விலை மாற்றமும் நுகர்வோர் தேர்வும்: ஹிக்ஸியின் தேவைக் கோட்பாடு (Hicks’s Demand Theory) – புதிய பார்வை
“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்” (குறள்-463)
என்ற குறள் ஹிக்ஸியின் தேவைக் கோட்பாட்டை விளக்ககும் சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது, அறிவுடையோர் வரவிருக்கும் இலாபத்தை மனதில் எண்ணி கையில் இருக்கும் முதலை இழக்க கூடிய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். என்பதை வெளிப்படையாகவும், அதேசமயம் தனக்கு மிகவும் பயன்பாடு வழங்கு பொருட்களாக இருந்தாலும் அதனை அதிகவிலை கொடுத்து பெறவும் மாட்டார்கள்; அதற்கான பதிலி (நிகரான) பொருட்களைக் குறைந்த விலை கொண்டு வாங்கி அதே போன்ற பயன்பாட்டை பெறக்கூடிய அறிவுடையவர்களாக இருப்பார்கள் என்ற மறைபொருளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது இக்குறள். அதைத்தான் ஹிக்ஸியின் கோட்பாடும் வலிந்து கூறுகிறது எனலாம்.
ஜான் ரிச்சர்ட் ஹிக்ஸ் (1904 – 1989) என்பவர் நோபல் பரிசு பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர் ஆவார். இவர் பொருளாதாரத்துறைக்கு ஆற்றிய பணி என்பது மிகவும் போற்றுதலுக்குரியது. அதன் ஒரு முக்கிய பங்களிப்பாக இந்த தேவைக் கோட்பாடு பார்க்கப்படுகிறது. இக்கோட்பாட்டின்படி ஒருவரின் தேவை என்பது அவரின் பொருளாதார நிலையைக் கொண்டு மாறுபட வேண்டும். அதே நேரத்தில், அந்த பொருட்களை அவர் வாங்குவதன் மூலம் அடையும் பயன்பாட்டில் (Utility) மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது. மேலும், இந்த கோட்பாடு மாற்றீடு விளைவுகள் (Substitution Effect) மீது முக்கியமாக கவனம் செலுத்துகிறது.
தற்போது உலக மக்கள் தொகையில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பெற்றுள்ளது வருந்தத்தக்க செய்தியாகும். குறைந்த அளவு நிலப்பரப்பில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நம் இந்தியா போன்ற நாடுகளில் அனைவருக்குமான சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நல்ல தரமான வாழ்க்கை முறை என்பதை வழங்குவதில் நிறைய சிரமங்கள் இருந்து வருகின்றன என்பதை நாம் அறிந்திட வேண்டும். மேலும், நாகரீக வளர்ச்சியின்பாலும் தற்கால துரித வாழ்க்கை முறையின் மூலமாகவும் ஒரு காலத்தில் ஆடம்பர பொருட்களாக இருந்த பெரும்பாலான பொருட்கள் இன்று அத்தியாவசிய பொருட்களாக மாறிவிட்டன. அதேபோன்று முன்பு சொற்ப பணத்திற்கு கிடைத்த மிக அரிய பொருட்கள் தற்போது மிக உயரிய பொருளாதார வளம் கொண்டவர்கள் மட்டுமே வாங்கி பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு நம்மை தள்ளியுள்ளன. இந்த இரண்டு முரண்பட்ட நிலையில் இந்த கோட்பாடானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வாகத்தான் இக்கோட்பாடு விளங்குகிறது. அதாவது, காபி அருந்த விரும்பும் ஒரு மனிதன் அதன் விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு பதிலியான டீ அருந்துவதன் மூலம் அதே பயன்பாட்டை குறைந்த விலையில் அடைகிறார். எனவே, ஒரு நடுத்தர பொருளாதாரநிலை கொண்டுள்ள ஒரு குடும்பமானது தங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றார்போல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சிரமபடுவதைக் காட்டிலும் அதற்கு பதிலியாக விளங்கும் விலை குறைந்த பொருட்களில் தங்களது கவனத்தை செலுத்தும் போது நீண்டகால நடைமுறையில் தங்களது பொருளாதாரத்தை சீர்குலையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், சில எடுத்துக்காட்டுகளின் மூலம் இந்த கோட்பாட்டின் கருவினை மிகச்சரியாக புரிந்துகொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் உணவிற்காக விலைகூடிய பாசுமதி அரிசிக்கு பதிலாக சதாரண அரிசியை வாங்கி உபயோகிக்கும் போது இரண்டும் உண்பதற்கான பயன்பாட்டில் ஒன்றாகதான் இருக்கிறது. ஆனால் இரண்டு அரிசி இரகங்களின் விலையில் மிகப்பெரிய வித்தியாசத்தை நம்மால் காணமுடிகிறது. இதன் விலைவாக ஒரு நடுத்தரக் குடும்பம் சில ஆயிரங்களை ஒரு மாதத்தில் சேமிக்க முடியும். அதேசமயம் சேமித்த பணத்தில் வேறுசில முக்கிய செலவுகளை செய்வதற்கு வாய்ப்பாகவும் உள்ளது.
பாதாம் பருப்பு என்பது சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து மிகுந்த பொருளாகும். ஆனால் சாதாரண மக்களுக்கு அவற்றை வாங்கவோ அல்லது அதனுடைய ஊட்டச்சத்தினை பெறுவதோ இயலாத ஒன்றாகும். ஆனால், அதே ஊட்டச்சத்தில் மிகவும் மலிவாகக் கிடைக்கக் கூடிய ‘ஏழை மக்களின் பாதாம்’ என்று அழைக்கக் கூடிய வேர்க்கடலையை பயன்படுத்துவதால் சேமிப்பை உறுதிசெய்வதுடன், ஊட்டச்சத்திணையும் பெற்றுவிட முடியும்.
அதேபோல் தற்போதைய நவீன காலத்தில் புத்தகங்கள் அச்சுகளில் மட்டுமின்றி இணையத்திலும் (Virtual) மிகமலிவாகக் கிடைக்கின்றன. ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் 500 என்று கொண்டால் அதனை இணையத்தில் படிப்பதற்கும், படிகள் எடுத்துக் கொள்வதற்கும் சில நூறுகள் மட்டுமே போதுமானதாகும். இதனால் பதிலிப்பொருள் வழங்கும் பயன்பாட்டிற்கும் மூலப்பொருள் தரும் பயன்பாட்டிற்கும் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதை தெளிவாக உணரமுடிகிறது.
மேலும், நாம் பயன்படுத்தும் மொபைல் போன்களின் தரவுகள் (Data) மற்றும் மீள்நிரப்பு (Recharge) போன்றவைகள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. ஆனால் அது வழங்கும் பயன்பாடு என்பது ஒன்றுதான். இதில் மதிப்பிற்காகவும், பொருட்களின் வணிகப்பெயர் மற்றும் மனப்படிமத்திற்காகவும் (Brand Image) எந்த பொருளையும் அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட அதன் பதிலிப்பொருட்களை விலை குறைந்த நிலையில் பெருவதன் மூலம் அதே பயன்பாட்டை குறைந்த விலையில் அடைய முடிகிறது. இதனைத்தான் இந்த கோட்பாடு விளக்குகிறது.
தற்கால நவீன மற்றும் வேகமான உலகத்தில் நாகரீகத்திற்காகவும், வீண் பொருமைக்காகவும் மற்றும் அத்தியாவசியத்திற்காகவும் பெரும் செலவுகளை மேற்கொண்டு, வங்கி கடன்களில் சிக்குண்டு; தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை வட்டியாகவும், சமமான மாதாந்திரத் தவணை (EMI) முறையிலும் செலுத்தி மாட்டிக் கொண்டு; தங்களின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, பெரும் துயரத்தில் ஆட்கொண்டு வாழும் நுகர்வோர்கள் தங்களின் பொருட்களின் தெரிவுகளில் இவற்றிற்கு இடம் அளிக்காமல் பயன்பாட்டை வழங்கும் குறைந்த விலை பதிலிப்பொருட்களை வாங்கி; தங்களின் வாழ்வில் சேமிப்பை பெருக்கி, கடன்களில் மாட்டிக் கொள்ளாமல் வாழ்வதற்கும், அதன்மூலம் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளின் நிலையை மேம்படச் செய்வதற்கும், நுகர்வோர்களாகிய நாம் நம்மால் இயன்ற கடமையைச் செய்வோமாக.
📚 எழுதியவர்:

முனைவர் வீ.கிருஷ்ணகுமார்
உதவிப் பேராசிரியர்,
ஏ.வி.ச கல்லூரி,
போடிநாயக்கனூர் – தமிழ்நாடு.
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
