மரணத்தின் வாயில் இருந்தல்ல! வயிற்றிலிருந்தே தப்பிக்கும் மீன்!
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 4
மீண்டெழுதல் என்றால் என்ன? என இன்று ஜப்பானின் பரபரப்பான நகரங்களாக இருக்கும், ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் வாழ்ந்த, வாழும் மனிதர்கள் உலகிற்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மீண்டெழும் செய்தி நாகசாகியிலிருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த முறை வந்த செய்தி மனிதர்களிடமிருந்தல்ல! ஒரு மீனிடமிருந்து!
ஆராய்ச்சியாளர்கள் வேட்டையாடும் மீனால் விழுங்கப்பட்ட பின்னர், அவற்றின் வயிற்றிலிருந்து, இளம் ஜப்பானிய விலாங்கு மீன்கள் தப்பிப்பதை ஆச்சரியமான வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அறிவியல் உலகில் இது முதன் முறையாகும்.
டார்க் ஸ்லீப்பர் மீன்கள் என அழைக்கப்படும் Odontobutis obscura தனது இரையை முழுமையாகவும் உயிருடனும் விழுங்குகிறது. இந்த மீனால் விழுங்கப்பட்ட இளம் ஜப்பானிய விலாங்கு மீன்கள் – Anguilla japonica தங்கள் வால் நுனியை மீனின் உணவுக்குழாய் மற்றும் செவுள்களின் வழியாக வெளியேற்றி, தங்கள் முழு உடலையும் வெளியே இழுத்து தப்பிக்கின்றன என்பதை ஜப்பானின் நாகசாகி பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.
“இந்த ஆய்வு, வேட்டையாடிகளின் செரிமானப் பாதையில் இருக்கும் இரையின் நடத்தை முறைகள் மற்றும் தப்பிக்கும் செயல்முறைகளை ஆய்வு செய்த முதல் ஆய்வு” என்று நாகசாகி பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியலாளர்கள் யூஹா ஹாசகா மற்றும் யூகி கவபாட்டா கூறுகின்றனர்.
இந்த ஆய்வு செப்டம்பர் 9, 2024 அன்று ‘Current Biology’ இதழில் வெளியிடப்பட்டது.
இந்த ஆராய்ச்சியாளர்கள், தங்களது முந்தைய உற்று நோக்கல்களில், இளம் விலாங்கு மீன்கள் தங்கள் வேட்டையாடும் மீனின் செவுள்களின் வழியாக தப்பிக்க முடியும் என்பதை கவனித்திருந்தனர். ஆனால் எவ்வாறு அவை தப்பிக்கின்றன என்பது சரியாகத் தெரியாது. இதற்காக ஒரு X-ray வீடியோ சோதனையை அவர்கள் மேற்கொண்டனர்.
“ஆராய்ச்சியாளர்கள் ஜப்பானிய விலாங்கு மீன்களின் உடலில் பேரியம் சல்பேட்டை செலுத்தினர், இதனால், அவைகள் விழுங்கப்பட்ட பிறகு ஸ்லீப்பர் மீனின் வயிற்றில் X-ray வீடியோவில் தனித்துத் தெரியும். பின்னர், அவர்கள் அந்த விலாங்கு மீனை டார்க் ஸ்லீப்பர் மீன் இருக்கும் தொட்டியில் விட்டனர். நடப்பவற்றை X-ray வீடியோ மூலம் பதிவு செய்தனர்.
ஸ்லீப்பர் மீனால் முழுமையாக விழுங்கப்பட்டு அதன் வயிற்றை அடைந்த 32 விலாங்கு மீன்களில், 13 மீனின் செவுள்களின் வழியாக தங்கள் வால் நுனியை வெளியேற்ற முடிந்தது, மேலும் 9 வெற்றிகரமாக தப்பித்தன.”
“X-ray வீடியோ சோதனையின் முன்பு, விலாங்கு மீன்கள் வேட்டையாடும் மீனின் வாயிலிருந்தே செவுள்களின் வழியாக நேரடியாகத் தப்பிக்கலாம் என்று நாங்கள் கணித்த்திருந்தோம்.” என நாகசாகி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யூகி கவாபாட்டா தெரிவிக்கிறார்.
“ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, வேட்டையாடும் மீனின் வயிற்று வரை சென்ற பின்னும் கூட வளைந்து திரும்பி செவுள்களின் வழியாக சிறிய விலாங்கு மீன்கள் தப்பிவரும்போது நாங்கள் முற்றிலும் ஆச்சரியமடைதோம்” என்று கவாபாட்டா கூறினார்.
‘நாங்கள் மிகவும் நேரடியான தப்பிக்கும் வழிகளை எதிர்பார்த்தோம், ஆனால் அவற்றின் செரிமானப் பாதையில், மீண்டும் மேலே செல்லும் திறன் உண்மையிலேயே ஆச்சரியமானது’ என்று அவர் கூறினார்.
“இந்த விலாங்கு மீன்கள் தாங்கள் தப்பிப்பதற்கு எவ்வாறு துணிச்சலான மற்றும் சிறப்பான முயற்சியை மேற்கொள்கின்றன என்பதைக் காட்டும் வலுவான வாய்ப்பைப் படமாக்க குழுவுக்கு ஒரு வருடம் பிடித்தது.”
விலாங்கு மீன்கள் தப்பிப்பதற்கு பல வகையான முயற்சிகளைச் செய்தன. ஒவ்வொரு விலாங்கு மீனுக்கும், ஸ்லீப்பர் மீனின் உடலின் உள்ளே செயல்திறன் கொண்ட சராசரி நேரம், செரிமான சூழலின் எதிர்ப்பைத் தாங்கி 211 வினாடிகள் வரை இருந்தது. இதற்குள் தப்பிக்க வேண்டுமென்றால் அவைகள் மிகவும் செயல்திறன் மிக்கவையாக இருக்க வேண்டும்.
தப்பிக்க முடியாத விலாங்கு மீன்கள் கூட, ஸ்லீப்பர் மீனின் வயிற்றைச் சுற்றி வட்டமிடுவது போல சுற்றிக்கொண்டே இருந்தன. இது தப்பிக்கும் வழியை அவைகள் தேடுவது போல இருக்கிறது.
“விலாங்கு மீன்கள் செரிமானம் ஆகும் முன், செரிமான மண்டலத்திலிருந்து விரைவாகத் தப்பிக்க, அதிக அமில மற்றும் காற்றில்லா சூழல்களைத் தாங்கும் தன்மை, தசை வலிமை அத்துடன் அவற்றின் நீண்ட, வழுக்கும் உருவம் ஆகியவை தேவையானவை” என்று ஹாசகா மற்றும் கவபாட்டா கூறினர்.
ஸ்லீப்பர் மீன்களின் செவுள்களின் வழியாக விலாங்கு மீன்கள் தப்பிவருவதால் ஸ்லீப்பர் மீன்கள் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படவில்லை. ‘விலாங்கு மீன்கள் சிறியதாகவும் வழுக்கும் தன்மையுடையதாகவும் இருக்கின்றன, இந்த செயல்முறை வேட்டையாடிய ஸ்லீப்பர் மீனுக்கு எந்த ஒரு நீண்டகால சேதத்தையும் ஏற்படுத்தவில்லை’ என்று கவாபாட்டா கூறினார். “ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும், மீன்கள் இயல்பாகவே நடந்து கொண்டன.”
“இதுவரை, வேட்டையாடிகளின் செரிமான மண்டலத்திலிருந்து தப்பிக்கும் ஒரே மீன் இனம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – ஜப்பானிய விலாங்கு மீன் மட்டுமே.”
‘எங்கள் சோதனைகளில் அடிக்கடி இது நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டால், இது இயற்கை சூழல்களில், விலாங்கு மீன்கள் குறிப்பாக இதுபோன்ற வேட்டையாடிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது, மிகவும் பொதுவானதாக இருக்கலாம்’ என்று அவர் கூறினார்.
‘எங்கள் முக்கிய தீராத கேள்விகளில் ஒன்று, இந்த நடத்தை ஜப்பானிய விலாங்கு மீன்களுக்கு மட்டுமே தனித்துவமானதா என்பதுதான்’ என்று அவர் கூறினார்.
மரணத்தின் வாயிலிருந்தும், வயிற்றிலிருந்தும் நிகழ்த்தப்படும் இந்த துணிச்சலான தப்பித்தல், விலங்குகளின் உயிர்வாழ்வுக்கான ஓர் அரிதான உத்தியாகத் தெரிகிறது என்றாலும், அதே திறன் கொண்ட பல உயிரினங்கள் இன்னும் இருக்கலாம்.
உங்களைச் சுற்றி உற்றுநோக்கிப்பாருங்கள்! நீங்கள் கூட அதைக் கண்டறியக்கூடும்!
தொடர்ந்து அறிவியல் பேசுவோம்!
வீடியோ இணைப்பு – https://www.cell.com/cms/10.1016/j.cub.2024.07.023/attachment/5036d058-03b1-4871-9fd5-c370113ab915/mmc2.mp4
ஆய்வுக்கட்டுரை இணைப்பு –
https://www.cell.com/current-biology/fulltext/S0960-9822(24)00926-6
எழுதியவர் :
பெருமாள் ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.