வணிக நோக்கங்களுக்கு இடமில்லை என்பதால் பின்னுக்குத் தள்ளப்படும் ஹோமியோபதி – மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன்

வணிக நோக்கங்களுக்கு இடமில்லை என்பதால் பின்னுக்குத் தள்ளப்படும் ஹோமியோபதி – மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன்

 

“கொரோனாவால் ஏற்பட்டுள்ள கடுமையான சூழல்கள் ஒருபுறமிருக்க, இயற்கை வளச் சுரண்டல்களுக்கு எதிரான சிந்தனைகளைப் பரவலாகக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பும் பொதுநல அரசியல் இயக்கங்களுக்கு உருவாகியிருக்கிறது என்கிறார் முன்னணி ஹோமியோபதி மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன். மருத்துவர்களுக்கான பயிற்சி முகாம்கள் முதல், அடித்தட்டு மக்களுக்கான சேவை முகாம்கள் வரையில் நடத்திக்கொண்டிருக்குக்கும் டாக்டர் கோபிகர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான இவர், இந்திய அரசின் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தின் மருந்து தரப்படுத்தல் குழு உறுப்பினருமாவார். பேட்டி: அ. குமரேசன்

ஒரு மருத்துவராகவும் சமூக அக்கறையாளராகவும் கொரோனா பெருந்தொற்றுச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மக்களிடையே கொரோனா பற்றிய பயம் பரவியிருக்கிற அளவுக்கு அது பற்றிய அறிவியல் தகவல்கள் பரவவில்லை. பயம் தேவையில்லை, ஆனால் அதற்காக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று போய்விடக்கூடாது. அதிகபட்சமாக இருபது சதவீதம் பேருக்குத் தொற்று ஏற்படலாம். அவர்கள் எல்லோருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட மாட்டார்கள். இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினருக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படலாம். கொரோனா தொற்றியிருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் பலர் இருப்பார்கள். அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றக்கூடும். ஆகவே சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சுகாதாரம் பேணுவது, வயதானவர்கள் கறாராகக் கட்டுப்பாடுகளோடு இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்கத்தான் வேண்டும். இந்தியாவில் வருடத்திற்குப் பத்தாயிரம் பேர் நிமோனியாவால் இறக்கிறார்கள். புற்றுநோயால் உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் ஏற்படுகின்றன. ஆகவே கொரோனா பற்றிய மிகையான பயம் தேவையில்லை.

சிகிச்சை விவரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள், எண்பதாயிரம் பேர் குணமடைந்தார்கள் என்ற செய்திகள் சொல்லப்படுவது நல்லதுதான். ஆனால் எத்தனை பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, எத்தனை பேருக்கு சாதாரணமான சிகிச்சையே போதுமானதாக இருந்தது, ஆக்சிஜன் செலுத்தியதால் குணமடைந்தவர்கள், வென்டிலேட்டர் பயன்படுத்தியதால் மீண்டவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை. அந்தத் தகவல்களை வெளியிட்டால் அது மக்களைத் தெளிவடையச் செய்யும், தேவையான பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ளத் தூண்டும்.

இது ஏதோவொரு கிருமி பரவுகிறது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது என்ற பிரச்சனை மட்டுமல்ல. இதன் பின்னால் லாபம் குவிப்பது மட்டுமே நோக்கமாகக் கொண்ட, சமூகப் பொறுப்பற்ற, இயற்கை வளங்களை வரம்பே இல்லாமல் சுரண்டுகிற பெரிய நிறுவனங்கள், அதற்கு ஒத்துழைக்கிற சுயநல அரசியல்வாதிகள் என்ற கூட்டு இருக்கிறது. நீண்டகாலமாகத் தொடர்கிற இந்தக் கூட்டின் மோசமான விளைவுகளில் ஒன்றுதான் கொரோனா. இது தெளிவாகப் புலப்படுகிற இன்றைய சூழலில், பொதுநல அக்கறையும் இயற்கை வளப் பாதுகாப்பும் கொள்கையாகக் கொண்ட அரசை உருவாக்குவதன் அவசியத்தை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. மக்களை நேசிக்கும் அரசியல் இயக்கங்களும், மனித அமைப்புகளும் சரியான திட்டமிடலோடு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவ அறிவியல் உலகத்திற்கு இது ஒரு பெரிய சவாலாகத்தான் வந்திருக்கிறதா?

இதை விடவும் மோசமான பாதிப்புகளையும் பெரிய அளவில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொள்ளை நோய்களைக் கடந்த காலங்களில் மருத்துவ அறிவியல் உலகம் எதிர்கொண்டிருக்கிறது. அவற்றை வெற்றிகரமாக சமாளித்து மனிதர்களைப் பாதுகாத்து வந்திருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பங்களோடு சமூக அறிவியலும் வளர்ந்திருக்கிற இன்றைய காலக்கட்டத்தில் இது பெரிய சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

சமாளிக்க முடியாத சவாலாக முன்னிறுத்துவது யாரென்றால் மருந்து உற்பத்தியிலும் புகுந்து ஆக்கிரமிக்க முயல்கிற வணிக சக்திகள்தான். பாம்பையும் கீரியையும் சண்டையில் விடப்போவதாகச் சொல்லிக் கூட்டம் கூட்டுவது போல, மருந்து கண்டுபிடிப்பது கடினமான சவால் என்று சந்தையைத் தயார் செய்கிற வேலையில் உலக அளவிலான வணிக சக்திகள் இறங்கியிருக்கின்றன. மருத்துவ உலகம் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. கொரோனா பற்றிய அடிப்படையான தகவல்களை இந்த ஆண்டு ஜனவரியிலேயே மருத்துவ அறிவியலாளர்கள் வெளியிட்டுவிட்டார்கள். அப்போதே உலக சுகாதார நிறுவனமும் அறிவித்துவிட்டது. வணிகம் பாதித்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே அக்கறை கொண்ட அரசுகள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டன என்பதுதான் பிரச்சனையின் மையம்.

சீனாவில் இந்தத் தொற்று தொடங்கியது என்றால், அங்கேயிருந்து தங்களது நாடுகளுக்குத் திரும்பிய ஐரோப்பியர்கள் உள்பட பலரும் தங்கள் உடலில் கிருமியைக் கொண்டு சென்றிருப்பார்கள். உலக சுகாதார நிறுவன எச்சரிக்கையை உள்வாங்கிக்கொண்டு, பொறுப்புள்ள அரசுகள் சீனாவிலிருந்து வந்தவர்களை மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகள் உள்பட எந்தவொரு நாட்டிலிருந்தும் வந்தவர்களைத் தனிமைப்படுத்திப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அது மக்களுக்கும் ஒரு வழிகாட்டலாக இருந்திருக்கும்.

இங்கே கேரளத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் யாரானாலும் பரிசோதிக்கப்பட்டு தனிமையில் வைக்கப்படடார்கள். அது போன்ற வழிமுறைகள் எல்லா மாநிலங்களிலும், எல்லா நாடுகளிலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். இந்திய விமான நிலையங்களில் காய்ச்சல் கண்டுபிடிக்கும் கருவிகளால் பயணிகள் பரிசோதிக்கப் படுவது உண்மைதான். ஆனால், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக ஒரு பயணி காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மாத்திரையை எடுத்திருந்திருப்பாரானனால், அந்தக் கருவியால் கண்டுபிடிக்க முடியாது. மேலும், அது காய்ச்சல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் கருவிதானே தவிர, கொரானாவைக் கண்டுபிடிக்கிற கருவியல்ல. இதுபோன்ற நடைமுறைத் தவறுகள்தான் தொற்று இந்த அளவுக்குப் பரவியதற்குக் காரணமே தவிர, மருத்துவ அறிவியலில் பிரச்சனை இல்லை.

Unable to treat even fever patients in Kerala: Homeopathy practitioners cry  foul

மருத்துவ அறிவியல் என்றால் பொதுவாக ஆங்கில மருத்துவம் எனப்படுகிற அலோபதி முறைதான் என்ற அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதைச் சார்ந்ததாகவே பெரும்பாலான நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்த நிலை எப்படி வந்தது?

இதற்கு, அரசியல் அதிகாரத்தோடு இணைந்த வணிகக் கட்டமைப்பு ஒரு காரணம். உலகத்தின் மூன்று மிகப்பெரிய மருந்துக் கம்பெனிகளின் வருவாய் அமெரிக்க அரசின் பட்ஜெட்டை விட அதிகம். ஒரு புதிய மருந்தைச் சந்தையில் அனுமதிப்பதா இல்லையா என அரசுகள் முடிவெடுப்பதில் செல்வாக்குச் செலுத்துகிற அளவுக்கு இவர்களுடைய ஆதிக்கம் இருக்கிறது. ஹைடிரோகுளோரோகுயின் மருந்தைக் கொடுக்கலாம் என்று டிரம்ப் சொன்னார் என்பதற்காக எல்லோரும் சொன்னார்கள். அதை ஆய்வுக்குப் பயன்படுத்தலாமே தவிர அதையே மருந்தாகக் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பே சொன்னது. அதற்குப் பிறகும் அந்த மருந்தைக் கொடுத்தார்கள். அதிலே அறிவியல் எங்கே வந்தது?

இரண்டாவது காரணம், நவீன அறிவியல் வளர்ச்சிகள் வந்தபோது அவற்றை உள்வாங்கிக்கொண்டு அலோபதி மருத்துவமுறை வளர்ந்தது. இன்னொரு புறத்தில், ஒரு கிருமியை அழிக்கிற வேதிப்பொருள் எதுவென்று கண்டுபிடித்து மருந்தாக உருவாக்குகிறார்கள். இதைக் கண்டுபிடித்தவர் மருத்துவ அறிவியலாளர் லூயி பாஸ்டர். ஆனால் அவரே, “விதையா மண்ணா என்று பார்க்க வேண்டும்” என்று சொன்னார். ஒரு விதை மண்ணில் விழுந்தால் அது முளைத்து வளரும். கட்டாந்தரையில் விழுந்தால் அது காய்ந்து போய்விடும். அதே போல, ஒரு கிருமி பரவுவதற்குக் காரணமாக அமைகிற மக்கள் வாழ்நிலை, சமூகப் பொருளாதாரம், ஊட்டச்சத்து வாய்ப்புகள் சார்ந்த சூழல் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இதற்கு மாற்றாக, ஹோமியோபதி உள்ளிட்ட மற்ற மருத்துவமுறைகள் எவ்வகையில் பங்களிக்க முடியும்?

ஹோமியோபதி முறையில் வணிக ஆதிக்கத்துக்கான வாய்ப்பு மிகக்குறைவு. எந்த மருந்தையும் எந்த நிறுவனமும் சொந்தம் கொண்டாட முடியாது. மக்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான், ஆகவே மக்களுக்கே போக வேண்டும் என்ற கோட்பாடு மையமாக இருப்பதால், கண்டுபிடிக்கப்படும் மருந்துகளுக்குக் காப்புரிமை பதிவு போன்ற ஏற்பாடுகள் கூட இல்லாமல் விட்டிருக்கிறார்கள். உதாரணமாக, கொரானா எதிர்ப்பு சக்தியை வளர்க்க ‘ஆர்சனிக்கம் ஆல்பம்’ என்ற ஹோமியோபதி மருந்தைப் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டது. இந்த மருந்துக்கோ, மூலப்பொருளுக்கோ, தயாரிப்பு முறைக்கோ யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம். மிகப் பெரிய தயாரிப்பாளர்கள் ஹோமியோபதியில் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

கடந்த நூற்றாண்டுகளில் மனிதகுலத்தைத் தாக்கிய பல தொற்றுநோய்களை ஹோமியோபதி மருந்துகளால் வெல்ல முடிந்திருக்கிறது, அதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதிநிதி ஒருவர் காலரா சிகிச்சையில் குறிப்பிட்ட ஹோமியோபதி மருந்து பலனளிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று வாதாடினார், அரசு அதை ஏற்றுக்கொண்டு பதிவு செய்தது. 20 சதவீதமாக இருந்த காலரா இறப்பு விகிதம் 2 சதவீதமாகக் குறைந்தது. ஹோமியோபதி மருந்துக்காக வாதாடிய அவர் ஒரு அலோபதி மருத்துவர்!

தமிழகத்தில் கோவிட் சிகிச்சைக்கு சித்த மருந்துகளைப் பயன்படுத்த அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே போன்று பயனளிக்கிற இன்னொரு மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறுவது ஏன்? குறைந்தது நூறு பேருக்காவது ஹோமியோபதி மருந்தைக் கொடுத்து எப்படி பலனளிக்கிறது என்பதை ஏன் ஆராயக் கூடாது? கொரானாவால் உயிரிழக்க நேரிடுகிறவர்களில் ஐநூறு பேரையாவது காப்பாற்ற முடியும் என்ற வாய்ப்பை எதற்காகத் தவறவிட வேண்டும்? இதில் வணிக நோக்கங்களுக்கு இடமில்லை என்பதுதான் காரணமா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. ஹோமியோபதி உள்ளிட்ட இதர மருந்துகள் எப்படிப் பயனளிக்கின்றன என்று அரசாங்கமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஆராயட்டுமே, பயனில்லை என்று கண்டுபிடிக்கப்படுமானால் அதை அறிவிக்கட்டுமே…

ஒருங்கிணைந்த மருத்துவம் பற்றி இப்போது மிகவும் வலியுறுத்தப்படுகிறது. மருத்துவ அரங்குகளில் அது பற்றி விவாதிக்கப்படுகிறதா?

மருத்துவ அரங்குகள் என்ற அளவில் நிறையவே விவாதங்கள் நடக்கின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் கொச்சியில் நடைபெற்ற சர்வதேச ஹோமியோபதி மாநாட்டில், பல நாடுகளிலிருந்து வந்திருந்த அலோபதி மருத்துவர்களும் வேறு முறைகள் சார்ந்த மருத்துவர்களும் ஹோமியோ மருந்துகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதைப் பற்றிப் பேசினார்கள். ஹோமியோபதி மருத்துவர்களும் தாங்கள் கையாண்ட இதர மருந்துகள் பற்றிச் சொன்னார்கள். தமிழகத்தில் சித்த மருத்துவர்கள் நடத்திய மாநாட்டில் மற்ற மருந்துகளின் பயன்பாடு பற்றி விவாதித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்தாலும், ஆங்கில மருத்துவர்கள் தங்களுடைய மாநாடுகளிலும் இப்படிப்பட்ட விவாதங்களை நடத்தினால் அதன் வீச்சும் விளைவும் ஆக்கப்பூர்வமாக அமையும்..

அரசாங்கமே இப்படிப்பட்ட மாநாடுகளை நடத்துகிறபோது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அரசு மருத்துவமனைகளில் சித்தம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் இருக்கின்றன என்றாலும், நோயாளி தனக்கான சிகிச்சையைத் தானே முடிவு செய்துகொள்ளும்படி விடப்படுகிறார். கபசுரக்குடிநீரையும் ஆர்சனிக்கம் ஆல்பத்தையும் எல்லோருமே எடுத்துக்கொள்கிறார்கள். இங்கேதான் மருத்துவமனையில் அனைத்துப் பிரிவு மருத்துவர்கள் கொண்ட குழு அதை முடிவு செய்கிற வகையில் ஒருங்கிணைந்த முறை தேவையாகிறது.

இதற்கான ஒரு ஆலோசனையை முன்பு நான் தமிழக அரசுக்கு ஒரு ஆவணமாகவே அளித்தேன். அவசர அறுவை தேவைப்படுகிறவர்கள் தவிர்த்து, மற்றவர்களுக்கு இரண்டு மாத காலம் ஹோமியோ, சித்தம், ஆயுர்வேதம், யுனானி மருந்துகளைக் கொடுக்கலாம். அதில் குணமடையாதவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம். இதனால் மருத்துவமனையில் உள்ள அறுவை வல்லுநர்களின் சுமை வெகுவாகக் குறையும், அவர்கள் தங்கள் அறிவையும் திறமையையும் மற்ற வகைகளில் பயன்படுத்த முடியும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தேன். அன்றைய சுகாதாரத்துறைச் செயலர் நல்ல ஆலோசனை என்று ஏற்றுக்கொண்டு, அதைச் செயல்படுத்துவது பற்றி விவாதிக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் ஏனோ அது நடைபெறவே இல்லை.

Can Homeopathy save humanity from coronavirus?

எதற்கு எது மாற்று என்ற கேள்வி இருக்கிறது என்றாலும், பழகிவிட்டதால் எளிதான புரிதலுக்காக நாமும் அலோபதி அல்லாத இதர சிகிச்சைகளுக்கு மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. கொரானாவுக்கான மருந்து கண்டுபிடிக்கிற ஆராய்ச்சிகள் மாற்று மருத்துவத்தில் நடைபெறுகின்றனவா?

ஹோமியோபதியில் அதற்கான ஆராய்ச்சிகள் நடக்கவே செய்கின்றன. நோயை ஏற்படுத்தும் கிருமியிலிருந்தே அதற்கான முறிப்பை உருவாக்குவது ஹோமியோபதி மருந்தாக்க முறைகளில் ஒன்று. கொரோனா சளியின் மூலக்கூறிலிருந்து கிருமி முறிப்பை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. அதே வேளையில் ஹோமியோபதியிலும் மற்ற மருத்துவங்களிலும் ஏற்கெனவே இருக்கிற மருந்துகளைக் கொடுக்கிற முயற்சிகள்தான் பெரிதும் நடக்கின்றன. ஆங்கில மருத்துவத்தில் கூட, தற்போது, ஏற்கெனவே இது போன்ற நோய்களுக்கு உள்ள மருந்துகள்தான் தரப்படுகின்றன.

ஆர்சனிக்கம் ஆல்பம் நன்கு பயன்படுகிறது என்று இந்திய ஹோமியோபதி கவுன்சில் ஜனவரியிலேயே அறிவித்துவிட்டார்கள். தமிழக அரசு அதை ஏப்ரலில்தான் அங்கீகரிக்கிறது. அதுவும் ஒரு மருத்துவர் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகுதான் அந்த அங்கீகாரம் வந்தது. தனிப்பட்ட மருத்துவர்களும் பொது அக்களையுள்ள அமைப்புகளும்தான் இந்த மருந்தைப் பரவலாக விநியோகித்தன. டாக்டர் கோபிகர் அறக்கட்டளையிலிருந்து நேரடியாகவும், பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் எளிய மக்கள் வாழும் பகுதிகளில் விநியோகிக்கிறோம். விலை குறைவு என்பதால் லட்சக்கணக்கில் விநியோகிக்க முடிந்திருக்கிறது.

மாற்று மருத்துவ வல்லுநர்கள் தங்களது மருந்துகளை அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்துவதில்லை என்ற ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அலோபதி ஆராய்ச்சி முறைகள் மட்டுமே அறிவியல்பூர்வமானவையா என்று இவர்கள் தரப்பில் கேட்கப்படுகிறது. அறிவியல் ஆராய்ச்சி என்பது பொதுவானதாகத்தானே இருக்க முடியும்?

மாற்று மருத்துவத் துறைகளில் நவீன ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மருத்துவ ஆராய்ச்சிக்கென உலக அளவில் வகுக்கப்பட்டிருக்கிற வழிமுறைகளைப் பின்பற்றித்தான் ஹோமியோபதி ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

சில விதிகள் அபத்தமானதாக இருக்கின்றன. உதாரணமாக, வெற்றிலைக்கு மருத்துவ குணம் இருக்கிறது. ஆனால், ஹோமியோபதி ஆய்வு முறையின்படி வெற்றிலைச் சாறின் ஒரு துளியைப் பல நூறு, பல ஆயிரமாக நீர்த்துப்போகச் செய்து அதிலிருந்து வீரியமான மருந்தைத் தயாரிப்பதற்கு அனுமதி கிடைக்காது. இப்படியான தடைகள் விலக்கப்பட்டால்தான் மாற்று மருத்துவ ஆராய்ச்சிகளோடு ஒருங்கிணைந்த சிகிச்சைகளும் வலுப்பெற முடியும். இதற்கான கொள்கை அணுகுமுறை அரசுகளுக்கும் உலக அமைப்புகளுக்கும் தேவை. மூலக்கூறுகளை ஆராய்வது, மருந்தை உருவாக்குவது, முதலில் விலங்குகளுக்குக் கொடுப்பது, அடுத்து மனிதர்களுக்குக் கொடுப்பது என்ற செயல்முறைகளுக்குக் கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அந்த நிலையில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியமாகிறது.

நமது நாட்டின் சமூகப் பொருளாதார நிலையில் ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவமுறைகளை அலோபதிக்கு நிகராக ஊக்குவிப்பதும், பரவலாக்குவதும் கொரோனா போன்ற தாக்குதல்களிலிருந்து பெருமளவுக்கும் விரைவாகவும் விடுபட்டு நலம்பெற வழிவகுக்கும். ஆம், தேவைப்படுவது ஆரோக்கியமான மாற்றுக் கொள்கைதான்.

நன்றி: தீக்கதிர், ஆகஸ்ட் 27

Show 1 Comment

1 Comment

  1. சுந்தரமூர்த்தி.தி

    டாக்டர் கோபிகர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் இந்திய அரசின் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தின் மருந்து தரப்படுத்தல் குழு உறுப்பினருமான
    டாக்டர் வெங்கட்ராமன் அவர்களை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள பாமர மக்கள்,மருத்துவர்கள் முதல் மெத்தப்படித்த அறிஞர்கள் மட்டுமின்றி மருத்துவ உலகத்தில் அறியாதோர் இருக்க முடியாது.
    அவர்கள் ஆற்றிவரும் சேவைகளை அனைவரும் அறிவர். ஹோமியோபதி மருத்துவத்தினால் குணமடைந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் மகத்துவம்.
    அல்லோபதி மருத்துவம் முறைக்கு ஹோமியோபதி எதிராக இருப்பதுபோல தோன்றினாலும் அதுவே உண்மை, இது அனுபவத்தில் பள்ளிப் பருவத்தில் கற்ற படிப்பு.நானறிந்தவரை சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்ற வங்கி ஊழியரும் தொழிற்சங்க வாதியுமான தோழர் SV வேணுகோபால் அவர்களால் வங்கி ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஒப்பற்ற மனிதர், மருத்துவர் என்பதைக் கடந்து.
    டாக்டர் வெங்கட்ராமன் அவர்களை அருமையான உண்மையான பேட்டி எடுத்து உலகத்திற்கு தக்கத்தருணத்தில்,(கொரோனா காலத்தில்) வெளிக்கொணர்ந்த தோழர் அ குமரேசன் அவர்களுக்கு ம் வெளியிட்ட தீக்கதிர் நாளிதழிற்கும் மனமார்ந்த நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *