்சகத்திடம், அந்த நிறுவனம் தாக்கல் செய்த தகவல்களின்படி, அதன் இயக்குநர்களில், பியுங்கூன் சாங், சான் சிக் சுங், பூர்ணச்சந்திர மோகன் ராவ் பிட்சுகா, சுங்கி ஜியோங் மற்றும் ரவீந்தர் ரெட்டி சுருகந்தி ஆகியோர் அடங்குவர். இயக்குனர்களில் ஒருவராக உள்ள ஹியூன் சியோக் ஜங், எல்ஜி கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (புது டெல்லி), எல்ஜிசி பெட்ரோ கெமிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (மும்பை) மற்றும் எல்ஜி கெம் லைஃப் சயின்சஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (புது டெல்லி) ஆகிய மூன்று நிறுவனங்களின் இயக்குநராகவும் உள்ளார்.
நிறுவனம் தாக்கல் செய்த தகவல்களின்படி, 2018ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நிகர மதிப்பு 479.60 கோடி ரூபாய். நிகர வருவாய் ரூ.1570 கோடியாக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு நிகர வருவாய் ரூ.1497 கோடியாக இருந்தது. வரிக்குப் பிந்தைய லாபம் 2018இல் ரூ.3.6 கோடியாகவும், 2017இல் ரூ.68.3 கோடியாகவும் இருந்தது.
தேசிய பசுமை தீர்ப்பாய (என்ஜிடி) உத்தரவு

எரிவாயு கசிவை விரைவாக அறிந்து கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், மே 8 அன்று எல்ஜிபிஐ நிறுவனம் ஆரம்பத் தொகையாக ரூ.50 கோடியை விசாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.’உயிர், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைப் பற்றி கிடைத்திருக்கும் முதல் தகவல்களின் அடிப்படையில், எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஆரம்பத் தொகையாக ரூ.50 கோடியை விசாகப்பட்டினம் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் டெபாசிட் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவு இந்த தீர்ப்பாயத்தின் மேலதிக உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது’ என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிறுவனத்தின் நிதி மதிப்பு மற்றும் கசிவு காரணமாக ஏற்பட்ட சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு தீர்ப்பாயம் இந்த தொகையை அளவிட்டிருந்தது.
வழக்குகள்: ஒரு மோசமான அனுபவம்
இன்றுவரை உலகிலேயே மிக மோசமான தொழில்துறை பேரழிவாக இருந்து வருகின்ற போபால் சோகம் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்காமல் விட்டு வைத்துச் சென்றிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைட் மற்றும் இப்போது தென்கொரியாவைச் சேர்ந்த எல்ஜி கெம் போன்ற பன்னாட்டு பெருநிறுவனங்களால் மீறப்பட்டிருக்கும் பெருமளவிலான மனித உரிமைகள் மீறலுக்கான எந்தவொரு தீர்வையும் சட்டத்தால் வழங்க முடியுமா என்ற கேள்விக்குறியை எழுப்புவதகாவே அது இருக்கின்றது.
போபால் வழக்கில் கிடைத்திருக்கின்ற அனுபவம், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்காது அல்லது பெருநிறுவன குற்றவாளிகளுக்கு எதிராக நம்மால் குற்றவியல் சட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்பதையே நிரூபிக்கின்றது. இழப்பீட்டைக் குறைப்பதற்காக, ஃபாலி எஸ்.நாரிமன் போன்ற மிகப்பிரபலமான இந்திய வழக்கறிஞர்களை மிகப்பெரிய நிதி வலிமையுடன் உள்ள யூனியன் கார்பைடால் நியமிக்க முடிந்தது. அதே நேரத்தில், போதுமான தீர்வை வழங்குவதற்கான அமைப்பு இல்லாமல், மனித உரிமை மீறலுக்கு எதிராகத் தொடர்ந்து தனது வேதனையையும், மன உளைச்சலையும் மட்டுமே புகழ்பெற்ற பேராசிரியர் உபேந்திர பாக்ஸியால் வெளிப்படுத்த முடிந்தது.

’பெருநிறுவன அலட்சியம்’ என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக ஒவ்வொரு பெருநிறுவனமும், பராமரிக்கப்படாது சிதைந்து போயிருக்கும் வசதிகள், பாதுகாப்பு குறித்து இருக்கின்ற பலவீனமான அணுகுமுறை, சரியாகப் பயிற்சி பெறாத தொழிலாளர்கள் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து, ஒழுங்காகச் செயல்படுகின்ற பாதுகாப்பு வசதிகள் இல்லாமல், கவனக்குறைவாக கசிவை ஏற்படுத்துகின்ற தொழிலாளர் நடவடிக்கைகள் என்ற உச்சக்கட்டத்தை அடைவதாலேயே இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுவதாக வாதிடுகின்றன.
தங்களுடைய வடிவமைப்பு, இயந்திரங்கள் மற்றும் பயிற்சிகள் இயல்பிலேயே குறைபாடுகளுடையவை என்பதை எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும் ஒப்புக் கொள்ளவதே இல்லை. மேலும் அவை பேரழிவை ஏற்படுத்துகின்ற காலாவதியாகிப் போன கருவிகளையே ஏற்றுமதி செய்கின்றன. ஒருபோதும் இந்தியாவில் நடைபெறுகின்ற செயல்பாடுகளைத் திறம்பட மேற்பார்வையிடுவதே இல்லை.

போபால் பேரழிவிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட சட்டங்கள் இந்த ராட்சதர்களால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின்படி, அனைத்து அனுமதிகளையும் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான அக்கறையை, இந்த நிறுவனங்களின் செயலாட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
செவினும், ஸ்டைரீனும்
1984இல் ஏற்பட்ட பேரழிவிற்கு யூனியன் கார்பைடு (யூ.சி.ஐ.எல்) எம்ஐசி என்ற ரசாயனத்துடன் தயாரித்த பூச்சிக்கொல்லியான செவின் காரணம் என்றால், இப்போது ஸ்டைரின் என்ற ஒற்றைப்படி காரணமாகி இருக்கின்றது. அளிக்கப்பட்ட குற்றவியல் புகாரில், மே 7 அதிகாலை 3.30 மணியளவில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், கோபாலபட்டினத்தில் அமைந்திருக்கும் எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா நிறுவனத்திலிருந்து வெளியேறிய வாயு, எட்டு பேரைக் கொன்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது பாதுகாப்பைத் தேடி ஆயிரக்கணக்கானோரை வயல்கள், சாலைகளில் பயத்துடன் தப்பி ஓடச் செய்தது.
கசிந்த அந்த விஷ வாயு விலங்கு மற்றும் தாவர வாழ்க்கையையும் பாதித்தது. நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்து விழுந்தனர். 1984ஆம் ஆண்டில் எந்தவொரு சுற்றுச்சூழல் சட்டமோ அல்லது சர்வதேச பொறுப்பேற்பு கொள்கையோ இருக்கவில்லை. அந்த துயரத்தின் படிப்பினைகளைப் புரிந்து கொண்டு இந்தியா புதிய சட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் அமைப்புகளை வலுப்படுத்தியிருக்க வேண்டும். செயல்முறை பாதுகாப்பு மற்றும் இடர் நிர்வாகத்தை உருவாக்குவதற்காக, நிறுவனங்கள் புதிய ரசாயன அவசரகால முன்தயாரிப்பு நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டது.

சாத்தியமான கசிவுகள் மற்றும் நெருக்கடி மேலாண்மை அமைப்புகள் குறித்து அரசாங்கத்திற்குத் தெரிவிப்பது நிர்வாகங்களுக்கான கடமையாக விதிக்கப்பட்டது. போபால் வாயு சோக நிகழ்விற்குப் பிறகு, ஒலியம் வாயு கசிவு வழக்கில், உச்சநீதிமன்றத்தால் முழுமையான பொறுப்பேற்பு கொள்கை வகுக்கப்பட்டது. பின்னர் அது பாராளுமன்றத்தால் சட்டமாக்கப்பட்டது. அந்த 1991ஆம் ஆண்டு பொது பொறுப்பேற்பு காப்பீட்டு சட்டத்தின்கீழ், தொழிற்சாலை நிர்வாகத்தில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பேற்பிற்கான ஆதாரங்கள் குறித்த கேள்விகளை எழுப்பாமல், உடனடியாக ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெறுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தகுதியுடையவர்களாகிறார்கள். .
முழுமையான பொறுப்பேற்பு: நம்மால் செயல்படுத்த முடியுமா?
’ஒரு நிறுவனம் அபாயகரமான அல்லது இயல்பாகவே ஆபத்தான செயலில் ஈடுபடும் போது, அதுபோன்ற அபாயகரமான அல்லது இயல்பாகவே ஆபத்தான செயல்பாட்டால் ஏற்படுகின்ற விபத்து காரணமாக யாருக்கும் அது தீங்கு விளைவிக்கலாம். எடுத்துக்காட்டாக, நச்சு வாயு வெளியேறிய விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்குவதற்கு, கண்டிப்பாக அந்த நிறுவனம் முற்றிலும் பொறுப்பேற்க வேண்டும்.
அத்தகைய பொறுப்பேற்பு 1868ஆம் ஆண்டு ரைலாண்ட்ஸ் எதிர் பிளெட்சர் என்ற ஆங்கிலேய வழக்கில் ஏற்படுத்தப்பட்ட விதியின் கீழ் இருக்கின்ற, முழுமையான பொறுப்பேற்பிற்கான தவறான கொள்கைகள் தொடர்பாக நடைமுறைத்தப்படும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டதல்ல’ என்று உச்சநீதிமன்றம் வரையறுத்துக் கூறியது. முழுமையான பொறுப்பேற்பு என்பது எந்த விதிவிலக்குகளும் இல்லாத மிகக்கடுமையான பொறுப்பேற்பாகும்.
’அச்சுறுத்தலாக இருக்கின்ற அபாயகரமான அல்லது இயல்பாகவே ஆபத்தான தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் தொழிற்சாலையில் பணிபுரியும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நபர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு கடன்பட்டிருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம். தான் மேற்கொண்ட அபாயகரமான அல்லது இயல்பாகவே ஆபத்தான செயலின் காரணமாக யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதை உறுதி செய்வது, அந்த நிறுவனம் சமூகத்திடம் கொண்டிருக்கும் முழுமையான, வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாத கடமையாகும்’ என்று நீதிபதி பி.என்.பகவதி அந்த வழக்கில் கூறினார்.
மிக உயர்ந்த பாதுகாப்புடன் தன்னை நடத்திக் கொள்ள வேண்டும், ஏதேனும் தீங்கு விளைவித்தால் முற்றிலும் அதுவே பொறுப்பானது. ’அனைத்து வகையிலும் தேவையான நியாயமான கவனிப்பை மேற்கொண்டதாகவும், தன்னுடைய பங்கில் இருந்த அலட்சியத்தால் தீங்கு ஏற்பட்டது என்று கூறுவதற்கு இல்லை’ என்று நிறுவனத்தின் பதில் இருக்கக்கூடாது.

குறிப்பிடப்பட்ட வழக்குகளில் இழப்பீட்டை அளவிடும் போது, அந்த நிறுவனத்தின் அளவு மற்றும் திறனுடன் அதனைத் தொடர்புபடுத்த வேண்டும் என்று குறிப்பிடத்தக்க மற்றொரு விதி உள்ளது. அத்தகைய இழப்பீடு ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருக்கும். பெரிய அளவிலான வளமான நிறுவனம் தர வேண்டிய இழப்பீட்டின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். உயர் நீதித்துறையிலிருந்து வருகின்ற உன்னதமான கவிதை மேற்கோள்களைப் படிப்பது சிலிர்ப்பாக இருக்கிறது. இந்த அருமையான நீதிக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை நம்மால் செயல்படுத்த முடியுமா?
1986ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் (இபிஏ) உருவாக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தில் 1987ஆம் ஆண்டு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டது. பாதுகாப்பு உள்ளிட்ட தொழிற்சாலையின் விவகாரங்களுக்கான பொறுப்பைக் குறிக்கின்ற இடத்தில், குறிப்பிட்ட நிறுவனத்தின் இயக்குநரைச் சேர்ப்பதற்காக ‘அனுபவிப்பவர்’ என்று சட்டத்தில் இருந்த சொல் மறுவரையறை செய்யப்பட்டது.
ஏற்படும் ‘தீங்கு’ மற்றும் ‘பேரழிவு’ தொழிற்சாலை வளாகத்திற்கு மட்டுமல்லாது, தொழிற்சாலை அருகிலேயே வசிக்கும் மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டு மற்றொரு பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. விபத்து ஏற்பட்டால், பாதுகாப்புக் கடமைகளைச் செயல்படுத்த உரிய விடாமுயற்சியுடன் செயல்பட்டிருப்பதை நிரூபிக்க வேண்டியது அனுபவிப்பவரின் கடமையாகும் என்று திருத்தப்பட்ட தொழிற்சாலைகள் சட்டம் கூறுகிறது.
ரூ.50 கோடிக்குக்குள் அந்த அலகின் மூலதனத்தை விடக் குறைவாக இருக்காத வகையில், தொழில்துறை உரிமையாளர்கள் காப்பீட்டு பாலிசிகளைப் பெற வேண்டும் என்று 1991ஆம் ஆண்டு பொது பொறுப்பேற்பு காப்பீட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதற்கான தொகை குறித்த வரம்பு எதுவுமில்லாமல், அபாயகரமான தொழில் நிறுவனங்களுக்கு காப்பீடு செய்வதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் விரும்பவில்லை என்பதால், அந்த சட்டம் 1992ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.

மரணம், கடுமையான காயம், வேலை இழப்பு அல்லது சொத்து சேதம் ஏற்படும் இடங்களில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் செலுத்த வேண்டிய தொகைகளுக்கான வரம்புகளை மாசு பொறுப்பேற்பு காப்பீடு நிறுவனம் (பி.எல்.ஐ.ஏ) நிர்ணயித்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, சேதத்தை நிரூபித்து, பரிந்துரைத்ததைவிட கூடுதலான தொகையை இருந்து வருகின்ற நெறிமுறைகளின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.
பிரபல வழக்கறிஞரின் சேவைகளைப் பெற முடிகின்ற எல்ஜிபிஐ நிறுவனத்திற்கு எதிராக, விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கோபாலப்பட்டினம் கிராமத்தில் தனது குழந்தையை விஷ வாயுவிலிருந்து காப்பாற்ற முடியாத பெற்றோரல் வழக்கைத் தொடர முடியுமா? தங்களுடைய அறிவாளித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுடைய கடின உழைப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்துடன் நல்லுறவைக் கொண்டிருக்கும் ஃபாலி எஸ்.நாரிமன் போன்ற பிரபலங்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படும் போது, விசாகாவில் இருக்கின்ற கிராமவாசி அவர்களுக்கு எந்தவிதத்திலும் சமமானவராக இருக்க மாட்டார். சொல்லப் போனால், தென்கொரியாவை தளமாகக் கொண்டு செயல்படுகின்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக ஆதரவு திரட்ட டெல்லிக்குக்கூட அவரால் செல்ல முடியாது.
குற்றவாளிகளும் குற்றவியல் சட்டமும்
போபாலில் அப்பாவி மற்றும் ஏழை மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர். விசாகா வாயு கசிவு மூலம் 11 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதுபோன்ற கொலைகளுக்கு தண்டனை விதிப்பது நம் அமைப்பில் கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாதது. குற்றத்துக்குரிய கொலைக்கு கூட இங்கே வழக்குகள் போடப்படாது. சட்டப் புத்தகங்களில் மட்டுமே சட்டங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் இருக்கின்ற நடைமுறைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு அனுமதி தராது.
1996ஆம் ஆண்டு இந்திய தலைமை நீதிபதி ஏ.எச்.அஹ்மதி யூனியன் கார்பைடு தலைவர், வாரன் ஆண்டர்சன் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 304 – II இன் (குற்றத்துக்குரிய கொலை) கீழ் தொடரப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டார். அந்த செயல் இந்திய ஒன்றிய அரசு தனது அரசியலமைப்புடன் யூனியன் கார்பைடிடம் சரணடைந்ததற்கு ஒப்பானதாகும். குறைபாடுள்ள அந்த உச்சநீதிமன்ற உத்தரவு சர்வதேச குற்றவாளிகளுக்கு பாதுகாப்பையும், இந்திய குற்றவாளிகளுக்கு குறைந்த சிறைத்தண்டனையையும் விதிக்க வழிவகுத்தது. போபால் படுகொலைக்குப் பின்னர், முப்பது ஆண்டுகளாக காத்துக் கிடந்த ஒட்டுமொத்த இந்திய அமைப்புக்களும், 2014 செப்டம்பர் 29 அன்று வாரன் ஆண்டர்சன் (92) இறந்து போன போது, அவரைத் தண்டிக்கின்ற சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவே உணர்ந்தன.
’நீதிபதி அஹ்மதி ஓய்வு பெற்றதும், யூனியன் கார்பைடின் நிதியுதவியால் உருவாக்கப்பட்ட போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளைக்கு வாழ்நாள் தலைவராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார் என்பது ஒரு முரண். போபால் கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்பைட் அதிகாரிகளுக்கு அஹ்மதி நிவாரணம் வழங்கினார் என்ற அடிப்படையிலேயே அவரது நியமனம் இருப்பதாகக் கூறி வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அதை எதிர்த்தார்’ என்று மூத்த பத்திரிகையாளரும், மனுதாரருமான ராஜ்குமார் கேஷ்வானி எழுதியுள்ளார்.

சிபிஐ மக்கள் பக்கம் வலுவாக நின்றது. சிபிஐயின் சார்பாக ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அல்தாஃப் அகமது, குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே எம்.ஐ.சி என்ற ஆபத்தான வாயு கசியும் ஆபத்து குறித்து பொதுவான குற்றவியல் அறிவைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பதை, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய குறைபாடுகளுள்ள ஆலை, வரதராஜன் நிபுணர் குழுவால் கண்டறியப்பட்ட செயல்பாட்டு குறைபாடுகள் மூலமாக நிரூபிப்பதற்குப் போதுமான ஏராளமான ஆதாரங்களைக் காட்டினார்.
ஆனால் முதல் தகவல்களின் அடிப்படையிலான வழக்கு கூட இல்லை என்றே தலைமை நீதிபதி அஹ்மதி மற்றும் நீதிபதி எஸ்.பி.மஜும்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு கருதியது. கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர். அல்தாஃப் அகமது சோகத்துடனும், அதிருப்தியுடனும் இருந்தார். ’உச்ச நீதிமன்றம் தவறு செய்து விட்டது …. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பதை யூனியன் கார்பைடு நிர்வாகம் அறிந்திருந்தது. அதனால் ஏற்பட்ட கசிவு அந்த சோகத்தை ஏற்படுத்துவதற்கான தனித்துவமான சாத்தியத்தைக் கொண்டிருந்தது’ என்று அவர் கூறினார்.
கேசுப் மஹிந்திரா – யூனியன் கார்பைடின் (யு.சி.ஐ.எல்) இந்தியக் குழுவின் தலைவர்; வி.பி. கோகலே – நிர்வாக இயக்குநர்; கிஷோர் காம்தார் – துணைத் தலைவர்; ஜே முகுந்த் – பணி மேலாளர்; எஸ்.பி சவுத்ரி – தயாரிப்பு மேலாளர்; கே.வி.செட்டி – ஆலை கண்காணிப்பாளர்; எஸ்.ஐ. குரேஷி – தயாரிப்பு உதவியாளர் ஆகியோர் மீது அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2010ஆம் ஆண்டு அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஏழு பேர் முன்னாள் ஊழியர்கள்; அவர்களில் சிலர் தங்களுடைய 70 வயதுகளில் இருந்தவர்கள்.
அவர்கள் ஒவ்வொரும் ரூ. 1 லட்சம் (£ 1,467; $ 2,125) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட வாரன் ஆண்டர்சன் பின்னர் நீதிமன்றத்தால் “தப்பியோடியவர்” என்று அறிவிக்கப்பட்டாலும், அந்த தீர்ப்பில் அவர் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. போபாலில் சோகம் நடந்த இடத்தைப் பார்வையிட ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்தபோது, முறையாக கைது செய்யப்பட்டு, கான்ஸ்டபிள் ஒருவர் தந்த பிணையத் தொகையின் அடிப்படையில் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போபால் மாவட்ட மாஜிஸ்திரேட் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கான விரைவு நடவடிக்கைகளையும், விமானத்திற்கு பாதுகாப்பாக அவரை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தார்.
ஆண்டர்சனை மிரட்டுவதற்கு எதிராக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்ததாக செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. மத்தியப் பிரதேச அரசு 330 கோடி டாலர் இழப்பீடு கோரியிருந்தாலும், 1989ஆம் ஆண்டு 47 கோடி டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை குறைக்கப்பட்டது. அது பின்னர் உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு மேல், யூனியன் கார்பைடுக்கு இருந்த பொறுப்பேற்பை அமல்படுத்துவதற்கு எதுவும் நடக்கவில்லை. உலகின் மிக மோசமான பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வு இல்லாமல் வழக்கு முடிந்தது.
கசியும் வாயுக்களை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கான உரிய விளம்பரங்களைக் கொடுப்பது அத்தகைய விஷ வாயுக்களைக் கையாளுகின்ற தொழிற்சாலைகளின் கடமையாகும். கசிவு குறித்து முன்கூட்டியே அறிவிக்கின்ற எச்சரிக்கை முறை அங்கே இருக்க வேண்டும். கசிவு ஏற்பட்டால் உடனடியாக ஒலிபெருக்கி மூலம் எவ்வாறு தப்பிப்பது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்களைப் பொறுப்பேற்றுக் கொள்ள வைக்க வேண்டும். நாடுகடந்த பணக்கார நிறுவனங்களிடையே இல்லாத மனித வாழ்க்கையை மதிக்கும் தன்மை அரசிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்குகள் எதுவும் இல்லாமலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான பொறுப்பேற்பு, முழுமையான இழப்பீடு ஆகியவை ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட வேண்டும். பேரழிவுகளை எளிதாக்கும் வகையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்பட வேண்டும். கொடூரமான கொலைகாரர்கள் என்பதால், கொலையாளிகளை தெருவில் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரபலமாக இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற அபாயகரமான மற்றும் விஷ வாயு கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளை அப்படியே விட்டுவிட வேண்டுமா?
லைவ் லா இணைய இதழ், 2020 மே 11
தமிழில்
தா.சந்திரகுரு