திரைப்பட விமர்சனம்: மீசைய முறுக்கு 2 - அ.சீனிவாசன் | Hiphop Tamizha Adhi's Meesaya Murukku 2 Tamil Movie Review | www.bookday.in

திரை விமர்சனம்: மீசைய முறுக்கு 2 (Meesaya Murukku 2) – அ.சீனிவாசன்

மீசைய முறுக்கு 2 (Meesaya Murukku 2) திரைப்பட விமர்சனம்

இதற்கு முன்
ஹிப் ஹாப் தமிழாவின் எந்தப் படத்தையும்
சிறுதிரையில் கூட பார்த்ததில்லை.
​அவரது பாடல்கள், கச்சேரிகள் எல்லாம் தெரியும்.
ஆனால், திரைப்படத்தின் வழியாக
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை
ஒருமுறைகூட அனுபவித்ததில்லை.

​எந்த எதிர்பார்ப்பும் இன்றி,
மகளின் ஆர்வத்திற்காக மட்டும்
குடும்பத்தோடு திரையரங்கிற்குச் சென்றேன்.

​“போகலாமா?” என்றாள்.

“சரி, போய் வருவோம்” என்றேன்.
​அவ்வளவுதான்.

​ஆனால் படம் முடிந்தபோது
ஒரு தலைமுறையோடு மட்டும் அல்ல—
Gen Z உள்ளிட்ட ஆல்பா,பீட்டா,காமா….உள்ளிட்ட பல தலைமுறைகளோடும்
இயல்பாக ‘ஜெல்’ ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

​திரையில் ஓடிய உணர்வுகள்,
இசை, போராட்டம், சிரிப்பு,
சிறிய வலிகள்—
எல்லாமே எங்களை ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைத்தன.

​குடும்பமாக அமர்ந்திருந்த நாங்கள்
ஒரே நேரத்தில் சிரித்தோம்;
ஒரே நேரத்தில் அமைதியானோம்.
​அது ஓர் அரிய அனுபவம்.

​கூடவே,
Anti-aging சிகிச்சை முடித்து வந்தாற்போல்—
மனதளவில் சில வயது குறைந்திருந்தேன்!

​படம் முடியும் வரை
நான் “அப்பா”வாக மட்டும் இல்லை.
கொஞ்சம் இளைஞனாகவும்,
கொஞ்சம் தீவிர ரசிகனாகவும் மாறியிருந்தேன்.
​உண்மையில்,
ஹிப் ஹாப் தமிழா உள்ளிட்ட
இந்தத் தலைமுறையினர்
தாராளமாக மீசையை முறுக்கிக் கொள்ளலாம்.

​அவர்களோடு சேர்ந்து
நாமும் கொஞ்சம் இளமையாகிக் கொள்ளலாம்.
​அவர்கள் நம்மை அந்நியப்படுத்தித் தள்ளிவிடவில்லை;
அன்போடு உள்ளே இழுத்தார்கள்.

​புதிய கதை என்று ஒன்றுமில்லை.
​மூன்று தலைமுறைகளின்
இசைப் போராட்டம்,
கனவுகள், தடைகள்—
இவற்றையெல்லாம் ஏற்கெனவே கேட்டிருக்கிறோம்.
​ஆனால்,
சொல்லப்பட்ட விதத்தில் ஒரு புதுமை இருந்தது.

​கதை சொல்லும் முறை,
காட்சி அமைப்பு,
உரையாடல்களின் இயல்பு—
எல்லாமே ஒருவித தூய நேர்மையோடு மிளிர்ந்தன.

​பெரிய ட்விஸ்ட் இல்லை.
பிரசங்க நெடியும் இல்லை.
​இருந்தாலும்
நேரடியாக மனதைத் தொட்டது.

​நல்லது, கெட்டது,
சிறு குறும்புகள், மெல்லிய விரசம்—
எல்லாமே சாரல் மழைபோல் கலந்திருந்தன.
​எதுவுமே எல்லை மீறிச் செல்லவில்லை.

​அதனால் படம்
“பாடம் எடுக்கும்” படமாக மாறாமல்,
உள்ளுக்குள் அனுபவிக்க வைக்கும் படமாகவே நின்றது.

​சோகத்தைக்கூட
சுகமாகக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

​வலியைக் காட்டினாலும்,
அதைச் சுமந்து வெல்லும் விதத்தில்
ஒருவிதமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
​அதுதான் முக்கியம்.

​நடிகர்கள் கதாபாத்திரங்களுக்குப் பொருந்தினார்களா
என்பதைத் தாண்டி,
படத்தில் இடம்பெற்ற அத்தனை பேரும்
இயல்பான உடல்மொழியோடும்
உண்மையான உணர்வோடும்
படம் முழுவதும் உயிர்ப்போடு இயங்கினார்கள்.

​யாரும் “நடித்துக் காட்டவில்லை”;
அந்த உலகிற்குள் வாழ்ந்தார்கள்.
​அதுவே படத்திற்கு அசல் உயிரைக் கொடுத்தது.
​எல்லாவற்றுக்கும் மேலாக,
டீன் ஏஜைத் தொடும் என் மகளுக்கும்
எனக்குமான தலைமுறை இடைவெளி
அங்கு மெல்லக் கரைந்துபோனது.

​படம் முடிந்ததும்
நாங்கள் இயல்பாகப் பேசினோம்.

​அவளுக்குப் பிடித்த காட்சிகளை அவள் அடுக்கினாள்;
என்னை அசைத்துப் பார்த்த தருணங்களை நான் பகிர்ந்தேன்.
​இருவரும்
ஒரே படத்தைப் பார்த்து
இரண்டு விதமாக அனுபவித்திருந்தாலும்,
முடிவில் ஒரே புள்ளியில் சந்தித்தோம்.
​அதுதான்—
இந்தப் படத்தின்
எனக்கான மிகப்பெரிய ‘மெகா ஹிட்’!

​ஏனென்று தெரியவில்லை.
​சில முகங்கள் சட்டென்று பிடிக்கும்.
சில பாடல்கள் நெஞ்சில் தங்கும்.
சில திரைப்படங்கள் மட்டும்
காரணங்களின் எல்லைகளைக் கடந்து மனதில் நிலைத்துவிடும்.
​அப்படித்தான்
இந்தப் படமும்.

​பெரும்பாலோருக்கும்
ஏதோ ஒரு புள்ளியில்
தங்களைத் தொட்டுவிடும்
என்றே தோன்றுகிறது.

​குறிப்பாக, ஒரு பாடல் வரி மட்டும்
என்னைத் திரும்பத் திரும்ப யோசிக்க வைத்தது:

​“RCB கூட ஜெயித்துவிட்டது…
எனக்கு ஒரு காலம் வராதா?”

​அது வெறும் சினிமா வரி அல்ல.
​ஒரு தலைமுறையின் தாகம்.
ஒரு கலைஞனின் ஏக்கம்.
ஒரு சாதாரண மனிதனின் ஆழ்மனக் கேள்வி.

​என் மகளுக்கும் அந்த வரி அத்தனை நெருக்கமாகியிருந்தது.

​நான் அவளது ரசனையைக் கவனித்தபோது
வியப்பும் நெகிழ்ச்சியும் ஒன்றாகச் சூழ்ந்தது.

​பெரியவருக்கு அது ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு;
இளைய தலைமுறைக்கோ அது ஒரு லட்சியக் கனவு.

​ஆனால்,
இருவரும் ஒரே வரியைப் பிடித்துக்கொண்டு
ஒரே அலைவரிசையில் இணைந்தோம்.
​அதுவே
இந்தப் படைப்பின் ஆகச்சிறந்த வெற்றி.

​சில படங்கள்
புதிய கதைகளை உற்பத்தி செய்வதில்லை.
பழைய உணர்வுகளுக்கு
புதிய தலைமுறையின் குரலைத் தருகின்றன.

​சில படங்கள்
நம்மை யோசிக்க வைக்கின்றன.
சில படங்கள்
நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
​சில குறிப்பிட்ட படங்கள் மட்டும்—
நம்மைச் சற்று இளமையாக்கிவிட்டு
புது மனிதனாகத் திருப்பி அனுப்புகின்றன.

​இந்தப் படம்
ஒருமுறை பார்த்துவிட்டு
மறந்துபோகும் சினிமா அல்ல.

​ஒரு மாலைப் பொழுது,
ஒரு குடும்பம்,
ஒரு மகள்,
ஒரு தந்தை—
ஒரே திரையைப் பார்த்து
கொஞ்சம் கொஞ்சமாக
ஒரே தலைமுறையாக உருகி இணைந்த
ஒரு வசந்த கால நினைவு—
​எனக்கு.

📚 எழுதியவர் : 

✍🏻 – அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *