என்ன?.. உலகின் மிகப்பெரிய அறிவியல் விண்வெளியியல் ஆய்வு இந்தியாவில் நடந்ததா?
இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 5
இஸ்ரோவில் ஒரு விஞ்ஞானியாக இணைவதற்கு முன் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு மிக முக்கிய மைல்கல் செயற்கைக்கோள் அறிவுறுத்தல் தொலைக்காட்சி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய விண்வெளியியல் ஆய்வு என்று இந்த சாதனையை உலகம் போற்றுகிறது.. என்ன நம்ப முடியவில்லையா!
விக்ரம் சாராபாய் அவர்களின் பிடிவாதமான மக்கள் பயன்பாட்டு நோக்கங்களை இஸ்ரோ உள்வாங்கிக் கொண்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
பிற நாடுகள் விண்வெளி ஆய்வு என்பதற்கு பணம் ஒதுக்கும் போது பெரும்பாலும் அவர்களுடைய ராணுவ மற்றும் வணிக பயன்பாடுகளுக்கு அவற்றை பயன்படுத்த தொடங்கினர்.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் வணிகமயம் என்பதை முழுக்க முழுக்க வளர்ச்சி மயம் ஆக்கிய பெருமை இஸ்ரோ ஸ்தாபகர்களை சாரும்..
₹1 செலவு செய்யப்பட்டால் கூட அது மக்களுக்கான செலவாக இருக்கிறதா?
இதனால் இந்திய மக்களுக்கு என்ன பயன் என்று கேட்க வேண்டும் என்கிற ஒரு மனநிலையை இஸ்ரோவில் மிதக்க விட்டவர் விக்ரம் சாராபாய்.
அதன் அடிப்படையில் அடுத்த முக்கிய மைல்கல்லை இஸ்ரோ 1975 ஆண்டு எடுத்து வைத்தது.
ஆரியபட்டா என்கிற ஒரு செயற்கைக்கோளை விண்ணிற்கு வெற்றிகரமாக எப்படி செலுத்தினார்கள் என்பதை நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
அதே ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் செயற்கைக்கோள் அறிவுறுத்தல் தொலைக்காட்சி பரிசோதனை என்கிற இந்த பிரம்மாண்ட ஆய்வு.
இந்த ஆய்வின் ஒட்டுமொத்த கதாநாயகர்கள் இரண்டு பேர் ஒருவர் சதீஷ் தவான், மற்றொருவர் பேராசிரியர் யஷ்பால்.

உலகில் வேறெங்கும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட பரிசோதனை அது வரை நடந்து இருக்கவில்லை..
இந்தியாவில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் வானொலியை வழங்குகின்ற திட்டத்தை தொடக்கத்தில் ஒரு வழக்கமாக நாம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.
ஒவ்வொரு ஊரிலும் அமைக்கப்பட்ட பூங்காக்களில் அல்லது பஞ்சாயத்து கட்டிடத்தில் ஒரு வானொலி வைக்கப்பட்டிருக்கும். இந்த வானொலியில் செய்திகளை ஒளிபரப்புவார்கள்.
இந்தியா மாதிரியான மிகப்பெரிய ஒரு தேசத்தில் அனைவருக்கும் அரசினுடைய செய்திகளை கொண்டு போய் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. இன்றைக்கு அது மிக மிக எளிதாக உள்ளது.
கையிலுள்ள திறன்பேசியிலேயே அனைத்தையும் அடைந்து விடுகின்ற இன்றைய தலைமுறைக்கு முந்தைய இந்த செய்தி ஒளிபரப்பு முறை புரிந்துகொள்வதற்கு கூட கடினமாக இருக்கலாம்.
நம்ப முடியாத ஆச்சரியத்தைக் கூட குடுக்கலாம்.
ஆனால் நடைமுறையில் உண்மையிலேயே செய்தித்தொடர்பு கிராம புற மக்களுக்கு அப்படித்தான் செய்யப்பட்டது.. நம் நாடு விடுதலை அடைந்த பொழுது நம்மில் கல்வி அறிவு உடையவர்கள் 48% பேர்தான் இருந்தனர்.
மெல்ல முன்னேறி தொண்ணூறுகளில் தான் நாம் ஏறத்தாழ 80 சதவீத எழுத்தறிவை எட்டினோம். அதுவரை செய்தித்தாள்களை படிப்பதற்குகூட சத்தமாக அதை வாசித்துகாட்ட ஊரில் வாத்தியார்கள் இருந்தார்கள்.
என்பதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்க கூடும்.
சமூகம் ஏன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்? புயல், மழை, பஞ்சம் என்று சீற்றங்களும் அதே சமயத்தில் பிளேக், காலரா என்று நோய்களும் பரவிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமை அரசுக்கு இருந்தது.
இந்த சூழ்நிலையில் உலகில் தகவல் தொடர்பு அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
1970 காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொலைக்காட்சி பெட்டி வந்துவிட்டது.
தொலைக்காட்சி பெட்டியில் செய்திகளை ஒளிபரப்ப தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருந்தார்கள்..
இந்திய மக்களுக்கு சாதாரண கிராமப்புற மக்களுக்கு அத்தகைய கல்வி வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்ய இஸ்ரோ துணை புரிந்தது. அதற்காக ஒரு பரிசோதனை செய்ய அரசுக்கு இஸ்ரோ ஒரு திட்டத்தை முன்மொழிந்தது.
அதன்படி 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் 1976 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை ஒரு வருடம் இந்தியா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 மாவட்டங்களில் 2400 க்கும் மேற்பட்ட கிராமங்களை தேர்வு செய்து
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலியால் தயாரிக்கப்பட்டு இந்த திட்ட காலத்திற்கு இந்தியாவிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்ட நாசாவின் ஒரு செயற்கைகோளால் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உலகமே அசந்து போன இந்த தகவல் தொடர்பு பரிசோதனை பல சாதனைகளை உள்ளடக்கியதாகும். UNESCO, UNICEF போன்ற பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஓடிவந்து இதை ஆதரித்தன.
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் திட்டமான INSAT திட்டத்தை உருவாக்குவதற்கு இந்த பரிசோதனை மிகவும் பயன்பட்டது. இதன் கதை மிகவும் சுவாரஸ்யமானது. இது 1960களில் தொடங்குகின்றது.
பயன்பாட்டு தொழில்நுட்ப செயற்கைக்கோள் திட்டம் என்ற ஒன்று தொடங்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக செயற்கைக்கோள் வழியாக நிலப்பரப்பு பெருந்ர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் சோதனையை நாசாவோடு இணைந்து நம்முடைய இஸ்ரோ நடத்தி காட்டியது.
இந்த திட்டத்தை நாசா விண்ணில் அனுப்பி இருந்த ATS-6 என்கிற செயற்கைக்கோள் மூலம் நாம் வெற்றிகரமாக செயல்படுத்தினோம்..
விக்ரம் சாராபாய்யின் தலைமையில் இந்தியா தனது தேசிய விண்வெளித் திட்டத்தை தொடங்க முயற்சித்து ஆண்டுகளிலேயே தகவல் தொடர்பு நோக்கத்திற்காக செயற்கைக்கோள்களின்பங்கு மிக அதிகம் என்பதையும் இந்த துறையில் மக்களுக்கான தகவல் தொடர்பு சாதனமாக விண்வெளி ஆய்வை மாற்றுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் இஸ்ரோவின் ஸ்தாபகர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள்.
ஆனால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 1975 ஆண்டுகளில் விக்ரம் சாராபாய் இருக்கவில்லை. அவருடைய இடத்தில் இருந்தவர் சதீஷ் தவான். அற்புத விஞ்ஞானி அர்ப்பணிப்பும் மிக்க மக்கள் விஞ்ஞானி சதீஷ் தவான்.
அவரோடு இணைந்தவர் பேராசிரியர் யஷ்பால். ஏற்கனவே தகவல் தொடர்பு விஞ்ஞானியாக உலகங்கும் அறியப்பட்டிருந்தவர் பேராசிரியர் யஷ்பால்.
விண்வெளியில் குறிப்பாக வான்வெளியில் காஸ்மிக் அலைகள் குறித்த யஷ்பால் இன் பரிசோதனைகள் பலவற்றை உலகம் அறிந்திருந்தது இவர்கள் இருவரும் கைகோர்த்தவர்கள்.
தேர்வு செய்யப்பட்ட ஒரு விஞ்ஞானிகள் குழு நிபுணத்துவம் பெறுவதற்கு 1967 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்து தகவல்தொடர்பு அறிவியலை அறிந்து கொள்ள இந்திய அரசாங்கம் உதவவேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக விக்ரம் சாராபாய் முன்வைத்திருந்தார்.
SATCOM என்கிற ஒரு தகவல் தொடர்பு குழுவை அமைத்தார். இஸ்ரோ மற்றும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் இந்த குழு உள்ளடக்கியது.
கல்வித் தொலைக்காட்சியில் ஒரு பரிசோதனைக்காக நாசாவால் உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள் ATS-6 என்கிற செயற்கைக்கோளை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
அப்போது நாசாவின் சர்வதேச திட்ட இயக்குனராக இருந்த அர்னால்டு ஃப்ரூட்கிங். அவர்களை நேரில் சந்தித்து விக்ரம் சாராபாய் 1969 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஆனால் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்குள் விக்ரம் சாராபாய் இயற்கை எய்தினார்..
ஒரு நொடிப்பொழுதும் யோசிக்காமல் அவரை அடுத்து தலைமை பதவிக்கு வந்த சதீஷ் தவான் அவர்கள் உடனடியாக செயலில் இறங்கினார். இதன் மூலம் ஒரு பரிசோதனை ஒரு ஆண்டிற்கு செய்வதற்கு அவர்களுடைய செயற்கைக்கோளை பயன்படுத்த இந்தியா சர்வதேச ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் வழியே உரிமை கோரியது.
விக்ரம் சாராபாய் ராஜதந்திர நடவடிக்கையால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவதற்கு முன்பே இஸ்ரோ நாசா கூட்டு பணிக்குழு நிறுவப்பட்டது.
இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த பணிக்குழு ஏற்கனவே ஆய்வு செய்து இருந்தது.
இந்த குழுவின் தலைவராக இருந்தவர்தான் பேராசிரியர் யஷ்பால் அகமதாபாத்தில் சோதனை செயற்கைக்கோள் தொடர்பு பூமி நிலையத்தை முதலிலே அமைத்தார்கள்.
இந்த திட்டத்திற்கான செயல்பாட்டு நிறுவனமாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தை ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்திருந்தது.
அகமதாபாத்தில் ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவையும் கேடா மாவட்டத்தில் உள்ள பிஜீ என்கிற ஒரு கிராமத்தில் ஒரு தொலைக்காட்சி ட்ரான்ஸ்மிட்டர்ரையும் அமைத்தார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு ஊராக சேர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் இருந்து 2400 கிராமங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை அமைத்து ஆறு பிராந்தியங்களாக பிரித்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒரிசா, பீகார், ஆந்திரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் 80 சதவிகித மக்களை இந்த பரிசோதனையை சென்றடைந்தது. ஒளிபரப்பிற்காக இரண்டு வகையான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன.
ஒன்று கல்வி தொலைக்காட்சி மற்றும் பயிற் று விப் பு தொலைக்காட்சி என்று தனியாக பள்ளி குழந்தைகளுக்காக மிக சுவாரசியமான ஆக்கப்பூர்வமான கல்வி திட்டங்களின் மீது கவனம் செலுத்தப்பட்டது. எல்லாம் இஸ்ரோவின் உடைய மக்கள் பயன்பாட்டை விரிவுபடுத்தி சாதாரண ஜனங்களிடம் இஸ்ரோவை கொண்டு சென்ற அற்புதத்தை வரலாறு இன்றைக்கும் மறக்காமல் நினைவுப்படுத்துகிறது.
ஒவ்வொரு நாளும் கிராமத்தில் பஞ்சாயத்து கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருக்கும் தொலைக்காட்சியின் முன்னே கிராம மக்கள் கூடுவதும் அத நிகழ்ச்சியை 1:30 மணி நேரம் ரசித்துவிட்டு உழைப்புக்கு திரும்புவதும் கண்கொள்ளா காட்சியாக இன்றைக்கும் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது..
இந்த பரிசோதனை வெற்றிக்கு பிறகு இந்தியா தன்னுடைய சொந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோளான APPLE செயற்கைக்கோளை தயாரித்தது.
1981 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று வெற்றிகரமாக பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன்-1 எனும் ராக்கெட்டின் மூலம் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு அச்சு நிலையாக்க தகவல் தொடர்பு சாதனமாக விண்ணில் பறக்கத் தொடங்கியது.
இதன்மூலம் இந்தியாவில் வீடுதோறும் தொலைக்காட்சிகள் முளைக்க தொடங்கின. இஸ்ரோவின் மக்கள் நலத்திட்டம் என்கிற அணுகுமுறை இல்லை என்றால் இதை சாதிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.
இன்றைக்கு இந்தியாவில் ஹிந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் என்று 26 மொழிகளில் ஏறத்தாழ 1300 செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.. தேசிய மற்றும் பிராந்திய தொலைக்காட்சி நிலையங்களில் இருந்து ஒளிபரப்பப்படுகின்றன..
DTH டைரக்ட் டு ஹோம் என்று டாடா ஸ்கை ஏர்டெல் டிஷ் டிவி என்றெல்லாம் வந்துவிட்டன உங்களுடைய திறன் பேசியிலேயே நீங்கள் 24 மணி நேரமும் இந்த தொலைக்காட்சிகளின் வழியே நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும்..
உலகின் எந்த மூலையில் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி உட்பட எது நடந்தாலும் இந்தியாவின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் நேரடியாக அவற்றை கண்டு ரசிக்க முடியும்..
இன்றைய இந்த நிலையை அடைவதற்கு அன்று நிகழ்த்தப்பட்ட இஸ்ரோவின் பரிசோதனை என்பது முதல் படியை எடுத்து வைத்த பிரம்மாண்ட சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.
ஒரு விஞ்ஞானியாக இஸ்ரோவில் இணைவதற்கு துடிக்கும் நாம் கண்டிப்பாக அறிய வேண்டிய அற்புதங்களில் ஒன்று தான் உலகின் பிரமாண்டமாய் நடைபெற்ற இந்தியாவினுடைய அந்த செயற்கைக்கோள் தொலைக்காட்சி பரிசோதனை..
ஏன் வேறு ஒரு நாட்டிலிருந்து நாம் இவற்றை ஏவ வேண்டும் நம் நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட ஒரு ராக்கெட்டை உருவாக்குவது அவ்வளவு கடினமா என்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கேட்ட கேள்விக்கு விடையாக நமக்கு அமைந்தவர்தான் மரியாதைக்குரிய பாரத ரத்னா ஏபிஜே அப்துல் கலாம்.. அந்த வெற்றிக் கதையை நாம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
*****************
கட்டுரையாளர்:
முந்தைய தொடரை வாசிக்க: இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 4 —- இந்தியாவில் உருவாக்கப்பட்டதுதானா ஆரியபட்டா செயற்கைக்கோள்?
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: அப்துல் கலாம் என்னும் ஃபீனிக்ஸ் பறவை!