எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?” கட்டுரை

“சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?” கட்டுரை

– எழுத்தாளர் உதயசங்கர்

குழந்தைகள் குட்டி மனிதர்கள். அவர்கள் பிறந்த து முதல் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டற்ற அவர்களது படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகத்தை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இடையறாத உடல், மற்றும் மூளைச் செயல்பாடுகளினால் புற உலகைப் புரிந்து கொள்கிறார்கள். படைப்பூக்கத்தின் மிக முக்கியமான கூறான வெகுளித்தனம் அல்லது இன்னொசென்ஸ் அதற்கு உதவுகிறது. கலையிலும் அந்த இன்னொசென்ஸ் இருப்பதினால் தான் குழந்தைகள் கலைஞர்களாகவே வளர்கிறார்கள். அப்படி எல்லையற்ற கற்பனை வானத்தில் சிறகடித்துப் பறக்கும் சிறார்களுக்கான இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளுக்கு எப்படிப் பட்ட இலக்கியத்தைக் கொடுக்க வேண்டும்? அல்லது அவர்களுக்கு எது பிடிக்கும்? அல்லது எதை விரும்புவார்கள்?

. எல்லா உயிர்களின் அடிப்படை இலட்சியம் இன்பமாக வாழவது தான். அந்த இன்பத்துக்காகத்தான் இந்த பூமியின் அத்தனை உயிர்களும் வாழ்நாள் முழுவதும் போராடுகின்றன. கலையும் இலக்கியமும் மனிதர்களின் உணர்வுத்தளத்தில் அந்த இன்பத்தைக் கொடுப்பதற்காகப் பிறந்தவை. அதே நேரத்தில் கலையும் இலக்கியமும், இந்த வாழ்க்கை அனுபவங்களை, சிந்தனைகளை, கருத்துகளை, அழகியலோடு சொல்ல முயற்சிக்கிறது.  அனைத்துக் கலைவடிவங்களும் ஏதோ ஒரு கருத்தியலைப் பரப்புரை செய்கின்றன. ஆனால் பரப்புரை செய்வதெல்லாம் கலையாகி விடாது.

அப்படியென்றால் நேரடியான கருத்துப்பரப்புரைக்கும் கலைக்குமிடையில் பாரதூரமான வேறுபாடு இருக்கிறது. பரப்புரை அறிவில் செயலாற்றுகிறது. கலை மனதில் அல்லது உணர்வுநிலைகளில் ஊடாடுகிறது. அதனால் தான் கலைவடிவங்கள் சக்தி வாய்ந்த ஆயுதங்களாக எல்லாக்காலத்திலும் இருக்கின்றன.

ஆகவே குழந்தைகளுக்கான படைப்புகளிலும் அத்தகைய கலை இன்பம் முக்கியமானது மட்டுமல்ல அடிப்படையானதும் கூட.. இது பொது இலக்கியத்துக்கும் பொருந்தும் எந்தப் படைப்புகள் குழந்தைகளுக்கு கலைமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்புகளே சிறார்கள் விரும்பும் படைப்புகள்.

இன்பம் என்பது நகைச்சுவை என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

பெரும்பாலான சிறார் கதைகள் அதன் தலைப்புகளிலேயே ஒரு அறநெறி/நன்னெறி,/நீதிநெறி/அறிவூட்டும்/ கதைகளாகவே வெளிவருகின்றன. இந்த உலகத்திலேயே அறிவுரைகளால் தாங்கமுடியாத துன்பத்தை அடைகிறவர்கள் குழந்தைகள் தான்.

எப்போதும் அதைச் செய்யாதே இதைச் செய்யாதே அல்லது அதைச்செய் இதைச்செய் இப்படிக் கட்டளைகளால் அல்லது முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துகளால் குழந்தைகள் மீது மிகப்பெரிய வன்முறை நிகழ்த்தப்படுகிறது. குழந்தைகளின் இயல்பான எதையும் ஆராயும் ஆர்வம், அறியும் ஆர்வம், மாற்று சிந்தனைகள், மாற்று செயல்வடிவங்கள் எதையுமே வளரவிடாமல் முளையிலேயே சொன்னதைக் கேட்கும் கீழ்ப்படிதல் உளவியலை நமது சமூகம் திணிக்கிறது.

உண்மையில் கலை மகிழ்ச்சி என்பது ஒரு படைப்பை வாசிக்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் ஒரு உணர்வு. ஒரு நிறைவு. அறிதலின் மலர்ச்சி. ஒரு புன்னகை. ஒரு சிரிப்பு. ஒரு புல்லரிப்பு. ஒரு இன்பமான உணர்வு. ஒரு மறக்கவியலாத துயரம்.

. துயரமும் கலை இன்பம் தான். நம்முடைய மனம் துயர்மிகு தருணங்களிலிருந்தும் ஏதோ ஒரு மனநிறைவை, உள்ளார்ந்த அமைதியை, புதிய அறிதலை, கொந்தளிக்கும் எழுச்சியை அடைகிறது. எனவே கலைமகிழ்ச்சி என்பதை சுபமான கதைகள் அல்லது கலை வடிவங்களென்று புரிந்து கொள்ளக் கூடாது.

சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

முதலில் சிறார்களுக்கான படைப்புகள் எந்த வயதினருக்காக இருந்தாலும் குழந்தைகளின் மொழியில் எழுத வேண்டும். அந்தந்த வயதுக்குழந்தைகளின் மொழிப்பழக்கம், சொற்பழக்கம், வாசிப்புத்திறன் குறித்த ஞானம் எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டும். மொழி எளிமையானதாக இருப்பது மட்டுமல்ல அழகாகவும் இருக்க வேண்டும். வாசிக்கும்போது குழந்தைகளின் மனதில் ஆன ந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அறுதப்பழசான சொற்களையோ அல்லது வழக்கொழிந்த சொற்களையோ ( உதாரணத்துக்கு செல்வந்தர், தனவந்தர், குடியானவர், ) பயன்படுத்தக் கூடாது. அந்தச் சொற்களில் இளமை ததும்பவேண்டும். புதுமை இருக்க வேண்டும். துடிதுடிப்பு இருக்க வேண்டும்.

மொத்தத்தில் சிறார்களுக்கான படைப்புகளில் குழந்தைமையின் குதூகலம், ஆர்வம், தூண்டுதல், கேள்விகள், பதில்கள், அறிதல், புரிதல், இருக்க வேண்டும்.

சிறார் படைப்புகளில் குழந்தைமையின் வெகுளித்தனமும் யாரும் சிந்தித்திராத புதிய கோணங்களும் மிகவும் முக்கியம். வழக்கமான சூத்திரக்கதைகளை எழுதக் கூடாது. அவற்றை வாசித்தாலும் குழந்தைகள் மனதில் நிலைக்காது. மேலும் ஒரே மாதிரியான கதைகள் குழந்தைகளிடம் சிந்தனை வறட்சியை ஏற்படுத்திவிடும்.

அதீத புனைவுப்படைப்புகளில் எழுதும்போது நம்பமுடியாததை எழுதும்போது அதற்குப் பின்னால் அதன் நம்பகத் தன்மையும் இருக்க வேண்டும். உதாரணம் ஆலிசின் அற்புத உலகம். குட்டி இளவரசன், ஹாரிபாட்டர். எந்த மூடநம்பிக்கைகளையும், உதாரணத்துக்கு விதி, தலையெழுத்து, அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், போன்ற எந்தக் கருத்துகளையும் எழுதக்கூடாது. குழந்தைகளின் கேள்விகளை, தன்னம்பிக்கையை, முயற்சிகளைக் குறைத்துவிடும். ஊழையும் உப்பக்கம் காணும் உழைப்பை மட்டுப்படுத்திவிடும்.

சிறார் படைப்புகளில் அறிவியல் மனப்பாங்கு இருக்க வேண்டும்.

அறிவியல் மனப்பாங்கு என்பதை அறிவியல் தகவல்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. குழந்தைகளிடம் புதிய சிந்தனைகளை, புதிய கற்பனைகளை, எதையும் ஏன் எதற்கு என்று கேட்கும் படைப்புகளையே அறிவியல் நோக்குள்ள படைப்புகளென்று சொல்லலாம்.  .

சமூகத்தின் பலவேறு அடுக்குகளில் வாழும் குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், அவர்களுடைய வாழ்வின் நம்பிக்கை, துயரம், முயற்சிகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம், மகிழ்ச்சி என்று பல பரிமாணங்களில் எழுதப்படும் படைப்புகளைச் சிறார் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

அனைவரும் சேர்ந்து வாழ்வதின் மகிழ்ச்சி. அனைவரையும் இணைத்துக் கொண்டு வாழ்வதின் மகத்துவம். அனைத்துயிர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறித்த படைப்புகள். வாழ்வின் அனைத்து நிலைகளையும் அதாவது அனைத்து மதங்களைச் சார்ந்த குழந்தைகளின் வாழ்க்கை, மாற்றுத்திறன்களுடன் பிறக்கும் குழந்தைகள், தீராத நோய்களுடன் வாழும் குழந்தைகள், மரணத்துடன் போராடும் குழந்தைகள், என்று அனைத்துக் குழந்தைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகள்.எழுதப்பட வேண்டும்.

வாழ்க்கை குறித்த கேள்விகள், வாழ்வதின் நோக்கம், வாழ்வதின் பயன், இருத்தலின் மகிழ்ச்சியும் துயரமும், பகுத்தறிவின் மகத்துவம், சுயமாகச் சிந்திப்பதின் அவசியம், இவற்றைப் பற்றியெல்லாம் சிறார் மொழியில் பேசுகிற படைப்புகள் ( குட்டி இளவரசன் ) உருவாக்கப்பட வேண்டும்.

நன்மை தீமைக்கு இடையிலான போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? தீமையின் பாதையிலிருந்து எப்படி விலகி நன்மையின் பாதையில் பயணிப்பது என்பதையெல்லாம் சாகசக்கதைகளாகச் சொல்லும் படைப்புகள். ( (ஹாரிபாட்டர்)

இளையோருக்கான துப்பறியும் கதைகள் சமூகப்பிரச்னைகளை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட வேண்டும். உதாரணம் சத்யஜித் ரேயின் பலூடா கதைகள். மிக முக்கியமானது இதெல்லாம் கலைப்படைப்பாக உருவாக வேண்டும். வெறும் பரப்புரையாகவோ, வறண்ட கருத்துக்குவியலாகவோ இருக்கக் கூடாது.

இப்ப்டியும் இன்னமும் கலையின் நூறு வண்ணங்களைப் பிரதிபலிக்கும் படைப்புகள் எழுதப்பட வேண்டும். வாசிக்கும் குழந்தைகளைக் கலை தன் மாயக்கம்பளத்தில் அமரவைத்து பறக்கச் செய்ய வேண்டும். வண்ண மயமான, நுட்பமான வேலைப்பாடுகள் மிகுந்த, பார்த்தாலே பரவசமூட்டும்படியாக அந்த மாயக்கம்பளம் இருக்க வேண்டும். அதற்காக படைப்பாளிகள் தீவிரமாக உழைக்க வேண்டும்.

சிறார் இலக்கியம் தானே என்ற அலட்சியமில்லாமல் பெரியவர்களுக்கு எழுதும்போது எப்படித் தீவிரமான உழைப்பைச் செலுத்துகிறோமோ அத்தகைய உழைப்பைக் கொடுத்துப் படைக்கும்போது தமிழிலும் உலகச் சிறந்த படைப்புகள் உருவாகும்.

அதற்கான காலம் மிக அருகில் வந்து விட்டது.

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *