கலாம் என்னும் ஃபீனிக்ஸ் பறவை!
இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 6
இந்தியாவின் விண்வெளி ஆய்வியல் என்கிற பிரம்மாண்ட வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது.. இஸ்ரோவில் ஒரு விஞ்ஞானியாக இணைய போகும் நாம் கண்டிப்பாக அறிய வேண்டிய இன்னொரு அற்புதம் தான் எஸ்எல்வி-3 எனும் அத்தியாயம்.
ரஷியா, சீனா, அமெரிக்காவை அடுத்து இன்று உலக அளவில் ராக்கெட்டுகளை தானே உற்பத்தி செய்து விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்புவதிலும் பிற கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது குறித்த தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்துகின்ற தன்னிறைவு பெற்ற நான்காவது நாடாக இந்தியா விளங்குகிறது..
ஆனால் ஒரு காலகட்டத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல முழுக்க முழுக்க நாம் அயல் நாடுகளை நம்பி இருந்தோம். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாமல் போயிருந்தால் ஒருவேளை நம்முடைய விஞ்ஞானிகள் கருத்தோடு மனசாலும், செயலாலும், உழைப்பாலும் தன்னிகரற்ற அந்த சேவையை நமக்கு வழங்காமல் போயிருந்தால், வறுமையும் பிணியும் சாக்காடும் பெறுவது மட்டுமல்ல அண்டை நாடுகள் அயல்நாடுகள் என்று நம் மீது படையெடுத்து இருப்பார்கள் என்று கூட வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.
நம்மை காலனித்துவப்படுத்திய ஆங்கிலேயர்கள் ஏறக்குறைய இயற்கை வளம் அனைத்தையும் சுரண்டி விட்டு பஞ்ச பாராரிகளாக விட்டுச் சென்றார்கள் என்பதுதான் உண்மை. 1947 ஆம் ஆண்டு நமக்கு விடுதலை வழங்கப்பட்ட பொழுது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த அட்லி, மட்டுமல்ல வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர்களும் இனி அனைத்திற்கும் இங்கிலாந்தை நம்பித்தான் இந்தியா இருக்கப்போகிறது என்று நினைத்தார்கள். இன்று ராக்கெட் தொழில்நுட்பத்திலும் விண்வெளி இயலிலும் இங்கிலாந்தை விட இந்தியா உயர்ந்து நிற்கிறது.
அதன் அடிப்படை காரணங்களில் மகத்துவமானது எஸ்எல்வி-3 ராக்கெட்டின் கதை. இந்த வெற்றிக் கதையின் பின்னால் அப்துல் கலாம் என்கிற ஒரு மனிதரின் அளப்பரிய தியாகமும் மூளையும் அவரோடு இணைந்து செயல்பட்ட மாமனிதர்களின் கடுமையான உழைப்பும் அடங்கி இருக்கிறது.
1975 ஆம் ஆண்டு விண்வெளிக்கு நம்முடைய முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா அனுப்பப்பட்டதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதன் பிறகு இந்தியா முழுவதும் தொலைக்காட்சி பெட்டிகளை சுமந்து சென்ற இஸ்ரோ தன்னுடைய அடுத்த இலக்கையும் எட்டி இருந்தது. ஆனால் பெரும்பாலும் அமெரிக்காவையோ அல்லது ரஷ்யாவையோ நம்பி நம்முடைய செயற்கைக் கோள்கள் விண்ணில் பறந்து கொண்டிருந்தன.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான- ஒரு நட்டு ஒரு ஸ்குரூ கூட- அயல் நாட்டிலிருந்து பெறப்படாத, நம்முடைய சொந்த ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பவேண்டும்.. அதை நம்முடைய மண்ணிலிருந்தே அனுப்ப வேண்டும் என்கிற சவாலை ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கியவர் தான் அப்துல் கலாம்.
அப்துல் கலாமின் வாழ்க்கைக் கதை பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ராமேஸ்வரத்தில் பாம்பனுக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் படகோட்டியொருவரின் மகனாகப் பிறந்து. கல்வி என்கிற ஒரு ஆயுதத்தின் மூலம் சிக்கன பிடித்துக்கொண்டு பிரம்மாண்டங்களை சாதித்த மாமனிதராக எத்தனையோ தலைமுறைகளின் முன்னுதாரணமாகிப் போனவர் அப்துல் கலாம்.
1962 ஆம் ஆண்டு நேரடியாக விக்ரம் சாராபாய் அவர்களால் அரிய பொக்கிஷமாக கண்டுபிடிக்கப்பட்டவர்தான் அப்துல் கலாம். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு ராக்கெட் ஏவுதலின் பொழுதும் பட்டறை வேலையில் இருந்து ஏவு தள கண்காணிப்பு வரை அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.
ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கிடைக்கின்ற பொருட்களை கொண்டு ஒரு ராக்கெட்டை தயாரிப்பது என்பது பெரிய சவாலாக இருந்தது. நம் நாட்டின் மீதான அளவற்ற தேசப்பற்றோடு எப்படியாவது அதை சாதித்து காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு அப்துல் கலாம் செயலில் இறங்கினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சவால்களை எதிர்கொள்வது எப்போதுமே பிடிக்கும்.
எஸ்எல்வி-3 என்கிற இந்தியாவினுடைய முதல் உள்நாட்டிலேயே தயாரான ராக்கெட்டில் வைத்து ரோகினி ஒன்று என்கிற செயற்கைக்கோளை அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்ட பொழுது அதனுடைய திட்ட இயக்குனராக சதீஷ் தவான் அவர்களால் நியமிக்கப்பட்டவர் அப்துல் கலாம்.
அது என்ன SLV?
SLV என்றால் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் (Satellite Launch Vehicle) என்பதாகும். இப்படி ஒன்றை உருவாக்குவதற்கான முதல்படி நிலை. மிகவும் எடை குறைவான உலோகங்களைக்கொண்டு டன் கணக்கான எடையுள்ள ஒரு ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முதல் படி நிலைகளை எடுத்த பெருமை கலாமின் அணியைச் சேரும்.. அதுவரை இந்தியாவில் ராக்கெட்டை உருவாக்குவதற்கான உலோகங்கள் நம் நாட்டிலேயே கிடைக்கின்றனவா என்பதை யாரும் ஆய்வு செய்யவில்லை.. அந்த உலோகங்கள் கூட நம் நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும் எனபதில் அப்துல் கலாம் தெளிவாக இருந்தார்.
நாடெங்கும் அவர் பெரிய தேடுதலை மேற்கொண்டார். அலுமினியம், லித்தியம் இணைந்த ஒரு கலவையும் டைட்டானியம் இணைந்த எரிபொருள் மோட்டாரும் மெக்னிசியம் சேர்க்கப்பட்ட உலோக கலவையைக் கொண்டு ராக்கெட்டின் உதிரிபாகங்களையும் பெரிலியம் போன்ற எடை குறைவான அதேசமயத்தில் வெப்பத்தை அதிகம் தாங்க கூடிய உலோகக் கலவைகளை பேலோட் என்று அழைக்கப்படுகின்ற ராக்கெட்டுகளின் உந்து சக்தியை மேம்படுத்தவும் அப்துல் கலாம் பயன்படுத்துவது என்று முடிவு செய்தார்.
எஸ்எல்வி-3 என்னும் ராக்கெட் 22 மீட்டர்கள் உயரமுடையது. அகலம் ஒரு மீட்டர். அப்படி என்றால் எவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். இதனுடைய மொத்த எடை 17 டன். நான்கு படிநிலை ராக்கெட்டாக அது உருவாக்கப்பட்டது. விண்வெளியில் பூமியிலிருந்து கீழான சுற்றுப் பாதையில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சாட்டிலைட் என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை கொண்டுபோய் இணைப்பதற்காக அது உருவாக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி அன்று முதலில் விண்ணில் ஏவுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. இந்த நாளை குறித்து தன்னுடைய அக்னி சிறகுகள் நூலில் அப்துல் கலாம் மிக அழகாக வர்ணித்திருப்பார்.
இந்த நாளில் அந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தால் இந்தியாவின் சாதனை உச்சத்தை எட்டியிருக்கும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது படிநிலைக்கும் மூன்றாம் படிநிலைக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறு கோளாறின் காரணமாக இந்த முயற்சி வங்காள விரிகுடாவிற்கு நேரடியாக சென்று கடலில் விழுந்துவிட்டது.. இது ஒரு பிரமாண்ட தோல்வி..
கோடிக்கணக்கான பண இழப்பு ஏற்படுத்திய இந்த தோல்வியை மக்களுக்கு விளக்குவதற்கு பத்திரிகையாளர்களை சந்திக்க நீங்கள் செல்ல வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சதீஷ் தவான் தோல்விக்கு பொறுப்பேற்க முன்வருகிறார்..
எங்கே தோற்றோம் என்பதை ஆய்வு செய்வதற்காக அப்துல் கலாம் தன்னுடைய குழுவை வரவழைத்து பேசுகிறார் அவருடைய குழுவில் இடம்பெற்றிருந்த அற்புதமான அறிவியல் அறிஞர்களான வை ஜே ராவ், கோவாவிகார் குரூப் முத்துநாயகம் போன்றவர்கள் மிகுந்த சலிப்புக்கு உள்ளானார்கள்.
அந்த துயரத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்க தான் மேற்கொண்ட முக்கியமான தலைமை பண்பு படி நிலைகளை அக்னி சிறகுகள் நூலில் அப்துல் கலாம் அழகாக விவரித்திருப்பார்.. ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக எப்படி மீண்டும் உயிர்த்தெழுந்தார்கள் என்பது ஆழமான உணர்வு பூர்வமான கதையாகும்.
தங்களுக்கு இரண்டாவது முறை முயற்சி செய்ய ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் தலைமையைக் கேட்டுக் கொண்டார்கள். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் பட்ஜெட்டில் இதற்காக பணம் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் இருந்த கடினமான படி நிலைகளை கடந்து அடுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று நேரடியாக இந்திரா காந்தி அறிவித்தார்.
ஆனால் அப்படி அறிவிக்கப்படும் முன்பே கலாம் தன் தேடலைத் தொடங்கி விட்டார் எங்கே சிக்கல் இருக்கிறது என்பதை கண்டறிய ஒரு குழுவை அமைத்தார். உண்மையில் ராக்கெட்டுகள் என்பவை எப்போது எங்கிருந்து வந்தன என்பதற்கான தேடலில் கலாம் இறங்கினார். அப்துல் கலாம் என்கிற மாமனிதரையே புரட்டி போட்ட அந்த நாட்கள் எப்போதும் நினைவு கூரப்பட வேண்டும்.
V2- வீடூ என்கிற ஜெர்மனி ராக்கெட்டுகள் தான் முதன்மையானவை என்று பேசுகிறார்கள். ஹிட்லர் வென்ஜென்ஸ் வெப்பன் என்று V2 ராக்கெட்டை அழைத்தார்.. வெர்னர் வான் பிரவுன் என்பவரால் அது உருவாக்கப்பட்டது.
ஆனால் அவர் அதை எங்கிருந்து உருவாக்கினார் ராபர்ட் கோடார்டு என்கிற அமெரிக்காவிடம் இருந்து அவர் அதை கட்டி இருந்தார். கோடார்டு எங்கிருந்து உருவாக்கினார். காங்கிரிவ் ராக்கெட்டுகள் என்று இங்கிலாந்தில் அறிமுகமாகி இருந்தன. அதில் இருந்துதான் பிரௌன் நிறைய கற்றுக்கொண்டார்.
இந்த காங்கிரிவு ராக்கெட்டுகள் எங்கிருந்து வந்தன நெப்போலியன் உடனான யுத்தத்தின் போது இங்கிலாந்து அதை பயன்படுத்தி இருந்தது. ஆனால் இந்த ராக்கெட்டுகளை இங்கிலாந்து எங்கிருந்து பெற்றது.
இந்த இடத்தை ஆய்வு செய்த அப்துல் கலாம் அது இந்தியாவிடமிருந்து தான் சென்றது என்பதை கண்டுபிடித்தார். உண்மைதான் ஆங்கிலேய மைசூர் யுத்தம் என்று அழைக்கப்படுகின்ற இந்தத்தில் திப்பு சுல்தான் தன்னுடைய ராணுவத்தில் சீரங்கப்பட்டினம்த்தினுடைய போரின் பொழுது முதல்முறையாக ராக்கெட்டுகளை வீசுகிறார்.
இந்த ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த அடிப்படைகளை அறிய வேண்டுமென்றால் கலாமைப் போல ஒருவர் பயணம் செய்து அதற்கான தரவுகளைத் திரட்ட வேண்டும். 1792 எழுதப்பட்ட திப்பு சுல்தானின் ராக்கெட் உருவாக்குகின்ற தொழில்நுட்பத்தை விளக்குகின்ற அராபிய மொழி நூல் ஒன்று கலாமிற்கு கிடைக்கிறது அதுதான் படூல் முஜாஹிதீன் என்கிற புத்தகம்.
ராக்கெட் தொழில்நுட்பத்தை மட்டுமல்ல எதிர்காலத்தில் ஏவுகணை தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள கலாமை தூண்டிய புத்தகம் திப்புசுல்தான் காலத்தினுடைய அந்த அற்புத புத்தகம் ஆகும்.
1980 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மீண்டும் எஸ்எல்வி-3 ராக்கெட்டின் மூலம் ரோஹினி என்கிற நம்முடைய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 35 கிலோ எடை உடைய செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்துவதற்கான இரண்டாவது முயற்சியில் பிரமாண்ட வெற்றி பெற்றார் அப்துல் கலாம்.
உலகமே நம்மை திரும்பி பார்த்தது ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு தானே தயாரித்த தன்னுடைய சொந்த ராக்கெட்டை தன்னுடைய சொந்த மண்ணிலிருந்து விண்ணை நோக்கி அனுப்ப முடிந்த ஆறாவது நாடு என்கிற பெயரை இந்தியா பெற்றது.
இவர்கள் எல்லாவற்றிற்கும் நம்மைத்தான் நம்பி இருக்கப் போகிறார்கள் என்கிற இங்கிலாந்தின் உடைய காலனித்துவ வெறியர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கிய பெருமை இந்தியாவின் இஸ்ரோவை சேரும்.
இத்தகைய வெற்றியின் மூலம் எதிர்காலத்தில் நாம் அமைத்துக் கொண்ட ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வீ மற்றும் ஜீஎஸ்எல்வீ ஆகிய ராக்கெட் தொழில்நுட்பங்களை உருவாக்குகின்ற வித்தைகளை நமக்கு எளிதில கைவர பெற்றது வரலாறு.
1980 விடுதலை எழுச்சி நாளில் புது டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எஸ்எல்வி-3 குழுவினரை நேரில் அழைத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாராட்டினார். மிஷன் தோல்வி அடைந்த பொழுது பத்திரிகையாளர்களைச் சந்தித்த சதீஷ் தவான், தற்போது வெற்றியடைந்த உள்ளது பத்திரிகையாளர்களை தான் சந்திக்காமல் அப்துல் கலாம் சந்திக்கலாம் என்று அறிவித்துவிட்டார். தலைசிறந்த ஒரு தலைமை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு இது குறித்து அப்துல் கலாம் அக்னி சிறகுகள் நூலில் குறிப்பிட்டிருப்பார்.
1982 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய ஏவுகணை திட்டங்களுக்கு தலைமை ஏற்று அப்துல் கலாம் இஸ்ரோவில் இருந்து விடைபெற்று டிஆர்டிஓ எனப்படும் ராணுவ தளவாட அறிவியல் ஆய்வகத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு ஏவுகணை நாயகர் ஆனது தனிக்கதை.
இஸ்ரோவில் ஒரு விஞ்ஞானியாக இணைவதற்கு நம்மை தயார் செய்து கொள்ளும் நாம் கண்டிப்பாக அறிய வேண்டிய அற்புதக் கதைதான் எஸ்எல்வி-3 என்கிற வெற்றி கதை. இந்த வெற்றிக்கு பிறகு நாம் ஒருபோதும் தோல்வி அடையவில்லை. முதல் முறை எஸ்எல்வி தோல்வி அடைந்த பொழுது கேலிச்சித்திரங்களாகவும் மோசமான வசை சொற்களாகவும் இஸ்ரோவின் மீது வீசப்பட்ட கற்களை கொண்டே ஒரு வெற்றி கோட்டையை எப்படி அவர்கள் கட்டினார்கள் என்பதை தனியே எழுத வேண்டும்.
மங்கள்யான், சந்திரயான் போன்ற எதிர்கால திட்டங்களின் அடிப்படை எஸ்எல்வி வெற்றியினுடைய எதிரொலியாக தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அந்த வெற்றிக் கதைகளை வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
கட்டுரையாளர்:
முந்தைய தொடரை வாசிக்க: இஸ்ரோயணம்: இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 5 | என்ன?.. உலகின் மிகப்பெரிய அறிவியல் விண்வெளியியல் ஆய்வு இந்தியாவில் நடந்ததா?
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.