சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் -8 (History of the Madras City) | ஜெகதீச அய்யரின் ஜில்லா சரித்திரம் - சென்னப்பட்டணம் | சென்னையின் வரலாறு

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் – 8 | ஜில்லா சரித்திரம் – சென்னப்பட்டணம் (Madras District History)

ஜில்லா சரித்திரம் – சென்னப்பட்டணம் (Madras District History)

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் – 8

 – ராமச்சந்திர வைத்தியநாத்

கலி 4740, சாலிவாஹனம் 1561, பசலி 1049, ஹிஜரி 1055, கொல்லம் 314, தமிழ் பிரமாதி வருஷம், ஆடி 27, அஷ்டமி திதி, விசாகம் நட்சத்திரம், வளர்பிறை, சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் (யாருக்கு?) ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் உத்யோகஸ்தர் பிரான்சிஸ் டே சென்னைப்பட்டணத்தில் கால் பதித்ததிலிருந்தே பட்டணம் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் துவங்கி விட்டது என்று சொல்ல முடியும். இதன் பொருட்டு இப்பிராந்தியம் குறித்து எவ்விதப் பதிவிற்கும் முன்னர் இடமில்லை என்று கருதலாகாது.

பட்டணம் குறித்து இதற்கு முன்னர் காலங்காலமாய் இருந்து வந்த கர்ண பரம்பரைக் கதைகளுக்கும், ஸ்தல புராணங்களுக்கும் கல்வெட்டு மற்றும் செப்பேடுகள் ஆதாரங்களுக்கும் மாற்றாக இவை அமைந்து, இத்திசை வழியில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியது. 1874ல் ஈஸ்ட் இந்தியா கம்பெனி முழுமையாக கலைக்கப்பட்டு பிரிட்டானிய அரசே நேரடியாக நிலப்பரப்பின் நிர்வாகத்தையும் வாணிபத்தையும் மேற்கொண்டது. அடுத்த கட்டத்தில் அந்நிய ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் போரின் விளைவாக 1947ல் காலனி ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

இந்த இடைக்காலத்திய வரலாற்றினை அச்சுப் பிசகாது அறியக்கூடிய வகையில் நிர்வாக குறிப்புகள், ஆணைகள், அறிக்கைகள், கடிதத் தொடர்புகள் யாவுமே பதிவு செய்யப்பட்டு ஆவணங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் வரலாற்றை நாம் நேரடியாக அறியக்கூடிய வாய்ப்பினை பெறுகிறோம்.
இவையன்றி அன்றைய கம்பெனி நிர்வாகமும், பிந்திய பிரிட்டானிய பேரரசும் நிர்வாக வசதிக்காக பிராந்தியங்களின் வரலாற்றினை பதிவு செய்யும் போக்கினை கைக்கொண்டது. இவை யாவுமே மகத்தான வரலாற்று ஆவணங்களாகும்.

இந்த அடிப்படியைக் கைக்கொண்டு மதராஸ் ராஜதானியின் வரலாற்றினை ஜில்லா அடிப்படையில் அறுதி செய்து பதிப்புகள் வெளியாகின. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பதிப்புகளும் வெளியாகியுள்ளது.

இவற்றில் ஒன்றுதான் சென்னை ஆர்க்கியாலஜி இலாகா உத்யோகஸ்தர் பி.வி.ஜகதீச ஐயரால் எழுதப்பட்ட டிஸ்டிரிக்ட் ஹிஸ்டரி மெட்ராஸ் எனும் ஜில்லா சரித்திரம் சென்னப்பட்டணம் எனும் புத்தகமாகும். சென்னை மாகாண சட்டசபைத் தலைவர் கனம் திவான் பகதூர் எல்.டி.சுவாமிக் கண்ணு பிள்ளை அவர்கள் முகவுரையுடன் சென்னை ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ் நிறுவனத்தால் 1924ல் உரிமைகள் பதிவுடன் ஐந்தணா விலையில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் -8 (History of the Madras City) | ஜெகதீச அய்யரின் ஜில்லா சரித்திரம் - சென்னப்பட்டணம் | சென்னையின் வரலாறு

புத்தகத்தின் போக்கில் பல்வேறு ஜில்லா சரித்திரங்களையும் காண்கையில் அல்லது அதில் கூறப்பட்டுள்ள இதர வாசகங்களால் இவரால் அல்லது மற்றவர்களால் பல்வேறு ஜில்லா சரித்திரங்கள் வெளிவந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஜகதீச ஐயர் அவர்கள் சென்னை ஆர்க்கியாலஜி இலாகாவில் உத்யோகதஸ்ர் என்பதோடன்றி காஸ்ட்ஸ் அண்ட் டிரைப்ஸ் ஆஃப் ஸவுத் இந்தியா எனும் எழுபாக ஆவணத்தின் ஆசிரியர் எட்கர் தர்ஸ்டன் மற்றும் கடாம்பி ரங்காச்சாரி போன்றோரால் பயிற்றுவிக்கப்பட்டவருங்கூட.

பரத கண்டமானது குரு, சூரஸேனம், குந்தி, குந்தலம், விராடம், மத்ஸ்யம், த்ரிகர்த்தம், கேகயம், பாஹ்லீகம், கோஸலம், பாஞ்சாலம், நிஷதம், நிஷாதம், சேதி, தசார்ணம், விதர்ப்பம், அவந்தி, மாளவம், கொங்கணம் அல்லது ஸெளராஷ்ட்ரம், கூர்ஜரம், ஆபிரம், ஸால்வம், ஸிந்து, ஸெளவீரம், பாரஸீகம், வநாயு, பர்பரம், கிராதம், காந்தாரம், மத்ரம், காச்மீரம், காம்போஜம், நேபாளம், ஆரட்டம், விதேஹம், பார்வதம், சீனம், சாமரூபம், ப்ராக்ஜோதிஷம், ஸிம்மம், உத்கலம், வங்கம், அங்கம், மகதம், ஹேஹேயம், களிங்கம், ஆந்த்ரம், யவனம், மஹாராஷ்டரம், குளிந்தம், த்ராவிடம், சோழம், ஸிம்மளம், பாண்டியம், கேரளம், கர்னாடகம் ஆகிய ஐம்பத்தி ஆறு தேசங்களைக் கொண்டது” என்பதை இந்த தேசங்களின் புராணப் பின்னணியைச் சொல்வதோடு நின்றுவிடாது அதன் பிரத்யேகமான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், சீதோஷ்ணம் போன்றவற்றை அளிப்பதன் மூலம் இந்த ஜம்பத்தி ஆறு தேசங்களும் பெயர்களினால் மட்டும் வேறுபடவில்லை என்பதையும் திருஷ்டாந்தகரமாகவே நிறுவியுள்ள புராதன இந்தியா எனும் பழைய 56 தேசங்கள் (1915) எனும் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை அய்யர் எழுதியுள்ளார். இதனை மதராஸ் பி.ஆர் இராம அய்யர் அண்ட் கம்பெனி பதிப்பித்திருந்தது. இதைத்தவிர மதராஸ் டைம்ஸ் பப்ளிஷிங் கம்பெனி லிமிடெட் பதிப்பித்த ஸவுத் இந்தியன் ஷைன்ஸ் (1920) மதராஸ் ஹிக்கின்பாதம்ஸ் லிமிடெட் பதிப்பித்த ஸவுத் இந்தியன் ஃபெஸ்டிவிட்டீஸ் (1921) எனும் வேறு இரு ஆங்கில நூல்களையும் ஐயர் இயற்றியுள்ளார்.

ஜில்லா சரித்திரம் சென்னப்பட்டணம் எனும் இந்த வரலாறு மூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு முப்பது டிவிஷன்களைக் கொண்ட சென்னைப் பட்டணத்தின் நிலப்படத்தையும், தவிர பல்வேறு முக்கிய கட்டுமானங்கள் இடங்கள் ஆகியவற்றின் படங்களையும் உள்ளடக்கி கிட்டத்தட்ட 60 பக்கங்களைக் கொண்டதாக மதராஸ் எண் 158 பி பிராட்வேயில் உள்ள கார்டியன் பிரஸ்ஸில் அச்சிடப்பட்டுள்ளது.

பூர்வ பீடிகையில் அன்றைய மதராஸ் ராஜதானி அஞ்செங்கோ, அனந்தபுரம், கஞ்சம், கடப்பை, கர்நூல், கிருஷ்ணா, குண்டூர், கோதாவரி, கோயம்புத்தூர், சித்தூர், செங்கற்பட்டு, சென்னப்பட்டணம், சேலம், தஞ்சாவூர், திரிச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தென் ஆற்காடு, தென் கன்னடம், நெல்லூர், நீலகிரி, பல்லாரி, மதுரை, மலையாளம், வட ஆற்காடு, விசாகபட்டணம், ராமநாதபுரம் ஆகிய 26 ஜில்லாக்களையும் சாந்தூர், பங்கனபள்ளி, புதுக்கோட்டை, கொச்சி, திருவிதாங்கூர் ஆகிய ஐந்து சுதேச சமஸ்தானங்களையும் உள்ளடக்கியதாகவும், சமஸ்தானங்கள் நீங்கலாக ராஜதானி லக்ஷத்து நாற்பத்தீராயிரத்து இருநூற்றறுபது சதுர மைல் விஸ்தீரணமுள்ளது என்பதை ஐயர் விரிவாகவே கூறியுள்ளார்.

ராஜதானியின் பூகோள விவரணங்களும் சீதோஷ்ண குறிப்புகளும் விரிவாகவே தரப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி நதிகள் பாயும் பிராந்தியம் ஒட்டுமொத்தமாக 2,37,000 சதுர மைல்கள் என்பதையும் அறிகிறோம்.

ராஜதானியின் பூர்வீக குடிகள் பற்றிய வரலாற்றினைக் கூறுகையில் ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்டதோடு அங்கு அகழ்ந்தெடுத்தவை அங்கிருந்து கொண்டு வரப்பட்டு சென்னை எழும்பூரிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஐயர் எழுதுகிறார்.

பூர்வீக குடிகளிருந்த காலத்திற்கும், தேசத்திய சரியான சரித்திர ஆரம்ப காலத்திற்கும் இடையிலுள்ள காலம் புராண காலமெனக் கூற வேண்டும் என்பதும் ஸ்ரீராமர் லங்கைக்குச் சென்று பத்துதலை ராவணனைக் கொன்று சீதா தேவியை திரும்பி அடைந்தார் எனும் ராமாயணக் கதையை உண்மையான சரித்திரத்தைச் சேர்ந்ததென்று கொள்ள முடியாது என்று பி.வி.ஜகதீச ஐயர் கூறுவது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

ராஜதானியில் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பிய அரசுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியும் பின்னர் பிரிட்டானிய அரசு முதல் நிலையைப் பெற்றதையும் சற்று விரிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளார்.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் -8 (History of the Madras City) | ஜெகதீச அய்யரின் ஜில்லா சரித்திரம் - சென்னப்பட்டணம் | சென்னையின் வரலாறு

தேச சரித்திரம் எனும் இரண்டாவது அத்தியாயத்தில் ஒன்பது மைல் நிகளமும், இரண்டு மைல் முதல் நான்கு மைல் அகலமும் வாய்ந்துள்ள சென்னை அல்லது சென்னப்பட்டணமென்ற இந்நகரம் சென்னை ராஜதானியின் பிரதான பட்டணம் என்பதை விளக்கும் ஐயர், கூவம் மற்றும் அடையாறு ஆகிய இரு நதிகளும் மழைக்காலத்தைத் தவிர மற்ற காலங்களில் இவை சமுத்திரத்திலிருந்து குறுகலான கரைகளால் பிரிக்கப்பட்டு ஆழமற்ற உளையுடன் கூடிய குளங்கள் போல் இருப்பதையும் உணர்த்துகிறார்.

ப்ளாக் டவுனாக இருந்து தற்பொழுது ஜார்ஜ் டவுனாக இருக்கும் பாகம்தான் வியாபாரத்திற்கு மத்திய ஸ்தானம் என்பதையும் இங்கு ஜன நெருக்கம் அதிகமாக இருப்பதையும் இதற்கு அடுத்தபடியாக திருவல்லிக்கேணியும், புரசைவாக்கமும் இருப்பதோடு வேப்பேரியில் ஆங்கிலோ இந்தியர்கள் தொகை கூடுதலாக இருப்பதையும் அறிய முடிகிறது. ஐலண்ட் கிரவுண்ட், பீப்பிள்ஸ் பார்க், நேப்பியர் பார்க் போன்றவற்றின் தோற்றுவாயினை ஐயர் விரிவாகவே விவரித்துள்ளார்.
நகரின் முக்கால் பாகத்தில் அழகிய வீதிகள் இருப்பதையும் அதில் முக்கியத்துவம் வாய்ந்தது மவுண்ட் ரோட் என்பதையும் அறிவதில் வியப்படைகிறோம். கோட்டையின் வரலாறும் பிந்திய படையெடுப்புகளும் சென்னப்பட்டணம் உருவாவதில் பங்காற்றலை கொண்டிருக்கின்றன.

அத்தியாயம் இரண்டில் சென்னப் பட்டணத்தில் உள்ள விசேஷ இடங்களாக சென்னை யூனிவர்சிட்டி, நக்ஷத்திர சாலை, வினோதப் பொருட்காட்சி சாலை, விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிடியூட், அக்வேரியம், ஹை கோர்ட், பாங்குவெட்டிங் ஹால், செனட் ஹவுஸ், ஜனங்கள் தோட்டம், சென்னை டெலிபோன் கம்பெனி ஆகியவை விவரணம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பிரசிடென்சி கல்லூரி, ஸ்திரீகள் கல்லூரி, மதராஸ் ஆஸம், சித்திரக் கலாசாலை, கால்நடை வைத்தியக் கல்லூரி, ஸமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்விக்கூடங்கள் பற்றி ஐயர் நிறையவே தகவல்களை தந்திருக்கிறார். குயின் மேரிக் கல்லூரி எனும் ஸ்திரீகள் கல்லூரியைப் பற்றி கூறுகையில் அதைச் சார்ந்த ஹோட்டல் ஒன்று உண்டு என்றும் அங்கே ஜாதி வித்தியாசத்தை அனுசரித்துக் கூடி உட்கார்ந்து போஜனம் செய்ய மூன்று பிரிவுகள் உள்ளது என்றுரைப்பது அன்றைய நிலையை அச்சு அசலாக உணர்த்துவதாகவே உள்ளது.

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் -8 (History of the Madras City) | ஜெகதீச அய்யரின் ஜில்லா சரித்திரம் - சென்னப்பட்டணம் | சென்னையின் வரலாறு

பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், ஓஷதித் தோட்டம், சென்னை விவசாய தோட்ட வேலைகள் சங்கம், தென் இந்திய இருப்புப் பாதை, சென்னை தென் மகாராஷ்டிர இருப்புப் பாதை, போன்றவை மட்டுமின்றி விக்டோரியா ஆஸ்பத்திரி, கண் ஆஸ்பத்திரி, பிரசவ ஆஸ்பத்திரி, பைத்தியக்காரர் வைத்தியசாலை, குஷ்டரோகி ஆஸ்பத்திரி ஆகியவை பற்றிய குறிப்புகள் சென்னப்பட்டணத்தின் மருத்துவக் கட்டமைப்பினை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

இந்த சரித்திரத்தில் பச்சையப்பன் கல்லூரி, கிறிஸ்துவர் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவை தவிர ரிப்பன் கட்டிடம் பற்றிய குறிப்புகளையும் ஐயர் அளித்துள்ளார். ஜார்ஜ் டவுனில் இயங்கி வரும் பச்சையப்பன் கல்லூரிக்கு ஹாஸ்டல் ஒன்று ஏற்படுத்த இடம் கிடைக்காததினால் சேத்துப்பட்டு ஸ்டேஷனுக்கு அருகில் இதன் ஹாஸ்டல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து மாணவர்கள் சௌகரியமாக அடிக்கடி அவ்விடத்திற்கும் கோட்டைக்குமுள்ள ரயில் வண்டியில் இக்கல்லூரிக்கு வந்து போகிறார்கள் என்ற தகவல் வியப்பளிப்பதாகவே உள்ளது.

மொத்தத்தில் ராஜதானிக்குட்பட்ட சென்னப்பட்டணத்தின் சரித்திரம் நல்ல மொழியில் எழுதப்பட்டு ஒரு திட்டவட்டமான வரையறை செய்யப்பட்ட ஆவணமாக திகழும் பி.வி.ஜகதீச ஐயரின் புத்தகம் நூறாண்டுகளுக்குப் பின்னரும் புத்தம் புதிய புத்தகமாகவே விளங்குகிறது என்று சொல்வதில் மிகையில்லை என்பதை வாசிப்போர் அனைவருமே உணர்வர்.

எழுதியவர் : 

– ராமச்சந்திர வைத்தியநாத்

சென்னப் பட்டணம்: வரலாற்றுப் பதிவுகள் தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்:- சென்னை மாநகர் (Chennai Maanagar)

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *