அறிவியலாற்றுப்படை 12: சக்கரத்தின் வரலாறு (The invention and history of the wheel in Tamil) - முனைவர் என்.மாதவன் | How did the wheel evolve?

அறிவியலாற்றுப்படை 12: சக்கரத்தின் வரலாறு – முனைவர் என்.மாதவன்

சக்கரத்தின் வரலாறு

அறிவியலாற்றுப்படை

பாகம் 12

– முனைவர் என்.மாதவன்.

முதலில் ஒரு கதை. கடற்கரையோரம் ஒன்றில் சிறுபலகை போன்ற ஒரு பொருள் கிடைக்கிறது. அங்கே உலவும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் ஒரே நேரத்தில் அதனைக் கண்டடைகின்றனர். அதனைப் பார்த்தவுடன் அந்த பெண்ணோ, ”பாருங்கள் எங்களது தாயின் உருவம் பதித்த பலகை” என்கிறாள். ஆனால் அந்த ஆணோ, ”இல்லை இல்லை இது எனது தந்தையின் உருவம் பதித்த பலகை” என்று வாதிடுகிறான்.

இருவரும் இவ்வாறு வாதிட்டுக்கொண்டே தங்களது இருப்பிடம் அடைகின்றனர். அந்த ஆண் அவனது தந்தையிடம் காட்டும்போது அவரோ அது அவரது தந்தையின் உருவம் என்கிறார். பெண் அவளது தாயிடம் காட்டும்போது அவரும் சொல்லி வைத்தாற்போல் அவரது தாயின் உருவம் என்றாராம். உண்மையில் அவர்கள் கண்டெடுத்தது கண்ணாடி போன்ற ஒரு பொருள் என்பதை பலரும் யூகித்திருப்பீர்கள். அவர்கள் இருவரும் இணைந்து அந்த கண்ணாடியில் பார்த்து, பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துகொண் பிறகே, அட யார் யாரெல்லாம் பார்க்கிறோமோ அவர்கள்தான் தெரிகின்றனர் என்று புரிந்துகொண்டிருப்பர். அதற்கு எவ்வளவு காலம் பிடித்திருக்குமோ.

அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை உடனடி உணர்ச்சிகளே மனிதர்களிடையே பல்வேறு புதுமைகளுக்கும் பகிர்வுகளுக்கும் பயன்பட்டுள்ளன. உதாரணமாக மொழியின் பிறப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்கள் உண்டு. ஆதிகாலங்களில் உணர்ச்சி வயப்பட்ட காலங்களில் மனிதர்கள் எழுப்பிய ஒலிகளே மொழிகளுக்கான பிறப்பிடமாயிருந்திருக்கும். பின்னால் மொழியின் பிறப்பை விரிவாக கொஞ்சம் விவாதிப்போம். கொஞ்சம் ஆதிமனிதர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதங்களைப் பார்த்துவிட்டு வருவோம்.

அறிவியலாற்றுப்படை 12: சக்கரத்தின் வரலாறு (The invention and history of the wheel in Tamil) - முனைவர் என்.மாதவன் | How did the wheel evolve?

ஆதிமனிதர்களுக்கென்ன டே எண்ட் வேலை பளுவா? வீக் எண்ட் கொண்டாட்டமா? மாதாந்திர டார்கெட்டா ? அவர்களுக்கு ஒன்றுமிருந்திருக்காது. அவர்களுக்கு தேவையாக இருந்ததெல்லாம் உணவு,ஓய்வு, உறக்கம் போன்றவைகள்தாம். அதிலும் ஓய்வுக்கும் உறக்கத்திற்கும் ஓரளவுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் அமைந்தபின்னர் அவர்கள் என்ன செய்திருக்கக் கூடும். ஆம் அடுத்த நாள் உணவை சேமித்துவைக்க இயலுமா? அப்படிப்பட்ட நாட்களில் அவர்களது வேட்டையில் பெரிய விலங்குகள் அகப்பட்டுவிட்டால் போதும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். சில நாட்களுக்கு வேட்டைக்கு ஓய்வுதானே. ஆம் ஆதிகால மனிதர்கள் அதிக அளவிலான உணவுகள் கிடைத்தபின்னர் அந்த உணவைச் சுற்றிக்கொண்டே ஆடிப்பாடிக் கூத்தடித்தனராம். நடனத்தின் பிறப்பு பற்றிய குறிப்புகளில் இது காணக்கிடைக்கிறது. அவ்வாறு நடனம் ஆடியபோது வாயை மூடிக்கொண்டாடியிருப்பார். ஆஹா….. ஓஹோ என சத்தம் எழுப்பிக்கொண்டேயல்லாவா ஆடியிருப்பர்.

ஆஹா.. ஆடும்போது சதுரமாகவோ செவ்வகமாகவோ ஆடியிருந்தால் இரசித்திருக்காது. வட்டமாகத்தான் ஆடியிருப்பர். ஆம் வட்டம் என்பது ஒரு ஒழுங்கு என்பதை உணர்ந்தே அவ்வாறு செய்திருப்பர். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல. ஏற்கனவே நாம் பார்த்ததுபோல் சக்கரத்தின் பிறப்புக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தெரிந்தும் தெரியாமலும் உதவியிருக்கலாம். ஏற்கனவே மலையிலிருந்த கற்கள் உருண்ட சம்பவங்கள் குறித்தும் பேசியிருக்கிறோம். ஆம் அனைவரது வாழ்க்கையும் வட்டம்தானே.

சக்கரத்தின் வரலாற்றை அறிவியல் நோக்கில் பார்த்து இந்த பகுதியை நிறைவுசெய்வோம். இன்றைக்கு நம்மைச்சுற்றியுள்ள எல்லா பொருட்க ளுடனும் தொடர்புடையதாயிருப்பது சக்கரமும், வட்டவடிவமும். இவ்வளவு அவசியமான ஒரு வடிவமைப்பைக் காலம் வடிவமைத்துக்கொடுத்தாலும் அவ்வளவு விரைவில் இந்த செழுமையை அடைந்துவிடவில்லை. கொஞ்சம் அறிவியல் பூர்வமாக யோசிப்போமே.

முதலில் ஏதாவது ஒரு பொருளை தரதரவென இழுத்துக்கொண்டு சென்றிருப்பர். அவ்வாறு இழுத்துச்சென்றபோது இழுத்துச்சென்ற முக்கியமான பொருள் சேதமாயிருக்கும். சரி அப்பொருள் சேதாரமாகமலிருக்க அதற்குக் கீழே ஏதாவது ஒரு கட்டைபோன்ற பொருட்களை வைத்து நகர்த்தியிருக்கலாம். சிறிது தூரம் நகர்த்தியபிறகு மீண்டும் அதே கட்டையை வைத்து முயற்சித்திருக்கலாம். இது பணியை எளிமைப்படுத்துவதையும் உணர்ந்திருப்பர். சில காலத்திற்குப்பிறகு ஏன் ஒரே கட்டையை வைத்து மல்லுக்கட்டவேண்டும். அட கட்டைகள்தான் கிடக்கிறதே என பல கட்டைகளை அடுத்தடுத்து அடுக்கி நகர்த்தியிருக்கலாம். இந்த கட்டைகளின் மேல் உருள்வதால் மேலும் எளிமையாக இருப்பதையும் உணர்ந்திருக்கலாம். அப்பாடா இனிமேல் எதையும் தரதரவென இழுக்கவேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பர்.

இப்படியாக பிற்காலங்களில் வட்டவடிவிலான பெரிய மரங்களின் தண்டுப்பாகத்தை அறுத்து சக்கரங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம்.பின்னர் சக்கரத்தின் எடையைக் குறைக்க வட்டவடிவம் மட்டும் இருந்தால் போதுமே. நடுவில் ஒரு அச்சு போன்ற அமைப்பை ஏற்படுத்தி சக்கரத்தின் எடையை சுழலும் வேகத்தையும் அதிகரித்திருக்கலாம். இதனிடையே கட்டையும் தேய்வதைப் பார்த்து அதற்குள் கிடைத்திருந்த உலோகங்களின் பட்டைகளைப் பொருத்த முன்வந்திருக்கலாம்.
இப்படியான சக்கரங்களின் பரிணாமத்துடன் வாகனங்களின் வடிவமைப்பும் அதில் விலங்குகளைப் பிணைப்பதற்கும் முயன்றிருக்கலாம். எது எப்படியோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால அனுபவங்களில் இன்றைக்கு ட்யூப்லஸ் டயர்வரை வளர்திருக்கிறோம்.

அறிவியலாற்றுப்படை 12: சக்கரத்தின் வரலாறு (The invention and history of the wheel in Tamil) - முனைவர் என்.மாதவன் | How did the wheel evolve?

நியாயமாக இந்த வாரம் மெசபடோமியோ நாகரீகத்தைப் பற்றித்தானே பார்க்கவேண்டும். ஆம் அதைப்பற்றித்தான் பார்த்துக்கொண்டிருக்கோம். ஆம் வரலாற்றியல் நோக்கில் சக்கரங்கள் கண்டுபிடிப்பு மெசபடோமியா நாகரீகத்தோடு தொடர்புடையது. சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பாக யூப்ரடீஸ்-டைக்ரீஸ் ஆற்றங்கரயில் தோன்றிய இந்த நாகரீகம்தான் நாகரீகங்களின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. நாம் முந்தைய பகுதியில் பார்த்த கற்பனைக்கதையான ஆதம் ஏவாள் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஈடன் தோட்டம் இங்குதான் அமைந்திருந்தது என கருதப்படுகிறது.

சரி இவர்களை நாகரீகத்தின் தொட்டில் என்று ஏன் அழைக்கிறோம். ஏனென்றால் நாம் மேலே பார்த்த சக்கரம் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளும் இவர்களுடையது என வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சந்திரனை மையமாகக் கொண்ட நாட்காட்டிகளை இவர்கள் வடிவமைத்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்துமுறையை துவங்கியவர்கள் இவர்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. களிமண் பலகைகளில் ஆப்பு வடிவ எழுத்துக்களை இவர்கள் எழுதிவைத்துள்ளனர். இது கீயூனிபார்ம் எனவும் அழைக்கப்படுகிறது. இவர்களது களிகண் பலகைகளில் கோதுமை,பார்லி, சோளம் போன்ற தாவரங்களின் படங்களும் உள்ளன. இதனை வைத்தே சித்திரங்களைக் கொண்டே தொடக்க கால எழுத்துக்கள் பிறந்தன எனவும் ஒருசாரார் வாதிடுகின்றனர்.

எதுஎப்படியோ மனிதர்களின் வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில் உலகின் ஒவ்வொருபகுதியிலும் மனிதர்கள் நாகரீகமடையத் தொடங்கினர். மெசபடோமியாவில் ஏற்பட்டது பழையது என இன்றைய வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அறிவியல் கராறானது. இதனைவிட பழையது கிடைத்தால் அதுதான் பழையது என அறிவியல் மெய்ப்பிக்கவும் தயங்காது. தமிழகத்திலும் அதற்கான ஒளிக்கீற்றுகள் தென்படுகின்றன. பார்ப்போம்.
இந்த தொடர் அறிவியலின் முன்னேற்றத்தை அணுகுவதை நோக்கமாகக் கொண்டதால் அறிவியல் பார்வையில் மனிதகுல முன்னேற்றங்கள் என பதிவுசெய்து முன்னேறிச் செல்ல முயல்வோம்.

படை எடுப்போம்.

கட்டுரையாளர்:

தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. N. Madhavan (என். மாதவன்)

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்

முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 11: சுட்டகல் வேண்டுமா? சுடாத கல் வேண்டுமா? – முனைவர் என்.மாதவன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. Suresh Kumar

    அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *