இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று கடந்த மார்ச் 2020இல் உருவான முதல் அலையிலும் பிப்ரவரி 2021இல் உருவான இரண்டாவது அலையிலும் பெருமளவிற்கு வாழ்வாதார நிலையிலும், நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர் முறைசாரா தொழிலாளர்களும், சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களாகும். இவர்களின் வேலை இழப்பு, சமூகப் பாதுகாப்பற்ற நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து கால்நடையாகவும் வேறுபல வழிகளிலும் சொந்த ஊர்களுக்குச் சென்றடையப் பட்ட துன்பங்கள் ஏராளம். வழிப்பயணத்தில் பலர் உயிரிழந்தனர், சொந்த ஊரில் இவர்களை ஏற்றுக்கொள்ளாத நிலை, தங்களின் ஊர்களில் வாழ்வாதாரம் இன்றி எதிர்கொண்ட சவால்கள் அதிகம். கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சுத்திகரிப்பான் கொண்டு கை கழுவுதல், சமூக இடைவெளி மேற்கொள்ளுதல் போன்ற நோய்த்தொற்று பாதுகாப்பு முறைகளை இவர்களால் பின்பற்ற இயலாத நிலையே உள்ளது. இந்தியாவில் குடும்ப உறுப்பினர்களின் சராசரி எண்ணிக்கை 4.45 ஆகும். 60 விழுக்காடு மக்கள் ஒரு அறை உள்ள வீடுகளில் வசிக்கின்றனர். இந்த நிலையில் தனிமனித இடைவெளி, வீட்டில் தனித்திருப்பது சாத்தியம் இல்லாமல் போனது.
கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கையில்லை, ஆக்சிஜன் இல்லை, போக்குவரத்து இல்லை. நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியாமல் கையறு நிலையில் இந்த வெகுஜன மக்கள் இருந்து வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றினால் மட்டுமே இந்த நிலை ஏற்பட்டதா என்றால் இல்லை, இம்மக்களைப் பொறுத்தவரையில் இது இந்தியாவில் இயல்பான நிலையாகவே அறியப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமான சமவாய்ப்பினை உறுதிசெய்யவேண்டும் என்கிறது. சுகாதாரப் பாதுகாப்பு பொருளாதார மேம்பாட்டின் அடித்தளமாகும்.
அனைவருக்கும் சமமான சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பு என்பதுதான் இந்திய அரசின் குறிக்கோள். இந்தியா சுதந்திரம் பெறும்போது அமைக்கப்பட்ட போரா குழு (1946) இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு சேவையினை அளிக்கக் குறிக்கோள் வகுக்கப்பட்டது. இதுபோன்றே முதலியார் குழு (1962). சந்தா குழு (1964) போன்றவைகளும் மருத்துவப் பாதுகாப்பினை அளிப்பது குறித்துப் பரிந்துரைத்தன. அல்மா அட்டா (1978) பிரகடனமான அனைவருக்குமான சுகாதாரம் என்ற இலக்கினை அடையத் தொடர்ந்து கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதார சேவைகள் பொது மற்றும் தனியார் துறைகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் பொதுச்சுகாதார மையங்கள் செயல்பட்டாலும் தனியார் துறையின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. கிராமப்புறங்களில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பொதுச்சுகாதார மையங்களை அதிக அளவில் நாடுகின்றனர். இது துணை, முதன்மை, சமூக சுகாதார மையங்கள் வழியாகச் சேவையினை வழங்கி வருகிறது. ஆனால் பெரும்பாலான சுகாதார மையங்கள் IPHS வழிகாட்டு நெறியின்படி நிதி ஒதுக்கீடு பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவு சுகாதார வெளிப்பாடுகள் (குழந்தை இறப்பு வீதம், பேறுகால இறப்பு, ஆயுள் எதிர்பார்ப்பு, தடுப்பூசி பெறுதல்) போதுமான அளவில் குறிக்கோள்களை அடையவில்லை. மேலும் பொது சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச அளவான ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடுக்கு கீழ் இருப்பதால், சுகாதார பாதுகாப்பு சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரிடையே சென்றடையவில்லை. மருத்துவச் செலவிற்கு மக்கள் சொந்த பணத்தை 64.2 விழுக்காடு செலவிடுகின்றனர். இது உலக அளவில் 18.2 விழுக்காடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை-எளிய மக்கள், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள் அதிக அளவிலான மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் சொந்த சொத்துக்களை விற்கவும், கடன் பெறவும் உந்தப்படுகின்றனர். இந்த நிலையினால் ஆண்டுக்கு 63 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாகக் கிராமப்புறங்களில் மருத்துவச்செலவினை எதிர்கொள்ள முடியாமல் பெருமளவிற்கான மக்கள் கடன் சுமையுடன் உள்ளனர். இதனால் மக்களிடையே சுகாதார பாதுகாப்பு சம அளவில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது புலப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் பல கோணங்களில் ஆய்வுத் தளங்களில் விவாதிக்கப்படுகிறது. நடைமுறையில் வட்டாரம், ஆண்-பெண், கிராம-நகர, செல்வ நிலை, இன, மத நிலைகளில் சுகாதார பாதுகாப்பினை பெறுவதில் வேறுபாடுகள் காணப்படுகிறது. பொருளியல் அறிஞர்களான, ராபர்ட் ஃபோகல், அமர்த்தியா சென், அங்கஸ் டீட்டன் போன்றவர்கள் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வே மருத்துவ பாதுகாப்பின் ஏற்றத்தாழ்விற்குக் காரணமாக விளங்குகிறது என்கிறார்கள். மேலும் மருத்துவ பாதுகாப்பு என்பது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய காரணி என்கிறார்கள். இந்த அடிப்படையில் இந்தியாவில் சுகாதார சேவைகள் அளிக்கப்படுவதிலும், பெறப்படுவதிலும், சுகாதார சேவையின் வெளிப்பாடுகளிலும் எவ்வாறு சமூக-பொருளாதார தளத்தில் வேறுபட்ட நிலையில் உள்ளன என்பதைப் பற்றி இக்கட்டுரை ஆய்விடுகிறது. இந்த ஆய்விற்குத் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் புள்ளிவிவரங்களும் 2021இல் வெளியான ஆக்ஸ்பாமின் இந்தியாவின் சமனற்ற சுகாதார பாதுகாப்பு அறிக்கையும் அடிப்படையான மூல ஆதாரங்களாகும்.
சுகாதாரப் பாதுகாப்பு
சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பினை மூன்று நிலைகளாக வகைப்படுத்தலாம். முதல்நிலை சுகாதாரப் பாதுகாப்பு (இது அடிப்படையான சுகாதாரப் பாதுகாப்பினை தனிநபர்களுக்கு நோயிலிருந்து மீள வழங்கக்கூடியது, இதற்குச் சிறப்பு மருத்துவம் தேவைப்படாது) இன்றைய நிலையில் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் பெருமளவிற்கு இவற்றை வழங்கி வருகின்றன. இரண்டாம் நிலை சுகாதாரப் பாதுகாப்பு என்பது முதல்நிலை மருத்துவப் பாதுகாப்பிலிருந்து மேம்பட்டதாகும் (இதில் இதயநோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், தோல் மருத்துவர் போன்ற சிறப்பு மருத்துவர்கள் வழங்கும் சேவையாகும்) இதனால் நோயாளிகள் சிறப்பு மருத்துவம் பெற முடியும், மூன்றாம் நிலை மருத்துவ பாதுகாப்பு என்பது முதல்நிலை மருத்துவம் பார்ப்பவர்களால் பரிந்துரைத்து மேம்படுத்தப்பட்ட மருத்துவப் பாதுகாப்பினை வழங்குவதாகும், இதன்படி அறுவைச் சிகிச்சை, உறுப்பு மாற்றுச் சிகிச்சை போன்ற சேவைகள் வழங்கப்படும். இந்தியா போன்ற நாடுகளில் முதல்நிலை மருத்துவப்பாதுகாப்பு அதிக அளவில் தனியார் மற்றும் பொதுத்துறையினால் வழங்கப்படுகிறது. ஆனால் இதனை அனைத்து தரப்பினரும் பெறுவதில்லை. குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முதல்நிலை மருத்துவப் பாதுகாப்பு பெறுவதில் சவால்கள் உள்ளன. கல்வியறிவின்மை, மருத்துவ மையங்களுக்கு வெகு தொலைவில் கிராமங்கள் மற்றும் இருப்பிடங்கள், வருமானமின்மை, மருத்துவம் பற்றிய தெளிவின்மை போன்றவைகளை இவற்றிற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம். இந்திய அரசு அனைவருக்குமான அணுகக்கூடிய மருத்துவ பாதுகாப்பினை குறிக்கோளாகக் கொண்டாலும் பெருமளவிலான மக்கள் மருத்துவ பாதுகாப்பிற்கு வெளியில் உள்ளனர் என்பது நிதர்சனம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொதுத் துறையினால் சுகாதாரப் பாதுகாப்பு அதிக அளவில் அளிக்கப்பட்டுவந்தாலும் கோவிட் போன்ற பெருந்தொற்றினை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் பொது சுகாதார மையங்களில் கட்டமைப்புக்கள் இல்லை, பெரும்பாலான மருத்துவ மையங்கள் மருத்துவர்கள், உதவியாளர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகின்றன. மற்றொரு வகையில் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் மருத்துவத்திற்கான கட்டணம் விதிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே அரசு, தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை முறைப்படுத்தியுள்ளது. ஆனாலும் ஏழைமக்களால் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற வசதியின்றி பொதுமருத்துமனைகளுக்கு செல்வதால் அளவிற்கு அதிகமான நோயாளிகள் குவிவதைப் பொதுச்சுகாதார மையங்களால் எதிர்கொள்ள முடியாமல் இருக்கிற நிலை. இதனை கோவிட் பெருந்தொற்று காலங்களில் காணமுடிந்தது. இந்தியாவைப் பொருத்த அளவில் தொடர்ந்து பொதுச் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 விழுக்காடு அளவிற்கே உள்ளது. உலக அளவில் சீனா 5 விழுக்காடும், ரஷ்யா 5.3 விழுக்காடும், பிரேசில் 9.2 விழுக்காடும், தென் ஆப்பிரிக்கா 8.1 விழுக்காடும் ஒதுக்கி வருகின்றன. இந்தியா பொதுச் சுகாதாரத்திற்கு போதுமான அளவில் முன்னுரிமை தருவதில்லை. அண்மையில் வெளியான ஆக்ஸ்பாம் குழுவின் அறிக்கை 2021இன்படி, சுகாதாரத்திற்குச் செலவிடும் 158 நாடுகளின் பட்டியலில் இந்தியா 154 இடத்தில் உள்ளது. இதன் விளைவு சுகாதார வெளிப்பாட்டு குறியீடுகளான பிறப்பு வீதம், இறப்பு வீதம், குழந்தைகள் இறப்பு வீதம், பேறுகால இறப்பு, போன்றவற்றில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு பெறுவதில் பெரும் ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் காணப்படும் சமூக-பொருளாதார நிலையாகும். சுகாதாரப் பாதுகாப்பும், கல்வி அறிவும் நெருங்கிய தொடர்புடையது. குறிப்பாகப் பெண் கல்வி (2018ல் பெண்கள் 65.8 விழுக்காடு ஆண்கள் 82.4 விழுக்காடு), முஸ்லீம் இன மக்களின் கல்வி (64.3 விழுக்காடு), ஏழை-பணக்காரர்களின் கல்வி நிலை (2015-16ல் கடைநிலையிலான 20 விழுக்காடு மக்களுக்கும் உச்ச நிலையிலான 20 விழுக்காடு மக்களுக்குமான கல்வி அறிவு இடைவெளி 55.1 விழுக்காடு) கிராமப்புற கல்வி மற்றவர்களைவிடக் குறைவாக இருபதால் (கிராமப்புறம் 64.7 விழுக்காடு நகர்ப்புறம் 79.5 விழுக்காடு) சுகாதாரப் பாதுகாப்பினை சம அளவில் பெற இயலவில்லை.
சுகாதார செலவினை பொருத்தமட்டில் பொதுப்பிரிவினர் மலைவாழ் மக்களை விட 2.2 விழுக்காடும், பட்டியலின மக்களைவிட 1.7 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைவிட 1.5 விழுக்காடு அளவிற்கு மருத்துவத்திற்குச் செலவிடுகின்றனர். நடப்பு விலையில் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்ப்பதில் இன அடிப்படையில் மலைவாழ் மக்கள் ரூ.12368ம், பட்டியல் இன மக்கள் ரூ.16118ம் இதர பிற்படுத்தப்பட்டோர் ரூ.18049ம் மற்றவர்கள் ரூ.26903ம் செலவிடுதாக 2017-18ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று முஸ்லீம்கள் (ரூ.15797) மற்ற மதத்தினரை விட (இந்துக்கள் ரூ.20575ம் கிறித்தவர்கள் ரூ.22280ம்) குறைவான அளவிற்கு மருத்துவத்திற்குச் செலவிடுகின்றனர். செல்வ நிலையின் அடிப்படையில் 40 விழுக்காடு கீழ்மட்ட அளவில் இருப்பவர்கள் உயர்மட்ட 20 விழுக்காடு நிலையில் இருப்பவர்களைவிட 30 விழுக்காடு குறைவான அளவிற்கு மருத்துவச் செலவு செய்கின்றனர். 2017ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் சராசரி மருத்துவமனைகளில் மருத்துவம் பார்பதற்;கான செலவு ரூ. 26476 ஆகும். ஆனால் கிராமப்புறங்களில் இது ரூ. 16676 ஆகும். இவற்றினை சரிசெய்ய ஒன்றிய, மாநில அரசுகள் மருத்துவ காப்பீட்டினை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இதன் விளைவு 2015-16இல் கிராமப்புறங்களில் 29 விழுக்காடு குடும்பங்களும் நகர்ப்புறங்களில் 28.2 விழுக்காடு குடும்பங்களும் மருத்துவக் காப்பீடு செய்துள்ளனர். மத அடிப்படையில் மருத்துவக் காப்பீடு செய்தவர்கள் பெருமளவில் வேறுபடுகின்றனர். முஸ்லீம்களில் 20.1 விழுக்காடு குடும்பமும், இந்துக்களில் 29.9 விழுக்காடு குடும்பத்தினரும், 44.6 விழுக்காடு கிருத்துவ குடும்பத்தினரும் மருத்துவக் காப்பீட்டினை 2015-16இல் செய்துள்ளனர். இன அடிப்படையில் பட்டியல் இனத்தவர்கள், மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் சராசரியாக 31 விழுக்காடு குடும்பத்தினர் மருத்துவக் காப்பீடு செய்துள்ளர்; 23.7 விழுக்காட்டினர் பொதுப் பிரிவினர் காப்பீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வ நிலையின் அடிப்படையில் கீழ்மட்டத்தில் உள்ள 20 விழுக்காடு குடும்பத்தில் 21.6 விழுக்காட்டினர் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். உயர்மட்டத்தில் உள்ள 20 விழுக்காடு குடும்பத்தினரில் 30.5 விழுக்காடு காப்பீடு செய்துள்ளனர். மொத்தமாக மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் மருத்துவக் காப்பீட்டினை பெறவில்லை. மேற்கண்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கிராமங்களைவிட நகரங்களில் சுகாதாரப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. இன அடிப்படையில் பார்த்தால் பட்டியல் இனத்தவரும், மலைவாழ் மக்களும் மற்ற இனக் குழுக்களைவிடப் பின்தங்கிய நிலையில் உள்ளனர், மத அடிப்படையில் பார்த்தால் முஸ்லீம்கள் மருத்துவ பாதுகாப்பில் பின்நிலையில் உள்ளனர்.
சுகாதாரப் பாதுகாப்பின் வெளிப்பாடுகள்
பெண்களின் பாதுகாப்பான பேறுகாலம் சுகாதாரத்தின் முக்கிய அம்சமாகும். இந்தியாவில் பாதியளவு பெண்கள் பேறுகாலங்களில் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேறுகால பெண்களில் ஒருவர் தாயும்-சேயும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நகரங்களைவிடக் கிராமங்களில் அதிக அளவில் பேறுகாலத்தின்போது இரத்தசோகைக்கு உள்ளாகின்றனர். பெண்களின் கர்ப்பகாலங்களில் மருத்துவ பரிசோதனையும், மருத்துவ தொடர் பின்பற்றுதளும் முக்கியமானதாகும். இந்தியாவில் 21 விழுக்காடு பேறுகால பெண்கள் மட்டுமே இதனைச் சரியாக கடைப்பிடிக்கின்றனர். இதில் கிராம-நகரங்களுக்குக்கிடையே 33.7 விழுக்காடு இடைவெளி காணப்படுகிறது. இந்தியாவில் பாதுகாப்பான குழந்தைப்பேறு 2005-06ல் 38.7 விழுக்காடாக இருந்தது, 2015-16ல் 78.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதாவது இந்த 10 ஆண்டுகளில் 40.2 விழுக்காடு புள்ளிகள் உயர்ந்துள்ளது. கோவா, கேரளா போன்ற மாநிலங்களில் 99 விழுக்காட்டிற்கு அதிகமாகப் பாதுகாப்பான குழந்தைப்பேறு நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் 76 விழுக்காடு மட்டுமே பாதுகாப்பான குழந்தைப்பேறு நடைபெறுகிறது. தேசிய அளவில் கிராமப்புறங்களில் 75.1 விழுக்காடும் நகர்ப்புறங்களில் 88.7 விழுக்காடும் பாதுகாப்பான குழந்தைப்பேறு நடைபெறுகிறது. இனத்தின் அடிப்படையில் பார்த்தால் பட்டியல் இனமக்களிடையே பொது இன மக்களைவிட 33 விழுக்காடு குறைவான அளவில் பாதுகாப்பான குழந்தைப்பேறு நடைபெறுகிறது. இது போன்றே மத அடிப்படையில் முஸ்லீம் மதத்தில் பிற மதத்தினரைவிட 10 விழுக்காடு குறைவாகவே பாதுகாப்பான குழந்தைப்பேறு நடைபெறுகிறது. வருமான அடிப்படையில் கீழ்மட்ட 20 விழுக்காடு மக்களுக்கும், உயர்மட்ட 20 விழுக்காடு மக்களுக்கும், இடையே 35 விழுக்காடு இடைவெளியிலான பாதுகாப்பான குழந்தைப்பேறு காணப்படுகிறது.
கருவுறுதல் வீதம் சுகாதார நிலையின் முக்கிய வெளிப்பாடாகும். கருவுறுதல் வீதம் என்பது பெண்களின் வாழ்நாளில் எதிர்பார்க்கிற குழந்தை பிறப்பாகும். கருவுறுதல் வீதமும் சமூக-பொருளாதார நிலையும் எதிர்மறை தொடர்புடையது. இதிலும் பலநிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் கருவுறுதல் வீதம் 2.4 ஆகும். இது நகர்ப்புறங்களில் 1.75 ஆகவும் ஒட்டுமொத்த அளவில் 2.18 ஆகவும் உள்ளது. இன அடிப்படையில் மலைவாழ் மக்களின் கருவுறுதல் அளவு 2.5 ஆகும், பட்டியலினத்தவர்களில் இது 2.3 ஆகவும் இதர பிற்படுத்தப்பட்டோரில் 2.2 ஆகவும், பிற இனங்களுக்கு 1.9 ஆகவும் உள்ளது. மத அடிப்படையில் பார்த்தால் முஸ்லீம் பெண்களின் கருவுறுதல் வீதம் அதிக அளவாக 2.6ம் இந்துக்களுக்கு 2.1ம் கிறித்தவர்களுக்கு 2 ஆகவும் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இந்தியாவில் பெண்கருவுருதல் வீதம் அதிக அளவில் குறைந்துள்ளது. இதற்கான முக்கிய காரணங்களாகக் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுதல், அண்மைக் காலமாக இளம் வயது பெண்கள் குழந்தை பெறுவது குறைந்துள்ளது, இளம் வயது திருமணம் குறைந்தது, சராசரி திருமண வயது அதிகரிப்பு, விரிவாக்கப்பட்ட மருத்துவ பாதுகாப்பு சேவைகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
இந்தியாவில் குழந்தை இறப்பு வீதம் 1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 57 என 2005-06இல் இருந்து 40.7ஆக 2020 குறைந்துள்ளது. ஆண் குழந்தைகளின் இறப்பு வீதம் பெண் குழந்தைகளின் இறப்பு வீதத்தை விட 5.4 அதிகமாக உள்ளது. கிராமப்புற குழந்தை இறப்பு வீதம் (45.5) நகர்ப்புறங்களைவிட (28.5) அதிக அளவில் காணப்படுகிறது. இன அடிப்படையில் பட்டியல் இன குழந்தைகளின் இறப்பு வீதம் 45.1 ஆகவும், மலைவாழ் மக்களிடையே 44.4 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோரிடையே 42.1 ஆகவும் இதர பிரிவினரிடையே 32.1 என்று வேறுபட்டு 2015-16ஆம் ஆண்டுகளில் காணப்படுகிறது. மத அடிப்படையில் பார்த்தால் இந்துக்களின் குழந்தை இறப்பு வீதம் 41.8 ஆகவும் முஸ்லீம்கள் 40 ஆகவும் கிறித்தவர்கள் 25 எனவும் உள்ளது. செல்வ நிலையின் அடிப்படையில் 20 விழுக்காடு கீழ்மட்ட நிலையில் உள்ளவர்களிடையே 56.3 குழந்தை இறப்பு வீதமும் உயர்மட்ட 20 விழுக்காட்டில் 19.8 என்ற அளவில் உள்ளது. அதாவது கீழ் மட்டத்திற்கும் உயர் மட்டத்திற்குமான இடைவெளி 36.5ஆகும். குழந்தை இறப்பு வீதத்திற்கான முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைவாகும். இதன் விளைவு எடை-உயரம் குறைந்த குழந்தைகளாக இருப்பதாகும். இது மனித வளத்தினை பாதிக்கும். கிராமப்புறங்களில் எடை-உயரம் குறைந்த குழந்தைகள் நகர்ப்புறங்களைவிட அதிக அளவில் உள்ளனர். இது போன்றே இனங்களின் அடிப்படையில் பட்டியல் இன மற்றும் மலைவாழ் மக்களின் குடும்பங்களில் அதிக அளவில் எடை-உயரம் குறைந்த குழந்தைகள் மற்ற இனத்தினை விட அதிக அளவில் உள்ளனர். மத அடிப்படையில் முஸ்லீம் குடும்பங்களில் அதிக அளவிலும். செல்வ நிலையின் அடிப்படையில் எடை-உயரம் குறைந்த குழந்தைகள் கீழ் மற்றும் உயர் மட்டத்தில் வாழும் குடும்பங்களுக்கிடையே 6.3 இடைவெளியில் காணப்படுகிறது. இரத்தசோகை உடைய குழந்தைகள் 2005-06இல் 1000க்கு 69.5என்று இருந்தது 2015-16ஆம் ஆண்டு 58.5 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் இதிலும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. கிராம-நகர வேறுபாடு 3.5ஆகவும், பட்டியல் இனத்தவர்களின் குழந்தைகள் பிற இனக் குழந்தைகளைவிட 6.4 வேறுபாட்டுடனும், காணப்படுகிறது.
ஆயுள் எதிர்பார்ப்பு சுகாதார நிலையினை அளவிடும் முக்கிய கருவியாகும். 2005ஆம் ஆண்டு சராசரி மனித ஆயுள் எதிர்பார்ப்பு 65 வயதாக இருந்தது. 10 ஆண்டுகள் கழித்து (2015இல்) 69 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதற்கு அடிப்படையான காரணிகள் சுகாதார மேம்பாடும், கல்வியும் ஆகும். ஆனாலும் மனித ஆயுள் எதிர்பார்ப்பு சமூக குழுக்களிடையே வேறுபட்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஆண்களுக்கான ஆயுள் எதிர்பார்ப்பு 66.9 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 70 ஆண்டுகளாகவும் உள்ளது. கிராம-நகர்ப்புறங்களுக்கிடையே 4.8 ஆண்டுகள் இடைவெளியிலான வேறுபாடுகள் உள்ளன. செல்வ நிலையின் அடிப்படையில் கீழ்மட்ட 20 விழுக்காடு குடும்பங்களில் 65.1 ஆண்டுகளும் உயர்மட்ட 20 விழுக்காடு குடும்பங்களில் 72.7 ஆண்டுகளுடன் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சமூகத்தில் சுகாதார சமத்துவமும் சமூக நீதியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் சுகாதாரப் பாதுகாப்பினை அதிக அளவில் பெறுகின்றனர். மாறாக ஏழைகளும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் சுகாதாரப் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சுகாதாரப் பாதுகாப்பிற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பெண்கல்வி கடந்த காலங்களில் பெண்கல்வி அதிகரித்திருந்தாலும் அவர்களின் கல்வி இடைநிறுத்தம் அதிக அளவில் உள்ளது, சுத்தமான குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி பெறுவதில் சமூகங்களுக்கிடையே வேறுபட்ட நிலை காணப்படுகிறது. அரசு சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி மருத்துவ பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், முஸ்லீம்கள், பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்கள் பாதுகாப்பான குழந்தைப்பேறும், நோய் தடுப்பூசி பெறுவதிலும், பேறுகால தொடர் நிலையினை பேணுவதிலும் மற்றவர்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பெருமளவில் பொதுச் சுகாதாரத்தைச் சார்ந்துள்ளனர். ஆனால் பொதுச் சுகாதாரம் தனியார் சுகாதார அமைப்பில் அளிக்கும் தரச் சேவைக்குக் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச் சுகாதார அமைப்பில் மனிதவள பற்றாக்குறை, கட்டமைப்பு குறைபாடுகள், பற்றாக்குறை நிதி ஒதுக்கீடு போன்றப் பல சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதினால் தனியார் சுகாதாரத்திற்கு இணையாகச் சேவைகளை அளிக்க இயலவில்லை.
தனியார் சுகாதார அமைப்புகள் தற்போது மூன்றில்-இரண்டு பங்கு உள்-புற நோயாளிகளுக்கு மருத்துவ சேவையினை அளிக்கிறது. இதற்காக அவர்கள் அளவிற்கு அதிகமான கட்டணங்களை விதிக்கிறது. இதனை ஏழை-எளிய, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பெறுவதற்கு சமூக-பொருளாதார நிலை அனுமதிப்பதில்லை. தனியார் மருத்துவ மையங்கள் புற்றீசல் போல் பெருகி லாபநோக்த்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதை அரசு கட்டுப்படுத்தவேண்டும். 2019ஆம் ஆண்டின்படி கிராமப்புறங்களில் பற்றாக்குறையாக உள்ள 43736 துணை சுகாதார மையங்களையும், 8764 முதன்மை சுகாதார மையங்களையும், 2865 சமூக சுகாதார மையங்களையும் உருவாக்க வேண்டும். இது போன்றே பற்றாக்குறையாக உள்ள மனிதவள தேவையினையும், மருத்துவப் படுக்கைகள், தொழில் நுட்பங்களை மேம்படுத்தியும் பொதுச் சுகாதார நிலையங்களை வலுப்படுத்த வேண்டும். அரசு நடைமுறையில் உள்ள சுகாதாரக் கொள்கைகளையும், திட்டங்களையும் மதிப்பீடு செய்து அவற்றில் உள்ள பின்னடைவுகளைப் போக்கி நடைமுறையில் உள்ள சுகாதார ஏற்றத் தாழ்வுகளைக் களைய முற்படவேண்டும். மக்களிடையே மருத்துவ கல்வியறிவினை வளர்த்தெடுத்தல், பெண்கல்விக்கு முக்கியத்துவம், சுற்றுப்புற சுகாதார மேம்பாடு, சுகாதார வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு, மருத்துவக் கட்டமைப்பினை மேம்படுத்துதல், ஊட்டச் சத்தினை அனைவருக்கும்; கிடைக்க உறுதிப்படுத்துதல், தடுப்பூசிகளை அனைத்து குழந்தைகளுக்கும் அளித்தல், அனைத்து தரப்பினருக்குமான மருத்துவ பாதுகாப்பினை உறுதிபடுத்துதல, போன்றவைகளால் இந்த சுகாதாரப் பாதுகாப்பில் ஏற்படுகிற ஏற்றத் தாழ்வினை போக்க முடியும்.
——————–
இக்கட்டுரையின் ஆசிரியர், திரு. ந. பாலசுந்தரம் அவர்களுக்கு இக்கட்டுரை வடிவம் பெற உதவியதற்குத் தனது நன்றியினை பதிவு செய்துள்ளார்.
கட்டுரையாளர்: பேரா. பு. அன்பழகன்
முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க:
இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி
பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments