ஹோ … என்றொரு கவிதை - இரா.பூபாலன் |Hoo Ennoru Kavithai

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் செயலாளர். கொலுசு என்ற இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் என பல்வேறு தளங்களில் இயங்கும் பூபாலன் அவர்களின் எட்டாவது கவிதைத் தொகுப்பு இது. இவரது பல கவிதைகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கப்பட்டிருக்கின்றன. இவரது சில கவிதைகள் பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் உள்ள கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் உள்ளன.

முத்தங்களற்ற
கவிதைகளற்ற
புன்னகைகளற்ற
ஒரு நாளை
நான் சந்தித்து விடவே கூடாது
நீலம் பாய்ந்து விடக்கூடும்
நினைவுகளெங்கும்
என்று தனது உள்ளத்தின் ஆசையை பெருங்கனவை வெளிப்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கும் கவிஞரின் மனமெங்கும் நிறைந்து கிடக்கிறது அன்பும் கருணையும் நேசமும் மனிதர்கள் மீதான நேயமும்.

அன்பைக் கொண்டு அகிலத்தை காணும் கருணை மனதில் வாழும் கவிஞரின் எண்ணங்கள் முழுக்க பரந்து கிடக்கின்றன சக உயிர்கள் மீதான பேரன்பும் பிரியமும். விடியும் எல்லா நாளும் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டாலும் உள்ளே ஒளி வீசும் அன்பைக் கொண்டு அனைத்தையும் அடையும் மனதை வளர்த்து விட்டிருக்கிறது காலமும் கவிதையும் என தன்னை அடையாளமிடுகிறது கவிஞரின் பேனா.

அன்பையும் அறிவிக்கத் தெரியாமல் அகிலத்தில் நம் பாதங்கள் உயர்ந்திட தம் தோள்களை ஏணியாக்கிக் கொண்டவர் முடிவிலிக்குள் நம்மை முழுமையாய் கரைத்திடும் அப்பாக்களுக்கு எப்போதும் முதல் மரியாதை தானே தரப்படும். ஆதிமூலத்தை பிரதி எடுக்கும் செயல் அவ்வளவு எளிதானதல்ல. தன்னையே கரைத்து தன்னை நம்பிய குடும்பத்தை தன்னிகரற்ற நிலைக்கு நகர்த்திட தலைவனாய் மாறிப்போன தகப்பனின் உதிரத்தில் நமக்கான நாளைய பொழுதுகள் சிறப்புறவும் திட்டங்கள் இருக்கும். அத்தகு தகப்பனை உணர்தல் என்பது கடலுக்குள் கரையைத் தேடும் தேடலை விட கடினமானது. நூலின் தொடக்க வரிகளாக அப்பாவின் கையெழுத்து நம்மையெல்லாம் கரம் பிடித்து நூலுக்கு இழுத்துச் செல்கிறது அன்பிலும் பாசத்திலும்.

உடலின் ஊனத்தை உள்ளத்து ஊனமாக்கிடாது எழுத்தின் பின்னால் தன்னை உயர்த்திப் பிடிக்கும் அவனுக்குள் நமது பரிதாபங்களும் கருணைகளும் தாக்கத்தையோ தடுமாற்றத்தையோ ஏற்படுத்துவதில்லை. நடமாடும் கடவுள் என குழந்தைகளின் அன்பில் தன்னையே ஒப்படைக்கும் அவனின் வாழ்விற்கு வழி விட்டு ஒளிர்கிறது சாலையில் சிவப்பு என்பதை

“அவன் பொருட்டு
சமயங்களில்
சற்று நேரம்
கூடுதலாக ஒளிர்கிறது சிவப்பு”
என விவரிக்கிறது.

இயற்கையைப் பாழாக்கி இயற்கையை புறம் தள்ளி தனக்குள் மட்டுமே உலகத்தை பார்த்தபடி வாழும் நகரத்துவாசிகளுக்கு
“மழையோடு வாழ்ந்த
ஓட்டு வீட்டு காலம்
ஒன்று இருந்தது
அடுக்கு மாடி கட்டிடங்களுக்குள்
வாழ்க்கை
அடைக்கலமான பின்பு
தீண்ட தகாதவன் என
ஒதுக்கி
வாசலோடு
சென்று விடுகிறது மழை”
என புறம் தள்ளி எச்சரிக்கிறது இயற்கை.

கருத்துக்கும் காட்சிக்கும் மட்டுமல்ல சமயங்களில் வாழ்வின் குறுக்கே வந்து விடுபவர்களால் சந்தர்ப்பங்கள் சரிந்து சூனியத்தை நோக்கி நகர்த்தி விடக்கூடும் என்பதை அசந்தர்ப்பங்களில் குறுக்கிடுபவர்கள் சொல்லிச் செல்கிறார்கள்.

காட்சிகளின் வழி கவனிப்பை உற்றுப் பார்த்தால் நாளையை நகர்த்த நம்பிக்கை பிறக்கும் கதைகளின் பொழுதுகள். அலறலிலும் அணிவகுப்பிலும் அமையக்கூடும் அவரவருக்கான நல் மேய்ப்பர்கள் என்று காட்சிப்படுத்துகிறது நான் முனைச் சித்திரம் கவிதை

துன்பங்கள் தோல்விகள் அவமானங்கள் துரோகங்கள் என வாழ்வின் பயணத்தை இடையூறாக்கும் எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்காமல் தூக்கி எறிந்து விட்ட தன்னம்பிக்கையால் மிளிர்கிறது எதையும் எதிர்கொள்பவனின் முகம் என்பதையே பிரதிபலிக்கிறது பிரதிபலிப்பு கவிதை.

ஈடேறாத கனவுகளின் சுமைகள் இன்னும் அழுத்தக்கூடும். வாழ்வை நகர்த்திட வசதிகளைப் பெருக்கிட பொய்களும் ஏமாற்றுதலும் துணை புரியக் கூடும் அப்படியாயினும் எனக்குள் அழுத்திக்கொண்டு புன்னகைகளை பரப்பி புவியை நிறைக்கிறேன் என்பதை
“நானென்பதன் அடியாழத்தில்
தேங்கிக் கிடக்கும்
நிராசையின் கசடுகள்
நான் மட்டுமே அறிந்தது”
என்ற வரிகள் காட்சிப்படுத்துகின்றன

இரவும் பகலும் பூட்டப்பட்டே வாழும் நகரத்து வீட்டில் பாராட்டும் அழுகையும் புகழும் போக்கிடமும் தனக்குத்தானே செய்ய வேண்டிய அவலத்தை விவரிக்கிறது தனக்குத்தானே கவிதை.

பெருங்கருணையில் தன்னையே விதையென உலகத்தில் பரப்பும் அன்பை பெறுபவர்களின் துரோகத்தை எண்ணிப் பார்த்தால் பதற்றம் கூடத்தானே செய்கிறது “வங்கி யில்
பணம் எடுத்து விட்டுத்
திரும்புகையில்
யாரோ ஒருவர்
புன்னகைத்துச் செல்கிறார்
பையைத் தொட்டு தொட்டுப்
பார்த்துக் கொண்டே
வீடு திரும்புகிறது மனது”

மனிதர்கள் அணியும் முகமூடிக்குள் ஒளிந்து கிடக்கும் உயிரினத்தை அடையாளம் காண்பதை யாரும் அவ்வளவு எளிதில் விளக்கி விட முடியாது.

ஆடு மாடு, கோழி என தன்னைச் சுற்றி வளரும் உயிர்களையும் பிள்ளையென வளர்த்து ஆளாக்கிய பாட்டன் பூட்டன் பரம்பரையில் பிறந்த நாம்தானே இன்றைய தலைமுறையை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் அலைபேசி வழியேயும் முகநூல் வழியையும் வளர்க்கப் பார்க்கிறோம் என்பதை
“”நின்றபடியே அவசரமாக உண்டு பயணத்தில் பரபரக்கப் பாதி உண்டு
பல நாட்கள் மீதியைக்
குப்பைக்கு வார்க்கும் நம்மை
அவர்கள் தாம் பெற்றார்கள்
வளர்த்தார்கள்”
என தலைமுறை இடைவெளியோடு விளக்கி விடுகிறது

மகளாகப் பிறந்தவள் மற்றொரு அன்னை தானே. மனசுக்குள் வெடிக்கும் ஆற்றாமைகளுக்கான அருமருந்தாய் புதல்வி புன்னகையே போதும். அவள் வரைவன எல்லாம் அப்பாக்களுக்கு உலக அதிசயம் தானே. அப்பாவையே வரைந்தால் நமக்கு கிடைத்த உலகின் அற்புதம் என்று கொண்டாடி மகிழ்வோம் அந்த ஆனந்தத் தருணத்தை நமக்கும் கடத்துகிறது என்னை வரைபவள் கவிதை.

நூலின் தலைப்புக்கான கவிஞரின் விளக்கக் கவிதை மிக அருமை. மனிதர்கள் பக்கம் பக்கமாக பேசினாலும் நூல்கள் நூல்களாக எழுதித் தீர்த்தாலும் இன்னும் நம்மால் அர்த்தம் காண முடியாத மழலையின் சிரிப்பிலும் மழலையின் வார்த்தைகளிலும் ஒளிந்து கிடக்கிறது உலகின் பேரதிசயங்கள் என்பதை அழகியலோடு விளக்குகிறது கவிதை.

அப்பாவின் பிம்பம், கைவிடப்பட்ட வீட்டின் துயரம், வாசலோடு ஒதுங்கிப் போன மழை, குறுக்கிடுபவர்களின் தருணங்கள், காதலின் பிரிவில் கடவுளை நினைப்பவன், துயரங்களின் சுமை, தன்னையே பிரதிபலிப்பவன், கசடுகளில் நிறையும் நிராசைகள், காலமாற்றத்தில் தனித்துவிடப்பட்டவன், தலைமுறை இடைவெளியில் வாழும் பரம்பரை, தொலைத்த இயற்கையைத் தேடும் பசி, மழலையின் சொற்களில் பிறந்திடும் கடவுள், பேராசையைத் தூண்டும் புத்தனின் திரை, மகிழ்ச்சியில் துள்ளும் விடுமுறை நாள், உறுப்புகளின் வலி சுமக்கும் வீட்டின் பெருமூச்சு என கவிதையின் ஊர்வலத்தில் காணும் தருணங்களை கடத்தி வந்து நமக்குள் நினைவுகளாக்கி இளைப்பாறிக் கொள்கிறது கவிதைத் தொகுப்பு.

 

நூலின் தகவல்கள் 

நூல் : ஹோ என்றொரு கவிதை

நூலாசிரியர் : இரா பூபாலன்

வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

பக்கம் :  96

விலை : ரூ. 130

தொடர்புக்கு : 98 42 27 56 62

 

எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *