உயர் கல்வித் துறையில் பணியாற்றுவோருக்கும் உயர் கல்வித் துறை பற்றி நன்கு அறிந்தோருக்கும் அதில் படித்த, படித்து கொண்டு இருக்கும் மாணவர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும்.
“இறுதித் தேர்வை நடத்தாமல் எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது” என்று கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் விசயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒளிந்து கொண்டு இருக்கும் உண்மை தெரிந்தாக வேண்டும். மேம்போக்காக பார்த்தால் இறுதித் தேர்வை எழுதாமல் எப்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியும் என்று வாதம் பொதுப் புத்தியில் “சரிதான்” என்று தோன்றும். உண்மையில் இந்த வாதம் சரிதானா? இதில் உண்மை இருக்கிறதா?
இன்றைய நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி உரிமை சட்டப்படி கட்டாயத் தேர்ச்சி அமலில் இருக்கிறது. ஒன்பது ,பத்து வகுப்புகளுக்கு கால் ஆண்டு அரை ஆண்டு மற்றும் முழு ஆண்டு என்று தேர்வுகள் நடக்கிறது. ஆனால், முழு ஆண்டு தேர்வுதான் மாணவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. மேல் நிலை வகுப்பு அல்லது +2 வை என்று எடுத்துக் கொண்டால் பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி தேர்வு தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.
கொரானா காலத்தின் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக் கல்வி வாரியங்களிலும் ஏற்கனவே தேர்வு எழுதாமல் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டது. இந்த நடைமுறை, கேம்பிரிட்ஜ் உட்பட உலகம் முழுவதும் கூட பல நாடுகளில் நடந்து இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் எல்லாத் தேர்வுகளும் முடிந்த நிலையில், ஒரே ஒரு தேர்வு இருக்கும் போதுதான் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
இப்போது உயர் கல்விக்கும் தேர்வுகள் எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்ற பல்கலைக்கழக மானியக் குழு வாதத்திற்கும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கும் வருவோம்.
உயர் கல்வியில் இளங்கலைப் பட்டம் என்று எடுத்துக் கொள்வோம்.மூன்று ஆண்டுகள், ஆறு பருவத் தேர்வுகள் இருக்கிறது. ஒவ்வொரு பருவத் தேர்வும் ஒன்றுக்கு ஒன்று சமமானதே. எந்தவொரு பருவத் தேர்வும் எந்தவொரு பருவத் தேர்வைக் காட்டிலும் முக்கியமானதும் அல்ல. முக்கியத்துவம் அற்றதும் அல்ல. மொழிப் பாடங்கள் மற்றும் அடிப்படை பாடங்களில் மட்டுமே குறைந்த பட்ச தேர்ச்சி அவசியம். அந்த மதிப்பெண்கள் அவர்களின் தரத்தை நிர்ணயம் செய்ய கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.
உதாரணமாக பி.ஏ பொருளாதாரம் என்று எடுத்துக் கொள்வோம். இதில் முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ் ஆங்கிலம் மொத்தம் நான்கு தாள்கள் கற்பிக்கப் படுகிறது. இந்த நான்கிலும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நாற்பது விழுக்காடு எடுத்தால் போதும். எவ்வளவு அதிக மதிப்பெண் எடுத்தாலும் அது முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று தர நிர்ணயத்திற்கு இந்த மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படுவது இல்லை. அதேபோல் மனித உரிமைகள், சுற்றுச்சூழல் போன்ற ஒரு சில பாடங்கள் அடிப்படை பாடங்களாக உள்ளன. இவையும் தர நிர்ணயத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. முக்கியப் பாடமான பொருளாதாரம் மற்றும் அந்த பாடத்தின் துணைப் பாடங்கள் என்று தீர்மானிக்கப்பட்ட பாடங்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் கொள்ளப்படுகின்றன. இதில் இளநிலை முதலாம் ஆண்டு முதல் பருவத்தில் படித்த பாடமும் இளநிலை ஆறாம் பருவத்தில் படிக்கும் பாடங்களும் சம அளவு முக்கியத்துவம் உள்ளதே. ஒரு பட்டப் படிப்பில் எந்தவொரு பருவமும் எந்தவொரு பாடமும் முக்கியமானதும் அல்ல. முக்கியத்துவம் அற்றதும் அல்ல.

இந்த நிலையில், கொரானாவின் பாதிப்பை கருத்தில் கொண்டு இளநிலை பட்ட பகுப்புகளின் முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பட்ட வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மாணவர்களின் இந்த ஆண்டு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை கணக்கில் கொண்டு எழுபது விழுக்காடு மதிப்பெண்களும் மீதமுள்ள முப்பது விழுக்காடு மதிப்பெண்கள் அந்த மாணவரின் கடந்த பருவ மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டும் கணக்கிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒருவகையில் தேர்வுகள் அற்ற தேர்ச்சி என்று கூட குறிப்பிட முடியாது. இதில் அந்த மாணவர்களின் உழைப்பு இருக்கிறது. தேர்வு எழுதி உள்ளார்கள். அந்த வடிவம் வேறு. முதல் பருவத் தேர்வும் இறுதிப் பருவத் தேர்வும் சம முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் முதலாண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பருவத் தேர்வுகள் எப்படி நடைபெற்றதோ அப்படியே இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்று இருக்க வேண்டும். தேர்வுகள் இன்றி தேர்ச்சி கூடாது எனில் இப்போது தேர்ச்சி கொடுக்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கியிருக்கக் கூடாது. இந்த மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தி, பின்னரே தேர்ச்சி கொடுத்திருக்க வேண்டும். தேர்வுகள் எழுதித் தான் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ள ஆறாம் பருவத் தேர்வு மாணவர்கள் ( இறுதி ஆண்டு தேர்வு) முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளை காட்டிலும் எந்தவிதத்தில் ஆறாம் பருவத் தேர்வு முக்கியம் என்ற கேள்விக்கு அல்லது சந்தேகத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழுவோ உச்ச நீதிமன்றமோ திருப்திகரமான பதில் அளிக்க முடியாது. இந்த மாணவர்களின் ஆயுள் பரியந்தமும் இந்த கேள்வி தொக்கி நின்று கொண்டே இருக்கும்.
முதல் பருவத் தேர்விற்கும் ஆறாம் பருவத் தேர்விற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தெரிந்தாலும் இந்த வாதத்தை ஏன் பல்கலைக்கழக மானியக் குழு முன்வைத்தது? இந்தக் கேள்விக் ஒரே விடைதான் தெரிகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் மாத இறுதியில் கொரானா பாதிப்பு 164 000 தாண்டிய நிலையில், தாராவி போன்ற பெரும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் கூட கொரானா பெரும் பரவல் ஏற்பட்டு அவர்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்வதாக மஹாராஷ்டிரா அரசு அறிவித்தது.
பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி என்று மாநில அரசுகளும் இறுதி ஆண்டு தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது. இதன் பின்னணியில் தான் பல்கலைக்கழக மானியக் குழு ஜூலை 6 ஆம் தேதி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று அறிவிப்பு வெளிவருகிறது. இதைவிடவும் முக்கியமானது ஏப்ரல் மாதத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று உயர் மட்டக் குழு பரிந்துரையின் இதே பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. ஒருவேளை குஜராத், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இதுபோன்று முதலில் அறிவித்திருந்தால் அறிவித்திருந்தால் ஒருவேளை “இறுதி ஆண்டு தேர்வுகள் முக்கியம். அதனை எழுதியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு பல்கலைக்கழக மானியக் குழு வரமாலே போயிருக்கலாம். “கொரானா பாதிப்புகளையும் தேர்வு ரத்துகளையும் இணைத்து பார்க்காமல் தேர்வு ரத்தையும் மாநிலத் ஆளும் அரசுகளையும் ஒப்பீடு செய்து முடிவு செய்தால் என்ன சார் செய்ய முடியும்?” என்று மாணவர்கள் எழுப்பும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? இதெல்லாம் ஆளை சொல்லுங்கள் ரூலை சொல்கிறேன் என்ற சொலவடைக்கு ஒப்பானது என்று விமர்சிப்போருக்கும் ஏற்ற பதிலை கூற முடியவில்லை.
கொரானா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால், அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் இல்லாமல் பருவத் தேர்வுகளை உரிய தயாரிப்புகளோடு எழுதி இருந்தால் இப்போது என்ன மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்களோ அதனை விடக் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்று இருக்கலாம். அகமதிப்பீட்டுத் தேர்வுகளை ஏனோதானோ என்று எழுதி இருக்கலாம். இதை நினைத்து மாணவர்கள் வருத்தப்பட்டு கொண்டு இருக்கலாம். மாணவர்கள் அனைவரும் தேர்வு கண்டு அஞ்சி நடுங்குபவர்கள். மாணவர்கள் என்றாலே மோசம் என்ற பார்வை நமக்கு எப்போது மாறப் போகிறதோ தெரியவில்லை.
கட்டுரையாளர்: பேரா.ந.மணி, மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.


எனக்கும் இந்தக் கேள்வி சந்தேகம் இருந்தது . கட்டுரை இதைத் தெளிவுபடுத்திவிட்டது. நன்றி .