தமிழ் நாட்டின் தற்போதைய உயர் கல்வி சேர்க்கை விகிதம் 49 விழுக்காடு. ஆனால், நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கையோ 2030 ஆம் ஆண்டில் 50 விழுக்காட்டை எட்ட திட்டமிடுகிறது. அத்தகைய எட்டும் வழிமுறைகள் அனைத்தும் 50 விழுக்காடு என்ற நிலையை எட்டுவதற்கு பதிலாக, அதனைக் குறைக்கவே பயன்படும் எனது தனிக் கதை. இது தொடர்பாக பல கட்டுரைகள் மற்றும் ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கிறது. உயர் கல்வியில் தனியார்மயம் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியில் உயர் கல்வியில் தமிழகம் படைத்துள்ள நேரடி மற்றும் மறைமுக சாதனைகள் பல ஆரோக்கியமான விளைவுகளை தமிழ் நாட்டில் உருவாகிக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், தமிழ் நாட்டின் உயர்கல்விக்கு, பல்கலைக்கழகங்களின் வேந்தர் ( ஆளுநர்) வழியாக பெரும் ஆபத்துகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த பற்றிய தீர்க்கமான முடிவுகளை எதிர் வரும் மாநில அரசுகள் எடுக்கவில்லை என்றால் அது தமிழ் நாட்டின் உயர் கல்வி வளர்ச்சிக்கும், மாநிலத்தின் குறைந்த பட்ச மாநில சுயாட்சிக்கும் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் காலமாக அமைந்துவிடும் ஆபத்தை எதிர்கொள்ள இருக்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் காசு பணம் இன்றி மிகச் சிறந்த துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் மாநில அரசின் சார்பு நிலைகள் இருந்தது. மால்கம் ஆதிக்ஷேசையா நே.தூ. சுந்தர வடிவேலு மு.வ என தற்போது வாழ்ந்து வரும் வசந்தி தேவி வரை பலரை இதற்கு உதாரணமாக கூறலாம். பல இலட்சங்களில் தொடங்கிய இந்த விற்பனை, பல கோடிகளாக உச்சம் தொட்டது. இதன் மீது எழுந்த தொடர் விமர்சனங்களை பாஜக அரசு மிகச் சாதுர்யமாக பயன்படுத்த தொடங்கியது. ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் பதவிக் காலம் முடிவடைந்ததும், புதிய துணை வேந்தரை தேடும் பணிக்காக அப்பல்கலைக்கழகத்தின் செனட், சிண்டிகேட் மற்றும் வேந்தர் (ஆளுநர்) ஆகிய முத்தரப்பின் மூன்று பிரதிநிதிகள் இணைந்து மூன்று தகுதியான நபர்களை துணை வேந்தர் பதவிக்கு பரிந்துரை செய்வார்கள். இந்த மூவரில் ஒருவரை மாநில அரசு வேந்தரிடம் பரிந்துரை செய்யும். அவரை ஆளுநர், துணை வேந்தராக நியமனம் செய்வார். இதுவே நடைமுறையாக இருந்து வந்தது.
வேந்தர் என்ற முறையில் ஆளுநர், துணை வேந்தரை நியமிப்பது ஒரு மரபாக மட்டுமே இருந்த நிலையை, பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மாற்றி அமைத்தார். துணை வேந்தர் நியமனத்தை தங்கள் முழுப் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். இந்த சூழ்நிலையில், துணை வேந்தர் பதவிக்கு பணம் என்ற நிலை நீக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு “பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே உயர் கல்வியில் லஞ்ச ஊழல் இருக்காது. இதே போன்று இதர துறைகளிலும் லஞ்ச ஊழல் இருக்காது” என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டனர். “ஒரு சட்டமன்ற உறுப்பினரை அல்ல, சட்ட மன்றங்களையே விலைக்கு வாங்கும் சக்தி படைத்தவர்கள், எப்படி நேர்மையாக இருக்க முடியும்?” என்ற விழிப்போடு இருக்கும் மக்களிடம் இது எடுபடாது. ஆனால், அத்தகைய தெளிவு இல்லாதவர்களிடம் இந்த பிம்பம் வேலை செய்கிறது. இந்த மாயத் தோற்றத்தை நம்பும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும். “எப்படிப் பார்த்தாலும் பணம் இல்லாமல் துணை வேந்தர்களை நியமிப்பது நல்ல அம்சம்தானே” என்று கூட நிம்மதி பெருமூச்சு விடுவோர் இருக்கிறார்கள். ஆனால் அப்படியான நிம்மதிப் பெரு மூச்சையும் மக்கள் விட முடியாது.
மாநில பல்கலைக்கழகங்கள் மாநில சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, அதன் படி உருவானவை. அவை தன்னாட்சி அமைப்புகளாக இயங்க உருவாக்கப்பட்டவை. ஆனால், துணை வேந்தர்கள் தன்னிச்சையாக தனது சுய விருப்பப்படி இயங்கவோ, மைய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்படவோ உருவாக்கப்பட்டது அல்ல.
பழைய மரபை மீறி, ஆளுநர் துணை வேந்தர்களை நியமிக்கக் தொடங்கியதில் தற்போதைய நிலையில் பணம் கையாளவில்லை என்று கூறப்பட்டாலும் அதைவிட ஆபத்தான விசயங்கள் அரங்கேறி வருகிறது. பாஜகாவின் தயவால் நியமனம் பெற்ற துணை வேந்தர்கள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆளுநரால் நியமனம் செய்யப்பட வேண்டிய, சிண்டிகேட் செனட் உறுப்பினர்களை துணை வேந்தர்கள் பாஜகவின் பரிந்துரை படி நியமிக்க தொடங்கி உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா போன்றவர்கள் மாநில அரசுகளுக்கு தெரியாமல் அல்லது மாநில அரசுகளை மீறி மாநில நலன்கள் மாநில அரசின் சட்டதிட்டங்கள் ஆகியவற்றுக்கு புறம்பாக செயல்பட முனைந்துள்ளதை அனைவரும் அறிவோம். அத்தோடு மாநில அரசையோ இணை வேந்தர் பொறுப்பில் உள்ள உயர் கல்வி அமைச்சரையோ மதிக்காத போக்கும் இருக்கிறது என்று பேசப்பட்டது.
அதேபோல் ஆளுநர் வழியாக, துணை வேந்தர்களாக பதவிக்கு வந்தவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர் நியமனங்களில் தங்கள் கைவரிசையை நிச்சயமாக காட்டுவார்கள் என்பது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது எத்தகைய பரிந்துரைகளாக இருக்கும்? பணம் இருக்காது என்று ஒருவேளை உறுதி கூறினால் கூட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கி எப்படி நடந்து வருகிறது என்று அனைவரும் அறிவர்.
அடுத்து, நடுவண் அரசின் ஆளுகையில் இருக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற நிறுவனங்கள் வழியாக நேரடியாக மத்திய அரசின் கொள்கைகள் இலட்சியங்கள் அபிலாஷைகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையை பற்றி மாநில அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், “புதிய கல்விக் கொள்கையே மிகச் சிறந்தது” என்று மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அதன் கீழ் இயங்கிவரும் அனைத்து கல்லூரிகளிலும் பரப்புரையை மேற்கொள்ள, மேற்படி துணை வேந்தர்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. நாட்டு நலப் பணி திட்டம் உள்ளிட்ட அனைத்து சேவை அமைப்புகளையும் அதற்காக தவறாக பயன்படுத்தி வருகிறது.
இப்போது, புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள நிர்வாக சீர்திருத்தங்களை மாநில பல்கலைக்கழகங்கள் நடைமுறைப் படுத்தும் படி பல்கலைக்கழகங்களை அறிவுறுத்தி, கடிதங்களை எழுதி இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை நேரடியாக மாநிலங்களில் நடைமுறைப் படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.
சுருக்கமாக கூறினால், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் எந்தவித சட்டதிட்டங்களுக்கும், மாநில அரசின் கல்வி சார்ந்த எந்தவித தொலைநோக்கு பார்வை, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாறாக நேரடியாக நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம். மாநில அரசு பல்கலைக்கழகங்களை உருவாக்கிக் கொள்ள அரசியல் சாசனத்தில் வழங்கப்பட உரிமைகள் அதன் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் மாநில அரசுகள் செலவழித்த நிதி என எல்லாம் பயனற்று போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாநில நலன்களுக்கு விரோதமாக செல்வதற்கும் ஆளுநர் மாநில பல்கலைக்கழகங்களின் மரபார்ந்த வேந்தராக இருந்து வந்த நிலை இடமளித்து விட்டது.
இந்நிலை மாறவும், மாநில பல்கலைக்கழகங்கள் தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றவும் என்னதான் செய்ய வேண்டும்? இதற்கான பதில் மிகவும் எளிமை. ஆனால், அதற்கான அரசியல் செயல்திறனே கூடுதல் தேவை. தமிழ் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் அதனை ஸ்தாபிதம் செய்த தனியாரே வேந்தராக இருக்க சட்டரீதியான அனுமதி இருக்கிறது. இதைவிட சிறந்த உதாரணம், மத்திய பல்கலைக்கழகங்களே. மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் ஆளுநர் மரபார்ந்த வேந்தராக இருப்பது போல் மத்திய பல்கலைக்கழகங்களில் இல்லை. திருவாரூரில் இருக்கும் தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பவர் பேராசிரியர் பத்மநாபன். பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி வகிப்பவர் துணை குடியரசுத் தலைவர். இப்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒருவர் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே மாநில அரசு ஒரு சட்டத் திருத்தம் வழியாக இணை வேந்தர் கல்வி அமைச்சராகவும், வேந்தர் முதல் அமைச்சர் அல்லது மத்திய அரசை போல மாநில அரசு விரும்பும் தகுதி வாய்ந்த ஓர் தனிநபரை வேந்தர் என்று நியமனம் செய்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இயலும். அடுத்து அமையவிருக்கும் மாநில அரசு, இதனைச் செய்ய தயாராக இருக்கிறதா என்பதை பொறுத்தே தமிழ் நாட்டின் உயர் கல்வி, அதன் ஆளுகையின் கீழ் மாநிலத்திற்கு சேவை செய்யப் போகிறதா அல்லது பாஜக அரசின் கொள்கைகளை நிறைவேற்றி கொள்ளும் அங்கமாக இருக்கப் போகிறதா என்ற வினாவிற்கான விடையாக அமையப் போகிறது.
கட்டுரையாளர்: மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.