தி ஸ்டோரி ஆஃப் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் (The Story of Fort St. George)
சென்னப் பட்டணம் – வரலாற்றுப் பதிவுகள் – 4
சென்னப்பட்டணம் பற்றிய வரலாற்றுப் பதிவுகளில் கிட்டத்தட்ட எண்பது பக்கங்கள் அளவிலான இந்தப் புத்தகம் சின்னஞ்சிறியது என்றே கூறமுடியும். 1653ம் ஆண்டில் தொடங்கி 1673,1770,1746,1758,1781,1862,1939 என்ற வரிசையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் நிலப்பரப்பு படத்தை அடிப்படையாகக் கொண்டு கோட்டையின் வரலாறு கூறப்பட்டுள்ள வித்தியாசமான புத்தகமாகும் இது.
ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் அருமை பெருமைகளை கூறக்கூடிய இப்புத்தகம் கோட்டையின் ராணுவப் பணியில் இடம் பெற்றிருந்த கர்னல் டி.எம். ரீட் (D. M. Reid) அவர்களால் எழுதப்பட்டு இஸ்மினா ஆர் வாரன் அவர்களின் சித்திரங்களுடன் அன்றைய மாகாண கவர்னர் சர் ஆர்தர் ஹோப் அவர்கள் முன்னுரையுடன் 1945ல் மதராஸில் உள்ள டயோசியன் அச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. உலக வரலாற்றோடு ஒப்பிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்வுகளின் பட்டியல் ஒன்றும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிரிட்டனில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தோரும் இதில் இடம் பெற்றுள்ளனர். இது ஒரு வித்தியாசமான பட்டியலாக அமைந்துள்ளது.
கோட்டையின் கதை மற்றும் கோட்டையைச் சுற்றி ஒரு நடைப்பயணம் எனும் இரு அத்தியாங்கள் அறுபத்தி எட்டு பக்கங்களிலும், இவையன்றி முன் கூறிப்பிட்ட ஒப்பீட்டு வரலாறும், காலவரிசையில் கோட்டையின் படங்களும் இருபது பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.
முதலாவது சார்லஸ் இங்கிலாந்தில் மன்னராக இருந்தபோது கூவம் ஆற்றுக்கும் கடற்பரப்புக்கும் இடையிலான மணற்பரப்பு கிழக்கிந்திய கம்பெனிக்கு பொருத்தமான குடியேற்றப் பகுதியாக விளங்குமென்று ஆண்ட்ரூ கோகனிடம் பிரான்சிஸ் டே சவால் விடுத்தார் என்ற முதலாவது பத்தியே
எத்திசையில் இப்புத்தகம் செல்லும் என்பதற்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. வரலாறு எப்பொழுதுமே ஒரு வசீகரமற்றதாக இருந்து வருகிறது. ஆயின் அதனை ஒரு
திரைப்படத்தில் காட்சிப் படுத்துகையில் அத்திரைப்படம் நன்கு அமைவதோடு ஏற்கப்படுகிறது. நிகழ்ச்சியில் இருந்து கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு சென்று ஏன் பார்வையிடக்கூடாது? வீடுகள், தெருக்கள் தேவாலயங்கள் உணவு விடுதிகள் வெள்ளித் தட்டுகள் பழைய பதிவேடுகள் அரண்கள் மற்றும் அகழிகள் இவை உயிர்ப்பு மிக்க காட்சிகளை எந்த ஒருவரிடமும் உருவாக்கிடும். ரஸானுபம்மிக்க வரிகளுடன் துவக்கும் ரீட் கோட்டையையும் கோட்டையில் கோலோச்சிய ஆங்கிலேய கனவான்களையும் குறிப்பாக வெல்லெஸ்லி, ஏல், க்ளைவ் ஆகியோர் பற்றி குறிப்பிடுகையில் மெய்மறக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
பெருவிலிருந்து உருளைக்கிழங்கு மற்றைய நாடுகளுக்கு அறிமுகம் செய்யாத தருணத்தில் 1522லேயே போர்ச்சுக்கீசியர்கள் மதராசிலிருந்து நான்கு மைல்கள் அப்பால் உள்ள சாந்தோமிற்குள் நுழைந்து விட்டனர் என்பதையும், அவர்கள் ரொட்டிக்கு கோதுமை மாவினை பயன்படுத்தினர் என்பதையும் நாம்
அறிகிறோம்.
பதினாறாம் நூற்றாண்டில் பருத்தி மற்றும் மிளகு ஆகியவற்றை போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து பெறுவதில் ஆங்கிலேயர்களுக்கு சிக்கல் இருந்து வந்தது. அதீத லாபச் சூழலிலிருந்து தப்பிக்கும் பொருட்டு உருவானதே கிழக்கிந்திய நிறுவனத்தின் தோற்றம் என்பது தெரியவருகிறது, இதைத்ததான்
டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டென்மார்க்கியர்களும் மேற்கொண்டனர். சந்திரகிரி மன்னரிடமிருந்து உரிமம் பெற்று கோட்டை கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போதிலும் ஒத்துழைப்பு இல்லாமையால் முடிவுற பதிமூன்று ஆண்டுகள் ஆகியது என்கிறார் ரீட்.
கோட்டையின் அன்றாட வாழ்வினை இயல்பாகவே ரீட் விவரணம் செய்துள்ளார். கோட்டையின் வடக்குச் சுவருக்கும் நகரில் உள்ள வீடுகளுக்கும் இடைப்பட்ட குறுகலான பகுதி அணிவகுப்பு மைதானமென அழைக்கப்பட்டதும், பகல் நேரத்தில் அது சந்தையாக செயல்பட்டதும் தெரியவருகிறது, கோட்டையில் வரிசையில் அமைந்துள்ள வீடுகளுக்கு எதிரே கடைகளும் வரிசையாக இருந்திருக்கிறது. நகரத்திற்குள்ளே கடைகளுக்குப் பின்னே திருமணமான சிப்பாய்கள் இருந்திட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நாள்தோறும் சத்திரம் வாயில் மற்றும் வடக்கு வாயில் வழியே கோட்டைக்குள் சென்று வந்தனர்.
சந்தையின் பொதுமொழியாக போர்ச்சுக்கீசிய மொழி இருந்ததாகவும், அதில் தமிழும் ஆங்கிலமும் சரளமாக கலந்திருந்ததாகவும் இவர் கூறுகிறார். கம்பெனியின் சிப்பாய்கள் ஈரோஏஷியன்களை அல்லது இந்தியப் பெண்களை மணம் புரிந்து கொண்டு தங்கள் தாய் மொழி ஆங்கிலத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தமையால் போர்ச்சுக்கீசிய மொழி படிப்படியாக வழக்கிலிருந்து வெளியேறியிருக்கிறது. 1741ல்தான் நாணய முறை ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஒரு பகோடா நாணயம் புதிய 3 ரூபாய்க்கும், பழைய ஒரு ரூபாய் புதிய ஒரு ரூபாய்க்கும், பழைய ஒரு பணம் என்பது ஒரு அணா நான்கு பைசாவிற்கும், பழைய ஒரு காசு என்பது பைசாவில் ஐந்தில் ஒன்றுக்கு நிகராகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவருகிறது.
பல்வேறு அதிகாரப் போட்டிகளும், ராபர்ட் கிளைவின் செயல்பாடுகளும் சற்று விரிவாகவே இப்புத்தகத்தில் காணப்படுகிறது. திப்புவை எதிர்கொள்ளும் பொருட்டு காரன்வாலீஸ் வருகையையும் ரீட் பதிவு செய்துள்ளார். சர் தாமஸ் மன்றோ கவர்னராக இருந்த காலத்தில் மாகாணத்தில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மாகாணம் பிரிட்டனில் உள்ளதைப் போன்று 25 ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஜில்லாவிற்கும் கலெக்டர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
வருவாயை வசூலிப்பர் என்ற பொருள்பட இருப்பினும் அதைக் கடந்ததாகவே அவரது பணிகள் அமைந்திருந்தன.
கோட்டையைச் சுற்றி ஒரு நடைப்பயணம் எனும் இரண்டாவது பகுதியில் கோட்டையும் இதற்குள் அடங்கிய பகுதிகளும் விரிவாகவும் சுவாரசியமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. கொத்தளம் சதுக்கத்தின் தென்பகுதியில் உள்ள பாதுகாப்பாளர்கள் அறையிலிருந்து பயணம் துவங்குகிறது. புனித மேரி தேவாலயத்தின் வாயிலில் 1632ல் மரணமுற்ற ஆரோன் பேக்கரின் மனைவியின் கல்லறையை பார்வையிடுகிறோம், தேவாலயம் கோட்டை இரண்டும் இப்பின்னணியில்
விரிவாக விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பொருளின் பின்னாலும் ஒவ்வொரு நிகழ்வு இருப்பது சுட்டிக் காட்டப்படுவது என்பது ரீட்டின் பிரத்யேக வழிமுறையாகவே உள்ளது.
செயிண்ட் தாமஸ் தெருவைப் பற்றிய விவரணம் குறிப்பிடத்தக்கதாகும். கர்னல் மற்றும் மேஜர் போன்ற மூத்த அதிகாரிகள் இத்தெருவில் உள்ள குடியிருப்பில் இருந்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் ராபர்ட் கிளைவ் தற்கொலைக்கு முயற்சித்த வீடுகள் என்று சுட்டிக் காட்டப்படுவது ஆச்சரியமாக உள்ளதாக ரீட் கூறுகிறார்.
மேலும் கோட்டையில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் அரசுப் பணிகளில் இருந்து கொண்டு சொந்த வியாபாரத்தையும் செய்து வந்திருப்பதும் தெரியவருகிறது. இருப்பிடம் மாடியிலும் கிட்டங்கி கீழேயும் இருந்திருக்கிறது.
1875ல் துறைமுகத்தை கட்டுவதற்கு முன் வரை கோட்டையிலிருந்து கடல் இருபது அல்லது முப்பது கஜங்களுக்கு அப்பால் இருந்திருக்கிறது. ராணுவ ரீதியிலான பல்வேறு தாக்குதல்களுக்கும் போர்களுக்கும் எதிராக தாக்குப் பிடித்து பிரிட்டனின் ராஜீய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விரிவுபடுத்தியதன் குறியீடாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருப்பதை ரீட் வெளிப்படுத்துவது வித்தியாசமான முயற்சியாகும்.
ஆனாலும் யுத்த அறைகூவல்களோ அல்லது ஆயுதங்களோ ஏதுமின்றி இதே செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மாற்றத்திற்குள்ளாகி இன்றைய தினம் மக்களாட்சியின் குறியீடாக நீடித்து வருவது என்பது வரலாற்று வினோதங்களில் ஒன்றாகும்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.