Fascism of Hindu Nationalism | இந்து தேசியவாதத்தின் பாசிசம் | Hindutva | இந்து ராஷ்டிரம்

அயோத்தியில் 2024ஆம் ஆண்டு ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெற்ற பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அந்தக் கோவில் இப்போது அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக முகலாயப் பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதி இடித்துத் தள்ளப்பட்ட ராமர் கோவிலின் மீது கட்டப்பட்டது என்ற வாதமே பல நூற்றாண்டு காலமாக முஸ்லீம்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு இடையே அந்த இடத்தின் மீதான சர்ச்சைக்குக் காரணமாயிற்று. 1980களில் மிகப் பெரிய அரசியல் பிரச்சனையாக அந்த விவகாரத்தை மாற்றிய பாரதிய ஜனதா கட்சி 1992இல் ஒரு பெரும் கும்பலைக் கொண்டு மசூதியை இடித்துத் தள்ளியது. அத்துடன் கோவிலை மீண்டும் கட்டிக் கொள்ள அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு என்ற  உச்சக்கட்டத்தை அடைந்த இயக்கத்திற்காக மக்களைத் திரட்டியது.

Narendra Modi addressing a gathering Ram Temple

2020 ஆகஸ்ட் 5 ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் அந்த விழாவிற்குத் தலைமை தாங்காமல் இருந்திருந்தால், அந்தக் கோவிலைக் கட்டுவது குறித்து கவலைப்படுவதற்கான தேவையே இருந்திருக்காது. ‘இந்தியக் குடியரசு வரலாற்றில் இது மிகவும் முக்கியமான தருணமாகும். ராமரை வெறுமனே மதம் சார்ந்த தெய்வம் எனக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இந்தியாவின் அடித்தளமாக அவர் இருந்து வருகிறார். தேசிய உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தாக அவரது கோவில் இருக்கிறது’ என்று வெளிப்படையாக இருந்த மோடியின் உரை அனைத்து இந்திய ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள் மீது அதிகரித்து வரும் சர்வாதிகார ஒடுக்குமுறை

தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரிகளின் எழுச்சி இந்தியாவில் உருவாகி இருப்பதையே அரசியல் முதலாளிகள், வணிகப் பிதாமகர்களின் இறுகிய பிடிக்குள் சிக்கி பணியாற்றி வருகின்ற பத்திரிகையாளர்கள் மீது இப்போது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்கள் காட்டுகின்றன.

https://cdn.quillette.com/2021/11/Screen-Shot-2021-11-15-at-1.16.42-PM.png

காலனித்துவ காலத்திலேயே தோன்றியிருந்த ஹிந்து தேசியவாத சித்தாந்தத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் வகையிலான வரலாறு, தேச அடையாளங்களுடனே மோடியின் உரை இருந்து வருகிறது. ஹிந்து தேசியவாதத்தின் ஆரம்ப வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா மீது தங்களுடைய கட்டுப்பாட்டை மிகத் தெளிவாக நிறுவியிருந்தனர். ஆரம்பத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தால் பணியில் அமர்த்தப்பட்டிருந்த அறிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான ராஜா ராம் மோகன் ராய் மிக முக்கியமான ஆரம்பகட்ட சீர்திருத்தவாதியாவார். ஸ்காட்டிஷ் மதகுருவான கிளாடியஸ் புக்கானன் போன்ற சுவிசேஷ மிஷனரிகள் ஹிந்து மதம் எந்தவொரு தார்மீகக் கொள்கைகளும் இல்லாத பழமையான, ரத்தவெறி கொண்ட மதமாக இருப்பதாக அந்த நேரத்தில் சித்தரித்து வந்தனர். ஹிந்து சமுதாயத்தின் பாலுணர்வு மற்றும் மூடநம்பிக்கைகளை மிகைப்படுத்தி எழுதிய புக்கனன் ஹிந்துக்களை குழந்தைகளைப் பலிகொடுக்கும் கானானிய தெய்வமான மோலோச்சின் வழிபாட்டாளர்கள் எனச் சித்தரித்தார்.

அந்தக் காலகட்ட இந்தியச் சமூகம் மிகவும் பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்களுடனே இருந்தது. கணவர்களின் இறுதிச் சடங்குகளில் விதவைகள் எரித்து கொல்லப்பட்ட சதி என்ற வழக்கம் அத்தகைய பழக்கவழக்கங்களில் மிகக் கொடூரமானதாக இருந்தது. ஹிந்து மத நூல்களை நவீனத்துவத்துடன் இணைக்க ராஜா ராம் மோகன் ராய் முயன்றார். அவரது அயராத முயற்சிகளால் சதி என்ற வழக்கம் இறுதியாக 1829ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. ஹிந்து மதத்தின் மீதான ராயின் பார்வை பெருமளவிற்கு கிறிஸ்தவத்தின் தாக்கம் கொண்டே இருந்தது. சிலை வழிபாட்டை நிராகரித்த அதே சமயத்தில் வேதங்களின் வடிவில் ஹிந்துக்கள் ஒற்றைப் புத்தகத்தைக் கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தி வந்தார். ஹிந்து மதம் அதன் அசல் வடிவத்தில் ஏகத்துவமானது, சமத்துவமானது என்று வாதிட்ட ராய் ஹிந்து சமுதாயத்தின் சீர்திருத்தம், பத்திரிகை சுதந்திரம், பெண்களுக்கான உரிமைகளுக்கு முழுமையாக ஆதரவளித்து வந்தார்.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\main-qimg-dfdfe0a6845b7638cbd16ff828d117aa.jpg

பெண்கள் அறிவுசார் தாழ்வு மனப்பான்மையுடன் உள்ளனர் என்ற கருத்துக்கு எதிராக ‘தங்களுடைய இயல்பான திறனை வெளிப்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை பெண்களுக்கு நீங்கள் எப்போதாவது வழங்கியிருக்கிறீர்களா? அவ்வாறு வழங்கிடாத போது அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை என்று நீங்கள் எப்படி குற்றம் சாட்டுவீர்கள்? அறிவு, ஞானத்தைக் கற்றுக் கொடுத்த பிறகு, தனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டவற்றை ஒருவரால் புரிந்து கொள்ளவோ அல்லது தக்க வைத்துக் கொள்ளவோ முடியவில்லை என்றால் மட்டுமே நாம் அவரை குறைபாடுடையவர் என்று கருதலாம். அப்படியிருக்கும் போது கல்வியிலிருந்து, பெற்றுக் கொள்கின்ற அனுபவங்களிடமிருந்து பெண்களை விலக்கி வைத்திருக்கும் உங்களால் அவர்களுடைய தாழ்வு நிலை குறித்து பேச முடியாது’ என்று ராய் கடிந்து எழுதினார்.

ஒற்றை விளக்கத்துடனான நூலைக் கொண்டுள்ள மதமாக ஹிந்து மதத்தை மாற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக ராய் இருந்ததற்கு, ஹிந்துக்கள் ஒன்றுபட்ட ஒற்றைச் சமூகமாக மாற வேண்டும் என்ற அவரது விருப்பமே முக்கிய காரணமாக இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளைக் கடுமையாக எதிர்த்து வந்த போதிலும், சிலை வழிபாடு, பலதெய்வ வழிபாடு, ஹிந்து மதத்தில் நிலவி வந்த பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிஷினரிகள் கொண்டிருந்த வெறுப்பைத் தானும் பகிர்ந்து கொண்டவராகவே ராய் இருந்தார். அதுபோன்ற பழக்கவழக்கங்கள் அனைத்தும் ஹிந்து மதத்திற்குள் பிற்காலத்திலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டன என்று கூறி அவற்றையெல்லாம் ராய் நிராகரித்தார். அதற்கு மாற்றாக அவர் மூடநம்பிக்கையிலிருந்து மதம் விடுபட்டிருந்த வேதகாலப் பொற்காலத்திற்குச் செல்ல வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்தார். சுவிசேஷ கிறிஸ்தவத்திற்கான எதிர்வினை, விமர்சனம் என்ற அளவிலேயே ராயின் ஹிந்து மதம் இருந்தது. ஆனாலும் முஸ்லீம்களிடம் பெருத்த சந்தேகத்தை உருவாக்கியிருந்த ஹிந்து தேசியவாதத்தின் பிற்கால வடிவங்களை வரையறுத்த மையக் கூறுகளுடன் அவரது விமர்சனம் இருக்கவில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\71iZCbVN9CL._AC_UF350,350_QL80_.jpg

ஹிந்து தேசியவாதம் தன்னுடைய தற்போதைய வடிவத்திற்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாறத் தொடங்கியது. ஒட்டோமான் பேரரசு மீதான பிரிட்டிஷ் கொள்கையை எதிர்த்த, கலிபாவைப் பாதுகாப்பதற்கான அழைப்பை ஆங்கிலேயர்களுக்கு விடுத்த கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தியாவில் ஹிந்து, முஸ்லீம் சமூகங்களை ஒன்றிணைக்கலாம் என்று மகாத்மா காந்தி மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரான எதிர்வினையாகவே அது தொடங்கியது. அந்த முயற்சிகளுக்கு எதிராக வி.டி.சாவர்க்கர் ஹிந்துத்துவாவின் அத்தியாவசியங்கள் (எசென்ஷியல்ஸ் ஆஃப் ஹிந்துத்வா 1922) என்ற குறுநூலை பிரிட்டிஷ் சிறைக்குள் இருந்து எழுதினார். சமகால ஹிந்து தேசியவாதத்திற்கான அடித்தளத்தை வழங்கும் வகையிலேயே சாவர்க்கரின் எழுத்துகள் அமைந்தன. சாவர்க்கர் தற்கால இந்தியாவில் பொருத்தத்துடன் இருந்து வருவதை மோடியால் சாவர்க்கர் ஜெயந்தி (பிறந்தநாள்) பொதுவெளியில் கொண்டாடப்படுவது, சமீபத்தில் மூத்த பாஜக அமைச்சர்கள்  அங்கீகரித்த சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் போன்றவை நிரூபித்துக் காட்டுகின்றன.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\Savarkar.jpg

தங்கள் தாய் நாடு, தந்தை நாடு, புண்ணிய பூமி என்று இந்தியாவைக் கருதுபவர்களை மட்டுமே தேசத்தின் உண்மையான வாரிசுகள் என்று சாவர்க்கர் கருதினார். அவரைப் பொருத்தவரையில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கான புனித பூமி இந்தியாவைத் தவிர்த்து வேறு இடங்களில் இருந்ததால் அவர்கள் அனைவரும் விலக்கி வைக்கப்பட்டனர். அந்த அளவுகோல்களை தான் முரணாகப் பயன்படுத்தியதை சாவர்க்கர் ஒப்புக் கொள்ளவே வேண்டியிருந்தது. சாவர்க்கர் கிறிஸ்துவர்கள் ‘வெளிநாட்டு அரசியல் தாக்கம்’ இல்லாத குடிமைச் சிறுபான்மையினர் என்றும், இந்தியாவிற்கு   விசுவாசமாக, நன்றியுடன் இருந்த பார்சிகளின் (சுமார் எட்டாம் நூற்றாண்டில் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஜோராஸ்ட்ரியர்கள்) மொழி, கலாச்சாரம், மதம் ஹிந்துக்களை ஒத்திருந்தது என்றும் அங்கீகரித்திருந்தார். முஸ்லீம் மக்களின் விசுவாசம் மீது சந்தேகத்துடன் இருந்த அவரது ஒரே இலக்காக அந்த மக்கள் மட்டுமே இருந்தனர்.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\quotes-by-savarkar-2.jpg

‘ஹிந்துத்துவாவின் அத்தியாவசியங்கள்’ நூல் வெளியீடு மூலம் இஸ்லாமியர்களை எதிர்ப்பதற்கான  ஒழுங்கமைக்கப்பட்ட ஹிந்து சமூகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை சாவர்க்கருக்கு இருந்தது. அது மதம் சார்ந்த அடிப்படைவாத முயற்சியாக இருக்கவில்லை. சாவர்க்கர் ஒரு நாத்திகராக மட்டுமல்லாது, சடங்குகள், மூடநம்பிக்கைகள், சாதி அமைப்பை மிகக் கடுமையாக விமர்சித்தவராகவும் இருந்தார். எந்தவொரு மத நூலையும் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக்  கருதவில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\763503-34be949c-1bc8-47ea-88ab-d3353cc2831f.jpg

சமகால ஹிந்து தேசியவாதம் சிறிதளவும் சமரசம் செய்து கொள்ளாதவையாக பசு வழிபாடு,  இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதைத் தடை செய்யும் சட்டம் போன்றவை இருக்கின்றன. பி.ஆர்.அம்பேத்கர் போன்ற புகழ்பெற்ற தலித் அறிஞர்களை விலங்குகளைக் காட்டிலும்  மோசமான நிலையில் வைத்துவிட்டு, குப்பைகளைத் தின்கின்ற, தான் கழித்த சிறுநீருக்குள்ளேயே அமர்ந்து கொண்டிருக்கும் மிருகத்தை வணங்கி வருகிறார்கள் என்று மரபுவழி ஹிந்துக்களை சாவர்க்கர் கடிந்து பேசினார். விவசாயப் பொருளாதாரத்தில் பசுக்களின் பயன்பாட்டின் காரணமாகவே அவற்றை வழிபடும் நடைமுறை உருவானது என்று கூறிய சாவர்க்கர் மனிதர்களுக்குப் பயனுள்ள ஒரு விலங்காக மட்டுமே பசுவைக் கருத வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். தேவைப்படும்  போது அவற்றை உண்ணலாம் என்று கூறிய அவர் பசுவை ஒருபோதும் வணங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\DIX4T4JVwAAu3B7.jpg

தன்னுடைய சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில்  மூடநம்பிக்கைகள், சாதி அமைப்புக்கு எதிராக சாவர்க்கர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக முற்போக்கானவர் என்ற பொருளில் ‘புரோகாமி’ என அவர் வகைப்படுத்தப்பட்டார். மதரீதியான புத்தகங்கள் மீதான சாவர்க்கரின் பாகுபாடற்ற ஆய்வுகளை மதவெறி கொண்ட ஹிந்து தேசியவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவு ஆர்வலரான நரேந்திர தபோல்கர் பாராட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது. சாவர்க்கரின் ஹிந்து தேசியவாதம் பழமைவாதத்துடன் இல்லாமல் அதி நவீனத்துடனே இருந்தது.  சாவர்க்கர் ஹிந்து சமூகத்தை மதரீதியான நூல்களுக்குப் பதிலாக வரலாற்றைக் கொண்டு ஒன்றிணைக்க முயன்றார். ‘தான் தொடர்புபடுத்த விரும்புகின்றவரின் செயல்களுடன் அவர்களுடைய உணர்வுகள், நோக்கங்கள்,  உணர்வுகள், செயல்களைச்’ சித்தரித்துக் காட்டுவதே வரலாற்றாசிரியர் ஒருவரின்  கடமை என்று சாவர்க்கர் கருதினார். உணர்வுகள் எதுவுமின்றி கடந்த காலத்தை வெறுமனே விவரிப்பது மட்டும் போதாது என்பதை வலியுறுத்திய சாவர்க்கர் புரட்சியின் சாரத்தை முழுமையாக விவரிக்க தனிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்கு அடியில் செயல்பட்டு வரும் மர்மமான சக்திகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டவராக இருந்தார். இந்த விஷயத்தில் தனது தனிப்பட்ட ஹீரோவான இத்தாலிய புரட்சியாளர் கியூசெப் மஸ்ஸினியின் வாழ்க்கை, எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவராக சாவர்க்கர் இருந்தார்.

1909ஆம் ஆண்டில் சாவர்க்கரின் முதல் வரலாற்றுப் புத்தகமான ‘1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போர்’ வெளியானது. ஆங்கிலேயர்கள் வீரமிக்க தேசியவாதப் போராட்டத்தை ‘இந்தியக் கலகம்’ என்று குறிப்பிட்டதை அவரது அந்தப் புத்தகம் மறுபரிசீலனைக்குட்படுத்தியது. பிரிட்டிஷ் கண்காணிப்பின் கீழ் தீவிரமான புரட்சியாளராக அவர் இருந்தபோது எழுதப்பட்ட அந்தப் புத்தகம் ஏற்றுக் கொள்ளத் தகாத வகையில் வரலாற்றை வாசிக்கும் முயற்சியாகவே இருந்தது. அந்தப் புத்தகத்தில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் இருவரையும் இந்திய சமூகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி வருகின்ற சக தேசபக்தர்கள் என்றே சாவர்க்கர் விவரித்துள்ளார். கிலாபத்துக்குப் பிறகு மீண்டும் அத்தகையதோர் ஒத்திசைவு அவரது எழுத்துகளில் தென்படவில்லை. ஆயினும்கூட காலப்போக்கில் அவரது உரைநடையில் இருந்த கவிதை மற்றும் உணர்வு குறித்த அம்சங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றன. ஹிந்துத்துவா பற்றி அவர் எழுதிய புகழ்பெற்ற துண்டுப்பிரசுரத்திலும் அது தெளிவாகத் தெரிந்தது.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\indianwarofindep00vina_0001.jpg

தான் எழுதிய மராத்தி மொழி கவிதைகள் காரணமாக மகாராஷ்டிராவில் இன்னும் முக்கியமான இலக்கியவாதியாக சாவர்க்கர் இருந்து வருகிறார். அவரது கவிதை, புராண உணர்வுகள் அவர் எழுதிய ஆங்கில எழுத்துகளிலும் வெளிப்பட்டன. ராமர் இலங்கையைக் கைப்பற்றி இமயமலையிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை ஒட்டு மொத்த தேசத்தையும் தனது ஏகாதிபத்திய சிம்மாசனத்தின் கீழ் கொண்டு வந்தபோது ஹிந்து தேசம் பிறந்தது என்று சாவர்க்கர் கூறுகிறார். ராமர் தெய்வத்தின் அவதாரமா அல்லது போர்வீரனா என்பது சாவர்க்கரைப் பொருத்தவரை முக்கியமாக இருக்கவில்லை. அவரைப் பொருத்தவரை ஹிந்து இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகச் சிறந்த மாமன்னனாகவே ராமர் இருக்கிறார். ஹிந்து தெய்வங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து மன்னர்களை தேசத்தின் விசித்திரமான காதலர்களாகவே சாவர்க்கர் சித்தரித்தார். வரலாற்றாசிரியர் ஜானகி பக்லே ‘ஹிந்து மதத் தலைவர்கள் பலரை மதச்சார்பற்றவர்களாக ஆக்கியதன் மூலம் சாவர்க்கர் மலட்டு மதச்சார்பற்ற தேசியவாதத்தை உருவாக்கிடவில்லை. உண்மையில் அதற்கு நேர்மாறாக மாயாஜால நிலத்திற்குள் தொன்மச் சமூகத்தை வைத்து மதச்சார்பற்ற தேசியவாதத்தை அவர் கவர்ச்சிகரமானதாக ஆக்கினார்’ என்ற வாதத்தை  முன்வைக்கிறார்.

ஹிந்து தேசியவாதம் என்பது பெரும்பாலும் அரசியல் ஏகத்துவம் என்று விவரிக்கப்பட்டாலும் அதனை இன்னும் துல்லியமாக அரசியல் தனிக்குடித்தனம் என்ற சொல்லால் குறிப்பிடலாம். முஸ்லீம்கள் இரட்டை விசுவாசத்துடன் இருப்பதாக உணர்ந்த காரணத்தாலேயே சாவர்க்கர் முஸ்லீம்கள் மீது கொண்டிருந்த விரோதம் தூண்டி விடப்பட்டது. ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு காதலர்களை வைத்திருப்பதைப் போல – முஸ்லீம்கள் ஒருபுறம் தேசத்தின் மீது, மறுபுறம் மதத்தின் மீது என்று இரட்டை விசுவாசத்துடன் இருப்பது தவறு என்று சாவர்க்கர் வாதிட்டார். ஐரோப்பிய தேசியவாத இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட சாவர்க்கர் இந்தியா ஓரியல்பு கொண்ட பிரதேசமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார். மதத்தை நிராகரித்த அவர் தேசத்தைத் தெய்வமாக்கினார்.

பாசிசக் கோட்பாட்டை பெனிட்டோ முசோலினியுடன் இணைந்து உருவாக்க உதவிய தத்துவஞானி ஜியோவானி ஜென்டைல் இத்தாலியர்களின் ஆன்மாக்களில் வரலாறு எப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாகக் கருதினார்.  முசோலினி அறிவித்ததைப் போல தேசம் என்ற கட்டுக்கதையை பாசிசம் உருவாக்கியது. தன்னுடைய சேவைக்காக அது மற்ற அனைத்தையும் அடிபணியச் செய்தது. தேசம் என்பது ஓர் ஆன்மீக நிறுவனம் என்ற எண்ணம் பாசிசத்தைப் பொருத்தவரை வெறும் கருவியாக  மட்டும் இல்லாமல் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது. பாசிசம் என்பது ஒரு சர்வாதிகார சிந்தனை அமைப்பு. அது உங்களிடமிருந்து அரசியல் ஆதரவை மட்டுமல்லாது ஆன்மீக விசுவாசத்தையும் கோருகிறது.

பாசிசம் தன்னுடைய வரலாற்று உச்சத்தில் இருந்தபோது ஹிந்து தேசியவாதம் ஓர் இயக்கமாக, ஒரு சித்தாந்தமாகத் துவங்கியது. சாவர்க்கர் அதனைக் கொண்டாடினார். ‘ஜெர்மனி இப்போது வலுவாக இருப்பதால் ஜெர்மனியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து,  அவர்களை ஒரு பான்-ஜெர்மன் அரசாக ஒருங்கிணைத்து, ஜெர்மானிய மக்கள் பல தலைமுறைகளாக நேசித்து வந்திருக்கும் அரசியல் கனவை நனவாக்கிட ஏன் முயலக் கூடாது?’ என்று தேசிய சோசலிசத்தை ஆமோதித்து அவர் எழுதினார்.

1937ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியான ஹிந்து மகாசபையில் ஆற்றிய உரையில் ‘தேசம் என்பது வெறுமனே நிலப்பரப்பைக் கையகப்படுத்துவதன் மூலம் மட்டுமே உருவாவதில்லை. கலாச்சாரம், இனம் அல்லது வரலாற்று ரீதியான தொடர்புகள் மட்டுமே ஓரியல்பு கொண்ட ‘இயல்பான தேசிய மக்களுக்கான’ அடிப்படையை உருவாக்குகின்றன’ என்று சாவர்க்கர் குறிப்பிட்டார்  (நாஜி விரிவாக்கக் கொள்கைக்கு சாவர்க்கர் அளித்த அந்த ஆதரவு பின்னர் நாஜி அதிகாரப்பூர்வ செய்தித்தாளான Völkischer Beobachterஇல் வெளியிடப்பட்டது). அதன் பெரும்பான்மை மக்களைச் சார்ந்ததாகவே தேசம் இருக்க வேண்டும் என்று சாவர்க்கர் நம்பினார். ஜெர்மன் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தனர். வகுப்புவாதக் கூறுகளை யூதர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய அதே நேரத்தில் ஜெர்மனியர்கள் தேசிய இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஜெர்மனியில் உள்ள யூதர்களைப் போல தங்கள் சக குடிமக்களைக் காட்டிலும் நாட்டிற்கு வெளியே இருக்கின்ற முஸ்லீம்களுடனே இந்திய முஸ்லீம்கள் தங்களைக் கூடுதலாக அடையாளம் கண்டு கொள்கின்றனர் என்று சாவர்க்கர் வாதிட்டார். ஹிந்துக்கள் வலுவடையும் போது முஸ்லீம்கள் ஜெர்மன் யூதர்களின் பாத்திரத்தை வகிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கவும் அவர் தவறவில்லை. 1937ஆம் ஆண்டு சாவர்க்கரின் உரையை கேட்க வந்த பார்வையாளர்களிடம் சாவர்க்கரின் நெருங்கிய தோழரான பாய் பரமானந்த், சாவர்க்கரின் உரையை அவர்கள் தங்களுக்கான ‘மெய்ன் கேம்ப்’ (எனது போராட்டம்) ஆக்கிக் கொண்டு,  சாவர்க்கரை தங்களுடைய ‘ஃபுரர்’ (தலைவர்) என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

சாவர்க்கர் கட்சியின் மற்றொரு தலைவரான பி.எஸ்.மூஞ்சே முசோலினியின் இத்தாலிக்குச் சென்றிருந்தார். அங்கே தான் கண்டவற்றால் ஈர்க்கப்பட்ட மூஞ்சே ‘மக்களிடையே ஒற்றுமை பற்றிய கருத்தை பாசிசம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அத்தகைய அமைப்பு இந்தியாவிற்கு –  குறிப்பாக ஹிந்து இந்தியாவிற்கு, ஹிந்துக்களின் ராணுவ மறுமலர்ச்சிக்கு அவசியம் தேவைப்படுகிறது’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் எழுதினார்.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\Fw3VW-gaQAEZqr_.jpg

ஹிந்து தேசியவாதம் பாசிசத்தின் கூறுகளுடன் இருந்த போதிலும், அதனிடம் அரசு குறித்த உறுதியான கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. தன்னார்வ அமைப்பான ராஸ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திடமிருந்து தோன்றிய பாஜக தேர்தல் அரசியலில் ஈடுபட நீண்ட காலத்திற்கு எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அதனிடம் தேசம் குறித்த தனது குறுகிய பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் சமூகத்தை உருவாக்கிடும் விருப்பமே இருந்தது. இந்திய நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்திடக் கூடாது என்பதற்காக ஆர்எஸ்எஸ் தீவிர மாற்றங்கள் குறித்த எச்சரிக்கையுடன் பழமைவாத அமைப்பாகவே தொடர்ந்து இருந்து வந்தது. ஹிந்து மத நூல்கள் மீது சாவர்க்கர் வைத்த விமர்சனம் நிச்சயமாக ஆர்எஸ்எஸ்சின் பழமைவாதத்துடன் ஒத்துப் போகவில்லை. மதச்சார்பின்மை மற்றும் அப்போது இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த, புரட்சி வழியில் அல்லாத ஃபேபியன் சோசலிச ஜவஹர்லால் நேருவின் அரசுடன் இணைந்து மிக வசதியாக இருக்கக்கூடிய ஹிந்து தேசியவாதத்தின் வித்தியாசமான வடிவத்தை உருவாக்கிக் கொள்ளவே ஆர்எஸ்எஸ்சிலிருந்து உருவான போது பாரதிய ஜனசங்கம் (பாஜகவின் முன்னோடி)  முயன்றது. அரசியலில் பிழைத்திருப்பதற்கு நிதானம் மிகவும் அவசியமாகும். கத்தோலிக்க தத்துவஞானி ஜாக் மாரிடைனிடமிருந்து திருடி எடுத்துக் கொள்ளப்பட்ட ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்ற புதிய சித்தாந்தத்தை அரசியல்வாதியான தீன்தயாள் உபாத்யாயா தனது தொடர்ச்சியான விரிவுரைகளில் முன்வைத்து வந்தார். அவர்களிடமிருந்த  நிதானம் எப்போதும் மேலோட்டமாக இருந்ததையே அயோத்தி பிரச்சாரம் எடுத்துக் காட்டியது.

ஹிந்து பாரம்பரியவாதிகள் சமீப காலங்களில் ஹிந்து தேசியவாதத்தின் நவீனமயமாக்கல் கூறுகளைத் தவிர்க்கின்றனர். அவர்களைப் பொருத்தவரையில் மதச்சார்பின்மை, புறவயத்தன்மை, பகுத்தறிவுவாதம் போன்றவை இந்தியாவிற்குப் பொருந்தாத மேற்கத்திய கிறிஸ்தவக் கருத்துகள் என்றே இருக்கின்றன. பின்காலனித்துவ வாசகங்களை அபகரித்துக் கொண்ட அவர்கள் சதி மற்றும் சாதி அமைப்பு போன்ற பிற்போக்குத்தனமான நடைமுறைகள் காலனித்துவ அட்டூழிய இலக்கியத்தை எழுதிய எழுத்தாளர்களாலேயே உருவாகின என்கின்றனர். இந்திய பின்காலனித்துவ கோட்பாட்டாளரான பார்த்தா சாட்டர்ஜி சிந்தனையைத் தன்வயப்படுத்துவதிலிருந்து இந்திய தேசியவாத சித்தாந்தத்தால் ஒருபோதும் தப்பிக்க இயலவில்லை என்கிறார். பகுத்தறிவு, பொருள்முதல்வாதம், புறவயத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்ட நேரு போன்ற தேசியவாதிகள் ‘காலனித்துவ அறிவாற்றலைக்’ கொண்டே செயல்பட்டனர் என்று சாட்டர்ஜி கூறுகிறார். இந்தியா போன்ற முன்னாள் காலனி நாடுகள் பிரிட்டிஷ் கல்வியின்றியே நவீனமயமாகும் திறன் கொண்டவை என்று அவர்கள் வலியுறுத்தி வந்தது சாட்டர்ஜியைப் பொருத்தவரை அவர்களிடமிருந்த ‘காலனித்துவ கருப்பொருள்’ உள்மயமாக்கலையே சுருக்கமாகக் காட்டுவதாக இருந்தது. நேரு தனது பங்கிற்கு ஆன்மீக கிழக்கு மற்றும் பொருள்முதல்வாத மேற்கு ஆகியவற்றிற்கு இடையிலான ஓரியண்டலிச வேறுபாட்டை நிராகரித்தார். மேற்கத்திய அறிவொளிக்குப் பிந்தைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டாலும் எந்தவொரு சாத்தியமான மாற்றையும்  அவர் வழங்கவில்லை என்று நேருவை சாட்டர்ஜி விமர்சிக்கிறார். எந்தவொரு உறுதியான தேசிய மூலோபாயத்தையும் கோடிட்டுக் காட்டுவதற்கு பகுத்தறிவு சிந்தனை, பொருள் சார்ந்த கருத்தாக்கங்களின் முக்கியத்துவத்தை ஒருவர் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அதற்கான காரணமாக உள்ளது என்ற வாதத்தை மார்க்சிஸ்ட் சமூகவியலாளர் விவேக் சிப்பர் முன்னிறுத்துகிறார். மூடநம்பிக்கை, இறையச்சத்தை விமர்சித்த காலனித்துவமற்ற அறிஞர்கள்  பொருள்முதல்வாதம் மற்றும் அனுபவவாதத்திற்கு ஆதரவாக இருந்த லோகாயதா போன்ற ஹிந்து மதத்தின் பன்முகப் பள்ளிகளால் பண்டைய இந்தியா நிரம்பியிருந்தது என்ற உண்மையைக் கணக்கில் கொள்ளத் தவறினர். மிக முக்கியமாக ஹிந்து தேசியவாதத்தை வெளிப்படையாக நிராகரித்த போதிலும் பின்காலனித்துவ  விளையாட்டை இருவரால் விளையாட முடியும் என்பதைக் கண்டு கொள்ள சாட்டர்ஜி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

இந்திய மரபுகளின் மீது சுமத்தப்பட்ட மேற்கத்தியக் கட்டுமானமாகவே சாதி இருக்கிறது என்று ஹிந்து பாரம்பரியவாதிகளும், காலனித்துவம் நீங்கிய அவர்களுடைய சகாக்களும் வாதிடுகின்றனர் (டிஎன்ஏ ஆதாரங்களிடமிருந்து அந்த வாதம் முரண்படுகிறது). ஆங்கிலேயர்கள் நிர்வாக நோக்கங்களுக்காக சாதிகளை வரையறுத்ததன் மூலம் அதை மேலும் தெளிவாக்கினர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஆங்கிலேயர்கள் வந்தபோது இங்கே இருந்த அமைப்பு கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றாகும். மரபணு பதிவில் கண்டிப்பான அதன் பிரிவினை, அகமணமுறையின் தடயங்கள் இருந்தன. மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய சாதி ஒழிப்பு (1936) என்ற தன்னுடைய படைப்பில் தலித் அறிஞரும் இந்திய அரசியலமைப்பின் சிற்பியுமான பி.ஆர்.அம்பேத்கர் சாதி அமைப்பின் வேத மூலத்தை வெளிப்படுத்திக் காட்டியிருந்தார். தீண்டத்தகாதவர்கள் என்று அறியப்பட்ட தலித்துகளை  மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது போன்ற சாதி அமைப்பின் மோசமான அம்சங்களை மறுதளித்து, சாதியின் இறுக்கத்திற்கு ஆங்கிலேயர்களைக் காரணம் காட்டுவது என்றிருந்த ஹிந்து பாரம்பரியவாதிகள் அதே வேளையில் சாதியை மதத்தின் கட்டளை என்றும் கருதி இரு வழிகளிலும் நடந்து கொள்ள முயன்றனர்.  காலனித்துவம் நீங்கிய கட்டமைப்பைப் பயன்படுத்தி சாதி அமைப்பின் மேற்கத்திய தோற்றம் குறித்து பலமுறை வாதிட்ட வழக்கறிஞர் ஜே.சாய் தீபக் குறிப்பிட்ட சாதிகள்/சமூகங்களை மட்டுமே அர்ச்சகராக அனுமதிக்கும் நடைமுறையைத் தக்க வைத்துக் கொள்வதை ஆதரிக்கும் வகையில் வேதங்களில் இடம் பெற்றுள்ள சாதி சார்புடனான வரிகளை மேற்கோள் காட்டி நீதிமன்றங்களில் வாதிட்டுள்ளார்.

C:\Users\Chandraguru\Pictures\Anvesh Letter to Modi\Quillette\coronil.jpg

ஹிந்து பாரம்பரியம் இந்திய கலாச்சார வாழ்க்கையின் மற்ற கூறுகளையும் பாதிக்கின்றது. தீபக் போன்ற பாரம்பரியவாதிகள் கோவிட் தொற்றுநோயின் உச்சத்தில் அரசு போதுமான அளவிற்கு ஆயுர்வேதத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று கருதினர். ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், ஹோமியோபதி போன்ற இந்திய மற்றும் ஐரோப்பிய பாரம்பரியங்களைச் சார்ந்த உள்நாட்டு மற்றும் மாற்று மருத்துவப் பயிற்சியாளர்கள் இந்தியாவில் மிகப் பிரபலமாக இருந்து வருகின்றனர். தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் சந்தேகத்திற்குரிய ஆயுர்வேத மருந்தை கோவிட் நோய்க்கான சிகிச்சை என்று கூறி ஊக்குவித்தார்.

ஹிந்து தேசியவாதம் இப்போது மற்றவர் மீதான வெறுப்பை மட்டுமே முன்னிறுத்துவதாக இல்லை. பொன்னான கடந்த காலம் குறித்த ஏக்கத்துடன் அது இருக்கிறது. வரலாற்றில் முதலில் முஸ்லீம்கள் மற்றும் பின்னர் ஆங்கிலேயர்கள் என்று படையெடுப்பாளர்கள் ஏற்படுத்திய அழிவின் விளைவாகவே ஹிந்துக்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இருக்கின்றன என அது உறுதி அளிக்கிறது. நேருவின் கூட்டுத் தேசியவாதத்தை, அவருக்குப் பின்னர் வந்த அரசுகளை காலனித்துவத்தின் அடையாளம் என்று கூறிப் புறந்தள்ளி தேசத்தின் மீது ஆழ்ந்த ஆன்மீகத் தோரணையை மக்கள் பின்பற்ற வேண்டும் என அது கோருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆற்றிய உரையில் மக்கள் தங்கள் உணர்வுகளை தெய்வம் (ராமர்) துவங்கி  நாடு (ராஷ்டிரா) வரையிலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று மோடி வலியுறுத்தியிருந்தார்.  அப்போது அந்தக் கோவில் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் அஸ்திவாரத்தைப் பறைசாற்றிக் கொண்டது.

ஹிந்து தேசியவாதிகள்  இறையாட்சி கொண்ட அரசை விரும்பவில்லை. அறிஞர் பிரதாப் பானு மேத்தா சுட்டிக் காட்டுவதைப் போல அவர்கள் சீனாவைப் போல ஒற்றைக் கட்சி அரசு இருக்கும் ஒரு  நாட்டையே விரும்புகின்றனர்.  இலட்சிய ஹிந்து ராஷ்ட்ரத்தில் இந்தியா ஒரு ஹிந்து தேசம் என்ற சிந்தனை எந்தவித எதிர்ப்புமின்றி இருக்கப் போகிறது. அந்த வகையிலான கருத்தியல் இணக்கம் அங்கே முழுமையாக இருக்கும். மற்ற அரசியல் கட்சிகள் இருக்கலாம் என்றாலும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் நிர்ணயிக்கின்ற நிபந்தனைகளின் பேரிலேயே அவற்றால் உரையாடல்களை மேற்கொள்ள முடியும். தங்கள் எதிரிகளை முற்றிலுமாக அழித்து ஒழுங்கை நிலைநிறுத்தத் துடிக்கும் பாசிச அரசின் ஆதரவாளர்களைப் போலல்லாமல் ஹிந்து தேசியவாதிகள் இந்தியா நிரந்தர மோதல் நிலையிலேயே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அத்தகைய மோதல்கள் அல்லது உள் எதிரிகள் எதுவுமில்லையென்றால் அவர்களுடைய சித்தாந்தம் விரைவிலேயே சிதைந்து போகும்.

Anvesh Letter to Modi\Pictures\\Quillette\அன்வேஷ் சத்பதி
அன்வேஷ் சத்பதி

https://quillette.com/2024/04/30/swastikas-of-both-sorts-hindu-nationalism-india/    

நன்றி: குயில்லட் இணையதளம் 

தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *