1970களில் தமிழ் வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான சுவாரஸ்யமான நாவல் ஹென்றி ஷாரியரின் “பட்டாம்பூச்சி” நாவல். தமிழில் ரா.கி.ரங்கராஜன்(கமல்ஹாசன் கூட இவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்) அவர்களது அற்புதமான மொழிபெயர்ப்பில் தீப்பிடித்தாற்போல ஒவ்வொரு பக்கமும் வேகமாக நகரும். இன்றும் கூட தமிழில் இந்நாவல் விற்பனை குறைந்தபாடில்லை. மூலப்பதிப்பு வெளிவந்த 3 வருடங்களுக்குள்ளேயே தமிழில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்ச்சமூகம் கடமைப்பட்டிருக்கிறது.

Papillon என்றால் பட்டாம்பூச்சி என்று அர்த்தம். ஹென்றி ஷாரியரால்(Henri charriere)1969 ல் எழுதி வெளியிடப்பட்ட தமது வாழ்வனுபவ நாவல் இது. 1931 முதல் 1945 வரையிலான 14 ஆண்டுகால சிறைவாழ்வு மற்றும் தப்பித்தல் முயற்சிகளுமே இந்நாவலின் மையம்.

பிரான்சில் 1969 ல் வெளியான இந்நாவல் , விற்பனையில் தொடர்ந்து 21 வாரங்களுக்கு முதலிடம் பிடித்துள்ளது. பிரான்சில் மட்டுமே 15 இலட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. உலகம் முழுவதும் 21 மொழிகளில் 239 வேறுவேறு பதிப்புகளாக வெளியாகி உள்ள இந்நாவல் 1973 லும் , 2017 லும் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது.

கதை சுருக்கம்.

Papillon இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய பிரான்சில் சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு பிழைத்துக் கொண்டிருப்பவன். விலைமாதர் ஏற்பாட்டாளரைக் கொலை செய்ததாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பிரெஞ்சுக் காலனியாக இருந்த தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவின் தீவுச் சிறைக்கு அனுப்பப்படுகிறார்.சுற்றிலும் அட்லாண்டிக் பெருங்கடல் என்பதால் தப்பிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது. செய்யாத குற்றத்திற்காவும் , தம் வாழ்க்கை மீது கொண்ட பிடிப்பினாலும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். சக சிறைவாசியாக வசதிபடைத்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட “லூயிஸ் டேகாவின்” நம்பிக்கையை சம்பாதித்துக் கொள்கிறார். அதன் பிறகு அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்வதே பிரதான கதைப் போக்காக இருக்கும்.

பிரான்சில் இருந்து ஏன் பல்லாயிரம் மைல் தொலைவில் உள்ள சிறைக்கு அனுப்ப வேண்டும் ?

சாத்தானின் தீவு (Devil’s Island) என்றும் , “பீனல் காலனி”(Penal Colony of caynne) என்று அழைக்கபட்ட இத்தீவுச்சிறை 1852 முதல் 1952 வரை 100 ஆண்டுகள் செயல்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டு துவக்கத்தில் பிரெஞ்சின் நகர்ப்புற மக்கள் தொகை 60 இலட்சத்தில் இருந்து 16 கோடியாக அதிகரித்தது.சரியான முறையில் நிர்வகிக்க இயலாததால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் , வர்க்க வித்தியாசங்கள் , கொள்ளை நோய்கள் ,கண்டிப்பான மதநிறுவன நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களால் குற்றங்கள் பல்கிப் பெருகின.குற்றவாளிகள் வெளியாகியதும் மீண்டும் மீண்டும் நிலவிய அதே அசமத்துவ சூழலால் , மீண்டும் அதே வகை தொடர் குற்றச் செயல்பாடுகளில் பங்கேற்பது அன்றைய அரசு நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்தது.ஒருவகையான உளச்சிதைவு நோய் போல குற்றநடவடிக்கைகள் திரும்ப திரும்ப நடைபெற்றன(Recidivism).எனவே தமது காலனியாதிக்க நாடுகளில் ” தண்டனைக் குடியிருப்புகளை(Penal Colony)” ஏற்படுத்துவதன் வாயிலாக இவ்வகை அவலங்களை ஒழித்துக்கட்டலாமென முடிவு செய்தனர். இவ்வகையான உளச்சிதைவு குறைபாடு (Recidivism) இங்கிலாந்து , அமெரிக்கா,டச்சு உள்ளிட்ட அரசுகளுக்கும் சவாலாக அமைந்தன. ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்த்தெழுந்த இந்தியர்களை இவ்வகையில் ஒடுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தண்டனை தீவுக்குடியிருப்பே “அந்தமான்” ஆகும்.

பிரெஞ்ச் கயானாவின் “சாத்தான் தீவுச்சிறையில்” 83000 பேர்களை சிறை வைத்துள்ளதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அதில் 75% பேர் தமது தண்டனைக்காலம் முடியும் முன்னரே இறந்துவிட்டனர். அவர்கள் இறப்புக்கு மிக முக்கியக் காரணம் சிறைக்கலவரம் மற்றும் மித வெப்ப மண்டல நோய்க் காரணிகள். இதையும் மீறி கலகம் செய்வோரை மனதளவில் ஒடுக்குவதற்கு தனிமைச் சிறைகளும்(Solitary Cells) , அச்சுறுத்த தலைதுண்டிக்கும் இயந்திரமும்(Guillotine)உதவி புரிந்தன என்றால் இவ்வகை சிறைகளின் அவலத்தை நாம் நன்கு உணரலாம்.இவை தவிர சிறைவாசிகளுக்கு குடும்ப வாழ்க்கையின் விழுமியங்களைப் புரிய வைப்பதற்காக 15 விலைமாதர்களை சிறையில் உலவ அனுமதித்தனர்.இவர்களை மதநிறுவன கன்னியாஸ்திரிகள் ஒருங்கிணைத்தனர். ரம்மைப் பகிரும் எந்த ஒரு சிறைவாசியும் இவர்களிடத்தே கலவி கொள்ளலாம்.இத்தகைய தொடர் கலவிச் செயல்பாடுகளால் தீவிர பாலியல் நோய்கள்(Syphilis) பெருகி பல உயிரிழப்புகளுக்கு வித்திட்டது. இதோடு பிரான்சின் அரசியல் கைதிகளையும் இவ்வகை கொடுமைக்கு உள்ளாக்கினர்.மூன்றாம் நெப்போலியனுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக 239 குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள இங்கே சிறைவைக்கபட்டனர்.ஜெர்மனியின் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்ட ஆல்ப்ரெட் ட்ரெபஸ்(Alfred Dreyfus) மூலமே இச்சிறையின்
உண்மை நிலவரம் வெளியே தெரிய ஆரம்பித்தன.

நாவல் 1969 vs Papillon 1973 vs Papillon 2017.

நாவலில்,

பாபிலோன் மற்றும் லூயிஸ் டேகாவின் முன்கதை விவரணைகள் செறிவாக இருக்கும்.

ஷாரியரின் 5 தப்பித்தல் முயற்சிகளும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். பழங்குடிகள் கிராமத்திற்கு சென்று அவர்களோடு ஒருவனாக , அவர்களின் தலைவனாகவே மாறும் அளவிற்கு நடைபெறுகிற மாற்றங்கள் எல்லாம் நெகிழ்ச்சியாக
இருக்கும்.

கப்பலில் தொழுநோயாளிகள் சந்திப்புகள் , மலப்புழையில் பணத்தைப் பதுக்குதல் , சிகரெட்டுகள் பேரம், எல்லாமே செறிவாக எழுதப்பட்டு அவை வாசகனுக்குக் கடத்தப்பட்டும் இருக்கும். ஹென்றி “பாபிலோன்” ஷாரியர் எனும் கதாபாத்திரம் , அன்பான அனைவருக்கும் உதவி செய்கிற , பிறர் நம்பிக்கையை எளிதில்
சுவீகரிக்கிற பாத்திரப்புனைவாக இருக்கும்.நாவலின் கிளர்ச்சியூட்டக்கூடிய மற்றொரு அம்சம் “தீவுப்பெண்கள்”. நாவலின் மிக முக்கிய நகர்வை செய்பவர்கள் இவர்கள்தான்.

” உன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால் இங்கே யாருக்கும் எந்த பிரயோசனமும்
இல்லை. உன்னை தீ அழித்துக் கொள்வதாலும் இங்கே யாருக்கு எந்த நட்டமும் இல்லை”சிறை வார்டன் கைதிகளிடம் ஆழம்நிறைந்த அர்த்தமுள்ள நாவலின் மையத்தை அலட்சியமாக கடத்துவார்.

நாவலில் வருகிற இந்த வரிகள் இரண்டு திரைப்படங்களுக்கும் பொருந்துமென்று நினைக்கிறேன்.

நாவலை படமாக எடுத்தாலும், ரீமேக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் எடுத்தாலும் கூட , நாவலின் மையப்போக்கிற்கு எந்த வித பிரயோசனமும் இல்லை , நட்டமும் இல்லை.

காடோடி, ஓநாய்குலச்சின்னம் , வேள்பாரி போன்ற விவரணைக்கும் படிமங்களுக்கும் அழகியலுக்கும்
பெயர்போன நாவல்களை எவ்வளவு பொருட்செலவில் எடுத்தாலும் , நாவலாசிரியரின் இடையீடு இல்லாது போனால் அவை ஒரு போதும் ரசிகர்களை ஈர்க்காது. இதில் எனக்கு தெரிந்த சில விதிவிலக்குகளும் உண்டு.

அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங் ன் நாவல்களை மையப்படுத்த எடுக்கப்பட்ட படங்கள் பலவும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவை. The green mile , Shawshank redemption , The Shining உள்ளடக்கிய பல ஹாரர்களையும் அடக்கலாம். இதில் ஒரு உதாரணத்துக்காக குறிப்பிடவிரும்புவது “The Shawshank Redemption”. சினிமாக்காதலர்கள் பலருக்கும் பிடித்தமான விருப்பப்பட்டியலில் முதன்மையில் இருப்பது. இப்படம் ஸ்டீபன் கிங் – கின் “ரிட்டா ஹேவொர்த் அண்ட் ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன்” குறு நாவலைவிடவும் காட்சிமொழியில் நுணுக்கமான தெளிவான கோர்வையான அணுகுமுறையை அதன் இயக்குநர் “ஃப்ரான்க் டாராபோண்ட் ” பயன்படுத்தியிருப்பார். இந்த நுட்பம் எல்லோருக்கும் வாய்க்காது. ஓநாய்குலச்சின்னம் ஆங்கிலத்தில் 2015ம் ஆண்டு jean – Jacques annoyd ல் படமாக்கப்பட்டது.அவரும் சாதாரணமான இயக்குநர் இல்லை.Genghis khan , Seven years in Tibet , Two brothers போன்ற நல்ல படங்களைக் கொடுத்தவர்தான்.ஆனாலும் Wolf totem நாவலை படமாக எடுப்பதில் , காட்சிமொழியைக் கையாளுவதில் பெரிதாக ஈர்க்கவுமில்லை. நாவலின் முக்கியமான அம்சங்கள் எல்லாம் துண்டாடப்பட்டு சிதைவுறு நிலையிலேயே அப்படத்தை நாம் உள்வாங்கிக் முடியும். நாவலை வாசிக்காமல் நேரடியாக சினிமாவாக பார்த்த ரசிகரையும் அவர் திருப்தியுறச்
செய்யவில்லை.

எனவே நாவலைப் படமாக்குவது என்பதை விட அயர்ச்சியூட்டக்கூடியது “நாவலைத் தழுவியது , உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது” என்கிற டைட்டிலோடு வெளியாகிற படங்கள். இதில்
பல படங்களில், பல காட்சிகளில் மையத்தை சிதைத்த இயக்குநரே பளீச்சென தெரிவார். நாவலை வாசித்திராத எவரொருவருக்கும் நேரடி சினிமா அனுபவம் தருவதைக் குறித்து பேசவில்லை.நாவலையும் படித்து , சினிமாவாகவும் பார்க்கிற ரசிகர்களின் மனக்கவலைதான் இங்கே கோடிட்டுக்காட்ட விரும்புவது. அது இந்தப் படங்களுக்கும்பொருந்தும்.

நாவலின் பிரதான கதாபாத்திரங்கள்

1. ஹென்றி பாபிலோன் ஷாரியர் – 1973 – ஸ்டீவ் மக்வின் , 2017 – சார்லி ஹன்னாம்.

2.லூயிஸ் டேகா – 1973 – டஸ்டின் ஹாப்மேன் , 2017 – ரமி மாலக்.

நாவலின் சித்தரிப்புக்கும் , இப்படங்களின் சிதரிப்புக்கும் காததூரம். ஒருவகையில் 1973 யைக் கூட ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 2017 ல் டேகாவின் கதாபாத்திரம் நமக்கு எந்த பாதிப்பையும் தருவதில்லை. உயிரோட்டமான இறுதிக்காட்சியிலும் கூட “லூயிஸ் டேகாவைக் கூப்புட்டு போய் நீயும்செத்துப்போயிடாத..அது இங்கேயே கிடந்து சாகட்டுமென்றே ” நமக்கும் சொல்லத்
தோன்றுகிறது.
அவ்வளவு பலவீனமாக Portrait ஆக இருந்தது. ஷாரியர் கதாபாத்திரத்தில் சார்லி ஹன்னமும் கூட ஓகே வாக தமது கடுமையான உழைப்பைக் கொடுத்திருந்தார்.ஆனாலும் Post Credit ல் (2017) காட்டுகிற வயதான ஷாரியருக்கான ஒப்பனையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதில் ஷாரியரே தேடிச் சென்று தமது புத்தகப்பதிப்பைத் தொடங்குவது போலவும் , ஷாரியரின் பாபிலோன் பச்சை(Tatoo) குத்தப்பட்ட வெற்றுடம்பு புகைப்படமும் , ஆவணப்படுத்தப்பட்ட உண்மைசிறைப் பயணக் கருப்பு வெள்ளைக் காட்சிகளும்தான் 2017 எடிசனுக்கு பலம். மற்றபடி இந்த பருத்தி் மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.

விடுதலை வேட்கை , சுதந்திர உணர்வு, அமைதிப்படுத்தப்பட்ட மனதில் இருந்து வெளிப்படுகிற அற்புத ஆற்றல் , சோடைபோகாத நம்பிக்கை , கூட்டுறவு, இணக்கம் , தளராத கடும் முயற்சிகள் இவையெல்லாவற்றுக்கும் மேலே வாழ்வை ஆவணமாக்கத்துணிந்த அருமையான எழுத்துப்பணி , இவைதான் நாவலின் மையமாக , வாசிப்பின்போது எனக்குக் கிட்டியவை. ஒவ்வொரு சம்பவ விவரணைகளை நாம் காட்சிகளாக உருவகப்படுத்துகிறபொழுது அது தருகிற எல்லையற்ற அனுபவம் , வறட்டுக் காட்சிமொழியாக நாயக பிம்பத்திற்குள் சிறைப்படுகிற பொழுது நமது உணர்வுகளின் எல்லைகளையும் சுருக்கவிடுகின்றன. அது 1973 வெர்சனை விட 2017 வெர்சனுக்கு அதிகம்
பொருந்துகிறது.

இவ்வளவு வக்காலத்து வாங்குகிற நாவல் மட்டும் உன்னதமானதா என்றால் அதையும் ஒருவர் அடித்துத் துவைத்துக் காயப்போட்டிருக்கிறார். அவர் பெயர் ஜெரார்ட் டிவில்லியர்ஸ். இந்நாவல் முழுக்க முழுக்க உண்மையைப் பேசவில்லை என்றும் அதில் சொல்லப்பட்டஇருப்பவற்றுள் 10% தான் உண்மையானது என்றும் தக்க ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறார். இதே ஷாரியரின் சக சிறைவாசியாக இருந்து 1935ல் தப்பித்த “Rene Belbeenoit” ன் “Dry Guillotine” நாவலளவு கூட இது இல்லை என்கிற இன்னொரு தரப்பாரும் உண்டு. மேலும் Rene வின் நாவலால் அமெரிக்க அரசின் தண்டனைக்குள்ளானது தனிக்கதை.

இவ்வாறாக,
ஒரே நிகழ்வை பின்னணியாகக் கொண்ட சமகாலத்தைய
வேறுவேறு படைப்புகள்,

ஒரே நாவலை மையமாகக் கொண்ட வேறுவேறு திரைப்படங்கள் ,

ஒரே சேர நாவலும் , திரைப்படங்களும் சந்தித்த விமர்சனங்கள் , எதிர்வினைகள்

இவையெல்லாவற்றையும் தாண்டி எந்த ஒரு படைப்பும் மக்களிடையே ஒரு கவனத்தைக் கோருகிறது. அது அதிகார வர்க்க அவலங்களாக இருக்கலாம்.தளரா நம்பிக்கையும் , தீரா அன்பும் , சக மனிதர்களை நேசிக்கின்ற மனோபாவமாகவும் இருக்கலாம்.

மூலப் படைப்பின் பிரதான வேண்டுகோளை நிராகரிக்கிற எந்தவொரு நவீனப்படைப்பும் , ஜெயில் வார்டன் முன்னர் சொன்ன வாசகத்துக்குதான் பொருந்தும்.

– செ.கா.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *