கோவிட் 19 கண்டுபிடிக்கப்பட்டு சுமார் நான்கு மாதங்கள் கடந்து விட்டன.  மற்ற பல கொரோனா வைரஸ்களைப் போலவே சார்ஸ் கோவிட் 2 வைரசும் மிகவும் தந்திரமானது. அதன் தன்மையை முழுமையாகத் தெரிந்து கொள்வது சவாலாகவே இருப்பதால், ஒரு திறனுள்ள தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   மேலும், நமது உடல் எதிர்ப்பு சக்தியானது மேல்பகுதி சுவாசக் குழாயைப் பாதுகாப்பதில் அவ்வளவு திறனுள்ளதல்ல என்பதால், பொதுவாகவே சுவாசக்குழாயைத் தாக்கும் வைரஸ்களுக்கெதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவால்மிக்கதாகவே இருந்து வருகிறது.

தற்போது சிகிச்சை அளிப்பதற்காக உபயோகிக்கப்படும் மருந்துகள் குறிப்பாக சார்ஸ் கோவிட் 2வுக்கானவை அல்ல என்பதால், அவை முழுத் திறனுடன் இருக்காது என்பது வெளிப்படை. இந்தப் பின்னணியில் உலகெங்கிலும் உள்ள மருத்துவத்துறை நிபுணர்கள் தகுந்த மாற்றாக பிளாஸ்மா சிகிச்சையைக் காண்கிறார்கள்.

பிளாஸ்மா சிகிச்சை என்பது செயலற்ற முறையில் நோய் எதிர்ப்புத் திறனை ஊட்டுவதாகும்.  அது நோயிலிருந்து விடுபட்டவரிடமிருந்து எதிர்ப்பொருளைக் கொண்ட பிளாஸ்மாவை நோய் பாதித்தவருக்கு ஏற்றுவது.  பிளாஸ்மா என்பது வெளிர் மஞ்சள் நிறமன திரவம். நம் உடலிலிருக்கும் ரத்தத்தின் அளவில் பாதிக்கும் மேலாக பிளாஸ்மாதான் இருக்கும்.  பொதுவாக செயலற்ற நோய் எதிர்ப்புத் திறன் இயற்கையாகவோ, பெற்றுக் கொண்டதாகவோ இருக்கலாம். ஒரு குழந்தை தனது தாய்ப்பாலிலிருந்தோ அல்லது நஞ்சுக்கொடியிலிருந்தோ அதைப் பெற்றால், அது இயற்கையானது.  மாறாக, நோய் நீக்கும் பிளாஸ்மா சிகிச்சையில், இந்தத் திறன் செயற்கையாக ஊட்டப்படுகிறது.

இந்தியாவை துவம்சம் செய்து ...

1918-20 காலத்தில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூ பரவலின் போது, தொற்று ஏற்படும் நோய்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை திறனுள்ளதாக இருக்கும் என்பது ஆய்வுகளில் வெளிப்பட்டது.  அப்போது முதல், இந்த சிகிச்சையைப் பல்வேறு தொற்று நோய்களுக்கு அளிக்கப் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. மிகச் சமீபத்தில் இந்த பிளாஸ்மா சிகிச்சை எச்.1 என்1 இன்புளுவன்சா, எபோலா, சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்குக் பயன்படுத்தப்பட்டது.  அதன் கோட்பாடு மிகவும் எளிமையானது: எதிர்ப்பொருளைக் கொண்ட பிளாஸ்மா நோய்க்கிருமியை செயலற்றதாக்கி நிகழ்வுப் போக்கில் அதை ரத்தத்திலிருந்து அகற்றி விடுகிறது.

ஆனால் திரவத்தை செலுத்துவதற்கு முன்னால் தொடக்கநிலைப் பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  அதைப் பெறுபவர் நோயிலிருந்து மீள்வதன் மீது அது நேரடியான விளைவை ஏற்படுத்துவதால், கொடுப்பவரை சரியான முறையில் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.  கோவிட் 19இலிருந்து மீண்டு குறைந்தபட்சம் அடுத்த 10 நாட்களுக்கு எந்த நோய்க்குறியும் இல்லாதவர் திறனுள்ள கொடையாளராக இருக்க முடியும். தானமளிப்பவர் அதற்குத் தகுதி பெற, அதற்கு முன்னதாக சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

பிளாஸ்மா பெறுபவரின் ரத்த குரூப் தானம் கொடுப்பவரின் ரத்த குரூப்புடன் ஒத்துப் போக வேண்டும். மேலும் கொடுப்பவரின் ரத்தத்தில் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, சிபிலிஸ் போன்ற நோய்கள் இல்லாமல் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வேண்டும்.  மிகவும் முக்கியமாக, தானம் கொடுப்பவரன் ரத்தத்தில் செயலூக்கமிக்க வைரஇருக்கக் கூடாது. அடித்தொண்டையிலிருந்து எடுக்கப்படும் மாதிரியை ஆர்.டி.பிசி.ஆர். முறையில் சோதித்து வைரல் ஆர்.என்.ஏ. இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலிசா (enzyme linked immunosorbent assay) என்ற சோதனை மூலம் தானமளிப்பவரின் கொரோனா வைரசுக்கெதிரான எதிர்ப்பொருட்கள் ஒப்பீட்டு நோக்கில் அதிகச் செறிவுடன் இருக்கிறதா என்று திரவப் பரிசோதனை மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  தானம் பெறுபவர்களைப் பொருத்தவரை, தொற்று ஏற்பட்ட முதல் கட்டங்களில் பிளாஸ்மா சிகிச்சை திறனுடன் செயல்படும். ஏனெனில் அந்தக் கட்டத்தில் எதிர்ப்பொருட்களால் ஒடுக்கப் பட வேண்டிய நோய்க்கிருமிகள் குறைவாக இருக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பை நேர்மறையாக செயல்படுத்த வைப்பதிலும் எதிர்ப்பொருட்கள் தமது பங்கை ஆற்றுகின்றன; அதை தொடக்கக் கட்டத்தில் எளிதாக அடைந்து விட முடியும்.  எனினும், நோய் முற்றிப் போய்க் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நோயாளிக்கு இந்த சிகிச்சையைச் செய்யக் கூடாது என்பது இதன் பொருளல்ல.

Spectrum Health Uses Plasma Therapy to Treat COVID-19 Patients ...

ஒட்டுமொத்தமாக ரத்தத்தை எடுத்து அதிலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுப்பதற்கு பதிலாக அப்பெரசிஸ் (apheresis) என்ற இயந்திரப்படுத்தப்பட்ட முறை கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த முறையில் ரத்தம் ஒரு கருவியில் பிடிக்கப்பட்டு, அதில் பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. மீதமுள்ள ரத்தம் மீண்டும் தானமளிப்பவருக்கே செலுத்தப்படுகிறது.  இந்த முறை அதிகத் திறனுடையது. இந்த வேகமான முறையில் 400-800 மில்லி பிளாஸ்மாவைப் பெற்று விட முடியும். ஒரு கொடையாளரிடமிருந்து பெற்ற பிளாஸ்மாவினை 4 நோயாளிகளுக்கு செலுத்த இயலும்.

சமீபத்தில், இந்த சிகிச்சையை சீனாவின் ஷென்செனில் நோய் முற்றிய ஐந்து கோவிட் 19 நோயாளிகளுக்கு ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.  வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் ஆகியவை கொடுத்தும் கூட அவர்களது நிலைமை தொடர்ந்து மோசமானது. ஆனால், பிளாஸ்மா செலுத்திய ஒரே வாரத்தில் நிலைமை மேம்பட்டது தெரிந்தது.  உடல் வெப்பம் சீரானது, அடுத்தடுத்து உடல் பாகங்கள் செயலிழக்கும் வேகம் தடுக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்மா செலுத்திய பன்னிரண்டு நாட்களுக்குப் பின் எடுக்கப்பட்ட தொண்டை மாதிரியில் நோய் நீக்கும் எதிர்ப்பொருள் செறிவு அதிகரித்து நோய் அகன்றதைக் காட்டியது.  சீனாவைத் தவிர, இந்த மாற்று சிகிச்சையை அமெரிக்கா, கனடா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளிலுள்ள ஆய்வாளர்களும் பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளனர். (இந்தியாவில் இந்த சிகிச்சையை அளிக்கும் அனுமதியை கேரளத்துக்கு முதன்முதலாக ஐ.சி.எம்.ஆர். அளித்துள்ளது.)

பிளாஸ்மா தெரபி என்றால் என்ன..? அது ...

பிளாஸ்மாவைத் தவிர ரத்தத்தின் பல்வேறு பகுதிகளான திரவம், நோய் எதிர்ப்பு குளோபுலின், மோனோகுளோன், பாலிகுளோன் எதிர்ப்பொருட்களும் எதிர்ப்பொருட்களை செயலின்றி ஊட்டப் பயன்படுத்தப்பட்டன.  எனினும், தனது தகுதி காரணமாக, பிளாஸ்மாதான் பொதுவாகத் தேர்வு செய்யப்படுகிறது. முதல் காரணம், ஒரே சமயத்தில் மற்ற அதிகமான பிளாஸ்மாவைப் பெற்று விட முடிகிறது. இரண்டாவதாக, பிளாஸ்மாவைப் பிரித்த பிறகு, ரத்தம் மீண்டும் தானமளிப்பவருக்கே செலுத்தப்பட்டு விடுவதால், ஹீமோகுளோபின் மீது தாக்கம் மிகவும் குறைவாக உள்ளது.  சிகிச்சை அளிப்பதைத் தவிர, பிளாஸ்மாவானது நோயைத் தடுப்பதற்கும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

எனினும், பிளாஸ்மா சிகிச்சைக்கு சில ஆபத்துக்களும் உடன் இருக்கின்றன.  கோட்பாட்டு அடிப்படையில், எதிர்ப்பொருட்களைச் சார்ந்த ஊக்கமூட்டல்(ADE) ஒரு ஆபத்தாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ADE நாவல் கரோனா வைரசுக்கான எதிர்ப்பொருட்கள் தொற்றை வேறு ஒரு விதமான கொரோனாவாக மாற்றி விடக் கூடும்.  எனினும் இந்த விதமான செயல்பாடு நோய் நீக்கும் பிளாஸ்மா சிகிச்சையிலோ அல்லது வேறு கொரோனா நோய்களின் சிகிச்சையிலோ (சார்ஸ், மெர்ஸ்) ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இன்னொரு கோட்பாட்டு ரீதியான ஆபத்து, நாவல் கொரோனா வைரசை அழிக்க செலுத்தப்பட்ட எதிர்பொருட்கள் நோயாளியின் உடலில் நோயை அகற்றும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து, பின்னர் மீண்டும் தொற்று ஏற்படக் கூடிய ஆபத்துக்கு அவர்களை உள்ளாக்கக் கூடும் என்பதாகும்.

இந்த சிகிச்சையை முன்பு சார்ஸ், மெர்ஸ், எச்1, என்1 இன்ஃப்ளுவன்சா உள்ளிட்ட பல நோய்களுக்குப் பயன்படுத்திய முந்தைய அனுபவங்களின் வரலாற்றின்படி, இந்த சிகிச்சை பாதுகாப்பானதும், சாதகமான மாற்றுமாகும்.  எனினும், இந்த ஆதாரங்கள், குறைந்த அளவிலான நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையை மேற்கொண்டதன் அடிப்படையில் கிடைத்தவை. மேலும் இந்த விடைகள், குறுக்கீடு மேற்கொள்ளப்படாத நோயாளிகளுடன் ஒப்பீடு செய்யப்படவில்லை.

எனவே பெரிய அளவில் தொடர்பின்றி ஆங்காங்கு தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இந்த சிகிச்சையைச் செய்து பார்ப்பதை இதைப் பொது நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்னால் கட்டாயமாகச் செய்ய வேண்டும். சமீபத்தில் இந்த சிகிச்சையின் பாதுகாப்பையும், திறனையும் அறிவதற்கான சோதனையில் பங்கேற்கும் பரிசோதனையில் பங்கேற்க நிறுவனங்களுக்கு ஐசிஎம்.ஆர். அழைப்பு விடுத்தது.  அதற்கு 99 நிறுவனங்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த மருத்துவப் பரிசோதனைகள் பிளாஸ்மா சிகிச்சையை திறனுள்ளதாகக் கண்டறிந்தால், தற்போதைய நோய்த் தொற்றின் போக்கையே அது மாற்றியமைக்கும்.

Image

நிரஞ்சனா ராஜலட்சுமி

கால்நடை நுண்ணுயிரியலாளர்

தமிழில்: கி.ரமேஷ்

பிளாஸ்மா: குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறமற்ற திரவம்.

நன்றி : https://science.thewire.in/health/convalescent-plasma-therapy-explained/

One thought on “பிளாஸ்மா சிகிச்சை – நிரஞ்சனா ராஜலட்சுமி (கால்நடை நுண்ணுயிரியலாளர்) | தமிழில்: கி.ரமேஷ்”
  1. எளிமையாக அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நல்ல மொழிபெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். இது குறையாக அல்ல, சொல்வது : தப்ளீக் ஜமாத் என்னும் சிங்கிள் சோற்ஸ் என்று கொரானா நோய் தொற்றுக்கு இந்தியாவில் ஒரு வகுப்புவாத சாய்மானம் ஏற்பட்டது. அதே சமயம் பிளாஸ்மா தாருங்கள் என்பதற்கு முதலில் நாங்கள் தயார் என்று வருகிறவர்கள் அந்த ஜமாத் மக்களே என்றும் செய்திகள் வருகின்றன. இதையும் சேர்த்து இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *