Hephzibah Jesudasan In Putham Veedu Book Review By Dr. Idangar Pavalan. Book Day Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: ‘புத்தம் வீடு’ புதினம் – டாக்டர் இடங்கர் பாவலன்



நூல்: புத்தம் வீடு
ஆசிரியர்: ஹெப்ஸிபா ஜேசுதாசன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

காலச்சுவடு பதிப்பில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் படைப்பூக்கத்தில் வெளிவந்திருக்கிற ‘புத்தம் வீடு’ புதினம் வாசித்தாயிற்று. முதலில் எழுத்தாளர் பெயரைக் கேட்டவுடனே ஏதோ மொழிபெயர்ப்பு நாவலாக இடுக்கக்கூடும் என்ற மனநிலையில் வாசிக்கத் துவங்கி பின்பு எழுத்தாளரின் அறிமுகம் வழியே நம் மண்ணின் படைப்பாளர் என்கிற உள்ளுணர்வோடு வாசிக்கத் துவங்கிவிட்டேன்.

அம்பை அவர்களின் முன்னுரையோடு வந்திருக்கிறதென்றால் கட்டாயம் அதிலே ஒரு அர்த்தம் இருக்கும் என்கிற உள்ளாரா குரலொன்று கேட்டுக் கொண்டே தான் இருந்தது. இந்த மனிதகுல வாழ்க்கைப் பாட்டில் பெண்களைப் பற்றி சொல்லவோ எழுதவோ கதைகளா இல்லை?

ஆம், இக்கதையும்கூட பெண்ணைப் பற்றியதுதான். அப்பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியதும், அவளது சின்னஞ்சிறு வயதில் அரும்பிய காதலின் தொடர்ந்து நீளுகிற அன்பின் கதையும்தான்.

காலங்காலமாக நிலம் சார்ந்து இயங்கக்கூடிய அதிகார தொடுக்கும், சாதிய மனப்போக்கும் பெண்ணின் வாழ்வை எப்படியெல்லாம் அலைக்களித்து மாய்கிறது என்று நமக்கு ஒன்றும் தெரியாத காரியமா!

பழைய தேய்ந்த வீடென்றாலும் அதன் பழமைவாத அதிகார மிடுக்கில் காலகாலமாக இருந்து வந்திருக்கிற பெரிய வீடு, பெரியவாள் வீடு என்கிற தொணிதான் புத்தம் வீடு என்று இங்கே விளிக்கிறது. பழமைவாத சாதிய கண்ணோட்டத்தில் ஊறிப் போன தாத்தா, குடித்துக் குடித்து குடும்பத்தை நாசம் செய்து இறுதியில் கொலையாளிப் போய் மரணித்துவிடுகிற தந்தை, அடுக்களையை மட்டுமே பார்த்துப் பார்த்து வளர்ந்த அம்மா, தன்னை பிசினஸ்மேனாக்கும் என்று விளித்துக் கொண்டு பெரிய கடனில் தத்தளித்து பின் அதற்காகவே தன் இளைய மகளை திருமணம் செய்து கொடுத்த சித்தப்பா, தான் என்னவாக வேண்டுமென்று அவ்வப்போது முன்னுதாரணம் கொள்ளும்படியாக வாழுகிற சித்தி, இவ்வளவையும் பார்த்துப் பார்த்து பரிதாபமும், இரக்கமும், அன்பும் கொண்டு நேசிக்கிற தங்கராசு இத்தனைக்கும் மத்தியில்தான் அப்பாவிப் பெண் லிஸி தன் வாழ்வை வாழுகிறாள்.



பெத்த ஒத்த பிள்ளையும் பொட்டையாச்சே! என்று முகத்தை சுளிக்கிற குடிகார அப்பா, பொட்டச்சி படிச்சி என்ன பண்ணப் போறா? என்று பாதியில் படிப்பை நிறுத்துகிற குடும்பம், பெம்பளை மாதிரி நடந்துகனும் பாத்துக்க! என்று வயதிற்கு வந்த நாள் முதலே அடுக்களைவிட்டு அகலாதிருக்கும் படியாக நிர்பந்தம் செய்கிற வாழ்க்கை முறை, எந்த சாதியிலிருந்து வந்து பொண்ணு கேக்குறவ? என்று பெண் வழியே சாதியத்தை நிறுத்த முயலுகிற அடிப்படைவாத மனோபாவம், பொருளாதார ஏற்ற இறக்கம் ஏற்படுத்துகிற சமூகத்திய மாறுதல்களென எல்லாமே ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகைய நுட்பமாக வேலையைச் செய்கிறது என்பதை மிகவும் செரிவாக 154 பக்கங்களில் படைப்பாக்கியுள்ளார்.

அடிப்படையில் காதல் புதினம் என்று இருந்தாலும்கூட அத்தகைய மக்களின் வாழ்க்கைப்பாடுகளை அவர்களின் வாய்மொழி சொற் பிரயோகங்களின் வழியே பனைமரங்கள், கருப்பட்டி, பதினி இறக்குதல் போன்றவற்றை ஒரு பண்பாட்டு வடிவமைப்பில் இங்கே புதினமாக வந்திருப்பது தான் எனக்கு இதிலே மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.

அலுங்கு, அக்கானி, இற்செறிப்பு போன்ற அம்மக்களின் வாய்வழி சொற்களின் வழியேவும், “நீ ஆரே பிலே தேடுயே? எவ இங்கே இருக்கா உனக்குக் காத்துக்கிட்டு?” போன்ற வட்டார வழக்கு வழியேவும் பேசப்படுகிற மொழிநடையில் நாமும் கடற்கரையோர பனையேறிகளின் நடுவே இருந்து கதையை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமிப்பைத் தருகிறது.

இங்கே பழமைவாதம் ஒழிந்து இறுதியில் முற்போக்கு வெற்றி கொள்வதுவே இறுதியான முடிவாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு நல்ல அனுபவத்தை தருகிற அற்புதமான நாவல். 1964களில் வெளிவந்தாலும்கூட எல்லா காலத்திலும் அக்காலத்திற்குரிய வாசகருக்கும் பிடித்திருக்கிற வகையில் இருப்பதிலேதான் இந்நாவலும் முக்கியமான வெற்றி பெறுகிறது..



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *