இப்போதைய தீவிரமான அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு, அதிகக் குளறுபடிகளுக்கு உள்ளாகியிருக்கும் சில முக்கியமான வார்த்தைகளின் உண்மையான வரலாற்றையும், பொருளையும் மீட்டெடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். 

’ஹிந்துக்கள்’ எப்படி ஹிந்துக்களாக மாறினார்கள்? 

பிரிட்டானிய ஏகாபத்தியமே மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரித்து வைத்தது. அதற்கு முன்னதாக இந்தியாவில் தோன்றிய பல்வேறு மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களைப்   பின்பற்றி வந்த அனைவரையும், சிந்து நதி அல்லது இண்டஸ் நதிக்கு அப்பால் இருந்த நிலத்தைக் குறிப்பதற்காக பாரசீகர்கள் உருவாக்கிய புதிய வார்த்தை மூலமாக, ஹிந்து என்ற சொல் மூலமாக அழைத்தனர். ஹிந்துக்களின் தேசம் என்ற அடிப்படையில் இந்தியா என்ற பெயரும் இடப்பட்டது. 

ஹெரொடோட்டஸ், மெகஸ்தனீஷ் காலத்தில் இருந்தே, இந்தியாவைக் குறிப்பதற்கு இண்டிகா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இண்டிகா என்ற அதே தலைப்புடனேயே, மெகஸ்தனீஷ், அரியன் ஆகியோரால் இந்திய துணைக் கண்டத்தை விவரிக்கின்ற வகையில் இருவேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்தியா என்கிற பெயர் இண்டஸ் நதியோடு தொடர்புடையதாகவே அப்போது இருந்தது. கிரேக்கர்களைப் பின்தொடர்ந்து, பாரசீகர்களும் நதியின் பெயரை வைத்தே இந்தியாவிற்குப் பெயரிட்டனர். அவ்வாறு பெயரிடும் போது இண்டஸ் என்பதற்கு சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப்படும் சிந்து (sindhu) என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தியதன் மூலமாக ஹிந்து (hindu) என்ற வார்த்தைக்கு வந்தடைந்தனர். பண்டைய பாரசீக மொழியில் ‘s’ என்பது ‘h’ என்பதாகவே உச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாரசீகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஹிந்து என்பது புவியியல் ரீதியிலான வார்த்தையாக, சிந்து நதிக்கு அப்பால் இருந்த நிலத்தைக் குறிக்கும் சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்பட்டதே தவிர, எந்த மத அர்த்தத்தையும் குறிக்குமாறு அந்த வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பது புரியும். ’ஸ்தான்’ என்ற பின்னொட்டுச் சொல் புவியியல் இடத்தைக் குறிக்கும் வகையில் ஹிந்து என்ற சொல்லிற்குப் பின் சேர்க்கப்பட்டு ஹிந்துஸ்தான் என்ற சொல்லாக உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் சிந்து என்ற சொல்லுக்கு நதி என்ற பொருளும் உண்டு. ஏறத்தாழ 5,500 ஆண்டுகளுக்கு மேலாக, 2016ஆம் ஆண்டு கிடைத்த தொல்பொருள் ஆராய்ச்சியின் முடிவுகளின்படி 8,000 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த சிந்து நதி பாயும் இடமாக இந்தியா இருந்து வந்திருக்கிறது. 

நான்கு வேதங்களிலும், உபநிஷதங்களிலும், பௌத்த சமய நூல்களிலும் ஹிந்து என்ற வார்த்தை எங்குமே காணப்படவில்லை. பௌத்த மதத்திற்குப் பிறகு, பல நூற்றாண்டுகள் கழித்து, ஹிந்து கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்ததாக அறியப்படுகின்ற, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியாரும்கூட அவரது நினைவிலிருந்தோ அல்லது அவரது சொற்களஞ்சியத்திலோ ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை. கற்றறிந்தவர்கள் மட்டும் என்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அத்வைத தத்துவத்தை அவர் அறிமுகப்படுத்திய அதே வேளையில், சாதாரண மக்கள் வழிபடுவதற்காக கடவுளையும், பெண் கடவுளர்களையும் உருவாக்கினார். சிருங்கேரி (தெற்கு), ஜோஷிமத் (வடக்கு), பூரி (கிழக்கு), துவாரகா (மேற்கு) ஆகிய இடங்களில் நான்கு பீடங்களை நிறுவிய ஆதி சங்கராச்சாரியார், தனது தத்துவப் படைப்புகளிலோ, வர்ணனைகளிலோ, ஆன்மீகக் கவிதைகளிலோ ஒருபோதும் ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதேயில்லை.

India is that ancient river which is flowing since 5,500 years, or according to a recent archaeological discovery that happened in 2016, for 8,000 years.

பெளத்த மதம் இந்தியாவில் இருந்து முற்றிலுமாக மறைந்து விடவில்லை. வங்கா என்கிற பகுதி உட்பட கிழக்கிந்தியாவை பாலா வம்சத்தைச் சேர்ந்த பௌத்தர்கள் ஆண்டு வந்தார்கள். பொ.ஆ.பி 750 முதல் 1174 வரையிலான காலகட்டத்தில், பண்டைய வங்க மொழியோடு இணைந்த துவக்ககால வங்கக் கலாச்சாரம் அவர்களால் அங்கே உருவாக்கப்பட்டது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சில சமஸ்கிருத நூல்களில் ஹிந்து என்ற அந்த வார்த்தை பயன்படுத்தப்படத் தொடங்கிய வரையிலும், அதற்கு முன்பாக வேறு எந்த இணை மதம் அல்லது இணைக் கலாச்சாரத்திலும், சனாதன தர்மத்தை விளக்கும் வகையில் இருக்கின்ற எந்தப் பண்டைய நூலிலும் ஹிந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை. பல்வேறு தத்துவ, ஆன்மீகப் பழக்கவழக்கங்களை மேற்கொண்ட பல்வேறு பாரம்பரிய மரபுகளும், வைஷ்ணவம், ஷக்தா, மஹாயானம், வஜ்ரயானம், அத்வைதம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டாலும், தங்களை அவர்கள் எவருமே ஹிந்துக்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ளவில்லை.

வேதங்களில் கூறப்பட்டிருக்கும் ஏழு நதிகளைக் கொண்ட ’சப்த சிந்தாவா’ எனும் பஞ்சாப் பகுதி ’ஹாப்டா ஹிந்து’ என்றே பாரசீக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரசீக மன்னரான முதலாம் தரியுஸின் பொ.ஆ.மு ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டில், ஹிந்துஷ் என்பதாக வடமேற்கு இந்தியா குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியர்களை ஹிந்துவான் எனவும், ஹிந்தாவி எனவும், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக நூலான சச்னாமா குறிப்பிட்டுள்ளது. இவையனைத்திலும், ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, ஹிந்து என்ற வார்த்தை ஒரு புவியியல் சார்ந்த வார்த்தையாக மட்டும் இருக்கிறதே தவிர, எந்தவொரு மதத்தையும் குறிப்பதாக அது இருக்கவில்லை. பதினொன்றாம் நூற்றாண்டில் அல்-பிருனி எழுதிய தாரிக் அல்-ஹிந்த் என்ற நூலிலும், டெல்லி சுல்தானகத்தின் நூல்கள் பலவற்றிலும் ஹிந்து என்ற வார்த்தை இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதால், ஹிந்து என்ற வார்த்தை ஒரு பிராந்தியத்தைக் குறிக்கிறதா அல்லது மதத்தைக் குறிக்கிறதா என்பது பற்றி தெளிவற்ற தன்மையுடனே இருக்கின்றன.  

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சந்தா பர்தாய் என்பவரால் பிரித்விராஜ் ரசோ என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில், பிருத்விராஜ் சௌகான் முகமது கோரியால் தோற்கடிக்கப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. 1192க்குப் பிறகு, அந்த நூல் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த நூல் முழுவதிலும் ஹிந்துக்கள், துருக்கியர்கள் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த நூலிலும் ஹிந்து என்ற வார்த்தை புவியியல் சார்ந்த பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கிடையே நடந்த போர், ஹிந்துக்கள் – துருக்கியர்களிடையேயான போர் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே ஒழிய எந்த இடத்திலும் ஹிந்துக்கள் – முஸ்லீம்களுக்கு இடையிலான போர் என்று குறிப்பிடப்படவில்லை.  

இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் இஸ்லாமியக் கலாச்சாரத்தின் உயர்பீடமாக இருக்கும் தற்போதைய ஈரான் பகுதியைக் குறிக்கின்ற பாரசீகத்தில் இருந்து வரவில்லை. அவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களாக, பெரும்பாலும் துருக்கியர்களாகவே இருந்தனர். 

பண்டைய பாரசீகத்தின் பிரதான மதமாக ஜோரோஸ்ட்ரியம் இருந்தது. பொ.ஆ.பி 651இல் பாரசீகத்தை அரபு வெற்றி கொண்ட போது அது மாற்றப்பட்டு, இஸ்லாமியக் கலிபா விரிவாக்கம் செய்யப்பட்டது. பொ.ஆ.மு 515இல் பாரசீக மன்னர் முதலாம் தரியுஸ் இண்டஸ் பள்ளத்தாக்கின் சில பகுதிகளை வடக்கில் இணைத்தார். அந்த காலகட்டத்தில், கிழக்கே குப்தப் பேரரசுகள் உருவாகி, அதன் மூலமாகப் பரவிய மகதாவை உள்ளடக்கிய பதினாறு மகாஜனபாதாக்களின் (சமஸ்கிருதத்தில் பெரும் நாடுகள் என்றழைக்கப்படுகிறது) ஆதிக்கத்தில் பண்டைய இந்தியா இருந்து வந்தது. 

தங்களுடைய வரலாற்றில், இந்தியாவை கைப்பற்ற எப்போதுமே முஸ்லீம் பாரசீகர்கள் முயன்றதில்லை. எண்ணற்ற சமஸ்கிருத நூல்களை அங்கே இருந்த அறிஞர்கள் பாரசீக மொழியில் மொழி பெயர்த்த போதிலும், ஹிந்துப் பகுதியை நோக்கி அவர்கள் தங்களுடைய படையை ஒருபோதும் அனுப்பியதில்லை. நமது வரலாற்றின் பின்னணியில் பார்க்கும் போது, இந்தியாவிற்குள் முஸ்லீம் ஆக்கிரமிப்புகள் என இப்போது கருதப்படுவது போன்று, அந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்ற மத்திய காலங்களில் அவை பார்க்கப்படவில்லை என்பது தெரிகிறது. குதிரை வீரர்களாக சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்த மத்திய ஆசிய துருக்கியப் போர்வீரர்களே இந்திய ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தனர், முதல் முகலாயப் பேரரசரான பாபர் மத்திய ஆசிய உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இன்றைய உஸ்பெக்கிஸ்தானில், முன்னர் இருந்த டிமூரிட் பேரரசின் கீழ் இருந்த ஆண்டிஜான் என்ற இடத்தில் அவர் பிறந்தார். 1451ஆம் ஆண்டு முதல் வட இந்தியாவை ஆண்டு வந்த ஆப்கன் பாஸ்டன் ராஜ வம்சத்தில் இருந்து தோன்றிய லோதி சுல்தானிய ராஜ வம்சத்தையே தில்லியிலிருந்து பாபர் வெளியேற்றினார். அதுமட்டுமல்லாது, கஜினி முகமது, முகமது கோரி மற்றும் கில்ஜி ராஜவம்சம் ஆகிய அனைத்து ராஜவம்சங்களும் நவீன ஆப்கானிஸ்தானில் இருந்து உருவானவையே ஆகும். 

பண்டைய இந்தியாவில் மிகப்பெரிய பேரரசுகளாக இருந்த மௌரியர்கள், குப்தர்கள் போன்றவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அப்பால் மத்திய ஆசியா வரையிலும் பரவியிருந்தனர் என்பதை இங்கே நாம் நினைவில் கொண்டால், இந்தியாவை ஆக்கிரமித்தவர்களாக இப்போது கருதப்படுகின்ற துருக்கியர்களும், ஆப்கானியர்களும் இந்தியாவின் பண்டைய சாம்ராஜ்யங்களாக இருந்த பகுதிகளில் இருந்தே வந்திருக்கின்றனர் என்பது புலப்படும். 

பாரசீகர்கள் உருவாக்கிய ஹிந்து என்ற அந்த வார்த்தை மெதுவாக இந்திய மக்களிடையே பிடிபடத் துவங்கியது. தங்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தைக் குறிப்பதற்காக அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர். யவனர்களிடம் (வெளிநாட்டவர்கள்) இருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காக ஹிந்து என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கியதாக 16 – 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குறிப்பிட்ட சில வங்க கௌடியா வைணவ நூல்கள் குறிப்பிடுகின்றன. வங்க மொழியில் எழுதப்பட சைதன்யா சரித்ரமிருத (16 ஆம் நூற்றாண்டு), பக்தமாலா (17 ஆம் நூற்றாண்டு) ஆகிய நூல்களில் ஹிந்து தர்மம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

இவ்வாறு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. ஆனால் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு, பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே, மெதுவாக ஹிந்துக்கள் என்று தங்களைத் தாங்களே இந்திய மக்கள் கருதத் துவங்கினர். மத்திய ஆசிய ஆக்கிரமிப்புக்கள் நடந்த பிறகே, மக்களிடையே அந்தப் பாரசீக வார்த்தை மெதுவாக பிரபலமடையத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தனது பிரித்தாளுகின்ற சூழ்ச்சியை நிறைவேற்றுகிற வகையில், ’இசம்’ என்பதை ஹிந்து என்ற வார்த்தையுடன் பின்னொட்டாக இணைத்து ஹிந்து தத்துவம் என்ற ஹிந்துயிசத்தை உருவாக்கியது. பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்னதாக, ஹிந்து, ஹிந்துஸ்தான், ஹிந்து தத்துவம் என்ற மூன்று வார்த்தைகளுக்கும் பண்டைய இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னரே பெரிய அளவிலான மக்கள் அந்த வார்த்தைகளைப் படிப்படியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.  

முக்கியமான மூன்று பழங்குடியேற்றங்களின் வழியாக இந்திய மக்கள்தொகை உருவானதாக பல ஆதாரங்களுடன் சமீபத்திய டிஎன்ஏ மரபுவழி ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஹிந்து மக்கள்தொகை அடிப்படையிலான தற்போதைய இந்தியா பிறப்பதற்கு 12,000 – 15,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவில் இருந்தும், 3,500 – 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் காகஸ் பிராந்தியம் மற்றும் தெற்கு சைபீரியாவில் இருந்தும் நடந்த இரண்டு குடியேற்றங்கள் வழிவகுத்துக் கொடுத்தன. ஹிந்துக்களும் இந்தியாவிற்குள் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்களின் வம்சாவளியினர்தான். நமது உலகம் மனிதர்கள் புலம் பெயர்வதாலேயே உருவாகியது. அத்தகைய புலம் பெயர்தல்கள் மூலமாகவே அது தொடர்ந்து உருவாகிக் கொண்டும் இருக்கிறது. 

ஆனால் ஹிந்துத்துவா சித்தாந்தமோ, ஹிந்துக்களுக்கு மட்டுமேயான நிலமாக இந்தியாவைக் கருதுகிறது. பாரசீகர்களால் உருவாக்கப்பட்ட ஹிந்து, ஹிந்துஸ்தான் என்ற வார்த்தைகளோடு, பிரிட்டானியர்களால் உருவாக்கப்பட்ட ஹிந்து தத்துவம் என்ற வார்த்தையையும் சேர்த்து மூன்று முக்கியமான வார்த்தைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இந்தச் சித்தாந்தம், தன்னுடைய தேசியவாதச் சொல்லாடல் மற்றும் உலகக் கண்ணோட்டத்திற்கும் அடிப்படையாக அவற்றைக் கொண்டுள்ளது. ஹிந்து, ஹிந்துஸ்தான், ஹிந்து தத்துவம் ஆகிய மூன்று வார்த்தைகளும், ஹிந்துத்துவா சித்தாந்தம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடையாளம் காட்டுகின்ற முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்றவர்களாலேயே உருவாக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த உண்மையில் இருக்கின்ற முரண்பாடு மிகுந்த ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.

The far-right ideology was also influenced by MS Golwalkar – the second sarsanghchalak.

நித்திய மரபு, நித்திய வழி, நித்திய ஒழுங்கு ஆகியவற்றை விளக்குகின்ற சனாதன தர்மத்தின் ஒரு பகுதியாகவே, இந்தியாவில் உருவான பல்வேறுபட்ட தத்துவ மரபுகள் மற்றும் அவற்றின் உப-மரபுகள் அனைத்தும் இருக்கின்றன. இப்போது ஹிந்து மதம், புத்த மதம், ஜைன மதம் என அழைக்கப்படுபவை எல்லாம் இந்த சனாதன தர்மம் என்ற மிகப் பெரிய கலாச்சாரத்திற்குள் இருந்த உபக்கலாச்சாரங்களே ஆகும். இந்தியாவில் தோன்றிய பல்வேறு சிந்தனைகளும், நம்பிக்கைகளும், சனாதன தர்மம் என்கிற பெரிய சக்கரத்தின் ஆரைகள் போன்றிருப்பதாக கருதலாம். பெரும்பாலான முக்கிய அமைப்புகள், பிற அமைப்புகளின் சிந்தனைகளைக் கவர்ந்து உள்வாங்கிக் கொண்டவையாகவே இருந்தன. மற்ற கருத்துக்களோடு அவற்றின் கருத்துக்களும் இணைந்து மேலும் பல புதிய கருத்துக்கள் தோன்ற வழிவகுத்தன. ஆகவே காலப்போக்கில் சனாதன தர்மத்தின் ஓட்டம் என்பது பல சிற்றோடைகளை இணைத்துக் கொண்டு ஓடுகின்ற நீரோடையைப் போன்றே இருந்தது. சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமாக இருந்த பன்முகத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகியவை, நவீன இந்தியாவின் பன்முகத்தன்மையிலும் பிரதிபலிக்கின்றன.  

நமது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் வடிவமைத்த அனைத்து முக்கிய சிந்தனைகளின் வளர்ச்சியைப் பதிவு செய்வதாக எஸ்.ராதாகிருஷ்ணனின் இந்திய தத்துவம், சுரேந்திரநாத் தாஸ்குப்தாவின் இந்திய தத்துவ வரலாறு ஆகிய நூல்கள் இருக்கின்றன. சனாதன தர்மத்தின் கீழ் வருகின்ற அனைத்து மதங்களின் அனைத்து மரபுகளும், உப-மரபுகளும் இந்தியச் சிந்தனைகளின் முக்கிய பள்ளிகளாக இருக்கின்ற வேதங்கள், உபநிஷதங்கள், புத்தம், ஜைனம், சம்க்யாஸ், அத்வைதம், காஷ்மீர் சைவம் மற்றும் பலவற்றில் இருந்து கிளைத்தவையாகவே இருக்கின்றன. இவை தொன்மங்கள், புனைவுகள், நாட்டுப்புறப் பாடல்கள், காவிய இலக்கியம், வரலாற்றின் பாதை மற்றும் பிராந்திய பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, இந்தியாவின் மதம் மற்றும் ஆன்மீக பழக்கவழக்கங்களின் பன்முகத்தன்மையை உருவாக்கின. 

இந்த விஷயங்களுக்குள் ஹிந்துத்துவா என்பது எங்கே பொருந்துவதாக இருக்கிறது? அந்த வார்த்தை எங்கிருந்து நம்முடைய நனவிற்குள் வந்து சேர்ந்தது?

ஹிந்துத்துவா என்பது ஹிந்து தத்துவம் கிடையாது 

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பவரால் எழுதப்படும் புத்தகங்கள், நீடித்ததொரு பாதிப்பை எப்படியோ ஏற்படுத்துவதாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். 1923இல் ரத்னகிரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, ’ஹிந்துத்துவாவின் அடிப்படை’ எனும் தனது விளக்க உரையை வி.டி.சாவர்க்கர் எழுதினார். தேசியவாதத்தையும், மத அடையாளத்தையும் பயன்படுத்துகின்ற தனது தீவிர வலதுசாரி அரசியல் தத்துவத்தை உருவாக்குவதற்காக, ஹிந்துத்துவா என்ற வார்த்தையை அவர் உருவாக்கினார். ஹிந்துத்துவா என்பது சாவர்க்கர் உருவாக்கிய கருத்தாக்கமே தவிர, அது இந்தியாவின் ஆன்மீகக் குருக்களால் முன்வைக்கப்பட்டதல்ல. ’ஹிந்துத்துவா: ஹிந்து என்பவர் யார்?’ என்ற கட்டுரையில், ஹிந்து தத்துவம் என்ற சொல் தெளிவற்றுக் குறிக்கின்ற எந்த விஷயத்தோடும் ஹிந்துத்துவா என்ற சொல் பொருந்திப் போகாது என்று சாவர்க்கரே எழுதியிருக்கிறார். 

ஹிந்து அடையாளத்துடன் உள்ள அனைவரையும் அரசியல்ரீதியாக அணிதிரட்டி போர்க்குணம் கொண்ட தேசியவாதிகளைக் கொண்ட தேசத்தை உருவாக்குவதே சாவர்க்கரின் நோக்கமாக இருந்தது. அந்த நேரத்தில் ஏற்கனவே அரசியல் சார்ந்தவராக சாவர்க்கர் ஆகியிருந்தார். 1915ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட வலதுசாரி அரசியல் கட்சியான அகில பாரதிய ஹிந்து மகாசபாவுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். சாவர்க்கர் எழுதிய ’ஹிந்துத்துவாவின் அடிப்படை’ புத்தகத்தைப் படித்த டாக்டர் கே.பி.ஹெட்கேவர். அதிலிருந்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸுடன் தனக்கிருந்த உறவைத் துண்டித்துவிட்டு, 1925ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) ஹெட்கேவர் நிறுவினார்.

VD Savarkar coined the word Hindutva to frame his far-right political philosophy.

ஆர்எஸ்எஸ் உடன் ஹிந்து மகாசபா கைகோர்த்துக் கொண்ட போது, சங் பரிவார் தனது பயணத்தைத் தொடங்கியது.  தீவிர வலதுசாரிக் கருத்தியலை வடிவமைப்பதற்கு இந்த சங்பரிவார், சாவார்க்கரின் ஹிந்துத்துவாவைத் தத்தெடுத்துக் கொண்டது. ஆர்எஸ்எஸ்சின் இரண்டாவது சர்சங்சாலக்காக, தலைவராக இருந்த MS கோல்வால்கரும் இதில் தனது தாக்கத்தை ஏற்படுத்தினார். 

இவ்வாறு ஹிந்துத்துவா அரசியல் சித்தாந்தமாகவே பிறப்பெடுத்தது. ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் ஆகியவற்றின் தத்துவ மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளுடன் அது சிறிதளவும் தொடர்பு கொண்டதாக இருக்கவில்லை. பரந்து விரிந்த ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் ஆகியவற்றின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பற்ற மரபுகள் என்று அனைத்தையும் புறக்கணித்து விட்டு, ஆணாதிக்க பழமைவாதம், மதச் சடங்குகள் ஆகியவற்றை ஹிந்துக் கலாச்சாரம் என்றும், இந்தியக் கலாச்சாரம் என்றும் கட்டமைத்து, அவற்றோடு தன்னை இணைத்துக் கொண்டே ஹிந்துத்துவா உருவானது. 

மனுஸ்மிருதியை இந்திய அரசியலமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்து வந்தது. தான் கொண்டிருந்த உள்ளார்ந்த தீவிர பழமைவாத உலக கண்ணோட்டத்தின் வழியாக, தாராளவாத, முற்போக்குக் கொள்கைகளை அது எப்போதும் எதிர்த்து வந்தது. இந்திய அரசியலமைப்பை மாற்றியமைக்கவும், இந்திய மூவர்ணக் கொடியை காவிக் கொடியாக மாற்றுவதற்குமான கனவுடனே அவர்கள் இன்னமும் இருந்து வருகிறார்கள். 

தென் மற்றும் கிழக்கு இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஹிந்து தத்துவத்தை விட, ஹிந்தி-ஹிந்துஸ்தான் என்கிற ஹிந்து தத்துவத்தின் வடிவம் மிக உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். பன்முகத்தன்மை என்பது மதம், கலாச்சாரம் ஆகியவற்றைச் சீரழிப்பதாகவே அவர்கள் பார்க்கிறார்கள். 

ஹிந்து தத்துவம்/சனாதன தர்மத்தின் நடைமுறைகளை வரையறுப்பதற்கான, முழுமையான அதிகாரம் கொண்ட கிறிஸ்துவத் தேவாலயம் போன்றதொரு அமைப்பு இந்தியாவில் ஒருபோதும் இருந்ததில்லை. அதனாலேயே பல மரபுசார்ந்த மற்றும் மரபுவழியல்லாத மரபுகள் மற்றும் உப மரபுகள் தோன்றி செழித்தன. தனிமனிதன் ஒருவனின் விருப்பத்திற்கும், முன்னுரிமைக்கும் ஏற்றவாறு மதம் மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகளைத் தேடுவது, புரிந்து கொள்வது, விரிவாக்கம் செய்து கொள்வது என்று மனித உள்ளுணர்விற்கான சுதந்திரத்தை மதிப்பதே இந்திய நாகரிகத்தின் போற்றப்படாத முக்கியமான அடையாளமாக இருக்கிறது. பன்முகத்தன்மை என்பது நவீன இந்தியாவின் யதார்த்தம் என்பதாக மட்டுமல்லாது, நமது நாகரீகத்தின் இன்றியமையாத உள்ளுணர்வாகவும் இருக்கிறது.  

அடையாளப்படுத்தல், பிரதிநிதிப்படுத்துதல் மற்றும் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும் போது, ​​ஹிந்துராஷ்ட்ரத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் உண்மையில் ஹிந்துத்துவ ராஷ்ட்ரம் என்றே இருப்பதை ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அவர்கள் ஹிந்து நலன்களை விட, ஹிந்துத்துவ நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். 

ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் ஆகியவற்றின் பிரதானக் கருத்துகளாக இருக்கின்ற  சத்தியம், அஹிம்சை மற்றும் முன்வினைப்பயன் ஆகியவற்றில் ஹிந்துத்துவத் தலைவர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஹிந்து தத்துவம்/சனாதன தர்ம் ஆகியவற்றுடன் ஹிந்துத்துவத்தை நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஹிந்துத்துவம் என்பது மதம் சார்ந்த கருத்தே கிடையாது. ஜூடாயிசத்தின் தீவிர வலதுசாரி அரசியல் சித்தாந்தமாக ஜியோனிசம் இருப்பதைப் போலவே, ஹிந்துத்துவா என்பதுவும் தீவிர வலதுசாரி அரசியல் சித்தாந்தமாகவே இருக்கிறது.  

எந்தவொரு அரசியல் சித்தாந்தத்தின் முக்கிய நோக்கமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவே இருக்கும். மற்றபிற மிதவாத, தாராளவாத மற்றும் முற்போக்கான கொள்கைகள் செய்யாத வகையில், அரசியலுக்காக மதத்தைச் சுரண்டுவதாகவே வலதுசாரிச் சிந்தனைகள் இருக்கின்றன. ஹிந்துத்துவத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது ஹிந்து தத்துவத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பதாக இருப்பதில்லை. அரசாங்கத்தை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது, இந்தியாவை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பதாக இருப்பதில்லை. ஜனநாயகமானது அதிகாரத்தில் உள்ளவர்களை உரிமையுடன் எதிர்ப்பதற்கான அதிகாரத்தை மக்களுக்குத் தருகிறது. மக்களிடம் உள்ள இந்த அதிகாரம் நீர்த்துப்போகும்போது, ​​ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான சர்வாதிகாரமாக மாறி விடும். 

Image may contain: 2 people

அரசாங்கம் என்பது நாடு அல்ல; அதைப் போல ஹிந்துத்துவா என்பது ஹிந்து தத்துவம் அல்ல. பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கத்தை அல்லது ஹிந்துத்துவா சிந்தனைகளை எதிர்க்கிறவர்களை தேச விரோதிகள், ஹிந்து விரோதிகள் என்று கூறுகின்ற நடைமுறை உண்மையில் அபத்தமானது. அவ்வாறு கூறுவது, அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்களைப் பிளவுபடுத்த மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட ஒற்றைமயமாக்கல் சார்ந்த உளவியல் நடவடிக்கை ஆகும்.

தீவிர வலதுசாரிகள் தங்களுடைய ஆதரவாளர்கள் நம்ப வேண்டும் என்று கருதுவதைப் போல, ஹிந்துத்துவாவை ஆதரிக்காது நமது நாட்டில் இருக்கின்ற ஹிந்துக்கள் எந்த வகையிலும் குறைவான ஹிந்துக்கள் அல்லர். ஹிந்துத்துவாவை ஆதரிக்காத ஹிந்துக்களை சிக்குலர்கள், தாராளவாதிகள், இடதுசாரிகள் என்றும், இன்னும் பல வகைகளிலும் அவர்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள். நாட்டில் உள்ள தனது சொந்த குடிமக்களுக்கும், தன்னுடைய சித்தாந்தத்தை ஏற்காத சக ஹிந்துக்களுக்கும் எதிராக இந்த ஹிந்துத்துவா படை தீவிரமாகப் போராடி வருகிறது. அவர்கள் தங்களுடன் உடன்படாதவர்களை எதிரிகள் ஆக்குகிறார்கள். 

ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் என்பது மிகவும் பரந்து வேறுபட்டது. ஹிந்து தத்துவம் என்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட வரையறையும் இல்லை என்பதோடு, அவ்வாறான வரையறை ஒன்றை இந்தியாவில் திணிக்கவும் முடியாது. அதனால்தான் உச்சநீதிமன்றம் ஹிந்து தத்துவம் என்பதை ஒரு வாழ்க்கை முறை என்பதாக வரையறுத்தது. தங்களுடைய நடைமுறைகளையும், உலகக் கண்ணோட்டத்தையும், தாறுமாறான கொள்கைகளையும் இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்துக்களும் பின்பற்றுமாறு மாற்றியமைக்க எண்ணுகின்ற ஹிந்து-ஹிந்துஸ்தான்-ஹிந்துத்துவா படையினரின் சமூக, கலாச்சாரப் பணி நிச்சயம் தோல்வியடையவே செய்யும்.   

இந்தியா என்பது பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல வேறுபாடுகளுடன் சமரசம் செய்து கொண்ட நாடாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சியோ, மத அமைப்போ, மொழி சார்ந்த பண்பாட்டுக் குழுவோ ஹிந்துமதத்தின் ஏகபோகப் பாதுகாவலர் என்று தங்களைத் தாங்களேவே தேர்ந்தெடுத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது தங்களுடைய வழிமுறைகளைத் திணிக்க விரும்புகின்ற போது, அவர்கள் ​​ பிராந்திய அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைக் குலைப்பவர்களாக, நமது நிலத்தின் பாரம்பரிய நாகரீக உள்ளுணர்வை மீறுகின்றவர்களாகவே இருக்கின்றனர்.

21ஆம் நூற்றாண்டில் நமது ஒட்டு மொத்த முன்னேற்றமும் உலகத்தோடு ஆழமாகத் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் வேளையில், மனித நேயத்தைப் பிடுங்கியெறிவதாக இருக்கின்ற “இறை-தேசியவாதம்” என்று அழைக்கப்படுகின்ற இறைபக்தியுடன் கலந்த தேசியவாதம் என்பதன் மூலமாக, தேசபக்தியை எவரொருவராலும் வரையறுக்க முடியாது. தான் தேசத்தை நேசிப்பதாகக் காட்ட விரும்புகின்ற ஒருவர், அதற்காக தனது சக குடிமக்களாக இருக்கும் சில குழுக்களை இலக்காகக் கொண்டு வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில், சமூக, கலாச்சார மற்றும் வகுப்புவாதப் பதட்டங்கள் இந்தியாவைத் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் இருந்து திசை திரும்ப வைப்பதாகவே இருக்கும். 

ஹிந்துத்துவாவை ஹிந்துத் தத்துவம் என்பதாகவும், ஹிந்துத்துவ தேசியவாதத்தை இந்தியத் தேசியவாதமாகவும் தவறாகப் புரிந்து கொள்பவர்கள், தாங்கள் அறியாமலேயே ஆதரித்து வருகின்ற கொள்கைகள், விழுமியங்கள் மற்றும் செயல்பாடுகளின் தன்மையை முழுமையாக ஆராய வேண்டும். மேலும் அவற்றை ஹிந்து தத்துவம்/ சனாதன தர்மத்தின் முக்கியமான ஆன்மீக மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுடன் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

http://www.dailyo.in/variety/hindu-hinduism-hindustan-hindutva/story/1/20120.html

நன்றி: டெய்லி ஓ இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

One thought on “‘ஹிந்துக்கள்’ எவ்வாறு ஹிந்துக்களாக மாறினார்கள்? ஹிந்துத்துவா என்பது ஏன் ஹிந்து தத்துவம் ஆகாது..? – தேவ்தன் சௌத்ரி (தமிழில்: தா.சந்திரகுரு)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *