தொடர்: 3 – இஸ்ரோயணம் – இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி
இஸ்ரோ பிறந்தது எப்படி?
விண்வெளி பயணத்தை விடுங்கள் நீங்கள் கால பயணம் செய்ய விரும்புகிறீர்களா? இஸ்ரோவின் தொடக்க காலத்தை நோக்கிய ஒரு காலப் பயணம் இஸ்ரோவில் விஞ்ஞானியாக இணைவதற்கு உங்களுக்கு பயன்படலாம். ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரோ நடத்துகின்ற பணி இட தேர்வில் இஸ்ரோவின் வரலாறு பெரிய அளவில் கேட்கப்படுகிறது. அப்படி என்ன இஸ்ரோவில் பணி இடங்கள் காலியாக உள்ளன என்று ஒருவர் என்னுடைய முந்தைய கட்டுரையை வாசித்துவிட்டு கேட்டிருக்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO, விண்வெளியியல் மின்னணுவியல் எந்திரவியல் கணினி அறிவியல் மற்றும் பல்துறை விஞ்ஞானிகளை நியமிக்கிறது இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் விஞ்ஞானிகளுக்கான பதவிகள் ஆயிரக்கணக்கானவை. விண்வெளி விஞ்ஞானி என்பது மிகவும் சுவாரசியமான ஒரு பதவி ஆகும். இந்த பிரபஞ்சத்தையும் விண்வெளி அறிவியலின் தத்துவார்த்த அம்சங்களையும் ஆய்வு செய்கிற ஒருவர் என்று இதற்கு பொருள். இந்தியாவின் முதல் விண்வெளி விஞ்ஞானி என்று நாம் விக்ரம் சாராபாய் அவர்களை அழைக்கலாம்.
சென்ற அத்தியாயத்தில் நாம் நம்முடைய சந்திரயான் நோக்கி புறப்பட்ட தரை இறக்கி விக்ரம் லாண்டர் என்று பெயரிடப்பட்டதைப் பார்த்தோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் மிகப்பெரிய பங்களிப்பாக சந்திரனின் தென்துருவத்தில் சென்று இறங்கிய விக்ரம் லாண்டர் இந்தியாவின் வரலாற்று பெருமையாக பதிந்து போனது. விக்ரம் சாராபாய் அவர்களின் நினைவை இதைவிட அற்புதமாக கொண்டாட முடியாது.
நீங்கள் கால பயணம் செய்ய விரும்பியது உண்டா? அறிவியல் புனை கதைகளில் நாம் காலப்பயணம் குறித்து வாசித்திருக்கிறோம். உதாரணமாக ஹாரி பாட்டர் நாவல்களில் தலைமை ஆசிரியர் ரையில் ஹார்ட்கூவோர்ட்ஸ் பென்சிவ் என்கிற ஒரு அமைப்பு இருக்கும். பேசின் போல அகல பாத்திரத்தில் பல பலத்த வெள்ளி நிறத்தில் ஒரு திரவம் நிரப்பப்பட்டிருக்கும் அதற்குள் நீங்கள் தலையை நுழைக்க வேண்டும் முகத்தை உள்ளே நுழைத்து கண்களைத் திறந்தால் நீங்கள் எந்த ஆண்டிற்கு போக விரும்புகிறீர்களோ அந்த ஆண்டுக்கு அந்த சம்பவத்திற்கு உங்களை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம் நீங்கள் அங்கு இருப்பீர்கள் மற்றவர்கள் உங்களை உணர மாட்டார்கள்.
வரலாற்றில் அந்த பக்கத்தை பொறுத்தவரையில் அதன் பகுதியாக இருந்து அதை நீங்கள் உணர முடியும். அதே நாவலில் டைம் டர்னர் என்று ஒன்று வரும். ஒரு கண்ணாடி அதை கழுத்தில் நெக்லஸ் போல மாட்டிக் கொண்டிருப்பார்கள். ஹாரி பாட்டர் எதிர்காலத்தை கண்டறிய அது பயன்படும்..
ஹெச்.ஜி.வெல்ஸ் (H.G.Wells) எழுதிய காலப்பயணி நாவலில் சைக்கிள் போன்ற ஒரு கருவியில் அவர் பல காலங்களை கடந்தும் அல்லது இறந்த காலத்தை நோக்கியோ பயணிப்பது வாசித்திருப்பீர்கள். 1951 ஆண்டு வெளிவந்த டைம் அண்ட் அகைன் (Time and Again) என்கிற SIMAK எழுதிய நாவலில் பயணம் செய்வது இன்னும் ஒரு சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். டைம் குவாரி என்று கையில் ஒரு சிறிய சுத்தியலுடன் பிரம்மாண்டமாக குவிக்கப்பட்டு இருக்கும் பாறைகள் சூழ்ந்த மலை ஒன்றுக்குள் நுழைந்து அங்க இருக்கும் கற்களை புரட்டி வரலாற்றின் சம்பவங்களை உணர வைக்கும் நாவல் அது. இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வாருங்கள் புறப்படுவோம்.
இஸ்ரோவின் கதையை நாம் காலப் பயணம் மேற்கொண்டு எளிதாக அறிந்து கொள்ள முடியும். பலரும் இஸ்ரோவின் கதை என்பது 1958 ஆண்டு தொடங்குவதாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே இஸ்ரோவின் கதையை தொடங்கி வைத்த பெருமை எஸ் கே மித்ரா (S. K. Misra) என்கிற ஒரு வான் இயற்பியலாளரை சாரும். சோவியத் நாட்டில் இருந்து ஸ்புட்னிக் என்கிற உலகின் முதல் செயற்கை கோள் 1957 விண்ணில் ஏவப்பட்டது..
இது ஏவப்பட்டதற்கான வெற்றியை உலகிற்கு அறிவிப்பதற்காக ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் ஒரு பிரம்மாண்ட பத்திரிகையாளர் கூட்டம் கூட்டப்பட்டது. முதலில் நாம் அங்கு செல்வோம் இந்த கூட்டத்தில் இந்த பயணத்திற்கு மிகவும் பயன்பட்ட ஒரு புத்தகம் என்று நம்முடைய இந்தியாவின் அறிஞர் எஸ்.கே.மித்ரா எழுதிய அப்பர் அட்மாஸ்ஃபியர் என்கிற புத்தகத்தை விஞ்ஞானிகள் முன்மொழிந்தார்கள். இந்த நிகழ்வை குறித்து பத்திரிகையில் வாசித்த அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு எனும் மாமனிதர் அறிஞர் எஸ்.கே.மித்ராவை நேரில் வரவழைத்து ஒரு தேநீர் விருந்து கொடுக்கிறார். அப்போதைய பொதுவான உரையாடல்களின் பொழுது, இந்திய விண்வெளியியல் கனவுகள் முதன்முதலில் விதைக்கப்பட்டன..
அடுத்த ஒரு வாரத்தில் ஜவஹர்லால் நேரு, ஹோமி ஜஹாங்கிர் பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகிய இருவரையும் சந்திக்கிறார். அப்போது இருவருமே முப்பதுகளில் உள்ள இளைஞர்கள். அவர்கள் கையில் இந்திய விண்வெளி கனவு எனும் பிரம்மாண்டத்தை நேரு ஒப்படைத்தார். இப்படி தான் இஸ்ரோவின் கதை தொடங்குகிறது. அப்படி முதலில் உருவாக்கப்பட்ட இந்தியாவினுடைய விண்வெளி கனவு அமைப்பு இந்தியன் நேஷனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் என்று அழைக்கப்பட்டது. இதன் சுருக்கம் INCOSPAR ஆகும்… ராக்கெட் ஏவு தளங்களுக்கு அயல் நாடுகளை நம்பி இருக்காமல் இந்தியாவிலிருந்தே ராக்கெட்டுகளை அனுப்புவதற்கான இடம் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறியும் பொறுப்பையும் விருப்பையும் விக்ரம் சாராபாய் ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் இந்தியாவின் விண்வெளி கனவுகள் இந்திய அணுவியல் துறையோடு ஒரு உப துறையாக இணைக்கப்பட்டிருந்தன.
விக்ரம் சாராபாய் காலத்திற்கு நாம் அவரோடு சேர்ந்து நடந்து என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்கு முன், ராக்கெட்டுகளை ஏவும் போது குறித்த அடிப்படை அறிவியல் தற்போது நமக்கு தேவைப்படுகிறது.
ஏன் எல்லா இடங்களிலிருந்தும் ராக்கெட்டுகளை அனுப்ப முடிவதில்லை? பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்துதான் ராக்கெட்டுகள் அதிகம் ஏவப்படுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு ராக்கெட்டை ஏவுவது பூமியின் சுழற்சி வேகம் காரணமாக கூடுதல் ஊக்கத்தை ராக்கெட்டுக்கு அளிக்கிறது. இதனால் முக்கியமான ஒரு உதவி நமக்கு கிடைக்கும்..
ராக்கெட் விவகாரத்தில் மிகப்பெரிய பிரச்சனை அதனுடைய எரி பொருள் ஆகும். இந்த எரிபொருளை நாம் சிக்கனமாக வைத்தால் மட்டும் தான் எடை குறைப்புசெய்து அதிக தொலைவிற்கு ராக்கெட்டை நம்மால் அனுப்ப முடியும். உந்து விசை என்பதன் அடிப்படைகளை புரிந்துகொள்ளும் ஒருவருக்கு இப்போது நான் சொல்லியிருக்கும் கருத்து எளிதில் பிடிபடும். அதனால் தான் பெரும்பாலான ஏவு தளங்கள் பூ மத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன ஏனெனில் இந்த தளங்களில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் எரிபொருள் மற்றும் பூஸ்டர்களை சேமிக்க உதவுகின்றன.
கூடுதல் இயற்கை ஊக்கத்தையும் அவை பெறுகின்றன. இப்போது ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதிகம் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்ற ஃபுளோரிடா ஸ்ரீஹரிகோட்டா யுவர் ரூ ஆகிய நகரங்களுக்கு பொதுவானது என்ன? இந்த இடங்கள் அனைத்துமே பூமத்திய ரேகையினுடைய ஒரு விதமான அருகாமையில் அமைந்துள்ளன இந்த இடங்கள் அனைத்தும் விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும் விண்வெளி நிலையங்கள் என்பதை நாம் அறிவோம். ராக்கெட்டுகளை ஏவுவதற்கு இந்த இடங்கள் ஏன் மற்ற இடங்களை விட விரும்பப்படுகின்றன தெரியுமா. பூமியின் சுழற்சி செயற்கை கோள் ஏவுவதற்கு ராக்கெட்டுகளை எளிதில வானை நோக்கி உந்தி தள்ளுவதற்கு பயன் படுகின்றது..
இந்தியாவை பொறுத்தவரையில் ஸ்ரீ ஹரிகோட்டா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் அத்தகைய ஒரு இடத்தை கேரளத்தில் உள்ள தும்பா என்னும் இடத்தில் கச்சிதமாக கண்டுபிடித்தவர் விக்ரம் சாராபாய். அவர் இருக்கும் இடத்திற்கு காலப் பயணம் மேற்கொள்வோம் எந்தவிதத்தில் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்பதை உங்கள் இஷ்டத்திற்கு விட்டு விடுகிறேன்.
தும்பை மலர்களால் சூழப்பட்ட அற்புத கிராமமான இந்த இடம் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான மிகக் கச்சிதமான ஒரு இடமாக அவரால் தேர்வு செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக அங்கிருந்த ஒரு தேவாலயத்தினுடைய ஒரு மையப்பகுதியிலிருந்து அனுப்பப்பட்டால் எளிதில ராக்கெட்டுகள்வினை அடையும் என்கிற கணக்கீட்டின்படி அந்த இடத்தை விக்ரம் சாராபாய் தேர்வு செய்தார். அவர் தேவாலயத்திற்கு உள்ளே செல்கிறார். அதோ அந்த பாதிரியாருடன் அவர் பேசுகிறார்.. ஒரு வாரத்தில் பிஷப் அவர்களை சந்திக்கிறார். வேறு ஒரு இடத்தில் தேவாலயத்தை அதே போலவே கட்டிக் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளிக்கிறார். இந்தியாவுக்கே உரிய மதசார்பின்மை அனைத்து மதங்களையும் ஒன்றுபோல போற்று என்ற அந்த பெருந்தன்மை காரணமாகத்தான் இஸ்ரோ உருவானது என்பதை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். கொஞ்சம் நாட்களிலேயே முதல் ராக்கெட் ஏவப்பட்டது என்பது வரலாறு.
1963 நவம்பர் 21 அன்று அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அப்பச்சே ராக்கெட் எனும் ஒலி ராக்கெட் தும்பாவிலிருந்து வானை நோக்கி அனுப்பப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டை விஞ்ஞானிகள் ஒரு மாட்டு வண்டியில் தான் எடுத்து வந்தார்கள் என்று இன்றைக்கு நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இதனிடை 715 கிலோகிராம் வானில் இதனுடைய அல்டிட்யூட் என்பது யாரு 107 கிலோ மீட்டர்கள் ஆகும் பேலோடு என்று அழைக்கப்படுகின்ற எரிபொருள் எடை 30 கிலோ கிராம் ஆனால் அன்றைய தினத்தில் மிக பெரிய ஒரு சோதனையை இந்திய விக்ரம் சாராபாய் தலைமையிலான குழு எதிர்கொண்டது. வாருங்கள் அருகில் சென்று பார்ப்போம்.
ஏவுதளத்தில் அனைத்தும் தயாரான நிலையில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி அதே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். ராக்கெட்டை ஏவலாமா அல்லது நிறுத்தி வைப்பதா என்கிற குழப்பங்களுக்கு மத்தியில் மக்கள் வரிப்பணத்தை ஏராளமாக செலவிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த முக்கியமான வரலாற்று தருணத்தை ஒருபோதும் தள்ளிவைக்க கூடாது என்று பிடிவாதமாக முடிவு செய்து மிக தைரியமாக விக்ரம் சாராபாய் இந்தியாவின் முதல் ராக்கெட்டை அங்கிருந்து ஏவி வரலாறு படைத்தார். இந்த வரலாற்று சாதனைக்குப் பிறகு ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சென்டர் என்று தனியாக தும்பாவில் ஒரு ராக்கெட் தயாரிக்கும் நிலையத்தை உருவாக்கினார்கள் அகமதாபாத்தில் சோதனை முறையில் செயற்கை கோள் தயாரிக்கின்ற ஸ்பேஸ் ஸ்டேஷன் என்றழைக்கப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கினார்கள்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தும்பா ராக்கெட் (Thumba Rocket) ஏவுதளத்தை எந்த நாடு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஐநா சபைக்கு அதை அர்ப்பணித்தார் இது ஒரு அற்புதமான முடிவு ஆகும் இதன்மூலம் உலகில் எந்த நாடு வேண்டுமானாலும் இந்தியாவோடு நட்புறவு கொண்டு தும்பாவில் இருந்து ராக்கெட்டை ஏவ முடியும்.
அதே சமயத்தில் பல நாடுகள் இந்த ராக்கெட் ஏவும் விஷயத்தில் பலவகையான தங்களுடைய அறிவை நம்மோடு பகிர்ந்து கொள்ள இது உதவியது. அமெரிக்கா ரஷ்யா ஃப்ரான்ஸ் இங்கிலாந்து ஜெர்மனி என்று பலரும் நம்மோடு பலவகையான வான் ஆய்வு கருவிகளைப் தொழில்நுட்பத்தை பகிர்ந்தவர்கள். சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் 1967 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த பொழுது அதில் கையொப்பமிட்ட நான்காவது நாடாக இந்தியா பிரகாசித்தது.. 17….18 என்று ராக்கெட்டுகள் விண்ணை நோக்கிப் பறந்த பொழுது இதற்கு மேல் நம்முடைய அணுவியல் துறையின் ஒரு பகுதியாக இதை வைத்திருக்க முடியாது இது தனித்துறையாக உருவாக வேண்டும் என்கிற கட்டாயத்தின் பெயரில் 1969 ஆகஸ்ட் 15 அன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எனும் ISRO பிறந்தது.. விக்ரம் சாராபாய் இஸ்ரோவின் முதல் தலைவர் இயக்குநர் பதவியை பெற்றார் இதைத் தொடர்ச்சியாக 1972 ஸ்பேஸ் கமிஷன் என்கின்ற ஒரு தனி வானியல் துறை இந்தியாவில் உருவாக்கப்பட்டது.. இதுதான் இஸ்ரோ பிறந்த கதை.
ஒரு விஞ்ஞானியாக இஸ்ரோவுக்குள் நுழைய விரும்பும் நாம் ஒருபோதும் அதன் தொடக்கத்தை மறக்க கூடாது தன் வாழ்நாள் முழுவதையும் இந்தியாவினுடைய விண்வெளி கனவுகளுக்காக அர்ப்பணித்த விக்ரம் சாராபாய் எனும் மாமனிதரை மறக்க கூடாது, 1971 றாம் ஆண்டு டிசம்பர் 30 அன்று முக்கியமான ஒரு கூட்டத்திற்கு வர வேண்டும் என்று டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களை அழைத்து கலாம் அவர்கள் தும்பாவை நோக்கி பறந்து அங்கே வந்து இணைவதற்குள் அன்றைய இரவில் மாரடைப்பினால் விக்ரம் சாராபாய் இறந்து போனார். விக்ரம் சாராபாய்க்கும் விண்வெளி ஆய்வு துறைக்குமான அந்த நெருக்கத்தை மிக அற்புதமாக தன்னுடைய அக்னி சிறகுகள் நூலில் பாரத ரத்னா அப்துல் கலாம் விவரித்திருப்பார். இந்தியாவினுடைய இஸ்ரோவின் கதையை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் நூலை வாசிக்க வேண்டும்.
இஸ்ரோவுக்குள் ஒரு விஞ்ஞானியாக நுழைவது என்றால் என்ன? அது எந்த மாதிரியான அனுபவங்களை உங்களுக்கு கொடுக்கும் அந்த அனுபவங்களை நீங்கள் பெறுவதற்கு சிறு வயதிலிருந்தே நீங்கள் எப்படி உழைக்க வேண்டும் அறிவியல் மனப்பான்மையோடும் தேடல் உணர்வோடும் எப்படி நீங்கள் ஒரு மாணவராக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு அப்துல் கலாமின் அக்னிசிறகுகள் தலைசிறந்த ஒரு புத்தகம் அதை வாசிப்போம்.
இஸ்ரோவின் அடுத்த படிநிலை என்ன இஸ்ரோவில் உள்ள பணி இடங்களுக்குச் செல்ல நாம் நம்மை எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
கட்டுரையாளர்:
முந்தைய தொடரை வாசிக்க: இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 2
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: இந்தியனின் கனவை விண்வெளியில் விதைத்த ஆரியபட்டா