“ஹோ… என்றொரு கவிதை” - இரா.பூபாலன் Hoo Ennoru Kavithai

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளரும் எங்களின் இனிய தோழருமான கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” நூல் குறித்து எனது வாசிப்பனுபவம்…

இத்தொகுப்பானது கவிஞர் இரா.பூபாலன் அவர்களுக்கு ஏழாவது தொகுப்பாகும்,பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர்,
பத்மஸ்ரீ சிற்பி ஐயா அவர்களிடம் ஒரு மாலைப்பொழுதில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் சிற்பி ஐயா அவர்களின் கொள்ளுப்பேத்தி உரையாடல்களின் குறுக்கே ஹோ என உச்சரித்த ஒலியினைக் கொண்டு இந்நூலுக்கு “ஹோ…என்றொரு கவிதை” யென தலைப்பாக வைத்துள்ளார். இந்நூலின் அட்டைப்படமே ஒரு சிறுமியின் புகைப்படத்தோடு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரையும் இந்நூலும் நேசிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லையென நம்புகிறேன்.

எப்போதும் நண்பர்களை வாசிக்குமாறும் எழுதுமாறும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர், பல்வேறு இளம் படைப்பாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.

தனது அறை அலமாரிகளை நூல்களால் நிறைத்த அன்பு மிகுந்த நல்ல மனிதர்,
இவர் கவிதைகளைத்தான் காதலித்தும்,காதலித்துக்கொண்டும் கவிதையாகவே வாழ்ந்து வருபவர். தனது வாழ்க்கையின் அழகிய தருணங்களாக கவிதை வாசிப்பதையும், கவிதை எழுதுவதையும் குறிப்பிட்டுள்ள கவிஞர்,
தனது கல்லூரி பருவத்தின் போதும், பணி நிமித்தமாகவும் தினமும் பேருந்தில் பயணித்த நாட்களில் சாலையிலும், சாலை ஓரங்களிலும் தான் கண்ட அழகிய நிகழ்வுகளை காட்சிபடுத்தியுள்ளார். எல்லாக் கவிதையிலும் அன்பையும் கருணையையும் நீரூற்றாய் ஓட விட்டிருக்கும் கவிஞர், இந்நூலையே கவிதைகளுக்காக சமர்ப்பணம் செய்திருப்பது கவிதைகளின் மீது அவருக்கு இருக்கும் தீரா பற்றை வெளிப்படுத்தியிருக்கிறது.

பொதுவாகவே அப்பா மீது அதிக பாசம் கொண்ட இவர், முதல் கவிதையிலேயே அப்பாவைப்பற்றி எழுதியிருக்கும் வரிகள் வாசிக்கும் போதே
பள்ளிப் பருவத்தில் அப்பாவுடன் நிகழ்ந்திருந்த நினைவுகள் அத்தனையையும்
கொண்டாடி மகிழும் அழகிய வரிகளாகும்.

அப்பாவின் கையெழுத்து என்ற தலைப்பில் தொடங்கும் இக்கவிதையில்
தான் படிக்கவில்லையென்றாலும் தனது பிள்ளை உயர்படிப்புகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டுமென விரும்பும் அப்பா, கம்பீரமாய் மீசையை தடவிய நாட்களை நினைவுபடுத்துவதோடு பிள்ளைகள் மீது அப்பாக்களுக்கு இருக்கும் பாசத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதாகவே உணர்கிறேன்.

“எழுதப்படிக்கத் தெரியாத
அப்பா
கைகள் நடுநடுங்க
ரா…ம…சா…மி என வங்கியிலோ
நான் நீட்டும் மதிப்பெண் அட்டையிலோ எப்போதாவது கையெழுத்துப் போட்டுப் பார்ப்பார்.
சமயங்களில் ராமாமி ஆகிவிடும் அது
எழுதி முடித்தவுடன் மீசையைத் தடவி விட்டபடி
பெருமிதமாகச் சிரிப்பார்
காடு மேடெல்லாம்
அலைந்து திரிந்தும்
தன் முதுகுத்தண்டை
அடமானத்துக்கு வைத்தும்
பிள்ளையின் பெயரின் பின்
வாங்கித் தந்த பட்டத்தால் என்ன சாதித்தாய் என்கிற
கேள்விக்கு அந்தச் சிரிப்பைத் தான் பதிலாக சொல்வேன்.”

என முடியும் முதல் கவிதை
அப்பா மகனுக்கு இடையிலுள்ள உறவை உயிரோட்டத்துடன் உணர்வுப்பூர்வமாக காட்டுகிறது, என்ன சாதித்தாய் என கேட்கும் கேள்விக்கு தன்னை ஆளக்கியவர் முன் சிரிப்பைத்தான் பதிலாக சொன்னேன் எனக்கூறுவது மனத் தெளிவையும், முதிர்ந்த அறிவையும் வெளிப்படுத்துகிறது.

கூடுதலாக ஒளிரும் சிவப்பு
கவிதையில் சக்கரப் பலகையோடு நடமாடும் மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை பேசுகிறது,இனாமாய் எதையும் வாங்க விருப்பமில்லாதவன் புத்தகங்களை கூவி விற்று பிழைப்பு நடத்துகிறான்,இந்நிலையில் தனது கொள்கைகளை தளர்த்திக்கொள்கிறான் பிஞ்சுக் குழந்தைக்காக…
இவ்வரிகளை வாசிக்கும்போது இவரைப் போன்றவர்களிடம்தான் இன்னும் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.

மழை ஒதுக்கியவன் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கவிதை அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள் வாழ்பவர்களுக்கு துளிகள் ஒவ்வொன்றும் அந்நியப்பட்டதாகவும்,இவர்கள் தீண்டத்தகாதவனென மழைத்துளிகள் வாசலோடு திரும்பிப் போவதாகவும் உண்மை நிலையைத்தான் பேசுகிறது.

நான்முனைச் சித்திரம்
எனும் கவிதையில்

நான்கு முனைச் சந்திப்பொன்றில் வாகன ஓட்டிகளின் அன்றாட பிரச்சினைகள் சிலருக்கு துன்பமாக அமைந்தாலும்,அதே நேரத்தில் சிலருக்கு இன்பத்தையும் தருகின்றன என்பதை இவ்வரிகளால் அறிய முடிகிறது

“யுத்தக்களத்தின் நடுவே ஒருத்திக்கு
நான்கு முழம் பூ போணியானது
ஒரு பரட்டைக் கிழவனின்
தட்டில் சில சில்லறைகள் கூடுதலாகின்றன”

பதற்றம் எனும் கவிதை
எல்லோருக்குமே ஒருநாள் பதற்றமாகி விடுகிறதென்றால் அது வங்கியிலிருந்து பணப்பையோடு திரும்பும் நாட்களாகத்தானே இருக்கும்,
ஏனென்றால் எதிரில் வருபவர்களிலிருந்து நம்மைக் கடந்து செல்பவர் வரை ஒவ்வொருவரும் நம்மைத்தான் பின்தொடர்கின்றனர் என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது, இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, வழி கேட்பது போலவும் உதவிசெய்வது போலவும் தானாக வந்து ஏமாற்றி பணத்தை பறித்துச்செல்லும் காட்சிகள்தானே திரும்பிய பக்கமெல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, இதோ அந்த பதற்றமான வரிகள்….

“வங்கியில்
பணம் எடுத்துவிட்டுத்
திரும்புகையில்
யாரோ ஒருவர்
புன்னகைத்துச் செல்கிறார்
பையைத் தொட்டுத் தொட்டுப்
பார்த்துக்கொண்டே
வீடு திரும்புகிறது மனது.”

ஹோ… என்றொரு கவிதையில் குழந்தையின் குறும்புத் தனத்தையும் அழகிய சொற்களையும் உன்னிப்பாக கவனித்ததன் வரிகள்தான் இதோ

“ஒரு மணி நேர உரையில்
உலகையே சுற்றி வருகின்றன மகாகவியின் சொற்கள்
ஆயினும்
மூன்று ஹோக்கள் மட்டும்
கவிதையாகி விடுகின்றன
அம்மையப்பனைச் சுற்றிவந்து
அபகரித்துக்கொண்ட ஞானப்பழமென”

அதே சமயம் இன்றைய சமூக வலைதளங்களில் எதைத் தொடுகிறோமோ அவை பெரும் தரவாக வந்து தொல்லை தந்து கொண்டிருப்பதையும் அதை மறுப்பதற்கு வேறொன்றைத் தொட்டு அது தொடர்கதையாகி விடும் அவலங்களையும், இக்காலத்தில் தொடுதிரை அலைபேசி பயன்பாட்டாளர்களின் இன்னல்களை புத்த விளம்பரம் எனும் கவிதை தெளிவாக காட்டுகிறது.

ஒவ்வொரு கவிதையை வாசிக்கும் போதும் நான்முனைச் சந்திப்பு சாலைகளில் போக்குவரத்தை சரிசெய்யும் காவலரிலிருந்து அங்கு புத்தகம் விற்பனை செய்பவர் வரை ஒவ்வொருவரையும் நம் கண்முன் நிறுத்தி மகிழும் கவிஞர் அலைபேசிகளின் வழியே நமது கேளிக்கைகள் நாள்முழுவதும் எவ்வாறெல்லாம் செலவிடப் படுகிறதென்பதை வித விதமாய் வரைந்திருக்கிறார்.

அதிசய மழை எனும் கவிதையில்

அலைபேசி வாயிலாக பேசும் ஒருவர், பெய்யாத மழையை பெய்வதாய் கூறி அருகிலிருப்பவரை வியப்பில் ஆழ்த்துவது எல்லா ஊர்களிலும் நடந்துகொண்டுதானே இருக்கிறது.

வழியிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பைத்தியகாரர்களை கண்டிருப்போம், அவர்கள் எப்போதும் எதையாவது உளறிக்கொண்டேயிருப்பார்கள், அப்படிப்பட்ட ஒரு பைத்தியகாரியைப் பற்றி இவரது பார்வை….

“ஒரு பைத்தியக்காரியின் சொற்களென
சதா பெய்கிறது மழை
நகர வழியற்று
அருகமர்ந்து
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
சக
பைத்தியகாரனாக”

பல்வேறு விதமான மனிதர்களையும் நிகழ்வுகளையும் கருணை மனதோடும் இரக்க குணத்தோடும் வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர், மீண்டுமொரு முறை தந்தையைப்பற்றியும் அவரது இழப்பினைப்பற்றியும் எழுதி வாசிப்பவர்களின் விழிகளையும் மனதையும் நனைய வைத்துவிடுகிறார், ஆம் தந்தையின் அஸ்தியோடு அவர் ஆறுவரை நடந்து செல்லும்போது மனதில் ஏற்படும் வலிகள் எவ்வளவு கொடுமையானது என்பதையும், அத்துயர நேரத்தில் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றும் அப்பாவுடனான பழைய நினைவுகளை பேசுவதை நினைத்து நினைத்து நகரும் தூரம் எவ்வளவு துயரமானதென்பதையும் கண்ணீரோடு பதிவு செய்திருக்கிறார்.

இறுதியாக நான்கு தேநீர் கோப்பைகளோடு வழியனுப்பும் கவிஞரின் இத்தொகுப்பு, உளவியலோடு உணர்வுகளும் கலந்த உன்னத தொகுப்பாகும்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : “ஹோ… என்றொரு கவிதை”

நூலாசிரியர் : இரா.பூபாலன்

வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு

பக்கங்கள் : 96

விலை : ₹130

நூலைப் பெற  : 98422-75662

 

நூலறிமுகம் எழுதியவர் 

கோவை ஆனந்தன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *