சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் - 6 (History of the Madras City) | தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras) | சென்னையின் வரலாறு

தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras)

தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras)

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் – 6

– ராமச்சந்திர வைத்தியநாத்

சென்னப்பட்டணம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பதிவுகளில் என். எஸ். ராமஸ்வாமி அவர்கள் எழுதிய தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் எனும் புத்தகமும் ஒன்றாகும். இத்தனைக்கும் இப்பட்டணத்தின் வரலாறு இதில் நேர்கோட்டில் கூறப்படவில்லை என்பதோடு, பல்வேறு காலகட்டங்களில் நிர்வாகமும் நிகழ்வுகளும் பாய்ச்சலை உருவாக்கி நாம் வாழக்கூடிய இந்த கடற்கரை குக்கிராமத்தை எப்படி மாநகராக மாற்றியது என்பது பற்றிய விவரமும் இல்லை. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சென்னப்பட்டணம் அல்லது மதராஸ்பட்டணம் உருவான வரலாற்றுப் பின்னணியை விரிவாக எடுத்துரைக்கிறார். இத்தகைய முயற்சியை இதற்கு முன் எவருமே மேற்கொண்டதில்லை என்றே கூறமுடியும்.

சென்னையிலிருந்து வெளிவரக்கூடிய ஆங்கில நாளிதழ்களில் விளையாட்டுப் பகுதிக்கான செய்தியாளராகவும் துணையாசிரியராகவும் விளங்கிய என்.எஸ்.ஆர் சென்னப்பட்டணம் பற்றிய பத்திகளை எழுதுவதில் முன்னோடியாக விளங்கியதோடன்றி பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். செவன் பகோடாஸ்: தி ஆர்ட் அண்ட் ஹிஸ்டரி ஆஃப் மஹாபலிபுரம், 2000 இயர்ஸ் ஆஃப் மாமல்லபுரம், மதராஸ் லிட்டரரி சொஸைட்டி எ ஹிஸ்டரி, பச்சையப்பா அண்ட் ஹிஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ், பாரிஸ் 200: எ ஸாகா ஆஃப் ரிசைலையன்ஸ், ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ், போன்றவை நகர வரலாறு சம்பந்தப்பட்டவையாகும்.

சுதந்திரப் போராட்டத்தைக் களமாக கொண்டு முருகன் தி டில்லர், கந்தன் தி பேட்ரியட் எனும் ஆங்கில புதினங்களை இருபதுகளில் எழுதிய கா.சி.வெங்கட்ரமணி குறித்து ஒரு அபூர்வமான வரலாற்றியையும் அவர் எழுதியிருக்கின்றார். இவையன்றி கிரிக்கெட் விளையாட்டு குறித்தும் அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சென்னைத் துறைமுகத்தின் வரலாற்றினை அவர் எழுதத் துவங்கி முழுமையடைவதற்குள் அவர் இறந்து விட்டபடியால் அதை முத்தையாதான் நிறைவு செய்தார்.

சென்னப்பட்டணம் குறித்து அவர் எழுதியவற்றில் ஒன்றுதான் நாம் எடுத்துக் கொண்ட இப்புத்தகமும். நூற்றுக்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட இந்த ஆங்கிலப் புத்தகம் ஓரியண்ட் லாங்மென் நிறுவனத்தால் 1977ல் வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னரே 1981ல் முத்தையாவின் மதராஸ் டிஸ்கவர்ட் வெளியிடப்பட்டதோடு பின்னாளில் இந்து ஆங்கில நாளிதழில் சென்னை குறித்த பத்திகளையும் அவர் எழுதத் தொடங்கினார்.

வர்த்தக வேட்கை, போட்டியாளர்கள், வண்ணத் துணிகள், மதராஸுக்கான தேடல், சண்டை சச்சரவுகள், மெட்ராஸில், பெயரும் இடமும், வளர்ச்சி, பொறுப்புகள், பிரதான கொத்தளம், குழப்பத்தில் டெக்கான், நான்கு மனிதர்கள் எனும் 12 அத்தியாயங்களில் பட்டணம் உருவான பின்னணியை வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் என்.எஸ்.ஆர் நிறுவியிருக்கிறார். இவையன்றி ஆதார நூல் பட்டியல் ஒன்றையும் இத்துடன் தந்திருப்பதோடு, 1670க்கு முந்திய வரலாற்று ஆவணங்கள் மதராஸில் இல்லை என்பதையும் பட்டியலில் மட்டுமின்றி முன்னுரையிலும் பதிவுசெய்துள்ளார். இத்தருணத்தில் இது தொடர்பான மற்றொரு செய்தியை பகிர்வது இதை விரிவாக புரிந்து கொள்வதற்கு வழி செய்யும்.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் - 6 (History of the Madras City) | தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras) | சென்னையின் வரலாறு | The Founding of Madras by N. S. Ramaswami

ஆங்கில நாளிதழ் இந்துவின் நடுப்பக்கத்தில் அன்றாடம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மற்றும் நூறாண்டுகளுக்கு முன்னர் என்ற தலைப்பில் பத்தியொன்று வெளியிடப்பட்டு வருவதை கடந்த காலம் குறித்து அறியவிழைவோர் வாசிக்காது இருந்துவிட முடியாது. 2025 ஜனவரி 9 நாளிதழில் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தகவல் வரலாற்று ஆய்வாளர்களை மட்டுமின்றி ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்திடக்கூடியதாகும்,
1975 ஜனவரி 5 அன்று மதராஸ் எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அன்றைய ஆணையர் திரு பத்ரிநாத் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1786க்கும் 1828க்கும் இடைப்பட்ட காலங்களில் உள்ள 86,208 கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்கள் அதிகாரிகளால் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணயம், சட்டம் ஒழுங்கு, ரயத்துவாரி முறை, பாளையக்காரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்குமான தொடர்பு போன்று பல்வேறு அம்சங்களை அறியக்கூடிய இந்த ஆவணங்களை அதிகாரிகள் உணர்வற்று அழித்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இவ்வாறே இந்தோர் சமஸ்தானம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை மத்தியப் பிரதேசத்திலுள்ள அதிகாரிகள் அழித்ததையும், அதிகார வர்க்கம் வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து அறியாமலேயே இருந்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளோர் நீங்கலாக அதிகார வர்க்கம் என்பது காண்டாமிருகத்தோலுடன்தான் உலா வந்து கொண்டிருக்கிறது என்பதை அன்றாட நிகழ்வுகளின் வாயிலாக நாம் நிதர்சனமாக அறிந்து வருகிறோம். இந்த நிலையில்தான் வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றுத் தரவுகளை தேடிக் கண்டறியும் அரிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்.எஸ்.ஆர் முன்னுரையிலேயே இப்புத்தகத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறார். 1939ல்தான் மதராஸ் குறித்து புத்தகமொன்று கடைசியாக வெளிவந்திருப்பதையும் இதுவும் இந்தியத் தரப்பின் அடிப்படையில் கூறப்படவில்லை என்பது முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்றும், இதன் பொருட்டு இங்கே இருக்கின்ற ஏராளமான வரலாற்று ஆவணங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவதில்லை என்பதையும் கூறுகிறார்.

தெலுங்கு கவிதையொன்று தாமர்ல வெங்கடபதி தனது தந்தையின் பேரில் சென்னப்பட்டணம் எனும் நகரொன்றினை உருவாக்கியதாக திட்டவட்டமாக கூறுகிறது. ஆயின் இக்கூற்று கருத்தில் கொள்ளப்படாது, மதராஸ் எனும் பெயரின் தோற்றுவாய் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் இது ஏற்கப்படுமாயின் இதுவரையில் இருந்து வந்த கண்ணோட்டங்களுக்கு முரண்பட்டதாகவே அமையும் என்பதையும் எடுத்துரைக்கிறார். சென்னப்பட்டணம், மதராஸ் பட்டணம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றின் இடம் குறித்தும் தாமர்ல வெங்கடபதி அல்லது அவரது சகோதரன் ஃபிரான்சிஸ் டேயுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் துவக்கம் குறித்தும் இதுவரை பொதுவாக இருந்து வரக்கூடிய கருத்துக்களிலிருந்து ராமஸ்வாமி மாறுபடுகிறார்.

இவ்வாறே மூன்றாவது வெங்கடா அல்லது வெங்கடபதியிடமிருந்து பிரான்சிஸ் டே சந்திரகிரி அரண்மனையில் ஃபிர்மானை பெற்றதாக பரவலாக இருந்துவரக்கூடிய கருத்தும் தவறானது என்பதோடு புரியாப் புதிர்களுக்கு விளக்கம் அளித்திடும் வகையில் விஜயநகரம் மற்றும் கோல்கொண்டா வரலாற்றின் பின்னணியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டானிய இந்தியப் பேரரசினை உருவாக்குவதில் மதராஸின் உருவாக்கம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும் அந்நிகழ்வு உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதல்ல. 1640ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்கான காரணிகள் வர்த்தக செயல்பாடுகளைத் தாண்டியவையல்ல. இருப்பினும் இவை யாவுமே உலகு குறித்த நவீன வரலாற்றின் மகத்தானதொரு நிகழ்வாக அமைந்த பிரிட்டனின் கிழக்கத்திய பேரரசின் உருவாக்கத்தில் முன்நோக்கமற்ற கருவிகளாகவே அமைந்தன. வர்த்தகர்கள் ஆள்வோராக மாற்றமடைந்தது என்பது விபத்தாகும்.

இவ்வாறாக வர்த்தக வேட்கை எனும் முதல் பகுதியை என்எஸ்ஆர் துவக்கும் விதமே அலாதியாக மட்டுமின்றி புத்தகத்தின் போக்கை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

கிறித்துவ சகாப்தத்தின் துவக்கத்திலேயே கிரேக்க ரோமானிய கடற்படையினரும், வர்த்தகர்களும் நறுமண உணவுப் பொருட்களை தேடி இந்தியத் துறைமுகங்களை நாடி வந்திருக்கின்றனர். இதே வேட்கைதான் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய வர்த்தகர்களையும் இங்கே வரச்செய்திருக்கிறது. ஏற்கனவே இங்கே வர்த்தகம் புரிந்து வந்த அரேபிய வர்த்தகர்களை அகற்றி, போர்ச்சுக்கீசியர்களும் இத்தாலியர்களும் தங்கள் பயணத்தை துவக்கியிருக்கின்றனர்.

பிரிட்டனில் முடியரசுக்கும் பாராளுமன்றத்திற்கும் மோதல் இருந்த தருணத்தில்தான் 1640ல் மெட்ராசில் கோட்டை கட்டும் பணிகள் துவங்கியதை என்.எஸ்.ஆர் விரிவாகவே விவரணம் செய்கிறார். ஏற்கனவே ஆங்கிலேயர்கள் மசூலிபட்டணத்தில் ஃபாக்டரி என்று சொல்லப்படும் தளமொன்றினை நிறுவியபோதிலும், அது கோல்கொண்டா ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிவந்திருக்கிறது. 1639லேயே கோல்கொண்டாவின் மன்னர் மசூலிபட்டணம் தளத்தில் உள்ள ஆங்கிலேய நிர்வாகிகள் தனது குடிமக்களை முறைகேடாக நடத்துவது குறித்து புகார் தெரிவித்த நிலையில் ஆர்மகானில் தாற்காலிகமாக குடியேறியிருக்கின்றனர். இங்கேயும் அவர்ளுக்கு உள்ளூர் நாயக்கின் அச்சுறுத்தல் இருந்து வந்திருக்கிறது. தவிர கிழக்கிந்திய கம்பெனியுடன் வர்த்தகம் புரியக்கூடிய வண்ணம் தோய்ப்பவர்களையும், துணிகளில் வண்ண வேலைப்பாடுகளை தீட்டக்கூடியவர்களையும் மிரட்டி உருட்டி வந்திருக்கின்றார். இதற்கு பழவேற்காட்டில் தளம் அமைத்துக் கொண்டு வர்த்தகம் புரிந்து வரக்கூடிய டச்சுக்காரர்களும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

விஜயநகர பேரரசின் பிரதிநிதிகளாக பூந்தமல்லியில் நிர்வாகம் செய்து வந்து தாமர்ல வெங்கடபதி மற்றும் அவரது சகோதரர் தாமர்ல அய்யப்பா ஆகிய இருவரும் மதராஸ்பட்டணத்தில் தளம் அமைத்துக் கொள்ளும்படி ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை விடுத்ததாக பொதுவாக கூறப்பட்டு வருகிறது. டே பெற்றுக் கொண்ட ஃபிர்மானும் இதை உறுதி செய்வதாகவே உள்ளது. இந்த ஃபிர்மான் முதலில் ஜெண்டு மொழியில் எழுதப்பட்டு நாயக் சகோதரர்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. டே தனது உயர்நிலையில் உள்ளவர்களிடம் மெட்ராஸில் சாதகமான நிலை இருந்து வருவதை மிகைப்படுத்திக்கூற விரும்பியதன்பேரில்தான் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்கையில் ஃபிர்மானில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த அடிப்படையில்தான் கூவத்தில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள முடியுமென்றும் தீவுத்திடல் அருகில் உப்பு உற்பத்தி செய்ய முடியுமென்றும் டே கூறி இங்கே கொத்தளத்தை அமைப்பபதற்கான ஒப்புதலைப் பெற்றிருக்கின்றார். ஆர்மகான் பொருத்தமாக இல்லையென்ற நிலையில் முதலில் மதராஸை கணக்கில் கொள்ளவில்லை. கோவளம், பாண்டிச்சேரி, கூனிமேடு ஆகிய இடங்களே கருத்தில் இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் போர்ச்சுக்கீசியர்களும் சாந்தோமில் தங்கள் மத்தியில் தளம் அமைத்துக் கொள்ளும்படி அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

ஏற்கனவே புலிகட் என்று அழைக்கப்பட்ட பழவேற்காட்டில் உள்ள டச்சுக்காரர்களுக்கும் சாந்தோமில் உள்ள போர்ச்சுக்கீசியர்களுக்கும் முட்டலும் மோதலும் அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கிறது. இச்சச்சரவுகளால் வெங்கடபதிக்கு தொந்தரவு இருந்து வந்தமையால் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் தனது தந்தையின் பெயரில் சென்னப்பட்டணம் எனும் ஒரு நகரினை கடற்கரையோரத்தில் உருவாக்கியிருக்கின்றார். இந்த நிலையில் டே இடம் கோரியபோது ஐயப்பாடு ஏதுமின்றி அப்பட்டணத்தையொட்டிய பகுதியை ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு அளித்திருக்கின்றார்.

பந்தள ராமஸ்வாமி நம்பத்தக்க வரலாற்றாய்வாளர் என்று சொல்ல முடியாது. அதற்காக இந்தியத் தரப்பில் உள்ள அனைத்துமே தவறானவை என்ற முடிவுக்கும் வரமுடியாது. வெங்கடபதியின் ஒன்றுவிட்ட சகோதரரான அங்கபூபாலன் உஷாபரிணயம் எனும் தனது தெலுங்கு காவியத்தில் தனது தந்தை சென்னப்பா பெயரில் வெங்கடபதி நகரை நிர்மாணம் செய்ததை குறிப்பிட்டுள்ளார். டே மதராஸ் பட்டணத்தில் கால் பதிந்தபோது முன்னரே அருகாமையில் சென்னப்பட்டணமும் இருந்திருக்கிறது என்பதை இந்த நூற்றாண்டில் உள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அறிந்திருந்த போதிலும் அதற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்கிறார் என்.எஸ்.ஆர்.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் - 6 (History of the Madras City) | தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras) | சென்னையின் வரலாறு

விஜயநகரப் பேரரசர் மூன்றாவது ஸ்ரீரங்கா தனது பெயரில் நகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததை பரிசீலிக்காது, வெங்கடபதியின் கோரிக்கைக்கு ஏற்ப அவரது தந்தையின் பெயரில் டே சென்னப்பட்டணத்தை உருவாக்கியதாகவும் தவறான கருத்தொன்று நிலவி வருகிறது.

இம்மாதிரியே சென்னப்பட்டணம், மதராஸ்பட்டணம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றின் இடம் குறித்தும் ஐயங்கள் இருந்து வருவதை வெளிப்படுத்தும் என்எஸ்ஆர் ஒன்றுக்கொன்று நூறு கெஜ வித்தியாத்தில் அமைந்திருந்தன என்கிறார். ஜார்ஜ் டவுனைச் சுற்றியுள்ள பகுதிகளும் கோட்டையும் நான்கு சதுர மைல்களுக்குள் அமைந்திருந்ததையும், கோட்டை அதில் சிறியதொரு பகுதியில் இருந்ததையும் அவர் உறுதி செய்கிறார். மதராஸ் பட்டணத்தை உருவாக்கிய கோகனையும் டேயையும் பிரிட்டனில் நினைவு கூறப்படாதிருப்பதனையும் என்எஸ்ஆர் சுட்டிக் காட்டுகிறார்.

சந்திரகிரி மன்னரிடமிருந்து ஃபிர்மானை டே பெற்றுக் கொண்டதாக பொதுவான கருத்தொன்று நிலவி வருகிறது. ஆயின் உண்மையில் அன்னாளில் விஜயநகரப் பேரரசின் தலைநகராக சந்திரகிரி இருந்து வந்ததோடு அங்கே பேரரசர் மூன்றாவது வெங்கடா இருந்தார் என்பதை என்எஸ்ஆர் பதிவிடுகிறார். இந்த விவகாரத்தில் தான் வந்தவாசி நாயக்கை சந்தித்ததாகத்தான் டே கூறியிருக்கிறார். தாமர்ல அய்யப்பாவையும் அவர் சந்தித்திருக்கக்கூடும். அவர் சந்திரகிரிக்குச் சென்று பேரரசரை சந்தித்தற்கு குறிப்புகள் ஏதுமில்லை. இந்த சந்திப்பு ஒரு வேளை சென்னப்பட்டணத்திலே நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதோடு இங்கேயே ஃபிர்மானை வழங்கியிருக்கவும் கூடும்.

ஏற்றுமதிக்கான பொருட்களின் விலை நிர்ணயிப்பு என்பது மாறுபட்டதாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் அதை அப்படியே வாங்கி ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக கிட்டங்கிகளை உருவாக்கி மலிவான விலைக்கு வாங்கி சேகரித்து பின்னர் ஏற்றுமதி செய்யத் துவங்கினார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே கிழக்கிந்திய கம்பெனிகள் மட்டுமின்றி மற்றவர்களும் இங்கே தளங்களை உருவாக்கிக் கொண்டனர் என்ற செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1639 ஜூலை 27 அன்று தி ஈகிள் எனும் ஆங்கியேரின் கப்பல் திருவொற்றியூருக்கும் சாந்தோமிற்கும் இடைப்பட்ட பகுதியில் நங்கூரமிட்டது, மதராஸ்பட்டணம் எனும் அலைபொங்கும் கடற்கரையில் வர்த்தகர் ஒருவர் இறங்கினார். அப்பிராந்தியத்தின் ஆட்சியாளரை அவர் சந்தித்தார். அவருக்கு அங்கே ராஜமாரியாதை அளிக்கப்பட்டது. அங்கே பேச்சுவார்த்தையினை மேற்கொண்ட அவர் “வியாபாரிகள், துணிகளில் வண்ணம் தீட்டுவோர், நெசவாளர்கள் ஆகியோர் பெருமளவில் தங்களது துணிவகைகளை தன்னிடத்தில் அளித்ததாக” பின்னாளில் எழுதியுள்ளார். விலை விவரங்களை விவரமாக கேட்டறிந்த அவர் பின்னர் நாயக்கின் பிராந்தியத்தில் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். பயணம் முடிவுற்ற பின்னர் திரும்பி வந்து வடக்கு நோக்கி கடற்பயணத்தை தொடர்ந்திருக்கிறார். இவ்வாறாகத்தான் ஃபிரான்சிஸ் டே மதராஸின் வரலாற்றை துவக்கியிருக்கிறார்.

இதற்கு முன்னரே சோழமண்டலக் கடற்கரையில் ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை துவக்கியிருக்கின்றன. 1522 வாக்கில் சாந்தோமில் போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். டச்சுக்காரர்கள் 1605ல் மசூலிப்பட்டணத்திலும், அதே பட்டணத்தில் 1611ல் ஆங்கிலேயர்களும், 1620ல் டேனிஷ் நிறுவனம் தரங்கம்பாடியிலும், மதராசில் ஆங்கிலேயர்களும் தளத்தை உருவாக்கிக் கொண்ட பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியில் தங்கள் வர்த்தக செயல்பாடுகளைத் துவக்கியிருக்கின்றனர். இவர்களின் வருகைக்கு முன்னரே இத்தாலியர்களும் அரேபியர்களும் சாதாரண அளவில் இப்பிராந்தியங்களில் தங்கள் வர்த்தக செயல்பாடுகளை கொண்டிருந்ததை என்எஸ்ஆர் குறிப்பிடுகிறார்.

கடற்பயணங்களில் உத்வேகம் ஏற்படுவதற்கு போர்ச்சுகல்லின் மன்னர் ஹென்றி உருவாக்கிய கடற்பயண பயிற்சிப் பள்ளி காரணமாக அமைந்திருக்கிறது. 1416ல் உருவாக்கப்பட்ட பள்ளி வர்த்தகர்களை புதிய பகுதிகளை தேடுவதற்கு உத்வேகம் அளித்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் 1598ல் நுழைந்த டச்சுக்காரர்கள் ஸ்ரீலங்காவிலும் தென்னிந்தியாவிலும் ஏற்கனவே தளங்களைக் கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களை வெளியேற்றியிருக்கின்றனர். ஏற்கனவே 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சூரத்திலும் மலபார் கடற்கரையிலும் தளங்களை அமைத்திடும் அவர்களது முயற்சிகள் தோல்வியுற்றிருக்கின்றன. இருப்பினும் மசூலிப்பட்டணத்திலிருந்து 1605ல் அவர்களின் முதல் சரக்கு கப்பல் இந்திய பருத்தித் துணிகளுடன் புறப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் தற்போது நிஸாமாபட்டணம் என்று அழைக்கப்படும் பெட்டபோலியில் மற்றொரு தளத்தை நிறுவினர். இருப்பினும் அவர்களளது முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு சேகரிக்கும் இடமாக மதராஸ்பட்டணத்திலிருந்து வடக்கில் நாற்பது மைல்களுக்கு அப்பால் உள்ள பழவேற்காடு ஏரியின் தென் கரையோரமான பகுதியே விளங்கியது. இங்கே 1621ல் ஒரு தாற்காலிக உடன்பாட்டின் கீழ் கிழக்கிந்திய நிறுவனம் இயங்கி வந்தது. பின்னரே இவர்கள் மாற்றிடத்தை தேடும் முயற்சியில் இறங்கினர்.

ஏற்கனவே வர்த்தகம் தொடர்பான பல்வேறு கடற்பயணங்களை மேற்கொண்ட ஆங்கிலேயே நிறுவனங்கள் சூரத், ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் தளங்களை உருவாக்கிய போதிலும் கிழக்கு கடற்கரையில் தடம் பதிக்கவில்லை. கேப்டன் ஹிப்பானால் அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிட முடியவில்லை. இருப்பினும் ஏழாவது பயணத்தை கேப்டன் ஹிப்பான் க்ளோப் எனும் கப்பலின் வழி துவக்கியிருக்கிறார். இவரது முயற்சியின் பேரில்தான் 1611ல் மசூலிப்பட்டணத்தில் தளமொன்றை நிறுவ முடிந்திருக்கிறது, உள்ளூர் கவர்னரிடமிருந்து அனுமதியைப் பெற்றிட்ட போதிலும் கோல்கொண்டா நவாப் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திவரக்கூடிய நிலையே இருந்து வந்தது.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் - 6 (History of the Madras City) | தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras) | சென்னையின் வரலாறு

ஏற்கனவே 1606ல் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்ற டச்சு வர்த்தகர்கள் விரிவாக செயல்பட்டு வந்திருக்கின்றனர். முதலில் மோட்டா துணி ரகங்கள், பருத்தி நூல், இண்டிகோ போன்றவையே அவர்கள் கொள்முதல் பட்டியலில் இருந்து வந்தது, பின்னர் நறுமண உணவுப் பொருட்கள், பட்டு, ஈயம், வெள்ளி, பீங்கான், அகலத் துணிரகங்கள் ஆகியவையும் அப்பட்டியலில் இடம் பெற்றன. இவற்றையெல்லாம் தாண்டிய விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக வண்ணம் தீட்டப்பட்ட பருத்தி துணி ரகங்கள் இருந்தன. அந்த நூற்றாண்டில் பல்வேறு வண்ணங்களில் தாவர வண்ணங்களை பயன்படுத்தி மலிவாகவும் உற்பத்தி செய்யக்கூடிய நாடாக இந்தியா திகழ்ந்தது.

வண்ணத் துணிகள் பல்வேறிடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த போதிலும் மசூலிப்பட்டணம் ரகங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருந்திருக்கின்றன. இயந்திர உற்பத்தி கைவினைஞர்களின் செயல்முறையை அழித்தொழித்தாலும் பண்டைய பாங்கின் வழியில் இன்றும் கலம்காரி எனும் வண்ணத் தொகுப்பு நீடித்து வருவதையும், அதன் பிரதான வண்ணமாக சிவப்பு இருந்து வருவதையும் என்எஸ்ஆர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். துணிகளில் வண்ணச் சித்திரங்களை அச்சடிப்பதிலிருந்து வேறுபட்டது இந்த வண்ணம் தீட்டும் முறை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

வண்ணம் தீட்டும் மையமாக கிருஷ்ணா டெல்டாப் பகுதி விளங்கியதோடு இங்கே அபரிமிதமாக பயிரிடப்பட்டு வந்த காஃபி குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரமான மஞ்சிட்டு சாயத்திற்கான மூலப் பொருளாகவும் அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இந்த வண்ணம் தீட்டப்பட்ட துணிகளை கொள்முதல் செய்து தத்தம் நாடுகளில் விற்பனை செய்திட பல்வேறு ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களுக்கிடையே போட்டி இருந்து வந்திருக்கிறது.

1634 முதல் ஆர்மகானில் உள்ள தளத்திற்கு பொறுப்பாளராக இருந்த ஃபிரான்சிஸ் டே அந்த இடம் பொருத்தமானதாக இல்லை என்ற முடிவுக்கு வந்தபடியால் வேறிடத்தை தேடிக் கொண்டிருந்தார். 1619ல் லண்டனில் அது வரை எதிரெதிராக இருந்த பிரிட்டானிய டச்சு நிறுவனங்கள் போர்ச்சுக்கீசியர்களின் போட்டியை எதிர்கொள்ள வேண்டி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிக் கொண்டன. இந்த அடிப்படையில்தான் ஆங்கிலேயர்கள் துர்கராயபட்டணம் என்று தற்பொழுது அழைக்கப்படும் ஆர்மகானிலிருந்து வெளியேறி பழவேற்காட்டில் சிறிது காலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதன் பின்னர் மசூலிப்பட்டணம் ஆட்சியாளர்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதாக அளித்த உத்தரவாதத்தின் பேரில் மீண்டும் ஆர்மகான் சென்றனர். அங்கே 1634ல் கோட்டை மீண்டும் கட்டப்பட்டாலும் அது மோசமானதாகவே இருந்தது. ஆங்கிலேயேர்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.

1637ன் இறுதியில் பழவேற்காட்டில் உள்ள டச்சு நிர்வாகம் படாவியாவிற்கு கடிதமொன்றை எழுதியது. ஃபிரான்சிஸ் டே எனும் ஆங்கில வர்த்தகர் ஒருவர் தளமொன்றை நிறுவும் பொருட்டு பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்காக மசூலிப்பட்டணத்தைக் கடந்து போலோச்சேரி அல்லது பாண்டிச்சேரிக்கு பயணமொன்றை மேற்கொண்டிருப்பது அதில் கூறப்பட்டிருந்தது. பாண்டிச்சேரி, கூனிமேடு போன்றவை அவர்களின் தேடல் பட்டியலில் இருந்ததாக கூறப்பட்டு வந்த போதிலும் ஆங்கிலயேர்களின் ஆவணங்களில் இது பதிவாகவில்லை.

மாமல்லபுரத்திற்கு வடக்கில் பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள கோவளமும் ஆங்கிலேயர்களின் பரிசீலனையில் இருந்திருக்கிறது. 1637ல் கோவாவில் உள்ள போர்ச்சுக்கீசிய வைஸ்ராய் பெட்ரோ டி சில்வா சூரத்திலுள்ள ஆங்கிலேய நிர்வாக அதிகாரி மெத்வோர்ல்டிடம் இது பற்றி புகார் அளித்துள்ளார்.

போர்ச்சுக்கீசியர்களுடனான நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கோவலோவில் தளம் அமைக்க முயற்சித்து வருவதை குறிப்பிடுகிறார். ஏற்கனவே இவர் போர்ச்சுகல் மன்னருக்கு அனுப்பிய கடிதமொன்றில் ஆங்கில வர்த்தகர்களுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாமென்று உத்தரவிட்டதையும் அதே தருணத்தில் வெளிப்படையாக எவ்வித மோதல் போக்கையும் கையாள வேண்டாம் என்று கூறியதையும் தெரிவித்திருந்தார்.

தவிர மசூலிப்பட்டணம் ஏஜென்சியில் உள்ள ஆங்கிலேயே வர்த்தகர்களின் மத்தியில் இருந்து வந்த சச்சரவு துப்பாக்கிச் சூடு வரை முற்றி உள்ளூர் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகியது. இந்த நிலையில்தான் லண்டனிலிருந்து ஆண்ட்ரூ கோகன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். டேயும் ஆர்மகானிலிருந்து வெளியேறி தெற்கில் புதிய தளமொன்றினை உருவாக்கிட பூந்தமல்லி நாயக்கை சந்திக்க அனுமதி கோரியிருக்கிறார். 1639 ஆகஸ்ட் 27 அன்று மசூலிப்பட்டணத்திற்கு எழுதிய கடித்தத்திலேயே இத்திட்டத்தை டே கூறியிருக்கிறார்.

ஆர்மகானில் உள்ள நாயக் டச்சுக்காரர்களுக்கு கீழ்ப்படிந்து இருந்து வந்தார். ஆனால் வெங்கடபதி விஜயநகர மன்னரின் கவர்னராக வந்தவாசியை தலைமையகமாக கொண்டிருப்பினும் பெரும்பாலும் தலைநகரானான சந்திரகிரியைத்தான் இருப்பிடமாக கொண்டிருந்தார். தனது இளைய சகோதரன் தாமர்ல அய்யப்பாவை பூந்தமல்லி மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்திருந்தார். பேரரசர் மூன்றாவது வெங்கடாவிற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்கிய வெங்கடபதி அவரது மைத்துனரும்கூட என்கிறார் என்எஸ்ஆர்.

மதராஸ் உருவாக்கத்திற்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் ஃபிர்மான் உண்மையிலேயே கவுல்தான். இதுவும் மூன்று விதமாக உள்ளது. இதில் ஒன்றில் 1639 ஜூலை 22 என்று குறிப்பிடப்படுகிறது, இது தவறானது. ஆகஸ்ட் என்றுதான் இருக்க வேண்டும், இதே தவற்றினை தனது தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்திலும் டே செய்திருக்கிறார். இவ்வாறே வெங்கடாத்திரி கோட்டை கட்டித்தருவதற்ககான உத்தரவாதம் அளிப்பதான சரத்தும் மொழி பெயர்ப்பாளரின் தவறினால் நிகழ்ந்ததாகும். எவ்வித கட்டணமும் உத்தரவாதமும் இன்றி ஆங்கிலேயருக்கு நாணயம் அச்சிடும் உரிமை வழங்கப்பட்டிருந்தது வினோதமானதாகும்.

இந்த கௌல் அல்லது ஃபிர்மானில் ஆங்கிலேயரின் கப்பலுக்கு இந்தப் பிராந்தியத்தில் விபத்து ஏதேனும் நேரிட்டால் அதற்கான முழு இழப்பீட்டினை தருவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் சாந்தோமில் போர்ச்சுக்கீசியரும், பழவேற்காட்டில் டச்சுக்காரர்களும் போட்டியாளர்களாக இருப்பினும் டே மதராஸில் கால் பதிப்பதை அவர்கள் எதிர்த்திடவில்லை. இங்கே தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு லண்டனில் உள்ள கிழக்கிந்திய நிறுவனம்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுவதை எதிர்த்தது என்பது எதிர்கால வரலாறு குறித்த கண்ணோட்டமின்மையே என்று சாதாரணமாக எவரும் குற்றஞ்சாட்டக்கூடும். ஆயின் அன்றைய தினம் ஐரோப்பாவில் குறிப்பாக பிரிட்டனில் நிலவி வந்த சூழல் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதே. முதலாவது ஜேம்ஸுக்குப் பின் மகுடம் சூடிய சார்லஸ், சர் வில்லியம் கோர்டீன் தலைமையிலான புதியதொரு வர்த்தக நிறுவனத்திற்கு அனுமதி அளித்தார். கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்குப் பின்னர் ஏற்கனவே 1635 டிசம்பர் 12 க்கு முன்னர் தளங்களை அமைத்த இடங்களில் புதிய நிறுவனம் நுழையாது என்ற திருத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் ஒரு முறை பயணத்திற்கு மட்டுமே அனுமதி என்பது ஐந்தாண்டுகள் வரையில் என்று மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக பிரிவி கவுன்சில் (உச்ச நீதி மன்றம்) புதிய ஜாயிண்ட் ஸ்டாக் நிறுவனம் உருவாக்கப்படுமேயாகில் புதிய நிறுவனத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுவும் நிறைவேறவில்லை. மேலும் பிரிட்டனில் குழப்பம் நிலவி வந்ததோடு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு நிதியாதாரங்கள் பெருமளவில் இல்லாத நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் சென்னப்பட்டணத்தில் கோட்டை கட்டுவது தள்ளி வைக்கப்பட்டது.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் - 6 (History of the Madras City) | தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras) | சென்னையின் வரலாறு

மேலும் மசூலிப்பட்டணத்தில் உள்ள நிர்வாகிகளுக்கும் கோகனுக்கும் கருத்து மாறுபாடு அதிகரித்தது. நிர்வாகத்திற்குள் இருந்து வந்த குழப்பங்கள் மற்றும் மோதல்கள் குறித்து விரிவான அளவில் என்எஸ்ஆர் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இப்பகுதியில் விவரித்துள்ளார். கோல்கொண்டா சுல்தானின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக மசூலிப்பட்டணம் இருந்தமையால் அவரது குறுக்கீடும் இதில் நிறையவே இருந்திருக்கிறது.

எப்படியிருந்தாலும் டேயின் திட்டங்களை கோகன் ஏற்றிட்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்தது. மசூலிப்பட்டணம் புதிய தளங்களை முன்அனுமதியின்றி உருவாக்கிக் கொள்வதை பாண்டமில் உள்ள நிர்வாகிகள் தடை செய்தனர். மேலும் தேவைக்கேற்ப பணம் கிடைப்பதும் அரிதாகியது. தான் வழங்கிய அனுமதிக்கு நாற்பது நாட்களுக்குள் பதிலளிக்கும்படி பூந்தமல்லி நாயக்கும் கோரியிருந்தார். இந்த நிலையில் நாட்களை கடத்துவதற்கான முயற்சிகளை மசூலிப்பட்டண நிர்வாகிகள் மேற்கொண்டனர். குதிரைகள், சர்க்கரை, கிராம்பு ஆகியவற்றோடு நாயக்கை பிரான்சிஸ் டே சந்திப்பதோடு 2000 பகோடா பணத்தையும் வழங்கிடவும் தீர்மானித்தனர். இதற்கு ஐவியும் ஒப்புதல் அளித்திருந்தார். இடையில் வட்டிக்கு பணத்தை வாங்க முடியாததோடு டே மற்றும் ஐவி ஆகிய இருவருக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. வழக்கம்போல் மசூலிப்பட்டணம் இதில் தலையிட்டது.

இப்பின்னணியில் ஆர்மகானிற்கு டே வந்தார். 1640 ஜனவரி இறுதி வரை அங்கிருந்தார், மதராஸ்பட்டணத்தில் கோட்டை கட்டுவதற்கான அனுமதியை எதிர்நோக்கியிருந்தார். இறுதியில் ஜனவரி 8 எழுதப்பட்ட அனுமதி 1640 பிப்ரவரி 6அன்று கிடைத்தது. பட்டும் படாமலும்தான் இருந்ததோயொழிய கோட்டை கட்டுவதற்கான முழுமையான அனுமதிக் கடிதமாக அது இல்லை. உடனடியாக ஆர்மகானில் உள்ள கொத்தளங்களை அகற்றி கோகனும், டேயும் மதராஸ் பட்டணத்தை நோக்கிய பயணத்தை தங்கள் குழுவினருடன் துவக்கினர். ஈகிள் மற்றும் யூனிட்டி எனும் இரு கப்பல்களில் பிப்ரவரி 20 அன்று மதராஸ்பட்டணத்திற்கு அவர்கள் வந்தனர்.

மேலும் ஹம்ப்ரி டாம்ப்கின்ஸ் மற்றும் ஜான் பிரவுன் எனும் கம்பெனி நிர்வாகிகள் இருவர், இரண்டு குமாஸ்தாக்கள், ஒரு துப்பாக்கி வீரர், ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர், ஒரு ஐரோப்பிய தச்சர், கொல்லர்கள், பழுது பார்ப்பவர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இப்பயணக் குழுவில் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பியர்கள்தான். இருப்பினும் ஒரு ஒரு இந்தியரும் அதில் இருந்தார். அவர்தான் நாகபத்தன். துப்பாக்கிக்கான வெடிமருந்தினை தயாரிப்பவர் அவர். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மதராஸ்பட்டணத்தில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு அறக்கட்டளையொன்றை அவர் ஏற்படுத்தினார். ஒரு சில போர்ச்சுக்கீசியர்களும் இதர தனிப்பட்ட வர்த்தகர்களும் கூட இக்குழுவில் இருந்திருக்கின்றனர். தவிர 25 சிப்பாய்களைக் கொண்ட படைப்பிரிவும் அதன் அதிகாரிகள் லெப்டினன்ட் ஜெர்மின், சார்ஜண்ட் பிராட்ஃபோர்ட் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இப்படியாக ஆங்கிலேயர்கள் மதராஸ்பட்டணத்திற்குள் பிரவேசித்தனர்.

இங்கே அவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. பூந்தமல்லியின் நாயக் கோட்டை கட்டித்தருவதாக தான் சொல்லவில்லை என்று கையை விரித்து விட்டார். பனை மரங்களுடனான மண்ணைத் தவிர வேறு எதற்கும் உத்தரவாதம் அளிக்கவில்லை என்று கூறியதை அக்டோபர் 14 அன்று மசூலிப்பட்டணத்திற்கு எழுதிய கடிதத்தில் கோகன் குறிப்பிட்டிருந்தார். பெரும் நெருக்கடிக்கு ஆளானதோடு கோட்டையை அவர்களால் விரிவாக்கமும் செய்திட முடியவில்லை. ஏற்கனவே ஆர்மகானில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக மசூலிப்பட்டணத்தில் கடன் வாங்க வேண்டியிருந்தது. இத்தருணத்தில்தான் அதிர்ஷ்டவசமாக பிரிட்டனிலிருந்து ஹோப்வெல், பாண்டமிலிருந்து எக்ஸ்பிடிஷன் ஆகிய இரு கப்பல்கள் வந்தன. இவர்களுக்கு தேவையான பணம் கிடைத்தது. பின்னரே 1640 மார்ச் 1 அன்று வேலைகள் துவங்கியது. கோட்டைக்கு செயிண்ட் ஜார்ஜ் பெயரை சூட்டியது பற்றிய விவரங்களும் தெளிவாக இல்லை. ஏப்ரல் 23 அன்றுதான் செயிண்ட் ஜார்ஜ் தினம். அதற்குள் கோட்டையைக் கட்டி பெயரை வைத்திருப்பார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல.

இடத்தின் பெயர் பற்றிய சர்ச்சை இன்றும் இருந்து வருகிறது. நாயக் டேக்கு வழங்கிய கௌலில் மதராஸ் பட்டணத்திற்குள்ளேயோ அல்லது அருகாமையிலோ அவர்களுக்குபொருத்தமாக இருக்கும் என்று கருதக்கூடிய இடம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. சூரத்திலிருந்து கம்பெனிக்கு 1640 டிசம்பர் 29 அன்று எழுதப்பட்ட கடிதத்தில் கூட ஒரு இடம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடம் குறித்து திட்டவட்டமான ஆவணம் ஏதும் இல்லை. இதற்கு அடுத்த நூற்றாண்டில் வேறு விதமான ஆவணமொன்றில் இது பற்றி அறிய முடிந்தது. “பழைய கோட்டை” பற்றிய 1733ம் ஆண்டு நிலப்பரப்பு படமே அது. கோட்டையும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் அதில் காணப்படுகிறது. பிளாக் டவுனுக்கு தெற்கில் பெத்துநாயக்கன் பேட்டைக்கு தென் கிழக்கில் கோட்டை அமைந்திருக்கிறது. தற்போது கோச்சரன் கால்வாய் என்று அழைக்கப்படும் எழும்பூர் ஆற்றின் வடகரை, மேற்கில் திறந்த வெளியையும் கோட்டையையும் பிரிக்கிறது. இப்பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் செங்கற் சூளைகளும் ஒரு சுங்கச் சூளையும் இருக்கிறது. இது எழும்பூரை நோக்கி செல்வதாக இருப்பினும் இரு கரையும் மூர்ஸ் மேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மைதானத்திற்கு மேற்கில் ஆற்றின் கரைக்கு அப்பால் சுங்குராமா தோட்டமும், அதையொட்டி மூர் சுங்கம் வசூலிக்கும் இடமும் இருக்கிறது. இதற்கு தெற்கில்தான் திருவல்லிக்கேணி . ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மீனவர்களின் குடிசைகள் அமைந்திருந்தன.

இப்போது மதராஸ் பட்டணத்தின் தோற்றுவாய் பற்றிய சர்ச்சைகள் ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. டே இங்கே கால் பதிக்கும் முன்னரே மதராஸ்பட்டணம், சென்னப்பட்டணம் ஆகிய இரு கிராமங்கள் அல்லது நகரங்கள் இங்கே இருந்திருக்கின்றன.

1658 முதல் 1662 வரை நிர்வாகியாக இருந்த சேம்பர்ஸ் இது பற்றி எழுதியுள்ளார். 1639ல் தாங்கள் ஆர்மகானில் இருந்த போது தாமர்ல ஜபா நாயுடு டேக்கு கடிதம் எழுதியதாகவும் அதில் தனது தந்தை சென்னப்ப நாயுடுவின் பெயரில் நகரம் ஒன்றை நிர்மாணித்திருப்பதாகவும் அவர்கள் விரும்பினால் இங்கு வந்து தங்கிக் கொள்வதற்கு ஏற்ப உத்தரவாதம் அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் ரிலேஷன் ஆஃப் ஸெவரல் பாஸேஜஸ் ஸின்ஸ் தி ஃபவுண்டிங் ஆஃப் தி டவுன் மதராஸ்படாம் எனும் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

இதில் மற்றொன்றும் அடங்கியுள்ளது. தாமர்ல சகோதரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கியதற்கும் மூன்றாவது ஸ்ரீரங்காவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று என்எஸ்ஆர் அறுதியிட்டு கூறுகிறார். ஏனேனில் அவர் 1642ல்தான் மகுடம் தரித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பந்தள ராமஸ்வாமி நாயுடு மெமோயிர் ஆன் தி இன்டர்னல் ரெவின்யூ சிஸ்டம் ஆஃப் தி மதராஸ் பிரசிடென்சி எனும் புத்தகத்தில் பெரி திம்மப்பா உதவியுடன் சென்னப்பட்டணம் உருவானது, தாமர்ல வெங்கடப்பா நாயக் தனது தந்தையின் பெயரில் நகரம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியது போன்ற தகவல்கள் ஏற்கத்தக்கவையல்ல என்று தரவுகளுடன் ராமஸ்வாமி எழுதுகிறார்.

அவ்வாறே மதராஸ்பட்டணம் என்பதும் ஏற்கனவே இருந்திருக்கிறது. 1639ல் நாயக்கினால் டேக்கு வழங்கப்பட்ட ஃபிர்மான் தெள்ளத் தெளிவாக மதராஸ் பட்டணம் என்று குறிப்பிடுகிறது. 1639 செப்டம்பர் 5 அன்று மசூலிப்பட்டணத்திலிருந்து எழுதப்பட்ட கடிதமொன்றில் புலிகட்டிற்கும் சாந்தோமிற்கும் இடையில் உள்ள துறைமுக நகரம் மதராஸ்பட்டணம் வெங்கடாத்திரி நாகுவிற்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டு நாட்களுக்குப் பின்னர் டே தான் எழுதிய கடிதமொன்றில் மதராஸ் பட்டணம் என்றே குறிப்பிட்டுள்ளார். இதே போன்ற சூரத்திற்கு மசூலிப்பட்டணத்திலிருந்து 1639 அக்டோபர் 25 அன்று எழுதிய கடிதமொன்றில் சாந்தோமிற்கு அருகில் மதராஸ்பட்டணம் என்றொரு இடமிருப்பதாகவும் அங்கே மிகச் சிறப்பான அல்லது கடற்கரையோரத்தில் உள்ள மற்றைய இடங்களைப் போன்று வண்ணத் துணிகள் கிடைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே 1640க்கு முன்னரே மதராஸ்பட்டணமும், சென்னப்பட்டணமும் இங்கே இருந்திருக்கிறது, இதில் சென்னப்பட்டணம் என்பது பின்னாளில் உருவாகியிருக்கிறது. மதராஸ்பட்டணம் குறித்து எழுத்து பூர்வமான தரவுகள் எதுவும் இல்லையென்றாலும் அது மிகப் பழமையானது என்பதோடன்றி சென்னப்பட்டணத்திற்கு முன்னரே உருவானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

தற்போதைய முனிசிபல் டிவிஷன்களாக விளங்கும் முத்தியால்பேட்டையும் பெத்துநாயக்கன் பேட்டையும் சென்னப்பட்டணத்தின் மையமாகவும், மதராஸ்பட்டணம் என்பது சென்னப்பட்டணத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் அமைந்திருந்திருக்கிறது. தோரயமாக சொல்ல வேண்டுமென்றால் கோட்டைக்கும் உயர்நீதிமன்றத்திற்கும் இடைப்பட்ட பகுதியையும் மேற்கிலும் வடமேற்கிலும் சிற்சில விரிவாக்கங்களையும் மதராஸ்பட்டணம் கொண்டிருந்திருக்கிறது.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் - 6 (History of the Madras City) | தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras) | சென்னையின் வரலாறு

மதராஸ்பட்டணத்தின் பெயரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஐரோப்பியரும் தங்கள் வாய்க்கு வந்தபடி எழுதியிருக்கின்றனர். மெட்ராஸ்படாம், மதராஸ்படாம், மத்ராஸ்படன் மத்ரெஸ்படாம் மெட்ரெஸ்பட்ணம் மட்ராஸ், மடிராஸ் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டு வந்திருப்பது பெயர் குழப்பத்திற்கான காரணியாகவும் இருந்து வருகிறது. பந்தள ராமஸ்வாமி பெயர் காரணத்திற்காக மந்த்ரசென் என்னும் மீனவர் தலைவன் பற்றிய கதையை கூறியுள்ளார். மதராஸ் பட்டணத்திற்கு அருகில் உள்ள பகுதியில் கோட்டை கட்டிக் கொள்ள ஃபிர்மான் அனுமதித்ததிலிருந்தே ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னரே மதராஸ் பட்டணம் இருந்தது தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. அவ்வாறே மயிலையில் புதைக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர் மானுவேல் மத்ரால் அவர்களின் சமாதி 1927ல் கண்டெடுக்கப்பட்டது. இவர் பெயரை நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமம் கொண்டிருக்க வாய்ப்பில்லை. இன்னொன்று மதராஸா எனும் அரபி பள்ளிகளிலிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படுவது. விஜயநகரப் பேரரசுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கிருத்துவர்களின் கோட்டைக்குள் மதராஸா உருவாவதற்கு சாத்தியமே இல்லை.

பெர்ஷிய வரலாற்றுக் குறிப்பொன்றில் பூந்தமல்லி தாலுகாவிற்குட்பட்ட மக்ராஸ்குப்பம் என்று அழைக்கப்பட்ட பகுதியை டே தேர்வு செய்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் நாட் குறிப்புகளில் சென்னப்பட்டணம் சென்னகேசவபுரம் என்பது சென்ன கேசவ பெருமாளின் பெயரினை கொண்டிந்ததது என்று காணப்பட்டாலும் அவை நூறாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெயர் குறித்த இச்சர்ச்சையில் பிரயோசனம் ஏதுமில்லை என்று கர்னல் லவ் குறிப்பிட்டுள்ளதாக என்எஸ்ஆர் இப்பகுதியை நிறைவு செய்கிறார்.

ஃபிரையரின் நிலப்பரப்புப் படம் 1673ல் வெளியானது. அதிலிருந்து கோட்டையின் அமைப்பினை அறிந்து கொள்ள முடிகிறது. நாற்புறமும் கொத்தளங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு திறந்த வெளியாக உள்ளது. கூவம் கரை அமைந்திருக்கிறது. தெற்குச் சுவரையொட்டி எவரும் பிரவேசிக்க முடியாதபடி அகழி தோண்டப்பட்டு அதில் தண்ணீர் நிரம்பியிருந்தது. வடக்குச் சுவரில் இரு வாயில்கள் . கோட்டைக்குள் ஐரோப்பியர்கள் மட்டுமே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள், ஆயினும் வடக்குச் சுவற்றையொட்டிய பகுதியில் இந்தியர்கள் வீடுகளை கட்டிக் கொண்டனர். இது கோட்டைப் பகுதிவரை பின்னாளில் விரிவடைந்தது.

கோட்டை கட்டுவதற்காக ரெட்ஹில்ஸிலிருந்து சிவப்பு கப்பிக் கல் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 1666ல்தான் கோட்டைப் பணிகள் முழுமையடைந்திருக்கிறது.
கோட்டைக்கு அருகாமையில் குடியிருப்போருக்கு முப்பதாண்டுகளுக்கு எவ்வித சுங்கமும் கிடையாது என்று பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் குடியேறியோர் தொகை அதிகரித்திருக்கிறது. 1641ல் டச்சு நிறுவனம் அப்பகுதியில் 15 முதல் 20 மீனவர்களின் குடிசைகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் வீடுகளின் எண்ணிக்கை 70 முதல் 80 வரை இருந்தது. சாந்தோமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளவர்கள் தங்கள் வர்த்தகம் வீழ்ச்சியுற்று வருவதாக கூறி மதராஸ்பட்டணத்தில் குடியேறினர். அன்னாளில் 300 முதல் 400 வரை கைவினைஞர்கள் இப்பகுதியில் இருந்ததாக சூரத் நிர்வாகம் மதிப்பிட்டிருந்தது.

கோட்டை கட்டும் பணிகளில் சுணக்கம் இருந்தது. சூரத்திற்கும் இங்குள்ளவர்களுக்கும் இணக்கம் இல்லை. செலவினங்கள் அதிகரித்தது வந்தது. தொகையை பெறுவதற்காக டே சூரத் சென்றார். துணி வாங்கியதில் முறைகேடு என்ற குற்றச்சாட்டின் பேரில் 1641 ஜூலையில் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு 1642 ஜூலை 6 அன்று அவர் மதராஸ்பட்டணத்திற்கு திரும்பி வந்தார்.

கோகனும் டேயும் இந்தியாவில் உள்ள மற்ற தளங்களுக்கு மாற்றாக மதராஸ் பட்டணம் விளங்கும் என்றும் வர்த்தக ரீதியில் சாத்தியம் என்றும் உறுதிபட கூறிவந்தபோதும் நிர்வாகம் இவற்றை காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் 1641 செப்டம்பர் 24 அன்று கிழக்கு கடற்கரையில் முக்கியத்துவம் வாய்ந்த ஃபாக்டரியாக மதராஸ் அறிவிக்கப்பட்டது. மசூலிப்பட்டணத்திலிருந்து கோகன் இங்கே மாற்றப்பட்டார்.

கோட்டை கட்டி முடிந்தபாடில்லை. 1642 செப்டம்பர் 20 அன்று மதராஸில் உள்ளவர்கள் பாண்டமிற்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி கடிதமொன்றை எழுதியிருந்தனர். கோகன் இதற்கு தான் மட்டுமே பொறுப்பு என்று கூறப்படுவதை மறுத்தார். டேயிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பாண்டம் செல்ல விரும்பியதோடு புதிய ஏஜெண்டை நியமிக்கவும் கோரினார். ஆயின் இது நிகழவில்லை.

நிர்வாகிகள் மத்தியில் வழக்கம்போல் பரஸ்பரம் குற்றச்சாட்டும் சச்சரவும் இருந்து வந்தது. கோகன் பிரிட்டன் திரும்பிய போது மார்ச் 1639 முதல் 1643 ஜூன் 30 வரை கோட்டையின் பொருட்டு செலவு செய்த புதிய பகோடா 9250 குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. கோகன் இந்தியாவில் நிர்வாகிகள் மட்டத்தில் நிலவிவரும் மோதல்களையும் செலவின அதிகரிப்புக்கான காரணிகளையும் விவரமாக விளக்கியதன் பேரில் குழுவினர் 1645 மே 13 அன்று அவரை விடுவித்தனர்.

1643 ஆகஸ்ட் 27 முதல் 1644 ஆகஸ்ட் 4 வரை மதராஸில் ஏஜெண்டாக இருந்த டே ஓராண்டிற்குப் பின்னர் ஐவியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பிரிட்டனுக்கு திரும்பினார். 1644 ஜனவரியில் மாறிய சூழலில் கோட்டைக்கு பாதுகாப்பில்லை என்றும் டச்சுக்காரர்கள் அச்சுறுத்தக்கூடுமென்றும் பாண்டமிற்கு இங்கிருந்து கடிதமொன்று அனுப்பப்பட்டது. இடையில் டச்சுக்காரர்களுக்கும் உள்ளூர் வர்த்தகர்களின் படைகளுக்கும் மோதல். டச்சுக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆங்கிலேயே வர்த்தகர்கள் வாங்கியதோடு கோட்டைக்கும் எடுத்துச் சென்றனர். டச்சுக்காரர்கள் இதற்கு எதிராக கிளர்ந்தனர். இந்தப் பின்னணியில் ஹென்றி கிரீன்ஹில் மதராஸ் பட்டணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1646 ஜனவரி 21 அன்று கிரீன்ஹில் பொறுப்பேற்றதாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டது, அதற்கு முன்னர் அவர் வேலூர் சென்று மன்னரை சந்தித்தார். மன்னர் ஏற்கனவே தாமர்ல வெங்கடபதியின் ஃபிர்மானை உறுதி செய்யும் வகையில் 1645 நவம்பர் 15 தேதியிட்ட கடிதமொன்றை வழங்கினார். அக்கடிதமே முக்கியத்துவம் வாய்ந்தது இருப்பினும் அவற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவற்றை பார்ப்போம்.

ஆர்மகானை விட்டு வெளியேறி ஸ்ரீரங்க ராயபட்டணம் எனும் எனது நகரத்திற்கு தாங்கள் வந்து அங்கே கோட்டையொன்றை கட்டியயோடு துறைமுகத்தில் வர்த்தகத்தையும் நடத்தி வந்தீர்கள். எங்கள் பெயரைக் கொண்டிருக்கக்கூடிய இந்த நகரத்திற்கு பெருமை சேர்த்தமையால் உங்கள் கம்பெனி வாங்கக்கூடிய அல்லது விற்கக்கூடிய பொருட்கள் அனைத்திற்கும் சுங்கம் எதையும் அளிக்கத் தேவையில்லை என்பதை உறுதி செய்கிறோம்.

உங்கள் வர்த்தகத்தை சிறப்பாக நிர்வகிக்கும்வகையில் இந்நகரத்தின் நிர்வாகத்தையும் நீதி வழங்கலையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம். பூந்தமல்லியில் உள்ள உங்கள் அயலார் எவரேனும் உங்களை காயப்படுத்தினால் நாங்கள் உங்களுக்கு உடனடியாக உதவியளிப்போம் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறோம்.
இந்நகரத்திற்கான எங்களது பாதுகாப்பு தொடரும் என்பதோடு பூந்தமல்லி நிர்வாகம் அல்லது வேறு எந்த நாகுவின் ஆளுகைக்குள்ளாகாது என்பதையும் உறுதி செய்கிறோம். தவிர உங்களது சரக்குகள் பூந்தமல்லி நாட்டின் வழியாகச் செல்கையில் சுங்கத்தில் பாதி செலுத்துவதற்கும் உத்தரவிடுகிறோம்.

இறுதியாக ஸ்ரீராமா என்று கையொப்பமிடப்பட்டுள்ள இக்கடிதத்தின் கடைசியில் இந்நகரத்தின் வாயிலும், இந்த கௌலும் சூரியன் சந்திரன் உள்ளவரை உறுதியுடன் இப்புவியில் நிற்கும் என்பது நிச்சயம் அட்சர லட்சம் பெறத்தக்கவைதான்.

கிரீன்ஹிலை வேலூருக்கு அனுப்பி வைப்பதற்கு முன்னர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நிர்வாகம் மேலும் பல பகுதிகளைக் கோரியது, ஜெனரல் ஹாஸ்பிடலையும் சென்டிரலையும் உள்ளடக்கிய நரி மைதானம் என்ற அழைக்கப்பட்ட அப்பகுதி பின்னர் ஹாக்ஸ் ஹில் என்ற பெயரினைக் கொண்டது.

இக்கௌலில் மற்றொரு வினோதமும் அடங்கியுள்ளது. ஸ்ரீ ரெங்க ராயபட்ணம் எனது நகரம் என்று ஸ்ரீரங்கா குறிப்பிட்டுள்ளார். கோட்டை கட்டி இரு ஆண்டுகளுக்குப் பின்னர் நகரத்தின் பெயரை தன் பெயரில் அவர் மாற்றியிருக்கிறார். தாமர்ல வெங்கடபதி தனது எதிரியாகிவிட்டபடியால் அவர் தந்தையின் பெயரில் நகரம் இருப்பதை ஸ்ரீரங்கா விரும்பாதிருக்கக்கூடும். ஆனாலும் புதிய பெயர் எடுபடவில்லை.

1647ல் மதராஸ்பட்டணத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. கோட்டையிலுள்ளோர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியவில்லை. பஞ்ச நிவாரணமாக சூரத்திலிருந்து ஒரு கப்பலில் தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ‘

1658ல் போர் நிலவி வந்த சூழலில் பிரிட்டன் மதராஸை கிழக்கிந்திய கம்பெனியின் முக்கியத்துவம் வாய்ந்த தளமாக அறிவித்தது. சோழமண்டலக் கடற்கரையிலும் வங்காளத்திலும் உள்ள தளங்கள் இதற்கு அடுத்த நிலைக்கு வந்தன.

தக்காணத்தில் பதினேழாம் நூற்றாண்டில் நிலவி வந்த சூழல் தளங்களை உருவாக்கி செயல்பட்டு வந்த ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. அவர்களின் அரசியல் செயல்பாடுகள் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உருவாயின. அதுவும் 1746ல் அடையாற்றில் நடந்த போரில் சிறியதொரு பிரெஞ்சுப் படை, கர்நாடக நவாப்பின் பெரும்படையினை தோற்கடித்தது இதன் தோற்றுவாயாக அமைந்தது.

மதராஸின் உருவாக்கம் தொட்டு 1687 ல் கோல்கொண்டா பேரரசின் வீழ்ச்சி வரையிலான இடைக்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் ஆட்சி மாற்றங்கள் நேரிட்டன. 1565ல் நடைபெற்ற தல்லிகோட்டா போருக்குப்பின் ராணுவ நடவடிக்கைகள் மையம் கொண்டன. விஜயநகரப் பேரரசு, மொகலாயர்கள், மராட்டியர்கள் ஆகியோர் இதில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தனர். 1687ல் அவுரங்கசீப் தக்காணத்தில் வெற்றி கொண்டதோடு கோல்கொண்டாவையும் கைப்பற்றினார். இத்தகைய நிகழ்வுகள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஆங்கிலேயர்களையும் பாதித்தது. இருப்பினும் இந்திய மன்னர்கள் மிகவும் பலவீனமடைந்தனர்.

முதலாவது ஸ்ரீரங்காவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாவது வெங்கடாவின் காலத்தில் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் சோழமண்டலத்தில் தங்கள் தளங்களை அமைக்கத் துவங்கினர். 1614ல் அவர் இறப்புக்குப் பின்னர் டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் மசூலிப்பட்டணத்திற்கு வந்தனர். போதுமான வளங்களைக் கொண்டிருந்த டச்சுக்காரர்கள் 1608ல் கடலூருக்கு அருகாமையில் தேவனாம்பட்டினத்திலும் 1610ல் பழவேற்காட்டிலும் தளங்களை உருவாக்கிக் கொண்டனர். டேனிஷ்காரர்கள் 1621ல் தரங்கம்பாடிக்கு வந்தனர். உள்நாட்டுப் போரும் இரண்டாவது வெங்கடாவின் மரணமும் விஜயநகரப் பேரரசை முற்றிலுமாக அழிவுக்குள்ளாக்கியது. வாரிசுகளுக்கிடையிலான உள்நாட்டுப் போர் குழப்பத்தை ஏற்படுத்தியது, இத்தருணத்தில்தான் ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டணத்திற்கு வந்தனர்.

இப்பகுதியில் அன்னாளில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரை விவரமாகவே என்எஸ்ஆர் எடுத்துரைக்கிறார். மதராஸ் பட்டணம் உருவாக்கத்தில் அன்றைய சூழலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியதை அதன் வாயிலாக நாம் அறிகிறோம்.

இந்திய வரலாற்றின் பெரும்பாலானோர் நிழல் உருவங்களே. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்திட முடியவில்லை. மேலும் அவர்களைப் புகழ்ந்து பாடுவோர் உபயோகமற்றவர்கள் என்பதைக் காட்டிலும் மோசமானவர்கள். ஒரு சில ஜில்லாக்களை ஆட்சி செய்து வரக்கூடிய இவர்களை மூவுலகங்களின் அதிபர் என்றோ அல்லது முழுமையான மனிதர்களுக்கு தேவையான அனைத்து குணங்களையும் கொண்டிருப்பவர்களாக சொல்வதோ உத்வேகம் அளிக்கப்போவதில்லை வார்த்தைகளைக காட்டிலும் செயல்பாடுகளே உரக்கப் பேசுகின்றன. தவிர அவர்களின் செயல்பாடுகளின் வாயிலாக அவர்களின் ஆளுமையினை மதிப்பீடு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உண்மையான வரலாற்றுத் தரவுகள் கிடைப்பது அரிதாக இருப்பதால் பண்டைய இந்தியப் பேரரசர்கள் ஊதிப் பெருக்கிய பொம்மைகளாய் இருந்து வருகிறார்கள்.

ராமஸ்வாமியின் மதிப்பீடு முடியரசுக்குப் பின் குடியரசிலும் பொருத்தப்பாடு கொண்டதாகவே இருந்து வருகிறது என்று சொல்ல முடியும். இப்பகுதியில் மதராஸ்பட்டணம் உருவாக்கத்தில் பங்களிப்பினைக் கொண்ட நான்கு மனிதர்களைப் பற்றி என்எஸ்ஆர் விவாதிக்கிறார்.

தாமர்ல சகோதரர்கள் தங்கள் தந்தை சென்னப்பாவிடமிருந்து வாரிசுரிமையைப் பெற்றிட்டவர்கள். தங்களது தந்தையின் நினைவினைப் போற்றும்வகையில் தாங்கள் உருவாக்கிய நகருக்கு அவரது பெயரை சூட்டினர். வெங்கடபதி தனது மைத்துனர் மூன்றாவது வெங்கடாவின் பிரதிநிதியாக இப்பேரரசினை நிர்வகித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கிடையிலான மோதலில் அதிகாரத்தை இழந்த வெங்கடபதி மைத்துனரால் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். அய்யப்பா ஒரு சிறிய பகுதியான பூந்தமல்லியில் ஆட்சி செய்திருக்கிறார். 1670ல் ஸ்ரீரங்காவின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஈரோட்டில் நடைபெற்ற போரில் தலைமை தாங்கி மரணமடைந்தார்.

தாமர்ல சகோதரர்கள் குறித்து நாம் அறியக் கூடிய செய்திகளின் சாரம் இதுவே. இப்பிராந்தியம் வளமிக்கதாய் திகழவேண்டும் என்ற ஆவலின்பேரில் இவர்கள்தான் ஆங்கிலேயேர்களை அழைத்தனர். பழவேற்காட்டில் உள்ள டச்சுக்காரர்களும் சாந்தோமில் இருக்கக்கூடிய போர்ச்சுக்கீசியர்களும் மோதலில் ஈடுபடுவதை விரும்பவில்லை. எனவே தான் ஆங்கிலேயர்களின் புது நகர முயற்சிக்கு ஆதரவும் அளித்தனர். ஆனால் அது விரும்பிய பலனை அளிக்கவில்லை.
ஆண்ட்ரூ கோகனும் ஃபிரான்சிஸ்டேயும் ஆங்கிலேயர்களின் கடிதப் பரிவர்த்தனையில் உயிர்த்தெழுகின்றனர். பிரிட்டனின் உயர் அதிகாரி ஒருவரின் மருமகனான அவர் 1615ல் கிழக்கிந்திய கம்பெனியில் இணைந்து பாண்டம் தளத்தில் பணிபுரிந்து வந்தார். பல குற்றச்சாட்டுகளின் பேரில் 1629 அல்லது 1630 வாக்கில் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு 1638ல் சூரத் நிர்வாக சபையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மசூவிப்பட்டணத்தில் அவருக்கும் ஐவிக்கும் சச்சரவு இருந்து வந்தது. கோகன் மோதலை விரும்பாதவராக இருப்பினும் தன் உரிமையை விட்டுத்தராதவராகவே இருந்திருக்கின்றார்.

ஃபிரான்சிஸ் டே கோகனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர். சொந்த வியாபாரம் செய்வதான குற்றச்சாட்டு இவர்மீதும் இருந்தது. நகரத்தை நிர்மாணித்ததில் இவர் கொண்டிருந்த பங்கின் அடிப்படையில் வரலாற்றில் இடம் பெற்றார். ஆர்மகானிலிருந்து மதராஸ்பட்டணத்திற்கு வந்தது என்பது இவரது விடா முயற்சியின் விளைவுதான்.

தாமர்ல சகோதர்களைப் போன்று உயர்நிலையில் இல்லாத வேறு இருவரும் மதராஸ்பட்டண வரலாற்றில் பங்காற்றலை கொண்டிருக்கின்றனர் என்கிறார் என்எஸ்ஆர். பெரி திம்மப்பா பாலகோலிலிருந்து வந்தவர். ஆங்கிலேயர்களுடனான பேச்சு வார்த்தையில் இவர் உதவி செய்தார் என்று இவரது பரம்பரையைச் சார்ந்தோர் கூறி வருகின்றனர். இதைக் கடந்து இவரைப் பற்றிய செய்திகள் பெரிய அளவில் இல்லை.

பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சேஷாத்திரி நாகு பெரும் பங்காற்றலை கொண்டவராக விளங்கியவர். மதராஸ்பட்டணத்தில் கம்பெனியின் முதல் வர்த்தகர் அவர்தான். பல ஆண்டுகள் திருப்திகரமான நடவடிக்கையினை கொண்டிருந்தாலும் கடனாளியானதால் ஐவி நிர்வாத்தில்தான் இவர் தகுதியிழந்தார்.
இவர்களைத் தவிர வேறு சில இந்தியரும் மதராஸ்பட்டணத்தின் துவக்க கால வரலாற்றில் இடம் பெற்றிருக்கக்கூடும். ஆயின் கிடைக்கக்கூடிய வரலாற்று ஆவணங்கள் அவர்களைப் பற்றி ஏதும் எடுத்துரைக்கவில்லை என்று என்எஸ்ஆர் நிறைவு செய்கிறார்.

இச்சிறு நூல் வாயிலாக பல்வேறு தகவல்களை நாம் அறிகிறோம். வெள்ளக்காரன் வந்த பின்னரே மதராஸ் பட்டணமும் சென்னப்பட்டணமும் வந்தது என்று இன்றும் பலரும் சொல்லி வருகின்றனர். தவிர அவர்கள் நேரடியாக பொருட்களை வாங்குவதற்கு தோதாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த கடற்கரைப் பட்டணத்தை தேர்வு செய்ததாக வரலாற்றாசிரியர்களும் எழுதி வருகின்றனர்.

ஆயின் என்எஸ் ஆர் இக்கூற்றுகளில் கடுகளவும் உண்மையில்லை என்பதை வரலாற்றுப் பின்னணியில் தரவுகளோடு நிறுவியுள்ளார்.

எழுதியவர் : 

– ராமச்சந்திர வைத்தியநாத்

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்:- ஹிஸ்டரி ஆஃப் தி ஸிட்டி ஆஃப்  மதராஸ் – 5 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *