இன்று ஆகஸ்ட் 6 – “ஹிரோஷிமா தினம்”. வரலாற்றில் நிகழ்த்த பெரும் சோகமான நாளாக இது அறியப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு மனிதநேயத்திற்கு எதிரான ஹிரோஷிமா தினத்தின் இரட்டை சகோதரர் வருவார். அது வேறு ஒன்றும் இல்லை “நாகசாகி தினம்”. ஹிரோஷிமாவில் நடந்தது வரலாற்றில் முதல் அணுகுண்டு வீச்சு ஆகும் . 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 தேதி , காலை சுமார் 8.15க்கு இந்த சோக சம்பவம் அரங்கேறியது. அமெரிக்கா இந்த அணுகுண்டுக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா? “லிட்டில் பாய்” (Little Boy). நாகசாகியில் விழுந்த அணுகுண்டுக்கு பாட் மேன் (Fat Man) என்றும் பெயரிட்டார்கள். யுத்தத்தின் மீதான மோகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இந்த பெயர்களை வைத்த அதிகாரியின் மனதில் எழுந்த எண்ணம் பலித்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த எண்ணத்தில் மரணத்தின் நிறம் உள்ளது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கா ஒரு முடிவுக்கு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து 1945 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி அன்று கமாண்டராக இருந்த ஜெனரல் கால் ஸ்பார்ட்சி அவர்கள் அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத்தில் இருக்கிற விமானப் படைக்கு ஜப்பானில் உள்ள இரண்டு நகரங்களில் அணுகுண்டு வீச வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். அவர்களது முதல் இலக்கு கடலுக்கு மிக அருகிலுள்ள நகரமான ஹிரோஷிமா தான் முதல் இரையாக உள்ளது. ஏனெனில் இங்கு தான் ஜப்பான் இராணுவத்தின் முதன்மை தலைமை கட்டிடம் அமைந்துள்ளது. மேலும் அதில் சுமார் 40ஆயிரம் வீரர்களும் இருந்தனர்.
யுரேனியம் 235 ஐசோடோப்பை லெட் கொண்டு பூசிய இந்த அணுகுண்டிற்கு 12500 டன் டிஎன்டியின் அழிக்கும் திறன் இருந்தது. ஹிரோஷிமாவையை கிட்டத்தட்ட முழுவதுமாக சுக்குநூறாக்கிய இந்த அணுகுண்டு வீச்சு 1,40,000க்கும் மேற்பட்ட மனிதர்களில் உயிர்களைப் பறித்தது. இந்த அணுவின் பாதிப்பு பிற்காலத்தில் 12 ஆண்டுகள் வரை நீடித்தது. இதனைத் தொடர்ந்து 1,50,000 மனிதர்கள் இதன் விளைவாக பிற்காலத்தில் உயிர் இழக்கவும் செய்திருக்கிறது. இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 வயதான சடாகோ சசாகிக், மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்தாலும், பின்னர் அணுவின் கதிர்வீச்சால் அவளுக்கு இரத்த புற்றுநோய் வந்தது. ஜப்பான் மக்களின் இறை நம்பிக்கையின் படி தலைமுறை தலைமுறையாக மரணத்திலிருந்து காத்துக்கொள்ளக் காகித கொக்கு ஆயிரக்கணக்கில் செய்து பிராத்திப்பது வழக்கம். அதையே சடாகோ சசாகிக் செய்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள். மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும்போது சுமார் 644 காகித கொக்குகளை செய்த போதே, மரணம் அவளை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது இன்று வரைக்கும் உலகத்தின் மக்களை கண் கலங்க வைத்துக்கொண்டே இருக்கிறது. சடாகோ காகித கொக்குகள் என்பது இன்றைய உலகின் சமாதான சின்னமாக உருவெடுத்துள்ளது. போர்களும், கலகங்களும் என்றைக்கும் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற சம்பவங்களால் சுமார் 1 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள் என்றே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடல், மனரீதியான பிரச்சனைகள் மற்றும் குறைந்த அளவிலான கவனிப்பு போன்ற காரணங்கள்தான் குழந்தைகள் இறக்கின்றன.
முதலாம் உலக போர் என்பது 1914 ஆண்டு முதல் 1918 ஆண்டு வரை நீடித்தது. இதற்கிடையில் வெர்சாய் சமாதான ஒப்பந்தம் (Treaty of Versailles) வந்தது. உலக போரில் வெற்றி பெற்ற ஏகாதிபத்திய வல்லரசுகள் உலக நாடுகளைக் கூறு போட்டு பங்கிட்டார்கள். இதன் பிறகு இரண்டாம் உலக போர் துடங்கியது. இரண்டாம் உலக போர் ஆனது 1939 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1945 ஆம் ஆண்டு வரை நடந்தது. நேச நாடுகள் மற்றும் அச்சு சக்திகள் (ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளும்) என இரண்டு எதிரெதிர் முனையிலிருந்து போரிட்டார்கள். ஆனால் இந்த போர் முடிவுக்கு வரும் பொழுது நாகசாகியில் 72 மில்லியன் மனித உயிர்களைப் பலி கொண்டது. இந்த போரில் 70க்கு மேல் நாடுகள் போரிட்டார்கள் . இந்த போரில் ஜெர்மனியின் நாஜிக்கள் மேற்கொண்ட கொடூரத்தைத் தோள் உரித்துக் காட்டியது ஒரு 13 வயதான சிறுமி எழுதிய நாள் குறிப்பேடுகள் தான். உலக முழுவதும் உள்ள மனிதர்களின் மனசாட்சியை உலுக்கிய ஆன் பிராங்க் எழுதிய குறிப்புகள் அது. 13 வயதே ஆன ஒரு சிறுமி அவளின் உணர்ச்சிகள், சிந்தனைகள், கூர்மையான கண்காணிப்பு, நம்பிக்கைகள், குடும்பம் மற்றும் சமூகச்சூழல், வாழ்க்கைமுறை என்று அனைத்தையும் தன் நெருங்கிய நண்பன் கிட்டி என்ற பெயரிடப்பட்ட அந்த குறிப்பேட்டில் எழுதி இருந்தாள், இது உலகத்தோருக்கு எரிகின்ற போர் வரலாறை அம்பலப்படுத்தியது.
பாக்தாத் தான் யூஃப்ரட்டீஸ், டைகிரீஸ் நதிக்கரை நாகரீகங்களின் பிறப்பிடமாகும். இந்த போரில் பாதிக்கப்பட்ட நகரங்களில் பாக்தாத் நகரமும் ஒன்று. 9 ஆம் நூற்றாண்டில் உலகின் முன்னணி கல்விக்கூடங்களில் ஒன்றான விஸ்டம் ஹவுஸ் ஈராக்கின் முன்னணி அறிஞர்களால் நிரம்பி இருந்தது. அறிவியல், கணிதம், தத்துவம் போன்ற அனைத்துத் தரப்பட்ட துறைகளிலும் வல்லுநர்கள் இங்கு இருந்தார்கள். இஸ்லாமிய மத கல்விகற்றலுக்கு உதவும் மிக முக்கியமான மையங்களில் ஒன்றான பாக்தாத் உலகத்திலேயே மிக பெரிய நகரமாகவும் விளங்கியது. உலக முழுக்க உள்ள எல்லாம் அறிய நூல்களையும் கொண்ட நூலகமும் அங்கு இருந்தது. இதுதான் இந்த நகரத்தின் அறிவியல் மற்றும் கல்வி வளர்ச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. அங்குத் தொடர்ந்து நடந்த நான்கு போர்களால் பல நூற்றாண்டுகளாக அறிவை போதித்த அந்த நூலகம் சூறையாடப்பட்டதோடு, நெருப்புக்கும் இரையானது.
நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவந்த ஆட்சி மாற்றங்களும், போர் தாக்குதல்களும் பக்தாத்தினை ஒரு யுத்த பூமியாக மாற்றியது . இஸ்லாமிய காலகட்டம் என்பது 13ஆம் நூற்றன்றின் முடிவில் பக்தாத்தில் இருந்து அழிக்கப்பட்டது. மங்கோலிய, துருக்கிய, ஈரானிய மற்றும் ஒட்டோமான் ஆட்சிக் கவிழ்ப்புகள் பாக்தாத்தின் கலாச்சார மற்றும் அரசியல் வரைபடத்தை தலைகீழாக மாற்றின. உலகெங்கும் பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், அதைத் தொடர்ந்து வந்த அதிகார ஆசை பாக்தாத்தை வேட்டையாடியது ஜீரணிக்க முடியாதவை. 9 ஆம் நூற்றாண்டில் ஒரு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்த இந்த நகரத்தின் மக்கள் தொகை 1907-ல் என்சைக்ளோபீடியா அறிக்கையின்படி 1,85,000 மட்டுமே மிஞ்சு இருக்கிறார்கள். நீண்டகால ஈரான்-ஈராக் போர், பின்னர் குவைத் மீதான ஈராக்கின் படையெடுப்பு, இறுதியாக அமெரிக்கா ஈராக்கை அழித்தது. அரபு கதையில் வரும் வசீகரமான பாக்தாத் என்ற நகரத்திற்காக ஒரு துளி கண்ணீர் விடுவோம். பருவம் எய்தாத சிறு குழந்தைகளைக் கூட போருக்காகப் பயன்படுத்திய கொடூர ஈரான்-ஈராக் யுத்தம் செய்தது கொடூரமாகும். இந்த துயர வரலாறு இன்றும் காஸாவில் தொடர்கிறது.
காலங்காலமாக ரத்தம் வடிந்து கொண்டிருக்கின்ற காயம் போல வலி நிறைந்த முகம் காஸாவுக்கு இருக்கிறது. அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனது சொந்த வீட்டில் அமர்ந்திருந்த ஃபரா பேக்கர் என்ற இளம் பெண், தொடர்ச்சியான டிவிட்டரில் பதிவிட்ட செய்தியின் மூலம் போர் நடக்கும் பகுதியின் கொடூரங்களை முழு உலகிற்கும் வெளிச்சமிட்டுக் காட்டினார். நாஜி இராணுவத்தின் கோர முகத்தை டைரி குறிப்புகள் மூலம் திருப்பி அடித்ததை போலவே, டிவிட்டர் வழியாக காஸாவில் போர் படங்களை உலகம் முழுக்க அறியச் செய்தார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவின் ஆசைக்கு ஏற்ப பாலஸ்தீனத்தின் பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்பட்டு, யூத ஆக்கிரமிப்பு பகுதி உருவாக்கப்பட்டது. இது 1956-57 சூயஸ் கால்வாய் நெருக்கடியின் போது முறைப்படுத்தப்பட்டது. பாலஸ்தீனர்களின் சின்ன சின்ன எதிர்ப்பு போராட்டங்களும், சியோனிஸ்டுகளின் மிருகத்தனமான வெற்றி பெறுவதற்கான தந்திரமும் இணைந்து காஸாவை உலகின் கண்ணீர்த்துளியாக மாற்றின. சுமார் 3,00,000 மக்கள் வசிக்கும் காசாவின் வடக்கு பிராந்தியத்தில், வெளி உலகத்துடனான தொடர்பு கிட்டத்தட்டத் துண்டிக்கப்பட்டதால் மிக மோசமான அச்ச நிலைக்கு அவர்களது வாழ்வு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெற்கில், ரஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மிக நெருக்கமான குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இது மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என்று செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
வன்முறைக்குப் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் அனாதை நிலையில் ஓலமிடும் குழந்தைகள், தூக்கத்தைப் பறிக்கும் துப்பாக்கிச் சத்தம் மற்றும் குண்டுவெடிப்புகளால் பயத்தில் நடுங்கும் குழந்தைகள், பெற்றோரை இழந்தவர்கள், பசியையும் தண்ணீர் தாகத்தையும் தாங்க முடியாமல் இறந்தவர்கள், இது போன்ற குழந்தைகள் அனுபவிக்கின்ற கோர முகங்கள் காஸாவை ஒரு மயானமாக மாற்றி இருக்கிறது. ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஊனமுற்றுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர், வன்முறையால் ஏற்பட்ட தீக்காயங்கள், திறந்த காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் உட்படக் கடுமையான காயங்களுடன் குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு வருவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடைக்கு 6 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி 2, 2024 அன்று, பாலஸ்தீன நாட்டிற்கான யுனிசெப்பின் தகவல் தொடர்புத் தலைவர் ஜொனாதன் கிரிக்ஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். காசா பகுதியில் குழந்தைகள் வாழும் நிலைமைகளை அது விவரித்தது.
குழந்தைகள் மீது போர் ஏற்படுத்திய மன மற்றும் உடல் ரீதியான தாக்கங்கள் சிறியவை அல்ல. அங்குள்ள சமூகமோ அல்லது நிர்வாக அமைப்போ அவர்களுக்கு மறுசீரமைப்பு, உளவியல் ஆதரவு மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்க முடியுமா?
இன்னும் எத்தனை எத்தனை டைரி குறிப்புகளையும், சடகோ கொக்குகளையும் பார்த்தும், கேட்டும் இருந்தால் இந்தப் போர்கள் முடிவுக்கு வரும். போரின் முடிவில் வெற்றியாளர்களும் இல்லை, தோல்வியாளர்களும் இருக்க மாட்டார்கள். எந்தப் போரும் முழு மனித குலத்தை மொத்தமாகக் கொல்ல மட்டுமே செய்யும்.
கட்டுரையாளர் :
Dr.K.பீனா
தமிழாக்கம்: டயானா சுரேஷ்
நன்றி: தேசாபிமானி நாளிதழ்
நூல்கள் : பாலஸ்தீனம் (Palastheenam)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உலக சமாதானத்திற்கான தடுப்புச்சுவரானது மனித மனங்களிலிருந்து எழுப்பப்பட வேண்டுமேயல்லாமல் இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையே அல்ல என்பது யுனெஸ்கோ அமைதியை பிரகடனப்படுத்தும் ஒரு வாசகம் ஆகும். மேற்கோள் என்று கூட கூறலாம். ஆனால், இன்றும் போர்ப்பிரகடனங்கள், வன்முறைகள், குழந்தைகள் என்றும் பாராமல் போரின் பெயரால் மனித இனத்தை அழித்து வரும் அவலம் இவையெல்லாம் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. மனித மனங்களைச் சீர்ப்படுத்தவே முடியாதா? இம்மாதிரியான கட்டுரைகள் உலகமெங்கும் அமைதிக்கான கல்வியாக பரப்புரை செய்யப்பட வேண்டும்.