சேர, சோழ, பாண்டியர் காலத்தைத் தாண்டி. பிரிட்டிஷ் கால நிகழ்வுகளும் வரலாறு தான் என்ற புரிதலே நம் படைப்பாளிகளுக்கு மிகச் சமீபத்தில் தான் வந்துள்ளது. எனவே, சமீபகாலமாக இக்காலகட்டத்து நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுப் படைப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அவ்வாறான ஒரு நல்ல படைப்பு கலைச்செல்வனின் ஹீரா பிஜ்லி.
கோஹினூர் வைரத்திற்கு இணையான ஹீரா பிஜ்லி என்ற வைரத்தைத் தேடிச் செல்லும் ஒரு தேடுதல் வேட்டையின் வழியே கிழக்கிந்தியக் கம்பெனி நம் நாட்டில் ஆழமாக வேரூன்றியதை, இந்த நாட்டின் தன்மானமிக்க சிற்றரசர்களை அது ஒழித்த விதத்தைக் கூறும் நெடிய வரலாற்று நாவல். கதையில் கான் சாகிப் வருகிறார். பூலித் தேவன் வருகிறார். ஆற்காட்டு நவாப், திப்பு சுல்தான், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை எல்லோரும் வருகிறார்கள். அவர்களது வீரக்கதையும், துரோகத்தால் அவர்கள் வீழ்ந்த கதையும் கலந்து வருகிறது. ஆனால், இப்படியான அரசர்களில் ஒருவரை நாயகப் பாத்திரமாக வைக்காது, ஒரு சாதாரண வீரனின் பார்வையில் கதை செல்கிறது. கதை மதுரை, சென்னை, கோவை, திருப்பத்தூர், மைசூர், டில்லி, கல்கத்தா, வாரணாசி என்று இந்தியா முழுக்க பயணிக்கிறது. ராபர்ட் கிளைவ், அக்னியூ, காரன் வாலிஸ், வெல்லெஸ்லி, பானர்மேன், ஜாக்சன் என்று நாம் நன்கு அறிந்தவர்கள் எல்லோரும் வருகிறார்கள். சாண்டில்யன் வழியாக நமக்கு அறிமுகமான முராரி ராவ் கூட வருகிறார். அரசர்களின் பேராசை, மக்களைப் பற்றிய அக்கறையின்மை, பங்காளிச் சண்டை எல்லாவற்றையும் பயன்படுத்தி, வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்திய கதையை இந்த நாவல் போல் வேறு எதுவும் இத்தனை விரிவாகச் சொல்லவில்லை என்று தைரியமாகச் சொல்லலாம்.
நாவலின் போக்கில் இந்தியா முழுவதின் நில அமைப்பு, நதிகள், மக்கள், ஜமீன்தார்கள், கொள்கைக்காரர்கள், கலைஞர்கள், பழங்குடிகள், அவர்களது பழக்க வழக்கங்கள், எல்லாம் மிக இயல்பாக ஆனால் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல வருட ஆய்வின் மூலம் நாவலாசிரியர் திரட்டிய ஏராள, ஏராளமான தகவல்கள் அப்படியே நாவல் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. பிரெஞ்சுக் கப்பல்களைக் கொள்ளையடித்த பணத்தில் உருவாக்கப்பட்டது தான் கிழக்கிந்தியக் கம்பெனி. ஒரு கட்டத்தில் உலகத்தை ஆண்ட அந்த கம்பெனியின் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் முப்பத்தியைந்து தான் என்ற தகவலை அறிய வியப்பாக இருக்கிறது. இன்றுவரை நம் குழந்தைகள் பாடிக் கொண்டிருக்கும் பாபா.. பிளாக் ஷீப்… என்ற ரைம்ஸ் உண்மையில் அயர்லாந்து விவசாயிகளின் ஒப்பாரிப் பாடலாம். இங்கிலாந்தின் கம்பளித் தேவைக்காக அயர்லாந்தின் விளை நிலங்கள் முழுவதிலும் ஆடு வளர்க்க புல் வளர்க்கக் கட்டாயப் படுத்துகிறார்கள். விளைந்த புல்லில் மூன்றில் ஒரு பகுதி தேவாலயத்திற்கு. அடுத்த மூன்றில் ஒரு பகுதி வெள்ளைக்கார முதலாளிக்கு. ஆடு வளர்ப்பவனுக்கு எஞ்சிய மூன்றில் ஒரு பகுதி மட்டுமே !
தகவல்களோடு ஆசிரியர் கூற்றாக வரும் வரிகளும் மிக ஆழமானவை. ஓரிடத்தில் போரின் வெற்றி தோல்வியில் ஆயுதங்களை விட முக்கியப் பங்கு வகிப்பது அரசியலமைப்பு. முற்போக்கான வணிக மூலதனத்தால் ஆளப்படும் இங்கிலாந்திடம், பிற்போக்கான நிலப்பிரபுத்துவத்தால் ஆளப்படும் பிரான்ஸ் தோற்கிறது என்கிறது நாவல். அதுபோலவே பிரெஞ்சுப் புரட்சி பற்றிய வரிகளும் அற்புதம். பிரான்ஸில் பிரபுக்களின் அதிகாரத்தைப் பறிக்க வியாபாரிகள் தொழிலாளர்களைத் தூண்டி விட்டார்கள். புரட்சி நடந்தது. அதிகாரம் வியாபாரிகள் கைக்கு வந்தது. இப்போது வியாபாரிகள் தொழிலாளர்களை நசுக்கினார்கள் என்கிறது நாவல். மற்றொரு இடத்தில் நாயகன் இனிமேல் கடன் கொடுத்தே நாடுகளைப் பிடிக்கும் தந்திரம்தான் பயன்படுத்தப் படப் போகிறது என்கிறான். அது தானே நாம் சமீபத்தில் படித்த பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்?
நாவலாசிரியர் மொழிபெயர்ப்பாளர். கட்டுரையாளர். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. கடும் உழைப்பில் பல்லாண்டுகால ஆய்விற்குப் பிறகு இத்தனை பெரிய நாவலை எழுதிய அவருக்கு வயது 71. அதுவும் இந்த நாவலை அவரே ஆங்கிலத்திலும் ஒரே சமயத்தில் எழுதி வெளியிட்டுள்ளார் என்பதை அறிந்த போது திகைத்துப் போனேன். சமீபத்தில் அவரது விரிவான நேர்காணல் பேசும் புதிய சக்தியில் படித்த பிறகே இந்த நாவலை வாங்கினேன். தமிழின் சமீபகால வரலாற்று நாவல்களில் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்று என உறுதியாகச் சொல்லலாம்.
பல இடங்களில் பின்னணித் தகவல்களை வாசகருக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஏதேனும் ஒரு பாத்திரம் பக்கம் பக்கமாக முகலாயர் ஆட்சி முறை பற்றி, பேஷ்வாக்கள் அதிகாரத்தைப் பிடித்தது பற்றி என்றெல்லாம் பேசுவது சற்று அயர்ச்சி தருகிறது. சில இடங்களில் திரும்பத் திரும்ப படித்ததையே படிப்பது போன்ற ஒரு சலிப்புணர்வு ஏற்படுகிறது. தமிழ் பதிப்புச் சூழலில், எடிட்டர் என்ற ஒருவர் இல்லாததன் விளைவு இது போன்ற பெரிய நாவல்களில் நன்றாகவே தெரிகிறது. இன்னும் தகவல்களை குறைத்து, பக்க அளவைக் குறைத்து, இரண்டு பாகங்களாக வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. நாவலில் பல இடங்களில் மெய்யெழுத்துகளில் மேற்புள்ளி இல்லாதது பெரிய உறுத்தல். ஆனாலும், நாவல் பேசும் விஷயம், அது பேசப்படும் விதம் தமிழுக்குப் புதிது. சமீப காலத்தில் மிக பரபரப்பாகப் பேசப்பட்ட, பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களின் வரலாற்றுப் படைப்புகளை விட பன்மடங்கு சிறந்த படைப்பு இது.
கதையில் ஓரிடத்தில் நாயகி, நாயகனிடம், “அப்பாவிகளுக்கு உலகத்துல விடிவே கிடையாதா?“ என்று கேட்பாள். “அப்பாவிகளாகவே இருக்கிற வரைக்கும் விடிவே கிடையாது,“ என்பான் நாயகன்.
நவீன காலனியாதிக்க காலத்தில், காலனியாதிக்கம் பற்றி மட்டும் சொல்லாமல், இந்த ஒற்றை வரியில் அதிலிருந்து மீளும் வழியையும் சொல்லும் இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.நாவலாசிரியர் கலைச்செல்வனுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
நூலின் தகவல்கள்
நூல் : “ஹீரா பிஜ்லி” (வரலாற்று நாவல்)
ஆசிரியர் : கலைச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் வெளியீடு
தொடர்புக்கு : 44 2433 2924
பக்கங்கள் : 990
விலை : ரூ.998
எழுதியவர்
ச.சுப்பாராவ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.