இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.

மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும் மக்களும் எடுக்கப்போகும் முடிவுகள் தான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன. அவை நமது சுகாதார கட்டமைப்பை மட்டுமல்லாது, நமது பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றையும் முடிவு செய்யும். நாம் விரைந்து, உறுதியாக முடிவெடுக்க வேண்டும். நமது செயல்களின் நீண்டகால விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்று முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, தற்போதைய சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதோடு, இந்தச் சிக்கல் முடிவடைந்த பிறகு எப்படிப்பட்ட உலகை நாம் அடையப் போகிறோம் என்பதையும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆமாம். இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிடும்; மனித இனம் பிழைத்திருக்கும்; நம்மில் பலர் உயிரோடுதான் இருப்போம் – ஆனால் நமது உலகம் மாறிப் போயிருக்கும்.

அவசரகாலத்தின் பல திடீர் முடிவுகள் வாழ்நாள் வரை தொடரும். அவசர நிலையின் இயல்பு அதுதான். வரலாற்றுச் செயல்முறைகளை அவை விரைவு படுத்துகின்றன. சாதாரணமாக பல ஆண்டுகள் பிடிக்கும் முடிவுகள் சில மணி நேரங்களில் ஏற்கப்பட்டு விடும். ஒன்றும் செய்யாமல் இருப்பதன் பாதிப்பு பெரியது என்பதால், தேறாத, ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட பயன்படுத்தப் பட்டுவிடும். ஒட்டு மொத்த நாடுகளே பெரிய அளவிலான சமூக ஆய்வுகளுக்கு சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்படும்.

Yuval Noah Harari: the world after coronavirus | Free to read ...

எல்லோரும் வீட்டிலிருந்தே வேலை செய்து, தொலைத் தொடர்பு வழியாக மட்டுமே தொடர்பில் இருந்தால் என்ன ஆகும்? எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் இணையதலம் வழியாக மட்டுமே செயல்பட்டால் என்ன ஆகும்? சாதாரண நேரங்களில் அரசோ, தொழில், கல்வி வாரியங்களோ இப்படிப்பட்ட சோதனைகளைச் செய்து பார்க்க உடன்படாது. ஆனால் இது சாதாரண நேரமல்ல.

சிக்கலான இந்த நேரத்தில், குறிப்பாக இரண்டு முக்கிய முடிவுகளை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். முதலாவது, சர்வ வல்லமை கொண்ட அரசின் கண்காணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது தன்னுரிமை கொண்ட மக்களாக வாழப் போகிறோமா என்பது. இரண்டாவது, தேசமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளப் போகிறோமா அல்லது உலகமாக ஒன்றினையப் போகிறோமா என்பது.

உடலை ஊடுறுவும் கண்காணிப்பு

தொற்று நோய்களைத் தடுக்க மக்கள் அனைவரும் சில வழிகாட்டுதல்களை ஏற்க வேண்டும். இதை அடைய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. அரசு மக்களைக் கண்காணிப்பதும், விதி மீறுபவர்களைத் தண்டிப்பதும் முதல் வழி. மனித வரலாற்றில் முதன் முறையாக, இன்று எல்லோரையும் இடைவிடாது கண்காணிப்பதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்ய உளவுத் துறையால் அந்த நாட்டின் இருபத்து நான்கு கோடி மக்களை நாள் முழுவதும் கண்காணிக்க முடியவில்லை; திரட்டப்பட்ட தகவல்களையும் முழுமையாக ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்போது மனிதர்களை நம்பி இருக்காமல், எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் அசைவை உணரும் கருவிகளையும் (sensors), கணிப்பு முறைகளையும் (algorithms) அரசுகள் பயன்படுத்துகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் பல அரசுகள் ஏற்கனவே புதிய கண்காணிப்புக் கருவிகளை களமிறக்கியுள்ளன. இதில் சீனா செய்திருப்பது முக்கியமானது. மக்களின் நவீன செல்பேசிகளை(smart phones)க் கண்காணித்தும், முகங்களை அடையாளம் காட்டும் லட்சக்கணக்கான கேமராக்களைக் கொண்டும், மக்கள் தங்கள் உடல் வெப்பம், உடல்நிலை ஆகியவற்றைத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கியும், கொரோனா வைரஸ் தொற்று கடத்தியாக செயல்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களது நடமாட்டத்தைக் கண்காணித்ததோடு, அவர்களோடு தொடர்பில் வந்த அனைவரையும் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டனர். தொற்றுநோய் பீடித்த ஒருவர் அருகில் வருகிறார் என்பதை எச்சரிக்க பல மொபைல் ஆப்-புகள் உருவாக்கப் பட்டன.

Yuval Noah Harari on Why Technology Favors Tyranny - The Atlantic

இத்தகைய தொழில் நுட்பங்கள் கிழக்கு ஆசியாவுக்கு மட்டும் உரியவை அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக போராட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை, கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளைக் கண்டுபிடிப்பதில் பயன்படுத்த இஸ்ரேல் பாதுகாப்பு முகமைக்கு அனுமதி தந்தார் அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதிகாரம் படைத்த நாடாளுமன்ற துணைக்குழு அதற்கு அனுமதி அளிக்க மறுத்த போது, நெதன்யாகு தனது ‘அவசர உத்தரவாக’ அதைச் செயல்படுத்தினார்.

இதில் புதிதாக ஒன்றும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். அண்மைக்காலங்களில் அரசாங்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களை கண்காணிக்கவும், தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கவும் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இப்போது நாம் கவனமாக இருக்காவிட்டால், கண்காணிப்பு வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக இந்தத் தொற்று மாறிவிடும். இதுவரை அதை ஏற்க மறுத்த நாடுகளிலும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்துவிடும் என்பது மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக இதுவரை உடம்பின் மேல் புறத்தைக் கண்காணித்த நிலையில் இருந்து, உடம்பிற்குள் ஊடுறுவிக் கண்காணிக்கும் நிலைக்கு மாறுவதை அது குறிக்கிறது.

இதுவரை உங்கள் விரல்கள் செல்பேசித் திரையில் தொடும்போதும், இணைப்புகளை சொடுக்கும்போதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பியது அரசு. கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு, ஆர்வத்தின் மையம் மாறுகிறது. இப்போது அரசு உங்கள் விரலின் வெப்பத்தையும், உங்கள் தோலுக்கு அடியில் நிலவும் ரத்த அழுத்தத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறது.

உணவுக்காக அவசரநிலை

இனி வரும் ஆண்டுகளில் என்ன நடக்கப்போகிறது, எப்படி நாம் கண்காணிக்கப் படுவோம் என்று யாருக்கும் சரியாகத் தெரியாதது, அதைப்பற்றிய நம் நிலைப்பாட்டை முடிவுசெய்யத் தடையாக உள்ளது. கண்காணிப்புத் தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் கதையில் வரும் சம்பவமாகத் தோன்றியது, இன்று பழைய செய்தியாகிவிட்டது.

எடுத்துக் காட்டாக, இதயத் துடிப்பையும் உடல் வெப்பத்தையும் இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்க, பயோமெட்ரிக் கங்கனத்தை ஒவ்வொருவரும் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து பெறப்படும் தகவல்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, அரசின் அல்கிரிதம் ஆய்வு செய்கிறது. இப்போது, உங்கள் உடல்நிலை கெட்டிருப்பது உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே அரசுக்குத் தெரிந்துவிடும். நீங்கள் எங்கே போனீர்கள், யாரைப் பார்த்தீர்கள் என்பதும் அதற்குத் தெரியும். அதைக்கொண்டு நோய் பரவுவதை கடுமையாகக் குறைத்து விடலாம்; நோயே இல்லாமலும் செய்துவிடலாம். அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் தொற்று நோயைத் தடுத்து நிறுத்திவிட முடியும். பிரமாதம், இல்லையா?

இதன் குறைபாடு என்னவென்றால், அது ஆபத்தான கண்காணிப்பு முறையை நியாயப் படுத்துவதாக முடிந்துவிடும். உதாரணமாக, செய்திகளைத் தெரிந்து கொள்ள எந்தத் தொலைக்காட்சி சேனலை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்பதைக் கொண்டு, எனது அரசியல் நிலைப்பாட்டை அது கற்பிக்கும். எனது ஆளுமையைப் பற்றியும் அது சொல்லும். ஒரு வீடியோவை நான் பார்க்கும்போது, எனது உடல் வெப்பம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடிந்தால், என்னை சிரிக்க வைப்பது எது, அழ வைப்பது எது, கோபப்படுத்துவது எது என்று தெரிந்துகொள்ளலாம்.

Yuval Noah Harari: the world after coronavirus

காய்ச்சலையும் இருமலையும் போல, காதல், சலிப்பு, மகிழ்ச்சி எல்லாம் உயிரின் இயல்புகள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இருமலை அடையாளம் கண்டுகொள்ளும் அதே தொழில்நுட்பத்தால் சிரிப்பையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். வணிக நிறுவனங்களும் அரசும் நமது பயோமெட்ரிக் தரவுகளை மொத்தமாக அறுவடை செய்யத் தொடங்கினால், நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்திருப்பதை விட, அவர்களால் கூடுதலாகத் தெரிந்துகொள்ள முடியும். நமது உணர்வுகளைக் கணிக்க முடியும்; அவற்றை ஆட்டிப்படைத்து அவர்கள் விரும்பும் எதையும் – ஒரு அரசியல்வாதியையோ அல்லது பொருளையோ – நம்மிடம் விற்றுவிட முடியும். பயோமெட்ரிக் கண்காணிப்போடு ஒப்பிட்டால், இதற்கு முன் அதிகம் பேசப்பட்ட கேம்பிரிட்ஜ் ஆனாலிடிகாவின் உத்திகள் கற்கால முயற்சி போலத் தோன்றும். ஒவ்வொரு குடிமகனும் நாள்முழுவதும் பயோமெட்ரிக் கைக்கடிகாரம் கட்டிக்கொள்வது கட்டாயமாகப் போகும் 2030ஆம் ஆண்டின் வடகொரியாவை கற்பனை செய்து பாருங்கள். “பெருந் தலைவ”ரின் உரையைக் கேட்கும்போது உங்களுக்கு கோபம் வருவது போன்ற சிறு அதிர்வை உங்கள் கைக்கடிகாரம் கண்டறிந்தால், உங்கள் கதி அதோகதிதான்.

அவசர நிலையில் எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை; அவசரநிலை முடிந்ததும் அதுவும் முடிவுக்கு வந்துவிடும் என்று பயோமெட்ரிக் கண்காணிப்பை நீங்கள் நியாயப் படுத்தலாம். இன்னொரு அவசரநிலை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்ற நிலை எப்போதுமே நிலவும் சூழ்நிலையில் – தற்காலிக நடவடிக்கைகள் அவசர காலத்தைக் கடந்து நீடிக்கும் அசிங்கமான வழக்கம் கொண்டவை.

உதாரணமாக எனது தாய் நாடான இஸ்ரேல், 1948 ஆம் ஆண்டு சுதந்திரப் போரின் போது பிரகடனம் செய்த அவசரநிலை, உணவு செய்வதற்காக (நான் கிண்டல் செய்யவில்லை) நிலங்களைப் பறித்தது, பத்திரிக்கை தணிக்கை கொண்டுவந்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. சுதந்திரப் போர் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்ட போதும் , அவசர நிலை முடிந்து விட்டதாக இஸ்ரேல் இன்னும் அறிவிக்கவில்லை; 1948ல் எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளவில்லை (கருணையோடு உணவுக்கான அவசரநிலை உத்தரவு கடந்த 2011ல் விலக்கிக் கொள்ளப் பட்டது).

How countries around the world are battling coronavirus ...

கரோனா வைரஸ் தொற்று முற்றிலும் முடிவுக்கு வந்தாலும், தரவுகளைத் திரட்டத் துடிக்கும் சில அரசுகள், கரோனா வைரசின் இரண்டாவது அலை பற்றிய அச்சம் இருக்கிறது, மத்திய ஆப்பிரிக்காவில் புதிய வகை எபோலா உருவாகி வருகிறது, இது வருகிறது, அது வருகிறது …. என்று எதையாவது சொல்லி பயோமெட்ரிக் கண்காணிப்பு தொடர வேண்டும் என்று வாதிடலாம்.

நமது அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ளும் உரிமை பற்றிய பெரும் யுத்தம் அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல் அதில் ஒரு முக்கியப் புள்ளி – ஏனென்றால், உங்கள் அந்தரங்க உரிமையா அல்லது ஆரோக்கியமா இரண்டில் எது என்று கேட்டால் மக்கள் இப்போது ஆரோக்கியத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

சோப்புக் காவலர்கள்

அந்தரங்க உரிமையா ஆரோக்கியமா என்று மக்களைக் கேட்பதுதான் உண்மையில் பிரச்சனையின் ஆணி வேராக இருக்கிறது; ஏனென்றால் இது ஒரு தவறான கேள்வி. நாம் அந்தரங்க உரிமை, ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் பெற வேண்டும். சர்வ அதிகாரம் கொண்ட கண்காணிப்பு அரசை நிறுவாமல், குடிமக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதன் மூலம் – நமது உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளவும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவும் நாம் முடிவு செய்யலாம். சில வாரங்களுக்கு முன்பு, கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆசிய நாடுகள் முன் வைத்துள்ளன. கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை ஓரளவு பயன்படுத்தினாலும், அவை பரவலாக மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வது, நேர்மையான அறிக்கைகளை வெளியிடுவது, அனைத்துத் தகவல்களையும் மக்களுக்குத் தெரிவித்து அவர்களே விரும்பி ஒத்துழைக்கச் செய்வது ஆகியவற்றை நம்பியிருந்தன.

மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, கடுமையான தண்டனைகள் ஆகியவை மட்டுமே, மக்களை நன்மை தரும் வழிகாட்டு முறைகளை ஏற்கச் செய்வதற்கான முறைகள் அல்ல. அறிவியல் உண்மைகளை மக்களுக்குத் தெரிவித்தால், அதிகார அமைப்புகள் உண்மையைத்தான் சொல்கின்றன என்று மக்கள் நம்பினால், அவர்களை பெரிய அண்ணன் (Big Brother) கண்காணிக்காத போதும் அவர்கள் சரியான செயல்களைச் செய்வார்கள். கட்டுக் காவலில் வைக்கப்படும் அறிவில்லாத மக்களைவிட, அனைத்துத் தகவல்களையும் அறிந்த, தானே முன்வந்து ஏற்று நடக்கும் மக்கள்தான் வீரியமும் செயல்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

When and How to Wash Your Hands | Handwashing | CDC

உதாரணமாக, உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை எடுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களின் தன்சுத்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்களில் இதுவும் ஒன்று. இந்தச் சாதாரண செயல் ஆண்டுதோறும் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றுகிறது. நம் தலைமுறைக்கு அது பெரிதாகத் தெரிவதில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் சோப்பு போட்டு கை கழுவுவதன் முக்கியத்துவத்தை அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்தார்கள். அதற்கு முன்பு, மருத்துவர்கள் கூட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்தது என்று கையைக் கழுவாமல்தான் செய்தார்கள். இன்று கோடிக்கணக்கான மக்கள் கைகளை தினமும் சோப்பு போட்டுக் கழுவுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருப்பதால்தானே தவிர, அது சோப்பு போலீஸ் மீது உள்ள பயத்தால் அல்ல. வைரஸ், பாக்டீரியா ஆகியவை பற்றி நான் கேள்விப்பட்டிருப்பதால், அந்த நுண்ணுயிரிகள் நோயை உண்டாக்கும் என்று புரிந்திருப்பதால், சோப்பு அவற்றை நீக்கும் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், நான் சோப்பு போட்டு கை கழுவுகிறேன்.

அந்த அளவுக்கு ஒத்துழைப்பும் ஏற்பும் கிடைக்க நம்பிக்கை ஏற்பட வேண்டும்; மக்களுக்கு அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகங்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பற்ற அரசியல்வாதிகள் வேண்டுமென்றே அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை குலைத்திருக்கிறார்கள். இப்போது அதே பொறுப்பற்ற அரசியல்வாதிகள், மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என்று நம்ப முடியாது என்ற வாதத்தை முன்வைத்து, சர்வாதிகாரத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கிறார்கள்.

Superbugs, coronavirus - and what it will take to stop the next ...

சாதாரணமாக, பல ஆண்டுகளாகவே இழந்துவிட்ட நம்பிக்கையை ஓர் இரவில் சரிக்கட்டி விட முடியாதுதான். ஆனால் இது அசாதாரண நேரம். சிக்கலான நேரத்தில், மனங்களும் விரைவாக மாறலாம். உங்கள் சகோதரர்களோடு பல ஆண்டுகளாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுவரும் நீங்கள், ஒரு அவசர நிலை ஏற்பட்டால் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையும் நட்புணர்வும் உங்களிடையே நிலவுவதைக் கண்டு கொள்வீர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவ ஓடுவீர்கள்.

கண்காணிப்பு ஆட்சிக்கு மாற்றாக, மக்களுக்கு அறிவியலின் மீதும், அதிகார அமைப்புகளின் மீதும், ஊடகத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்த காலம் கடந்து விடவில்லை. நாம் புதிய தொழில்நுட்பங்களையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், ஆனால் அந்தத் தொழில் நுட்பங்கள் மக்களுக்கு அதிகாரம் தருபவையாக இருக்க வேண்டும். எனது உடல் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் கண்காணிப்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் அந்தப் புள்ளி விவரங்களை சர்வ வல்லமை படைத்த அரசை உருவாக்கப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, நான் அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்கவும் அரசாங்கத்தை அதன் செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யவும் அது எனக்கு உதவ வேண்டும்.

எனது உடல்நிலையைப் பற்றிய தகவல்கள் இருபத்து நான்கு மணி நேரமும் எனக்கு கிடைக்குமென்றால், என்னால் அடுத்தவர்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை மட்டுமல்ல, என் உடல்நிலை கெடக் காரணமான நடத்தை எது என்றும் தெரிந்து கொள்வேன். கரோனா வைரஸ் பரவுவது பற்றிய நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களை அணுகவும் ஆராய்ந்து பார்க்கவும் முடியுமானால், அரசு உண்மையைச் சொல்கிறதா, தொற்றைக் கட்டுப்படுத்த சரியான திட்டங்களைச் செயல்படுகிறதா என்பதை நான் எடைபோட முடியும். கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசும்போது, அரசுகள் தனி மனிதர்களைக் கண்காணிக்க மட்டுமல்ல, தனிமனிதர்கள் அரசுகளைக் கண்காணிக்கவும் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆகவே, கரோனா வைரஸ் தொற்று, குடியுரிமைக்கு வந்த ஒரு முக்கியமான சோதனை. வரும் நாட்களில் நாம் ஒவ்வொருவரும், தன்னலம் பிடித்த அரசியல்வாதிகளையும், சதித்திட்டம் பற்றிய அடிப்படை ஆதாரமில்லாத கதைகளையும் நம்பாமல், அறிவியல் புள்ளிவிவரங்களையும், மருத்துவ நிபுணர்களையும் நம்பவேண்டும். சரியான முடிவை நாம் எடுக்கத் தவறினால், நமது உடல்நலத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழி என்று நினைத்து, மிக அரிதான நமது சுதந்திரங்களை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விடும் நிலைமை ஏற்படலாம்.

உலகளாவிய திட்டம் தேவை

நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது முடிவு தனித்து நிற்கும் தேசியமா அல்லது உலக ஒற்றுமையா என்பது. நோய்த்தொற்று, அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் ஆகிய இரண்டுமே உலக அளவிலான பிரச்சனைகள். உலக அளவிலான ஒத்துழைப்பின் மூலம்தான் அவற்றை வெற்றிகரமாக தீர்க்க முடியும்.

முக்கியமாக, வைரசைத் தோற்கடிக்க முதலில் உலக அளவில் நாம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்; அதுதான் வைரசோடு ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருக்கும் அனுகூலம். சீனாவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும், மனிதர்களை எப்படித் தாக்குவது என்ற யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் கரோனா வைரஸ் பற்றி கற்றுக்கொண்ட பாடங்களையும் அவற்றை சமாளிக்கும் முறைகளையும் சீனா அமெரிக்காவுக்குக் கற்றுத் தரலாம். காலையில் மிலன் நகரில் ஒரு இத்தாலிய டாக்டர் கண்டுபிடித்த ஒரு தகவலைக் கொண்டு, மாலையில் டெஹ்ரான் நகரில் பல உயிர்களைக் காக்க முடியும். பல்வேறு மருத்துவ கொள்கைகளுக்கு இடையில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தயங்கும் பிரிட்டிஷ் அரசு, ஒரு மாதத்திற்கு முன்பு அதே சிக்கலை எதிர் கொண்ட கொரியாவிடம் இருந்து ஆலோசனை பெறலாம். ஆனால் அப்படி நடக்க, உலக அளவிலான கூட்டுறவும் நம்பிக்கை உணர்வும் தேவை.

Facing Two Pandemics: Coronavirus and Global Capital

நாடுகள் தகவல்களை வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளவும், இணங்கி ஆலோசனை பெறவும் முன்வரவேண்டும். அவை பெறுகின்ற தரவுகளையும் விளக்கங்களையும் நம்பி ஏற்கும் நிலை உருவாக வேண்டும். மருத்துவ உபகரணங்களை, குறிப்பாக சோதனைப் பெட்டிகளையும், சுவாசக் கருவிகளையும் தயாரிக்கவும் விநியோகிக்கவும் உலக அளவிலான முயற்சி தேவை. ஒவ்வொரு நாடும் உள்நாட்டிலேயே அதை உற்பத்தி செய்யவும், கிடைக்கும் கருவிகளை பதுக்கி வைத்துக் கொள்ளவும் முயலாமல், உலக அளவில் கூட்டு முயற்சி செய்தால், உற்பத்தி துரிதமாவதோடு உயிர்காக்கும் கருவிகளை நியாயமான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம். போரின்போது நாடுகள் தொழிற்சாலைகளைத் தேசியமயமாக்குதைப்போல, கரோனா வைரசுக்கு எதிரான மனிதர்களின் போரில், உற்பத்தி வசதிகளை மனிதாபிமானம் கொண்டதாக மாற்றுவதற்கான தேவை ஏற்படலாம். கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள ஒரு பணக்கார நாடு, தனக்குத் தேவையானபோது மற்ற நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையில், தொற்று அதிகமுள்ள ஒரு ஏழை நாட்டுக்கு விலைமதிப்பில்லாத கருவிகளை அனுப்ப முன்வரவேண்டும்.

மதுத்துவ நிபுணர்களைத் திரட்டவும் அப்படிப்பட்ட உலகலாவிய ஒரு முயற்சியைப் பற்றியும் யோசிக்கலாம். அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் தங்கள் மருத்துவர்களை அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளுக்கு அனுப்பினால், உதவியாக இருப்பதோடு, தொற்றைப் பற்றிய அனுபவம் பெறவும் உதவும். பிறகு, தொற்று இடம் மாறினால், உதவிகளும் மறுபுறத்தில் இருந்து வரத் தொடங்கலாம்.

பொருளாதாரம் சார்ந்தும் உலக ஒத்துழைப்பு தேவைப்படும். சங்கிலித் தொடராகப் பிணைக்கப் பட்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தின் தன்மையால், மற்ற நாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு நாடும் தனித்துச் செயல் படத் தொடங்கினால், பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைவதோடு, குழப்பமும் ஏற்படும். நமக்கு உலகம் தழுவிய செயல்திட்டம் தேவை; அதுவும் விரைவாகத் தேவை.

Coronavirus outbreak mapped: New COVID-19 cases, countries ...

பயணம் குறித்த உலக ஒப்பந்தமும் தேவைப் படுகிறது. பன்னாட்டுப் பயணங்களை மாதக் கணக்கில் நிறுத்தி வைப்பது பெரும் சிரமங்களைத் தரும்; கரோனா வைரசுக்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும். விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் போன்ற மிக அவசியமான சிலரையாவது அனுமதிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். பயணிகளை அவர்களது நாடுகளிலேயே சோதித்து அனுப்புவது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். கவனமாக பரிசோதித்த பயணிகள்தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் உங்கள் நாட்டில் அவர்களைத் தாரளமாக ஏற்கலாம்.

கெடுவாய்ப்பாக, தற்போது நாடுகள் இவற்றில் எதையும் செய்யவில்லை. ஒரு முடக்குவாதம் உலக சமுதாயத்தைப் பீடித்திருக்கிறது. பக்குவம் பெற்றவர்கள் யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பே உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி பொதுவான செயல்திட்டத்தை வகுத்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஜி-8 நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம்தான் காணொலி மூலம் சந்தித்தார்கள் – ஆனால் அவர்கள் செயல்திட்டம் எதையும் வகுக்கவில்லை.

இதற்கு முன்பு, 2008-ல் நிதிச் சிக்கல் ஏற்பட்ட போதும், 2014-ல் எபோலா தொற்று ஏற்பட்ட போதும், அமெரிக்கா தலைமைப் பொறுப்பை ஏற்றது. ஆனால், தற்போதைய அமெரிக்க நிர்வாகம் தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை. மனித இனத்தின் எதிர்காலத்தைவிட, அமெரிக்காவின் பெருமைதான் முக்கியம் என்று அது தெளிவுபடுத்தி விட்டது. அதன் நெருக்கமான நட்பு நாடுகளையும் அது கைவிட்டுவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது பயணத் தடை விதிப்பதற்கு முன்பு, அவற்றோடு கலந்து பேசுவதைப் பற்றியோ, முன்னெச்சரிக்கை செய்வதைப் பற்றியோ அது கவலைப்படவில்லை. கோவிட் -19 தடுப்பு மருந்தை தயாரிக்கும் தனி உரிமையை வாங்க ஒரு ஜெர்மன் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர் கொடுக்க முன்வந்ததன் மூலம், ஜெர்மனியை அது அவமதித்து விட்டது. தற்போதைய தலைமை அதன் போக்கை மாற்றிக் கொண்டு உலக அளவிலான செயல்திட்டத்தை முன்வைத்தாலும், பொறுப்பை ஏற்க முன்வராத, தனது தவறுகளை ஒப்புக் கொள்ளாத, வழக்கமாகவே வெற்றியைத் தனதாக்கிக் கொண்டு, தோல்விக்கான பழியை மற்றவர்மீது போடும் தலைமையை யாரும் ஏற்க மாட்டார்கள்.

In Pictures: The coronavirus outbreak around the world | | Al Jazeera

அமெரிக்கா காலியாக விட்டுள்ள வெற்றிடத்தை மற்ற நாடுகள் நிரப்பாவிட்டால், தற்போதைய நோய்த் தொற்றைத் தடுப்பது சிரமம் என்பதோடு, இனி வரும் ஆண்டுகளில் அதன் தொடர்ச்சி சர்வதேச உறவுகளையும் கெடுக்கும். இருந்தாலும் ஒவ்வொரு சிக்கலும் ஒரு வாய்ப்புதான். உலக ஒற்றுமையின்மையின் ஆபத்தை மனித இனம் உணர்ந்துகொள்ள நடப்பு நோய்த் தொற்று உதவும் என்று நம்பலாம்.

மனித இனம் எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க வேண்டும். ஒற்றுமையற்ற வீழ்ச்சிப் பாதையில் பயணிப்பதா அல்லது உலக ஒற்றுமை வழியை தேர்ந்தெடுப்பதா? ஒற்றுமை இன்மையைத் தேர்ந்தெடுத்தால், தற்போதைய சிக்கலை நீடிக்கச் செய்வதோடு, வருங்காலத்தில் இன்னும் மோசமான பேரழிவுகளைச் சந்திப்பதிலும் முடியலாம். உலக ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்தால், அது கரோனா வைரசுக்கு எதிராக மட்டுமல்ல இனி வரப்போகும் தொற்றுகளுக்கும், இருபத்தோறாம் நூற்றாண்டில் மனித இனத்தைத் தாக்கப் போகும் சிக்கல்களுக்கும் எதிரான வெற்றியாக இருக்கும்.

யுவல் நோவா ஹராரி – சேப்பியன்ஸ், ஹோமோ தியஸ், 21ஆம் நூற்றாண்டுக்கு 21 பாடங்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: மா.அண்ணாதுரை

One thought on “கரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி”
  1. உண்மை அச்சுறுத்துவதாக உள்ளது. எளிமையான, சிறந்த மொழி பெயர்ப்பு. மூலத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும் நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *