இந்த மலையாளத் திரைப்படம் நவம்பர் 2019 வெளிவந்துள்ளது. 

மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இயக்கியுள்ள முதல் படம். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதாம். $224600/ டாலர்கள் ஈட்டியுள்ளதாம். இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை பாராட்டப்பட வேண்டும். 

செவிலியர் பயிற்சி பெற்ற ஹெலன் கனடா சென்று பணம் சேர்த்து குடும்பத்தின் கடனை அடைக்க வேண்டுமென்று நினைக்கிறார். அவருடைய தந்தை பால் ஒரு காப்பீட்டு முகவர். தாய் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். மகளிடம் மிகவும் அன்பு செலுத்தும் தந்தை அவள் கனடா போகவேண்டாமென்று நினைக்கிறார். ஹெலன் மால் கடை ஒன்றில் வேலை பார்க்கிறாள். வேலை தேடிக்கொண்டிருக்கும் அசார் எனும் ஒரு இஸ்லாமிய இளைஞனை காதலிக்கிறாள். கடையில் பணிபுரிபவர்கள் ஒருவருக்கொருவர் தோழமையோடு பழகுகிறார்கள். மகளின் காதலை அறிந்த பால் அவளுடன் பேசுவதில்லை. காதலனுடனும் பிணக்கு ஏற்பட அவள் மனமொடிந்து போகிறாள். வேலை கிடைத்து அசார் சென்னைக்கு போகிறான். அன்று தந்தையின் போக்கால் மனம் வருந்தி ஹெலன்  நள்ளிரவு வரை கடையிலேயே இருக்கிறாள். பிறகு கடையை விட்டு போவதற்காக  வருகை இயந்திரத்தில் பன்ச் செய்கிறாள். ஆனால் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் தங்களுக்காக உயர் குளிர் அறையில் சில பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள்.

Helen movie Box Office Collection Report, Review and Rating - B4blaze

                      ஹெலன் குளிர் அறைக்குள்ளிருக்கும் போது அதை அறியாமல் கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்று விடுகிறார். ஹெலனைக் காணாமல் எல்லோரும் காவல் துறையினருடன் சேர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில்  தேடுகிறார்கள். கடையின் உள்ளே ஹெலன் உறைய வைக்கும் குளிரோடு போராடுகிறார். மரணத்தின் வாயிலில் இருக்கும் அவளை இறுதியில் மீட்கிறார்கள்.

                         மகளுக்கும் தந்தைக்குமான பாசம், கடையில் வேலை செய்யும் லிட்டு எனும் சேச்சியின் பரிவு, காதலர்களிடையே இயல்பான அன்பு, அவளை தேடும்போது வெளிப்படும் அசாரின் ஆழமான காதல், இரவு முழுவதும் பாலுடன் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ராகவன், அசார் தன மகளைக் காதலிப்பது பிடிக்கவில்லை என்றாலும் அவனை காவல் அதிகாரி அடிப்பதை தடுக்கும் பால், காவல் அதிகாரியின் பழிவாங்கும் போக்கைக் கண்டு பதைபதைக்கும் தலைமைக் காவலர், அந்த வக்கிரமான காவல் அதிகாரியை கண்டித்துவிட்டு தேடுதலை முடுக்கிவிடும் உயர் அதிகாரி என படம் முழுவதும் மனிதத்தின் வெளிப்பாடுகள். அவளைப்போலவே அந்த அறைக்குள் மாட்டிக்கொள்ளும் எலியிடமும் ஹெலன்  காட்டும் பரிவு. எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல மாலின் பாதுகாவலர், ‘ஹெலன் தன்னை நோக்கி சிரித்து வணக்கம் வைத்து விட்டு செல்வதை மறக்க முடியாது. இப்பொழுது மனிதர்கள் எங்கே சிரிக்கிறார்கள்? தரையைப் பார்த்துக் கொண்டுதானே நடக்கிறார்கள்?’ என்று கூறும் இறுதிக் கட்டம்.

Pon Thaarame' zooms into the world of Helen

                  குளிர் அறைக்குள் ஹெலன் நடத்தும் அறிவு பூர்வமான போராட்டம் சாதாரணமாக திரைப்படங்களில் பார்க்க முடியாதது. கடலும் கிழவனும் நூலில் வரும் போராட்டம் போல, பசித்த ஓநாய்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்போல, அவள் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்கிறாள். அது ஒரு ஹெலனின் போராட்டம் அல்ல. மனித இனம் ஆதி முதலே நடத்தி வருகிற போராட்டம்.

(இந்தப் படத்தைப் பார்க்கப் பரிந்துரைத்த நண்பர் விசு,வேதராமன் ஆகியோருக்கு நன்றி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *