கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நடுவில் தொடர்ச்சியான எஃப்.ஐ.ஆர், ஜாமீன் விசாரணைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சிறைவாசம் ஆகியவற்றின் மத்தியில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

பெத்வா ஷர்மா

புதிய டெல்லி- ஒரு தலைமுறையில் நடந்தவற்றில் மிக மோசமான டெல்லி வகுப்புவாதக் கலவரங்களுக்குப் பிறகு, மார்ச் 6 ஆம் தேதி டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போதைப்பொருள் பிரிவின் துணை ஆய்வாளர் அரவிந்த் குமார் ஒரு புகாரைத் தாக்கல் செய்தார், இது முதல் தகவல் அறிக்கை 59/2020 என அறியப்படும்.

குமார் தனது புகாரில், இந்த கலவரம் முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் (ஜே.என்.யூ) உமர் காலித் மற்றும் அவரது கூட்டாளிகளால் திட்டமிடப்பட்ட சதி என்றும், அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் போராட்டங்களை நடத்திய போது ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தியதாகவும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைச் சேகரித்ததாகவும் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களில், எஃப்.ஐ.ஆர் 59 கலகத்தின் நான்கு கடுமையான, ஆனால் ஜாமீனில் வெளிவரக்கூடிய, கலகம் செய்வது, பயங்கரமான ஆயுதங்களை வைத்திருப்பது, கிரிமினல் சதித்திட்டத்துடன் சட்டவிரோதமாகக் கூட்டம் கூடுவது  ஆகிய குற்றங்களுக்கு இரண்டு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதிலிருந்து, டெல்லி கலவரத்திற்கு முந்தைய மாதங்களில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டையாக உருமாற்றம் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. 

Umar-Khalid,-Meeran-Haider,-Safoora-Zargar318028_1589006470.jpg ...

  இப்போதைய நிலவரப்படி, எஃப்.ஐ.ஆர் 59 ஒரு எம்.பி.எல் மாணவர் சபூரா சர்கர், பி.எச்.டி வேட்பாளர் மீரன் ஹைதர் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி குல்பிஷா பாத்திமா மற்றும் மூன்று மாணவர்கள் உட்படக் குறைந்தது 14 பேர் மீது, இப்போது குற்றம் சாட்டியுள்ளது, இதில் நாட்டில் மிகவும் கடுமையானவையாகக் கருதப்படுகின்ற கொலை, தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நடுவில் அவர்களின் வாழ்க்கை தொடர்ச்சியான எஃப்.ஐ.ஆர், ஜாமீன் விசாரணைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சிறைவாசம் ஆகியவற்றின் மத்தியில் சிக்கியுள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 750 எஃப்.ஐ. ஆர்களில், எஃப்.ஐஆர் 59-ம் ஒன்று, ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அறிக்கை அளிக்கும் டெல்லி காவல்துறை எவ்வாறு கலவரத்தை மோடி ஆட்சியின் மிகவும் ஈர்ப்புடைய மற்றும் வெளிப்படையான விமர்சகர்களைக் காலவரையற்ற சிறைவாசத்தின் கீழ் வைப்பதற்கு ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இது மிகவும் தெள்ளத்தெளிவான உதாரணங்களில் ஒன்றாகும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

எஃப்.ஐ.ஆர் 59 இல் இப்போது கடுமையான சட்டவிரோதச் செயலுக்கு எதிரான தடுப்புச் சட்டப்பிரிவு (யுஏபிஏ) சேர்க்கப்படுவதற்கு தாங்கள் குற்றமற்றவர்கள் என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எந்தக் கேள்வியுமின்றி உடனடியாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது என்று பொருள். ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் கூட்டங்களைத் தூண்டிவிட்டு “தேசத்துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்று கோஷமிடும் கோபமான ஆர்ப்பாட்டங்களை வழிநடத்தும் வீடியோக்கள் பரவலாக உலவ விடப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர் என்பது கலவரங்கள் தொடர்பான விசாரணை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்ற எண்ணத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. 

தில்லி காவல்துறை “பாகுபாடற்ற” விசாரணையை நடத்துவதாகவும், அனைத்து கைதுகளும் “வீடியோ காட்சிகள், தொழில்நுட்ப மற்றும் பிற தடயங்கள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தடயவியல் சான்றுகளை” அடிப்படையாகக் கொண்டவை என்றும் கூறியுள்ளது.

வன்முறையில் ஐம்பது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது, அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குறைந்தது 14 மசூதிகள் சேதமடைந்தன அல்லது எரிக்கப்பட்டன. எந்தவொரு கோயிலுக்கும் இத்தகைய விதி ஏற்படவில்லை. ஜூன் 7 ம் தேதி, 620 இந்துக்கள் மற்றும் 683 முஸ்லிம்கள் உட்பட 1,400 பேரைக் கைது செய்துள்ளதாகவும், 205 இந்துக்கள் மற்றும் சம எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் உட்பட 510 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பான காவல்துறையின் மற்றொரு  வழக்கு தொடர்பாக ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் 27 வயது மாணவர் சஃபூரா சர்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் ​​அதே நாளில் அவர் எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார், அதைத்தொடர்ந்து அவர் நாள்பட்ட கர்ப்பிணியாக இருந்தும், உடல்நல சிக்கல்கள் இருப்பதால்  அவர் சிறையில் கருச்சிதைவுக்கு ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்ட போதும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதேபோல, டெல்லி கலவரம் தொடர்பான காவல்துறையின் மற்றொரு வழக்கு தொடர்பாக 32 வயதான வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான இஷ்ரத் ஜஹான் பிப்ரவரி 26 அன்று காவல்துறையினரால் முதலில் கைது செய்யப்பட்டார், அவருக்கு மார்ச் 21 ஆம் தேதி தான் ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் காவல்துறை அவரை மீண்டும் கைது செய்தது.

சர்கார் தொடர்பான ஜாமீன் விசாரணையில், அவரது வழக்கறிஞர் திரிதீப் பைஸ் இதை “அனைத்தையும் உள்ளடக்கிய” எஃப்.ஐ.ஆர் என்று அழைத்தார், இதில் மோடி அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) அல்லது சி.ஏ.ஏ மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (NRC) ஆகியவற்றை எதிர்த்து முன்னணியில் நின்று போராடிய மாணவர்கள் “பலி கடாக்கள்” ஆக்கப்பட்டனர்.

கைதுகள் தொடங்குகின்றன

Delhi Riots: How The Police Is Using FIR 59 To Imprison Students ...

எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் முதன்முதலாகக் கைது செய்யப்பட்ட முகமது டேனிஷ், முகமது இலியாஸ் மற்றும் முகமது பர்வேஸ் அகமது ஆகியோர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் (பி.எஃப்.ஐ) உறுப்பினர்கள், அது ஒரு இஸ்லாமிய அமைப்பு. வன்முறையைத் தூண்டிவிடுவதற்கும் கலவரங்களுக்கு நிதியளிப்பதற்கும் அது தான் காரணம் என்று காவல்துறை கூறுகிறது. இந்தியாவில் பி.எஃப்.ஐ தடை செய்யப்படவில்லை.

அந்த நேரத்தில், எஃப்.ஐ.ஆர் 59 குற்ற நோக்கம் கொண்ட சதித்திட்டத்துடன் கலகம் செய்வது, பயங்கர ஆயுதம் வைத்திருப்பது, சட்டவிரோதமாகக் கூடுவது எனும் வரையறைக்குள் அடங்கியிருந்தது.

டெல்லியில் உள்ள மூன்று பேரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது தாஹிர், தனது வாடிக்கையாளர் எஃப்.ஐ.ஆர் 59 இல் குறிப்பிடப்பட்டுள்ள டேனிஷ் அல்ல என்று கூறினார். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டபோது அனைத்து பிரிவுகளும் ஜாமீன் பெற்றிருந்தாலும், டேனிஷ் ஐந்து நாட்களும், இலியாஸ் மற்றும் அகமது ஆகியோர் ஒரு நாளும் போலீஸ் காவலிலிருந்தனர் என்று தாஹிர் கூறினார்.

சட்டப் பிரிவுகள் ஜாமீன் வழங்கக் கூடியவையாக இருக்கும்போது அவர்களைக் காவலில் வைக்க வேண்டும் என்று காவல்துறை ஏன் ஒரு நீதிபதியைக் கேட்டுக்கொண்டது என்று கேட்ட அவர், “இது முற்றிலும் சட்டவிரோதமானது,” என்று கூறினார்.

மார்ச் 13 ம் தேதி ஜாமீன் விசாரணையில், தாஹிர், “எனக்கு ரிமாண்ட் விண்ணப்பத்தின் நகல் வழங்கப்படவில்லை, ஆனால் ரிமாண்டிற்கான உத்தரவு வழங்கப்பட்டபோது, ​​நான் நகலைக் கோரினேன். எல்லா பிரிவுகளும் ஜாமீன் கிடைகக்கூடிய குற்றப்பிரிவுகள் என்பதை நான் உணர்ந்தேன். ”

மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் பிரப் தீப் கவுர் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கியது மட்டுமல்லாமல், எஃப்.ஐ.ஆரின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளும் ஜாமீன் பெறும்போது அவர்களுக்கு ஏன் ஜாமீன் பெறும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எழுத்துப்பூர்வ விளக்கம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணை அதிகாரிக்கு மார்ச் 17 வரை அவகாசம் வழங்கினார்.

தில்லி காவல்துறை அந்த பதிலைத் தாக்கல் செய்யவில்லை என்று தாஹிர் கூறுகிறார்.

அதற்குப் பதிலாக, எஃப்.ஐ.ஆர் 59 இல் உள்ள பிரிவுகள் கொலை, கொலை முயற்சி மற்றும் தேசத்துரோகம் உட்பட நான்கிலிருந்து, யுஏபிஏவில் நான்கும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தில் நான்கும் ஆயுதச் சட்டத்தில் இரண்டுமாக, 18 ஆக உயர்த்தப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் யுஏபிஏ செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் எஃப்ஐஆர் 59 இல் ஜாமீன் வழங்கப்பட்டது தனது வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று தாஹிர் கருதுகிறார். அதன் பின்னர் கோடையில் எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“அவர்கள் (டெல்லி காவல்துறை) பி.எஃப்.ஐ. மீது (வழக்குப் பதிவு செய்வதற்கு) எதையும் பெற முடியாதபோது, ​​ தங்கள் கவனத்தை மாணவர்கள் மீது திருப்பினர். குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் இடையில் ஒருவருக்கொருவர் எந்த தொடர்பையும் அவர்கள் காட்டவில்லை ”என்று வக்கீல் தாஹிர் கூறினார்.

மீண்டும் கைது செய்யப்பட்டனர்

Global Human Rights Body Calls Activists' Detentions 'Arbitrary ...

எஃப்.ஐ.ஆர் 59 இல் இப்போது பி.எஃப்.ஐ உறுப்பினர்களும், அரசாங்க ஊழியரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் ஒருவரும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவரும், ஒரு முன்னாள் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரும், ஒரு சமூக ஆர்வலரும், ஆறு மாணவர்களும், ஒரு எம்பிஏ பட்டதாரியும், வாழ்க்கைப் பாட்டிற்காகத் துடைப்பம் தயாரிக்கும் வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு மனிதரும் உள்ளனர்.  

மார்ச் 21 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் தெரிவித்த இரண்டு பேர்-வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான இஷ்ரத் ஜஹான், “வெறுப்புக்கு எதிராக ஒன்றுபட்ட” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்த தொழிலதிபர் காலித் சைஃபி ஆகியோர்- எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் முன்பு பிப்ரவரி 26 அன்று ஜகத்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் 44/2020 இன் கீழ் கலவரம், ஒரு அரசு அதிகாரியைத் தடுத்தல், ஒரு அரசு அதிகாரியைத் தாக்கியது மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றுக்காகக் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 28 அன்று கூடுதல் அமர்வு நீதிபதி நவீன் குப்தா ஜஹானுக்கு முதலில் ஜாமீன் மறுத்துவிட்டார், பின்னர் கூடுதல் அமர்வு நீதிபதி மஞ்சுசா வாத்வா மார்ச் 21 அன்று ஜாமீன் வழங்கினார்.

சைஃபி, பிப்ரவரி 26 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் அவர் போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் குற்றம் சாட்டிய போதிலும், அவரோடு சேர்த்துக் குற்றம் சாட்டப்பட்டவர் (co-accused) அவருக்கு எதிராக அறிக்கை அளித்திருப்பதாகக் கூறிய நீதிபதி வாத்வா, ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

மார்ச் 21 ஆம் தேதி நண்பகல் தனது சகோதரி திகார் சிறையிலிருந்து தன்னை அழைத்ததாகவும், கொலைக் குற்றத்திற்காக எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ்  அவர் கைது செய்யப்படுவதாகத்  தன்னிடம் தெரிவித்ததாகவும் செர்வர் ஜஹான் கூறினார். பிற்பகல் நான்கு மணியளவில் அவருக்கு எஃப்.ஐ.ஆர் 44 இல் ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் இப்போதும் அவர் சிறையை விட்டு வெளியே வந்தபாடில்லை.

எஃப்.ஐ.ஆர் 55 நான்கு ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளாக இருந்தபோதும் காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த பி.எஃப்.ஐ உறுப்பினர்களின் வழக்கைப் பற்றி குறிப்பிடுகையில், சர்வெர் ஜஹான் கூறினார், “அவர்கள் பிரப் தீப் கவுரால் கடுமையாக கண்டிக்கப்பட்டனர். அந்தக் கோளாறை மறைக்க இந்த மற்ற அனைத்து பிரிவுகளையும் அவர்கள் சேர்த்ததாக நான் நினைக்கிறேன்.” 

“யுஏபிஏ பின்னர் (ஏப்ரல் மாதம்) நடைமுறைப்படுத்தப்பட்டபோது, ​​இஷ்ரத்திற்கு ஒருபோதும் அது தெரிவிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக 10-15 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று சர்வெர் கூறினார். 

மே 30 அன்று, கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா அவர் திருமணம் செய்து கொள்வதற்கு ஜூன் 10 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ஜாமீன் வழங்கினார். 

“நாங்கள் விருந்தினர் பட்டியலை டெல்லி போலீசில் சமர்ப்பித்தோம்,” என்று சர்வெர் கூறினார். “திருமணம் நன்றாக நடந்தது. அது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தான். ”

அந்தக் கோளாறை மறைக்க இந்த மற்ற அனைத்து பிரிவுகளையும் அவர்கள் சேர்த்ததாக நான் நினைக்கிறேன்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்

US Watchdog Flays Arrest of Safoora Zargar, Other Anti-CAA ...

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பி.எச்.டி மாணவரும், டெல்லியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் இளைஞர் பிரிவின் தலைவருமான மீரன் ஹைதர் ஏப்ரல் 1 ம் தேதி எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் கைது செய்யப்பட்டார். டெல்லி கலவரத்தின் பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கிறது என்று டெல்லி காவல்துறை கூறியதையடுத்து, ஏப்ரல் 3 ம் தேதி பெருநகர மாஜிஸ்திரேட் பிரப் தீப் கவுர் 35 வயதுடைய அவரை காவல் துறை விசாரிசணைக்கு அனுப்பினார்.

ஹைதர் ஏப்ரல் 15 ம் தேதி ஜாமீனுக்காக மனு தாக்கல் செய்தார், ஆனால் விசாரணைக்கு ஒரு நாள் முன்பு, அவரது வழக்கறிஞர் அக்ரம் கான், எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்ட மிகக் கடுமையான குற்றங்கள் குறித்து சக ஊழியரிடமிருந்து தெரிந்து கொண்டதாகக் கூறினார். இது குறித்து அவர் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ​​அவர்கள் உறுதிப்படுத்தினர். மே 20 ம் தேதி பெருநகர மாஜிஸ்திரேட் அங்கிதா லால் முன் நடந்த விசாரணையில் ஜாமீன் விண்ணப்பத்தை கான் வாபஸ் பெற்றார், மேலும் அவர் மற்றொரு விண்ணப்பத்தை நகர்த்தவில்லை, ஏனெனில் யுஏபிஏ செயல்படுத்தப்பட்ட பின்னர் “தொலைநோக்குடன்” செயல்படுவது முக்கியம் என்று அவர் கருதுகிறார்.

“இது இங்கே (டெல்லி) ஒரு சாதாரண நடைமுறை. விசாரணைக்கு முன்னர் எங்களுக்கு எந்த அறிவிப்பும் அல்லது தகவலும் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார். “இந்தியாவைப் பொறுத்தவரை, விசாரணை மிகவும் ரகசியமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது என்று நான் சொல்ல முடியும். குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு அவர்கள் உங்களிடம் எதுவும் சொல்லவோ அல்லது எந்த ஆவணத்தையும் காட்டவோ மாட்டார்கள். ”

விசாரணைக்கு முன்னர் எங்களுக்கு எந்த அறிவிப்பும் தகவலும் கிடைக்கவில்லை.

குல்பிஷா பாத்திமா

காஜியாபாத்தில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டதாரி குல்பிஷா பாத்திமா, பிப்ரவரி 24 அன்று ஜாப்ராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் 48/2020 வழக்கில் ஏப்ரல் 9 அன்று கைது செய்யப்பட்டார்.

மே 1 ம் தேதி ஜாமீன் விசாரணையில், 28 வயதான அவர் மீது எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு காவல்துறை தெரிவித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மே 3 அன்று அவரது ஜாமீன் மனுவை மாஜிஸ்ட்ரேட் தள்ளுபடி செய்த பின்னர், மே 8 அன்று ஒரு அமர்வு நீதிபதி முன் ஜாமீன் கோரி பாத்திமா விண்ணப்பித்தார்.

மே 13 அன்று, கூடுதல் அமர்வு நீதிபதி நவீன் குப்தா எஃப்.ஐ.ஆர் 48 இல் ஜாமீன் வழங்கினார், ஆனால் அவர் எஃப்.ஐ.ஆர் 59 இல் காவலிலிருந்தார்.

பாத்திமா “சட்டவிரோத காவலில்” இருப்பதாக அவரது வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சா கூறுகிறார், அதனால்தான் அவர் எஃப்.ஐ.ஆர் 59 க்கு ஜாமீன் கோருவதற்கு பதிலாக மே 15 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியாஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவிற்கான வாதங்கள் ஜூன் 12 அன்று முடிவடைந்தன.

மே 28 அன்று, ஹேபியாஸ் கார்பஸ் மனு டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்தபோது, ​​கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, பாத்திமாவின் நீதிமன்றக் காவலை ஜூன் 25 வரை நீட்டித்தார்.

“அடிப்படை நோக்கம் மக்களை அடக்குவதும், CAA மற்றும் NRC க்கு எதிராக பேசுவதைத் தடுப்பதும் ஆகும். அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களைத் தடுக்க முயற்சிக்கின்றனர், ”என்றார் பிரச்சா.

“மக்களை அடக்குவதும், CAA மற்றும் NRC க்கு எதிராக பேசுவதைத் தடுப்பதும் தான் அடிப்படை நோக்கம்.”

சஃபூரா சர்கர்

False Claims About Safoora Zargar's Marriage and Pregnancy Viral ...

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் எம். ஃபில். மாணவரான சஃபூரா சர்கார் ஏப்ரல் 10 அன்று எஃப்.ஐ.ஆர் 48 இன் கீழ் கைது செய்யப்பட்டார். பெருநகர மாஜிஸ்திரேட் தீபாட்சி ராணா ஏப்ரல் 13 அன்று ஜாமீன் வழங்கிய பின்னர், 27 வயதான அந்தக் கர்ப்பிணிப் பெண்மணி அதே நாளில் எஃப்.ஐ.ஆர் 59 இல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் 18 ம் தேதி நடந்த ஜாமீன் விசாரணையில், மாஜிஸ்திரேட் ராணா, டெல்லி போலீசாரிடம் சர்கருக்கு எதிரான சரியான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான பதிலைக் கேட்டு, அடுத்த விசாரணையை ஏப்ரல் 21க்கு தள்ளிவைத்தார். விசாரணைக்கு முந்தைய நாள், சர்கருக்கு எதிராக டெல்லி காவல்துறை யுஏபிஏவை நடைமுறைப் படுத்தியது, அவரது ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் ஐந்து மாத கர்ப்பமாக இருந்த சர்கார் மற்றும் அவரது வழக்கறிஞர்களின் கூற்றுப்படி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டவர் மே 26 அன்று ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். மே 30 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் விசாரணையைத் தொடர்ந்து, கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா தனது ஜாமீனை மறுத்தார். ஜாமீன் மறுத்த தனது உத்தரவில், நீதிபதி ராணா, சாலைத் தடையை முன்னெடுக்கச் சதி செய்ததாக ஒரு முதன்மை முகாந்திர வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

“நீங்கள் நெருப்புக் கங்குகளுடன் விளையாடுவதைத் தேர்வுசெய்யும்போது, ​​தீப்பொறியைச் சிறிது தூரம் கொண்டு சென்று நெருப்பைப் பரப்பியதாகக் காற்றைக் குறை கூற முடியாது,” என்று அவர் கூறினார்.

ஆசிப் இக்பால் தன்ஹா

Northeast Delhi violence: Jamia student Asif Iqbal Tanha arrested ...

 டிசம்பர் 15 அன்று வன்முறையில் சென்று முடிந்த சிஏஏ எதிர்ப்புப் பேரணியைத் தொடர்ந்து டிசம்பர் 16 அன்று பதிவு செய்யப்பட்ட ஜாமியா நகர் காவல் நிலையத்தின் எஃப்.ஐ.ஆர் 298/19ன் படி, ஆறு மாதங்களுக்குப் பிறகு, மே 17 அன்று, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பாரசீக மொழி பயின்ற ஆசிப் இக்பால் தன்ஹா, கைது செய்யப்பட்டார். 

24 வயதான இவர் மே 20 அன்று எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

மே 28 அன்று கூடுதல் அமர்வு நீதிபதி கௌரவ் ராவால் தன்ஹாவுக்கு எஃப்.ஐ.ஆர் 298/19 இல் ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் அவர் எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் சிறையிலேயே  அடைக்கப்பட்டிருந்தார்.

எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் ஜூன் 25 வரை தன்ஹாவை நீதிமன்றக் காவலில் வைக்கும் போது, ​​கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, தில்லி காவல்துறை “விசாரணை ஒரு முனையை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்றார்.

“வழக்கு நாட்குறிப்பை ஆராயும் போது அது ஒரு குழப்பமான உண்மையை வெளிப்படுத்துகிறது” என்று நீதிபதி ராணா கூறினார். “விசாரணை ஒரு முனையை மட்டுமே இலக்காகக் கொண்டதாகத் தெரிகிறது. இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் அனில் ஆகியோரின் விசாரணையில், எதிர்த்தரப்பின் பங்கு தொடர்பாக இதுவரை என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டத் தவறிவிட்டனர்.”

விசாரணை ஒரு முனையை மட்டுமே இலக்காகக் கொண்டதாகத் தெரிகிறது.

நடாஷா நர்வால் மற்றும் தேவங்கன கலிதா

Condemn the arrests of Pinjra Tod members Devangana Kalita and ...

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களான நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிதா ஆகியோர் மே 23 அன்று எஃப்.ஐ.ஆர் 48 இல் கைது செய்யப்பட்டனர்.

வகுப்புவாத கலவரத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் கூட்டு நிறுவனமான “பிஞ்ச்ரா தோட்” (கூண்டை உடை) நிறுவன உறுப்பினர்களான நர்வால் மற்றும் கலிதா ஆகியோருக்கு மே 24 அன்று எஃப்.ஐ.ஆர் 48 க்கு பெருநகர மாஜிஸ்திரேட் அஜீத் நாராயணா ஜாமீன் வழங்கினார். அவர்கள் ஒரு காவல்துறை அதிகாரியைத் தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் NRC மற்றும் CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவில்லை,” என்றும் அவர் கூறினார்.  

பிப்ரவரி 26 அன்று ஜாப்ராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் 50/2020 இன் கீழ் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர், இதில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் உள்ளன.

32 வயதான நர்வால் மே 29 அன்று எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 2019 டிசம்பர் 20 அன்று வன்முறையில் முடிவடைந்த பின்னர் தரியாகஞ்ச் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் 250/2019 இல் 30 வயதான கலிதா கைது செய்யப்பட்டார். இதில் கலவரம், ஒரு அரசாங்க ஊழியருக்கு கீழ்ப்படியாமை, மற்றும் அரசாங்க ஊழியர் ஒருவரை தாக்கியது, மற்றும் பொது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகள் இரண்டு உட்பட 16 ஐபிசி பிரிவுகள் உள்ளடங்கியிருக்கின்றன. 

ஜூன் 2 ம் தேதி  பெருநகர மாஜிஸ்திரேட் அபிநவ் பாண்டே கலிதாவுக்கு ஜாமீன் வழங்கினார், அவர் மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் அஜீத் நாராயணாவை எதிரொலித்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு அரசாங்க அதிகாரியைத் தாக்கியதாகக் காட்டிய “நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று கூறினார். அவர் வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக சி.சி.டி.வி காட்சிகள் காட்டவில்லை என்றும், அவரது மடிக்கணினி அல்லது தொலைபேசிகளில் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜூன் 5 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் 59 இல் கலிதா கைது செய்யப்பட்டார்.

நர்வால் மற்றும் கலிதா ஆகியோர் எஃப்.ஐ.ஆர் 59 மற்றும் 50 இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

‘ஒரு பூனை, எலி விளையாட்டு’

 முக்கியத்தும் வாய்ந்ததாகக் குறிக்கப்பட்ட (marked sensitive) எஃப்.ஐ.ஆர் 59 ஆன்லைனில் கிடைக்கவில்லை.

தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காகத் தில்லி காவல்துறையினருடன் “பூனை மற்றும் எலி” விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். தில்லி காவல்துறை அவர்களின் ஜாமீன் விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கும் போது, அல்லது காவல்துறையினர் ரிமாண்ட் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யும் போது தான் அவர்களுக்குத் தகவலின் முதன்மை ஆதாரம் கிடைக்கிறது. இப்போது தான் தங்கள் வாடிக்கையாளர்கள் மீது என்னென்ன குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். 

Discrimination Against Muslims under India's New Citizenship ...

டெல்லியைச் சேர்ந்த வக்கீல் சீமா மிஸ்ரா, தனது 27 வயது வாடிக்கையாளர் சதாப் அகமது முதன்முதலில் தயால்பூர் காவல் நிலையத்தின் எஃப்.ஐ.ஆர் 60/2020 இன் கீழ் ஏப்ரல் 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டார், மேலும் அந்த எஃப்.ஐ.ஆரின் கீழ் ஜாமீன் கோரிய அவருடைய விண்ணப்பத்திற்கு டெல்லி காவல்துறை அளித்த பதிலை ஆராய்ந்தபோதுதான், மே 20 அன்று அகமதுவும் எஃப்.ஐ.ஆர் 59 இல் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அவர் கண்டுபிடித்தார். 

அஹ்மத் ஜகத் பூரியில் வசிப்பவர் என்றும், அவர் தனது மாமாவுடன் துடைப்பம் தயாரிக்கும் வேலை செய்து வருகிறார் என்றும் என்று மிஸ்ரா கூறினார். எஃப்.ஐ.ஆர் 59 இல் அவரது (அஹமத்) வழக்கு பற்றிய தகவல்களுக்கு அவரது (மிஸ்ரா) ஜாமீன் விண்ணப்பத்திற்கு டெல்லி காவல்துறையின் பதில்களும், காவலில் எடுப்பதற்கான அவர்களுடைய விண்ணப்பங்களும் தான் ஆதாரமாக இருக்கின்றன.

“இது மிகவும் தெளிவற்றது,” என்று அவர் கூறினார்.

திங்களன்று கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணாவின் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தில்லி காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் 59 இன் கீழ் உள்ள நபர்கள் மற்றும் குற்றங்களை விசாரிக்க அதிக நேரம் தேவை என்று அரசு வக்கீல் இர்பான் அகமது வாதிட்டபோது, ​​மிஸ்ரா மற்றும் பிற வழக்கறிஞர்கள் அதற்கு எதிராக வாதாடுவதற்கு காலநீட்டிப்பிற்குகான காரணங்களைக் குறிப்பிடும் விண்ணப்பத்தின் நகல் கூட தங்களிடம் இல்லை என்று கூறினர்.

“நீங்கள் விண்ணப்பத்தின் நகலை அவர்களுக்கு வழங்காவிட்டால் அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?” என்று நீதிபதி ராணா அரசு வழக்கறிஞரிடம் கேட்டார்.

நன்றி : www.huffingtonpost.in இணையதளம் 

Delhi Riots: How The Police Is Using FIR 59 To Imprison Students And Activists Indefinitely
https://www.huffingtonpost.in/entry/delhi-police-riots-students-anti-caa-activists-arrest_in_5ee7ab99c5b651a404b0591a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *