லக்னோவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாரபங்கி என்ற ஊரைச் சேர்ந்த விஜய்குமார் சர்மா டாக்சி ஓட்டுநராகப் பணி புரிந்து வருபவர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் நடந்த போது, தான் செய்து வருகின்ற வேலையை விட்டு விட்டு நாட்டிற்காக உழைக்க வேண்டும், குறைந்தபட்சம் உத்தரப்பிரதேச மாநிலத்திற்காகவாவது உழைக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. எனவே 2017 பிப்ரவரி 19 அன்று டாக்ஸி ஓட்டுவதை நிறுத்தி விட்டு, மாறாக, தனது வாக்கைச் செலுத்துவதற்காக பாரபங்கியில் வரிசையில் சென்று நின்று கொண்டார். தன்னை அகிலேஷின் தீவிர ஆதரவாளராகவும் தெரிவித்துக் கொள்பவராக இருக்கும் சர்மாவிடம் ‘மோடிக்கு’ வாக்களித்ததாகச் சொல்லுவதில் எவ்வித மன உறுத்தலும் இருக்கவில்லை.
மெல்ல மெல்ல விஷமேற்றும் மதிநுட்பம்…
அண்மையில் அவருக்கு வந்த சில தகவல்கள், பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் அவரைத் திருப்பி விட்டிருக்கின்றன. காஷ்மீரில் ஹிந்துப் பெண் ஒருவரைக் கடத்தி விட்டதாக வாட்ஸாப்பில் எங்களுக்கு அடிக்கடி தகவல்கள் வந்தன என்று சொல்லிய சர்மா, ஓரளவிற்கு மேல் ‘அவர்கள்’ ஏதோ தவறு செய்வதாகவும், அவர்களுக்கு சமாஜ்வாதி அரசாங்கம் மிக அதிகமாக சுதந்திரம் கொடுத்து வருவதாகவும் நாங்கள் உணரத் தொடங்கினோம் என்று கூறினார்.
‘அவர்கள்’ என்று முஸ்லீம் சமூகத்தவரைப் பற்றித்தான். சர்மா இங்கே குறிப்பிடுகிறார்.
சர்மாவும், அவரைப் போன்று கணக்கிலடங்காத பலரும் தங்களை வந்து சேருகின்ற தகவல்கள் எவ்வித நோக்கமும் அற்ற துணுக்குத் தகவல்கள் என்றே கருதுவதால், அந்த உண்மையைப் பரப்ப வேண்டும் என்ற ஆவல் கொண்டு, உண்மையில் அந்தத் தகவல்கள் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன என்பதை அறியாது, தங்களோடு இணைப்பில் இருக்கும் பிறருக்கு அந்த தகவல்களை அப்படியே அனுப்பி வைக்கின்றனர்..
ஆள் பிடிக்கும் கருவியாகிப் போன ஸ்மார்ட் போன்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ நகர்ப்புறப் பகுதியில் இருந்து, புந்தல்காண்டில் மிகத் தள்ளி அமைந்திருக்கும் மாணிக்பூர் வரையிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரையும் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக வெற்றிகரமாக ஒருங்கிணைத்ததன் மூலம் தங்களது புதிய ஊடக உத்தியைத் தீவிரமாகவும், மிக உன்னிப்பாகவும் திட்டமிட்டு பாஜகவினர் அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேச பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளராக, கட்சியில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்து வருகின்ற JPS ரத்தோர் இருக்கிறார். ‘இரவு, பகல் என்று பாராமல் வாக்காளர்களின் மனதைக் கவர்வதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. அவர்கள் எதைப் பார்த்தாலும், எங்களை மட்டுமே பார்ப்பதாக இருக்க வேண்டும், எங்களது தகவல்களை மட்டுமே கேட்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியே நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ என்று ரத்தோர் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் எந்தவொரு கட்சியும், இப்போது பாஜக வென்றிருப்பதைப் போல 1980க்குப் பிறகு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் வென்றதில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி 325 இடங்களை வென்று அரசாங்கத்தை அமைத்துள்ளது. அனைத்து பெருமைகளும் டாக்ஸி ஓட்டுநரான சர்மாவைப் போன்று எண்ணற்றவர்களைத் தங்கள் பக்கமாக மடைமாற்றியிருக்கும் பாஜக தகவல் தொழில்நுட்பத்துறைக்கே சென்றடைய வேண்டும்.
தொழில்நுட்பக் கட்டமைப்பு
முன்பு லக்னோவில் மிகச் சிறிய அறையில் இருந்து இயங்கி வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, இன்று லக்னோவில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தின் ஒரு தளம் முழுவதையும் ஆக்கிரமித்து இருப்பதே அதனது முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறைக்கென பணிபுரிபவர்கள் உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கின்றனர்.
2014 பொதுத்தேர்தல் முடிவுகளை ஆராய்ந்த போது, உத்தரப்பிரதேச வாக்காளர்கள் நடைமுறையில் இருக்கும் சாதி சார்ந்து வாக்களிக்கும் முறையைத் தாண்டி மோடிக்கு வாக்களித்திருப்பதை தாங்கள் கண்டறிந்ததாக ரத்தோர் கூறுகிறார். அப்போது பாஜக 42.6 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. புதிதாகப் பெற்றிருக்கும் வாக்காளர்களை இழந்து விடக் கூடாது என்று அந்தத் தேர்தலுக்குப் பிறகு கட்சி முடிவெடுத்தது. அதற்கப்புறம் தரவுகளைச் சேகரிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் ஆன்லைன் உள்ளிட்டு பல வகை உத்திகள் கட்சியால் பயன்படுத்தப்பட்டன.
உத்தரப்பிரதேச பாஜக அமைப்புச் செயலாளராக 2014 ஜூன் மாதம் ஏபிவிபியின் முன்னாள் தலைவரான சுனில் பன்சால் நியமனம் செய்யப்பட்டார். 2016 ஜூனில் சஞ்சய்ராய் பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருடைய தலைமையின் கீழ், சமாஜ்வாதி, பாஜக கட்சிகளின் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் போர்க்களமாக உத்தரப்பிரதேசம் மாறியது. மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் உச்சத்தில், இந்த இருவரும் சேர்ந்து ஏறத்தாழ ஒன்பது லட்சம் உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. பாஜகவினர் மேற்கொண்ட இத்தகைய கூர்மையான, உண்மை போன்ற பொய்ப் பிரச்சாரத்துக்கு பழக்கப்பட்டிராத ஒருவரைக் காண்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கும்.
அகிலேஷ் யாதவின் ஆதரவாளராக இருந்த போதிலும், சமாஜ்வாதி கட்சியின் அரசாங்கம் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக லக்னோவில் உணவகம் ஒன்றை நடத்திவரும் 35 வயதான அபய்சிங் குறிப்பிடுகிறார். முன்னாள் அமைச்சரான காயத்ரி பிரஜாபதி செய்திருக்கும் குற்றங்களைப் பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்ற அபய்சிங், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் மீது வைக்கின்ற விமர்சனம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பதோடு, அவ்விரு கட்சிகள் தோல்வி அடைந்திருக்கும் விஷயங்கள் குறித்து நன்கு அறிந்தவராகவும் இருக்கிறார்.
பாஜகவின் வெற்றிகள் குறித்து மிகச் சரியாகத் தெரியவில்லை என்றாலும், பாஜகவைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியுடனும், ஆதரவாகவும் பேசுபவராக அவர் இருக்கிறார். பாஜகவால் நடத்தப்பட்டு வருகின்ற சமூக ஊடகங்களில் இருந்தே அரசியல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதாக அவர் கூறுகிறார்.
1லட்சத்து 28 ஆயிரம் பேர் தலைமையில் தனித்தனி சமூகவலைத்தள குழு ,….
பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தங்களுக்கான வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதற்கான கூட்டங்களை நடத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சமூக நல்லிணக்க செயல்பாடுகளைத் தூண்டும் செயல்பாடுகளில் ஈடுபடுவதையே முழுமையாக நம்பி இருக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தன்னுடைய கட்சி அமைப்பை பிராஜ், கான்பூர், பச்சிம், காசி, ஆவாத், கோரக்பூர் என்று ஆறு மண்டலங்களாக பாரதிய ஜனதா கட்சி பிரித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக 75 மாவட்டங்களே இருந்த போதிலும், இந்த ஆறு மண்டலங்களும் 92 மாவட்டக் கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கட்சியின் செயல்பாடுகள் சட்டமன்றத் தொகுதிகள் அளவில், வட்டார அளவில் என்றும், இறுதியாக ஒவ்வொரு பூத்திற்கும் ஏழு உறுப்பினர்கள் என்ற அளவில் பிரித்து மேற்கொள்ளப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் இத்தகைய வலைப்பின்னலோடு, பாஜக வட்டார அளவில் 1,28,000 பேரைத் தலைவர்களாக நியமித்திருக்கிறது.
ஒவ்வொரு நிலையிலும் தனக்கான ஊழியர்களை தகவல் தொழில் நுட்பத் துறை நியமனம் செய்துள்ளது. ராய் தலைமையில் 25 உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழுவைக் கொண்டதாக மாநிலத் தகவல் தொழில் நுட்பத்துறை இருக்கிறது. ஒவ்வொரு பிராந்தியக் குழுவிலும் இருபது உறுப்பினர்கள், 92 கட்சி மாவட்டங்களில் ஒவ்வொரு குழுவிற்கும் 15 உறுப்பினர்கள், வட்டார அளவில் குழுவிற்கு ஏழு உறுப்பினர்கள் என்று தகவல் தொழில் நுட்பத்துறை பரவி விரிந்திருக்கிறது. இது தவிர தொழில்நுட்பப் பணியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் என்று தங்களுக்குத் தேவையானவற்றை உருவாக்குவதற்காக, இருபது தொழில் வல்லுநர்களைக் கொண்ட தனிக்குழுவொன்றும் செயல்பட்டு வருகிறது.
தகவல்களைத் திருடுதல்…
கட்சியின் முதற்கட்டப் பணியாக, உறுப்பினர் சேர்க்கையின் போது உத்தரப்பிரதேச வாக்களர்களின் பெயர், தொலைபேசி எண், கிராமம் போன்ற அடிப்படைத் தகவல்களைப் பெறும் வகையில், அது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்பக் குழுவிடம் அளிக்கப்பட்டன. ‘அந்த உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தின் வழியாக மாநிலத்தில் உள்ள இரண்டு கோடிப் பேர் தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்தோம்’ என்று மாநில பாஜக துணைத்தலைவர் ரத்தோர் சொல்கிறார். பாஜகவில் உறுப்பினராவதற்காக குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தவர்களின் தொடர்பு எண் மட்டுமே எங்களுக்கு கிடைத்திருந்தது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை உறுதி செய்வதற்காக, நாங்கள் அவ்வாறு பெறப்பட்ட தொடர்பு எண்களில் உள்ளவர்களை அழைத்தும், குறுந்தகவல்களை அனுப்பியும் அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டோம் என்று ரத்தோர் மேலும் தெரிவித்தார்.
அதன் முடிவில், 1.3 கோடிப் பேர் குறித்த தகவல்களை தகவல் தொழில்நுட்பக் குழு உறுதி செய்து கொண்டது. சிறிது காலத்திற்குள்ளாக அவர்கள் பாஜகவின் ஆன்லைன், தொலைபேசி பிரச்சாரங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்களாக மாறினர். இதில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே முக்கிய குறியிலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டனர். தொடர்ந்து வந்த மாதங்களில், இவர்களுக்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை விமர்சனம் செய்யும், இக்கட்சிகளுக்கு மாற்றாக மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பாஜகவை ஆதரிக்கும் வகையில் இருந்த பல வாட்ஸாப் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
எதிர்கட்சிகளைக் கண்காணிப்பது….
மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தான் ஆற்றி வந்த பணியிலிருந்து விலகிய கன்ஷியாம் சிங் ரகுவன்சி என்பவர் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரச்சாரத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினரின் இணையவழி உத்திகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் நியமிக்கப்பட்டார். பகுஜன்சமாஜ் கட்சியினர் மிக எளிதாகத் தாக்கப்படும் வகையிலே இருந்ததாகவும், சமாஜ்வாதியினர் அவ்வாறில்லாமல் தங்களுக்குச் சவாலாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்து வந்தாலும், நல்ல தரமான கிராபிக்ஸைத் தயார் செய்வதற்கான பணமும் தங்களது பிரச்சாரத்திற்கு இருந்ததாக தகவல் தொழில்நுட்பக் குழுவின் மையக்குழு உறுப்பினாரான முக்தேஸ்வர் மிஸ்ரா தெரிவிக்கிறார்.
கருத்தை நுட்பமாகத் திணிப்பது…
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வாக்களர்களுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு செய்தியும் அவர்களுடைய பகுதியில் உள்ள பிரத்தியேக கலாச்சாரம், மொழி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, கான்பூர் மையத்தில் இருந்து வறட்சி, மற்றும் வறட்சி தொடர்பான உருவகங்கள் புந்தல்காண்ட் பகுதியில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உள்ளூர் மக்களின் பேச்சு வழக்கு மொழி குறித்து கவனமாக இருக்குமாறு தனது ஊழியர்களுக்கு பாஜக தகவல் தொழில்நுட்பத்துறை அறிவுறுத்தி இருந்தது. மாநிலத்தில் நிலவுகின்ற வேறுபாடுகள், தனித்தன்மை பற்றி மிகுந்த கவனம் கொண்டதாக பாஜக இருந்தது / இருந்து வருகிறது. விழிப்புணர்வு கொண்ட ஒருவருடைய ஆழ்மனதிற்குள் தங்களுடைய கருத்துக்களை நுழைப்பது என்பது மிகவும் சிரமமான பணிதான் என்ற போதிலும், விழிப்புணர்வு அற்றவர்களிடம் தங்களது நோக்கங்களைத் திணிப்பது மிகவும் எளிதாக இருந்ததாக ரத்தோர் கூறினார்.
திட்டமிட்ட பிரச்சாரம்…
பிராந்திய மையங்களுக்கும், மாவட்ட மையங்களுக்கும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை காவிக் கட்சி செய்து கொடுத்திருந்தது. ஒவ்வொரு மாவட்ட மையத்திற்கும் இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு பிரிண்டர், இரண்டு ஆப்பரேட்டர்கள் என்று ஒதுக்கப்பட்டதாக மிஸ்ரா தெரிவிக்கிறார். வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலமாக பிரச்சாரங்கள், உத்திகள் குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாற்றத்திற்கான யாத்திரையை ஒருங்கிணைக்கவும், பூத் அளவிலான பணியாளர்களைக் கையாளுவதற்காகவும், 20 மற்றும் 90 இருக்கைகள் கொண்ட இரண்டு கால் சென்டர்கள் உருவாக்கப்பட்டன. அந்த மையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தினந்தோறும் அறிக்கையைத் தயாரித்து மாநில பாஜகவிற்கு அளிக்கும் வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டது.
‘எங்களது முக்கிய நோக்கமாக இருந்த 5000 வாட்ஸாப் குழுக்களுக்குள் நுழைவது என்பதை தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே நாங்கள் அடைந்து விட்டோம்’ என்று மிஸ்ரா கூறினார். உத்தரப்பிரதேசம் தேர்தலுக்குள் நுழைந்த போது, ஒவ்வொரு வாட்ஸாப் குழுவிலும் சராசரியாக 150 பேரைக் கொண்ட 9000 வாட்ஸாப் குழுக்களுக்குள் தகவல் தொழில் நுட்பக் குழுவால் செல்ல முடிந்திருந்தது. அதாவது ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ ஏழு முதல் எட்டு செய்திகள் 13.5 லட்சம் பேரால் இவர்கள் அனுப்பி வைக்கும் செய்திகள் வாசிக்கப்பட்டன.
எண்களைத் திருடுவது…
பாஜகவின் அனுதாபிகளிடமிருந்து மோடி ஆதரவாளர்களைக் கண்டறியும் வகையில், தகவல் தொழில் நுட்பக் குழுவிடம் இருந்த தொடர்பு எண்களின் மூலமாக ஒவ்வொருவரையும் இந்தக் குழுக்கள் தொடர்பு கொண்டன. வாட்ஸாப் குழுக்களில் தீவிரமாக ஈடுபடுபவர்களை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அடுத்ததாக தங்களுடைய வாட்ஸாப் குழுவில் இந்த தகவல் தொழில்நுட்பக் குழுவில் இருக்கும் ஒருவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுமாறு தங்களிடம் இருந்த தொடர்பு எண் மூலமாகக் கேட்டுக் கொண்டனர். இறுதியாக அந்த வாட்ஸாப் குழுவை நிர்வாகம் செய்யும் வசதியை அவர்களால் பெற முடிந்தது. இவ்வாறான முயற்சிகளில் 30 -40 சதவீதம் தங்களால் வெற்றி பெற முடிந்ததாக தகவல் தொழில் நுட்பக் குழு தெரிவித்தது.
ஒரு வாட்ஸாப் குழுவிற்குள் நுழைந்தவுடன், அந்த நபர் எங்களுடைய பதிவுகளைப் பரிமாறிக் கொள்கிறாரா என்பதைக் கண்காணிப்பதோடு, அந்தக் குழுவில் உள்ள பிறரது தொடர்பு எண்களையும் எங்களால் பெற்றுக் கொள்ள முடிகிறது என்று மிஸ்ரா சொல்லுகிறார். ஒவ்வொரு வாட்ஸாப் குழுவிலும் உள்ள அனைத்து தொடர்பு எண்களையும் சாப்ட்வேர் மூலமாக தங்களால் முழுமையாக எடுத்துக் கொள்ள முடிவதாக தகவல் தொழில் நுட்பக் குழு தெரிவிக்கிறது. இதன் மூலமாக, தொடர்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்களை அறிந்து கொள்ள முடிவதோடு, ஒருவேளை குறிப்பிட்ட வாட்ஸாப் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டால் மற்றொரு புதிய குழுவை உருவாக்கிக் கொள்ளவும் அவர்களால் முடிகிறது. 2017 மார்ச் 3 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பக் குழுவின் அறிக்கையில் ஆறு பிராந்திய மையங்களின் மூலமாக 12 பதிவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைக்கு மாறான செய்திகள்…
இந்தச் செய்திகளில், படங்களின் கலவையாக ஐந்து, நேரிடையாக மத்திய அரசு, பிரதமர் மோடி, பாஜக மாநில அரசுகள் செய்துள்ள பணிகளைப் போற்றும் விதத்தில் ஐந்து, எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் விதத்தில் இரண்டு என்று இருந்தன. இந்த அதிகாரப்பூர்வ செய்திகளைத் தவிர்த்து, ஒவ்வொரு பொறுப்பாளரும் அந்த வாட்ஸாப் குழுக்களுக்குள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான அனுமதியும் இருப்பதால், ஒரு நாளைக்கான பதிவு 30 முதல் 35 வரையிலானதாகி விடுகிறது.
தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத தகவல் தொழில் நுட்பக் குழு உறுப்பினர் ஒருவர், எதிர்க்கட்சியினர் மீதான பிரச்சாரங்களில் எங்களுடைய உறுப்பினர்களால் அனுப்பப்படுகின்ற தகவல்கள் பல, உண்மைக்கு மாறானவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
சில பாஜக உறுப்பினர்களிடம் தங்களது வாட்ஸாப் நடவடிகைகளைக் காட்டுமாறு கேட்டுக் கொண்ட போது, அவர்கள் காட்டிய தகவல்களில் இருந்து சில விஷயங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. அந்தக் குழுக்களின் பெயர்கள் ஹிந்துத்துவா மணத்தோடு, ஹிந்துதள், ஜெய் ஸ்ரீராம், ஹிந்து ஏக்தா என்ற வகையிலே இருந்தன. பாஜக தகவல் தொழில் நுட்பக் குழுவின் உறுப்பினரை தங்களது குழுவிற்குள் அனுமதித்த 5000 வாட்ஸாப் குழுக்களின் அட்மின்களின் தகவல்களைக் கொண்ட சிறு புத்தகத்தையும் அவர்கள் காட்டினார்கள்.
ஹிந்து சமூகத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு அல்லது ஐந்து குழுக்கள் இருப்பதாக லக்னோவில் இருக்கும் சாரதாநகர் பாஜக யுவ மோர்ச்சா மண்டலின் தலைவரான வீரேந்திர திவாரி கூறுகிறார். ஒரே நாளில் ஏகப்பட்ட செய்திகளை திவாரி வாட்ஸாப் மூலமாக அனுப்பி வருகிறார். அந்தச் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி அவரிடம் கேட்ட போது, எங்களைப் பொறுத்தவரையிலும் நாங்கள் அனுப்புகின்ற அனைத்துமே உண்மையானவைதான் என்றார். அனைத்துக் கட்சியினருக்கும் முன்னதாகச் செயல்பட்டு, அவர்களுடைய தவறுகளை முன்னிறுத்துவதை தங்களது உத்தியாகக் கொண்டிருப்பதில் பாஜக தகவல் தொழில் நுட்பக் குழு வெற்றியடைந்திருக்கிறது. அதற்கான பலன்களைத் தங்கள் அனுபவித்து வருவதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய கருவியான ஃபேஸ்புக்…
ஃபேஸ்புக்கும் அவர்களைப் பொறுத்தவரை முக்கியமான கருவியாக இருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பக்கங்களை கட்சி நிர்வகித்து வருவதோடு, மாநிலத்திற்கென்று 21 லட்சம் லைக்குகளைக் கொண்ட “BJP4UP”, 19 லட்சம் லைக்குகளைக் கொண்ட “UttarDegaUP” என்று இரண்டு பக்கங்களையும் கொண்டிருக்கிறது. மாற்றத்திற்கான யாத்திரைக்கு முன்னதாக BJP4UP பக்கம் 10000 லைக்குகளை மட்டுமே கொண்டதாக இருந்தது. அந்த யாத்திரை முடிவடைந்த போது லைக்குகள் 10 லட்சமாக உயர்ந்திருந்தது. சரியான சமயத்தில் பதிவுகளை வெளியிடுவது பாஜகவின் இணையவழி உத்தியாக இருக்கிறது.
இறுதிக் கட்டத்தில் அதிரடி …
வாக்களிப்பதற்கான இறுதி நாளான மார்ச் 8 அன்று, உத்தரப்பிரதேச காவல்துறையினரால் ஹிந்து சாதுக்கள் தாக்கப்பட்டதாக BJP4UP பக்கத்தில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதனைப் பலரும் பார்த்ததோடு மட்டுமல்லாது பகிர்ந்தும் கொண்டனர்.
துல்லிய தாக்குதல், அசாமில் பாஜக பெற்ற வெற்றி, பணமதிப்பு நீக்கம் போன்ற விஷயங்களை முன்னெடுத்து சமாஜ்வாதி, காங்கிரஸின் பிரச்சாரத்திற்கு முன்னதாகவே பாஜகவின் இணையவழிப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறும் ரத்தோர், ஒவ்வொருவரும் எதைப் பார்க்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தோம் என்கிறார்.
மூளைச் சலவை
ஆதித்யநாத்தின் வண்ணமிகு கிராபிக்ஸ் செய்திகளைப் பலரும் விரும்பினர். அந்தப் பதிவுகள் நரேந்திர மோடியைப் பற்றிய பதிவுகளுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தன. ஒவ்வொரு நாளும் 30 முதல் 35 பதிவுகள் இந்தப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன. வாக்காளருடைய தனிப்பட்ட 30 நிமிடங்களை எங்களால் எடுத்துக் கொள்ள முடியுமென்றால், அவர்களை முழுமையாக மூளைச்சலவை செய்து, அவர்களுடைய எண்ணவோட்டங்களை தங்களால் வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
யாதவர்களை எதிரியாக மாற்றுதல்…
யாதவ் குடும்பத்தினர் ஹிந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் இருப்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சிக்கு எதிரான பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. மார்ச் 4 அன்று UttarDegaUP பக்கத்தில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு எதிரான நேரடித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. கோவில் ஒன்றிற்குள், முஸ்லீம்கள் தொழுகை நடத்துகின்ற பாணியில் யாதவ் அமர்ந்திருப்பதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதுவரையிலும் ஏறத்தாழ 19 லட்சம் பேருக்கு மேல் அதைப் பார்த்துள்ளதாகவும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் அதில் போடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
இது போன்ற வேறு சில பதிவுகளும் இருக்கின்றன. பிப்ரவரி 5 முதல் மார்ச் 8 வரையிலும், பிப்ரவரி 25 அன்று உருவாக்கப்பட்ட #KasabAgainstHindu உள்ளிட்டு 24 ஹேஷ்டேக்குகளை தகவல் தொழில் நுட்பக் குழு உறுப்பினர்களால் உருவாக்க முடிந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பப் பிரச்சார ராணுவம்..
இணையம், ஸ்மார்ட்போன் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களை சட்டமன்றத் தேர்தலின் போது தனது பிரச்சார ராணுவமாக பாஜக ஒருங்கிணைத்திருந்த போதிலும், தனக்கான வீரர்களை மிகக் கவனமாக தாங்கள் கையாள வேண்டியிருப்பதை தகவல் தொழில் நுட்பக் குழு உணர்ந்திருக்கிறது.
’எங்களது கட்டுப்பாட்டிற்குள் இல்லாத லட்சக்கணக்கான இணையவழி வீரர்கள் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். குர்மேகர் கௌர் விஷயத்தில், அவருக்கு சமூக ஊடகங்களின் வழியாக அளிக்கப்பட்ட மிரட்டல்களுக்காக எதிர்க்கட்சியினரால் நாங்கள் அதிகம் தாக்கப்பட்டோம். இவ்வாறு மிரட்டியவர்களில் பெரும்பான்மையோர் பாஜகவைத் தொடர்பவர்களாக இருந்தாலும், அவர்கள் எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. யாராலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று மிஸ்ரா கூறுகிறார்.
எப்படியிருந்தாலும், இப்போதைக்கு பாஜகவின் இணையவழி ராணுவப்படையினர், தங்களுடைய தலைவர்கள் விரும்பியவாறு உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வெற்றியின் பக்கத்திற்கு தள்ளியிருக்கின்றனர்.
https://www.newslaundry.com/2017/03/17/how-bjps-it-cell-waged-war-and-won-in-up
நன்றி: நியூஸ் லாண்டிரி
தமிழில்: தா. சந்திரகுரு