கொரோனா கிருமியின் பிறப்பிடமான சீனாவை விட அதிக கொரோனா மரணங்களால் உலகை பதைபதைக்க வைக்கிறது இத்தாலி. சீனாவுடன் நில எல்லைகளைக் கொண்ட பிற ஆசிய நாடுகளை விட இத்தாலியில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் ஏன்? இந்தியர்களுக்கான படிப்பினைகள் என்ன?

ஊஹான் பயங்கரம்:

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஊஹான் நகரத்து கசாப்பு கடை சந்தைகளில் கொரானா உருவாகி பரவ ஆரம்பித்தது. டிசம்பர் 31 ஆம் தேதி, உலக சுகாதார நிறுவனத்துக்கு கொரானா கிருமி பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்தது சீனா. கொரானாவின் தாக்கம் ஊஹான் நகரம் அமைந்துள்ள ஹூபேய் மாகாணத்தையும் தாண்டி பரவ ஆரம்பித்தது. ஹூபேய் மாகாணம் நாலாபக்கமும் நிலத்தால் சூழப்பட்டதால் கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்பும் ஏற்பட்டது.

சீனப்புத்தாண்டு:

Coronavirus And The Year Of The Rat

இந்த இக்கட்டான சூழலில் வந்தது சீனப்புத்தாண்டு. ஜனவரி 25 ஆம் தேதி புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் பங்கேற்ற புலம் பெயர்ந்த சீனர்கள் தங்கள் உறைவிட நாடுகளுக்கு திரும்பியது கொரோனாவின் உலகப் பரவலுக்கு வழிவகுத்தது. ஜனவரி 30 ஆம் தேதி தான் இத்தாலியின் முதல் கொரோனா பாதிப்பு உணரப்பட்டது. ரோம் நகருக்கு சுற்றுலா வந்த சீனத்தம்பதியினர் தான் இத்தாலியின் முதல் கொரோனா பாதிப்படைந்த ஜோடி. ரோம் நகரம் அமைந்துள்ள மத்திய இத்தாலியை விட அதிக கொரோனா மரணங்களை சந்தித்தது வடக்கு இத்தாலி. ஏன்?

வடக்கு இத்தாலி:

ஒரு வால் போல ஐரோப்பாவின் நிலப்பகுதியிலிருந்து மத்திய தரைகடலில் நீண்டிருக்கும் நாடு இத்தாலி. ஐரோப்பாவின் பிரதான நிலப்பகுதியோடு இணைந்திருக்கும் பகுதி வடக்கு இத்தாலி. வடக்கு இத்தாலியின் மிலன் நகரம் ஆடை மற்றும் தோல் பொருட்கள் வடிவமைக்கு பெயர் பெற்றது. வடக்கு இத்தாலி ஆடை தோல் தொழிலகங்கள் நிறைந்தது.

சீனா-இத்தாலி தொடர்பு:

UK ramps up virus fight; 12-week isolation for over-70s | The ...

இத்தாலியின் ஆடை உற்பத்தி தொழிலகங்கள், குறைந்த உற்பத்தி செலவுக்கு பெயர்போன சீனா நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இதில் சில நிறுவனங்கள் ஊஹான் நகரத்திலிருக்கின்றன். வேலை வாய்ப்புகளுக்கு சீனத் தொழிலாளர்களும் இத்தாலிக்கு இடம்பெயர்ந்தனர். ஏறக்குறை 3 லட்சம் சீனர்கள் இத்தாலியில் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வடஇத்தாலியின் ஆடை-தோல் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்திய நாடு இத்தாலி என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரானா உருவாகிய ஊஹான் நகரமும் விமான சேவையின் மூலம் இத்தாலியின் மிலன் நகரத்தோடு இணைக்கப்பட்டிருந்தது என்பது கூடுதல் தகவல்.

பாதிப்படைந்த வடக்கு இத்தாலி:

ரோம் நகரின் முதல் கொரோனா பாதிப்புக்கு பிறகு சீனாவிலிருந்து வரும் விமானங்களை இத்தாலி ரத்து செய்தது. ஆனால் வடக்கு இத்தாலியில் ஏற்கனவே கொரோனா பரவ ஆரம்பித்திருந்தது. மிக அதிக கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பது மிலான் நகரம் அமைந்துள்ள லோம்பார்டியா மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு இத்தாலியிலுள்ள உலகப்புகழ் பெற்ற வெனிஸ் நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும் கொரோனாப் பரவலுக்கு காரணமானார்கள். இதனால் வட இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏறக்குறைய 64 ஆயிரம் பேர் இத்தாலியில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூத்த குடிமக்கள் அதிகம் வாழும் உலகின் இரண்டாம் நாடான இத்தாலியில் கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலிய ஜனத்தொகையில் 23சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதனால் உயிர் பலிகளும் அதிகம். 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை மரணமடைந்திருக்கிறார்கள்.

Coronavirus: Italy bans any movement inside country as toll nears ...

பேரப்பிள்ளைகளுக்கும் தாத்தா-பாட்டிகளுக்கும் இத்தாலிய சமூகத்தில் நெருக்கம் அதிகம். சிற்றூர்களில் தங்கள் முதிய பெற்றொருடன் தங்கி தினமும் நகரங்களில் பணிபுரிய பயணிக்கும் இளைஞர்கள் யுவதிகளால் நோய் பாதிப்பு நகரங்களிலிருந்து சிற்றூர்களுக்கு சென்றதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது.

ஐரோப்பிய பரவல்:

இத்தாலிக்கு அடுத்த நிலைகளில் கொரொனா பாதிப்புக்கு உள்ளான ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் வட இத்தாலிக்கு அருகிலுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவிலான சுற்றுலாப் பயணிகள் புழங்கும் இந்த நாடுகளில் கொரோனா பரவல் எளிதில் சாத்தியமானது.

காரணம் என்ன?:

சீனாவிலிருந்து வரும் விமானங்களை ஜனவரி 31 ஆம் தேதியே இத்தாலி தடைசெய்தாலும், மக்கள் சமுதாய விலகலை (Social Distancing) கடைபிடிக்கவில்லை. கேளிக்கை விருந்துகளிலும் விளையாட்டு போட்டிகளிலும் கூட்டம் குறையவில்லை. ஆரத்தழுவி வாழ்த்து தெரிவிக்கும் சமுதாய முறையும் மாறவில்லை. கூடவே, உலக சுற்றுலாப் பயணிகளையும் கட்டுப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் பல இருந்தன.

Chinese New Year Film Releases Canceled in Response to Coronavirus ...

பிப்ரவரி 21 ஆம் தேதி லோம்பார்டியா மாகாணத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல், பிப்ரவரி 27 ஆம் தேதி காவல்துறை நகரத்து வீதிகளில் ரோந்து சுற்றி கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டியதாயிற்று. இதற்கிடையே பிற மாகாணங்களில் நோய்த்தொற்று பரவவே, மார்ச் 9 ஆம் தேதி இத்தாலி முழுவதும் ஊரடங்கு அமலானது.படிப்படியாக மாகாணங்களை மூடும் இத்தாலியின் முயற்சி கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்பது தெளிவு.

உலக மக்களுக்கு இத்தாலி கற்று கொடுக்கும் பாடம், தன்னிச்சையான சமுதாய விலகல். மக்களே தாமாக முன்வந்து சமுதாய விலகலை கடைபிடிக்க வேண்டும். தவறினால், காலதாழ்த்தாமல் அரசாங்கங்கள் சமுதாய விலகலை கடுமையாக அமல்படுத்துவது ஒன்றே வரும் முன் காக்கும் வழி.

இந்தியாவும் இத்தாலியும்:

இத்தாலிய செய்திகளைப் பார்த்து பயமடையத் தேவையில்லை ஆனால் முன்னெச்சரிக்கை தேவை. இத்தாலிய மக்கள் தொகையில் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டிருப்பது 0.1 சதவீதம். பாதிக்கப்பட்டவர்களில் பலியானவர்கள் 9.5 சதவீதம்.

இத்தாலியில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அதே நாளில் (ஜனவரி 30) தான் இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஊஹான் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய ஒரு கேரள மாணவர் இந்தியாவின் முதல் கொரானா நோய் பாதிப்படைந்தவர் என்பதை நினைவில் கொள்க. இத்தாலியை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு. இத்தாலியில் கொரொனோவின் அதிவேகப் பரவலுக்கு புலம்பெயர்ந்த சீனர்களின் பயணமும், சுற்றுலா பயணிகளும் முக்கிய காரணிகளாக இருந்தாலும் மக்களின் ஒத்துழையாமையும் மிக முக்கிய காரணம்.

Cries of despair from Ground Zero of the coronavirus outbreak ...

இந்தியர்கள் எச்சரிக்கையோடு இருப்பது மிக அவசியம். ஏனெனில் இந்திய மக்கள் தொகையான 133 கோடி ஒரு பெரும் சவால். இந்திய மக்கள்தொகையில் 65 வயதுக்கு அதிகமானவர்கள் 5 சதவீதம் பேர். இவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 6.6 கோடி. இது இத்தாலியின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்.

சமுதாய விலகலை ஒவ்வொருவரும் கடுமையாக குடிமக்களின் கடமையாக கடைபிடித்து தன்னையும் நாட்டையும் காப்பதே இத்தாலி ஒவ்வொரு இந்தியனுக்கும் சொல்லும் பாடம்!

Image

– ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

One thought on “இத்தாலியில் கொரோனா கொடூரம்: காரணங்கள் என்ன? இந்தியாவுக்கான படிப்பினைகள் என்ன? ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு”
  1. சமூக விலகல் அவசியம். அதேசமயம் இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைதளுக்கு பிசிஜி தடுப்பூசி போடுகின்ற முறை முழுமையான அளவுக்கு இல்லை.இதுவும் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமைக்குக் காரணம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *