வன்முறைக்கு எதிராக நிறுத்தப்பட வேண்டியது அன்பு ஒன்றுதான் என்பதை வலியுறுத்தும் நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.ரஷ்யாவின் எழுத்தாளுமை லியோ டால்ஸ்டாய் கடிதவடிவில் எழுதியது இந்நூல். “இந்து விற்கு ஒரு கடிதம்” என அது வெளியிடப்பட்டுள்ளது. 1908 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியிட்டு டால்ஸ்டாய் அவர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ள கடிதம் 7 சிறு பகுதிகளைக் கொண்டுள்ளது.ஒவ்வொரு பகுதி தொடங்கும்போதும் அன்பு என்பதன் ஆற்றல் குறித்தும் அது எவ்வாறு மறைக்கப்பட்டு அரசு, போர்ப்படை, போர், ராணுவம் என்ற வடிவங்களில் வன்முறையாக மாறிப்போயிருக்கிறது என்பது பற்றியும் கிருஷ்ணர் கூற்று இடம் பெற்றுள்ளது. இதுதவிர வேதங்கள் (உபநிடதம்) விவேகானந்தர், ஏசுகிறிஸ்து, இந்துக் குறள் என வேறு சில மேற்கோள்களும் ஆளப்பட்டுள்ளன.
பைபிள் மொழியாக்கம் டால்ஸ்டாய்க்கு கிடைப்பது எளிது. ஆனால் கிருஷ்ணர், வேதங்கள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பை எங்கிருந்து பெற்றீர்கள் என்று மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பி இருப்பது இயல்பானதுதான். ஆனால், இதற்கு டால்ஸ்டாய் விடை எழுதும் போது, “ கிருஷ்ணரைக் குறித்த அந்த நூலின் தலைப்பினை மாஸ்கோவில் இருக்கின்ற மக்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள்” என்கிறார். அடுத்தடுத்த கடிதங்களிலும் இதுபற்றிய விவரம் அறியக் கிடைக்கவில்லை.காந்திக்கு மறுபிறவி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் டால்ஸ்டாய்க்கு இல்லை. இந்துவுக்கு எழுதிய கடிதத்தில் இது சம்பந்தமான பகுதியை மாற்றிக் கொள்ள இயலுமா என்று காந்தி கோரிக்கை விடுக்கிறார். ஆனால் டால்ஸ்டாய் அதை நிராகரித்துவிட்டு, “நீங்கள் அதனை நீக்க எண்ணினால் நீக்கிக்கொள்ளுங்கள்” என்று அனுமதிவழங்குகிறார்.ஒரு காலத்தில் மதம் என்பது அன்பைபோதித்தது. அதுவும் பிற்காலத்தில் மாறி மதத்திற்குள்ளும் வன்முறை போதனை வந்துவிட்டதை பல சான்றுகளுடன் நிரூபிக்கிறார் டால்ஸ்டாய். ஆனால் அறிவியலை மூடநம்பிக்கை என்றும் வன்முறை பரவுவதற்கு அறிவியலும் ஒரு காரணம் என்றும் கூறுவது தான் வியப்பாக இருக்கிறது.மனித சமூகம் மாறா நிலைச் சமூகமாக மதம், அன்பு என்ற சொற்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று விவாதிக்கிறது இந்நூல்.
இதைக் கற்பனை செய்து பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அன்பால் அனைத்தையும் சாதித்துவிட இயலுமா? காந்தியின் அஹிம்சைதத்துவத்தை ஆயிரம் தான் போற்றினாலும் இந்தியவிடுதலையே கூட அதையும் தாண்டிய போராட்டங்களாலும் ரத்தம் சிந்தல்களாலும் தானே சாத்தியம் ஆனது. ரத்தம் சிந்தல் என்பது வன்முறையாகுமா? மற்றவர்கள் ரத்தம் சிந்தப் போராடி சோஷலிசத்தை சோவியத்தில் நிறுவியது வன்முறையா?இப்படிப் பலகேள்விகளோடு விவாதிக்க வேண்டிய நூல் இது. காந்தி – டால்ஸ்டாய் இடையேயான கடிதப் போக்குவரத்து சுவையானது. இந்துக்குறள் – என்று திருக்குறள் கருத்துக்களை டால்ஸ்டாய் மேற்கோள் காட்டியிருப்பது பெருமைப்படத்தக்கது.“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்”என்ற குறளின் முழுமையான கருத்துரை எடுத்தாளப்பட்டிருக்கிறது.வழிப்போக்கன் மொழியாக்கம் செய்துள்ளார்.நெருடல் இல்லாத நடை.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.50
(நன்றி: தீக்கதிர்)
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *