உலகச் சுகாதார அமைப்பு (WHO) ஜனவரி 18 அன்று சீனாவின் வுஹானில் நாவல் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தனது முதல் அறிக்கையை வெளியிட்டபோது, இந்தியாவில் சில மாநில அரசுகளே மிகுந்த கவனம் செலுத்தின. ஆனால், தென் மாநிலமான கேரளாவின் சுகாதார அமைச்சராகப் பணியாற்றும் எளிய பெண்மணியான கே. கே. ஷைலஜா, உடனடியாக சுறுசுறுப்படைந்தார்.
கேரளாவைச் சேர்ந்த பல மாணவர்கள் வுஹான் பல்கலைக்கழகத்தில் படிப்பதை ஷைலஜா அறிவார்; முந்தைய ஆண்டு சிலர் ’பயிற்சிவேலை’(internship) கேட்டிருந்தார்கள். ஒரு நோய் வெடிப்பு ஏற்படுத்தக்கூடிய அழிவை அவர் நேரடியாக அறிந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு, முதல் முறை அமைச்சராக இருந்தபோது, அவர் விலங்குகளிடமிருந்து மக்களுக்குப் பரவக்கூடிய மற்றொரு கொடிய நோய்க்கிருமியான நிபா வைரஸ் வெடித்ததை எதிர்க்கொண்டார், “எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம்,” என்கிறார் அவர்.
ஜனவரி 24 ஆம் தேதிக்குள், ஷைலஜா தனது ’விரைவான மறுமொழிக் குழு’வின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார், ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்து, கண்காணிப்புக் குழுக்களை அணிதிரட்டினார். ஜனவரி 27 அன்று, முதல் குழு மாணவர்கள் வுஹானிலிருந்து திரும்பினர். மூன்று நாள்களுக்குப் பிறகு, அவர்களில் ஒருவரின் கோவிட்-19 பரிசோதனை ( பாசிடிவ்) நேர்மறையானது, இதுவே இந்தியாவின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று.
பெரிய நகர்ப்புற மக்கள்தொகை, பலர் வெளிநாடுகளில் வசிப்பது (முன்னும் பின்னுமாகப் பயணம் செய்கிறார்கள்), பிற மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை போன்ற காரணங்களால் கேரளா தீநுண்மி பரவுவதற்கு வாய்ப்பாக உள்ளது. இலக்குடனான சோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம், இடதுசாரி மாநிலஅரசு முதல்சில மாதங்களில் தினசரி புதிய நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வந்தது, இது இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட வரைபட வளைவைத் தட்டையாக்கியது. தேசியப் பொதுமுடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால், நோய்த்தொற்றுகள் மீண்டும் அதிகரித்துள்ளன, ஆனால் விசயங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களில் 0.36% பேர் மட்டுமே இறந்துள்ளனர், இது உலகின் மிகக்குறைந்த இறப்பு விகிதமாகும். (இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, கேரளாவிலும் இளம் மக்கள் தொகை அனுகூலமாக உள்ளது, எனினும் பல பார்வையாளர்கள் அதன் குறைந்த இறப்பு விகிதத்திற்கு அதன் தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் இன்னும் கொள்ளளவை எட்டாத மருத்துவமனைகள் ஆகியவையே காரணம் என்று கூறுகின்றனர்.)
“பல வழிகளிலும், [கேரளா] அதைச் சரியாகப் புரிந்து கொண்டது” என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தின் ’திரிவேதி உயிர் அறிவியல் பள்ளி’யின் இயக்கு நர் வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல். “எந்தவொரு இந்திய மாநிலமும் அதைச் சரியாகப் பெற்றிருக்கக்கூடும்.”
இந்தப்பெருமையெல்லாம் ’ஷைலஜா டீச்சர்’ என்று அழைக்கப்படும் அமைதியும் உற்சாகமும் கொண்ட கேரளாவின் சுகாதார அமைச்சரையே சாரும், அவர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். நாட்டின் மிகஉயர்ந்த கல்வியறிவு விகிதங்கள் மற்றும் அதன் சிறந்த ஆரம்ப சுகாதார அமைப்பு உள்ளிட்ட வரலாற்று அனுகூலங்களை கேரளா பெற்றிருந்தாலும், தீநுண்மிக்கு எதிரான போரில் ஷைலஜாவின் தலைமை முக்கியமானது என்கிறார்கள் நிபுணர்கள். “அவர் மக்களின் கருத்துளைக் கேட்கிறார்; மருத்துவமனைகளுக்கு தனிப்பட்ட முறையில் செல்கிறார்; மருத்துவர்களுடன் பேசுகிறார்,” என்கிறார் இந்தியப் பொதுச் சுகாதார அறக்கட்டளையின் இயக்குனர் கே.ஸ்ரீநாத் ரெட்டி. “அவர் திறன் மற்றும் அடக்கம் ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்ற ஒரு நபராகக் காட்சியளிக்கிறார்.”
ஷைலஜா ஒரு விஞ்ஞானி அல்ல, ஆனால் அறிவியல் மீதுள்ள அவரது ஆர்வம் 1970 களின் பிற்பகுதியில் இயற்பியல் மற்றும் உயிரியல் ஆசிரியராக இருந்த காலத்திற்கு அவரை இட்டுச்செல்கிறது. அவரும் அவரது மாணவர்களும் வகுப்பில் உள்ளூர்ச் செய்தித்தாள்களின் அறிவியல் பகுதியைப் படிப்பார்கள் என்று அவர் நினைவு கூர்கிறார். “விண்வெளி, சந்திரனில் தரையிறக்கம் போன்ற, பாடத்திட்டத்தில் இல்லாத பல விசயங்கள் பற்றியும் நாங்கள் மிகவும் சுவராசியமான விவாதங்களை மேற்கொள்வோம்,” என்று அவர் கூறுகிறார். ஆயினும், இறுதியில் அரசியல் அவரை ஈர்த்துக்கொண்டது. 1950 களில், அவரது குடும்ப உறுப்பினர்கள் வளர்ந்து வரும் பொதுவுடைமை இயக்கத்திலும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் இணைந்தனர்.
அவரது பாட்டி தீண்டாமைக்கு எதிரான உள்ளூர் இயக்கங்களில் பங்கேற்றார், சில சமயங்களில் இளம் ஷைலஜாவை கொந்தளிப்பான போராட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். ஷைலஜா தனது பாட்டி தனக்கு தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார், அரசியலில் மட்டுமல்ல, (மற்ற விசயங்களிலும்!) பெரியம்மை ஒரு காலத்தில் கேரளாவில் பரவலாக இருந்தது, நோய்வாய்ப்பட்டவர்கள் பெரும்பாலும் விலக்கப்பட்டனர்: அல்லது இறப்பிற்கு விடப்பட்டனர்; நோயாளிகள் ஒரு பெண்தெய்வத்தால் சபிக்கப் பட்டதாகப் பலரும் நம்பினர். ஆனால் அவருடைய பாட்டி அல்ல! அவர் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று சுத்தமான நீர், நல்ல உணவு மற்றும் பாரம்பரிய மூலிகை மருந்துகளை வழங்குவார். “அவர் மிகவும் தைரியமாக இருந்தார்,” ஷைலஜா கூறுகிறார். “எல்லோருக்கும் அத்தகைய பாட்டி இருக்க வேண்டும்.”
மாநில கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றில் தலைமைப் பதவிகளில் பணியாற்றிய பின்னர், ஷைலாஜா 2016-இல் இடது தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தபோது சுகாதார மற்றும் சமூக நல அமைச்சராக நியமிக்கப்பட்டார். பெரியம்மை பற்றிய நினைவுகள் 2018 இல் அவர் மனதில் இருந்திருக்கலாம், ஏனெனில் 50% முதல் 75% மக்கள் இறப்பு விகிதத்துடன் கூடிய வௌவால் மூலம் பரவும் வைரசான நிபா மாநிலத்தில் முதல் முறையாகப் பரவியபோது அவர் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர உறுதியுடன் போராடினார். அனைவரின் ஆலோசனையையும் புறக்கணித்து, ஷைலஜா மிகமோசமான பாதிப்புக்குள்ளான கிராமத்திற்குச் சென்று குடியிருப்பாளர்களை அமைதிப்படுத்தி, ’நிபா, குறைந்த அளவே நபருக்கு நபர், குறிப்பாக மருத்துவமனைகளில், பரவக்கூடும் என்றாலும், அன்றாட வாழ்க்கையில் ஆபத்து குறைவாகவே உள்ளது’ என்பதையும் விளக்கினார். இறுதியில் அது வெகுஜனப் பரவலாக மாறுவதைத் தடுத்தது.
முன்னதாக 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இந்தியா இரண்டு நிபா வெடிப்புகளை மட்டுமே கண்டுள்ளது, இரண்டுமே மேற்கு வங்காள மாநிலத்தில். பின்னர் உலகச் சுகாதார அமைப்பு (WHO) கேரளாவின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் முன் ஆயத்தமில்லாதது மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போதிய பயிற்சி பெறவில்லை என்ற முடிவுக்கு வந்தது. எவ்வாறாயினும், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதன் மூலமும், 2000-இற்கும் மேற்பட்ட தொடர்புகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலமும் அந்த வெடிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இறுதியில் 19 உறுதிப்படுத்தப்பட்ட நோய் நிகழ்வுகளும் 17 மரணங்களும் இருந்தன. மேலும் ஷைலஜாவும் அவரது குழுவும் அடுத்த வெடிப்புக்கு மிகவும் தயாராக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் தொடர்புத் தடமறிதல் அமைப்புகள், நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் மருத்துவமனை நெறிமுறைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். ’கடந்தகால வெடிப்புகளின் படிப்பினைகளை ஒவ்வொரு மாநிலமும் நினைவில் வைத்திருப்பதில்லை’ என்று ஜமீல் குறிப்பிடுகிறார். “அமைதிக் காலத்தில் திறனை வளர்ப்பது முக்கியம்,” என்ற அவர் மேலும் கூறுகிறார், “அவர்கள் அதில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.”
ஒரு தொற்றுநோயின்போது முள்நிரம்பிய சமூக அம்சங்களை எவ்வாறு கையாள்வது என்பதையும் ஷைலஜா கற்றுக்கொண்டார். நிபா வெடித்ததில், அரசாங்கம் ஆரம்பத்தில் இறந்தவர்களை எரியூட்டியது. இது கேரளாவின் பல முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஓர் உறவினர் ஷைலஜாவை கண்ணீருடன் அழைத்தார், அவர் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க தனது குழுவிடம் கேட்டுக்கொண்டார். இறுதியாக, அவர்கள் ஆழமாக அடக்கம் செய்வதற்கான ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தனர், அதில் ஓர் உடல் காற்றுப் புகாத நெகிழியால் மூடப்பட்டு 3 மீட்டர் ஆழத்தில் நிலத்தடியில் புதைக்கப்படுகிறது. ” சிலநேரங்களில் எங்கள் சொந்த நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்,” என்கிறார் அவர்.
கேரளாவின் பாரம்பரியமான வலுவான சமூக சேவைகள் புதிய தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேசியப் பொதுமுடக்கத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் தாராளமாக உணவு இருப்புகளை வழங்கியது, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தடுத்து, அதனால் ஏற்படும் வைரஸ் பரவலைத் தடுக்க உதவியது. பல பணக்கார நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய குழந்தை இறப்பு விகிதங்கள் உட்பட, நாட்டின் சில சிறந்த சுகாதார குறியீடுகளுடன் மாநிலத்தின் சுகாதார முன்னேற்றம் தொடங்கியது. அதிகாரப் பகிர்வு குடிமக்களின் பங்களிப்பு மற்றும் பொதுத் தகவல்தொடர்பு ஆகியவற்றை பலப்படுத்தியுள்ளது, ரெட்டி குறிப்பிடுகிறார். “அரசியல் துருவமுனைப்புகள் இருந்தபோதிலும், கிராமசபை மட்டத்தில், பெரும் சமூக ஒற்றுமை உள்ளது, குறிப்பாக ஆரம்ப சுகாதார முறைக்கு ஆதரவாக,” என்று அவர் கூறுகிறார்.
விஞ்ஞான ஆலோசனையில் ஈடுபடுவதன் மூலமும், அமைச்சுகள் முழுவதும் ஆதரவை உருவாக்குவதன் மூலமும், பொதுமக்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும் ஷைலஜா அந்த நன்மைகளை உருவாக்கினார் என்று ரெட்டி கூறுகிறார். “மிகவும் படித்த மற்றும் அரசியல் ரீதியாகச் சுறுசுறுப்பான மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில், குடிமக்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவதைப் பொறுத்தே முன்னேற்றம் அமையும், அவரால் அதைத் திறம்பட செய்ய முடிந்தது,” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், அரசியல் போட்டியாளர்களிடமிருந்து அவர் எதிர்ப்பைச் சந்தித்துள்ளார், ஒரு பெண்ணாக அவர் பெற்ற வெற்றி மனக்கசப்பையே அளித்தது. ஒருவர் அவரை “நிபா இளவரசி” என்று கிண்டலாக அழைத்தார், குறிப்பாக, ஷைலஜாவின் தைரியமான நடவடிக்கைகள் பற்றிச் சித்தரிக்கும் பிரபலமான ஒரு நடிகரால் நடிக்கப்பட்ட நிபா வைரஸ் பரவல் தொடர்பான ’வைரஸ்’ என்னும் திரைப்படம் வெளியான பிறகு. மிகச் சமீபத்தில், ஓர் அரசியல்வாதி அவரை “கோவிட் ராணி” என்று அழைத்தார். நோய்த்தொற்றின் சமீபத்திய அதிகரிப்பால் எதிர்ப்பு அதிகரிக்கக்கூடும்.
இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டு, பயணம் அதிகரித்தபோது, கேரளாவின் சில பகுதிகளில் நோய் நிகழ்வுகள் கொத்தாக வளர்ந்தன, ஆகஸ்ட் மாத இறுதியில் அறுவடைத் திருவிழாவிற்குப் பிறகு அவை அதிகரித்தன. அக்டோபருக்குள், நாட்டின் மிக அதிகத் தினசரி நோய் நிகழ்வுகள் கொண்ட மாநிலமாகக் காணப்பட்டது. சில பார்வையாளர்கள், அரசாங்கம் தளர்வடைந்துவிட்டது, போதுமான அளவு சோதனை செய்யவில்லை என்கிறார்கள். மற்றவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையைச் சுட்டிக்காட்டுகின்றனர். “பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பின்னர் ஏராளமான மக்கள் வளைகுடாவில் இருந்து திரும்பி வந்தனர்” என்று ஜமீல் குறிப்பிடுகிறார்.
ஆரம்பகால கடுமையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட சோர்வு, குறிப்பாக சுகாதார ஊழியர்களிடையே அமைந்திருக்கலாம், மேலும் நடுவண் அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர், நல்ல சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் குறைந்த இறப்பு விகிதங்கள் ஆகியவை மக்களிடையே வைரஸ் பற்றிய பயத்தைப் போக்கிவிட்டன எனக் கருதுகிறார். ஆகஸ்ட் மாதம் ஷைலஜா ’சயின்ஸ்’(Science) இதழுடன் பேசியபோது, படுக்கைகளின் எண்ணிக்கையில் விரிவாக்கம் மற்றும் சில பொதுமுடக்க நடவடிக்கைகளைப் புதுப்பிப்பதற்கான பரிந்துரைகளுடன் சாத்தியமுள்ள இரண்டாவது அலைக்குத் தயாராகி வருவதாகக் கூறினார். இறப்பு எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாக வைத்திருப்பது மற்றும் வயதானவர்களைப் பாதுகாப்பதே அவரது குறிக்கோள் என்று அவர் கூறினார். “நாம் ஒரு தடுப்பூசி பெறும் வரை, நாம் அனைவரும் நம் வாழ்வில் சில இன்பங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறினார்.
திருவிழாக் கூட்டங்களும் அரசியல் ஆர்ப்பாட்டங்களும் சமீபத்திய உயர்வுக்குப் பங்களித்திருப்பதாக சமீபத்தில் அவர் ஒப்புக் கொண்டார், மேலும் பயணத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பரிந்துரைத்தார். இப்போது, முன்னெப்போதையும் விட, கேரளாவின் கடின உழைப்பாளி சுகாதார அமைச்சர் தனது எல்லாத் திறன்களையும் – மற்றும் அவரது பாட்டியின் துணிச்சலான ஆன்மாவையும் – வைரஸுக்கு எதிரான புதிய உத்திகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
நன்றி: ”சைன்ஸ்’(‘Science’) நவம்பர் 2020 இதழ்.