இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 2
நம் தமிழ்நாட்டின் நிலா கிராமங்களை அறிவீர்களா?
இஸ்ரோவில் ஒரு விஞ்ஞானியாக இணைய வேண்டும் என்று தீவிர விருப்பத்தோடும் முயற்சியோடும் சிறுவயதிலிருந்தே லட்சக்கணக்கான மாணவர்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.. அதற்கான ஒரு வழிகாட்டும் தொடர் எழுத வேண்டிய அவசியம் வரும் அளவிற்கு இன்றைக்கு முனைப்பு அதிகரித்துள்ளது..
ஆனாலும் ஒரு காலகட்டம் இருந்தது..
இந்தியாவினுடைய விண்வெளி ஆய்வுக்கும் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கும் பங்களிப்பு செய்வதற்கு தன்னாா்வலா்களாக வந்து இணைய முடியுமா என்று நூற்றுக்கணக்கானவர்களுக்கு.. விண்ணப்ப கடிதங்களை இந்த நாட்டினுடைய தலைசிறந்த அறிஞர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..
இஸ்ரோவில் ஒரு விஞ்ஞானியாக இணைய வேண்டும் என்கிற துடிப்பு உங்களுக்கு இருக்குமேயானால் நீங்கள் முதலில் இஸ்ரோ குறித்த புத்தகங்களை சேகரித்து வாசிக்க தொடங்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.. ஆங்கிலத்தில் சரளமாக உங்களால் வாசிக்க முடியாத ஒரு சூழல் இருந்தால் தமிழிலேயே அதற்கான புத்தகங்கள் உள்ளன..
இஸ்ரோவின் வரலாறு குறித்து நல்ல புத்தகங்கள் பல எழுதப்பட்டுள்ளன அவற்றில் தான் பி.வி மனோரஞ்சன் ராவ், பி ராதாகிருஷ்ணன், யூ ஆர் ராவ் போன்றவர்களின் புத்தகங்களை வாசித்து இருக்கிறேன்.. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நூல்களை படித்து இருக்கிறேன்.. குறிப்பாக.. மங்கள்யான் திட்டம் வெற்றி அடைந்த பொழுது ஒரு புத்தகம் வெளிவந்தது..
மீனவர் கிராமம் முதல் சிவப்பு கோளை நோக்கி..(FROM FISHING HAMLET TO RED PLANET) என்ற தலைப்பில் பி வி மனோரஞ்சன் ராவ் அவர்கள் எழுதிய புத்தகம்.. இந்த புத்தகத்தை பி என் சுரேஷ் மற்றும் வீ பி பால கங்காதரன் ஆகியோர் உடனிருந்து செப்பனிட்டு இருக்கிறார்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானிகள் இந்தியாவின் ஆரம்ப விண்வெளி அமைப்பான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் வரலாறு ஆகியவற்றை இந்த புத்தகம் விரிவாக அலசுகிறது
பி வி மனோரஞ்சன் ராவ் இந்தியாவின் ஒரு மூத்த விண்வெளி விஞ்ஞானி.. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அதேசமயம் காந்த மண்டல இயற்பியல் .. அயனோஸ்பியர் இயற்பியல்.. மின் வெளியேற்ற இயற்பியல் ஏவுதள வாகனங்களின் மின்னியல்.. என்று பல்துறை வித்தகராக இருந்தவர்.. இஸ்ரோவைப்பற்றி மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றாலும் மேற்சொன்ன புத்தகம் இஸ்ரோவின் ஆரம்ப கால வரலாறை மிக்க அழகாக நமக்கு விவரிக்கிறது.
இஸ்ரோவில் நுழைய துடிக்கின்ற உங்களை போன்றவர்களுக்கு இந்த புத்தகத்தை முன்மொழிவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.. இஸ்ரோவின் வரலாறு என்பது நாம் நினைப்பது போல இஸ்ரோ நிறுவனம் என்று அழைக்கப்படுகின்ற திருவனந்தபுரம் பெங்களூரு ஸ்ரீஹரிகோட்டா தும்பா போன்ற இடங்களுக்கு உள்ளே நடந்து வருகின்ற சம்பவங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டது அல்ல.. இஸ்ரோவுக்கு வெளியே ஏராளமாக இஸ்ரோவுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் மனிதர்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்..

உதாரணமாக சந்திரயான்-3 எனும் திட்டத்தின் ஆச்சரியப்படத் தக்க ஒத்திகை காலங்களை பற்றி சமீபத்தில் ஒரு விஞ்ஞானியோடு உரையாடிக்கொண்டிருந்தேன்.. இஸ்ரோ எப்படி செயல்படுகிறது என்பது குறித்து புரிந்துகொள்ள இந்த விஷயம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.. இதை நீங்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு எழுத வேண்டும் என்று என்னை தூண்டிக்கொண்டே இருப்பவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நட்சத்திர பொறியாளர் தோழர் முருகேச பாண்டியன்!
இஸ்ரோவின் வரலாற்றோடு ஒரு மகுடமாக நிலைத்துப்போன சந்திரயான்-3 திட்டத்தின் பின்னணியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தாம்பூண்டி என்கிற ஊரின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட்டுள்ளது.. பெரியார் பல்கலைக்கழகம் சேலத்தில் உள்ளது இந்த பல்கலைக்கழகத்தில் புவி ஆராய்ச்சி துறையில் டாக்டர் அன்பழகன் என்று ஒரு விஞ்ஞானி இருக்கிறார்..
சந்திரயான் வெற்றி அடைந்த பொழுது பெரிய அளவில் பேசப்பட்டவர் இவர் மும்பையில் உள்ள ஐ ஐ டி யில் புவி அறிவியல் துறையில் ஒரு முக்கியமான பேராசிரியராக ஒரு காலத்தில் பணியாற்றி கொண்டிருந்தவர் வேதியியல் தாதுக்கள் இயல் மற்றும் ஜியோ டெக்னிக்கல் இயல் என்று இவர் பல்வேறு துறைகளில் ஆற்றலும் அனுபவம் மிக்கவர்.. இவர் இஸ்ரோவுக்கு எப்படி பயன் பட்டார் என்பதை பார்க்கும் பொழுது.. நமக்கு சிலிர்க்கிறது.
சந்திரயான் திட்டம் மூன்று அடிப்படைகளை மையமாகக் கொண்டதாகும் பிரக்யான் என்று ஒரு வண்டி இந்த வண்டி சந்திரனின் தெற்குப் பகுதியில் போய் இறங்க வேண்டும் அங்கே ஏறக்குறைய 1000 மீட்டர்கள் முதல் 2000 மீட்டர்கள் வரை அது பல திசைகளில் ஊர்ந்து பயணித்து நமக்கு புகைப் படங்களையும் ஆதாரங்களையும் அனுப்ப வேண்டும்.. சில சமயம் 3 அல்லது4 கிலோமீட்டர்கள் கூட.. அந்த வண்டி ஊர்ந்து இங்கும் அங்கும் நம்முடைய புவியிலிருந்து நாம் ரிமோட்டில் இயக்குகின்ற விதத்தைப் பொறுத்து செல்ல வேண்டியிருந்தது..
இந்த பிரக்யான் ரோவர் அங்கு சென்று இறங்குவதற்கு நாம் வைத்திருந்த .. தரை இறக்கி அதன் பெயர் விக்ரம் லேண்டர்.. விக்ரம் லேண்டர் சந்திரனின் தெற்கு பகுதியின் பாதுகாப்பான ஒரு இடத்தில் சென்று இறங்க வேண்டும்.. உலகில் யாருமே இது வரையும் முயற்சி செய்ய நினைத்துக்கூட பார்க்காத அதிசயம் இது.. எப்போதும் எல்லாநில்லா பயணங்களும் நிலவின் வடக்கு துருவ பகுதியை தான் குறிவைத்து வென்றுள்ளன.. இதுதான் சவால்..
அன்பு மாணவர்களே ஒருவர் பொதுத் தேர்வை நேரடியாக எழுதிவிட முடியுமா.. பல்வேறு வகுப்பு தேர்வுகள் சுய தேர்வுகள் என்று நாம் ஒத்திகை பார்க்கிறோம் அல்லவா.. ஒரு பள்ளி ஆண்டுவிழாவில் ஒரு நாடகம் அரங்கேற்ற வேண்டும் என்றால் அது அசோகரைப் பற்றியோ வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியோ.. எதுவாக இருந்தாலும் எத்தனை முறை ஒத்திகை பார்க்கிறோம்?!
அதேபோல நாம் பிரக்யான் ரோவர் எனும் வண்டியை நிலாவிலே நடமாட வைக்க வேண்டுமென்றால் அவ்வளவு பெரிய திட்டத்திற்கு எத்தனை ஒத்திகை தேவைப்பட்டு இருக்கும்.. அதற்கு முதலில் என்ன தேவை.. என்பதை யோசித்தீர்களா
உண்மைதான் நிலாவின் உடைய நிலப்பரப்பு எப்படி இருக்கும்.. அதே போன்ற ஒரு நிலப்பரப்பை இந்தியாவில் உருவாக்கி அந்த நிலப்பரப்பின் மீது பிரக்யான் ரோவர்ரை ஒருமுறை அல்ல பலமுறை ஓடவிட்டு நாம் ஒத்திகை பார்த்திருக்க வேண்டும் அல்லவா.. அதற்கு நிலாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பாறைகளும் மண்ணும் தேவைப்பட்டிருக்கும்.. இங்கு தான் நம்முடைய சுவாரசியமான கதை தொடங்குகிறது..
நிலாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறைகள் மண் போன்ற மாதிரிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தினால் சேகரித்து வைத்து பாதுகாக்கப்படுகிறது.. இந்த உலகில் எந்த நாடு சந்திரனுக்கு போக விரும்பினாலும்.. இசுரோ உட்பட யாராக இருந்தாலும் நிலா என்கிற நிலப்பரப்பின் மாதிரியை அமைக்க நாசாவை தான் நம்பி இருந்தார்கள்..
ஆனால் ஒரே ஒரு கிலோ நிலாவினுடைய மண்ணும் அல்லது பாறையும்.. நீங்கள் நாசாவிடம் இருந்து வாங்க வேண்டுமென்றால் ஒரு கிலோ ₹60,00,00,000 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இப்படி ஒரு செலவை இந்தியா மாதிரியான ஒரு நாடு எப்படி செய்ய முடியும்.. எனவே மாற்று வழிகளை இஸ்ரோ தேடத் தொடங்கியது..
பேராசிரியர் அன்பழகன் அற்புதமான ஒரு வேலையை செய்தார்.. இந்தியா முழுவதும் பயணித்து நிலாவினுடைய பாறைகளையும் நிலத்தில் உள்ள மண்ணையும் 99% ஒத்திருக்கின்ற.. இடம் இந்தியாவில் இருக்கிறதா என்று தேடினார்.. இரண்டு இடங்கள் ஆறு மாத கால தேடலுக்கு பிறகு கண்டுபிடிக்க முடிந்தது.. ஒன்று புனேவில் இருந்தது ஆனால் அந்த இடம் மேலும் ஆய்வுகளை தொடர்வதற்கு கடினமான சூழல்களில் சிக்கி இருந்தது..
அதை விட அற்புதமான இடம் 99.9% சந்திரனின் பாறைகளையும் மண்ணையும் அப்படியே உரித்து வைத்திருந்த ஒரு இடமாக நாமக்கல் மாவட்டத்தில் பாறைகள் சூழ்ந்த ஒரு மலைப்பகுதியில் இரண்டு கிராமங்களுக்கு இடையே கொட்டி கிடப்பதை பேராசிரியர் கண்டுபிடித்தார் கிரா ஃபைட் கரும் கற்பாறைகள் சாம்பல் சிவப்பு கருஞ்சிவப்பு வண்ணங்களில் இருந்த சிறு சிறு கூழாங்கற்கள் வெளுத்து போன மண் என்று ANOTHOSITE வகைப் பாறைகள் தனித்துவமிக்க தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி கிராமத்தின்.. மண் அமைப்பாக இருந்தன
2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்.. நம் பூமியில் இருந்துதான்.. சந்திரன் பிறந்த பிரிந்து சென்றிருக்க வேண்டும்.. என்கிற கோட்பாட்டை நிரூபிக்கும் விதமாக இந்த நாமக்கல் மாவட்டத்தின் கிராமம் அமைந்திருந்தது இந்தியாவினுடைய நில இயல் ஆராய்ச்சி அமைப்பு இந்த கிராமத்தை மிக எளிதாக கண்டுபிடித்தது 120 மீட்டருக்கு ஆழத்தில் துளை இட்டாலும் இந்த மண் மாறவில்லை .. பிளாட்டினம்.. ரோடியம் அஸ்மியம் இரிடியம் போன்றவை எளிதில கிடைக்க கூடிய இடமாக இது இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தார்கள்..

பிறகென்ன இங்கே இருந்து டன் கணக்கில் மண்ணையும் பாறைகளையும் எளிதாக எடுத்துச் சென்று பெங்களூரிலேயே நம்முடைய ஊரினுடைய லாரி ஓட்டுனர்கள் குவித்தார்கள் அவர்களுக்கு தெரியாது எதற்காக அங்கே போகிறோம் ஏன் இந்த மண் எடுத்துச் செல்லப்படுகிறது என்று.
விக்ரம் லாண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நாம் திரும்பத் திரும்ப நூற்றுக்கணக்கான முறை ஒத்திகை பார்ப்பதற்கு ஒரு குட்டி நிலாவை நம்மால் நம் நாட்டிலேயே ஏற்படுத்த முடியும் என்பது எவ்வளவு பெரிய அதிசயம்.. இப்போது ஜப்பான் நாடும் சீனாவும் கொரியாவும் இஸ்ரேலும் நம்முடைய நாமக்கல் கிராமத்தை நோக்கி படையெடுத்து இருக்கிறார்கள் இத்தனை சிறப்புமிக்க.. நாமக்கல்.. மாவட்டத்தின் 23 கிராமங்கள் சித்தம்பூண்டி தாசம்பாளையம் .. கோண்ணாமலை.. என்று ஊர்கள் பிரபலம் அடைந்து விட்டன..
நிலாவின் உடைய ஏற்ற இறக்கங்கள் ஈரப்பசை சுத்தமாக இல்லாத மண் மேடுகள்.. எங்காவது பாறை மீது இடித்துக்கொண்டால் எப்படி திரும்புவது எத்தகைய எல்லைவரை புகைப்படம் எடுத்து அனுப்புவது என்று யாவற்றையும் நாம் பிரக்யான் ரோவர்க்கு பூமியிலேயே ஒத்திகைகளின் போது நன்றாக சொல்லிக் கொடுத்து அந்த குட்டி ரோபோட்டை நிலாவிற்கு அனுப்பினோம் என்பது என்ன அழகான கதை..
இந்த மிகப் அற்புத கதையில் இரண்டு சொற்களை நீங்கள் கவனிக்கலாம் ..அன்பு மாணவச் செல்வங்களே.. ஒரு சொல் பிரக்யான் என்னும் சொல் இன்னொரு சொல் விக்ரம் எனும் சொல்….
நிலாவில் தென் பகுதிகளில் நமக்காக தரையிறங்கி அங்கே அந்த தனிமையில் கடும் குளிரில் நடமாடி இங்கும் அங்கும் சென்று புள்ளிவிவரங்களை நாம் திரட்டுவதற்கு நம்முடைய கண்களாகவும் நம்முடைய உணர்வியாகவும் செயல்பட்ட அந்த ரோவர் பிரக்யான் என்று அழைக்கப்பட்டது.. சமஸ்கிருத மொழியில் இந்த பெயரை அவர்கள் வைத்தார்கள் பிரக்யான் என்றால் ஞானம் .. அறிவு உணர்வு என்று பொருள்.. அதற்குமேல் அதில் ஒன்றுமில்லை.. வரலாற்று சிறப்புமிக்க ரோபோட் என்பதை தவிர.. இறக்குகின்ற லாண்டருக்கும் ஏதாவது ஒரு வடமொழிப் பெயரையே வைக்கலாம் என்று அரசு கருதிய பொழுது இஸ்ரோ விஞ்ஞானிகள் இல்லை அதை எங்களிடம் விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம்
வெற்றிகரமாக தரை இறக்கிய லாண்டர் விக்ரம் லாண்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதை நாம் பார்க்கலாம்.. அது என்ன விக்ரம்..? ஏன் இந்த பெயரை விஞ்ஞானிகள் வைத்தார்கள்? நம்ம கமல்ஹாசன் நடித்த படத்தின் பெயராக இருக்குமா.. இல்லை நண்பர்களே.
அது விக்ரம் சாராபாய் என்கிற மாமனிதரை குறிக்கும்.. இஸ்ரோ என்னும் அமைப்பிற்கு உயிர் இருந்து அதற்கு ஒரு இதய துடிப்பு இருக்குமேயானால் அந்த இதயம் விக்ரம் விக்ரம் என்றுதான் அடித்துக்கொள்ளும்.. அவர் இல்லையேல் இஸ்ரோ இல்லை.. யார் இந்த விக்ரம் சாராபாய்.. அவரைப் பற்றி நாம் ஏன் அறிய வேண்டும்.. அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
*****************
கட்டுரையாளர்:
முந்தைய தொடரை வாசிக்க: இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 1 —- இஸ்ரோவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Fantastic..the story of our ISRO.. on how it won over the NASA dependency.. and how our Tamilnadu villages played a major role is an untold.. thrill.. we should add this all our school text books.. Historic episode sir.. Sharing with many with proud👌
Pingback: இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி?
Nice and surprise news sir…
Really hard work done by prof.Anbalagan