வெப்பத்தால் தகிக்கும் சென்னை இந்தியாவிற்கு முன்னுதாரணமாகத் திகழலாம்
கடலோர நகரான சென்னையில் காற்றில் உள்ள ஈரப்பதம் வியர்வையின் குளிரூட்டும் விளைவைக் குறைப்பதற்கான வழியை வகுத்துத் தருகிறது. அதன் விளைவாக வெப்பநிலை அதிகரிப்பு, தளர்வடையச் செய்யும் வெப்ப அழுத்தம், சோர்வு மற்றும் ஆபத்தான வெப்ப பக்கவாதம் போன்றவற்றை ஒருவர் அனுபவிக்க நேரிடலாம்.
2023ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வெப்பமாக இருந்தது என்று உலக வானிலை அமைப்பு (WMO) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. உலகளாவிய சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய காலகட்ட அளவுகளைக் காட்டிலும் 1.45°C அதிகம் என்ற அளவிலே இருந்தது. கிட்டத்தட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C என்ற வரம்பை அது எட்டியது. 2024ம் ஆண்டும் அதே போன்று இருக்கலாம் என அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். வெப்ப உமிழ்வுகள் உலகளாவி இன்னும் அதிகரித்துக் கொண்டே வரும் காரணத்தால் காலநிலை பாதிப்புகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வெப்ப அலை வீசுகிறது. வரும் ஆண்டுகளில் அதிக வெப்பம், நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் வெப்ப அலைகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வெப்பத் தீவின் உண்மைநிலை
நகரங்களில் நிலவுகின்ற இந்தப் பிரச்சனை நகர்ப்புற வெப்பத்தீவு (UHI) விளைவு என்று அழைக்கப்படுகின்ற நிகழ்வால் அதிகரிக்கிறது. பெரிய, நெரிசலான நகர்ப்புறப் பகுதிகளின் வெப்பநிலை அவற்றைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைக் காட்டிலும் பல டிகிரி அதிக அளவிலேயே இருக்கிறது. இரவிலும்கூட அங்கே வெப்பமாகவே இருக்கிறது. கான்கிரீட் கட்டமைப்புகளும், தார்ச் சாலைகளும் காற்று மாசுபாடுகளுடன் சேர்த்து வெப்பத்தையும் இந்த ‘நகர்ப்புறக் குமிழிக்குள்’ தக்க வைத்துக் கொள்கின்றன. பசுமையான இடங்கள் இல்லாமை, குளிரூட்டிகள் மற்றும் பிற இயந்திரங்களிலிருந்து வெளியாகின்ற வெப்பக்கழிவு நகர்ப்புற வெப்பத்தீவை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
சென்னை மற்றொரு அம்சத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பது கவலையைத் தருகிறது. கடலோர நகரான சென்னையில் காற்றில் உள்ள ஈரப்பதம் வியர்வையின் குளிரூட்டும் விளைவைக் குறைப்பதற்கான வழியை வகுத்துத் தருகிறது. அதன் விளைவாக வெப்பநிலை அதிகரிப்பு, தளர்வடையச் செய்யும் வெப்ப அழுத்தம், சோர்வு மற்றும் ஆபத்தான வெப்ப பக்கவாதம் போன்றவற்றை ஒருவர் அனுபவிக்க நேரிடலாம்.
சென்னையில் உள்ள நகர்ப்புற வெப்பத்தீவு அதன் அருகிலுள்ள கிராமப்புறங்களைக் காட்டிலும் 2° முதல் 4°C வரை அதிக வெப்பநிலையுடன் இருப்பதை நமக்குக் கிடைக்கின்ற வெப்ப வரைபடங்கள் காட்டுகின்றன. இதன் காரணமாக மற்ற இடங்களில் 40°C என்றிருக்கும் அதிகபட்ச வெப்பநிலை சென்னையின் சில பகுதிகளில் 42° முதல் 44°C வரையிலும் பதிவாகலாம். அதிக ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில், வியர்வை ஆவியாகி உடல் குளிர்வதை எளிதாக்கும் அளவிலான 38.5°C என்ற ஈரக்குமிழ் வெப்பநிலையை ‘மனிதர்கள் உயிர்வாழத் தகுதியான வெப்பநிலை வரம்பின் எல்லை’ என்று உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.
இந்தியக் கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் 4.5°C அதிகமாக, அதாவது 37°C என்ற அளவில் இருக்கும்போது வெப்ப அலை வீசுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள நகர்ப்புற வெப்பத்தீவுகளால் வெப்ப அலைக்கான நிலைமைகள் மிக எளிதில் மீறப்படுகின்றன. உள்நாட்டுப் பகுதிகள், கிராமப்புறங்களுடன் ஒப்பிடும் போது இந்தப் பகுதிகளில் விளைவுகள் மிக மோசமாக, ஆபத்தானவையாக இருக்கலாம்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஏழைகள், கைக்குழந்தைகள், முதியவர்கள் மத்தியில் நோயுறும் தன்மை மற்றும் இறப்பைக் குறைப்பதற்காக தேசிய, மாநிலங்கள் அளவில் மட்டுமல்லாது சில மாவட்டங்கள் அளவிலும் வெப்ப செயல்திட்டங்களை (HAP) இந்தியா மேற்கொண்டிருக்கிறது. வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், வெளிப்புறக் கட்டுமானத் தளங்களில் இடைவெளிகளுடனான வேலை நேரம், நிழலான பகுதிகள் மற்றும் தற்காலிகத் தங்குமிடங்களை உருவாக்கித் தருவது, குடிநீர் மற்றும் நீரிழப்பை ஈடுசெய்யும் உப்புகளை வாய்வழி வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) வழிகாட்டுதல்கள் மற்றும் பல மாநிலங்களின் வழிகாட்டுதல்களில் அடங்கியுள்ளன. நகர்ப்புற வெப்பத்தீவைச் சமாளிப்பதற்கு, நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பதற்கு வெப்ப அலைகளை எதிர்கொள்வதில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிந்தைய எதிர்வினைகளைத் தவிர நீண்ட கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போது உள்ளதைக் காட்டிலும் விரிவான வெப்ப வரைபடங்களைத் தயாரிக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. உள்ளூர்த் திட்டமிடல், செயல்பாடுகளுக்காகக் காத்திருக்கும் போது மிகப்பரந்த அளவிலான நடவடிக்கைகள் உடனடியாக சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படலாம். இங்கே விவாதிக்கப்பட்டிருப்பவை உட்பட பல அர்த்தமுள்ள ஆலோசனைகளை பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை காலநிலை செயல்திட்டம் (CCAP) வழங்குகிறது. காரண காரணிகளைக் குறைத்து மதிப்பிடுவதால் தீர்வு நடவடிக்கைகள் மற்றும் இலக்குகளையும் அது குறைத்து மதிப்பிடுகிறது என்றே நாங்கள் கருதுகிறோம்.
ஆய்வும், கண்டுபிடிப்புகளும்
சென்னையும், காலநிலை மாற்றமும் பற்றிய எங்களுடைய ஆய்வு (www.inhaf.org/climact இணையபக்கத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயல்திட்டத்தைப் பார்க்கவும்) பலவாறு இணைக்கப்பட்டிருக்கும் பரிமாணச் சிக்கல்களில் ஒன்றாகவே நகர்ப்புற வெப்பத்தீவைக் காண்கிறது. எங்களுடைய முக்கிய கண்டுபிடிப்புகள், பரிந்துரைகள் இங்கே விவாதிக்கப்படுகின்றன.
செய்ய வேண்டியவை குறித்த பட்டியலில் பசுமை வெளியை அதிகரிப்பது முதலாம் இடத்தில் உள்ளது. நகர்ப்புறக் காடுகள், பெரும் பசும்வெளிகள், பூங்காக்கள், நிழற்சாலைகள் மற்றும் பிற மரங்கள், புல்வெளிகள் போன்ற பசுமையான பகுதிகள் ஈரப்பதத்தை வெளியிடுகின்றன. ஈரப்பதம் ஆவியாகி சுற்றுப்புறங்களைக் குளிர்விக்கிறது. நன்கு விரிந்து பரவியிருக்கும் பசுமையான பகுதிகள் அந்தப் பகுதியின் நுண்ணிய காலநிலையைப் பாதிக்கின்றன. காற்று மாசுபாட்டைக் குறைக்கின்றன. உடல் ஆரோக்கியத்தை, நல்வாழ்வை மேம்படுத்துகின்றன. பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், நடந்து செல்லும் தொழிலாளர்கள் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பை மரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்ற நிழல் நிறைந்த நடைபாதைகள், பாதைகள் வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது அவை மோட்டார்கள் இல்லாத போக்குவரத்தையும் ஊக்குவிக்கின்றன. இவ்வாறு பல நன்மைகளைத் தருகின்ற பசுமை வெளிகள் நிலையான நகர்ப்புற மேம்பாட்டிற்கு இன்றியமையாதவை என்று ஐநா வாழ்விட அமைப்பு (UN Habitat) கருதுகிறது. தாங்கள் வசிக்கின்ற இடத்திலிருந்து நானூறு மீட்டருக்குள் பசுமை வெளிகள் அனைத்து குடிமக்களுக்கும் இருக்க வேண்டும் என்பதையும் அந்த அமைப்பு பரிந்துரைக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து பெருநகரங்களைக் காட்டிலும் பசுமை வெளி சென்னையில் துரதிர்ஷ்டவசமாக மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறது.
மாநகராட்சிப் பகுதிகள் ‘மியாவாக்கி காடுகள்’ போன்ற நம்பிக்கைக்குரிய முன்முயற்சிகளால் பசுமையுடன் இருக்கின்றன. ஆனாலும் நடப்பட்டிருக்கும் தாவரங்கள் பற்றிய கேள்விகளுக்கும் இடமிருந்து வருகிறது. நகர விரிவாக்கம் பசுமையான பகுதிகள், நீர்நிலைகளைப் பெருமளவிற்குக் குறைத்திருக்கிறது.
மதிப்பீட்டு முறையைப் பொறுத்து சென்னை பெருநகரப் பகுதியில் (சிஎம்ஏ) உள்ள பசுமை வெளிகள் குறித்து பல்வேறு புள்ளிவிவரங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. பசுமைவெளி இருபது சதவிகிதத்திற்கும் அதிகம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, தில்லி நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் பன்னிரண்டு சதவிகிதம் (திருத்தத்திற்கு உட்பட்டது) என்பது நியாயமானதாகவே தோன்றுகிறது. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர-அரசான சிங்கப்பூர் நாற்பத்தியேழு சதவிகிதம் பசுமை வெளியால் மூடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையான முப்பது சதவிகிதம் என்ற அளவைக் காட்டிலும் பல ஐரோப்பிய நகரங்களில் பசுமை வெளிகள் கூடுதல் அளவிலேயே அமைந்துள்ளன.
மோசமான காற்றோட்டம் உள்ள நெரிசலான இடங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் வசிக்கின்ற அமைப்புசாரா குடியேற்றங்களே நகர்ப்புற வெப்பத்தீவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அந்த இடங்கள் அருகிலுள்ள பசுமையான பகுதிகள், பூங்காக்கள், நீர்நிலைகளால் பயனடைகின்றன. அனைவரும் அணுகிடும் வகையில் பறித்துக் கொள்ள முடியாத பசுமையான பகுதிகள், உள்ளூர் பூங்காக்களை மூன்றாவது பெருந்திட்டம் வழங்கிட வேண்டும்.
சென்னை பெருநகரப் பகுதியில் நன்கு பரவியுள்ள வகையில் பசுமை வெளியை இருபத்தைந்து சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரிப்பது நகர்ப்புற வெப்பத்தீவை சுமார் 1.5° C அல்லது அதற்கும் அதிகமாகக் குறைக்க முடியும் என்று தோராயமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் சுமார் பத்து சதவிகிதத்தை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் ‘நிகர பூஜ்ஜிய’ எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கு அது நிச்சயம் உதவும்.
குளிரூட்டிகளின் பயன்பாடும் ஆற்றல் சேமிப்பும்
நகர்ப்புற வெப்பத்தீவின் பின்னணியில் மிகவும் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் காரணியாக குளிரூட்டிகளிலிருந்து வெளியாகும் வெப்பக்கழிவு இருக்கிறது. மற்ற இந்திய பெருநகரங்களைப் போல சென்னையிலும் வெப்பத்தை வெளியேற்றும் குளிரூட்டிகளுக்காக மட்டுமே கோடை காலத்தில் சுமார் ஐம்பது சதவிகிதம் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. நகர்ப்புற வெப்பத்தீவு அதிகமாகும் போது, அதன் மோசமான பின்னூட்டச் சுழற்சியாக குளிரூட்டிகளின் அதிகப் பயன்பாடு இன்னும் கூடுதலாக வெப்பத்தை உருவாக்குகிறது. ஐந்து நட்சத்திரங்கள் அல்லது பிரிக்கப்பட்ட குளிரூட்டிகளை வாங்குவதற்கான ஆணைகளை வெளியிடுவது, புதிய குளிரூட்டி வகைகளைக் கொண்டு பழைய குளிரூட்டிகளை மாற்றுவதற்கு ஊக்கத்தொகையை வழங்குவது (மின்நுகர்வின் உச்ச சுமையைக் குறைத்து, மின்விநியோகஸ்தர் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் தில்லியில் மின்சார விநியோகஸ்தரால் வழங்கப்படுவதைப் போல) என்று அதிக ஆற்றல்-திறனுள்ள (EE) குளிரூட்டிகளை நோக்கி நகர்வதன் மூலம் நகர்ப்புற வெப்பத்தீவின் வெப்பநிலையை 1.5°C வரை குறைக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா பேரிடரும் முறைசாரா தொழிலாளர்களின் பெருந்துயரும்..! – பேரா. A. P. அருண் கண்ணண்,S. கிஷோர்குமார்
இத்தகைய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நகர்ப்புற வெப்பத்தீவில் குறிப்பிடத்தக்க அளவில் வெப்பம் குறைவதை ஷாங்காய், சியோல் போன்ற நகரங்கள் பதிவு செய்துள்ளன. அலுவலகங்கள், வணிகக் கட்டிடங்களில் 25°C வெப்பநிலை இருக்குமாறு வெப்பசீராக்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போன்ற குளிரூட்டலுக்கான ஆற்றல் சேமிப்பு நடவடிக்கைகளை பல கிழக்கு ஆசிய நகரங்கள் கட்டாயமாக்கியுள்ளன. ரிமோட் கண்ட்ரோல் (குறைவான அளவு மின்நுகர்வுடன் சாதனங்களை ஸ்டாண்ட்-பை பயன்முறையில் வைத்திருக்க உதவுகிறது) மூலம் அல்லாமல் மெயின்களில் இருந்து குளிரூட்டிகளை (மற்றும் பிற உபகரணங்களையும்) அணைப்பதன் மூலம் ஆற்றலைச் சேமித்துக் கொள்ள முடியும். காலநிலை மாற்றம் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சந்தேகத்திற்கு இடமின்றி உதவும். மின்கட்டணத்தில் சுமார் இருபத்தைந்து சதவிகித சேமிப்பு என்பது மாற்றத்திற்கான சக்திவாய்ந்த தூண்டுதலாக நிச்சயம் செயல்படும்.
கட்டிடங்கள் சிறந்த முறையில் காப்பிடப்பட்டு, காற்றோட்டமாக, ‘பசுமை’ கட்டிடக் குறியீடுகளின்படி பொருத்தமான வடிவமைப்புகள், பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்படுமென்றால் அந்தக் கட்டிடங்களுக்கு குறைவான குளிரூட்டும் வசதிகளே தேவைப்படும். விளைவாக மிகக் குறைவான வெப்பக்கழிவே உருவாகும். பின்னர் மொத்த ஆற்றல் சேமிப்பு தோராயமாக நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை அதிகரிக்கலாம். நகர்ப்புற வெப்பத்தீவு சுமார் 3°C வரை குறைவாக இருக்கும். சென்னையில் உள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் வெப்ப உமிழ்வைக் குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் இணைப் பலன் கிடைக்கும்.
மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தி நீர் ஊடுருவக்கூடிய பாதைகளை உருவாக்குவது, நடைபாதைகளின் ஓரங்களில், சாலை நடுவே அமைக்கப்படும் பிரிப்பான்களில் புதர்ச்செடிகளை வளர்ப்பது மற்றும் கூரைகள், சுவர்கள், தெருக்களில் சூரியஒளியைப் பிரதிபலிக்கும் வண்ணப்பூச்சுகளைப் பூசுவது போன்ற நடவடிக்கைகள் நகர்ப்புற வெப்பத்தீவைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிற நடவடிக்கைகளாகும். தனிநபர்களுக்குச் சொந்தமான (ஆற்றல்மிக்க இயந்திரங்கள், குளிரூட்டிகள் பெரும்பாலான நான்கு சக்கர வாகனங்களில் இடம் பெற்றுள்ளன) வாகனங்களைப் பெருமளவிற்குக் குறைப்பது, மின்சார பேருந்துகளைக் கொண்டு பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மற்றுமொரு முக்கிய பங்களிப்பை அளிக்கும்.
காலநிலைச் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்ட மிகச் சில இந்திய நகரங்களில் ஒன்றாக சென்னை இருந்த போதிலும் முன்னேற்றத்தைக் காண்பதற்கு கணிசமான அவகாசம் தேவைப்படுகிறது. நகரத்தை குளிர்விப்பது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக நீண்ட காலக் கொள்கைகள், நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்ளும் வகையில் இந்த வாய்ப்பை சென்னை நகரமும், அதன் குடியிருப்பாளர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
எழுதியவர் :
நன்றி: தி ஹிந்து நாளிதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: கடுமையான வெப்பநிலை குறையப் போவதில்லை - Book Day