வீட்டுப் பாடம் சிறுகதை – இரா கலையரசி

வீட்டுப் பாடம் சிறுகதை – இரா கலையரசி




“தகிட தகிட தந்தானா.. தரணும் நீயும் எட்டணா! “பாடிகிட்டே பறந்து வருது குட்டிக் குருவி குந்தவை.

“எல்லாம் நல்லா தான் இருக்கு. படிப்புதான் வரல”. அம்மா வேதவல்லி சலிச்சுகிட்டாங்க.

கூட்டில் உட்கார்ந்தபடி எங்கிருந்தோ? எடுத்து வந்த” லேசை ” கொரித்துக் கொண்டிருந்தது குந்தவை.

சமையல் கூடத்தில் இருந்து பறந்து வந்த சுள்ளிகள் இரண்டு குந்தவை அலகைப் பதம் பார்க்கத் தவறவில்லை.

”இல்லம்மா வாங்க மாட்டேன்மா வாங்க மாட்டேன்மா” கத்தியபடி வெளியே பறந்தது.

மைதானத்தில் வந்து நின்றாள் குந்தவை. ”அப்பப்பா என்னா அடி? என்னா அடி?” அலகை தொட்டு பார்த்துக் கொண்டது.

சற்று தூரத்தில் இருந்த குளத்தில் இருந்து தலை மட்டும் மேலே எழும்பியது. வாயைக் கொஞ்சம் பிளந்தவாறு ஆமை அசைந்து வந்தது.

“ம்க்கும் எப்பவும் அன்னநடை தான் போ”, சிரித்தது குந்தவை.

ஆமை மூக்கை வருடியபடி வருகிறது: ”குளத்துல இருக்க முடியல. துர்நாற்றமா இருக்கு. வீட்ட மாத்தலாமுன்னு இருக்கோம்”.

“ஆமாமாம். இவரு அம்பானி! பளிங்கு வீட்டுக்கு போக போறாரு. போவியா…!??”

பேசிக் கொண்டிருக்கும் போதே மரத்தில் இருந்து எட்டி பார்த்தது அணில்.

”ஏன் பா? வீட்டுப்பாடம் எழுதாமல் பேசிட்டு இருக்கீங்க? நான்லாம் எழுதிட்டேன்பா”னு சொன்ன அணிலை “விஷம் விஷம் “ னு சொன்னபடி மரத்தில் இருந்து திட்டியது மரங்கொத்தி.

“மயில் டீச்சர் கிட்ட சொல்லி அடி வாங்க விடுவோம்” அணில் அனத்தியது.

“அடிக்கல்லாம் கூடாது. தெரியாதா?. சின்னபுள்ள இல்ல. அதான் தெரியல”. முன்னுக்கு வந்தது முயல்.

“இந்த டீச்சருங்க எல்லாம் நம்ம கிட்ட படிச்சா எப்புடி இருக்கும்?” துள்ளி முன்னே வந்தது மான்.

“அட போங்கப்பா! அவங்க ரொம்ப பாவம்” என்றது அணில்.

“நோ.நோ.நோ.பாவம் லா இல்ல. வீட்டுப் பாடம் தரக்கூடாது. எழுத சொல்லக் கூடாது. வாய்பாடு சொல்ல வைக்கக் கூடாது. ஆமாம். பார்த்துக்குங்க” என்றது குயில்.

“நீ பாடியே கவுத்திருவ” போ..!”

“படிச்சாலும் படிக்கலைனாலும் மீசையை முறுக்கணும்” என்றபடி வந்தது பூனை.

“அது சரி! வீட்டுப் பாடம் குறைக்கணும்னு சொல்லி நம்ம எல்லாம் போராட்டம் பண்ணணும்.”

“ஏய்.ஏய் ரொம்ப தான். படிச்சு எழுதிப் பார்த்தால்தான் அறிவு வளரும்”.

“வந்துட்டாருடா, கைபுள்ள கரடி”. முணுமுணுத்தது மரங்கொத்தி.

“உன்னால தான் நாங்கள் எல்லாரும் திட்டு வாங்றோம். நீ முதல்ல எழுதாத.” சீறியது அங்கு வந்த பாம்பு.

எதிர்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது. மேகம் மழையை அழைத்து வர காத்திருந்தது.

“யாரது யாரது? குழந்தைகளே! ”

சத்தம் வந்த திசை நோக்கி காதுகளை கொண்டு சென்றனர். மயில் டீச்சர் ஒய்யாரமாய் நடந்து வந்தது.

“ஆத்தி டீச்சருடா!” பயந்த மாதிரி ஓடினர் அனைவரும்!

– இரா கலையரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *