History of Science and Technology of the Indian Subcontinen - இந்திய துணைக் கண்டத்தின்  அறிவியல் தொழில் நுட்ப வரலாறு

இந்திய துணைக் கண்டத்தின்  அறிவியல் தொழில் நுட்ப வரலாறு – பொ.இராஜமாணிக்கம்

                    அறிவியல் இயக்கக்  காலண்டர்- 2024 சொல்லும் வரலாறு 

அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு 2024ம் ஆண்டிற்கான ஒரு காலண்டரை வெளியிட்டுள்ளது. இந்தக் காலண்டர் என்பது கரக்பூர் ஐ ஐ டி  கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வரும் போலி இந்திய அறிவியல் காலண்டருக்கு மாற்றாக இதை  வெளியிட்டு உள்ளது.

ஐ ஐ டி முதன் முதலில் வெளியிட்ட (2021) அறிவியல் காலண்டரில் காஸ்யபா், ஜமத்க்னி, கௌதமா, பரத்வாஜா, விஸ்வாமித்திரர், வஷிஷ்டர் , அட்ரி  என ஏழு ரிஷிகளை சப்த ரிஷிகளை  விஞ்ஞானிகளாகவும் பி.சி.ராய், ஜே.சி. போஸ், சீனிச ராமானுஜன், எஸ்என் போஸ் , சமீமா சாட்டர்ஜி, ஜானகி அம்மாள்,  ஐராவதி கார்வே போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகளுக்கு ஆச்சாராயா பட்டத்துடன் முடிக்கின்றனர். கற்பனைப் பாத்திரங்களையும் நிஜ விஞ்ஞானிகளையும் ஒன்றாக்கி நியாயப்படுத்துகிறது. மற்றொன்று புராணங்கள் இதிகாசங்களில் புனையப் பட்ட கற்பனைகளை (புஷ்பக் விமானம், ) அறிவியல் தொழில் நுட்ப  சாதனைகளாகக் கூறி கேலிகுள்ளாக்கி  இருக்கிறது.

ஐஐடி யின் 2024 வது வருடக் காலண்டர் ”காலங்களில் இந்தியா” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது மதம்,அறிவியல், பண்பாடு ஆகியனவற்றிற்கு இந்தியாவே முதன் முதல் என்று சிலாகிக்கிறது. அதாவது மனிதன், சம்ஸ்கிருத மொழி, தத்துவம், கணிதம் ஆகியன இந்தியாவில் இருந்து தான் உலகெங்கும் பரவின என்கிறது. கணிதம் அரேபியா வழியாக ஐரோப்பியாவுக்குச் சென்றதும், புத்தரின் தத்துவங்கள் கிறித்துவத் தத்துவங்களாகவும், குடியாட்சி என்ற சுயாட்சி முறை இங்கிருந்து தான் சென்றது என வில் டுராண்ட் தம்பதியர் கூறியதைக் குறிப்பிட்டு  இந்தியாவே உலகின் தாய் என மார்தட்டுகிறது என ஆங்கில இந்து நாளிதழில் குறிப்பிட்டு எழுதியுள்ளது. ஆனால் இந்த  போலி காலண்டரை நாங்கள் தயாரிக்கவில்லை என அந்த நிறுவனம் பின் வாங்கியுள்ளது எனப் பின்னர் தெரிவிக்கிறது. இது இந்தக் காலண்டரின் போலித் தனத்திற்குக்  கிடைத்த பரிசாகக் கொள்ளலாம்.

மேலே காணப்படும் போலி அறிவியல் காலண்டருக்கு மாற்றாக அறிவியல் என்பது ஆதாரங்கள் கொண்டது. அது பன்னாட்டு சமூகப் பண்பாடுகளை உள்ளடக்கியது. சமூகத்தின் வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்தது, அது காலமும் இடமும் சார்ந்தது, ஆதாரங்கள் கொண்டது என்ற அடிப்படையில் இந்தியா என்ற குறுகிய நிலப்பரப்பாகப் பார்க்காமல் இந்திய துணைக் கண்டத்தில் வளர்ந்து,  முன்னேறி வரும் அறிவியல் தொழில் நுட்ப வரலாற்றைப் பேசுகிறது. இதைக் காலத்தின் வரைபடம்-2024  என்றும் தென்கிழக்கு ஆசியாவில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, கணிதம் ஆகியனவற்றைத் தேடிக் கண்டறிதல் எனக் குறிப்பிடுகிறது.

இக் காலண்டரின் முன்னுரையாக அறிவியலும் வரலாறும்- இன்றைய உலகத்தில் நவீன அறிவியல் வளர்ச்சியும் அதன் முறைகளும்  என்பது மனித குல வரலாற்றில் பரிணாமத்தில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. அறிவியல், தொழில்நுட்பம். பொறியியல், கலை, கணிதம் (STEAM-Science, Technology, Engineering, Arts and Maths) ஆகியன மனித குல முயற்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது என்கிறது.

இத் துறைகளின் பங்களிப்பு மூலம் பிரபஞ்சத்தின் நன்மைக்கும் நிலைப்புறு தன்மைக்கும் செயலாற்ற முடியும். ஆனால் அதே சம்யத்தில் இயற்கை வளங்கள் கபளீகரம் செய்யப்படுவதும் போர் மூலம் பேரழிவை நிகழ்த்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கிறது.

அறிவியலுக்கும் வரலாற்றிற்கும் இருக்கும் பிணைப்பு அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சி மூலம் மேலும் மேலும் பலமடைகிறது என்கிறது. 20ம் நூற்றாண்டின்  கதிர் வீச்சு மூலகங்களின் கண்டுபிடிப்பு என்பது  கார்பன் முறைக் கண்டுபிடிப்பு முதல் கதிர் வீச்சுக் பல கண்டுபிடிப்புகளை வளமாக்கி இருக்கிற்து. கதிவீச்சு மூலம் கண்டறியும் முறை என்பது இன்று அகமதாபாத் இயற்பியல் சோதனை ஆய்வகம் உட்பட  பலவேறு  ஆய்வு நிறுவனங்களிலும் இன்று செய்யப்படுகிறது என்பதை ஆதாரமாகக் காட்டுகிறது.

புதிய மரபணுத் தொகுப்பு மரபுப் பொருள் ஆய்வுகள் என்பது மனித குல வரலாற்றின் முந்தைய உலகம் தழுவிய மனிதனின் பயணத்தைக் கண்டறிவதற்கு ஏதுவாக உள்ளது. இதற்கான உயிரணு & மூலக்கூறுவியல் ஆய்வு மையம் ஹைதராபாத்தில் உள்ளது எனச் சுட்டிக் காட்டுகிறது.

கடந்த கால அறிவின் அடிப்படையிலும், எதிர்காலத்தின் சவால்கள் பற்றி அறிந்து கொண்டு,  எதிர்காலத்தை இந்த புது வருடத்திற்கும் எதிர்காலத்திற்குமாக தொடர்ந்து பரிணாமம் பெற்று வரும் மனித குலத்திற்கு  வழிகாட்டியாக இருக்கும் என உறுதி கூறுகிறது.

இந்த காலண்டர் அறிவியலின் அடித்தளத்தைப் பேசுகிறது. திட்டமிட்ட வழிமுறையுடன் ஆதாரங்களைச் சேகரித்து, பொய்யான, கட்டமைக்கப்பட்ட போலி ஆதாரங்களை நீக்கி விட்டு முழுக்க முழுக்க காரணங்களின் மீது வெளிச்சம் காட்டுகிறது. தெற்கு ஆசியாவின் அறிவியல் ரீதியான அணுகுமுறையில் உள்ளதால் நமது முறைக்கு உரிய மதிப்பும் இன்றும் அது பெருமை தரக்கூடியதாகவும் இருக்கிறது.இது உலகத்தைப் புரிந்து கொள்ளுவதற்கான ஒரு வழிகாட்டியாக இருப்பதால் தெளிவான முடிவெடுப்பதற்கும் புதியன கண்டுபிடிப்பதற்கும் உதவியாக உள்ளது.

”நீங்கள் கேட்டறிந்ததை மட்டும் நம்பாதீர்ர்கள்.. யாரோ பேசியதையோ, வதந்திகளையோ நம்பாதீர்கள்.. உங்கள் மதப் புத்தகங்களில் இருக்கிறதென்பதற்காக நம்பாதீர்கள்..ஆசிரியர்கள் கூறினார்கள் என்றோ அதிகாரிகள் கூறி விட்டார்கள் என்றோ நம்பாதீர்கள்…பல தலமுறைகளாகப் பின்பற்றி வருகிறோம் என்பதற்காக அதை நம்பாதீர்ர்கள்..ஆனால் உ்ற்று நோக்கல்,அதனை ஆய்வு செய்தல் அதற்குரிய  காரணத்தோடு ஒத்துப் போனால் அதோடு எல்லோருக்கும் பயன் அளிக்கும் போது மட்டுமே அதை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ வேண்டும்” என்ற நவீன அறிவியலின் வழிமுறைகளை அன்றே கெளதம புத்தர் கூறியது இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது புத்தரின் ஆழ்ந்த ஞானத்தை இந்த தலைமுறைக்கு இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

IMG_256

”சுதந்திரம் என்பது தேவையின் அடிப்படை.. அறிவியல் என்பது தேவையின் வெளிப்பாடு. இறுதியாக விளைவுகள் அனைத்திற்கும்  காரணங்கள் உண்டு. அறிவியல் என்பது அறிவின் தொகுப்பு. அறிவியல் என்பதே  அறிவியலின் வரலாறு தான்” என்ற கோசாம்பீயின் கருத்து அறிவியலையும் அதன் வளர்ச்சியையும் மிக  எளிமையாக தருகிறது.

இந்தக் காலண்டரில் ஜனவரி முதல் டிசம்பர் வரை அறிவியல் தொழில் நுட்ப வரலாறு காலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது எந்தெந்தப் பகுதியில் காணப்படுகிறது என்பதையும்  இந்திய துணைக் கண்டத்தின் வரை படத்தில் குறியிட்டுக் காட்டுகிறது, அது எவ்வாறு மனித குல வரலாற்றோடு இணைந்தே செல்கிறது என்பதையும் காணலாம்.

IMG_256
துவக்க காலக் கட்டமாக எழுதப்படாத வரலாற்றுக் காலமாக இருந்த போது பிம்பெட்கா குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள், கல் ஆய்தங்கள், ஆகியன ஆதரமாகக் கொடுத்து நாடோடி சமூகம் தங்கும் சமூகமாக கற்காலம் (10000 பொது ஆண்டுக்கு முன்*-பொ.ஆ.மு ) ஆரம்பித்து நதிக்கரை நாகரீகங்கள் (பொ.ஆ. மு 3500 -பொ.ஆ. மு2000), வெண்கல  &  இரும்புக் காலத்தில் இரும்பிலான விவசாயக் கருவிகள், பெளதான்யத்தின் செங்கோண முக்கோண சூத்திரம் ஆரம்பம், இந்தப் புவி ஐம் பூதங்களாக ஆனது என்ற தொல்காபியம் ஆகியன இக் காலக் கட்டத்தின் (பொ.ஆ.மு 2000-பொ.ஆ.மு.600) சிறப்பு எனக் கூறுகிறது.


அதன் பின்னர்  படிப்படியாக அறிஞரின் கண்டுபிடிப்பாகவும் அதற்குரிய ஆதாரங்களாக கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஏடுகள் என பதிவு செய்யப்பட்டு

எதிர்கால சமூகத்தினர் புரிந்து கொள்ளும் படியான படி நிலைக்கு முன்னேறியுள்ளது எனத் தெரிவிக்கிறது. இந்தக் கால வரலாறு  அன்றைய சமூகத்திற்கு எவ்வாறு பயன்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். புத்த ஜைன மதத் தத்துவங்களோடு சாமுகியா, நியாயா, வைசேஷிகா, சார்வாக  போன்ற தத்துவங்களும்; நெறிமுறைகள், தர்க்கம், பகுத்தறிவு வாதங்கள் ஆகியனவற்றை வளர்த்திருக்கின்ற அறிவு வளர்ச்சி தோன்றிய காலமாகவும் (பொ.ஆ.மு  600-பொ.ஆ.மு  300), கணிதம், வானவியல் ஆகியவற்றிற்கான நாலந்தா விக்ரமஷீலா பல்கலைக்கழகங்கள் தோற்றம், பை, சுழற்சி நாற்கரத்தின் சூத்திரங்கள் தோற்றம், துருப்பிடிக்காத இரும்புத் தூண் போன்ற மேம்பட்ட தொழில் நுட்பங்களின் காலமாக (பொ.ஆ.மு 300-பொ.ஆ.700) இது திகழ்கிறது என்கிறது.

அதன் தொடர்ச்சியாக  வானியல் நோக்கு & ஆய்வு மையங்கள், அது சார்ந்த கட்டுமானக் கலைகள் (பொ.ஆ. 700-பொ.ஆ.-1300) வரை மேலும் வளர்ச்சி பெற்று பல மொழிகளில் உருவாகி  விரிவாக்கம் பெற்றதும் பிற நாடுகளுக்கு முன்னோடியான அறிவியல் கருத்துகள் இங்கு உருவாயின காலமாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருத்ததில் அல்லாது மலையாளத்தில் சோமாஜியால் எழுதப்பட்ட கணிதவியல் நூல், ஆந்திரக் கடற்கரையில் காணபப்ட்ட  பெர்ஷியன் நீர் இறைக்கும் எந்திரம் இதில் ஆதரமாகக் குறிப்பிடப்படுகிறது

 ராஜா ஜெய் சிங்கின் ஜந்தர் மந்தர், ஷாஷகானின் தாஜ் மஹால் போன்ற கட்டிடக் கலைகள், சிவாஜியின் கோட்டைகள்,  மஸ்லின் போன்ற துணி வகைகள் என்பது தொழில் நுட்பத்தின் நேர்த்திக் காலமாக பிரசித்து பெற்றது ( பொ.ஆ. 1300- பொ.ஆ.1750) என்கிறது.


இதன் பின்னர் பிரிட்டிஷாரின் கிழ்க்கிந்திய கம்பெனி வருகை அதற்கு எதிரான போராட்டங்கள், தொழிற் புரட்சியின் விளைவுகளாக நம் நாட்டில் ஏற்பட்ட ரயில்  தொழிற்சாலைகள் உட்பட பல தொழிற்சாலைகள், இக்  காலக் கட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் என விடுதலைப் போராட்ட காலத்தின் முதல் பகுதியாக (பொ.ஆ.1750-பொ.ஆ.1900) குறிப்பிடுகிறது. இப் பகுதியில் ராக்கெட் தொழில் நுட்பத்தின் நாயகன் திப்பு சுல்தான் முதல் ரேடியோ அலைகள் கண்டுபிடித்த ஜே.சி.போஸ் வரை இப்பகுதியில் நினைவு கூறப்படுகின்றனர்.

தீவிரமான விடுதலைப் போராட்ட காலத்தில் இங்கு வாழ்ந்த தலை சிறந்த விஞ்ஞானிகள்,  அவர்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் அது எவ்வாறு தற்சார்பு பொருளாதாரத்திற்கு வித்திட்டது காலமாக (கிபி 1900-கிபி 1950) விவரிக்கிறது.இக் காலத்திய தலைசிறந்த விஞ்ஞானிகளாக பி.சி ராய், எஸ்.என்.போஸ், சாஹா, சிவி ராமன், கிருஷ்ணன் ஆகியோரும், தற்சார்பு வளர்ச்சிக்கு நாயகர்களாக நேரு, சுபாஷ் சந்திர போஸ், காந்தி ஆகியோர் பெருமைப்படுத்தப்படுகின்ரனர்.

இதை அடுத்து விடுதலைக்குப் பின் இந்தியாவில் ஏற்பட்ட அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஐந்தாண்டுத் திட்டம் உருவானது, விண்வெளி வளர்ச்சி, பாதுகாப்புத் துறை வளர்ச்சி, அணுமின் உற்பத்தி, மருந்து உற்பத்தி ஆகியன தற்சார்பு வளர்ச்சிக்கும் பெரும்பானமை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியின் காலமாக (பொ.ஆ.1947க்குப் பின்) இது திகழ்கிறது என கூறுகிறது. விக்ரம் சாராபாய், சதிஷ் தவான்,ஹோமி பாபா, சிப்லாவின் கே.ஏ.அமீத் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது என்கிறது. அதே போல் ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹஃபீப் ஆகியோரை  சமூக, வரலாற்று அறிவியல் ரீதியாக நிரூபித்ததை நினைவு கூறுகிறது.

இறுதியாக தற்கால நடப்புக் காலம்  என்பது கடந்த காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட பிரச்சினைகள், தீய விளைவுகளை விமர்சனப்பூர்வமாக விளக்கும், போராடும் மக்கள் இயக்கங்களின் தோற்றம் குறித்தும் அதற்குக் காரண கர்த்தாவாக இருந்த கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத்தின் மக்கள் விஞ்ஞானி எம்.பி.பரமேஸ்வரன் அவர்களின் நாடு தழுவிய மக்கள் இயக்கத்திற்கான வித்தை விதைத்தவர் எனக் குறிப்பிட்டு பெரும்பான்மை மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை உருவாக்க தொலைக் காட்சித் தொடர் மூலம் உருவாக்கிய பேரா.யஷ்பால் போன்றோரை நினைவுபடுத்திப் போற்றுகிறது.

IMG_256

இறுதியாக இந்த நூற்றாண்டின் சவாலாக புவி வெப்பமயமாதல்,கோவிட்-19 போன்ற பெருந்தொற்றுகள், ஜனநாயகம், கார்பொரேட் கையில் சிக்கியுள்ள கல்வி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கார்பன், அணுமின் ஆற்றல்,உலகப் பட்டினிக் குறியீட்டில் 125 நாடுகளில் 111 இடத்தில் இந்தியா ஆகிய  சவால்களுடன் நாம்  எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டியதிருக்கிறது என நிறைவு செய்கிறது.


மேலும் ஒவ்வொரு மாதத்திலும் முக்கியமான விஞ்ஞானிகளின் பிறந்த நாள், அறிவியல் தினங்கள், அமாவாசை, பெளர்ணமி ஆகிய வானியல் நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பாரத் கி சாப் என்ற தொலைகாட்சித் தொடரை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கபப்ட்டுள்ளது. இத் தொடரை அங்க்ங்கே காணப்படும் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து பார்க்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலண்டர் இது வரை 2000க்கும் மேல் விற்பனை ஆகி இருக்கிறது. இந்தக் காலண்டரைப் பெற [email protected] அல்லது  [email protected] என்ற இணய முகவரியிலோ 94253 02012 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். 

கி.மு. என்பது *பொது ஆண்டுக்கு முன் – Before Common Era எனவும் கி.பி. என்பது பொது ஆண்டு- Commmon Era எனவும் இங்கு குறிப்பிடப்படுகிறது.

எழுதியவர் 

பொ.இராஜமாணிக்கம்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *