How To Be A Writer : Bond Ruskin

இந்திய ஆங்கில இலக்கியத் துறையின் பேராளுமையாக திகழ்பவர் ரஸ்கின் பாண்ட்(Ruskin Bond). 500 சிறுகதைகள் உட்பட எக்கச்சக்க கட்டுரைகளும், பல புதினங்கள் மற்றும் 69 சிறார் நூல்களையும் எழுதிக் குவித்துள்ளார். “Our trees still grow in Dehra” என்கிற தனது நூலுக்காக சாகித்ய அகாடமி விருதும், 1999-ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் 2014-ல் பத்மபூசன் விருதையும் பெற்றுள்ளார்.

எழுத்தாளராவது எப்படி? என்கிற இந்த நூலில் ஒரு எழுத்தாளர் கொண்டிருக்கக்கூடிய தகுதியையும், எழுத்தாளர் என்பவர் எவ்வாறு திகழ வேண்டும் என்பதையும் தனது அனுபவ பார்வையின் வழி விளக்கி கூறியிருக்கிறார்.இந்த நூலில் கூறியிருக்கும் கருத்துக்கள் முழுமையும் அவரது சொந்த அனுபவ கருத்துக்களே, ஆயினும் பலவும் நடைமுறை சாத்தியங்களோடு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.

அறிமுகப் பகுதியில் நான் ஏன் எழுதுகிறேன்? என்கிற சுய கேள்வியோடு இந்த புத்தகத்தை தொடங்கும் ரஸ்கின்,“என்னைப் பொறுத்தவரையில் எழுத்தெனப்படுவது இயல்பானதும், லயிப்பானதும் ஆகும்” என்கிறார்.

மேலும் தனது எழுத்து வாழ்வு குறித்து கூறும்பொழுது, வார்த்தைகளுக்கு உணர்வூட்டுவது என்பது ஒரு தொழிலாகும்.கவிதையோ, பத்தியோ, கட்டுரையோ அல்லது தொடர்கதையோ எதுவாயினும் முன்கூட்டியே என் அன்றாடத்தை திட்டமிட்டுக் கொள்வேன். இந்த எனது திட்டமிடலலை தொழில் பக்தி என்று சொல்வதைக் காட்டிலும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு யோகமாகவே பாவிக்கிறேன் என்கிறார்.

என்னை சுற்றிலும் இருக்கும் மலைகளோ அல்லது பரபரப்பான வீதிகளோ எல்லாவற்றிலும், என் எழுத்துக்கான கச்சா பொருட்கள் அபரிமிதமாய் கொட்டி கிடப்பதை காண்கிறேன்.என்னை கடந்து செல்லும் முக்கிய தருணங்கள், அது இன்பமோ, துன்பமோ எதுவாயினும் எனக்கான மூலப் பொருட்கள் அதிலும் விரவிக் கிடப்பதை காண்கிறேன்.

தினமும் எழுதுவதற்கான என் எழுத்துச் சுதந்திரம் மறுக்கப்படுமேயானால், எனது இந்த வாழ்வே சூனியம் ஆகிவிடும். அதேபோல் என்னால் எழுதப்படும் எல்லாமும் சிறந்தது என்று சொல்வதற்கில்லை.நான் எழுதிய மிகச்சிறந்த பல கைப்பிரதிகள் யாவும் குப்பைத் தொட்டிகளையோ அல்லது குளிர்கனப்பு அடுப்புகளையோ சென்று அடைந்திருக்கிறது.மிகச் சிறந்த தொழில் முறை பேச்சாளர்களைப் போலவோ அல்லது பிரபல புதின எழுத்தாளர்களைப் போலவோ யாருடைய அங்கீகாரத்திற்காகவும் நான் எழுதவில்லை. உண்மையில் என் அகமகிழ்வுக்காகவே எழுதுகிறேன் என்ற தனது எழுத்தாளர் வாழ்வு குறித்தான தீட்ச்சன்யமான பார்வையை முன்வைக்கிறார்.

மொத்தமும் 7 இயல்களை கொண்டுள்ள இந்த புத்தகம், ஒரே அமர்வில் வாசித்து முடிக்கும் வகையில் 120 பக்கங்கள் மட்டுமே கொண்டுள்ளது. குழந்தைகளுக்கான இலகு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து அனைத்து வயதினருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

முதலாம் இயலில் எழுத்தாளராவதற்கான ஆயத்த படிநிலைகளை ஐந்து உபத் தலைப்புகளில் கூறும் ரஸ்கின் பாண்ட், முறையே இரண்டாம் இயலில் எழுத்து பயிற்சிகளைப் பற்றியும்,மூன்றாம் இயலில் எழுதுதல் பற்றிய யதார்த்தங்களையும் ,நாலாம் இயலில் கதாபாத்திரங்களின் வார்ப்புகள் பற்றியும்,ஐந்தாம் இயலில் எழுத்து வகைகள் பற்றியும், ஆறாம் இயலில் விமர்சனத்தின் இன்றியமையாமை மற்றும் எழுத்து தடுமாற்றத்தை பற்றியும், ஏழாம் இயலில் எழுத்தை பதிப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் என எழுத்து பயணத்தில் மொத்த படிநிலைகளையும் எளிய வகையில் விளக்கிக் கூறியிருக்கிறார்.

இயல் ஒன்றில் ஒரு சிறந்த எழுத்தாளருக்கான தன்மையாக ரஸ்கின் பாண்டு அவர்கள் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீடுகள் என்பது -நல்ல எழுத்தாளராக விரும்புபவர் புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும், மொழி குறித்த ஆழஅகலமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கவனித்தவற்றை கிரகித்துக் கொள்ள வேண்டும்.மேலும், வார்த்தைகளின் ரசவாதத்திலும் அவற்றின் ஒழுங்கமைவிலும் கவனத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். உற்சாகம் மற்றும் வாழ்க்கையினை குறித்த நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.கலைஞர்களைப் போல் கலையின் மீதான தொடர் பயிற்சியில் ஈடுபடல் வேண்டும் என்பதாக உள்ளது.

புத்தகத்தின் இறுதி இரண்டு பக்கங்களில் பாண்டின் புத்தகப் பரிந்துரைகளும் இடம் பெற்று இருக்கின்றன.லாரன்ஸ் ஸ்டர்னின் (Lawrence Stern) ட்ரிஷ்டிராம் சாண்டி(Tristram Shandy ) முதல் டோரோதி பார்க்கரின் (Dorothy Parker) டெத் அண்டு டாக்ஸஸ் (Death and taxes) வரை மொத்தமும் 52 உலக இலக்கிய மேதைகளின் முக்கிய படைப்பாக்கங்களை பட்டியலிட்டு இருக்கிறார். இது இலக்கியப் பயிற்சியாளர்களுக்கு உதவக்கூடும் என்பது அவரது எண்ணம்.

பக்க எண்:18-ல், ரஸ்கின் பாண்டு ஒரு கலைஞன் எதை இழந்தாலும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மட்டும் இழத்தலாகாது என்பதை முன்மொழிகிறார்.அவரது இந்தக் கருத்தை நான் வழிமொழிந்து, இயன்றவர்கள் இந்த நூலை படித்து பயன்பெறுவாராக என்று வாழ்த்தி, சுபம் போட்டு இந்த நூலறிமுகக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி!

நூல் : How to be a writer
நூலாசிரியர் : ரஸ்கின் பாண்ட் (Ruskin bond)
வெளியீடு : Harpercollins children’s books
பக்கங்கள் : 119
விலை : ரு:299

 

நூலறிமுகம் எழுதியவர்

நந்தசிவம் புகழேந்தி.
(இலக்கிய ஆர்வலர்)

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *