சிச்சுவான் பல்கலைக் கழகத்தில் வகுப்பறைக் கற்பித்தலுக்குத் திரும்புவதற்குச் சில நாள்களுக்கு முன்பு, நான் ஒரு ரோபோவை எதிர்கொண்டபோது வெறிச்சோடிக் கிடந்த ஒரு வளாகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்தத் தடுப்பு இயந்திரம் மார்பு அளவு உயரத்தில், நான்கு சக்கரங்களில் நின்றிருந்தது. ஆனாலும் அது ஒரு கோல்ஃப் வண்டியளவு இல்லை. அதன் முன்புறம் ஒரு ’டி’-வடிவ சாதனம் ஒருவித சென்சாராகத் தோன்றியது. அந்த ரோபோ மின்சார மோட்டாரின் ஹம்மிங்குடன் என்னைக் கடந்தது,. நான் திரும்பி, பதினைந்து அடி தூரத்தில் அதனைப் பின்தொடர்ந்தேன்.
அது மே 27, தென்மேற்கு சீனாவில் ’செங்டு’வின் புறநகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஜியாங்கான் வளாகத்திற்கு நான் கடைசியாகச் சென்று மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. பிப்ரவரி பிற்பகுதியில், வசந்தகால செமஸ்டர் தொடங்கவிருந்தபோது, எனது அலுவலகத்திலிருந்து சில பொருள்களை எடுப்பதற்காக வளாகத்திற்கு அவசரகதியில் சென்றிருந்தேன். செங்டுவுக்குக் கிழக்கே எழுநூறு மைல் தொலைவில் உள்ள ’வுஹான்’ என்ற நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் காரணமாக நாடு தழுவிய பொது முடக்கத்தில் நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் இருந்தோம். குறைந்தபட்சம் பருவத் தொடக்கத்திலிருந்து அனைத்துப் படிப்புகளும் ஆன்லைனில் இருக்கும் என்று பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு அறிவித்திருந்தது.
அந்த நாள்களில், சீனாவை விட்டு வெளியேறுவதன் மூலம் நோயிலிருந்து தப்பிப்பது இன்னும் சாத்தியமாகத் தோன்றியதால் பல்கலைக் கழகத்திலிருந்த ஏராளமான வெளிநாட்டு ஆசிரியர்கள் புறப்பட்டனர். அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களில் தங்கியிருந்த, அத்தியாவசியமற்ற ஊழியர்கள் மற்றும் தூதர்கள் தங்கள் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளியேற்றப்பட்டனர். பிப்ரவரி முழுவதும், யு.எஸ்.இல் உள்ள கவலையடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்தேன். எனது குடும்பம் நன்றாக இருக்கிறது என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன், குறைந்த பட்சம் அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் பயமுறுத்துமளவுக்கு எண்ணிக்கை இருந்தபோதிலும், நாங்கள் செங்டுவில் தங்க முடிவு செய்துள்ளோம் என்று அவர்களிடம் சொன்னேன். பிப்ரவரி 20 அன்று, நான் வளாகத்திற்குச் சென்றபோது, சீனாவின் அலுவல் பூர்வ இறப்பு எண்ணிக்கை 2,236 ஐ எட்டியது.

நோய் குறித்த அனைவரின் கண்ணோட்டமும் மாறியதால், அப்போதிலிருந்தே ’செமஸ்டர்’ ஊர்ந்து செல்ல ஆரம்பித்திருந்தது. வகுப்புகள் தொடங்கி மூன்றாவது வாரத்தில் தொற்று அலுவல் பூர்வமாக பெருந்தொற்றாக மாறியிருந்தது; ஆறாவது வாரத்தில், யு.எஸ்.-இன் இறப்பு எண்ணிக்கை சீனாவை விட அதிகமாகியிருந்தது. அந்த வாரம், சீனாவின் எல்லைகள் வெளிநாட்டினருக்கு மூடப்பட்டதுடன், வெளியேற்றங்களின் திசையும் மாறியது – அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்த சீன நாட்டினர், அவர்களில் பலர் மாணவர்கள், நாடு திரும்புவதற்கு தீவிரமாக முயன்றனர். இந்தத் தொற்றுநோயை முதன்முதலில் அனுபவித்த நாடு சீனா, மேலும் பரவலைக் கட்டுப்படுத்தி இப்போது இயல்பு வாழ்க்கையாகக் கருதப்படும் பகுதிக்குள் நுழைந்த ஆரம்ப நாடுகளில் இதுவும் ஒன்றாகும். பதினொராவது வாரத்தில், எனது ஒன்பது வயது இரட்டை மகள்கள் மீண்டும் வகுப்புகளைத் தொடர்ந்தனர்; பதின்மூன்றாவது வாரத்தில், கொரோனா வைரஸ் தொற்றிற்குப் பிந்தைய காலத்தில் முதல் முறையாக நான் ஒரு விமானத்தில் ஏறினேன். தற்போது, மே 27 அன்று – பதினான்காவது வாரம் – நான் இறுதியாக வளாகத்திற்குத் திரும்பினேன்.
மாணவர்கள் தங்குமிடங்கள் வரிசையாக அமைந்திருந்த ஒரு தெருவில் அது இடைநிற்கும் வரை நான் அந்த ரோபோவைப் பின்தொடர்ந்தேன். ஒரு மின்னணு குரல் அழைத்தது, “தாவோடா ஜாண்டியன்! ”—“ ”நிறுத்தம் வருகிறது!” பெரும்பாலான இளங்கலை மாணவர்கள் இன்னும் திரும்பி வராததால், தெரு காலியாக இருந்தது. ஒரு புதிய நடைமுறை என்னவென்றால், மாணவர்கள் சிறப்பு அனுமதி பெறாவிட்டால், வளாகத்திற்குள் நுழைந்த பிறகு வெளியேற முடியாது. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு வாயிலிலும் முக-அங்கீகார ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டிருந்தன, அவை முக மறைப்புடனேயே அடையாளம் காணுமளவிற்கு உருவாக்கப்பட்டிருந்தன. அந்த நாளின் ஆரம்பத்தில், நான் வந்தபோது, ஒரு காவலர் ஸ்கேன் செய்யும் போது என் முகமூடியை அணிந்தபடியே இருக்கச் சொன்னார். எனது உடல் வெப்பநிலை மற்றும் பல்கலைக்கழக அடையாள எண் உடன் எனது பெயர் ஒரு திரையில் தோன்றியது. மாணவர்களைப் போலல்லாமல், ஓர் ஆசிரியராக இரு திசைகளிலும் நான் வாயில்கள் வழியாகச் செல்ல முடியும். இப்போது நான் ரோபோவுடன் காத்திருந்தேன், அமைதியான தங்குமிடங்களைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன். இறுதியாக, மூன்று மாணவர்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து அணுகினார்கள், அவர்கள் முகமூடி அணிந்து செல்போன்கள் வைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ரோபோவின் பின்புறத்திலிருந்த ஒரு தொடுதிரையில் ஒரு குறியீட்டை உள்ளிட்டனர், ஒரு பெட்டி திறந்து, உள்ளிருந்து ஒரு தொகுப்பு(பொட்டலம்) வெளிப்பட்டது.
அலிபாபா குழுமத்திற்குச் சொந்தமான, சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான ’தாவோபாவ்’ மூலம் தனது தொகுப்பை ஆர்டர் செய்ததாக ஒரு மாணவி என்னிடம் கூறினார். தொற்று நோய்க்கு முன்னர், மாணவர்கள் தங்கள் தொகுப்புகளை (packages) அலிபாபாவுக்குச் சொந்தமான மற்றொரு நிறுவனமான ‘கைனியோ’வால் நிர்வகிக்கப்படும் வளாகத்திலுள்ள ஒரு பண்டகசாலையில் பெற்றனர், ஆனால் இப்போது ரோபோவும் விநியோகம் செய்து கொண்டிருந்தது. அந்த இயந்திரம் தனது தங்குமிடத்தை நெருங்கும்போது தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக அந்த மாணவி கூறினார்.
அடுத்த அரை மணி நேரம், நான் ரோபோவைப் பின்தொடர்ந்தேன், இறுதியில் அது என்னை அதன் தலைவரிடம் அழைத்துச் செல்லும் என்று கருதினேன். நான் அதற்கு மிக நெருக்கமாக வண்டி ஓட்டும்போதெல்லாம், ஓர் ஒலிப்பான் ஒலித்தது; நான் திடீரென விலகி முன்னால் சென்றால் ரோபோ நின்றது. நான் அதை நோக்கிக் கத்த முயன்றபோது அதனிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அவ்வப்போது அந்த இயந்திரம் “தாவோடா ஜாண்டியன்” என்ற ஒலியுடன் ஓரங்கட்டி நின்றதும் முகக்கவசம் அணிந்த மாணவர்கள் தோன்றினார்கள்; கையில் பிடித்திருந்த செல்பேசியுடன் நேராக நான் இருந்த திசையை நோக்கி வந்தார்கள். அந்த அமைதியான வளாகத்தில் இது ஒரு திகில் படத்தின் ஒரு காட்சிபோல உணரச்செய்தது: “கொரோனாவின் குழந்தைகள்”
கடைசியில், ரோபோ, வளாகத்தின் தொலைதூர மூலையிலிருந்த ஒரு கைனியோ ( Cainiao ) டிப்போவின் முன் நின்றது. நீல நிற உடையிலிருந்த ஒரு தொழிலாளி வெளியே வந்து அதில் பொதிகளை ஏற்றத் தொடங்கினார். “இவற்றில் மூன்று ரோபோக்கள் இப்போது எங்களிடம் உள்ளன,” என்று அவர் கூறினார். கெய்னியோ தொழிலாளர்கள் ஒவ்வொரு நாள் மாலையும் வளாகத்திற்கு வெளியே இருந்த வீடுகளுக்குத் திரும்புவதாக அவர் விளக்கினார், எனவே, ரோபோ மாணவர்களுடனான தொடர்புகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.
நான் மீண்டும் என் இரு சக்கர வண்டியில் ஏறி என் அலுவலகத்திற்குச் சென்றேன். வழியில், ஆங்கிலத்தில் “சீனா ஹெல்த்”( China Health ) என்ற சொற்களால் குறிக்கப்பட்ட தொடர்ச்சியான வெள்ளைக் கூடாரங்களை நான் கடந்து சென்றேன். ஒரு கூடாரத்தில், முகக்கவசம் அணிந்த ஒரு செவிலியர் சிறிய பெட்டிகளில் இரண்டு கண்ணாடி வெப்பமானிகளுடன் ஒரு மேசையின் பின்னால் அமர்ந்திருந்தார். ஒரு சோதனை மையத்தில் யாருக்கேனும் அதிக வெப்பநிலை காணப்பட்டால், அவர் மேல் சோதனைக்காக மற்றொரு கூடாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவாரென அவர் என்னிடம் கூறினார். தேவைப்பட்டால் அடுத்தகட்டமாகச் சளிப் பரிசோதனை செய்வதற்காக வளாகத்திலேயே ஒரு மருத்துவமனையும் இருந்தது. நான் அலுவலகத்திற்குத் திரும்பினேன், அங்கே, என் மேசை மீது ஒரு பொட்டலம் எனக்காகக் காத்திருந்தது. நான் வகுப்பறைக்குத் திரும்பியதும் பயன்படுத்துவதற்காகப் பல்கலைக்கழகம் வழங்கியிருந்த சில பொருள்கள் அதில் இருந்தன: ஐந்து அறுவைச்சிகிச்சை முகக்கவசங்கள், ஒரு ஜோடி இரப்பர் கையுறைகள், ஓபுலா நிறுவனத்தின், ஆல்கஹால் கிருமிநாசினி அட்டைகள் ஒரு பெட்டி (Opula alcohol prep pads ). நான் மூன்று மாதங்கள் அலுவலகத்தில் இல்லாத போதிலும், அலுவலகத்தில் எல்லாம் நன்றாகவே இருந்தன. யாரோ அல்லது ஏதோ என் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
அபுனைவு எழுத்து மற்றும் புதிய மாணவர்களுக்கான கட்டுரைப் பயிற்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்காக நான் கடந்த ஆகஸ்டில் பல்கலைக்கழகம் வந்திருந்தேன். நானும் எனது குடும்பமும் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவுக்குச் சென்றோம், ஏனென்றால் 1996 முதல் 1998 வரை அமைதிப் படையில் கல்லூரிப் பயிற்றுவிப்பாளராக நான் பணியாற்றிய பகுதி அது. அந்த நாள்களில், சிச்சுவான் ஒப்பீட்டளவில் ஏழ்மையானது, என் மாணவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள். அதன் பிறகு இருபத்தி ஒரு வருட காலமாக – உண்மையில் ஒரு தலைமுறை – நான் அங்குக் கற்பித்தல் பணியில் இல்லை.
சீனக் கல்வியுடன் மீண்டும் இணைவதற்கான நம்பிக்கையில் நான் செங்டுவுக்குத் திரும்பியிருந்தேன், வகுப்பறையில் இளைஞர்களைச் சந்திக்க ஆவலாக இருந்தேன். ஆனால், வசந்தகால செமஸ்டர் தொடங்கியபோது, மத்திய செங்டுவில், நான் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன், எனது துறையால் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட ஆன்லைன் தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய முயற்சித்தேன். நூற்று எண்பது மில்லியன் சீனப் பள்ளிக் குழந்தைகளுடன் சேர்த்து, கிட்டத்தட்ட முப்பது மில்லியன் கல்லூரி மாணவர்கள் இணையவழியில் கல்வி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நாள்தோறும் காலையில் சுமார் எட்டு மணியிலிருந்து பயனர்கள் இணையதளத்தில் உள்நுழையத் தொடங்குவார்கள், சிலசமயங்களில் அதிகப்படியான இணையப் போக்குவரத்தால் ஆன்லைன் படிப்புத் தளமே முடங்குமளவுக்குப் பயனர்கள் நிறைந்திருப்பர். பல தொடக்கப் பள்ளிகள் ஊடாடும் இணையவழி வகுப்புகளை முயற்சித்துப் பார்க்கவில்லை. என் மகள்கள், ஏரியல் மற்றும் நடாஷா, ஓர் உள்ளூர் பொதுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்றனர், அவர்களின் ஆசிரியர் குறுகிய வீடியோ பாடங்களைப் பதிவிட்டார், இணைய இணைப்புச் சாத்தியமான போது பெற்றோர்கள் அவற்றை ஓடவிட முடியும்.
எல்லோரும் திரையில் தோன்றும் அமெரிக்கப் பாணி ஜூம் பாடநெறி, சீனாவில் எனக்குத் தெரிந்த எந்த ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்படவில்லை. எங்கள் மாணவர்கள் கண்ணுக்குப் புலப்படாதவர்கள்: ஒரு கேமரா இயக்கப்பட்டிருந்தால், அது பயிற்றுவிப்பாளரை மட்டுமே கொண்டிருந்தது, அது கூடச் சிக்கலாக இருக்கலாம். எனது அபுனைவு வகுப்பின் ஆரம்பத்தில், நான் ஒரு விரிவுரையை நேரலை செய்ய முயற்சித்தேன், ஆனால் கணினி உறைந்து பல முறை செயலிழந்ததால் நான் அதைக் கைவிட்டேன். அதன் பிறகு, நான் வீடியோவைத் தவிர்த்தேன். நான் ஒவ்வொரு வாரமும், குறைந்த தெளிவுத்திறன் (low-resolution) கொண்ட புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை திரையில் பகிர்ந்து கொள்வதற்கென தயாரித்தேன், எனது மாணவர்களும் நானும் ஆடியோ மற்றும் உரை(text) மூலம் தொடர்பு கொண்டோம்.
மூன்று வகுப்புகளில், கிட்டத்தட்ட அறுபது மாணவர்களுக்குக் கற்பித்தேன், அவர்களில் ஒருவரை மட்டுமே நான் நேரில் சந்தித்திருந்தேன். நான் அடிக்கடி யாரையாவது அழைத்தேன்; அவருடைய மைக்ரோஃபோனை இயக்கச் சொன்னேன், மெதுவாக நான் குரல்களைப் பெயர்களுடன் இணைக்க ஆரம்பித்தேன். சீன மாணவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஆங்கிலப் பெயர்களைக் கொடுப்பார்கள், மற்றும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறுகளில், வெளியாட்களுடன் சிறிய தொடர்பு இருந்தபோது, என் வகுப்பறையில் சீன-டிக்கென்சியன் கதாபாத்திரங்கள் நிறைந்திருந்தன: ’டெய்ஸி’ என்ற உயரமான பையன், ’கோகனெட்’ என்ற அழகான பெண். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், தேமல் மற்றும் மஞ்சள் நிறமுடன், கம்பி-விளிம்புக் கண்ணாடி அணிந்திருந்த ’லேசி’, சிச்சுவானிய சோளக்கொல்லைப் பொம்மை போல ஒல்லியாக இருந்த ’ஹவுஸ்’ ஆகியோரின் புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதன்பிறகு, கிராமப்புற சீனர்கள் படங்களைத் தீவிரமாக எடுத்துக் கொண்டனர் – அவர்கள் சாதாரண போஸ்களில் நின்று அரிதாகவே சிரித்தனர்.
இப்போது எனக்கு முகங்கள் இல்லை, பெயர்கள் மிகவும் பாரம்பரிய சகாப்தத்தில் நுழைந்ததாகத் தெரிகிறது. எனது, ’புதிய எழுத்தாளர்’ பயிற்சி வகுப்புகளில் ஆக்னஸ், புளோரன்ஸ், ஜேம்ஸ், டேவிட், ஆண்டி, சார்லஸ், ஸ்டீவ் மற்றும் ’பிரையன்’ ஆகியோர் அடங்குவர். இந்தப் பெயர்கள் திரையில் தோன்றிய போதெல்லாம், மிசோரியின் நடுப்பகுதியில் 1980 இல் என்னுடன் வளர்ந்திருந்த குழந்தைகளை நினைத்துக் கொண்டேன், நான் மூன்று ’பிரையன்’களுடன் ஐந்தாம் வகுப்பில் படித்தேன். கடைசியாக எப்போது எந்த ஓர் அமெரிக்கர் தனது குழந்தைக்கு அவ்வாறு பெயரிட்டார்? ஆனால் இப்போதெல்லாம் சீனர்கள் சோங்கிங்கில் பிரையன்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். பெரும்பாலான சிச்சுவான் பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் புதிய நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள், சீனாவின் எழுச்சியை ஆங்கிலப் பெயர்கள் மூலம் கண்காணிப்பது பற்றி நான் ஆச்சரியப்பட்டேன் – ஒருநாள், ஒருவேளை, சரிவு தொடங்கும், கைட்லின்ஸ், ஐடென்ஸ், மேடிசன்ஸ் என்ற பெயர்களுடன்!
எனது அபுனைவு வகுப்பில் ’சிசிபோஸ்’ என்ற மூத்தவர் இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் சில அசாதாரண பெயர்கள் இருந்தன, இருப்பினும் இப்போது அவை பெரும்பாலும் நுட்பத்தைப் பிரதிபலிக்கின்றன. ஒரு புதியவர் பிரிவில், எனக்கு ’கறி’ என்ற விளையாட்டு ரசிகரும், ’ரக்கீம்’ என்ற ’ராப்’ ஆர்வலரும் இருந்தனர். ஆன்லைன் வகுப்பின் போது (குறைந்தபட்சம் என் மனதின் பார்வையில்) எப்போதும் நீல மற்றும் தங்கத்தை அணிந்துகொண்டு, தனது வாய்க் கவசத்துடன் விளையாடிக் கொண்டிருந்த ’கறி’, சீனாவின் தேசிய கால்பந்து திட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஒரு கூர்மையான கட்டுரையை எழுதினார். “சீனாவின் புதிய ராப்” என்று அழைக்கப்படும் ஒரு ரியாலிட்டி ஷோவை ரக்கீம் பகுப்பாய்வு செய்தார், இது சில காரணங்களால், dreadlocks பாணி சிகை அணிந்த சீன போட்டியாளருக்குத் தடை விதித்தது. கிழக்கு ஹுனானில் சிக்கித் தவித்த போதிலும், அமெரிக்க இனக்குழுக்களுக்குப் பொருத்தமான மூலதனமயமாக்கல் குறித்து ரக்கீம் அறிந்திருந்தார். அவர் எழுதினார், “எனது பார்வையில், இந்த விதி கறுப்புக் கலாச்சாரத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்கள் கொண்டிருக்க வேண்டிய உரிமைகளுக்கு எதிரானதாகும்.”
அவர்களின் குரல்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்தன. பல ஆண்டுகளாக, உயர் கல்வியில் ஏற்பட்ட பெரிய முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, சிச்சுவான் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பிராந்தியத்தன்மை படிப்படியாகக் குறைந்துவிட்டன. எனது மாணவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக நான் அடிக்கடி கணக்கெடுப்புகளை மேற்கொண்டேன். அவர்கள் தென்மேற்கில் உள்ள ’யுன்னான்’ முதல் வட கொரிய எல்லையில் உள்ள ’ஜிலின்’ வரை பதினைந்துக்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் சிதறிக்கிடந்தனர். முதல் வாரத்தில், நான் மாணவர்களிடம் அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றிக் கேட்டேன், ஒரு மாதத்தில் கால்வாசி நாள்கள் கூட தங்கள் வீட்டுச் சுற்றுச் சுவர்களுக்கு வெளியே காலடி எடுத்து வைக்கவில்லை என்று பதிலளித்தனர்.
சீனப் பொது முடக்கம் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குத் தீவிரமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் மிக அடிமட்ட அளவிலான அக்கம்பக்கத்துக் குழுக்கள் விதிகளை அமல்படுத்தின, பல இடங்களில் அவை, இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒரு நபர் வெளியே சென்று தேவையானவற்றை வாங்குவதற்கு ஏற்ப வீடுகளை மட்டுப்படுத்தின. ஒரு குடும்பம் வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டால், சோதனைகள் மற்றும் தொடர்பு – தடமறிதல்கள் நடத்தப்படும்போது அவர்களின் கதவுகள் அடைக்கப்பட்டு சீலிடப்பட்டன, இது இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும். தொண்ணூறுகளில் நான் கற்பித்த ஒரு மாணவி தனது சமூகத்தில் இரண்டு அலுவல் பூர்வ முத்திரைகளுடன் மூடப்பட்டிருந்த ஒரு கதவின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். “நான் பிறந்ததிலிருந்து இதுபோன்ற விசயங்களைப் பார்த்ததில்லை, ஆனால் வயதானவர்களுக்கு இதுபோன்ற காட்சிகளின் நினைவுகள் இருக்க வேண்டும்,” என்று மாவோயிஸ்ட் பிரச்சாரங்களைக் குறிப்பிட்டு அவர் எழுதினார். “நாங்கள் உணர்ச்சியற்றவர்களாகி வருகிறோம், இது கால நீட்சியில் வைரஸை விட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.”
நன்றி: நியூ யார்க்கர் பத்திரிக்கை
https://www.newyorker.com/magazine/2020/08/17/how-china-controlled-the-coronavirus