‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்?’  – கொந்தளித்த விவசாயிகள் | அஜய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா | தமிழில்: தா.சந்திரகுரு

Image Credits: The Wire2021 ஜனவரி 26 செவ்வாயன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி இது வரையிலும் தேசிய தலைநகரின் பகுதிகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றிருந்த பகுதிகளுக்கு ஊடகங்களின் ஒட்டுமொத்த பார்வையை மாற்றியமைத்தது. மிகவும் நெருக்கமான மக்கள் குடியேற்றங்கள், வளைந்து நெளிந்து செல்கின்ற குறுகிய சாலைகள் போன்றவற்றுடன் அமைந்துள்ள சாவ்லா, நங்லி, நாங்லோய், பார்வாலா, நஜாஃப்கார், பாப்ரோலா உள்ளிட்ட பிற பகுதிகள் அதிகாரத்தில் இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் கிராமப்புற தில்லி என்று நிராகரிக்கப்பட்டு வருகின்ற பகுதிகளாகும். இங்குள்ள பெரும்பாலான நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற நெடுங்காலமாக இங்கே குடியிருந்து வருகின்ற குடியிருப்பாளர்கள் சிலரைத் தவிர, பெரும்பாலும் இந்தப் பகுதிகள் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கின்ற பகுதிகளாகவே இருந்து வருகின்றன.

செவ்வாயன்று, ராஷ்டிரபதி பவன், பாராளுமன்றக் கட்டிடம், இந்தியா கேட், பாஜக ஆட்சியின் சமீபத்திய குறியீடாகி இருக்கின்ற போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை அருகருகே கொண்டிருக்கும் ராஜ்பாத்தில் நடந்த வழக்கமான குடியரசு தின அணிவகுப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கிய வேளையில், ​​ தில்லிக்கு வெளியே வசித்து வரும் மக்கள் விவசாயிகளின் அந்தப் பேரணிக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

‘இதுவரையிலும் இதுபோன்ற ஏற்பாடுகளை இந்தப் பகுதிகளில் நாங்கள் பார்த்ததே இல்லை. ஊடகத்தைச் சார்ந்தவர்கள், காவல்துறை, அரசு நிர்வாகம் சார்ந்து அனைத்து அதிகாரிகளும் இங்கே சுற்றிக் கொண்டே இருந்தனர்’ என்று பாப்ரோலா கிராமத்தில் வசித்து வருகின்ற கன்ஷியாயம் கவுர் தெரிவித்தார்.

Image Credits: The Wire

அந்த சுற்றுப்புறங்களில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், கடந்த இரண்டு மாதங்களாக அவற்றிற்கு எதிராக நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டங்கள் குறித்த தங்களுடைய புரிதலை வெளிப்படுத்தினர். ‘நிலைமை இந்த நிலைக்கு வந்திருக்கக் கூடாது. இந்தச் சட்டங்களை இயற்றுவதற்கு முன்பாக விவசாயிகளுடன் அரசாங்கம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். இப்போதும் கூட, அரசாங்கத்தால் ஏதாவது செய்திருக்க முடியும். கடுங்குளிரில் சாலைகளில் விவசாயிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்’ என்று மளிகைக்கடை உரிமையாளரான கவுர் கூறினார்.

இது எந்த இடம்?

திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி கடந்து செல்ல வேண்டிய சாவ்லா பேருந்து நிறுத்தத்தில் டிராக்டர்கள் கடந்து செல்வதைக் காண்பதற்காக மக்கள் கூட்டம் கூடியிருந்தது. முக்கிய பேரணி அந்தப் பகுதியைக் கடந்து செல்லவில்லை என்பதால், அங்கே கூடியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கிய போதுதான் திடீரென அங்கே சுமார் பத்து டிராக்டர்கள் தோன்றின. அந்த சந்திப்பில் போடப்பட்டிருந்த மிகப்பெரிய அளவிலான காவல்துறை குழு உடனே தயார் நிலைக்கு வந்தது.

விவசாய சங்கங்கள் ஒவ்வொரு பேரணியிலும் குறைந்தபட்சம் 1,000 டிராக்டர்களை எதிர்பார்த்திருந்தன. எனவே சாவ்லாவை அடைந்த அந்த விவசாயிகள் அங்கே விவசாயிகள் யாரையும் காணாதது குறித்து ஆச்சரியம் அடைந்தனர். சிலர் டிராக்டரிலிருந்து இறங்கி, ‘இது எந்த இடம்?’ என்று விசாரித்தார்கள். ஆரம்பத்தில் அந்த பத்து டிராக்டர்களும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழியையே பின்பற்றிச் சென்றிருந்தன. ஆனால் திக்ரியிலிருந்து நஜாஃப்கர் செல்லும் வழியில் பேரணியில் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொலைந்து போயினர். முக்கிய பேரணியில் தாங்கள் சேர வேண்டும் என்பதை உணர்ந்த அந்த விவசாயிகள் அவசரஅவசரமாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு நங்லி பால்பண்ணை பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தனர்.

அந்த பேருந்து நிலையம் சாவ்லாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அது ஒரு முக்கோண சந்திப்பாகும். துவாரகாவில் உள்ள பெரும்பாலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற நடுத்தரவர்க்கக் குடியிருப்புகளுக்கு அது இட்டுச் செல்கின்றது. பேருந்து நிலையம் மூன்று பக்கங்களிலும் தேசிய தலைநகரின் மிக நீளமான வடிகாலான ‘படா நாலாவால்’ சூழப்பட்டுள்ளது.

https://cdn.thewire.in/wp-content/uploads/2021/01/26230409/WhatsApp-Image-2021-01-26-at-10.13.37-PM-1024x768.jpeg
Image Credits: The Wire

அந்தப் பேரணிக்காக கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ஆயுதப் பிரிவினர், கலவரத்தை அடக்கும் குழுவுடன் காவல்துறையினர் அங்கே காத்திருந்தனர். டிராக்டர் பேரணி நாங்லி வழியாகச் செல்கிறது என்பதை அறிந்த மக்கள் காவல்துறையினரின் வேன்களின் பின்னால் கூடியிருந்தனர்.

உள்ளே செல்ல அல்லது வெளியேற வழி எதுவும் இல்லை

இதற்கிடையில் காவல்துறையினர் அந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்தை யாரும் நுழைய முடியாத அரணாக மாற்றி விட்டனர். யாரும் உள்ளே செல்லவோ அல்லது வெளியேறவோ முடியாத நிலை அதனால் ஏற்பட்டது. விளைவாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் அங்கே சிக்கித் தவிக்க நேர்ந்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் எப்போது அகற்றப்படும் என்பது குறித்து போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கவில்லை.

கூட்டத்தைக் கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசத் தொடங்கியபோது பேரணி இறுதியாக அங்கே வந்து விட்டது. கூட்டத்தில் ஒரு பகுதியினர் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி எதிர்வினையாற்றினர்.

தங்களைக் கடந்து செல்ல அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வயதானவர்கள் நிரம்பிய விவசாயிகள் குழு சென்று கேட்டுக்கொண்டது. ‘இங்கே நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் உள்ளன. இப்போது திரும்பிச் செல்ல முடியாமலும் இருக்கிறது. திக்ரிக்கே நாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறோம்’ என்று விவசாயி ஒருவர் அங்கே பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையரிடம் கூறினார்.

அதற்குள் கண்ணீர்ப்புகைக் குண்டுவெடிப்பால் கோபமடைந்த இளைஞர்கள் காவல்துறையினரின் ஊடாகச் சென்று அங்கிருந்த தடுப்புகளை அகற்றினார்கள். தந்திரமாக வழியைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் அங்கே நிறுத்தி வைத்திருந்த பேருந்தில் சிலர் ஏறினர். சில நிமிடங்களில் அந்த பேருந்தை  எப்படியோ இயக்கி சிறிது தூரம் ஓட்டி, அருகிலுள்ள வடிகால் அருகே அதை நிறுத்தினர். அதனால் டிராக்டர்கள் செல்வதற்கான வழி கிடைத்தது.

காவல்துறையினர் பேரணியை அனுமதிக்கும் வகையில் சாலையின் ஓரத்திலே சென்று நின்று கொண்டனர். காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஒரு பெரிய வன்முறை மோதலாக இருந்திருக்கக் கூடிய நிகழ்வு இருதரப்பிலும் விரைவாக சிந்தித்துச் செயல்பட்டதன் மூலம் எப்படியோ தடுக்கப்பட்டது.

https://cdn.thewire.in/wp-content/uploads/2021/01/26231253/WhatsApp-Image-2021-01-26-at-10.13.41-PM-1-1024x768.jpeg
Image Credits: The Wire

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த பாதையில் தடைகள் 

பேரணி செல்ல ஆரம்பித்த போது, அத்துடன் முடிவடையப் போவதில்லை என்றே தோன்றியது. பெரும்பாலான டிராக்டர்களில் மூவர்ணக் கொடி, நிஷன் சாஹிப் கொடி, பாரதிய கிசான் யூனியன் கொடி இருந்தன. பேரணியில் பங்கேற்றவர்கள் தேசபக்திப் பாடல்களை உரத்து முழங்கி வந்தனர். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்களால் அனைத்து டிராக்டர்களும் நிரம்பியிருந்தன. பேரணியில் பங்கேற்றவர்கள் அவற்றின் கூரைகளிலும் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டிருந்தனர். பேரணியில் கலந்து கொண்ட அனைத்து வாகனங்களிலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. போராட்டக்காரர்ளின் நோக்கங்களை அவை தெளிவாகக் குறிப்பதாக இருந்தன.

https://cdn.thewire.in/wp-content/uploads/2021/01/26231257/WhatsApp-Image-2021-01-26-at-10.13.42-PM-2-1024x768.jpeg
Image Credits: The Wire

மக்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ​​அரை மணி நேரம் கடந்த பிறகும் டிராக்டர்கள் வந்து கொண்டே இருந்தன. ‘கிசான் ஏக்தா ஜிந்தாபாத்’ அதாவது ‘விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக’ என்ற முழக்கம் அந்த இடத்தை நிரப்பியது. பார்வையாளர்களை சாலையிலிருந்து தள்ளி நிற்க வைக்கும் பொறுப்பையும், டிராக்டர்கள் தங்கள் பாதையில் செல்வதற்கான பொறுப்பையும் கூட்டத்தில் இருந்த சிலர் ஏற்றுக் கொண்டு செயல்பட்டனர்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பாதையை ஏன் பின்பற்றவில்லை என்று டிராக்டர்கள் செல்வதற்கான வழியைக் கவனித்துக் கொள்ள முயன்ற ஒருவரிடம் கேட்கப்பட்ட போது, ‘முதலில் அங்கீகரிக்கப்பட்ட வழியைப் பின்பற்றியே பேரணி சென்றது. ஆனால் அந்தப் பாதையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் எங்களுக்குத் தொல்லையாக இருந்தன. தடைகள் அகற்றப்பட்டவுடன் குழப்பம் ஏற்பட்டது. பேரணியும் அதே வழியைப் பின்பற்றிச் செல்ல முடியாது போனது. தில்லியைச் சுற்றியுள்ள அந்த வழி எங்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது. எங்கள் நண்பர்களைக் கண்டுபிடிக்கவே நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்’ என்று அந்த விவசாயி கூறினார். ஏற்கனவே விவசாயிகளுடன் ஒரு வழியைத் தீர்மானித்த காவல்துறையினர் பின்னர் அந்த வழியிலேயே தடுப்புகளையும் அமைத்தது தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு தடுப்புகளை வைக்கச் சொன்னார்கள்

மறுபுறம் திக்ரி எல்லை பேரணியைத் தடுப்பதற்கான கடைசி நிமிட ஏற்பாடுகளைக் கையாள்வது தில்லி காவல்துறையினருக்கு கடினமாகவே இருந்தது. தடுக்கப்பட்டிருந்த வழிகளில் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ரோந்து சென்றனர். விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

https://cdn.thewire.in/wp-content/uploads/2021/01/26231305/WhatsApp-Image-2021-01-26-at-10.13.41-PM-1024x768.jpeg
Image Credits: The Wire

ஆனால் சம்பவ இடத்தில் இருந்தவர்களுக்கு அது மிகவும் கடினமான நேரமாகவே இருந்தது. ‘என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அங்கே ஏராளமான டிராக்டர்கள் இருந்தன. அவற்றை நாங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. இந்த தடுப்புகளை எல்லாம் அங்கே ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் வைக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம்’ என்று பார்வையாளர்களை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டிருந்த இளைய காவலர் ஒருவர் கூறினார்.

பேரணியைக் கையாண்ட விதம் குறித்து நாங்லியில் நடந்த வாக்குவாதத்திற்கு சாட்சியாக இருந்த ஒருவர் கோபமடைந்தது புரிந்து கொள்ளத்தக்க வகையிலேயே இருந்தது. ‘விவசாயிகள் நாலாவைக் கடந்து தங்களுடைய முகாம்களுக்குத் திரும்பி விடுவதையே நான் விரும்பினேன். இங்கே தடுப்பு எதுவும் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும் பலரும் எந்தக் காரணமும் இல்லாமல் சிக்கித் தவித்தோம். எந்தவொரு விவசாயியும் காவல்துறையினரிடம் சண்டையில் ஈடுபடவில்லை எனும் போது அவர்கள் ஏன் தாக்கப்பட வேண்டும்?’ என்ற பீகாரில் இருந்து அங்கே குடியேறியிருக்கும் ராம்லால் தானும் ஒரு விவசாயிதான் என்றார்.

இறுதியாக விவசாயிகளின் பேரணியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிய போது, ​​ராம்லால் போன்ற நூற்றுக்கணக்கானவர்கள் இன்னொரு முறை போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் தங்கள் வீடுகளுக்குச் சென்றடைவது என்ற அவசரத்தில் அந்த பேரணியில் தங்களுடைய வாகனங்களுடன் நுழைந்தனர். நாலாவின் மறுபுறத்தில், துவாரகா எந்தவித பாதிப்புமின்றி மிக அமைதியாகவே இருந்தது.

நன்றி: தி வயர் இணைய இதழ், 2021 ஜனவரி 27

https://thewire.in/reportage/ground-report-farmers-tractor-rally-republic-day-delhi

தமிழில்: தா.சந்திரகுரு