இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? - 1 | How to become an ISRO Scientist | (இஸ்ரோயணம்..! ISROyanam) - ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era. Natarasan)

இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 1

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 1
(இஸ்ரோயணம் – ISROyanam)

ஆயிஷா இரா.நடராசன் 

இஸ்ரோவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..

இன்று இந்திய அறிவியலின் மிகப்பெரிய பெருமை இஸ்ரோ என்பதில் சந்தேகமில்லை. உலக அறிவியலின் ஒட்டுமொத்த பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய சாதனை படைத்த பல வரலாறு உச்சங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. சமீபத்தில் நூறாவது வெற்றி வான்வெளி ஏவுதலின் மூலம் மேலும் ஒரு புதிய மைல்கல்லை அது எட்டியுள்ளது. இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேண்டும் என்பது தற்போது பள்ளி மாணவர்களின் மிகப்பெரிய கனவு ஆகும். இதை நான் உளமார வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்.

இஸ்ரோ என்கிற அந்த அமைப்பின் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட அடையாளங்கள் தமிழகத்தில் இருந்து வெற்றியாளர்களாக அங்கே இணைந்து அறிவியலில் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகின்ற நம் மொழியின் தோழர்கள் என்பதை நினைக்கும் பொழுது அடுத்த தலைமுறையை இஸ்ரோவுக்கு அனுப்புவதில் நமக்கும் எந்த தயக்கமும் இல்லை. இந்த தொடரை வாசித்து முடிக்கும்பொழுது எங்கள் பள்ளி மாணவராகவோ கல்லூரி மாணவராகவோ இருந்தால் உங்களுக்கு அதற்கான வழி கண்டிப்பாக கிடைக்கும்.

இஸ்ரோவினுடைய வரலாற்றை பேசுகின்ற அதேசமயம் இஸ்ரோவில் எப்படி இணைய வேண்டும் என்கின்ற வழிகாட்டுதலையும் நம் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக இந்த தொடர் தேவைப்படுகிறது. இந்த தொடரை மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் பேராசிரியர்கள் ஓடும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இதை லட்சக்கணக்கானவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்கிற அடிப்படையில் இருந்து இந்த தொடர் தொடங்குகிறது.

நாம் ஏன் இஸ்ரோவை கொண்டாட வேண்டும்..? இஸ்ரோ சாதனைகள் என்பது நம்முடைய தேசத்தின் பெருமை. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமையின் அடையாளம் இஸ்ரோ. இஸ்ரோவை நாம் அங்கீகரித்து கொண்டாடுகின்ற வேளையில் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த கல்வி என்பதை நோக்கி ஊக்கப்படுத்துகின்ற முக்கியமான ஒரு பாதையை நாம் கண்டறிய முடியும்.

இஸ்ரோவின் சாதனைகள் விண்வெளி பயணம் செய்கின்ற நாடாக இந்தியா சர்வதேச அங்கீகாரத்தைப் பெற உதவியுள்ளன. விண்வெளி தொழில்நுட்பத்தின் இந்தியாவின் தன்னிறைவு என்பது இஸ்ரோவின் பிரம்மாண்ட போராட்டத்தின் மூலம் நமக்கு கிடைத்தது. அந்த போராட்ட வரலாறை அறிந்து கொள்வது ஒவ்வொரு இந்திய மாணவனின் கடமை என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? - 1 | How to become an ISRO Scientist | (இஸ்ரோயணம்..! ISROyanam) - ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era. Natarasan)

இஸ்ரோவின் பணிகள் உலக விண்வெளி துறையில் இந்தியாவை முக்கிய பங்காற்ற உதவியுள்ளன. அதேசமயம் பட்டி தொட்டிகளில் எல்லாம் அறிவியலையும் வளர்ச்சியையும் நமக்கு மிகவும் தேவையான பல்வேறு இயற்கை பங்களிப்புகளையும் செய்யக்கூடிய கூட்டாளியாக இஸ்ரோவை நாம் பார்க்க முடியும்.
இஸ்ரோவின் நோக்கம் என்ன. இது குறித்து இஸ்ரோவிலேயே பணிபுரிகின்ற நம்முடைய தமிழ் தோழர்கள் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன்.

இந்திய தேசிய விண்வெளி நிறுவனமாக இஸ்ரோவின் நோக்கம் ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு போன்ற அனைத்து விண்வெளி அடிப்படையிலான பயன்பாடுகளையும் உள்ளடக்கியது. நம்முடைய இந்தியாவுக்கான உளவுத்துறைக்கும் இஸ்ரோ பங்களிப்பை செய்கிறது விண்வெளிக்கு வின் ஊர்திகள் என்னும் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைகோள்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ள பல ஆய்வகங்களை இஸ்ரோ முன்னின்று நடத்தி வருகிறது.

நம்முடைய பூமியினுடைய மேல் வளிமண்டலம் தொடங்கி நம்முடைய கடல்களின்னுடைய ஆழங்கள் வரை நமக்காக சென்று பார்த்து நிலங்களினுடைய அளவீடுகளை நமக்காக பதிவு செய்து இந்தியாவினுடைய பெரும் இயற்கை செல்வங்களை பெறுவதற்கு நமக்கு அது வழி காட்டுகிறது. கல்வி விவசாயம் பாதுகாப்பு துறை திட்டங்கள் என்று அனைத்திற்கும் பயன்பட கூடிய ஒரு துறையாக இஸ்ரோ விளங்குகிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவுகணை வாகன தொழில்நுட்பம் போன்ற உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைவதே இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க நோக்கமாகும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிக வெற்றி விகிதத்துடன் பொருளாதார மற்றும் பட்ஜெட் நடப்புத் திட்டம் என்று வரும்பொழுது இஸ்ரோ முதலிடத்தில் உள்ளது.. இதை எப்படி தீர்மானிக்கிறார்கள்.

விண்வெளி ஏஜென்சிகளை வரிசைப்படுத்த தனியாக எந்த ஒரு அமைப்பும் இல்லை இந்த இடத்தை சற்று விரிவாக அலசுவோம் ஒரு விண்வெளி ஏஜென்சியின் திட்டங்கள் அதன் குறிக்கோளை பொறுத்தது. இஸ்ரோவின் முதன்மை குறிக்கோள் இந்திய தேசிய முன்னேற்றம் எனவே இஸ்ரோ செயற்கைகோள் ஏவுதல் மற்றும் தேசிய நலன் சார்ந்து இயங்குகின்றது அவ்வகையில் பார்த்தால் தேசிய வளர்ச்சி பணிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறது.

இந்தியா இஸ்ரோவுக்கு ஒதுக்குகின்ற நிதி நாசா என்கிற அமைப்பிற்கு அமெரிக்கா ஒதுக்குகின்ற நிதி இவை பெரிதும் வேறுபடுகின்றன எனவே விண்வெளி ஏஜென்சிகளை பொறுத்தவரை இப்படி ஒப்பிடுவது நியாயமில்லை. ஆனால், ஏஜென்சிகளால் அடையப்படுகின்ற பல்வேறு திறன்களைப் பற்றி நாம் விவாதிக்க முடியும் நான் குறிப்பாக சில காரணிகளை கருத்தில் கொண்டுள்ளேன்.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? - 1 | How to become an ISRO Scientist | (இஸ்ரோயணம்..! ISROyanam) - ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era. Natarasan)

உதாரணமாக இஸ்ரோவின் வெற்றி என்பதிலேயே முதன்மையான இடத்தில் இருப்பது எது என்று கேட்டால் நிலாவின் உடைய தெற்கு பகுதியில் போய் நாம் சந்திரயான்- 3 திட்டத்தை இறக்கியதுதான் என்று பெரும்பாலானவர்கள் பதில் சொல்வார்கள்.

உலகெங்கிலும் சுமார் 60 விண்வெளி ஏஜென்சிகள் செயற்கைகோள்களை இயக்குகின்றன இவைகளை ஒப்பிடுவதற்கு பொதுவாக செயற்கை கோள் இயக்கத்திறன், ஒலி ராக்கெட் ஏவுதல் திறன், செயற்கைக்கோள் உருவாக்கும் திறன், பல செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் அனுப்புதல் திறன், கிரயோஜெனிக் அரை கிரயோஜெனிக் இயந்திர வளர்ச்சி வேற்று கிரக ஆய்வுகள் வான் இயற்பியல் ஆய்வு என்று பல விஷயங்கள் பேசப்படுகின்றன..

உலகில் சுமார் 30 நாடுகள் ராக்கெட் அனுப்பு திறனை கொண்டுள்ளன. அவற்றில் முதன்மையானதாக இந்தியா விளங்குகிறது. ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு நாடுகள் கிரையோஜெனிக் இயந்திர ஆற்றலை பெற்றுள்ளன. ஒன்பது நாடுகள் தான் திரும்பத் திரும்ப செயற்கைகோள்களை ஏவுகின்ற திறனை கொண்டுள்ளன.

அமெரிக்காவின் நாசா, பிரான்ஸ் நாட்டின் சிஎஸ், சீனாவின் ஸீ அன் எஸ்ஸே, ஜப்பான் தேசத்தின் ஜாக்சா, ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகிய ஆறு நாடுகள் மட்டுமே சொந்தமாக கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்பது நம் பாடப் புத்தகங்களில் எதிலுமே இடம் பெறாத ஒரு சிறப்பு வரலாற்று செய்தியாகும்.

நீங்கள் சந்திரனுக்கு ஆளை வேண்டுமானாலும் அனுப்புங்கள். ஆனால் என்னை பொறுத்தவரையில் பிரம்மாண்ட சாதனை என்று இஸ்ரோ நிகழ்த்தி காட்டியது என்றால் அது கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை பெற்று இந்த தொழில்நுட்பத்தை வழங்க முடியாது என்று அமெரிக்கா போட்ட தடையை எதிர்த்து வெற்றி அடைந்ததைதான் குறிப்பிடுவேன்.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? - 1 | How to become an ISRO Scientist | (இஸ்ரோயணம்..! ISROyanam) - ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era. Natarasan)

1990களில் ரஷ்யா உடனான உறவின் மூலம் ரஷ்யா கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தின் பொறுப்பாளர் கிளாஸ் கோமாஸ் அமைப்பின் அலெக்ஸி வாஸின் மற்றும் இஸ்ரோ தலைவர் யூ.ஆர்.ராவ் ஆகியோருக்கு இடையே ஒரு தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1992 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்தபடி அந்த தொழில்நுட்பம் நம்மால் விலை கொடுத்து வாங்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்கா அதற்கு தடைகளை விதித்தது அமெரிக்கர்கள் தங்களுக்கு அதே தொழில்நுட்பத்தை வழங்கியதாகவும் அப்போது எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பதை இந்தியா சுட்டி காட்டியது, இருந்தும் இந்தியாவின்மீது இந்த தொழில்நுட்பத்தை பெறுவதற்கு அமெரிக்கா தடைகளை விதித்தது.
எவ்வளவுதான் பில் கிளிண்டனும், அவரது மனைவி ஹிலாரியும் இந்தியாவின் நண்பர்கள் என்று கருதப்பட்டாலும், இந்தியாவிற்கு இந்த தொழில்நுட்பத்தை வழங்குவதை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக ரஷ்யாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு வந்தபொழுது மிகப்பெரிய அதிர்ச்சியை இஸ்ரோ சந்தித்தது.

1997 ஆம் ஆண்டு இந்திய விண்வெளித் திட்டத்தையே அழிப்பதற்கு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்ட நாட்களில் நம்முடைய முன்னணி விஞ்ஞானிகளான சத்தீஷ் தவான், யூ.ஆர்.ராவ், யஷ்பால் ரோத்தம் நரசிம்மா மற்றும் ஆர்.வீ. பெருமாள் ஆகியோர் தங்களுக்குள் இந்த சவாலை பகிர்ந்தனர். அதன்படி இஸ்ரோ வெற்றிகரமாக கிரயோஜெனிக் எந்திரங்களை உருவாக்கி பல ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவியதன் மூலம் இந்தியா உலக அளவிலான நாடுகளில் திரும்பி பார்க்கும் அளவிற்கு நாசாவிற்கு நாம் அல்வா கொடுத்தோம் என்கிற இடம் தான் மிக பிரமாண்ட வெற்றி என்று நான் எத்தனை முறை கேட்டாலும் சொல்வேன்.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? - 1 | How to become an ISRO Scientist | (இஸ்ரோயணம்..! ISROyanam) - ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era. Natarasan)

இஸ்ரோ நோக்கங்களில் சிலவற்றை தன்னுடைய அக்னி சிறகுகள் நூலில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (Dr. A.P.J. Abdul Kalam) நினைவு கூர்ந்திருக்கிறார். இஸ்ரோவின் ஸ்தாபகர்கள் ஆன இந்திய விண்வெளி ஆய்வின் உடைய மாபெரும் தலைவர்கள் விக்ரம் சாராபாய் (Vikram Sarabhai) முதல் சதீஷ் தவான் (Satish Dhawan) வரை மக்களுக்கான அறிவியல் என்கிற மகத்தான கனவோடு இன்றைக்கும் இஸ்ரோ பயணிக்க சமரசமற்ற அடித்தளத்தை அமைத்தார்கள் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இன்று வரையில் அவர்களுடைய பெரும் கனவை நெஞ்சிலும் தோளிலும் சுமந்து மக்களுக்கான சேவை என்கிற ஒன்றை மனதில் நிறுத்தி இரவும் பகலும் தீவிரமாக உழைக்கின்ற ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்போடு இஸ்ரோ தன் பயணத்தை தொடங்குகிறது. தெரியாத பாட புத்தகங்களில் இடம்பெறாத இஸ்ரோவின் போராட்டக் கதையை எழுதுவது என்று நான் முடிவு செய்கிறேன்.

இஸ்ரோவைப் பற்றி எழுதப்பட்டுள்ள 13 அற்புத புத்தகங்களை இந்த தொடரின் மூலம் நான் அறிமுகம் செய்வேன். கூடவே இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவாதிப்போம். இஸ்ரோ ஏன் மேம்பட்ட ஒன்று என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்கிறேன்.

போலி பகட்டு அரசியல், மத அடிப்படைவாதம், இந்திய அரசியல் சட்டத்தையே தவிடுபொடி ஆக்குகின்ற பழமை வாதம் என்பன போன்ற துயரமான அழுத்தங்களையெல்லாம் கடந்து மனித நேயத்துடன் இந்திய மண் மீதான முழுமையான அர்ப்பணிப்புடன் தன் பணியை தொடர்கின்ற விக்ரம் சாராபாயின் தோழர்கள் இஸ்ரோ முழுவதும் நிறைந்திருப்பதால் இந்த நிறுவனத்தினுடைய தேசிய சேவையை மக்கள் அறிவியல் மீதான பங்களிப்பை யாராலும் அசைக்க முடியாது என்பது பலமுறை நிரூபணமாகியுள்ளது..

தகவல் தொடர்பு வானிலை முன்னறிவிப்பு மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நம்முடைய கைபேசி மேப்ஸ் மூலம் வழிகளை கண்டுபிடித்து செல்வதற்கான ஜீபிஎஸ் உட்பட எவ்வளவோ நன்மைகளை இஸ்ரோ நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு வழங்கி வருகிறது.. உலக அளவிலான பெரும் தரவு என்று அழைக்கப்படுகின்றன.

பிக் டேட்டா சூழலில் இந்தியாவின் இடம் என்னவென்று உங்களுக்கு தெரியும். இன்று இணையத்தை பயன்படுத்துகின்ற உலக மக்கள் தொகையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. நம்முடைய இணைய கனவுகளையெல்லாம் கட்சிதமாக தடையின்றி நமக்கு வழங்கிக்கொண்டிருப்பது இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் தான்.

எனவே இஸ்ரோவில் இணைய வேண்டும் அங்கே ஒரு விஞ்ஞானியாக நாம் இயங்க வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொரு தமிழ் குழந்தையையும் நான் முழுமனதோடு வரவேற்கிறோம். இஸ்ரோவில் இணைய வேண்டும் என்கின்ற உத்வேகத்தில் முதல் படிநிலை இஸ்ரோவின் வரலாறையும் பெருமையையும் அறிவது ஆகும்.

உங்களுக்கு தெரியுமா மிகக் கடினப்பட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரோ எனும் சாம்ராஜ்யம் இனி தேவை இல்லை என்று முடிவு செய்த ஒரு அரசாங்கமும் இந்தியாவில் இருந்தது. இப்படியான வரலாற்று பக்கங்களை சவால்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக்கொண்டு இஸ்ரோவுக்குள் விஞ்ஞானியாக நுழையும் பாதைகளையும் கற்றுக் கொள்வோம். அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கிறேன்.

*****************

கட்டுரையாளர்: 

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? - 1 | How to become an ISRO Scientist | (இஸ்ரோயணம்..! ISROyanam) - ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era. Natarasan)

ஆயிஷா இரா.நடராசன் 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 4 Comments

4 Comments

  1. S.kamala

    Started reading.Awaiting to know more about ISRO.Taking your information to our children ..govt school children. Thank u sir

  2. Senthil Kumar K

    Very useful information sir.
    I will share this to my students.
    We expect more about ISRO.
    Thank you.

  3. T PRIYA

    Sir I really amazing…. Definetly i will share to my students

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *