இந்திய அறிவியல் ஆராய்ச்சிகள் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் (Corporatisation) வருவதற்கான அறிகுறிகள்
திரு.சி.பி.ராஜேந்திரன் அவர்கள் 14-8-24 ஆங்கில இந்து நாளிதழலில் எழுதிய கட்டுரை
சி.பி.ராஜேந்திரன்
தமிழில்: மோசஸ் பிரபு
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதை பற்றி கோடிட்டுக் காண்பித்தார். அவரது வழக்கமான பேசும் முறையை பின்பற்றி அங்கு கூடியிருந்த இளம் ஆராய்ச்சியாளர்களிடம் அவர் கூறியது: “ புதுமை செய்யுங்கள் (innovate), காப்புரிமை பெறுங்கள், படையுங்கள், வளம்பெறுங்கள்” ஒரு பொது முடிவைக் கூறுகிறார் என்று எடுத்துக்கொண்டால் அவர் தனது தலைமையில் அறிவு உற்பத்தி செய்வது பற்றிய ஒரு புதிய கொள்கை பிறப்பதைக் கோடிட்டு காட்டினார்..

பல வருடங்களாக இப்போது ஆட்சியில் இருக்கும் அரசு அறிவியல் ஆய்வகங்களும் மற்ற அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கும் தங்களுடைய அறிவுத்திறனை வெளி உலக சந்தையில் விற்று வருவாயை உருவாக்க வேண்டும் அறிவுறுத்திக் கொண்டுள்ளார்கள். அந்த வருவாயில் உருவாகும் உபரிநிதியை முதலீடு செய்து நமது நாட்டிற்கு தேவையான நமது பணிகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான தொழில்நுட்ப வளர்ச்சியை வளர்க்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான இயக்குநர்கள் ஒன்றிணைந்து தயாரிக்கப்பட்ட “டெஹராடூன் பிரகடனத்தில்” மேற்கூறிய கொள்கை நிலைபாட்டை காணலாம். தனியார் சுயநிதி காப்புரிமையை சந்தையில் விற்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான நிதியை பெறுவது என்று அங்கு முடிவெடுக்கப்பட்டது. அதாவது அறிவியல் ஆராய்ச்சிகளை வியாபரப்படுத்துவதற்கான அழைப்பு என்றும் இதை கருதலாம். இது அரசு தனக்கு சொந்தமான எந்தவொரு நிறுவனத்தையும் சந்தைக்கான சரக்காக பொருளாக மாற்றும் செயல்முறையாகும். ஆராய்ச்சி நிறுவனங்கள் பொது நிதியை சார்ந்திருப்பதை விட தங்களுக்கு தாங்களே நிதியை உருவாக்கும் வணிக அடிப்படையை பின்பற்றுவதுதான் சரியென இந்த அரசு கருதுகிறது. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பிரிவு 8 இல் பதிவு செய்யப்படும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க ஊக்கப்படுத்தப்படுகின்றன. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் முதலீடு செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
ANRFம் ஆராய்ச்சியும்
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (Anusandhan National Research Foundation-ANRF) என்பதின் அமைப்பாக்கத்திலேயே இந்த அணுகு முறையை காணலாம். 2023இல் ஆரம்பிக்கப் பட்ட இந்த புதிய ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் அறிவியல் ஆய்வுகளுக்கு நிதியினை வழங்குவதற்கும் ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் கல்வித்துறைக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தொடர்பை பலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நிதி அமைச்சர் ஜூலை 2024 அன்று வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பின் போது இதை எதிரொலித்தார்: “ அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கும் (basic research) மூலமுன்மாதிரி வளர்ச்சிக்கும் ( prototype development ) ANRFஐ செயல் பட வைப்போம்”. “மூலமுன்மாதிரி வளர்ச்சி” என்பது ஒரு பொருளை எந்த அளவிற்கு சந்தைப்படுத்த முடியும் என்று கணிப்பது என்பது புத்தாக்கம் சங்கத்தின் முக்கியமான பகுதியாகும். இனி சந்தைக்கு உதவும் ஆராய்ச்சிகளுக்கு நிதி அளிப்பதும் சந்தைக்குப் பயன்படும் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்வது என்பதை மீண்டும் சுட்டிக் காட்டுகிறது.
நமக்கு தெளிவுபடுத்தும் மற்றுமொரு விஷயம் உண்டு. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு 50 ஆயிரம் கோடியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 72% தனியார் துறை மூலமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது நிதியுதவி அளிக்கப்டும் விதத்தை பரிசீலித்தால் அரசு ஆராய்ச்சிகளுக்கு படிப்படியாக நிதியளிப்பதை குறைத்துக்கொண்டு அதிக அளவில் தனியார் துறையில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ச்சியிலும் வளர்ச்சியிலும் அரசின் நிதியுதவியை விட மிக அதிக அளவில் தனியார்த்துறை முதலீடு செய்திருக்கும் அமெரிக்காவில் கூட அது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மருந்து உற்பத்தி துறைகளிளேயே குவிந்துள்ளன. ஆராய்ச்சிகளின் மூலம் உருவாக்கப்படும் அறிவு என்பது சந்தையில் விற்கப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது பிரபிர் புர்கயஸ்தா தனது அறிவு அனைவருக்கும் பொதுவானது என்ற புத்தகத்தில் அறிவுத்திறன் சந்தைப்படுத்தப்படும் முறை இரண்டு மூலக்காரணங்களிலிருந்து உருவானது என்கிறார். மறுமலர்ச்சி காலத்திலிருந்து அறிவியலை வேறுபடுத்துவது எதுவென்றால் அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னெப்போதையும் விட தற்போது மிக நெருக்கமாக இருக்கின்றன. இப்போது அறிவியலில் ஏற்படும் முன்னேற்றங்கள் சந்தையில் விற்கப்படும் பொருளாக சுலபமாக மாறிவிடுகிறது. இந்த மாற்றம் அறிவுசார் சொத்துரிமைக்கு வழிவகுத்தது. ஆராய்ச்சிகள் பொது நிதியில் உருவாக்கப்பட்டாலும் காப்புரிமை மூலம் அது தனியார் நிறுவனங்களுக்கு விற்க பலகலைக்கழகங்கள் அனுமதிக்கிறது. உலகம் முழுவதும் நவதாரளவாத பொருளாதார கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதால் அறிவியலுக்கு நிதியளிப்பதில் தனியார் துறையின் தலையீட்டை அதிகப்படுத்தியுள்ளது.
கூறப்பட்ட நோக்கங்களையும் தாண்டி வரும் சமிக்ஞைகள்
இயற்கைசார் அறிவியலுக்கு அதிக நிதியளிப்பதுதான் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் முக்கிய நோக்கம் என சொல்லப்பட்டாலும் உண்மையில் அது பல்கலைக்கழக ஆராய்ச்சி அமைப்பை, எல்லென் மீய்க்ஸின்ஸ் உட் (Ellen Meiksins Wood) கூறுகிறபடி ” முதலாளித்துவ சந்தையின் ஆணைக்கு” அடிபணிந்து நடக்கும் அமைப்பாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது என்று கருத போதிய சான்றுகள் உள்ளன.. ஆர்வத்தின் காரணமாக அறிந்து கொள்ளுதல் என்ற உந்துதல் (curiosity-driven) மூலம் வளரும் இயற்கைசார் அறிவியல் (natural science) என்பது பரிசோதித்தலின் மூலமும் பட்டறிவு ரீதியாக (empirical) பெறும் தரவுகள் மூலமும் இயற்கைசார் நிகழ்வுகளை புரிந்து கொள்வதும் கணிப்பதுமாகும். ஆர்வத்தின் காரணமாக அறிந்து கொள்ளுதல் என்ற உந்துதல் (curiosity-driven) மூலம் வளரும் இயற்கைசார் அறிவியலுக்கு நிதி அளிக்க தனியார் துறை முன்வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், உடனடி லாபம் மற்றும் பயன்பாடுகள் இருந்தால் அன்றி தனியார் துறை முதலீடு செய்யாது. அதேசமயம் சான்றுகளை அடிப்படையாக் கொண்ட அறிவியலின் (evidence-based ) ஒரு பகுதியாக இல்லாத “இந்திய அறிவு அமைப்பு (Indian Knowledge Systems)”களுக்கு அரசின் நிதியுதவிக்கு இதே போன்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை.
விஞ்ஞான கருவிகள் மூலம் சான்றுகள் மற்றும் பரிசோதனைகளை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்துகொள்வதன் மூலமாகவும், இயற்கைசார் நிகழ்வுகளை அறிந்துகொள்வதன் மூலமாகவும் அறிவியல்துறை வளர்ச்சியடைகிறது. பொது நிதியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி குறித்த முன் மொழிவுகளுக்கு, முன்மொழிபவர்களின் அறிவுத்திறன் பரிசோதனைத்திறன் , உற்றுநோக்கல், பகுப்பாய்வுத்திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் எல்லா ஆய்வு முடிவுகளும் அதன் பயன்பாடுகளும் வெளிப்படையாக இருக்காது. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி என்றால் என்னவென்று எற்றுக்கொள்ளப்பட்ட வரையறை : “இயற்கையின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் பெறும் அறிவிற்கு அதன் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த அறிவைப் பெற செய்யப் படும் தேடல்”


அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் நாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம் பெற்றிருந்தாலும், இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான பொது நிதியின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% முதல் 0.7% வரை மட்டுமே உள்ளது. தென் கொரியா போன்ற ஒரு நாடு, இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பீடும் போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% முதல் 3% வரை அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு செலவிடுகிறது. தனியார்த் துறை நிதியளிக்க ஊக்குவிக்கப்படும் அதே வேளையில், அரசாங்கம் அடிப்படை அறிவியல் மற்றும் இலாப நோக்கமற்ற ஆராய்ச்சிக்காக அதன் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அது நடக்கவில்லை என்றால், ஆர்வத்தின் காரணமாக அறிந்து கொள்ளுதல் என்ற உந்துதல் (curiosity-driven) மூலம் நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகள் நமது பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியைக் காணும். அதனால், குறிப்பாக தனியார் நலன்களால் ஆதிக்கம் செலுத்தும் போது, அறிவியலின் மீதான பொது மக்களின் நம்பிக்கை இழந்து போகும். சுதந்திரமாக கேள்விகேட்கும் சூழலை வளர்ப்பதும், நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக சுயாட்சியைப் பராமரிப்பதும் மிக முக்கியமானது. இதை ANRF சட்டத்திலேயே வலியுறுத்தி குறிப்பிட்டிருக்க வேண்டும். நீரஜ் கோபால் ஜெயல் என்ற அறிவியல் அறிஞர் இந்திய மன்றத்தில் (Indian Forum) எழுதியது போல், அதிகாரத்துவத்தின் பலத்த கரம் எப்போதுமே அரசுப் பல்கலைக்கழகங்கள் மீது படர்ந்து, அவற்றின் சுதந்திரமான செயல்பாட்டை எப்போதும் கட்டுப்படுத்தியிருந்தாலும் சமீப காலங்களில் “அரசின் தலையீடு ஒரு பாகுபாடான வழியில் வெளிப்படையாக அரசியல்மையமாக்கப் படுகிறது., மேலும் கல்விஉலக சுதந்திரத்திற்கு எந்த மதிப்பையும் கொடுக்காத ஒரு புறச்சூழலில் அரசின் தலையீடு வெளிப்படையாக கருத்தியல் ரீதியாகவும் உள்ளது”
இறுதியில் எல்லாம் மாபெரும் எதிர்காலப் பார்வையில் முடிய வேண்டும். ஆனால் அது அடக்குமுறை சமூகத்தில் பரிணமிக்காது. மேலும் பெரும் எதிர்ப்பாக உருவாகவில்லை.
பெங்களூரு தெசிய மேம்பாட்டுக் கல்லூரி துணை பேராசிரியர் திரு.சி.பி.ராஜேந்திரன் அவர்கள்
14-8-24 ஆங்கில இந்து நாளிதழலில் எழுதிய கட்டுரை
தமிழில் : மோசஸ் பிரபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

