சென்னை மாநகர் (Chennai Maanagar)
சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் – 7
– ராமச்சந்திர வைத்தியநாத்
இன்றும் கூட சென்னப் பட்டணம் பற்றிய தமிழில் வெளியிடப்பட்டுவரக்கூடிய வரலாற்றுப் பதிவுகள் யாவுமே பெயரளவில் முந்திய கிராமங்களின் இணைப்பில் பட்டணம் உருவானதை குறிப்பிட்ட போதிலும், கிட்டத்தட்ட 1639ல் கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் உத்யோகஸ்தர் ஃபிரான்சிஸ் டே மதராஸ் பட்டணத்தில் கால் பதித்திலிருந்து துவங்கி, காலனீய ஆட்சி முடிவுக்கு வந்தது வரையிலான நிகழ்வுகளையே கொண்டிருக்கிறது. ஆயின் முதன் முதலாக சென்னைப் பட்டணம் பற்றிய வரலாறு அதுவும் தமிழில் வெளியானதோடன்றி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பின்னாளில் பட்டணத்தோடு இணைக்கப்பட்ட கிராமங்களின் அமைப்பு முறையின் விரிவான பின்னணியில் நாட்டு விடுதலைக்குப் பின்னர் நிர்வாகம்,கட்டமைப்பு, தொழில், பண்பாட்டியல் போன்ற அனைத்து துறைகளிலும் பட்டணம் வளர்ச்சி பெற்று வருவதோடு, மதபேதமற்ற மாநகராகவும் இருந்து வருகிறது என்பதை விரிவாக எடுத்துரைத்த முதலும் முன்னோடியுமான நூல்தான் மா.சு.சும்பந்தன் எழுதிய சென்னை மாநகர். இந்நூலை ஒருமுறை படிப்பதன் மூலம் சென்ற 350 ஆண்டுக்காலப் போக்கை மின்னல் வேகத்தில் உணர்ந்து கொள்ள முடியும் என்று பின்னட்டை அறிமுகம் எடுத்துரைப்பது உண்மையே.
சிறந்த பேச்சாளர்கள், திருச்சி விஸ்வநாதம், அச்சுக்கலை, திருவிக, அச்சும் பதிப்பும், தமிழ்ப் பத்திரிகைகள் போன்ற வித்தியாசமான நூல்களை லிங்கிச் செட்டித் தெரு எண் 243ல் உள்ள தனது தமிழர் பதிப்பகம் வாயிலாக பதிப்பித்துள்ள மா.சு.சம்பந்தன் அரசியல் செயல்பாட்டாளராகவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர் வரலாற்றுப் புத்தகம் 1955ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த கட்டத்தில் 1978 ஆகஸ்டில் புத்தகத்தின் பிற்பகுதி பலவித மாறுதலுக்கும் விரிவுக்கும் உள்ளாகிய இரண்டாம் பதிப்பினை சென்னை மில்லத் அச்சகம் அச்சிட்டுள்ளது. இந்த இடைக்காலத்தில் மா.சு.சம்பந்தன் அவர்கள் 1959ல் 20வது வட்டம் கச்சாலீஸ்வரர் வட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றதோடன்றி, சென்னை மாநகராட்சியின் கல்வி நிலைக் குழுவின் உறுப்பினராகவும், மாநகராட்சியின் சார்பில் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். இவற்றை அவரே முன்னுரையில் குறிப்பிடவும் செய்துள்ளார். ஆயினும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்பாடுகளை கொண்டிருந்ததன் அடிப்படையில் இப்பொறுப்புகளையும் பதவிகளையும் கொண்டிருந்ததை ஏனோ வெளிப்படுத்தத் தவறியுள்ளார்.
எட்டாம் வகுப்பில் பயிலுகையில் கா.நமசிவாய முதலியாரின் தமிழ்க் கடல் வாசகம் எனும் பாடநூலில் அமைந்துள்ள சென்னைப் பட்டினம் எனும் கட்டுரை சென்னையின் பெருமையையும் வரலாற்றையும் அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுந்ததையும், பின்னாளில் ஆனந்தவிகடனில் நாடோடி எழுதிய சென்னை ஆஸ்ப்பத்திரிகள் என்றகட்டுரைத் தொடர் மேலும் இத்திசையில் உத்வேகம் அளித்ததையும் முன்னுரையில் தெரிவித்துள்ளார். பட்டினம் பற்றிய தகவல்கள் பள்ளிப்பாட புத்தகங்களில் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே இடம் பெறத் துவங்கிவிட்டதையும் பின்னரே பத்திரிகைகளில் பத்தி எழுத்துக்கள் வெளியிடப்படத் துவங்கியுள்ளதையும் இச்செய்தி வெளிப்படுத்துகிறது.
மாநகராட்சியின் உறுப்பினராக நூலாசிரியர் இருந்தமையால் முன்னுரையில் அக்கறையுடன் குறிப்பட்டுள்ள மற்றொரு தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னரும் இவை ஏற்கத்தக்கதாக தொடர்வது ரிப்பன் மாளிகை நிர்வாகிகளுக்கு பெருமையளிப்பதாக இருக்க முடியாது.
சென்னை மாநகராட்சியின் பரப்பும் விரிந்துள்ளது; பொறுப்பும் அதிகரித்துள்ளது; மாநகராட்சியின் வருவாயும் நிர்வாகச் செலவும் அதிகரித்துள்ளன, ஆனால் குடிமக்களுக்கு முன்னைப்போல அவசியமான தேவைகளை அன்றாடம் கவனிப்பதில் அக்கதை குறைந்து வருவதாகப் பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். இக்குறையைச் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகக் களைந்தெறிவார்களாக!
தெருக்களை துப்புரவாக வைத்திருத்தலும், குடிநீர் வழங்கலும், உடல்நலம் பேணுதலும் கல்வி பொழுதுபோக்கு முதலிய வசதிகளைச் செய்துதரலும் மாநகராட்சியின் நீங்காக் கடமையாகும். மாநகராட்சியின் நிர்வாகிகளும் வரி செலுத்துவோரும் நன்று பொறுப்புடன் நடந்து கொண்டு நகரைச் சிறக்கச் செய்யத் துணை புரிவார்களாக!
எப்படியிருப்பினும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அல்லாத சர்வகட்சி மஸ்டர் ரோல் ஊழல் மாநகராட்சியில் வெளிப்பட்ட பின்னர் இது எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
ஏறக்குறைய 300 பக்கங்கள் அளவில் தோற்றுவாய், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம், சுற்றுப் புறத்து ஊர்கள், 15-16ம் நூற்றாண்டில் சூழ்நிலை, ஆங்கிலேயர் வருகை, ஆட்சிக் காலம், நகர வளர்ச்சி, சென்னையின் சிறப்பு எனும் ஒன்பது அத்தியாயங்களில் இதில் ஆங்கிலேயர் வருகைக்குப் பிந்திய ஆட்சிக் காலம் 92 பக்கங்கள் அளவிலும் நகர வளர்ச்சி 78 பக்கங்கள் அளவிலும் ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கிறது.
சென்னை மாநகர் வரலாற்றில் கூறப்படும் கற்கால உலோகக் காலத்தில் இரும்புக் கால மனிதரைப் பார்த்திருக்கிறது என்ற தகவலும் பல்லாவரம் புதைகுழி கல் வட்டமும் கீழ்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியும் சென்னப்பட்டணமென்பது ஏனோ தானோவென கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பட்டிணமல்ல என்பதை உறுதிபட நிறுவுகிறார்.

தென்பெண்ணைக்கும் வட பெண்ணைக்கும் இடைப்பட்ட தொண்டை நாடு பின்னாளில் புழல், ஈக்காடு, மணவில், செங்காடு, பையூர், எயில், தாமல், ஊற்றுக்காடு, களத்தூர், செம்பூர், ஆம்பூர், வெண்குன்றம், பல்குன்றம், இளங்காடு, காலியூர், செங்கரை, பழுவூர், கடிகூர், செந்திருக்கை, குன்றவர்த்தனம், வேங்கடம், சேத்தூர், வேலூர், புலியூர் ஆகிய 24 கோட்டங்களாகவும் 77 சிறு சிறு உள் நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அறியமுடிகிறது. தற்போதைய சென்னப்பட்டணம் புழல், புலியூர், மணவில் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கியிருந்தது என்பதை வரலாற்றுக் காலம் வாயிலாக அறிய முடிகிறது.
புழல் கோட்டத்திற்குள் ஞாயிறு, ஆகுதி (ஆவடி), ஆத்தூர், எழுமூர் ஆகிய உள்நாடுகளும் (பின்னாளில் கிராமங்களாயின) புலியூர் கோட்டத்தின் கீழ் குன்றத்தூர், போரூர், மாங்காடு, அமரூர், கோட்டுர் என்பனவும் மணவிற் கோட்டத்திற்குள் பஷலை, இளத்தூர், கொன்னூர், புரிசை, பெரம்பூர் என்பனவும் அடங்கும். 24 கோட்டங்களில் ஒன்றான புழல் கோட்டத்திற்குட்பட்ட எழுமூர் நாடு பெரியது என்றும் அதன் தலைநகர் எழுமூர் என்பதும் சேற்றுப்பட்டு இந்நாட்டை சேர்ந்தது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆர்மர்ட் வெஹிகிள்ஸ் அண்ட் அம்யூனிஷன் டெப்போ ஆஃப் இந்தியா என்பதன் பெயர்ச் சுருக்கமே ஆவடி என்றும், ஆங்கிலேயேர்கள் பெற்ற ஏழாவது ஊர் என்பதால் எழுமூர் என்றும், செட்டியார்கள் குடியேறியமையால் செட்டியார்பேட்டையே சேத்துப்பட்டு என்றாகியது என்றும் போகிற போக்கில் பிதற்றிவரும் பேர்வழிகள் இதை அவசியம் படித்திட வேண்டும்.
சென்னப்பட்டணத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் ஆங்கிலேய வருகைக்கு முன்னரே பெயர்பெற்றது என்பதோடு பாடல் பெற்றதும் ஆகும். சைதையில் ரோசனப்பாக்கம் என்ற பெயரில் ஒரு சிற்றூர் ஒன்றும் இருந்திருக்கிறது என்பதை சம்பந்தம் விசேஷமாக குறிப்பிட்டுள்ளார்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உருவான பின்னர் முப்பது ஆண்டுகள் வரை இங்குக் குடியேறியவர்களுக்கு வேண்டிய உணவு, துணி, மதுவகை மீது சுங்கமோ வரியோ வசூலிப்பது கிடையாது என்று பறைசாற்றப்பட்டதன் அடிப்படையில் இந்திய நெசவாளிகள் தொழிற் கம்மியர்கள் வர்த்தகர்கள் ஆகியோர் அடங்கிய 300 லிருந்து 400 குடும்பங்கள் வரை கோட்டைக்கு வடபுறத்தில் குடியேறிய செய்தி ஒரு பட்டின உருவாக்கத்திற்கு முதல் தேவை உழைப்பாளி மக்களின் குடியேற்றம் என்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது.
எல்லா சென்னைப்பட்டண வரலாற்றுப் புத்தகங்களிலும் காணப்படுவதைப் போன்று பெயர்க்காரணம் பற்றிய விவாதமும் நிச்சயமற்ற நிலையும் இதிலும் காணப்படுகிறது. தற்போது உயர்நீதிமன்றம் உள்ள இடத்தில் சென்னைப் பட்டினம் என்றொரு நகரம் இருந்தது என்று டாக்டர் மா.இராஜமாணிக்கனார் தமது தமிழ் நாட்டு வட எல்லை என்ற நூலில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளதை சம்பந்தம் இங்கே முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் முன் வைத்துள்ளார்.
ஆங்கிலேயர் வருகை எனும் அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் 1646 செப்டம்பர் முதல் 1647 ஜனவரி வரையில் தென்னாட்டில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினால் சென்னையில் மட்டும் 3,000 பேரும் பழவேற்காட்டில் 15,000 பேரும் இதே அளவில் சாந்தோமிலும் மக்கள் மடிந்தனர் என்ற செய்தி பின்னாளைய அதிகாரப் போக்கிற்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது. அதிகப் பக்கங்களைக் கொண்ட ஆட்சிக் காலம் எனும் அத்தியாயத்தில் சம்பந்தம் ஏராளமான தகவல்களை அளிக்கின்றார் என்றே கூறமுடியும்.

ஆங்கிலேயேர் ஆட்சியை முகவர் ஆட்சி, ஆளுநர் ஆட்சி, நேரடியாட்சி, இரட்டையாட்சி, மாகாணத் தன்னாட்சி, ஆலோசகர் ஆட்சி என ஆறு வகையாக பிரிக்கலாம்,
1668ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வீட்டு வரி விதிப்பு சம்பந்தமாகப் பொது மக்களின் கருத்துக் கோரப்பட்டது, இதற்கு முன்பு 40 ஆண்டுகள் வரை எந்தவித வரியும் தராமல் வாழ்ந்து வந்த பொது மக்கள் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். சிறிது காலத்திற்கு ஒத்தி வைத்துப் பிறகு அமுலுக்கு வந்தது.
வலங்கை இடங்கை மோதல் 1708ல் துவங்கியது. 1716ல் மறுபடியும் தலைகாட்டவே கோட்டையிலுள்ள ஆட்சியாளர்கள் வினோத உத்தரவு ஒன்றை போட்டனர். கோயில் விழாக்களில் வலங்கை இடங்கை கொடிகளுக்கு பதிலாக சிலுவைக் கொடியைத்தான் பயன்படுத்த வேண்டும்.
1734ல் சுங்குராம செட்டியின் இடத்தில் நெசவாளர்க்கான கிராமமொன்று உருவாகியது. இப்பேட்டையின் முன்னாள் சொந்தக்காரரான சுங்குராமர் பெயரால் இங்கு ஒரு பார்ப்பனச் சேரியும் நூல் நிலையமும் இப்போதும் இருந்து வருகிறது. நகர வளர்ச்சி அத்தியாயத்திலும் பல சுவாரசியமான தகவல்களை சம்பந்தம் அளித்துள்ளார்.
நுங்கம்பாக்கம் ஏரி நீர் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், முதலிய இடங்களிலுள்ள தோட்டப் பயிருக்கும் நெற்பயிருக்கும் கால்வாய் மூலம் பாய்ச்சப்பட்டு வந்தது. இப்போது இது இடந்த இடத்தின் நடுவில் மாம்பலத்திற்கு பாதை போட்டிருக்கிறார்கள்; லயோலாக் கல்லூரியும் இன்னுஞ் சில புதிய கட்டிடங்களும் இதன் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளன.
1727ல் நகராண்மைக் கழகம் நீதி பரிபாலன உரிமைகளை கொண்டிருந்தது. இது 1856ல் நீக்கப்பட்டது. 1951ம் வருடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னையிலுள்ள சேரிகளின் மொத்தப் பரப்பு 1.5 மைல். இங்கு உறைவோர் எண்ணிக்கை 2,65,000. இது திருச்சிராப்பள்ளியின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமானதாகும்.
சென்னையின் சிறப்பு பற்றியும் சம்பந்தம் சிலாகித்து கருத்துக்களை கூறுகிறார். பல்வேறு பிரமுகர்கள் பெயரில் அமைந்த வீதிகளையும் பகுதிகளையும் பற்றி விவரணம் செய்கையில் வியாசர்பாடியில் தொழிற்சங்க தலைவர் பி.ஆர்.கே.சர்மா பெயரில் சர்மா நகர் உருவானது என்றுரைத்து நம்மை திகைக்கச் செய்கிறார்.
நகரத் தெருக்களின் பெயர்களை சுருக்கி அழைப்பதையும் குயவன் அருணகிரி தெரு என்பதை ஆங்கிலத்தில் KOZA என்று எழுதப் போய் பின்னர் கோஷா அருணகிரி தெரு என்று திரிக்கப்படுவதையும் கண்டனம் செய்கிறார்.
பிராட்வேயில் உள்ள லோன் சதுக்கத்தை கடன்காரர் சதுக்கம் என்று சம்பந்தம் அறிவிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இப்பெயரை அளித்திட்ட சாம்வேல் ஜோஷுவா லோன் அவர்கள் முனிசிபல் இன்ஜினியராக இருந்தவர். பாப்ஹாமில் இருந்த நெரிசலான மார்க்கெட்டை அகற்றி மூர் மார்க்கெட் உருவாவதற்கு காரணகர்த்த இவரே. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஒரு பேச்சுக்காக கூறுவதுண்டு. உண்மையிலேயே லோனுக்கு பதினான்கு குழந்தைகள் என்று லவ் எழுதியுள்ளதை இவர் கவனிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
சென்னை மாநகர் பல சமயயத்தினர்க்கும் போற்றத் தக்க இடமாக தலமாக ஊராகப் பெருமை பெற்றுள்ளது என்றும் சைவ, வைணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய, ஜைன, பௌத்த போன்ற பல சமயத்தினரும் ஒருங்கே ஏற்றிப் போற்றும் நல்லிடமாகவும் அமைந்துள்ளது என்றும் சம்பந்தம் கூறுவது சாலப் பொருத்தமே. அப்பண்பாட்டியலை ஓங்கி உயர்த்திப் பிடிக்கும் புத்தகம்தான் மா.சு.சம்பந்தத்தின் சென்னை மாநகர்.
எழுதியவர் :
– ராமச்சந்திர வைத்தியநாத்
சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்:- தி ஃபவுண்டிங் ஆஃப் மதராஸ் (The Founding of Madras)
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: ஜில்லா சரித்திரம் - சென்னப்பட்டணம்