Subscribe

Thamizhbooks ad

தொடர் 38: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

 

 

3. ஹங்கேரிய திரைப்படங்கள்
கிழக்கைரோப்பிய சினிமா திரைப்படங்கள்

‘‘உள்நாட்டுப் போர், மரணம் காரணமாய் வேறொரு நாட்டுக்கு இடம் பெயர்வதென்பதும் அதன் ஊடாக ஒரு நாட்டின் வரலாறு மிக ஆழமான பாதிப்புக்குள்ளாவதும் உலகளாவிய உண்மை. இந்த பாதிப்புக்குள்ளாகாத குடும்பம் எதையாவது ஹங்கேரியில் உங்களால் காணமுடியுமா என்பது எனக்கு சந்தேகமானது’’ என்கிறார் ஹங்கேரியின் மிக முக்கிய திரைப்பட மேதைகளில் ஒருவரான இஸ்த்வான் ஸ்ஜாபோ (ISTVAN SZABO). அவர் மேலும் தம்மைப் பற்றி கூறுகிறார், ‘‘நான் வரலாற்று நிகழ்வுகளால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வந்திருக்கிறேன். முதல் உலக மகாயுத்தம், அதைத் தொடர்ந்து 1920-களின் பொரு

இஸ்த்வான் ஸ்ஜாபோ

ளாதார பிரச்சனைகள், பிறகு 1930களின் நாஜிகள் இயக்கம், இரண்டாம் உலகப் போர், பிறகு 1950களின் தலைவன்- தலைமை வழிபாடுகள் என்பன முக்கியமான நிகழ்வுகள், இந்நிகழ்வுகளால் தனிமனித உளவியல் கட்டமைப்பு எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற கதைகள்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்,’’ என்கிறார்.

ஹங்கேரியின் பழம் பெருமையைக் கூறும் ஹாப்ஸ்பர்க் சாம்ராஜ்ஜியத்தின் (Hapsburg Dynasty) தோற்றம் மற்றும் வீழ்ச்சியையும், நாஜிஸத்தின் பயங்கர கொடூரத்தையும் 20-ம் நுற்றாண்டு ஐரோப்பாவில் நடந்தேறிய ஏராளமான வரலாற்று நிகழ்வுகளையும் ஸ்ஜாபோவின் திரைப்படங்கள் மீட்டெடுத்து மறுபரிசீலனைக்குட்படுத்தும் வகையில் அவர் தம் திரைப்படங்களை கட்டமைத்துச் செய்கிறார். ஒரு முறை எளிதான பொருள்பட அவர் கூறினார், ‘‘ஜனங்கள் பாவம், உண்மையிலேயே திரைப்பட இயக்குனர்கள் தம் காரியத்தை ஓர் அதீத மர்மப் புதிராய் செய்கிறார்கள்’’ என்று நினைக்கிறார்கள். திரைப்பட ஆக்கம் பற்றி ஓர் இயக்குனர் அறியத் தேவையானது என்று ஒன்றுமில்லை. கொஞ்சம் புத்தி கூர்மையுள்ள ஹைஸ்கூல் மாணவன்கூட இதை விளங்கிக்கொண்டுவிட முடியக்கூடியதே’’ என்கிறார் ஸ்ஜாபோ. இவரது முக்கியமான படங்கள்’’ ‘25 FIREMANS STREET’ (1973 ‘MEPHISTO MEPHISTO’ (1981, SUNSHINE (2000) மற்றும் ‘TAKING sides’ (2002) ஆகியவற்றை இக்கட்டுரையில் கவனிக்கலாம்.

இஸ்த்வான் ஸ்ஜாபோ (IST/VAN SZABO) ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்டில் 1938ல் பிறந்தவர். இவர் 1956ல் தியேட்டர் மற்றும் திரைப்படக்கலை அகாடெமியில் சேர்ந்தார். தனது பட்டப்படிப்பு நிறைவுக்கென அவர் செய்த ‘THECONCERT KONCERT’ (KONCERT) என்ற குறும்படம் ஹங்கேரிய திரைப்பட விமர்சகர்களின் பரிசசைப் பெற்றது. பட்டப்படிப்பு நிறைவுற்றதும் இளம் திரைப்பட கர்த்தாக்களுக்கு சொர்க்க பூமியாயிருந்த பேலா பலாஜ் ஸ்டுடியோவில் (BELA BALAZS STUDIO) அவர் இணைந்தார். அங்கே ஸ்ஜாபோ மேலும் இரு பரிசு பெற்ற குறும்படங்களை இயக்கினார். தமது 26வது வயதில் 1964ல் அவர் தன் முதல் முழு நீள கதைத் திரைப்படமான ‘THE AGE OF DAYDREAMING’ (AL MODOZASOK) என்ற படத்தை இயக்கினார். காதலும் காதலை இழப்பதுமான இரு உள்ளங்களின் கிடக்கையைக் கொண்ட கதையது. இவர் 1973ல் செய்த ‘25, FIREMAN’S STREET’ முழுக்கவுமே கனவுகளாலும் நனவோடையோட்டத்தாலும் நகர்த்தப்படும் ‘சர்ரியலிஸ’ வகைத் திரைப்படம். ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியை சர்ரியலிஸ பாணியில் சொல்லிப் போகலாம்.

அப்படியாக நிறைய பேர் நிறைய திரைப்படங்களில் செய்து நம்மை சுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையுமே சர்ரியலிஸத்தில் கொண்டுபோயிருப்பது ஒருபுறம் அதிர்ச்சியையும், ஒருபுறம் எதிர்பார்க்காத இன்ப உணர்வையும் ஒருபுறம் கொஞ்சம் குழப்பத்தையும்கூட உண்டுபண்ணும் வகையில் ஸ்ஜாபோ தமது ‘25, FIREMAN’S STREET’ ஐ (TUZOLTO UTCA 25) செய்திருக்கிறார்.
1970களின் ஹங்கேரிய புதிய சினிமாவின் ஒரு குறியீடுபோல பார்க்கப்பட்ட படம் ‘25 Fireman’s Street, படத்தின் தொடக்கத்தில் ஃபயர்மன் தெருவில் 25ம் எண் கொண்ட கட்டிடத்தின் விலாசம் குளோசப் காட்சியாகக் காண்பிக்கப்படுகிறது. அதன் புராதனம் மங்கலாக பளிச்சிடுகிறது.

கதை மாந்தர் ஒவ்வொருவராக ஆணும், பெண்ணும் வெவ்வேறு வயதினர் ‘ஒ, கடுமையான வெப்பம்’ என்று வெளியில் நிலவும் வெட்பமான சூழலை- தட்பவெப்பம் உள்ளிட்ட வெப்பநிலையைச் சொல்லிக்கொண்டு படுக்கிறார்கள். படத்தில் அதிகமாய் பாத்திரங்களின் படுக்கைகளும், குளியலறையும் ஜன்னல்களும் காட்டப்படுகின்றன. ஒரு மிகப் பழைய பெரிய அடுக்குமாடிக் கட்டிடம். இடிக்கப்பட இருக்கும் சமயம் அங்கு குடியிருக்கும் மாந்தர்தம் நீினைவுகள், பகல் மற்றும் இரவுக் கனவுகள், கெட்ட சொப்பனங்கள் வாயிலாக உலக யுத்தம், நாஜிகள் ஆக்கிரமிப்பு, யூதர்கள் படும்துன்பம், காமம், திருமணம் விதவைக் கோலம், முதுமை, கம்யூனிஸ ஆட்சி முதியவனை இளம்பெண் விரும்புவதும், முதிய பெண்மணியை இளைஞன் விரும்புவதும் ஹங்கேரிய 20ம் நூற்றாண்டு வரலாற்றினூடே இஸ்த்வான் ஸ்ஜோபோ லேஸ் பின்னல் போட்டு உருவாக்கியுள்ளார்.

ஒரு கனவு: வீட்டின் முக்கிய புழங்குமிடம். அது இந்த காட்சியில் நீச்சல் குளம்போல தெளிவான நீல நிற நீர் நிறைந்திருக்க… அதில் அழகிய இளம்பெண்ணொருத்தி தன் வீட்டுக்குள்ளிருக்கும் நீச்சல் குளமென்ற சுதந்திரத்தில் முழு நிர்வாணமாய் நீந்துகிறாள். நினைவை ரியலிஸமாயும் கனவை சர்ரிரயலிஸமாயும் (கனவே சர்ரியலிஸம்தான்) ஒரே பாத்திரத்தைக்கொண்டு செய்துகாட்டுகிறார் இஸ்த்வான் ஸ்ஜாபோ. அந்தக் குடும்பத்தின் தாத்தா ஓர் அனுபவமிக்க கடிகார மெக்கானிக். அந்தக் கடிகார கலைஞர் தம் தொழில் மீதும், கடிகாரங்கள் மீதும் மாறாத குறையாத பிரேமை கொண்டவர். தன்பேரன்- பேத்திகளை கடிகாரங்கள் பற்றிக் கற்றுக்கொள்ளச் சொல்லுகிறார். கடிகாரங்கள் பற்றிய நுண்ணறிவை மேலும் வளர்த்துக்கொண்டு கடிகாரத் தொழிலையும் கற்றுத் தொடரச் சொல்லுகிறார். சொல்லியும் தருகிறார் கடிகாரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் காட்டி. ஆனால் பி்ளைகளோ, ‘‘தாத்தா! நீ எந்த யுகத்தில் இருக்கே? நீ வச்சிக் கிட்டிருக்கிறதெல்லாம் ஆரம்பகால சிலிண்டர் வாட்சும் பின்லீவர் வாட்சும் இப்போ சுவிட்சர்லாண்டில் ஜூவல்லீவர் வாட்சுங்க வர ஆரம்பிடுச்சி. இதெல்லாம் காலாவதியானது. வுட்டு கிடாசு, என்று தாத்தாவை புறந்தள்ளுகிறார்கள். அடுத்த சிலகாட்சிகளின் தொடர்ந்து தாத்தா கனவில் சஞ்சரிக்கும் காட்சி. பேத்தி சற்று தேவலாம்போல. சொல்வதைக் காது கொடுத்துகேட்கும். அந்த வயதான கடிகார நிபுணர் தமது கனவில் தமது கடிகாரங்கள் பெரும்பாலும் பெரிய பெரிய சுவர்க்கடிகாரங்களின் சட்டங்கள் விலகிப் போனவையாகவும், மணி, நிமிடம் காட்டும் முட்கள் நிலையகன்றும், கண்ணாடிகள் உடைந்தும் வீழ்ந்து கிடப்பதாய் காண்கிறார். அவரது கனவு மேலும் தீவிரமடைகிறது.

அந்த முதிய கடிகாரக்காரர் உடைபட்டுக் கிடக்கும் தம் கடிகாரங்களின் சில பகுதிகளைக் கடித்துத் தின்கிறார். ஒரு கடிகாரத்தின் பெரிய கண்ணாடிச் சில்லொன்றை கைமுறுக்கைக் கடித்துத் தின்பது மாதிரி கடித்துக் கடித்து சுவைத்துத் தின்கிறார். அவற்றிலுள்ள ஸ்பிரிங்குகளையும் பல் சக்கரங்களையும் கடித்துத் தின்பார். 25, ஃபயர்மன்ஸ் தெரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் பிரஜைகள் தங்களை் சுற்றி நெருக்கமாயுள்ள பிற இடிக்கப்படுகையில் நாள் முழுக்க ஏராளமான தூசு உள்ளே வருவதைத் தவிர்க்க எல்லா கதவுகளையும் சாத்திக் கொண்டிருக்கின்றன. எந்நேரமும் விஷவாயுவுக்கு எதிரான முகமூடிகளை அணிந்திருக்குமாறு ஜனங்களை அரசு கேட்டுக் கொள்கிறது. ஒரு பாத்திரம் பேசுகிறது, ‘‘நம்முடைய வீடு என்பது கடந்த காலத்தி்ன் சின்னதொரு துண்டு. இங்குள்ள மக்கள் நினைவலைகளில் உழன்றே வாழ்கிறார்கள்.’’

ஓயாது கட்டிடங்கள் இடிக்கப்பட்டபடியே அணுவைப் பிளக்க கிளம்பி எழுந்து படரும் புகைப்படலமாய் இடிபட்ட தூசு. அரசுக் கட்டிடங்களிலிருந்து வெளியேறும்படி அறிவிப்பை நீட்டியபடியே இருக்கிறது. ஒரு மையப் புள்ளியில் படத்தின் முக்கிய பாத்திரத்தின் அந்தஸ்தை அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடமே பெற்று விடுகிறது. அத்தோடு அதில் குடிகொண்டுள்ள சகல ஆண், பெண்கள் சிறிய, பெரிய ஜங்கமப் பொருட்களும் தாவரப் பொருட்களும் (அசையா-அசையும் பொருட்கள்) சதா கனவுகள் வழியாகவும் நினைவலைகள் வழியாகவும் மாறிக்கொண்டே வருகையில் அந்தக் கட்டிடம் மட்டும்தான் இடிபடும் தருணம்வரை எவ்வித மாற்றங்களுக்கும் கனவுகளிலும் நினைவுகளிலும் நிலையான சாட்சியாக நிற்பது இஸ்த்வான் ஸ்ஜாபோவின் தனி ஆளுமை. அந்தக் கட்டிடம் இடிக்கப்படும் சமயம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஹங்கேரிய வரலாற்றின் நிகழ்வுகளை சில கதைமாந்தர்களின் கனவுகள், நினைவலைகள் மற்றும் கெட்ட சொப்பனங்கள் வழியாக ஸ்ஜாபோவின் திரைப்படம் காட்டிப் போகிறது.

இதனிடையில் ஒரு மரண நிகழ்வும் கனவில் கலக்கிறது. சவப்பெட்டியை, பெயர்த்தெடுத்த கதவு-ஜன்னல் பல கைகளைக்கொண்டே தயாரித்து சவ அடக்கம் நடக்கிறது. அடுத்து வரும் நனவுக் காட்சியில் விதவையை மறுமணம் செய்யச் சொல்லும் நிகழ்வு. நாஜிகளின் பயங்கர விசாரணையை அடுத்த குடியிருப்பிலுள்ள ஹங்கேரிய பெண்களும் ஆண்களும் சிறுவர்-சிறுமியரும் கிழங்கட்டைகளும் வரிசைப்படுத்தும் திகில்மிக்க காட்சி நினைவலைகளினூடே வருகிறது. அவர்கள் முழு நிர்வாணமாக்கப்பட்டு சூடான- மருந்து கலந்த தண்ணீர் தடாகத்தில் முழுகி வெளிவரும் நாஜிக் கொடுமை. முழு நிர்வாணமாய் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்குட்படும் நினைவலைக் காட்சியில் நெகிழச் செய்யும் தருணம் ஒன்று மருத்துவ பரிசோதனை செய்யும் டாக்டரோ, நர்ஸோ ஒருத்தி, 25 ஃபயர்மன்ஸ் தெரு கட்டிடத்தின் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய நடுத்தரவர்க்க அழகிய யூதப் பெண்மணியிடம் நிர்வாணமாக்கியதற்காக, ‘‘மன்னிக்கவும் அம்மா, வேறு வழியில்லை என்று முணுமுணுப்பது ஃபாசிஸ அபாயத்தின் எதிரொலியாக வருகிறது. குடியிருப்பில் ஒரு பகுதி ரொட்டி தயாரிக்குமிடம் அதை நாஜி ராணுவம் மேய்கிற நினைவலைக் காட்சியும் நெகிழ்ச்சியானது.

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தளவு பொருள்களுடன் குடியிருப்பைவிட்டு வெளியேறுவதுபோல நினைக்கும் காட்சியும் ஒவ்வொருவரின் முகமும் வரிசையாக குளோசப்பில் திரையில் காட்டப்படுவதோடு படம் நிறைவுறுகிறது.
‘அவர்களுடைய மனிதம் மிக பயங்கரமான சோதனைக்கு யுத்த காலத்தில் ஆட்படுகையில் அவர்கள் வாழ்க்கையின் மிக உறுதிமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒருவேளை, இந்த இரவன்று அவர்கள் அனைவரும் இந்தக் குடியிருப்பு வீடுகளையும், அவற்றின் கடந்த கால நினைவுகளையும்விட்டு வெளியேறி இறுதி விடை பெறலாம்’ என்ற வாசகங்களோடு படம் முடிவுறுகிறது. இப்படத்தின் அமானுஷ்யமான ஒளிப்பதிவை கேமரா கலைஞர் லஜோஸ் கோல்டாய் (LAJOS KOLTAI) அமைத்திருக்கிறார்.

சென்னை ஜெர்மன் கலாச்சார மையமான MAX MULLER BHAVANல் 1960களில் கலாச்சார உயரதிகாரியாக இருந்தவர் ஜெர்மன் பெண்மணி குமாரி KRAUK என்பவர் (வயது 52). கலாச்சார மையத்தோடு எங்கள் ஓவியர்கள் குழுவான The Madras Art Club இணைந்து ஆண்டுதோறும் ஒரு மகத்தான பெரிய குழு ஓவியக் கண்காட்சியை அவர்களது கலைக்கூடத்தில் நடத்திவந்ததன் நெருக்கத்தால் ஓர் ஓவியனென்றதால் என்னோடும் குமாரி க்ராக் அவர்கள் நன்றாகப் பேசி பழகுவார். அவரிடம் ஒரு செல்ல ஜெர்மன் நாய் இருந்தது. நன்கு வளர்ந்த ஒரு கன்றுக் குட்டியின் அளவுக்கு அது, முகம் பயங்கரமாய் – சப்பையாக இருக்கும். சாலை விபத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு முன்பகுதி சப்பையான கார்போல. அந்த பயங்கர நாயை குமாசி க்ராக் அவர்கள் இனிய குரலில், ‘‘MEPHIL… MEPHIL’’ (மெஃபில்) என்று அழைப்பார். உடனே அது ஒரு குதி குதித்து கொஞ்சியபடி அவர் மீது பாய்ந்து எம்பி எக்கி நக்கி விளையாடும். மாக்ஸ் முல்லர் பவனின் நூல் நிலையம் சிறப்பானது. அங்கும், ஓவியக் கூடத்திலும் மெஃபில் வளைய வரும் யாரையும் எதுவும் பண்ணாது.

ஓர் ஆச்சரியம் – மகா ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெரிய நாய் மெஃபில் சிரிக்கும். மனிதர்கள்போல் அல்ல. ஒரு மாதிரி வாயைத் திறந்து கோணித்து கண்களை உருட்டி வினோத ஒலியை எழுப்பி வாயசைக்கும் அதை குமாரி க்ராக் மட்டுமல்ல. அந்நாளின் மாக்ஸ் முல்லர் பவனுக்கு டைரக்டராக இருந்த திரு. தேசிகனும் சேர்ந்தே கூறுவார்கள்- மெஃபில் சிரிக்கிறதென்று! ஓவியர், ஆங்கில ஜெர்மன் நாடக நடிகர், இயக்குனர் மற்றும் மொழிபெயர்ப்பாளருமான எனது இனிய நண்பர்ஏ.வி. தனுஷ்கோடியும் அந்த நாய் சிரிப்பதாகவே கூறுவார் மெஃபில் என்றால் என்ன பொருளென்று மிஸ்க் ராக்கிடம் கேட்டதற்கு, ‘‘மெஃபிஸ்டோபில் என்பது டெவில், பிசாசு’’ என்று ெசால்லி சிரித்தார். அவர் சிரிக்கும்போது கிட்டதட்ட மெஃபில் சிரிப்பதுபோலவே எனக்குப்பட்டது.

‘‘தாமஸ் மான் தெரியுந்தானே?’’, என்று கேட்டார் தனுஷ்கோடி. தெரியுமென்றேேன். THOMAS MANN தலைசிறந்த ஜெர்மன் எழுத்தாளர். அவரது புகழ் பெற்ற நாவல் Dr.FAUSTUS.

மெஃபிஸ்டோஃபெல்ஸ் (MEPHITOPHELES) என்பது மத்திய கால ஐரோப்பிய புராணத்தில் வருகின்ற ஒரு பிசாசு மெஃபிஸ்டோ (MEPHISTO) என்றும் அழைக்கப்படுகிறது. ஜோஹன் ஜியார்க் ஃபாஸ்ட் (JOHANN GEORG FAUST 1540- 1480 என்பது சுருங்க DR> FAUSTUS என அழைக்கப்படுவது. கிறிஸ்டோஃபர் மார்லோவ் (CHRISTOPHER-MARLOWE) எனும் ஆங்கில நாடக ஆசிரியர் டாக்டர் ஃபாஸ்டஸ் என்ற நூலை 1604ல் எழுதி பதிப்பித்தார்.

டாக்டர் ஃபாஸ்டஸ் ஜெர்மானிய பில்லிசூனியக்காரரும் (NECROMANGER) ஜோதிடருமாவார். இவர் மேலும் தனக்கு அறிவும் சக்தியும் வேண்டி அதற்கு ஈடாக தனது ஆத்மாவையே பிசாசு மெஃபிஸ்டோவுக்கு விற்று விடுகிறார். இதைத்தான் 1947ல் தாமஸ் மான் சிறந்த ஜெர்மன் நாவலாக எழுதினார். இது மீண்டும் மற்றொரு ஜெர்மன் நாவலாசிரியர் க்ளாஸ் மான் (KLAUS MANN) என்பவர் எழுதிய புகழ்பெற்ற நாவல் மெஃபிஸ்டோ என்பது (MEPHISTO). இந்நாவலைக்கொண்டு 1981ல் இஸ்த்வான் திரைக்கதை வடிவமைத்து இயக்கிய மாபெரும் மகத்தான ஹங்கேரிய திரைப்படம் ‘மெஃபிஸ்டோ’ (MEPHISTO) அதிகார வெறிக்கும் அரங்க நாடக நடிப்புக்குமிடையேயான உறவுகள்- மூளைச் சலவையாக்கும் அரசியல் தந்திரம், புகழுக்கான வெறி, ‘இமேஜ்’- இஸம், முடிவில் இவற்றுக்காக தன் மதிப்பற்ற கலையாத்மாவையே பிசாசுக்கு (நாஜிஸம்)விற்கும் கலைஞனின் கதையைக் கொண்டது மெஃபிஸ்டோ. இந்தத் திரைப்படம் ஹங்கேரிய-ஜெர்மனி கூட்டுத் தயாரிப்பாகும்.

1930களின் ஜெர்மனி. ஹாம்பர்க் நகர் – பெர்லின் நகரங்களின் அரங்குமேடை நாடகங்கள் மிகவும் விரும்பி வேண்டப்பட்டன. ஜெர்மன் அரங்க நடிகர்களில் மிகுந்த திறமையும் நடிப்பில் ஆசையும் மிக்க நடிகன் ஹென்ரிக் ஹாஃப்ஜென் (HENDRIK HOEFGEN). நவீன ஐரோப்பிய நடனத்திலும் திறமை மிக்கவன். ஹாம்பர்க் நகர தியேட்டர் நிறுவனம் அவனை ஒப்பந்தம் செய்துகொள்ளுகிறது. மேடையில் சுழன்று பாயும் ஒளியில் அவன் ஆடிக்காட்டும் அறிமுக நடனம் எல்லோரது கைதட்டலையும் அள்ளுகிறது. புகழ்பெற்ற ஜெர்மன் அரங்க நடிகை பார்பாரா ப்ராக்னர் (BARBARA BRUEKNER) என்பவள் அறிமுகமாகி அவனது நடனத்தை மிகவும் பாராட்டுவதோடு நெருக்கமாகிறாள். ஹாஃப்ஜெனின் நடன ஆசிரியை ஜூலியட் மார்டென்ஸ் (JULIETTE MARTENS) ஓர் அழகிய கருப்பு ஜெர்மன் நீக்ரோ பெண். அவளது தாய் ஜெர்மன், தந்தை ஆஃப்ரிகர். ஜூலியட்டுக்குத் தாய்மொழி ஜெர்மன். அவளும் ஹாஃப்ஜெனும் காதலர்கள். நடனப் பயிற்ி முடிந்ததும் உடலுறவுதான் அவர்களுக்கு. இந்த சமயம் நடிகை பார்பாரா ஹாஃப்ஜெனை இராச் சாப்பாட்டுக்கு அழைக்கிறாள். அவர்களிடையே உரையாடலில் அன்றைய அரசசியல் முக்கிய விஷயமாகிறது. ‘‘எனக்கு மேடையும் அரங்கும்தான் முக்கியமே ஒழிய, அரசியலில் ஆர்வமில்லை என்கிறான் ஹென்ரிக் ஹாஃப்ஜென்.

ஆனால் பார்பாரா தொடர்ந்து சொல்லுகிறாள், ‘‘நாஜிகள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள். அந்த ஆஸ்திரியன் சான்ஸ்லராகிவிட்டான்’’ என்கிறாள். ஹிட்லரின் வெற்றி குறித்து அவள் சொல்லவும், ‘‘கடைசியில் அந்த ஆஸ்திரிய கோமாளியைத் தலைவனாக்கியிருக்கிறார்களா?’’ என்று எகத்தாளமாக கேட்கிறான் அவன். படம் அரசியலும் உளவியலும் அரங்க நாடகக் காட்சிகளும் பின்னிப் பின்னி செய்நேர்த்தியோடு நெய்யப்பட்டுள்ளது. இருவரும் யூதர்களைப் பற்றியும் நாஜிகள் பற்றியும் சூடாக உரையாடுவதைத் தவிர்க்க இயலாதவர்களாகின்றனர்.

அவர்களிடையே காதல் உருவாகி இருவரும் திருமணமும் செய்து கொள்ளுகிறார்கள். இதை அவன் ஜூலியட்டுக்குத் தெரிவிக்கையில் சஞ்சலமடைந்தாலும் எதிர்ப்பதில்லை.
இந்த சமயம் ஹாஃப்ஜென் மெஃபிஸ்டோ நாடகத்தில் அந்தப் பாத்திரத்தில் நடிக்கிறான். அவன் பெருத்த வரவேற்பையும் பாராட்டையும் பெறுகிறான். அவனது புகழ் பெர்லினை எட்டுகிறது. ஆட்டோ உல்ரிச் (OTTO ULRICHS) ஒரு கம்யூனிஸ்ட் நாடக நடிகன்.

அவனோடு ஹாம்பர்க் கம்யூனிஸ்ட் கட்சியில் ஹாஃப்ஜெனும் இணைந்து செயல்பட்டவனே. கம்யூனிஸ்டுகளைக்கொண்ட சிறந்த ‘அண்டர்கிரவுண்ட்’ (UNDERGROUND) காபரே நடனக் காட்சிகள் கொண்ட ‘புயல் பறவை’ (THE STORM BIRD) என்ற காபரே காட்சியை நடத்திவந்தவன். ஹாஃப்ஜெனின் பழைய மடை சகா. அது நாஜிகளால் தடை செய்யப்பட்டதால் ரகசியமாய் மறைவிடங்களில் நடத்திக் காட்டப்பட்டது. அவன் ஹாஃப்ஜெனை நாஜி- எதிர்ப்பு நாடகங்களை நடத்துமாறு கேட்டுக்கொள்ளுகிறான். ஒரு திரைப்பட சந்தர்ப்பமும் கிடைத்து பெர்லினில் படப்பிடிப்பிலிருக்கையில் நாஜிகளின் தலைமை அதிகாரம் உள்ள ‘ரீச் ஸ்டாக்’ கட்டிடம்-பார்லிமெண்ட் போன்றது (REICHSTAG) தீப்பற்றி நாசமாகிறது.

கம்யூனிஸ்டுகளின் சதிவேேலையென நாஜிகள் வட்டாரத்தில் கருதப்படுகிறது. ஹென்ரிக்கை சந்திக்கும் ஆட்டோ உல்ரிச், ஹென்ரியும் அவன் மனைவி பார்பாராவும் நாஜிகளின் சந்தேகப்பட்டியலிலிருப்பதாயும் உடனே மெர்லினைவிட்டு வெளியேறச் சொல்லுகிறான்.

சிறிது நாட்களில் பார்பாரா தெரிவிக்கிறாள், தான் பெர்லினில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிப்பதாயும் படப்பிடிப்பின்போது புகழ்பெற்ற ஜெர்மன் நடிகை லோட் லின்டென்தாலை (LOTTE LINDENTHAL) சந்தித்ததாயும் அவள் ஜெர்மனியின் அதி உயர்ந்த நாஜி அதிகாரியின் ‘லைலா’ என்றும் அவள் தனக்கு உதவுவதாக இருக்கிறாளென்றும் சொல்லுகிறாள். அதே சமயம் ஹென்ரிக்கின் மற்றொரு சினேகிதி ஆஞ்சலிகா சைபெர்ட் என்பவள் (ANGELIKA SEIBERT) அவனுக்கு எழுதும் கடிதத்தில் நாஜி தியேட்டர் பாதுகாப்பான இடம். பயமே தேவையில்லை. ஹென்றிக் நாஜி நாடக அரங்குக்கு உடனடியாக தேவைப்படும் கலைஞன் என்றும் புறப்பட்டு வரச்சொல்லுகிறாள். உடனே புறப்படுகிறான். பெர்லினுக்கு அவன் மேற்கொள்ளும் ரயில் பயணம் சுருக்கமாயிருப்பினும் அபாரம்.

பெர்லின் பிரதம மந்திரி என்பவர் நாஜி ராணுவத்தின் ஜெனரல் ஒருவர். ஏராளமான அதிகாரம் உடையவர். அரங்கம், நாடகங்கள், நடிப்பு, நடிகர் என்பனவற்றில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பதோடு நாடகக் கலையின் பல்வேறு துறைகளிலும் மிக நன்கு அபிப்பிராயம் சொல்லவல்ல ஞானமும் உடையவர்.

ஒரு மாமூல் அறிமுகத்தோடு ஹென்றிக் ஹாஃப்ஜென்மேல் திருப்திகரமான அபிப்பிராயம் கொள்கிறார் ஜெர்மன் பிரதமர். அடுத்து பெர்லின் தியேட்டரில் மெஃபிஸ்டோ நாடகம் ஏற்பாடாகிறது. அதில் ஆட்டோ உல்ரிச்சும் முக்கிய பாத்திரமேற்று நடிக்கிறான். எவ்வித முன்னறிவிப்புமின்றி பிரதமர் ஜெனரல் லோட் லிண்டெதாலுடன் மெஃபிஸ்டோ நாடகம் பார்க்க வருகிறார். அவர்களிருவரும் பால்கனி வகுப்பில் அமர்கிறார்கள். நாடகத்தில் மெஃபிஸ்டோவின் பாகம் ஒரு பகுதி முடிந்து ஹென்ரிக் ஒப்பனையனையிலிருக்கையில் ஜெனரலின் செயலர் வந்து ஹாஃப் ஸ்ஜெனை பிரதமர் அழைப்பதாகக் கூறி ஒப்பனையோடு அழைத்துப் போகிறார். ஜெனரலுக்கும் ஹாப்ஜெனுக்குமிடையே நடைபெறும் உரையாடல் சிறப்பானது அவனது மெஃபிஸ்டோ நடிப்பை பாராட்டுகையில், ‘‘உன்னுடைய புனிதமான தீமைத்தனம்’’ எனக் குறிப்பிடுவார். ஏனெனில், மேடையில் மெஃபிஸ்டோவாகிய பிசாசு வசனம் பேசுகையில், ‘‘நான் தீயவன், பிசாசுத்தனமானவன். ஆனாலும் நான் அன்பானவன்’’, என்று சொல்லும்.

சிறிது நேரத்துக்கு மேடையில் திரையை இறக்கிவிட்டு நாடகத்தை நிறுத்தவேண்டி வருகிறது. காரணம் பால்கனியில் வந்து அமர்ந்துள்ள நாட்டின் மிக மிக மிக முக்கிய மனிதர் – ஜெனரல் பிரதமர் மற்றும் பிரபல நடிகை. மெஃபிஸ்டோவை ஒப்பனையோடு தன்னிடம் வரச் செய்து பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார். அவரை அழைத்து வந்து அருகில் அமர்ந்தபடி ஹாஃப்ஜெனை நேராக அறிமுகம் செய்தவள் ஜெர்மனியின் மற்றொரு பெரிய நடிகையான லோட் லிண்டென்தால், எனவே முதலில் நாடகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு காரணம் புரியாத ரசிக மகாஜனம் விவரமறிந்தபின் மொத்தமாய் எழுந்து நின்று பால்கனியையே பார்க்கும் காட்சி எனக்கு சென்னையில் 60களில் நேர்ந்த அனுபவத்தை நினைவூட்டுகிறது.

65-66களில் என்று நினைவு, மவுண்ட் ரோடு ஆனந்த் திரையரங்கில் ‘THE VISIT’ என்ற அரிய திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆந்தனிக்வின் மற்றும் இன்கிரிட் பெர்க்மன் நடித்தது. சர்வதேச திரைப்பட விழாவில் வேறொரு மொழியில் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டு பிறகு ஆங்கிலமாக்கப்பட்டு பொதுத் திரையிடலுக்கு வந்திருந்தது. திடீரென இடைவேளையின்போது கீழே அமர்ந்துள்ள ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று பால்கனியைப் பார்த்தனர். எல்லோரும் எழுந்து நின்று பால்கனியையே பார்த்து கசமுசவென பேசினர். நானும் என்னவென்று கேட்டறிந்து எழுந்து நின்று பால்கனியைப் பார்த்தேன். அந்த மனிதர் அமைதியாக இடைவேளைவரை வளர்ந்த படத்தைப் பற்றி வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் அன்றைக்கு முதல்வராகியிருக்காத அறிஞர் அண்ணா.

மீண்டும் பிரதமரை சந்திக்க மெஸ்பிஸ்டோவை லோட் அழைக்கிறாள். இந்த முறை மெஃபிஸ்டோவுக்கு அவர் முக்கியத்துவம் தருவதை வெளிப்படுத்துகிறார். அவரது உரையில், ‘‘ஜெர்மன் கலாச்சாரம் குன்றியிருக்கிறது. அதை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். கலைஞர்கள் ஜெர்மன் கலை- இலக்கியத்தில் நுழைந்துள்ள நச்சுத்தன்மைகொண்ட அயல்நாட்டு கலை, கலாச்சார அந்நிய சங்கதிகளை நிறுத்தியாக வேண்டும். ஒவ்வொரு ஜெர்மனியனுக்குள்ளும் ஒரு துளி மெஃபிஸ்டோவாவது கலந்திருக்க வேண்டும். நமக்கு ஃபாஸ்டஸ்ஸின் ஆத்மாவைத் தவிர வேறெதுவும் கிடையாது என்றிருந்தால், நமது எதிரிகள் அதை விரும்பமாட்டார்கள். சொல், அதேசமயம் மெஃபிஸ்டோவும்கூட ஒரு ஜெர்மன் தேசிய தலைவன் என்கிறார்.
‘‘அதி உயர்ந்த கலாச்சசாரம் தேவை’’ என்கிறான் ஹாஃப் கென்….
‘‘கலாச்சசாரம் என்ற சொல்லைக் கேட்கும்போதே நான் என் ரிவால்வரைத் தொடுகிறேன். கலாச்சாரம் என்ற வார்த்தை பூர்ஷ்வாதனமான முட்டாள்தனம்.

இப்படியென போல்ஷெவிக்குகள் உபதேசித்து பள்ளிக்கூட வாத்தியார்களை கவர்ந்து வெற்றி கொள்ள செய்த காரியம்’’ என்கிறார்.
‘‘போல்ஷெவிக்குகளால் கலாச்சார வர்த்தமானங்கள் தீண்டப்படாதவையுமல்ல. ஒத்துக்கொள்ளுகிறேன். ஏனெனில் சிறிது காலம் நானும் இடதுசாரிகளோடு இருந்தவனே’’ என்கிறான் ஹென்ரிக் ஹாஃப்ஜென்,
பிறகு அவர் அவனுடன் சேர்ந்து மதுவருந்துகிறார். சமயம் எளிதாயும் இனிமையுமாய்ப் போக, ஹென்றிக் விஷயத்துக்கு வருகிறான். ‘‘நான் செய்த தவறையே செய்திருக்கும் வேறு நல்ல நாடகக் கலைஞர்களும் இருக்கிறார்கள். எனக்கு இப்போது வாய்த்த சந்தர்ப்பம் அவர்களுக்கும் வாய்க்க வேண்டியது. நான் ஒருவனுக்காக வேண்டுகிறேன். எனக்கு நெருங்கிய நண்பன். அவன் திருந்திவிட்டான். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.’’

‘‘யார் அவன்?’’ என்கிறார் ஜெனரல்.
‘‘ஆட்டோ உல்ரிக். புயல் பறவை என்ற பெயரில் ஒரு கம்யூனிஸ்ட் காபரே நடன நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருந்தவன்.’’ என்று ஹென்ரிக் சொன்னதும் முகம் கோண, ‘‘அவன் மிகவும் மோமானவன்’’ என்கிறார் பிரதமர். அவனுக்கு மன்னிப்பளித்து நாடகக் குழுவில் சேர்த்து வைக்க வேண்டுகிறான். அவர் அரைமனதோடு இைசகிறார்.

ஹான்ஸ் மிக்லாஸ் (HANS MIKALA) என்பவன் ஹாஃப்ஜெனோடு சக நடிகனாய் ஹாம்பர்க் தியேட்டரிலிருந்தவன். இன்றைக்கு அவன் கடுமையான நாஜி எதிர்ப்பாளனும் கம்யூனிஸ்டுமாவான். அவன் நாஜிகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதோடு ஓர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து அதற்காக கையெழுத்து வேட்டையிலும் இறங்கியிருந்தான். நாடக கலைஞர்களின் கையெழுத்துக்களைப் பெறும் பணியில் ஈடுபட்ட அவன் ஹாஃஜெனை சந்தித்து கலைஞர்களின் உரிமைகளை அவமதிப்பதும், அலட்சியம் காட்டுவதுமாயிருக்கும் நாஜி அரசியல் தலைமையை எதிர்த்து கையெழுத்துப் போராட்டம் நடத்த இருப்பதாயும் அவனையும் கையெழுத்திடக் கேட்கிறான். மிக்லாஸ் கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு நாஜி கட்சிக்குப் போனவன், இப்போது அதைவிட்டு நீங்க இருக்கிறான். ஆனால், ஹாஃப்ஜென் அவன் நீட்டிய எதிர்ப்பு அறிக்கையைப் படிக்கவும், கையெழுத்திடவும் மறுத்துவிடுகிறான். நண்பனை எச்சரித்தும் அனுப்புகிறான். அத்தோடு ஜெனரல் பிரதமருக்கு தொலைபேசி மூலம் மிக்லாஸ் பற்றி தெரிவிக்கிறான். அவர் இவனை புகழ்ந்து பாராட்டுகிறார்.

மறுநாள் தன்னை அவசரமாய் பிரதமர் அழைக்கவும் ஹாஃப்ஜென் ரீச் டாகையடையும்போது மிக்லாஸை ஜெர்மன் ஜெஸ்டபோ போலீஸ் பிடித்துத் தள்ளிச்சென்று காரில் ஏற்றி ஒரு காட்டுக்குள் விட்டு சுட்டுத் தள்ளுகிறது. மிக்லாஸ் ஒரு கார் விபத்தில் இறந்துபோனதாக செய்தி வெளிவருகிறது. அந்தச் செய்தி பொய்யானது என்று கலைஞன் ஒருவன் வாதிட, அந்த் செய்தி உண்மையாயிருக்கும் என்று ஹாஃப்ஜென் வாதிடுவதோடு நாஜிகள் பக்கமாய் பேசுகிறான். முழுக்கவே ஒரு ஃபாஸ்டஸ்ஸாக மூளைச்சலவையாக்கப்பட்ட அவன் ஜெனரல் பிரதமர் என்ற மெஃபிஸ்டோவுக்கு தன் ஆத்மாவை (கலையாளுமையை) வெறும் புகழுக்கும் பதவிக்கும் விற்றுவிட்டவனாகிறான்.

அவன் தன் செயல்பாடு குறித்து ஒரு கட்டுரை எழுதி பிரதமருடனான அடுத்த சந்திப்பின்போது அவரிடம் தருகிறான். அது அவனது ஹாம்பர்க் வாழ்க்கை பற்றியது. அவர் அதைப் படித்துவிட்டு அதில் புகழ்பெற்ற ரஷ்ய போல்ஷெவிக் தியேட்டர் பற்றி எதையும் விவரமாய் எழுதவேண்டாமென்றும், அதில் பங்கேற்று நடித்த ஒரு சில நாடகப்பாத்திரங்களை மட்டும் குறிப்பிடும்படி சொல்லுகிறார். பிறகு அவனுடைய மனைவி பார்பாரா குறித்து கேட்டுவிட்டு, அவள் ஆம்ஸ்டர்டாமிலிருப்பதாயும், ஒரு செய்திப் பத்திரிகையை நடத்திவருவதாயும் அதில் நாஜிகளுக்கு எதிராக எழுதிவருவதாயும் சொல்லுகிறார். தனக்கும் அவளுக்கும் நெடுநாளாய் தொடர்பு விட்டுப்போயிருப்பதாய் ஹாஃப்ஜென் கூறுகிறான்.

‘‘விவாகரத்து வாங்கிவிடு, நான் அதற்கு உதவி செய்கிறேன்’’ என்கிறார் ஜெனரல். பிறகு, ஹாம்பர்க் வாழ்க்கை பற்றிய கட்டுரையில் அவன் குறிப்பிட்டுள்ள ஜூலியட் பற்றியும் அவளுக்கும் அவனுக்குமுள்ள உறவு குறித்தும் கேட்கிறார். அவன் உண்மையைச் சொல்லவும் ‘‘அந்தக் கருப்பு இன ஜூலியட்டோடான உன் உறவு நம் இன சுத்தத்தையும் அசலான ஆரிய இனத்தையும் நிராகரிக்கும் செயலாகும். உன் வீட்டில் அவளுடைய படத்தைக்கூட வைத்திருக்கக்கூடாது’’ என்று எச்சசரிக்கையோடு கட்டளையிடுகிறார் பிரதமர். ஜூலியட்டை எவ்வித ஆபத்துமின்றி ஜெர்மனியைவிட்டு வெளிநாட்டுக்குப் போய்விட அனுமதிக்குமாறு பிரதமரை கேட்டுக்கொள்ளுகிறான் ஹாஃப்ஜென். அவர் அதற்கு ஒப்புதலளிக்கிறார்.

நெருக்கடியான நேரம் நெருங்குகிறது. ரகசியமாக இருட்டில் மனம் பதற ஜூலியட்டை அவள் வீட்டில் சந்தித்த அவன் அவள் நன்மைக்காக ஐந்து நிமிடத்தில் ஜெர்மனியைவிட்டு ஃபிரான்சுக்கு ஓடிவிடும்படி கேட்டுக்கொள்ளுகிறான். ஜெனரலின் ஏற்பாட்டின்படி ஜூலியட்டை காரில் ஏற்றி பாரீசுக்கு தப்பியோட அனுப்பிவைக்கின்றனர்.

ஜெனரல் பிரதமர் ஹென்ரிக் ஹாஃப்ஜெனை ஜெர்மன் நாட்டின் தேசிய தியேட்டருக்கு மானேஜராக்குகிறார். இந்த அதி உயர்ந்த பதவியமர்த்தலால் ஹென்ரிக் தலைகால் தெரியாதவனாகிறான். இதன்மூலம் நாஜிகளின் மோசமான திட்டங்களை பூர்த்தி செய்ய அவன் கடமைப்பட்டவனாகிறான். அவனை அதற்கு பயன்படுத்திக்கொள்ளுவதுதான் நாஜி தலைவரான ஜெனரலின் திட்டம். நாஜிகள் அணியில் நல்ல கலைஞர்களில்லை, நல்ல எழுத்தாளர்களில்லை. இலக்கியவாதிகளுக்கு பஞ்சம். அந்த இடத்தை இட்டு நிரப்பும் முயற்சியாக பிரதமர் செய்த பல காரியங்களில் ஒன்றுதான் அந்த நாடகக் கலைஞனை மூளைச் சலவை செய்து தம் பக்கம் இழுத்துக் கொண்டது. நாஜிக் கொள்கைகள் பிரபல நடிகனைக் கொண்டு நாடகங்களில் புகுத்தப்பட்டு மேடையில் நடிக்கப்பட வேண்டும். ஒரு சமுதாயத்தையே ஒட்டுமொத்த மூளைச் சலவைக்கு தயார் செய்யவேண்டிய முயற்சிகளில் ஒன்று.

‘‘முன்னாள் போல்ஷெவிக் (கம்யூனிஸ்ட்) ஹாஃஜென் இன்னாள் பிரஷ்ஷியாவின் தேசிய நாடக அரங்கின் மானேஜர் என்ற கருத்தை நிலவ விடுகிறார் ஜெனரல் பிரதமர். தான் தேசிய நாடக அரங்கின் தலைமைக்கு நியமிக்கப்பட்டபின் தன்னோடு பங்கேற்ற சக நடிகை நடிகர்களோடு ஓர் உரையாடலில் ஈடுபடும் ஹாஃப்ஜென்,’’ ‘‘மெஃபிஸ்டோ என்னும் வெள்ளை முகம் கொண்ட கோமாளியையே பார்த்து வந்தேன் நான். அரங்கை மாற்றியமைக்க விரும்புகிறேன். ஹாஃப்ஜென் என்றழைக்கப்பட்ட- மெஃபிஸ்டோ எனும் கோமாளி வேடம் தாங்கிய ஒரு மனிதனின் வெள்ளை முகம்ப்பா! அது பயங்கரம்’’ என்கிறான் அவன் உடலைக் குலுக்கிக்கொண்டு. தொடர்ந்து பவேரியன் தியேட்டர், ஃபிராங்க்ஃபர்ட் தியேட்டர் ஆகியவை இதுவரை வழக்கமாய் நடித்து அரங்கேற்றி வந்த பழைய நாடகங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. நாஜி ரீச்சின் அரசியல் விளம்பரங்களை கொண்ட நாடகங்களாக இனிமேல் அவன் மே்டையேற்றி நடித்தாக வேண்டும். தீய்மை சூழ்ந்த அரசியல் கொள்கையை தன் இறுதி நாடகமாய்க்கொண்ட ஃபாசிஸ உலகில் ஹென்ரி எனும் கலைஞன் தான் ஆத்மாவை புகழுக்கு விற்றுவிட்டு நடமாட வேண்டும்.

‘‘அவர்கள் ஜெர்மன் நாடக ஆசிரியர்களின் நாடகங்களை மட்டுமே மேடையேற்ற விரும்புகிறார்கள். அந்த எல்லாவித ரோகோகோ (ROCOCO) பாணி அசல் ஜெர்மன் கதைகளையும் சுருட்டைமுடியாலான டோபா தலைகளையும் வெள்ளை முகங்களையும் நான் தோண்டியெடுத்தாக வேண்டும், தலைவரை திருப்திபடுத்த’’ என்கிறான் ஹென்ரிக் ஹாஃப்ஜென்.

இந்த சமயம் பல DERGROUNDல் இயங்கும் கம்யூனிஸ்ட் கலைஞர்கள் நாஜிகளின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாய் பொதுமக்களுக்கு வினியோகித்த நூற்றுக்கணக்கான சுற்றறிக்கைகள் அரங்கில் சிதறிக்கிடைப்பதைக்கண்டு திடுக்கிட்ட ஹாஃப்ஜென் அவற்றையெல்லாம் பொறுக்கிச் சேர்த்து குப்பைத் தொட்டியில் போடுகிறான்.

அடுத்து அவன் பாரீசுக்கு பயணமாகி அங்குள்ள ஜெர்மன் ரீ்ச் தூதரகத்தையடைகிறான். அங்கிருந்து தன் காதலியும் நடன ஆசிரியையுமான ஜூலியட்டைப் போய்ப் பார்க்கிறான். எல்லாவற்றையும் உதறிவிட்டு தன்னோடு வந்து பாரிசிலிருந்து விடுமாறும், அவனுக்கு நாடக சசந்தர்ப்பங்களையும் மற்ற சகல வசதிகளையும்தான் ஏற்பாடு செய்து தருவதாக கெஞ்சுகிறாள் ஜூலியட். ஆனால் அதையெல்லாம் மறுத்து ஒதுக்கிவிட்டுப் போகும் மெஃபிஸ்டோ தன் மனைவி பார்பாராவைச் சந்திக்கிறான். இருவருக்கும் கருத்துமோதல் வலுக்கிறது. அவனோடு சண்டைபோட்டுக்கொண்டு ஜெர்மனிக்கு வருபவன் தன்னோடு புதியதாக நடிக்கும் ஒருத்தியை மணந்துகொள்ளுகிறான். பெரிய விருந்து ஏற்பாடாகிறது. ஒரு பால்ரூம் நடனம்.

நடனமாடுபவர்கள் அனைவரும் மெஃபிஸ்டோ பாணியில் முகத்தை வெள்ளை வண்ணத்தால் பிசாசு முகமூடிபோல ஒப்பனை செய்துகொண்டு நடனமாடுகின்றனர்.
மிகத் தாமதமாக இராணுவ சீருடையில் வருகை தரும் ஜெர்மன் ஜெனரல் பிரதமர் அவனை மறுநாள் வரச் சொல்லிவிட்டுப் புறப்படுகிறார். மறுநாள் ஹாஃப்ஜெனை முன்னால்விட்டு வேகமாய் – குற்றவாளியை தூக்குமேடைக்கு விரட்டி்ச் செல்லுவதுபோல வேகமாய் நடக்கவிட்டு, பின்னால் ஜெனரல் இன்னும் சில நாஜி அதிகாரிகள் சூழ அதே வேகத்தில் வருகிறார். ஈ காக்காய் இல்லாத பிரம்மாண்ட அரசர் காலத்து பவேரிய தூண்கள் நிரம்பிய வெளியில் கேமரா இவர்களின் விரைவான நடைப்பயிற்ியை சுற்றிலும் மங்கிய ஒளியில் காண வகை செய்கிறது. சர்க்கஸ் அல்லது கலங்கரை விளக்கத்தின் SEARCH LIGHT-ன் ஒளிப்பாய்ச்சல் சுழன்று சுழன்று வருவதுபோல் எங்கிருந்தோ ஒளிப் பாய்ச்சல் வந்துபோகிறது.

இப்போது அவர்கள் வந்திருப்பது இருட்டிலும் இனம் தெரியும் பெர்லின் நகரின் பிரதான விளையாட்டு ஸ்டேடியம், அவனை ஸ்டேடியத்தின் மையத்துக்குப் போகுமாறு நாஜிகள் விரட்டுகிறார்கள். திடீரென தன்னுள் அனுபவமாகி வரும் இனந்தெரியா திகில் ஒன்றை உணர்ந்தவனாக வானத்தையம் ஸ்டேடியத்தையும் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான் ஹென்ட்ரிக் ஹாஃப்ஜென். ஒரே இருட்டு. தூரத்தில் ஒலிபெருக்கியுடன் இருட்டில் நாஜிகளின் விசேஷமான கருப்பு உடையில் ஜெனரலும் மற்ற அதிகாரிகளும் இவனைப் பார்த்து ஏளனமான தொனியில் சிரிக்கின்றனர். அப்போது இருளைக் கிழித்துக்கொண்டு ஒளிக்கற்றை ஹாஃப்ஜெனை குறிபார்த்து பீய்ச்சியடிக்கிறது. கண்கள் கூசுகின்றன. கைகளாக கண்களை மூடிக்கொண்டும், ஒளிக்கற்றை கண்களில் ஊடுருவுகிறது. முகம் அந்த அதீத ஒளியில் மெஃபிஸ்டோ ஒப்பனைபோல வெள்ளையாகத் தெரிகிறது.

‘‘உனக்கான ஒளிவட்டம் எப்படி? போதுமா? ஒளிவட்டம் எப்படியிருக்கிறது?’’ கேட்டுக் கொண்டே இடியிடியென சிரிக்கிறார் ஜெனரல். ஹாஃப்ஜென் அந்தப் புகழ் எனும் ஒளிவட்டத்தை (AURA) தாங்க முடியாதவனாய் ஸ்டேடியத்தில் அங்குமிங்கும் வேட்டையாடப்படும் மிருகம்போல ஓடிப் பதுங்க முயற்சிக்கிறான். ஒளிப் பாய்ச்சலும் ஜெனரலின் சிரிப்பும் அவனை அலைக்கழித்துத் துரத்துகின்றன.

இந்த மாபெரும் ஹங்கேரிய திரைப்படத்தில் ஹென்ரிக் ஹாஃப்ஜெனாக அதியற்புதமாக நடித்திருப்பவர் ஆஸ்திரிய- ஹங்கேரி நடிகரான க்ளாஸ் மரியா ப்ராண்டாயர் (KLAUS MARIA BRANDAUER. இப்படத்தின் அற்புதமான கேமரா கோணங்களை அமைத்தவர் ஒளிப்பதிவாளர் லஜோஸ் கோல்டேய் (LAJOS KOLTAI). மெஃபிஸ்டோ இஸ்துவான் ஸ்ஜாபோவுக்கு மிகப் பெரிய வெற்றியை அளித்த திரைப்படம். 1981-ன் மிகச் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹங்கேரிய படம்.
இஸ்துவான் ஸ்ஜாபோவின் மிக பிரம்மாண்டமான திரைப்படம். ஏராளமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஹங்கேரியின் வரலாற்றைகொண்ட படம் ‘சன்ஷைன்’ (SUNSHINE – IN HUNGARY, A NAPFENY IZE.) இப்படம் 2000ல் வெளியானது. 19 மற்றும் 20-ம் நூற்றாண்டு ஹங்கேரிய யூதர்களின் மூன்று தலைமுறைகளின் தொடர்கதையைச் சொல்லும் காவியம். படம் தொடங்கும்போது படத்தின் கதைசொல்லி பேசத் தொடங்குகையில் பனிமூடிய காட்டுப்பகுதியில் ஒரு சுமையுடன் முழுக்க போர்த்திய ஒரு பையன் நடந்து வருகிறான்.

‘‘12 வயதான இந்தச் சிறுவன் என் கொள்ளுத்தாத்தாவான இமானுவேல் சோனன்ஷைன்’’ என்கிறது கதைெசால்லியின் குரல். சோனன்ஷைன் (SONNENSCHEIN) என்பது ஆஸ்திரிய- ஹங்கேரிய சாம்ராஜ்யத்தின்போது ஒரு யூதக் குடும்பத்தின் வழிவழிப் பெயர். அதன் பொருள் SUNSHINE என்பதாகும். கிராமத்து சத்திரத்தின் காவலராயிருந்த இந்தப் பையனின் தந்தை காட்டுமூலிகைகளைக் கொண்டு ஓர் அபூர்வ பானத்தை காய்ச்சித் தயாரித்து சீசாக்களில் ஊற்றி விற்று வந்தவர்.

உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மருந்துமான அந்த டானிக்கை ‘சன்ஷைன்’ என்ற பெயரில் விற்று வந்தவர். அந்த டானிக் தயாரிக்கும் முறை, தேவையான மூல மருந்துகள், மூலிகைகள் விவரம் அனைத்தையும் ஒரு கருப்புத் துணி அட்டைபோட்ட குறிப்புப் புத்தகத்தில் எழுதி பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஒரு நாள் டானிக் தயாரிப்பின்போது கொதிக்கும் பாய்லர் வெடிகுண்டுபோல் வெடித்து வீடே சிதறுகிறது. இவனது தந்தை வெடிவிபத்தில் இறந்துபோகிறார். தாயையும் சகோதரனையும் காப்பாற்றுவது கடமையும் பொறுப்புமாகிறது. எனவே பையன் எதேதோ வேலை பார்க்கிறான். பையன் தன் 25வது வயதில் அந்தப் புத்தகத்தில் கண்ட குறிப்புகளைக்கொண்டு சன்ஷைன் டானிக்கை காய்ச்சித் தயாரித்து விற்று நன்றாக பணம் சம்பாதிக்கிறான். ஒரு சீமானாகவும் யூதப் பிரபுவாகவும் உயர்கிறான்.

ஹங்கேரிய யூதக் குடும்பங்களில் பணமும் செல்வாக்கும் நிறைந்த அந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பெயர் சோனன்ஷைன் (SONNEN SHEIN) அதாவது SUNSHINE என்று பொருளாகிறது. இமானுவேல், ரோஸ் டாட்ஷ் (ROSE DEUTSCH) என்பவளை திருமணம் செய்துகொள்ளுகிறான். இமானுவேலின் சகோதரனுக்கு வேலரி (VALERIE) என்ற அழகிய பெண். இமானுவேலுக்கும் ரோஸுக்கும் இரண்டு பையன்கள். மூத்தவன் இக்னாட்ஸ் (IGNATZ). இவன் வியன்னாவில் சட்டம் படித்து வழக்கறிஞனாகி விரைவில் இளம் வயதிலேயே நீதிபதியாகிறான்.

இளையவன் குஸ்டாவ் GUSTAV மருத்துவம் படித்து டாக்டராகிறான். வாதத்திறமை, கண்டிப்புமிக்க தீர்மானம், முடிவெடுக்கும் திறமைகளால் நீதிபதியாகிறான் இக்னாட்ஸ். இங்கு ஒரு பிர்சனை வந்து சேருகிறது. நீதிபதி இக்னாட்ஸ் சோனன்ஷைனும் அவனது சித்தப்பா மகளான வேலரி சோனன்ஷைனும் (ஒரே ரத்த சம்மந்தமுள்ள சகோதர-சகோதரி உறவுமுறை கொண்டவர்கள்) ஒருவரை ஒருவர் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். அவர்களிடையே வளர்ந்த காதல் உடலுறவுவரை போய்க் கொண்டிருக்கையில் இக்னாட்ஸ் சொல்லுவான், ‘‘நீ எனக்கு சகோதரியில்லை. உன்னை உயிராக நேசிப்பவன் நான் என்று. வேலரி கூறுவாள், ‘‘நான் உனக்கு சகோதரிதான். ஆனால் காதலிக்கிறேன்’’ என்று.

இமானுவேலின் சகோதரன் மகன் வேலரியும், இக்னாட்ஸும் மனம்-உடல்ரீதியாக ஒன்றிணைவது சமூக- மத ரீதியாகவும் குடும்ப உறவு ரீதியாகவும் அனுமதிக்கப்படாத யூத சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகும். ஒரு விருந்தின்போது இக்னாட்ஸ் தங்கள் முடிவை எல்லோர் முன்பாகவும் கூறுகையில் அவனது அம்மா ரோஸ் அதிர்ச்சியால் மயக்கமுற்று விழுந்துவிடுகிறாள். அவன் அப்பா இமானுவேல் தன் இளமையில், தானும் இந்தவிதமாகவே தன் பெரியப்பா மகளை காதலித்ததாகவும் ஆனால் அவளை மணந்து கொள்ள முடியாமற்போனதாகவும் கூறுகிறார். இந்தக் கல்யாணத்துக்கு அவர் சம்மதமே. ரோஸ் தன் மருமகளையும் அந்தத் திருமணத்தையும் இறுதிவரை ஒப்புக்கொள்ளுவதேயில்லை.

இக்னாட்ஸ்-வேலரி திருமணம் ஒரு பிரபுத்துவ விமர்சையோடு நடக்கிறது. இக்னாட்ஸை அரசு, மத்திய நீதிமன்றத்திற்கு நீதிபதியாக்க நினைக்கிறது. ஹங்கேரியில் அந்நாளிலிருந்த CENTRAL COURT என்பது நமது உச்ச நீதிமன்றம்போல. ஆனால் அதில் ஒரு முக்கிய பிரச்சனை, அவன் யூதனாயிருப்பதுதான். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆண்டோர் நார் (ANDOR KNORR) அவன் மீது விேசஷ அக்கறையும் பாசமும் கொண்டவர். அவனது பதவி உயர்வில் அவரது ஒத்தாசையுமிருந்தது. அவன் மீதுள்ள அக்கறையால் அவர் ஒரு யோசனை கொடுத்தார்.

‘‘உன் பெயரோடு ஒட்டியிருக்கிற சோனன்ஷைன் என்ற யூதப் பெயர் ஹங்கேரித்தனமாக இருந்தாக வேண்டும். உன் பெயர் இன்னும் அதிகமான ஹங்கேரிய சொற்களை கொண்டிருக்க வேண்டும், யூதப் பெயரை மாற்ற வேண்டும்.’’
அவர்கள் உடனே சோனன்ஷைன் என்ற யூத ெசால்லுக்கு மாறாக SOLYOM, SOLTI, SOMLO முதலான வார்த்தைகளை சீட்டு குலுக்கிப் பார்த்து முடிவில் SORS என்ற வார்த்தை முடிவாக ஏற்கப்படுகிறது. இவ்வார்த்தைகள் அனைத்துமே லத்தீன் மொழியிலும் ஹங்கேரிய மொழியிலும் ஒரே பொருளைக் கொண்டவை. இந்தப் பெயர் மாற்றம் ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்ட்டின் உள்துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, யூதப்பெயரான SONNENSCHEIN என்பது ஹங்கேரிய வார்த்தை SORS என்பதாக மாற்றப்பட்டு டாக்டர் இக்னாட்ஸ் சோர்ஸ் (DR.IGNATZ SORS) என்றாகி அந்த பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, தொடர்ந்து இக்னாட்ஸின் தம்பி டாக்டர் சோர்ஸ், மனைவி வேலரி சோர்ஸ் என்று அனைவரும் பெயர் மாற்றிக்கொள்ள இக்னாட்ஸ் ஹங்கேரியின் மத்திய நீதிமன்றத்தின் நீதிபதியாகிறார். வேலரிக்கு முதல் பிரசவமாகி இஸ்துவான் பிறக்கிறான்.

இக்னாட்ஸின் தம்பி டாக்டர் குஸ்தாவ் கம்யூனிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சே்வை புரிவதோடு அவர்களின் நலவாழ்வுக்கும் பாடுபடுகிறான். இச்சமயம் இக்னாட்ஸை தேர்தலில் நின்று போட்டியிடுமாறு அரசர் கேட்கிறார். தம்பி டாக்டர் குஸ்தாவும் வேலரியும் மற்றவர்களும் தேர்தலில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தேர்தலில் யூதர்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறி எதிர்க்கிறார்கள். இக்னாட்ஸ் மறுக்கும்போது அரசர் ஹங்கேரிய சோசலிச இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பெயர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘ஹங்கேரிய அரசைக் கவிழ்க்க இந்த இயக்கமும் அதில் இணைந்திருக்கும் பணக்கார கல்வியறிவுமிக்க யூதர்களும் முயற்சிக்கிறார்கள்.’’ என்கிறார். பட்டியலில் காணும் பெயர்களில் தன் தம்பி டாக்டர் குஸ்தாவ் சோர்ஸும் ஒன்று.

முதல் உலக மகாயுத்தம் தொடங்குகிறது. இக்னாட்ஸுக்கும் வேலரிக்கும் சண்டையேற்படுகிறது. அரசுஅரசர் பற்றியே சதா கவனம் கொண்ட இக்னாட்ஸுக்கு தன்மீது அன்பும், ஆைசயுமில்லை என்று கூறிதான் விவாகரத்து செய்வதாக மனைவி கூறவும் சோர்ஸ் வெகுண்டெழுந்து தன் காதலை நிரூபிக்க அவளது மறுப்பையும் எதிர்ப்பையும் மீறி அவளை வல்லுடலுறவு கொள்கிறான். அவள் அவனைவிட்டுப் போய்விடுகிறாள்.

 

முதல் உலகப் போர் முடிந்தபின் ஹங்கேரியில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி கிளம்புகிறது. மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு கம்யூனிஸ்டுகள் அரசு அதிகாரத்தைப் பிடிக்கிறார்கள். அரசரோடு நெருங்கியிருந்தவர்கள் கைதாகி விசாரிக்கப்படுகையில் நீதிபதி இக்னாட்ஸின் குடும்பம் வீட்டுக்குள் சிறை வைக்கப்படுகின்றனர். டாக்டர் குஸ்தாவ் உணவுப் பஞ்சமேற்படவே சேரியில் ஏழைக் குழந்தைகளின் பசிக்கு உணவளிக்கும் சேவையில் ஈடுபடுகிறாள்.

கொஞ்ச காலம்போய் வேறொரு நாட்டின் வலதுசாரிகளின் துணையோடு ஹங்கேரியின் கம்யூனிஸ்ட் அரசு கவிழ்க்கப்படுகிறது. டாக்டர். குஸ்தாவும் அவனது தோழர்களும் ஃபிரான்சுக்கு தப்பியோடிவிடுகின்றனர்.

புதிய வலதுாரி அரசு அதிகாரத்தை எடுத்துக்கொண்டவுடன் கம்யூனிஸ்டுகளைக் கைது செய்து விசாரணை தொடங்கவும், நீதிபதி இக்னாஸ் சோர்வைவிட்டு விசாரிக்கச் சொல்லவும், கம்யூனிஸ்டுகளை தன்னால் விசாரிக்க முடியாதென்று மறுத்துவிடுகிறான். அவர்கள் மீதான விாரணை ஒருதலைப்பட்மானது’’ என்கிறான்.

உடனடியாக அவனை கட்டாயப்படுத்தி பணியிலிருந்து கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்புகிறது வலதுசாரி அரசு. மனம் வெதும்பி உடல் நிலைகுன்றி நோயுற்று இறந்துபோகிறான் இக்னாட்ஸ். அவன் இறக்கும் தருவாயில் வேலரி திரும்பி வந்துவிடுகிறாள். இப்போது குடும்பப் பெயரில் பிரபலமாகியிருந்த புகழ்பெற்ற டானிக் தயாரிப்பை மீண்டும் தொடங்கலாமென அந்தக் குறிப்புப் புத்தகத்தை தேடுகிறார்கள்.

வேலரி அந்தப் பெரிய யூதக் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறாள். வேலரி இளம் வயதில் புகைப்படம் எடுத்து வந்தவள். தொடர்ந்து காலம் மாற, தொழில் துணுக்கம் வளர, பெருகி வந்த கேமராவும் கையுமாக அந்தப் புகைப்படக் கலையை வளர்த்து வந்த வேலரி இப்போது சிறந்த புகைப்பட நிபுணத்துவம் பெற்றவளாகி விடுகிறாள். அவளுடைய மூத்த மகன் ஆடம் சோர்ஸ் (ADAM SORS) அடுத்த தலைமுறைக்கான இளைஞனாக கத்திச் சண்டையில் (FENCING) ஆர்வம் காட்டி கத்திச்சண்டைப் பயிற்சியின் கிளப்பில் சேர்கிறான். அங்கு ஹன்னா வில்ளெர்ஸ் HANNA WIPPLERS என்பவனைச் சந்தித்து காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறான்.

வாள் பயிற்சியை இராணுவ அதிகாரிகளின் கிளப்பில் ேசர்ந்து மேற்கொண்டால் ஒலிம்பிக் போட்டியில் சேரலாம் என்பதால் இராணுவ வாட்பயிற்சி கிளப்பில் சேருகிறான். அங்கு அடுத்த பிரச்சினை கிளம்புகிறது. புதிய வலதுசாரி அரசு ஜெர்மனியின் புதிய அரசின் ஃபாசிஸ கொள்கையைப் பின்பற்றுகிறது.

‘‘யூதர்களுக்கு கிளப்பில் இடமில்லை. குறைந்தது, கிறிஸ்தவனாகவாவது இருக்க வேண்டும். நீயும் உன் முழு குடும்பமும் கிறிஸ்தவ மதத்துக்கு உடனே மாறிக்கொண்டால் இராணுவபயிற்சி கிளப்பில் சேரலாம்’’, என்கிறார்கள். அதன்படி ஆடம்சோர்ஸ், அவன் மனைவி ஹன்னா ஆகியோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறுகிறார்கள். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையின் பெயர் இவான் (VAN). அந்த இவான்தான் இந்தப் படத்தின் விவரிப்பாளன் (NARRATOR). இவனது குரல்தான் படம் தொடங்குவதிலிருந்து இந்த யூதத் தலைமுறைகள் குறித்து விவரித்தவாறே கேட்கும் குரல்.

பெர்லின் ஒலிம்பிக். -1936 மிக முக்கிய நிகழ்வு. ஹிட்லரின் தலைமையில் நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக் தடகள ஓட்டத்தில்தான் ஜெஸ்ஸி ஓவன் என்ற கருப்பு இன வீரன் ஹிட்லரின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி ஜெர்மன் வீரர்களை வீழ்த்தி தடகள ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்கள் பெற்று ஹிட்லரும் கை குலுக்கி பாராட்ட வைத்தவன். 90-களில் ஜெஸ்ஸி ஓவன் பற்றிய அரிய தொலைக்காட்சித் தொடரை துர்தர்ஷன் ஒளிபரப்பிற்று, 1936 -பெர்லின் ஒலிம்பிக் வாட் போர் போட்டியின் இறுதியில் ஆடம் சோர்ஸ் இத்தாலியின் ஸ்டெஃபானோ சார்டோ (STEFANO SARTO) என்ற வீரரை வென்று ஹங்கேரிக்கான தங்கப்பதக்கம் பெறுகிறான். விரைவில் உலகின் ஒரு பகுதியில் சமூக – அரசியல் சூழ்நிலை மாறுகிறது. ஆடம் சோர்ஸை அமெரிக்க பாஸ்டன் நகரின் புகழ்பெற்ற PEN AND SABER கிளப்பின் தலைவர் லாஜ்லோ மோல்நார் (LASZLO MOLNAR) என்ற ஹங்கேரிய யூதர் சந்தித்து அமெரிக்காவுக்கு வந்துவிடும்படி அழைக்கிறார். தன் குடும்பமும் பயிற்சி க்ளப்புமிருக்கும் ஹங்கேரியைவிட்டு வரமுடியாதென்றும் தன் நாட்டுக்கு வாட்போரிடுவதாய் கூறுகிறான் ஆடம்.

‘‘ஒரு சர்வாதிகாரியின் அதிகாரிகளுக்காக ஏன் வாட் போரிடுகிறாய்.? ஹிட்லரின் ஃபாஸிச கொள்கையை நடைமுறைப்படுத்தும் இந்நாட்டு சர்வாதிகாரி அப்பாவிகளைத் தூக்கிலிடுகிறது”, என்று திட்டுகிறார். அவர் மாலையில் வானொலியில் முக்கிய அறிவிப்பு ஒன்று ஒலிபரப்பாவதை அந்த யூதக் குடும்பம் கேட்டு திகிலில் அதிர்ந்து போகிறது. அது யூத பிரஜைகளுக்காக ஹிட்லரின் நாஜி அரசாங்க சட்டமுறையைப் பின்பற்றி வகுக்கப்பட்ட புதிய சட்டமாகும். அச்சட்டத்தின் நான்காவது பிரிவின்படி யூதர்கள் யார் என்ற விளக்கமும், யூதர்களின் பல்வேறு சமூகப் பொருளாதார உரிமைகளும் ஒரு வரம்புக்குள் கொண்டுவர இருப்பதை சட்டரீதியாக விளக்குகிறது ஒலிபரப்புக்குரல். இந்தப் புதிய ஒடுக்குமுறைச் சட்டம், முதல் உலகப் போரில் ஈடுபட்டு போரிட்டு வீரப் பதக்கம் பெற்றவர்களுக்கும் அவர்களது வாரிசுகள். சந்ததிகளுக்கும் எவ்விதப் பாதிப்பையோ, இடையூறையோ, கட்டுப்பாட்டையோ ஏற்படுத்தாது (உடனே அதைக் கேட்கும் வேலரி கூறுகிறாள்.)
“உன் தந்தைக்கு விலக்கு உண்டு.”

‘‘ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யூதர்களுக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்குண்டு’’ என்கிறது ரேடியோம் உடனே அவர்கள் அனைவரும் கூவுகின்றனர். “அதுதான் நாம், நமக்கு இந்தச் சட்டம் கணக்காகாது. நமக்கு முற்றிலும் விலக்கு உண்டு.”

ஹங்கேரியை ஜெர்மனி கவ்வுகிறது. யூதர்கள் எவ்வித விலக்கையும் மீறி கொல்லப்படுகின்றனர். ஒருநாள் ஆடம் சோர்ஸ் கைதாகி நிர்வாணமாக்கப்பட்டு உயிரோடு பனிக்கட்டி சமாதியாக்கப்பட்டு பனிப் போர்வையில் உறைந்து உயிரை விடுகிறான்.

அவனது மகன் இவான் சோர்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறான். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்படுகிறது. சோவியத் யூனியனின் செம்படைகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஹிட்லரின் நாஸிச ஆக்கிரமப்பிலிருந்து விடுவிக்கின்றன. அவை கம்யூனிஸ தலைமையை ஏற்றுக்கொள்ளுகின்றன. ஹங்கேரியில் இடையில் மேற்கு நாடுகளின் பின்னணியிலான வலதுசாரிகளின் புரட்சி தோல்வியில் முடிகிறது.

ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் இவான் சோஷலிச சமுதாய அமைப்பு பற்றி நெகிழ்ச்சியோடு உரையாற்றுகிறான். சில நாட்கள் கழித்து வீட்டிலுள்ள குப்பைக்காகிதங்கள் முதலியனவற்றை யாரோ ஒரு வேலைக்காரி பெருக்கிச் சேர்த்து வாரி வாரி முனிசிபல் குப்பைவண்டியில் கொட்டுகிறாள். அதில் கருப்பு அட்டை போட்ட ‘சன்ஷைன்’ டானிக் தயாரிப்பு முறை விவரமடங்கிய அந்தக் குடும்பத்தின் பிதுரார்ஜித சொத்தான நோட்டுப்புத்தகமும் ஒன்று.

இந்த நீண்ட வரலாற்றுத் திரைப்படம், ‘DR. ZIVAGO’ ‘THE LAST EMPEROR’ ஆகிய படங்களின் வரிசையிலான அரிய ஹங்கேரிய வரலாற்றுப் படம். இஸ்துவான் ஸ்ஜாபோவின் மிகச் சிறந்த இயக்கத்திலான இப்படத்தின் இசையை MAURICE JARRE அமைத்திருக்கிறார். மாரிஸ் ஜேர் டேவிட் லீன் இயக்கிய ‘பிரிட்ஜ் ஆன்தி ரிவர்க்வாய்’, ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’, ‘டாக்டர் ஷிவாகோ’ ஆகிய படங்களுக்கும் மறக்க முடியாத உணர்வுகளை இழுக்கும் இசைக்கோர்வையை அமைத்தவர். இப்படத்தின் அற்புதமான ஒளிப்பதிவை லஜோஸ் கோல்டேய் (LAJOS KOLTAI) அமைத்திருக்கிறார்.

தமிழில் மங்கையற்கரசி என்ற படத்தில் P.U.சின்னப்பா மகன், தந்தை மற்றும் தாத்தா பாத்திரங்களில் நடித்திருப்பது மாதிரி சன்ஷைன் ஹங்கேரிய படத்தில் ரால்ஃப் ஃபியன்ஸ் (RALPH FIENNES) என்பவர் தந்தை, மகன், பேரன் பாத்திரங்களில் மூன்று தலைமுறைகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். வித்தியாசமில்லாது, ஒரே மாதிரி முக பாவனை – உடல்மொழியோடு இவர் ஏற்கனவே ‘ENGLISH PATIENT’ என்ற படத்தில் செய்ததுபோலவே எப்போதும் முகத்தை சீரியஸ்ஸாக வைத்துக்கொண்டு நடிக்கிறார். வேலரியாக JENNIFER EHLE சிறப்பாக செய்திருக்கிறார். மற்றவர்கள் நன்கு செய்திருக்கின்றனர்.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா

      கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத் தொடங்கும். எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று மெதுவாக பார்த்துக் கொண்டிருந்த நாம் பேருந்து வேகமாக செல்லத் தொடங்க முழுமையான பயணியாகி விடுவோம். அதுபோல,...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகள் அறிவித்தன. இல்லாத தங்கள் கடவுள்களின் பெயரால் அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். போரால் அனாதையாகிப் போயிருக்கும் எந்தவொரு குழந்தையிடமும் கேட்டுப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது வாழிடம், குடியிருப்பு, வீடு மற்றும் அலுவலகம், பல்வேறு காரணங்களுக்கான கட்டிடங்கள், தேவை என்பதை நாம் அறிவோம்! அவற்றை உருவாக்க உதவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here