வ்வொரு வாரமும் ஒவ்வோர் அனுபவம். பத்தாவது கட்டுரை வாசிப்புக்குப் பிறகு அன்பர்கள் பலர் பகிர்ந்து கொண்ட செய்திகளும், பாடல்களும் இசை வாழ்க்கையின்  வெவ்வேறு வெளியீடுகள். கம்பன் நினைவுக்கு வருகிறான்: ‘குகனொடும் ஐவரானோம் முன்பு, பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம், எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் புகல் அரும் கானம் தந்த புதல்வராற் பொலிந்தான் உந்தை‘.  இத்தனை பேரையும் இன்னும் எத்தனையோ பேரது இசை அனுபவங்களையும் சேர்த்து சுவைத்தபடி வளர்கிறது இந்தத் தொடர். வேறென்ன சொல்ல….   

1988 ஜனவரியில் கேட்டேன் அந்தக் குரலை முதன் முதல்! வங்கி ஊழியர் மாநாட்டுக் கலை நிகழ்ச்சியில்  கரிசல் குயில் என்ற பெயரே ஒரு கூவலை இதயத்தில் கொண்டு இறக்கியது. ‘பச்சை மரகதப் பட்டு உடுத்திப் படுத்துக் கிடக்குது இயற்கை…’ என்ற இசைப் பாடல் இழைத்த இழைப்பு இன்னும் ஒலிக்கிறது உள்ளுக்குள். அதன் சரணத்தில்,…..’கக்கக்க கிக்கிக்கீ குக்குக்கூ என கானம் இசைத்திடும் குயில்கள்என்ற வரியில் இழந்தேன் என் இதயத்தை….. ‘தத்தரிகிட தாம் தரிகிட தீம் தரிகிட சதிர் நடமாடும் மயில்கள்என்ற அடுத்த வரியில் என்னை முற்றாகத் தொலைத்து நின்றேன்…. 

கிருஷ்ணசாமி என்ற அற்புத பாடகரைப் பின்னர் நெருக்கமாக எத்தனையோ முறை கேட்டாலும், சைதாப்பேட்டை  ரயில் நிலையம் அருகில், தொண்ணூறுகளில், கலை இரவு மேடையில் கேட்டது மறக்க முடியாதது. பெயர் விளிக்கப்பட்டபின் மேடையேறி மைக் அருகே நின்றபடியே  பாட்டுப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகின்றன விரல்கள், சாஸ்திரீய சங்கீதக்காரர்கள் போல ஒரு ராகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் சன்னமான ஆலாபனை தொடுத்து, ஒரு மென்மையான கனைப்புக்குப் பிறகு, ‘அமுத மழையில்என்….கவிதை நனைகிறது……’ என தொடங்குகிறார் கிருஷ்ணசாமி. நான் அப்படியே கிறுகிறுத்துப் போய் அடுத்த சொற்கள் என்ன, அந்த முழு பல்லவி என்ன, அது எங்கே போய் என்னென்ன ஜாலங்கள் செய்ய இருக்கிறது என்று அந்தக் குரலையும், பாடலையும் ஒன்றுபோல நெஞ்சால் தழுவி, என் வாழ்க்கையின் பொருளே அந்தத் தருணம்தான் என்பதாக நிற்கிறேன்….

அமுத மழையில் என் கவிதை நனைகிறது என்ற சிலிர்ப்பைத் தொடர்ந்து, ‘நிலவே கொஞ்சம் குடை பிடிஎன்கிறார் குயில்….’சந்தங்கள் பாடிடும் சந்தனக்குயில் என வந்திறங்கி ஓர் கவி படி‘ என்பது அடுத்த அடி. அட்றா….அட்றாஎன்ன கற்பனை. இதோடு விட்டாரா, ‘இதழில் நெளியுமோர் புன்னகை மின்னல் இதயம் கீறுவதைப் படம் பிடி‘….அப்புறம் என்னங்கய்யா செய்யணும் என்றால்,  ‘விண்ணின் மீனெல்லாம் அவள் அழகு பாராமல் நிரந்தரமாய் ஓர் தடை விதி!’   ஆத்தாடிஆத்தாடி!

முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan ...

https://www.youtube.com/watch?v=vMu-mqX6UNo

எழுத்தாளர் ஜே ஷாஜஹான் எழுதிய அந்த அற்புத இசைப்பாடலின் சரணங்கள் இன்னும் இன்னும் இன்பம் சேர்ப்பவை.  ‘இளைய மேகங்கள் வானில் கூடுகிற அதிசயமான நேரமிது, இதயம் நழுவி மறு இதயம் நுழைகிற புதுசுகம் காணும் காலமிதுவாலிப தேசத்தில் வசந்த காற்றுக்கு பேதங்கள் ஏதும் தடை இலையே, தடைகளைத் தகர்த்திடும் காதல் ஏனென்று வேதங்களிலும் விடை இலையேஎன ஒரு வாழ்வியல் விஷயத்தைஅசாத்தியமாக ஓர் இசைப்பாடல் களத்தில் இறக்கி விவாதியுங்கள் என்று சமூகத்தின் மனத்தோடு பேசுகிறதுஆணவக் கொலை சிந்தனை எழும் ஆணிவேரை உலுக்கி எடுக்கும் வலு இந்த எளிய காதல் பாட்டுக்குள் எப்படி கருக்கொண்டு விட்டிருக்கிறது

இளைய மேகங்கள் வாழ்வில் கூடுகிற இடத்தையும், இதயங்கள் மாறிப் புக்கு எய்துவதையும் கிருஷ்ணசாமி இரண்டாம் முறை பாடுகையில் வெளிப்படுத்தும் பாவங்கள் உயிரைக் கொடு என்று உரசிப் போகும். அப்படியான பாட்டுக்காரரான கிருஷ்ணசாமி, இந்தக் கட்டுரைகளின் வாசிப்பு, தமது வாழ்க்கையின் பழைய இசைத்தட்டுகளை உள்ளே சுழல வைத்துவிட்டது என்று கடந்த வாரம் பேசுகையில் குறிப்பிட்டார்

இளவயதில், சிறிய வீட்டுக்குள் முடங்க முடியாத பள்ளிக்கூடப் பருவத்தில், வீட்டுப்பாடங்கள், படிப்பு, சம வயதுக்காரப் பிள்ளைகளோடு ஆட்டம் பாட்டம் எல்லாம் முடித்துக்கொண்டு இரவு தூக்கத்திற்கு அருகே கோயில் வாசலுக்கோ, பள்ளி மைதானத்தின் பக்கமோ, மரத்தடிக்கோ நடந்து போய்க்கொண்டிருக்கையில் வாய் சும்மா இருக்காதாம், தெரிந்த திரைப்பட மெட்டுக்கள் முணுமுணுத்தபடி நடக்கும் நடை சத்தத்தில் வழியில் உறங்கி வழியும் பெருசுகள், நடுவயதுக்கார உறவினர்கள், ‘லேய் பால் கொழுக்கட்டை (இவரது செல்லப்பெயர்), நில்லு, அப்படியே உக்காரு, பாட்ட முழுசாப் பாடுஎன்று ஆரம்பிப்பார்களாம்….அவ்வளவுதான் நள்ளிரவைக் கடந்து ரெண்டு மூணு நாலுன்னு விடிய விடிய கச்சேரி தானாம். சினிமா பாட்டைப் பாடுகையில் இடையில் மறந்து போகும் சொற்களுக்கு மாற்று சொற்கள் சொந்தமாக இவர் இறக்கினால், அண்ணன்காரன் கண்டுபிடித்து மடக்கி விடுவாராம்….’ ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டித் தோட்டம் இட்டுச் செடி வளர்த்து ஜோராகக் குடியிருந்த காலங்கள் அல்லவா அவை….வாழ்க்கை வாழ்வதற்கே!      

The Man Who Knew Too Much (1956) – Journeys in Classic Film

வாழ்க்கை முழுவதுமே எனக்கு பாட்டு தான் தோழர் என்று சிலிர்ப்புறப் பேசிய  வி சண்முகம் அவர்கள், பி எஸ் என் எல் ஊழியராக இருந்து ஒய்வு பெற்றவர், விவசாய இயக்கத் தோழர்இளமையில் பாட்டனார் வீட்டில் வளர்ந்தவர்அரக்கோணம் அருகே மோட்டூர். எழுந்திருக்கும் போது பாட்டு, நின்றால் நடந்தால் கிடந்தால் பாட்டு பாட்டு தான். பழங்குடி இனத்தில் பிறந்த இவருக்கு, கோயிலுக்குள் போய் அமர்ந்து கூடை முடைந்து கொண்டிருக்கும் போதும் பாட்டு தானாம். எதிர்ப்படும் ஆட்கள் கை சுத்தக்காரர்கள் இல்லையென்றால், ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் …’ (என் மகன்) என்று எடுத்துவிட்டு, வம்பு வளர்க்காமல் வீடு திரும்ப மாட்டாராம். இசை ஓர் உயிர்த் தோழன். வெளியூரில் இருக்கும் பள்ளியில் இருந்து தனியே திரும்ப நேரும்போதும் பாட்டு தான். அப்போது இசை ஒரு மெய்க்காப்பாளன். சிரிப்புக்கு, அழுகைக்கு, கோபத்திற்கு, குதூகலத்திற்கு எல்லாமே பாட்டு. காதல் கனிந்து மணவாழ்க்கையின் இன்பம் கலந்ததும் பாட்டால் தான் என்றார்.

இந்த நீண்ட உரையாடலுக்குப் பின், வாட்ஸ் அப்பில் மறுநாள், ‘தூக்கம் கண்களைத் தழுவ வில்லையா‘ என்றார். நானோ, ‘இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்என்று பதில் போட்டேன்… ‘துணை இருந்தும்?’ என்று பளிச்சென்று கேட்கிறார் மனிதர்எத்தனை ரசமான இசை வாழ்க்கை

No photo description available.

ந்த வாரம் மீண்டும் அசத்திவிட்டார் நண்பர் லிங்கராசு. வாட்ஸ் அப்பில், குழலிசையில் மிதந்து வந்த பாடல் என்ன தெரியுமா, கே ஸெரா  ஸெரா …..மேற்கத்திய இசைப்பாடல் என்பதால், தேர்ச்சியாக ரெக்கார்டர் எனும் வகை புல்லாங்குழலில் வாசிக்க, அவருடைய மகன் விசாகன் (பாடகர், இசை அமைப்பாளர்) அருமையான ரிதம் கொடுத்திருந்தார். மிகப் புகழ் பெற்ற இயக்குநர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்,  தமது The Man Who Knew Too Much  படத்தில் பாடல் எதற்கு என நினைத்தவர்டோரிஸ் டே எனும் பாடகியை படத்தில் இணைக்க வேண்டிய சூழலில், பொருத்தமாக ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டு உருவாகிப் பெரும் புகழ் தேடிக்கொடுத்து, ஆஸ்கர் விருதும் வென்ற பாடல் இது.  

கே ஸெரா  ஸெரா என்ற சொற்றொடருக்குவாட் வில் பீ, வில் பீ ( எது நடக்குமோ அது நடக்கும் ) என்பது பொருள். ‘சின்னப் பெண்ணாக இருக்கையில் நான் வளர்ந்தால் அழகாக இருப்பேனோ, செல்வத்தில் மிதப்பேனோ என்று கேட்க, என் அம்மா சொன்னாள்எது நடக்குமோ அதுவே நடக்கும், எதிர்காலத்தை இப்போது நம்மால் எப்படி பார்க்க முடியும்?’ என்று போகிறது பாடல்

பாடலைப் பார்க்கையில்  அப்படியே அசரவைக்கும் காட்சி அமைப்பு!

Doris Day - Whatever Will Be Will Be (Que Sera Sera) (SINGLE TRACK ...

https://www.youtube.com/watch?v=xZbKHDPPrrc

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்று கணியன் பூங்குன்றனார் எழுதினாரே (யாதும் ஊரே யாவரும் கேளிர்), அந்தத் தத்துவப் பார்வைக்கு நெருக்கமாகத் தெரிகிற சொற்கள்வெறுமையின் மொழியாக இன்றி மகிழ்ச்சித் ததும்பலாக இந்தப் பாடலில் பயின்று வந்திருப்பது வியப்புக்குரிய தரிசனம். ஆங்கிலப் பாடலை அப்படியே அருமையாக பி பானுமதி அவர்கள் பாடியிருப்பதையும் இணையத்தில் கேட்க முடிகிறது…..ஆஹாஆஹா. என்ன குரல் அது! மேற்கத்திய பாடலில் ஆங்கில உச்சரிப்பின் சுகம் ஒரு ரகம், ஆனால், அதே துள்ளலோடு அவர் பாடி இருக்கிறார்

இன்னொரு வியப்பு என்னவெனில், 1956ல் வந்த இந்தப் படத்தின் பாடல் மெட்டில், அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்த ஆரவல்லி படத்தில்சின்னப்பெண்ணான போதிலே‘ என்று ஜி ராமநாதன் அவர்கள் இசை அமைப்பில் பாடல் இடம் பெற்றுள்ளது

Doris Day tribute: How her famous tune Que Sera Sera found its way ...

https://www.youtube.com/watch?v=zwi1TYepXEw

ஜிக்கி அவர்களது அற்புதமான குரலில் ஒலிக்கத் தொடங்கும் பாடலின் இறுதியில் எம் ராஜா வந்து கலக்க நிறைவு பெறும் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற குறிப்பும் இணையத்தில் பார்க்கையில் வியப்பு கூடிக்கொண்டே சென்றதுகே ஸெரா  ஸெரா என்ற மெட்டுக்கு வெண்ணிலா நிலா என்ற சொற்களைத் தேர்வு செய்திருக்கிறார் மக்கள் கவிஎன் கண்ணல்லவா கலா….என்று அடுத்த வரியும் சேர்த்து, தாய், மகளை விளிப்பது போல!  ‘உன் எண்ணம் போல் வாழ்விலே, இன்பம் தான் என்றாள்!’ என நம்பிக்கை ஒளியோடு துலங்குகிறது பாடல்.

ப்படி மெட்டுக்கு எழுதுவதில் சொந்த அனுபவமும் உண்டு. காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்ஒன்பதாம் வகுப்பு (கே பிரிவுபடிக்கையில் வகுப்புத் தோழன் கோவிந்தசாமி கதர்ச்சட்டையில்தான் வருவான். பள்ளிக்கூடத்தின் அருகே சைக்கிள் கடை வைத்திருந்த அவனுடைய தந்தை ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர். சிவாஜி கணேசன் ரசிகனாக மாறி இருந்த என்னை அரசியல்படுத்திகாங்கிரஸ் ஊர்வலத்திற்குக் கைப்பிடித்து அழைத்துப் போன கோவிந்தசாமி, காமராசர் எனும் பெருந்தலைவர் பற்றிய உணர்வை மேலும் பற்ற வைத்தான்

பட்டிக்காடா பட்டணமா படத்தின் ‘அடி என்னடி ராக்கம்மா’ பாடலை ஒரு மாலை நேரத்தில் பாடிப் பார்த்து, ‘மின்னலாய் மின்னுபவர் எங்கள் தலைவர் என்று போற்றிச் சொல்லுங்கடி / திண்ணமாய் அவர் வழி செல்லுவோம் என்று உறுதியுடன் நில்லுங்கடிஎன்று தொடங்கி முழு பாடலையும் எழுதி அவனிடம் காட்டியதும், சரி சரி, போனால் போகிறது என்கிற மாதிரி அவன் தலையாட்டியதும் மங்கலாக நினைவில் நிற்கிறது. எங்கே இருக்கிறாய் கோவிந்தசாமி?   

மந்தைவெளியில் மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கையில், சிறிய பெட்டி கிடைத்தால் கூட எடுத்துக் கொண்டு, ‘புதிய வானம் புதிய பூமி‘  என்று இங்கும் அங்கும் ஓடியாடி பாடிக் கொண்டிருந்த வெறித்தன எம் ஜி ஆர்  ரசிகனைக் காலம் சிவாஜியின் பக்கம் தள்ளி இருக்கதியேட்டரில்  அசைவ உணவக விளம்பரத்திற்குப் போடும் ஸ்லைடில் கோழிக்கறியைச் சுவைத்துக் கொண்டிருக்கும் எம்ஜிஆர் புகைப்படம் பார்த்துக் கூட்டம் விசில் ஒலி எழுப்பினால்கூட எரிச்சல் அடையுமளவு உளவியல் மாறி இருந்தது. ஆனாலும், எம் ஜி ஆர் பாடல்களை வீட்டில் பாடுவதை, எங்கேனும் ஒலித்தால் ஓடிச்சென்று கேட்பதை நிறுத்த முடியவில்லை

உள்ளம் உருகுதைய்யா..!' தமிழ் பக்தி ...

டி எம்  சவுந்திரராஜன், ஒரு நேர்காணலில், ‘எப்படி எம் ஜி ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என்று ஆள் ஆளுக்குக் குரலைத் தகவமைத்துக் கொண்டு பாடினீர்கள்?’ என்ற கேள்விக்கு ஒரு குழந்தை போல ரசித்து ரசித்துச் சொல்லும் பதில்களை இப்போதும் இணையத்தில் காண முடியும். அவரவர் வசனம் பேசும் குரல் ஒலி இவருக்குள் அப்படியே பாட்டு பாடுகையில் இறங்கி விடுமாம்பாடல் அதற்கேற்ப அமைந்துவிடுமாம்

அன்பே வா படத்திற்கானபுதிய வானம்பாடல் தொடக்கத்தில் மலைகளில் எதிரொலிக்கும் குரலை அப்போது தொழில் நுட்பம் அவ்வளவு முன்னேறி இராத காலம் என்பதால், மைக்கின் அருகே புதிய வானம் என்று குரல் கொடுத்துவிட்டு, அவரே சற்று பின்னால் போய் நின்று புதிய வானம் என்று குரலைச் சற்றுக் குறைத்து ஒலிப்பாராம். அதே போல் புதிய பூமி….புதிய பூமி!

ஒரு பாடலை இன்னும் இன்னும் சிறப்பாக வழங்குவதற்கான துடிப்பில் விளைந்த பாடல்கள் கணக்கற்றவை. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா என்று எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஒரு சிலரது கூட்டுத் துடிப்பினிலே விளையும் இசைப்பாடல்கள், எண்ணற்ற மக்களின்  துடிப்பாக மாறி, தலைமுறைகள் கடந்து, காலங்கள் கடந்து பரவி நிற்பது எத்தனை சுவாரசியமான உண்மை! செலவில்லாத கால எந்திரம் நம் இசைப்பாடல்கள், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பின்னோக்கிச் சென்று பத்திரமாகத் திரும்பிவிடலாம். பத்திரமாக இருப்பது தானே இந்த நாட்களில் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்படுவது?

(இசைத்தட்டு சுழலும் ….)

 

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

தொடர் 9 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-9-venugopalan-sv/

தொடர் 10 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-10-venugopalan-sv/

3 thoughts on “இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *