எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..?” கட்டுரை

சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..?

– உதயசங்கர்

முன்னெப்போதையும் விட இப்போது கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஜோசியமும், பரிகாரமும், சடங்குகளும் சம்பிரதாயங்களும் வீடுகள் தோறும் நடக்கின்றன. மூடநம்பிக்கைகள் புதிய ஆடை அலங்காரங்களுடன் பேஷன் ஷோ நட த்திக் கொண்டிருக்கின்றன. இதில் பெண்கள், குழந்தைகள் , இளைஞர்கள், முதியவர்கள் என்று எந்த வேறுபாடுமின்றி கலந்து கொள்வது மட்டுமில்லாமல் இப்படிக் கடைப்பிடிப்பதைப் பெருமையாகவும் நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றுகிறார்கள். அதே பௌர்ணமி இரவில் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரை மணலில் படுத்துறங்குகிறார்கள். ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் பரீட்சை நன்றாக எழுத வேண்டுமென்று சாமியார்கள் வந்து ஆசீர்வாதம் வழங்குகிறார்கள். குழந்தைகள் குருபூஜையென்று ஆசிரியர்களுக்குப் பாதபூஜை செய்கிறார்கள். நாடே மீண்டும் ஒரு நூறாண்டுகள் பின்னால் போய் விட்டதைப் போலத் தெரிகிறது.

அதேநேரம் நவீன அறிவியல் சாதனங்களான தொலைக்காட்சி, அலைபேசி, முகநூல், வாட்சப், யூ டியூப், இன்ஸ்டா, டெலெகிராம் என்று அனைத்து துறைகளிலும் இந்த வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. 

மூடநம்பிக்கை சார்ந்த எந்தச் செய்தியாக இருந்தாலும் காற்றைப் போல இந்தியா முழுவதும் பரவுகிறது. 

திடீரென்று இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து விடுமா? இப்படி மக்கள் மாறுவதற்கான தேவை என்ன? அறிவியல்பூர்வமாக உண்மையில்லையென்று தெரிந்தாலும் ஏன் விடாப்பிடியாக க் கடைப்பிடிக்கிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேட வேண்டும். உலகமயமாக்கலின் புதியவிளைவாக சொந்தப் பண்பாட்டைத் தேடிக்கண்டடைதல், சொந்த வேர்களைக் காப்பாற்றுதல் என்ற கருத்தியல்கள் முன்னுக்கு வரும்போது இந்தியாவின் முதலாளித்துவ சக்திகள் இந்தியப் பண்பாடாக இந்திய இதிகாசப்புராணப் பண்பாடுகளை மக்கள் முன் வைத்தார்கள். 

இதிகாசப்புராணப்பண்பாடு என்பது நிலவுடமைச் சமூகத்தில் ஆளும்வர்க்கம் உருவாக்கியக் கட்டுக்கதைகள். அன்றைய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உழைப்பு சக்தியை வழங்க இப்படியான மேல்கீழ் பிரிவினைகளை உருவாக்கி சமூகத்தில் நிலை நிறுத்தினார்கள். அதுமட்டுமல்ல இதிகாசப்புராணக்கதைகளில் இந்தியாவில் வாழ்ந்த அத்தனை இனக்குழுக்களின் சமயம் சார்ந்த, பண்பாடு சார்ந்த, வாழ்க்கை வட்டச் சடங்குகள் சார்ந்த அத்தனை கதைகளையும் இணைத்துக் கொண்டு ஊதிப்பெருக்கிய பிரதிகள்.

எனவே வேதகாலப்பண்பாடு ஆரியப்பண்பாடாக, மாறி பின்னால் இந்து மதப்பண்பாடாகவும் அதுவே இந்தியப்பண்பாடாகவும் மாறிவிட்ட து. இன்று இந்தியப்பண்பாடு என்று சொல்லப்படுவதில், பௌத்தம் சமணம் சைவம் வைணவம், ஆசீவகம்,  சாங்கியம், நாட்டார் சமயங்கள், என்று அனைத்து சமயங்களின் கூறுகள் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் இந்தியப்பண்பாடு இந்து மதப்பண்பாடாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. 

எனவே மீண்டும்  கடவுள், முனிவர், சாமியார், பேய், பிசாசு, வரம், சாபம், பேய் பிசாசு, ஜோசியம், ஜாதகம், சடங்கு சம்பிரதாயம் என்று எல்லாவிதமான மூடநம்பிக்கைகளும் சமூகத்தில் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன. கடவுள், பக்தி, ஆவி, பேய், பிசாசுகள் மலிந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்கள் நம்முடைய வீடுகளுக்குள் நுழைந்து குழந்தைகள் பெண்கள் உட்பட அனைவரையும் வசியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

அறிவியல் பார்வையை, பகுத்தறிவுச்சிந்தனையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய ஜனநாயக அமைப்புகளும் பலகீனமாய் இருக்கின்றன.

இதன் விளைவாக வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டிய நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்குள்ளும் இந்தப் பேய், பிசாசு, கடவுள், முனிவர், சாமியார், வரம், சாபம், போன்ற அறுதப்பழைய விஷயங்கள்  மெல்ல நுழைந்து   கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்காக எழுதுகிற எழுத்தாளர்களுக்கும் தெளிவான பார்வை இல்லாத தினால் அவர்கள் இவற்றைத் தங்கள் கதைகளில் பயன்படுத்துகின்றனர். இதில் முற்போக்கு எழுத்தாளர்களென்று அறியப்பட்டவர்களும் உண்டு என்பதை வருத்த த்துடன் சொல்ல வேண்டியதிருக்கிறது.

அதேபோல குழந்தைகள் நூல்களை வெளியிடுகிற . பதிப்பகங்களும் அக்கறையின்றி இந்த மாதிரியான மூடநம்பிக்கைகள் ஊடாடும் கதைகளைப் புத்தகங்களாகப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் முற்போக்கான பதிப்பகங்களும் உண்டென்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியதிருக்கிறது. 

இதற்கென்ன காரணமாக இருக்க முடியும்? 

  1. குழந்தைகளுக்கான கதைகள் தானே.
  2. கதைகளில் வரும் பிரச்னைகளை எளிதில் உருவாக்கவும் தீர்த்துவைக்கவும் இவற்றைப் பயன்படுத்தலாம்
  3. காலங்காலமாகச் சொல்லப்பட்டு விஷயங்களென்பதால் குழந்தைகள் மனதில் எளிதில் பதிந்து விடும். 
  4. மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைத்துக் கொள்ளலாம்.
  5. கற்பனை வறட்சி

பதிப்பகங்களைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கான புத்தகங்களின் வடிவம் உள்ளடக்கம், மொழிநடை, சொல்லப்படும் விஷயம், சொல்லப்படும் விதம் என்று எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதற்குக் காரணம் குழந்தைகள் புத்தகங்களை வாசிக்காமலும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த அக்கறையில்லாமலும் இப்போது புதியதொரு சந்தை உருவாகியிருக்கிறது அதைப் பயன்படுத்த வேண்டுமென்ற லாபவெறி நோக்கத்துடன் புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.

பதிப்பகங்கள்,  ஒரு கதையிலோ, கதையில் ஒரு இடத்திலோ, ஒரு வரியிலோ, ஒரு வார்த்தையிலோ இத்தகைய கருத்துகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கதைகளை எந்தத் தயவுதாட்சயமின்றி நிராகரிக்கவேண்டும். பொதுச்சமூகத்தில் வலதுசாரிக்கருத்துகள் வலிமையுடன் வளர்ந்து வரும் சூழலில் இத்தகையச் சிறார் கதைகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எழுத்தாளர்கள் உணரவேண்டும். குழந்தைகளே கூட பேய்க்கதைகளைச் சொன்னாலோ அல்லது சொல்லச் சொன்னாலோ அவர்களிடம்  வேறு கதைகளை எழுதவோ, சொல்லவோ ஆற்றுப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்திருக்கிறது அல்லது அவர்களே  சொல்கிறார்கள் அல்லது எழுதுகிறார்கள் என்பதற்காகச் சலுகைகள் தரவேண்டியதில்லை.

கெடுவாய்ப்பாக. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எல்லாமுன்னணி எழுத்தாளர்களும் ஏதோ ஒரு கதையிலோ, ஒரு புத்தகத்திலோ மேலே  சொல்லியிருக்கிற ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து எழுதியிருக்கிறார்கள் என்பதை மிகுந்த கவலையுடன் பார்க்க வேண்டியதிருக்கிறது. காய்தல் உவத்தலின்றி

இப்படியான படைப்புகளை விமரிசனம் செய்ய விமரிசகர்கள் முன்வரவேண்டும். இல்லையென்றால் மீண்டும் சிறார் இலக்கியம் வலதுசாரிகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வேலைகளைச் செய்வதாக மாறிவிடும்.

சிறார் இலக்கியத்தில் அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுபூர்வமான, ஆர்வமூட்டும், ஈர்ப்பை உருவாக்கும் படைப்புகளை புனைவின் சிகரத்திலேறி படைக்கவேண்டும். அதற்காக கடுமையாக உழைக்கவேண்டும். இல்லையென்றால் எழுத்தாளர்களை வரலாறு  மன்னிக்காது. 

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *