தொடர் 39: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

Bookday Avatar

 

 

 

கிழக்கு ஐரோப்பிய சினிமா
செக்- திரைப்படங்கள்

இந்நாளை செக் குடியரசு, அந்நாளில் செக்கோஸ்லோவாகியா, [CZECHOSLOVAKIA]. இப்பெயரை என் பள்ளி நாட்களில் மூன்று விதமாக நான்கு பையன்கள் உச்சரிப்பார்கள். அவ்வாறு நாங்கள் நான்கு பேருக்கும் இக் கிழக்கு ஐரோப்பிய நாட்டின் பெயர் உச்சரிப்பு நாக்கைப் பதம் பார்த்ததற்கு முக்கிய சங்கதிகள் இரண்டு.

ஒன்று – எங்களுக்கு இருந்து வந்த தபால் தலை சேகரிப்புப் பித்து. மற்றொன்று – என்னிடமிருந்த சிறந்த பென்சில் ஒன்று. அந்த பென்சில் ‘MADE IN CZECHOSLOVAKIA’ என்று தங்க நிற ஆங்கில எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அது
ஒரு பெரிய புகழ்பெற்ற இந்திய எழுது பொருள் தயாரிப்பு நிறுவனத்துக்கான செக் நாட்டுத் தயாரிப்பு. அந்த நிறுவனப் புகழ்பெற்ற பெருமாள் செட்டி அண்டு சன்ஸ் என்பது. அந்த நாட்களில் எழுதியதை நகல் எடுக்க கார்பன் தாளை வைத்து ‘காப்பியிங்’ பென்சிலால் அழுந்த எழுதி பிரதி எடுப்பார்கள். அந்தப் பிரதியெடுக்கும் காப்பியிங் பென்சில்களும் பெருமாள் செட்டி அண்ட் சன்ஸ் நிறுவனத்துக்காக செக்கோஸ்லோவாகியா நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகி விற்கப்பட்டன.

எங்கள் வீட்டில் பெருமாள் செட்டி பென்சில்கள் நிறைய இருந்தன. அதன் வழியாகத்தான் எனக்கு செக்கோஸ்லோவாகியா என்ற நாட்டின் பெயரே அறிமுகமானது. இன்றைக்கு அது செக்குடியரசு. ஸ்லோவேனியா என்றெல்லாம்
பிரிந்திருக்கிறது. பிரியாதிருந்த காலத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனியால் அது ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஹிட்லரின் நாஜி ஜெர்மனி ஒரு நாட்டைப் பிடித்து ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்திய காலத்தில் ஹிட்லரின் கொடூரமான ஒரு படைப்பிரிவை அங்கு அனுப்பி முழுப்பொறுப்பும் அளிக்கப்பட்டுவிடும். அந்தப் படைப் பிரிவு ஜெர்மன் இராணுவத்தை விடவும் பன்மடங்கு கொடூரமானது.

‘WAFFEN S.S.’ என்றழைக்கப்பட்ட அதன் நிர்வாகப் பொறுப்பு என்பது பிரஜைகளுக்கு சகல பாதுகாப்புகளையும் தரும் செயல்பாடு என்பதாகும். S.S. என்ற இரு எழுத்துக்கள் ஜெர்மனியில் ‘SCHUTZ STAFFEL’ என்றாகும். அதன் பொருள் பாதுகாப்புப் படை என்பது [PROTECTION SQUADRONS]. இந்த S.S. என்ற எழுத்துக்கள் மின்னல் மின்னும் வடிவில்தான் கொடிகளில், அறிவிப்புப் பலகைகளில், அந்த அதிகாரிகளின்
சீருடையின் சட்டைக் காலர், தோள்பட்டைகளிலெல்லாம் ஜொலிக்கும்.

போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லோவாகியா ஆகிய ஜெர்மன் ஆக்கிரமிப்பிலிருந்த நாட்டுப் பிரஜைகள் இந்த எஸ்.எஸ்.. என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள்.

எஸ்.எஸ்., அதிகாரிகளும், படையினரும் கருப்பு நிற இராணுவ சீருடை தரித்திருப்பார்கள். எத்தனையோ சமயங்களில் ‘வெஹ்ர்மாட்’ என்றழைக்கப்பட்ட ஹிட்லரின் இராணுவப் பிரிவினருக்கும், அவரது கருஞ்சட்டை வீரர்களான எஸ்.எஸ்.Frederick Forsyth's 'The Odessa File' – uneven pulp fiction! | A Writer's  Notebook.
பிரிவினருக்கும் இரத்தக் களரியான சண்டை ஏற்பட்டதுண்டு. இந்த விஷயத்தைக் கொண்டே ‘ஒடிஸா ஃபைல்’, [ODYSSA FILE] என்ற திகில் மிக்க நாவலும் [எழுதியவர் FREDERIC FORCITH] அதை வைத்து செய்த திரைப்படமும் உண்டு. நாஜி இராணுவம் வெஹ்ர்மாட் ஒரு நாட்டைப் பிடித்தவுடன் அதை ஆக்கிரமித்தானதும் அவ்விடத்தின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் வாஃபன் எஸ்.எஸ். பிரிவைச் சேர்ந்ததாகிவிடும்.

அதன் பிறகு அவர்கள் திட்டப்படியும் கட்டளைப்படியும்தான் ஜெர்மன் இராணுவம்
செயல்புரியும். விஷவாயுக் கிடங்குகளுக்குள் அனுப்பி லட்சக்கணக்கான ஆண், பெண், குழந்தைகளைக் கொன்ற நாஜி அரக்கர்களில் கணிசமான அதிகாரிகள் S.S.காரர்கள். இந்தப் போர்ச் சூழலில், செக்கோஸ்லோவாகியா ஜெர்மன்
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, நிர்வாகம் எஸ்.எஸ். படையினரால் நடந்து வந்த 1940கள். செக் நாட்டின் தலைநகர் ப்ராக் நகரம் ஜெர்மனிப் போர் எந்திரத்தாலும், எஸ்.எஸ். கெடுபிடியாலும் பயங்கர மன அழுத்தத்தில் திணறிக்கொண்டிருந்தது.

ப்ராக் நகரின் புறநகர்ப் பகுதியான லிடிட்ஜ் [LIDIZ] எனும் ஊர் 1941-ல் மிகக் கொடுமையான கதிக்கு ஆளானதை – ஒரு படுகொலையை வைத்து பகுதி பிரிட்டிஷ் – பகுதி செக் மொழி – பகுதி ஜெர்மன் உரையாடல்களுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘THE OPERATION DAYBREAK’, என்பது. இத்திரைப்படம் 1975-ல்Operation Daybreak | VHSCollector.com வெளிவந்தது. மீண்டும் இந்த வரலாற்று நிகழ்வு ‘OPERATION ANTHEROPOID’ என்ற பெயரில் 2016-ல் ANTHROPOID படமாக்கப்பட்டது. முன்னதைப் போல பின்னது சிறப்பாயிருக்கவில்லை.

1975-ல் திரையிடப்பட்ட ‘OPERATION DAYBREAK’ [அதிகாலைப் படுகொலை] அமெரிக்க இயக்குனர் லீவிஸ் ஜில்பெர்ட் [LEWIS GILBERT] என்பவரால் முழுக்கவும் செக்கோஸ்லோவாகிய நகர் ப்ராக்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டது.

இப்படம் ஆலன் பர்ஜெஸ் [ALAN BURGESS] என்பவர் எழுதிய ‘அதிகாலையில் ஏழு பேர்’ [SEVEN MEN AT DAYBREAK] எனும் இரண்டாம் உலகப் போர்ப் பின்னணியிலமைந்த அரிய நாவலைக்கொண்டு படமாக்கப்பட்டது.Seven Men at Daybreak - Alan Burgess - knihobot.cz கதையின் விரைவான நகர்வுக்கேற்ற நெருடும் இசையைப் பின்னியிருப்பவர் புகழ்பெற்ற ஜெர்மன் –ஆஸ்திரிய இசையமைப்பாளர் டேவிட் ஹென்ட்ஷெல் [DAVID HENTSCHEL].

இதமான ஆனால் நம் மயிர்க் கால்களை குத்திடச் செய்யும் ஒளிப்பதிவை ஹென்றி டெகாலின் [HENRI DECAL] கேமரா செய்திருக்கிறது. லீவிஸ் ஜில் பெர்டின் கச்சிதமான இயக்கத்தில் படம் நம்மை இருக்கையிலிருந்து அவ்வப்போது எழுந்து நின்று, உட்கார வைக்கிறது.

திரைப்படம் 1941-ல் தொடங்குவது இங்கிலாந்தில். மூன்று இளம் வயது செக்கோஸ்லோவாகிய போர் வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவ மையத்துக்குள் அழைப்பின் பேரில் நுழைகிறார்கள். மீசை வைத்த காரல் குர்டா [KAREL CURDA] தன் மனைவியை போர் முனையிலிருந்துள வந்த பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்கிறான்.

பிறந்த குழந்தையை அப்போதுதான் அவனால் பார்க்க முடிகிறது. போருக்குப் புறப்படுமுன் கர்ப்பிணியாயிருந்த அவன் மனைவி, அவன் போர் முனையிலிருக்கையில் பிரசவித்த ஆண் குழந்தையைக் கொஞ்சிவிட்டு பிரிய மனமின்றி இங்கிலாந்துக்குப் புறப்படுகிறான் குர்டா. ரஷ்ய திரைப்பட டச்! குர்டா பிராக் நகருக்கு அருகிலிருக்கும் கிராமத்தில் பிறந்தவன். அரசாங்கம் போருக்கு
அழைக்குமுன் துறைமுக ஏற்றுமதி – இறக்குமதி அதிகாரியாகப் பணிபுரிந்து
வந்தவன். மற்ற இருவரும் திருமணமாகாத இளைஞர்கள். அவர்களில் ஜான்
கூபிஸ் என்பவன் [JAN KUBIS] விளாடஸ்லோவில் விவசாயம் [VLADASLOV] பார்த்தவன் இராணுவத்தில் இணைந்தான் மூன்றாமவன் காப்சிக் சர்ஜோசஃப் [GABCIK SIRJOSEF] என்பவன் பில்சும் [PILSUM] எனும் ஊரைச்சேர்ந்த பூட்டுச் சாவி செய்யும் நிபுணன். இந்த மூவரும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிப்பதில் நல்ல பயிற்சி பெற்றவர்கள்.

லண்டனில் பிரிட்டிஷ் ஆதரவில் செக்கோஸ்லோவாகிய அரசாங்கம் ‘GOVERNMENT IN EXILE’ என்ற வழியில் இயங்கி வந்தது. அதன் அதிகாரியிடம் இந்த மூவரும் போய் நின்றனர். இவர்கள் தங்களை அவருக்கு அறிமுகம் செய்துகொண்ட பிறகு அவர்களை அங்கே அழைத்து வரச் செய்ததன் நோக்கத்தை அந்த அதிகாரி விளக்குகிறார்.

ப்ராக் நகரில் தங்கியிருக்கும் நாஜிக்களின் எஸ்.எஸ்.படையின் அதி உயர்ந்த தலைமையதிகாரி ஜெனரல் ரைன்ஹார்டு ஹைட்ரிச் [GENERAL.REINHARD HEYDRICH] மிக மிகக் கொடூரமானவன். செக் நாட்டுப் பிரஜைகளை சிரித்துக் கொண்டே விஷவாயு அறைகளுக்கு அனுப்பி மொத்தமாய் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவன். தன் கொலைப் பணியை அவன் ‘RIGHT PROTECTION’ என்று அழைப்பவன்.

நாஜிக்களின் புதிய அழைப்பானது, ‘BOHEMIA AND MARADIA’ என்ற ரகசிய வார்த்தைகள். அப்படியென்றால், ஜெனரல் ஹைட்ரிச் ஒட்டுமொத்த செக் பிரஜைகளையும் பட்டியலிட்டு சாவுக்கும் வாழ்வுக்குமிடையே ஓடவிட்டு அழிக்கும் முழுமையான சர்வ அதிகாரமுள்ள தலைவன் என்று பொருள் விரிவடைகிறது.

ஜெனரல் ஹைட்ரிச், நேரடியாகவும் நேருக்கு நேராகவும் ஹிட்லரோடு உரையாடக்கூடிய ஒருசில நெருக்கமானவர்களில் ஒருவன். மூன்றாவது ரீச் ஸ்டாகின் அடுத்த சான்ஸ்லர் பதவிக்கு அருகதை கொண்ட ஓரிருவரில் இவனது பெயரும் அடிபட்டது. இந்த ஜெனரல் ஹைட்ரிச்சை தீர்த்துக் கட்ட வேண்டும். அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளத்தான் இந்த மூவரையும் பிரிட்டனுக்கு நாடு கடந்த நிலையில் இயங்கி வந்த செக் அரசு அழைத்து ஒவ்வொருவரையும் கேள்விகளாலும் பார்வையாலும் சோதித்து திருப்தியுற்று பாராசூட் மூலம் செக் நாட்டு பனியடர்ந்த பகுதியில் இறக்கிவிடுகிறது. மூவரும் வெவ்வேறு இடங்களில் குதித்தானதும் தம்
பாராசூட்களை பனிக்குள் பதுக்கி வைக்கின்றனர். தங்களுக்கான தொடர்பு
மனிதர்களை எதிர்கொள்ளுகிறார்கள்.

ஹைட்ரிச் புறநகர்ப் பகுதியில் பெரிய மாளிகையில் மனைவி, எட்டு வயதுப் பெண் குழந்தையுடன் ஜெர்மனிய கௌரவம், மிடுக்கு, எஸ்.எஸ்.புன்சிரிப்புகளோடு செக் நாட்டு அடப்பக்காரர்கள் [MAKE UP MEN] துணைபுரிய மிகுந்த பாதுகாப்போடு
ப்ராக் நகருக்கு அதிகாலையிலேயே வந்துவிடுவான்.

சரியான திட்டமிடலின்றி, ஹைட்ரிச் பெர்லினுக்குப் பயணிக்கையில் அவனது பெட்டியின் ஜன்னல் வழியே குறி பார்க்கையில், மற்றொரு ரயில் கடந்து சென்று விடும் நிலையில் சுட முடியாமல் ஏமாற்றமடையும் கட்டம் அருமை. ஹைட்ரிச்சை நமக்கு அறிமுகப்படுத்தும் காட்சி அற்புதமாய் அமைக்கப்பட்டுள்ளது. தன் செக் நாட்டு அடப்பக்காரர்கள் காலையில் முக ஒப்பனை, உடை மாற்றம் செய்யும் பாங்கும், அதை நிலைக்கண்ணாடியில் ஹைட்ரிச் அப்படியும் இப்படியுமாய் திரும்பிப் பார்த்து திருப்திப்படும் காட்சியும் சுவாரசியமானது. ஒப்பனைக்கார செக் கலைஞர்களிலேயே ஓரிருவர் சந்தேகமானவர்கள். அவர்களும் உளவாளிகள் என்பது புரிபடுகிறது.

அனுதினமும் அவர் வெளியில் புறப்படுகையில் தன் எட்டு வயதுச் செல்ல மகளை ஒரு முறை தூக்கி வைத்துக் கொஞ்சி முத்தமிட்ட பிறகுதான் புறப்படுவார். அன்றும் அவ்வாறே. அவரது கார் தெருவில் வருகையில், முன்னால் பீரங்கி பொருத்தப்பட்ட
இராணுவக் கவச மோட்டார் ஒன்று முன்னால் போகும். பின்னால் ஒரு பாதுகாப்புப் படையினர் அமர்ந்த கார். ஹைட்ரிச் சற்று வேகமாய்ப் போய்விட விரும்பி முன்னால் போகும் கவச மோட்டாரைக் கடந்து முன்னால் போகிறது. அதிகாலை நேரமாதலால் போக்குவரத்து குறைவு. ட்ராம் வண்டிகள் மட்டுமே போவதும் வருவதுமாய். கார் ஒரு திருப்பத்தில் சிறிய வளைவில் சற்றே நிதானித்து வளையக்கூடிய இடமும் தருணமும்தான் கொலையைத் தாங்கும் இருவருக்குமான ஈசானிய மூலை. கார்
வேகத்தை மட்டுப்படுத்தி, எதிர் திசையில் வந்த ஒரு ட்ராமையும்
தாண்டி தனித்து வருகிறது.

எந்திரத் துப்பாக்கி வைத்திருக்கும் ஜான் கூபிஸ் காலை வழி மறித்து ஹைட்ரிச்சைக் குறி பார்த்து துப்பாக்கியை இயக்க, அது இயங்குவதில்லை. ஏதோ திடீர்க் கோளாறு, மக்கார் செய்கிறது. இதற்குள் நிலைமையைச் சட்டென்று சமாளித்து ஜோசப் காப்சிக்,
தான் வைத்திருக்கும் கையெறி குண்டை காருக்குள் வீசிவிட்டு ஓடுகிறான். அவன் தெருவில் நின்ற பெண்கள் சைக்கிள் ஒன்றில் ஏறிப் பறந்து விடுகிறான். அந்த சைக்கிள் பள்ளிக்கூடச் சிறுமி ஒருத்திக்குச் சொந்தமானது. ஹைட்ரிச்சின் மெய்க்காவலன் காப்சிக்கை நோக்கிச் சுட்டதில் ஒரு காதுப் பக்கம் அடிபட்டு ரத்தம்
கசிகிறது. அது சைக்கிளின் கைப்பிடியில் தேங்கிக் கறை படருகிறது.

சைக்கிளை தன் தெருமுனையில் போட்டுவிட்டு தன் இருப்பிடத்தில் ஒளிகிறான். கூபிஸ் படுவேகமாய் ஓடினபடியே தன்னைத் துரத்தி வரும் ஜெர்மன் ஜெஸ்டபோ (போலீஸ்) திரும்பச் சுடுகிறான். ஓர் ஆற்றுப் பாலத்தில் ஓடுகையில் கூபிஸ் ஜெஸ்ட போவை சுட்டு வீழ்த்திவிட்டுத் தப்பிவிடுகிறான். அதே சமயம் விபத்தில் சேதமடைந்த கார் அருகே ஒரு ட்ராம் நிற்க… அதிலுள்ளவர்கள் திகிலோடு வேடிக்கை பார்க்கும் காட்சியும் பிரமாதம். செக் நாட்டையே கலங்கடித்து வந்த எஸ்.எஸ். ஜெனரல் குண்டடிபட்டு இரத்தத்தில் சிதைந்த காரில். வேறொரு சாதாரண பாரம் சுமக்கும்
டெம்போ வண்டியில் ஹைட்ரிச்சை வாரித் தூக்கி அள்ளித் தள்ளிக் கிடத்தி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் கோலமும் சிறந்ததொரு விடம்பனம். ஜெனரல் இறந்து போகிறான். மரண ஊர்வலம் முடிந்த கையோடு கொலைகாரர்கள் மோப்பம் பிடித்து வேட்டையாடப்படுவதுதான் முக்கியமான முக்கால் பகுதி படம்
எனலாம்.

இப்போது ஒரு பெரிய திருப்பம். மீசைக்கார குர்டா பெண்டாட்டி – பிள்ளைப் பாசத்தில் மாட்டிக்கொண்டவனாய் குடும்பத்தைவிட்டுப் பிரிய மனமின்றி, தயங்கி மனம் தத்தளித்து, ப்ராக் நகரிலுள்ள ஜெர்மன் ராணுவத்தின் எஸ்.எஸ். முகாமுக்குள் நுழைந்து, ஹைட்ரிச் கொலை விஷயமாய் சில தகவல்களைக் கூற விரும்புவதாய்
சொல்லுகிறான். அவனை எஸ்.எஸ். அதிகாரியிடம் அழைத்துச் செல்லுகின்றனர்.

கேள்வி – பதில் தொடங்குகிறது. “நீ உண்மையைத் தெரிவிக்க காரணம்?” “என் மனைவியையும் ஆண் குழந்தையையும் மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக.”
அப்படியும் அவர்கள் நம்பிவிடாமல் குர்டாவை அடித்து நொறுக்கிவிட்டுத்தான் தேடுதலில் ஈடுபடுகிறார்கள். ஆபத்து வந்து விட்டதையறிந்து மற்ற இருவரும் தங்கியிருந்த இடத்திலிருந்து நழுவி பெரிய தேவாலயத்துக்குள் தஞ்சமடைகிறார்கள்.

தேவாலயப் பாதிரியாரும் நாஜி எதிர்ப்பாளரே. அவர் இவர்களுக்கு அடைக்கலமளித்து பாதாள அறைக்குள் மறைந்திருக்க வைத்திருக்கிறார். ஆனால் இந்த விவரங்களையும் குர்டா முன்பே அறிந்தவனாதலால் ஜெஸ்டபோவினரிடம் சொல்லிவிடவே…
தேவாலயத்தை இராணுவம் சூழ்ந்துகொண்டு பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. நிறையவே ஜெர்மன் வீரர்கள் இறக்கிறார்கள். பாதிரியார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

ஆனால் இறுதிவரை எதையும் வெளியிடுவதில்லை. இறுதிச் சண்டை மயிர்க்கூச்சிட வைக்கிறது. அவர்கள் இருவரும் பதுங்கியுள்ள பாதாள அறைக்குள் தீயணைப்பான் என்ஜின் தண்ணீர்க் குழாயை இறக்கி தண்ணீரைப் பாய்ச்சுகிறார்கள். அந்த கீழ்த்தளம் தண்ணீரால் நிரப்பப்பட்டு, தண்ணீரின் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இறுதியில் கழுத்தளவு நீர் உயருகையில் வேறு வழியின்றி இருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டே புன்னகையோடு சாகிறார்கள். வெளியே ஊரே கூடி திகிலோடு பார்க்க, “அவ்வளவுதான், முடிந்து விட்டது. நீங்கள் போகலாம்”, என்கிறது இராணுவம். பிரஜைகள் கலைகிறார்கள். இருவரில் ஒருவனின் காதலியும், சைக்கிளின் சொந்தக்காரப் பெண்ணும் கடைசியாக மனமில்லாமல் மெதுவாக
நடக்கிறார்கள்.

சின்னக் காதல் சம்பவமும் தொட்டுக்கொள்ள வடுமாங்காயாக, ஒரு சில உணர்ச்சிமிக்க கட்டங்களோடு கச்சிதமாய் அமைந்துள்ளது.

செக்கோஸ்லோவாகியாவின் ப்ராக் நகரிலுள்ள பர்ரான்டோவ் [BARRANDOv] ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் லிடிட்ஜ் கிராமம் முற்றிலும் நாஜிக்களால் அழிக்கப்பட்டு பிறகு யுத்தம் ஓய்ந்தபின் சோவியத் யூனியன் உதவியுடன் முற்றிலும்
புதுப்பிக்கப்பட்ட தகவல் படத்தின் முடிவில் அறிவிக்கப்படுகிறது. செக் புதிய அலை சினிமா உலகின் மற்ற எல்லா நாடுகளிலும் புதிய அலை தோன்றிய காலத்திலும் வேகத்திலும் ஏற்பட்டு அதே வேகத்திலும் காலப் போக்கிலும் தணிந்து மறைந்தது.

Jiří Menzel | dafilms.com
ஜிரி மென்ஜெல் {JIRI MENZEL}

இந்த வேகத்திலும் காலத்திலும் பார்க்க நேர்ந்த சில திரைப்படங்களையும் அதை ஆக்கிய மாபெரும் செக் திரைப்பட மேதைகளையும் மறக்க முடியாது. அவர்களில் மிக முக்கியமான திரைப்படக் கலைஞர்- இயக்குனர் ஜிரி மென்ஜெல் [JIRI MENZEL].

ஜிரி மென்ஜெல் 1938- ல் செக் நாட்டுத் தலைநகர் ப்ராக் நகரில் பிறந்தவர். இவர் செக் புதிய அலை சினிமாவின் முன்னோடி. ஒரு நடிகராகவும் இயக்குனராயுமிருந்து வந்தவர். திரைப்பட இயக்கக் கலைப்படிப்பை ஜிரி ப்ராக் நகரில் 1962-ல் படித்துத் தேர்ந்தார். இவர் தயாரித்து இயக்கிய திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது ‘உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ரெயில்கள்’ [CLOSELY WATCHEDClosely Watched Trains - The Criterion Channel TRAINS] என்ற செக் மொழியிலும் ஜெர்மனியிலும் எடுக்கப்பட்ட 2-வது உலகப்போர் பின்னணியிலமைந்த கருப்பு-வெள்ளைத் திரைப்படம்.

தனது திரைப்படக் கலை வழியே ஒவ்வொரு திரைப்படத்தையும் சிரிப்பும் கண்ணீரும் கலந்ததாய் இன்பியலும் துன்பியலும் இணைந்த விதமாய் அசிரத்தையும் சிரத்தையும் மிக்கதாய் செய்யக்கூடியவர் மென்ஜெல். இவருக்கு ஓரளவுக்கு இணையான திறனும் புகழும் படைப்பு ரீதியாக தனித்துவமும் உடைய இவரது சமகால செக்கோஸ்லோவாகிய திரைப்பட மேதை மிலோஸ் ஃபோர்மன் [MILOS FORMAN].

பொருளாதார ஆதாயம் கருதி மேற்கு நாடுகளில் போய் சேர்ந்துவிட்ட மிலோஸ் ஃபோர்மன் பேரில் செக் குடியரசில் கண்டன விமர்சனங்களுண்டு. எப்பொழுதெல்லாம் பொருள் வசதி, இதர தடைகளால் திரைப்படமெடுப்பதில் குந்தகம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஜிரி மென்ஜெல் நாடக மேடையேறிவிடுவார்.

Larks on a String / Skrivánci na niti 1969 | Download movie
‘LARKS ON A STRING

ப்ராக் நாடக அரங்கு [PRAGUE THEATRE] புகழ்பெற்ற கிழக்கு ஐரோப்பிய அரங்குகளில் ஒன்று. இங்கு அவர் இயக்கிய நாடகங்கள் அவரது திரைப்படங்கள் போலவே உயர்ந்த நகைச்சுவையும் இறுக்கமான கதையுமாய் மிக்க வரவேற்பையும் பாராட்டையும் பெற்றவை. இவரது 1969-ம் ஆண்டு திரைப்படம் ‘LARKS ON A STRING’ செக் குடியரசில் 20 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டு 1990-ல்தான் பொதுத் திரையிடல் பெற்று பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக்கரடி பரிசு பெற்றது. ஆனாலும் இவரது திரைப்படக் கன்னிமுயற்சியான, ‘க்ளோஸ்லி வாட்ச்டு ட்ரெய்ன்ஸ்’ பெற்ற அளவு புகழை அவரது மற்ற படங்கள் பெறவில்லை. இவர் தம் உக்கிரமிக்க சோக முடிவு கொண்ட திரைப்படங்களிலும் நகைச்சுவையைக் கலந்து சோகத்தின் அடர்த்தியை தணியச் செய்ததைப் பற்றி விவரிக்கையில், “ஷேக்ஸ்பியரின் மிகுந்த சோகமான
கதாநாயகனைக்கொண்ட ஹாம்லெட் நாடகத்தை செக் மொழியில் அரங்கேற்றினபோதும் நான் அதில் நகைச்சுவையை புகுத்தியிருக்கிறேன்”, என்கிறார் மென்ஜெல்.

Bohumil Hrabal (Author of Too Loud a Solitude)
போஹுமில் ஹ்ராபல் {BOHUMIL HRABAL}

CLOSELY WATCHED TRAINS – செக் நாவலாசிரியர் போஹுமில் ஹ்ராபல் [BOHUMIL HRABAL] என்பவரின் நாவலைக்கொண்டு உருவான படம். ஷ்ராபல் மென்ஜெலுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். திரைக்கதை உருவாக்கத்திலும் இருவரும் இணைந்தே பணியாற்றியவர்கள். இந்தப் படம் மென்ஜெலின் கன்னி முயற்சி. 1967-ல் 1966-ன் மிகச் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் பரிசையும் விருதையும் இந்தப் படம் பெற்றபோது, “இந்த எல்லா பெருமையும் படத்தின் மூல நாவலின் ஆசிரியர் போஹுமில் ஹ்ராபலுக்கே உரித்தானது”, என்றார் மென்ஜெல். அதே சமயம் நாவலாசிரியர் தனக்கு தன் அசல் நாவலைவிட திரைப்படம்தான் மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.

நாவல் செக்கோஸ்லோவாகியா, ஜெர்மன் நாஜிக்களின் ஆக்கிரமிப்பிலிருந்த 2-ம் உலக யுத்த சூழலையும், செக் தேசாபிமானிகள் நாஜிக்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியதையும் சொல்லுகிறது. அதே சமயம் ஜிரி மென்ஜெல் இவற்றை தம் திரைப்படத்தில் அதி நாசூக்காக – மிகவும் ஒதுங்கியே நின்று காட்டுகிறார்.

சத்யஜித் ரே தம் படங்களில் 60-70களின் கல்கத்தாவை – நக்ஸலைட் போராட்டத்தை எட்ட நின்றே காட்டியதுபோல… செக் நாட்டின் ஜெர்மன் ஆக்கிரமிப்பை எதிர்த்த
தியாகிகளின் பணியை இதற்கு முன் வெளி வந்த செக் திரைப்படங்கள் பலதிலும் வீர சாகசமிக்க காட்சிக் கூறகளால் சொல்லியிருக்கிறார்கள். மென்ஜெல் இந்த அந்நிய ஆக்கிரமிப்புக் காலத்தையும் சூழலையும் நேரடியாக இல்லாமல் ஒருக்களித்தாற்
போன்ற நிலையிலும் விடம்பமான கோணத்திலும் யுத்தத்தின் வீர தீர சாகச உண்மையை மறைபொருளாக்கி, அந்த நிதர்சனத்தின் கட்டுமானத்தை மிகவும் குறைத்திருக்கிறார். அழகியல் கூடுதலாகிறது. “பெரும்பான்மை திரைப்படங்கள் – நோக்கம் அவ்வாறு இல்லாவிட்டாலுங்கூட – யுத்தத்தை மிக்க பகட்டுத்தனமாக்குபவை. எனக்கு அதுவல்ல முக்கியம், என் படம் ஹீரோக்களைப் பற்றியதல்ல”, என்கிறார் ஜிரி.Jiří Menzel's Witty Subversions | Current | The Criterion Collection

2018-ல் ஜிரி மென்ஜெல் பற்றி புகழ்பெற்ற ஆவணத் திரைப்பட இயக்குநர் ஷிவேந்திர சிங் துங்கர்பூர் [SHIVENDRA SINGH DUNGARPUR] அரிய ஆவணப்படம் தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்திய திரைப்படங்களுக்கான ஆவணக்காப்பகம் ஒன்றை
ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, வங்கத் திரைப்படங்களின் அசல் செல்லுலாயிடு ஃபிலிம் சுருள்களை சேகரித்து சேமித்து அதை இந்திய தேசிய ஃபிலிம் சுருள் காப்பகமாய் ஆக்கி வைத்து அதன் தலைவராக தம் இறுதி மூச்சு வரையிருந்த ‘CELLULOIDMAN’ என்ற பட்டம்
பெற்ற காலஞ்சென்ற திரு P.K.நாயர் அவர்களுக்கான மிகச் சிறந்த ஆவணப்படம் செய்தவர் இந்த ஷிவேந்திர சிங் துங்கர்பூர்.

ஜிரி மென்ஜெல் தம் 82 -வயதில் ப்ராக் நகரில் 2020-ல் காலமானார்.படம்Jiří Menzel zrežíroval aj náš život - Film a televízia - Kultúra - Pravda தொடங்கும்போது, மிலோஸ் ஹர்மா [MILOS HERMA] எனும் இளைஞன் தன் விருப்பப்படி ரெயில்வே கார்டு வேலையில் சேர்ந்து பயிற்சியாளனாகப் பணிபுரிய கார்டு சீருடையை அணிகிறான். இவன் குள்ளம் – சீருடைக் கோட்டு கூடுதல்
நீளம்போலத் தெரிகிறது. ஆனாலும் அவனுக்கு அந்த ரெயில்வே உத்தியோகமும் சீருடையும் அணிந்த கோடி புளகாங்கிதத்தை ‘ஜிவ்’ வேற்றுகிறது. மிலோஸ் பாத்திரத்தில் நடிக்கும் வாக்ளாவ் நெக்கார் [VACLAV NECKAR] தன் அகலத் திறந்து விரிந்த ஆச்சரியக் கண்களோடு தலையிலிருக்கும் ரெயில்வே தொப்பியை என்றென்றும் அகற்றா தோற்றத்தில் பழைய அமெரிக்கச் சிரிப்பு + சீரியஸ் நடிகர்
பஸ்டர் கீடன் [BUSTER KEATON] போன்ற சாயலில் அற்புதமாய் செய்திருக்கிறார்.

மிலோனின் குடும்பம் பாரம்பரிய சிறு வரலாறு கொண்டது. அவனது கொள்ளுத் தாத்தா லூக்காஸ் நடைபாதையில் ஜால்ரா [TAMBOUR] தட்டிக்கொண்டு யாசகம் வாங்கியவர். இவன் தாத்தா வில்லியம் மனிதர்களை வசியம் செய்யக்கூடிய
ஹிப்னாட்டிஸ்டாயிருந்தவர். இவனது தந்தை பணியிலிருந்து ஓய்வுபெற்ற ரெயில்வே என்ஜின் டிரைவர். அனைவரும் உயிருடனில்லை.

மிலோஸ் ஹர்மாவுக்கு மாஸா [MASA] எனும் ஓர் இளம் பெண்ணோடு காதல். மாஸா உள்ளூர் ரெயில் ஒன்றில் பெண் நடத்துனர் பணியிலிருப்பவள். அவ்வப்போது முத்தம் தருவாள். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு பழைய குடாக். பெரிய மரக்கூண்டு வைத்து புறாக்களை வளர்க்கும் அவர், ரெயில்வே ஸ்டேஷனைவிட புறாக்களைப் பறக்கவிடுவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டுபவர். மிலோஸின் சீனியர் கார்டு ஹுபிகா [HUBIKA] பல விஷயங்களில் தாராளமானவர். அவரது பரந்த மனப்பான்மை பெண்கள் விஷயத்தில் கூடுதல். அதே சமயம் செக் நாட்டில் ஹிட்லரின் ஜெர்மன் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்துப் போராடும் குழுவினர் கார்டு ஹுபிகாவையும் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கச் செய்கின்றனர்.

ஒருநாள் மிலோஸை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று காதல் விருந்தோம்பல் செய்கிறாள் மாஸா. சட்டென்று மிலோஸ் உணர்ச்சி வசப்பட்டு சக்தியிழந்துபோய் குப்புறப் படுத்துக்கொள்ளுகிறான். மாஸாவுக்கு ஒன்றும் புரிவதில்லை. ஒரேயொரு ஆழமான முத்தமும் அரவணைப்புமே அவனுக்கு துரித ஸ்கலிதம் ஏற்பட்டு சட்டென்று
ஒருவித தாழ்வு மனப்பான்மையும் சேர… மிலோஸ் அந்தப் பெண்ணைப் பார்க்கவும் தைரியமற்றவனாய் குப்புறப் படுத்துக்கொள்ளகிறான். மாஸா புரிந்துகொண்டவளாக தன் தலையணைகள் – விரிப்புகளை எடுத்துக்கொண்டு ஒரு மூலையில் போய் படுத்துக் கொள்ளுகிறாள். மிலோஸுக்கு ஒரு பயமும் வெறுப்பும் சேரவும், இரு மணிக்கட்டுகளிலும் கத்தியால் கீறி தற்கொலை புரிந்துகொள்ள முயற்சிக்கிறான்.

பிறகுதான் அதை வெளியிடத் தொடங்குகிறான். ஒரு ரெயில் டம்மி [DUMMY LINE] தனித்த இருப்புப்பாதையில் ஓரங்கட்டப்படுகிறது. அது இளம் பெண் நர்சுகளுக்கான சிறப்பு ரெயில். அதன் பெட்டிகளிலிருந்து கொஞ்சம் நர்சுகள் இறங்குவதும்
ஏறிப்போவதுமாய். அதே சமயம் யுத்தம் ஓயும் காலமாதலால் நாஜி சிப்பாய்கள் நிறைந்த ரெயிலொன்றும் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய ஜெர்மன் இராணுவத்தினர் ஒரு பத்து பேர் வெகுகாலம் போர்க்களத்திலிருந்துவிட்டு ஊர் திரும்பும் உற்சாகத்திலும் பெண்களை நீண்ட இடைவெளிக்குப்பின் பார்த்த வேகத்திலுமாய் நர்சுகள் பெட்டியில் கொஞ்சமாய் வரவேற்கப்பட்டவர்களாயும் தாவி
ஏறுகின்றனர். இந்தக் காட்சியில்கூட ஜிரிமென்ஜெல் எவ்வித வியாபார நோக்கமும் விமர்சனக் கைதட்டலோ விரும்பாதவராய் ஆல்பெர்டோ மொரேவியா – விட்டோரியா டிசிகாக்களின் [TWO WOMEN] பார்வையிலிருந்து முற்றிலும் விலகிய இயக்குனராய்
நடந்து கொள்ளுகிறார்.

இப்போது மிலோஸ், ஹுபிகாவை அணுகி தன் பிரச்சினையைச் சொல்ல, அவர் ‘இதெல்லாம் இளம் வயதில் சகஜம்’ என்று சமாதானப்படுத்துகிறார். இந்த உடல்-மனம் பலவீனத்துக்கு தக்க பரிகாரம் தேட, உடலுறவில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த சற்று வயதான பெண்ணை அணுகி யோசனை பெறுமாறு சொல்லுகிறார் ஹுபிகா. மிலோஸ் அத்தகைய பெண்ணாக ஒருத்தியை அணுகி தன் பிரச்சினையைச் சொல்லி பரிகாரம் கேட்கிறான். அவளோ தனக்குத் தெரியாதென்று கூறிவிடுகிறாள்.

‘இதை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்ளுகிறான் மிலோஸ். இது மிக முக்கியமான உளவியல் சமாச்சாரம். மைதானத்தில் ஆண்களின் செக்ஸ் பலவீனத்தைப்  பச்சையாகப் பட்டியலிட்டு விவரித்து தன் தாது புஷ்டி அல்வா – லேகியங்களை துரித வியாபாரம் செய்யும் அரைகுறை நாட்டு வைத்தியன் தவறாமல் சொல்லுவது- “இங்கே பப்ளிக்கா சொல்லிக்கிறதுக்கு வெட்கப்படறவங்க என்னை என் மூம்ல வந்து பாக்கலாம். இந்த நோட்டீசில ரூம் அட்ரஸ்ஸிருக்கு” நோட்டீசுக்குப் பறப்பார்கள்…

மிலோஸ் வெளியேறுகையில் சற்று நின்று அந்த வயதான பெண்ணை ஒருகணம் திரும்பிப் பார்ப்பான். இதில் அவனது மனம் வெளிப்படுகிறது. அற்புதமான டைரக்ஷன். இதுபோன்ற காட்சிகளில் அந்தப் பாத்திரத்தின்மேல் நமக்கு சிரிப்புக்குப் பதில் கழிவிறக்கமே எஞ்சி நிற்கிறது. கடைசியாக ஹுபிகா தனக்கு நன்கு பரிச்சியமுள்ள நடுத்தர வயது வேசி ஒருவளிடம் இப்படியென்று கூறி மிலோஸை
‘கவுன்சிலிங்கு’ பெற அனுப்புகிறான். அவள் இவனை சமாதானப்படுத்தி, நிதானப்படுத்தி “சொல்லித் தெரிவதும்தான் மன்மதக்கலை” என்று தன் தொழில்ரீதியாக உபதேசித்து அருகில் படுக்க வைத்து மிலோஸை தேற்றியனுப்புகிறாள்.

படம் 2-ம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தின் சூழலில் இருப்பதை நினைவூட்ட ஒரு விமானத் தாக்குதல் நடக்கிறது. தந்தி அலுவலகம் சிதறுகிறது. தந்தி சிப்பந்தி ஒரு பெண். ஹோலி ஸெடென்கா [HOLY ZDENKA] என்ற இந்த டெலிகிராஃபிஸ்டு
பெண் ஹுபிகாவிடம் சாய்கிறாள். அவளை காலிலிருந்து தொடை, புட்டம்
என்று படுக்கவைத்த நிலையில் ஆடையை நீக்கி வெற்றுடம்பில் ரெயில்வே ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளால் முத்திரை வைக்கிறான் கார்டு ஹுபிகா. இது ஒருவித வக்கரித்த பாலுணர்வு வகைமையெனக் கருதப்பட்டு அவனை விசாரணை நடத்த
நாஜியதிகாரியின் தலைமையில் ஒரு கமிட்டி வருகிறது. பெண்ணின் நிர்வாண உடல் பகுதிகளில் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகள் குத்திய விவகாரம் விசாரணைக்குட்படுகிறது. அந்த நேரத்தில் விக்டோரியா ஃப்ரையே [VIKTORIA FREIE] என்ற பெண் ஹுபிகாவிடம் ஒரு பார்சலைக் கொண்டு வந்து தந்துவிட்டுப் போகிறாள்.

விசாரணைக்குழு வருவதற்குள் அதைப் பிரித்துப் பார்க்கிறான் ஹுபிகா. அது சக்திவாய்ந்த வெடி குண்டு இயந்திரம். அந்தப் பெண் மெதுவாகக் கூறுகிறாள்:

“இருபத்தெட்டு வேகன்களில் துப்பாக்கிக் குண்டுகள், எறிகுண்டுகள் நிரம்பிய சரக்கு ரெயில் கடந்துபோக இருக்கு. அதை வெடித்துச் சிதறடிக்க இந்த டைம்பாம்.”
கார்டு ஹுபிகா புன்சிரிப்போடு அதை மிலோஸிடம் தந்துவிட்டு விவரம் விளக்கி அதை இயக்கும் முறையைக் கூறி சிக்னல் இருக்கும் அட்டத்தில் ஏறி, கீழே சரக்கு ரயில் கடக்கையில் அதனுள் குண்டை வீசிவிடச் சொல்லுகிறான். மிலோஸும் மகிழ்ச்சியோடு அதை ஏந்திச் செல்லுகிறான்.

விசாரணைக்குழு வயதான ஜெர்மன் நாஜி அதிகாரியின் தலைமையில் வந்து கூடி ஹோலியை விசாரிக்கிறது. அவள் ஹுபிகா தன் அந்தரங்க உடல் பகுதிகளில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி மகிழ்ந்ததை ஒவ்வொரு கேள்விக்கும் தக்கபடி தன் உடலின் பாகங்களைச் சொல்லி ஒப்புக்கொள்ளுவதோடு அச்செயலை உண்மையில்
ஏற்றுக்கொண்டு சுகம் அனுபவித்தவளாகவே காணப்படுகிறாள்.

வெடிகுண்டோடு போகும் மிலோஸை ரயில் கண்டக்டர் பெண் மாஸா எதிர்கொண்டு, மகிழ்ச்சி ததும்ப, “அன்றைக்கு நடந்ததில் எனக்கு வருத்தமில்லை. நீ மீண்டும் என்னை முயற்சி செய்”, என்று ஊக்கப்படுத்துகிறாள்.

“நீ போய் விடு. நாஜி சரக்கு ரெயில் வருகிறது. அதை அனுப்பிவிட்டு வருகிறேன்”, என்கிறான் மிலோஸ். “இல்லை நான் இங்கேயே இருக்கிறேன். நீ சிக்கிரம் வா”
என்கிறாள் மாஸா.

மிலோஸ் படியேறி சிக்னல் தளத்தையடையவும் ஆயுதங்கள், குண்டுகள் ஏற்றிய நாஜி சரக்கு ரெயில் அவனிருக்கும் மேல்தளத்துக்கு நேர் கீழே வரவும் சரியாயிருக்கிறது. மெதுவாக வெடிகுண்டை சரக்கு ரெயிலின் திறந்த நிலையில் கடக்கும் வேகனில்
போடுகிறான். அதை ரெயில் பெட்டிக்குள் பதுங்கியுள்ள ஜெர்மன் ராணுவச் சிப்பாய் ஒருவன் கவனித்துவிட்டு உடனே எந்திரத் துப்பாக்கியால் மிலோஸை சுட்டுத்தள்ள, மிலோஸின் உடல் வெடிகுண்டோடு நகரும் சரக்கு ரெயிலிலேயே விழுகிறது. ஓரிரு
நிமிடங்கள் கழித்து ஜெர்மன் ராணுவ சரக்கு ரெயில் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறுகிறது. மிலோஸின் உடலிருந்த பெட்டியிலிருந்து சிதறிப் பறக்கும் பல்வேறு பொருள்களோடு அவனது தொப்பி, வெடியின் தாக்கத்தில் பிய்த்துப் பறந்து வந்து
அவனுக்காகக் காத்து உட்கார்ந்திருக்கும் மாஸாவின் கைகளில்விழுகிறது.

இந்த அரிய செக்கோஸ்லோவாகிய திரைப்படத்தின் உயர்ந்த ஒளிப்பதிவை செக் கேமிரா கலைஞர் ஜரோமிர் சோஃபர் [JAROMIR SOFR] செய்திருக்கிறார். வாக்ளாவ் நெக்கர் [VACLAV NECKAR] என்ற நடிகர் மிலோஸாக நன்றாக நடித்துள்ளார். சீனியர் கார்டு ஹுபிகா பாத்திரத்தில் ஜோசஃப் சோமர் [JOSEF SOMAR]
பரவாயில்லை.

செக்கோஸ்லோவாகியாவின் மற்றொரு குறிப்பிடத்தக்க திரைப்படகர்த்தா ஃப்ராண்டிசெக் வ்ளாசில் [FRANTISEK VLACIL]. இவர் செஸ்கி டேபின் [CESKY TEBIN] என்ற ஊரில் 1924-ல் பிறந்தார். ஓர் ஓவியர் பதிப்போவியர். ஒடகர் கிரிச்னெர் [OTAKAR KIRHNER] என்ற செக் எழுத்தாளரின் சிறுகதையைத் தழுவி இவர்The White Dove / Holubice (1960) Czechoslovakia drama movie DVD
1960-ல் ‘ஹோலுபைஸ்’ [HOLUBICE] என்ற முழு நீள திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். ஹோலுபைஸ் என்றால் வெண்புறா என்று பொருள். இவரது கன்னி முயற்சியான வெண்புறா அவரை ஒரு நல்ல திரைப்பட இயக்குனர் என்று அடையாளம் காட்டிற்று. அதன்பிறகு அந்த அடையாளம் அவரை மேலும்
சிகரத்துக்கு இட்டுச் சென்ற படம் ‘அடல்ஹைட்’ [ADELHEID]. இது இவருக்கு முதல் வண்ணப்படமும் சர்வதேச திரைப்பட விழாவில் பரிசு வாங்கித் தந்த படமுமாகும்.

விளாடிமிரா கோர்நெரா [VILADIMIRA KORNERA] என்ற பெண் எழுத்தாளரின் நாவலைக்கொண்டு 1969-ல் ஃப்ராண்டிசெக் வ்ளாசில் இயக்கிய திரைப்படம் ‘அடல் ஹைட்’. வ்ளாசில் 1999-ல் காலமானார். 2-வது உலகப்போர் அப்போதுதான் முடிவுக்கு
வந்திருந்த தருணம். நாஜிக் குற்றவாளிகள் பிடிபட்டு நியூரெம்பர்க் முதலான இடங்களில் விசாரணை, தீர்ப்புகள் முடிந்து மரண தண்டனை, ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வந்தன. அர்ஜெண்டினா முதலான நாடுகளுக்கு தப்பியோடிவிட்ட வாஃபன் எஸ்.எஸ். தலைவர்கள் வேட்டையாடப்பட்டு வந்தனர். ஒரு
ரெயில் செக்கோஸ்லோவாகிய பயணிகளை ஏற்றிக்கொண்டு செக்- ஜெர்மன் நாட்டு எல்லைப்புற ஊர் ஒன்றை நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில் செக் ராணுவ போலீசால் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரையும் வண்டியைவிட்டு இறங்கச்
செய்கின்றனர். சோதனையும் நடக்கிறது. ஒரே ஒருவன் மட்டும் பதிலும் பேசுவதில்லை, இறங்கவும் மறுக்கிறான்.

“அவனோட டிரஸ்ஸப் பாரு. ஜெர்ரி போலத்தானிருக்கிறான். இறங்குடா!” என்கிறான் போலீஸ். இறங்குகையில் நிகழ்ந்த வாக்குவாதத்தில் போலீஸ் தன் துப்பாக்கி மட்டையால் மிகப் பலமாய் அந்தப் பயணியின் தலையில்  அடிக்க… அவன் ரத்தம் வழிய உருண்டு விழுகிறான். அவனை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

அடுத்த காட்சியில் அவனை அவ்வூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேஜ்னா [HEJNA] விசாரித்து பாஸ்போர்ட் முதலியவற்றைப் பரிசோதித்துவிட்டு அவனை, “எங்கே தங்கப் போறாய்?” என்று கேட்கிறார். அவன் ஒரு வீட்டின்
விலாசத்தைச் சொல்ல, அவர் அவனை போக அனுமதிக்கிறார். அவர் அவனை மரியாதையுடன் நடத்துகிறார். அவன் பிரிட்டன் ராயல் ஏர்ஃபோர்ஸோடு இணைந்து ஜெர்மன் இராணுவத்துக்கு எதிராகப் போர்புரிந்த செக்கோஸ்லோவாகிய விமானப்படை அதிகாரியான விக்டர் சோடோவிகி [VICTOR CHOTOVICKY]. அவன் அந்த மாபெரும் மாளிகையை அடைகிறான். மாளிகையின் பல அறைகளையும் ஆராய்கிறான். அதன் அமைப்பும் அதிலுள்ள சகல பொருட்களும் நிச்சயம் அது ஒரு பெரிய யூத செல்வர் ஒருவருக்குச் சொந்தமானது என உறுதியாக நினைக்க வைக்கின்றன. ஓர் அறை பிரமாண்டமான நூலகமாய்த் தோன்றுகிறது.

நூற்றாண்டைக் கடந்த தோல் பைண்டிங் செய்த அதி அற்புத புத்தகங்கள் ஜெர்மன்,
ஆங்கிலம், செக் மொழிகளிலான அவை அடுக்கப்பட்டுள்ளன. சட்டென்று மேல்வரிசையிலிருந்து நான்கைந்து புத்தகங்களை உருவியெடுக்கவும், அவற்றுக்குப் பின்னால் மிக உயர்தரமான அயல்நாட்டு மதுபாட்டில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதை விக்டர் பார்க்கிறான். சீல் உடைக்கப்படாத சரக்கு. அடுத்துள்ள புத்தகங்களை எடுத்தால் அதற்குப் பின்னாலும் மற்றொரு அயல் நாட்டுச் சரக்கு பாட்டில் விஸ்கி, ரம், ஓட்கா, பிராண்டி என விதவிதமான பெரிய மதுபுட்டிகள் நான்கு புத்தகங்களுக்கு ஒன்று வீதம் அந்த அலமாரியில் ஒளித்து வைத்திருக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவன் எல்லாவற்றையும் மேஜைமேல் வைக்கிறான்.

அப்போது கீழே ஏதோ சத்தம் கேட்கவே… இறங்கிப் பார்க்கிறான். ஒரு திடகாத்திரமான இளம்பெண் அங்குள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். அவளும் இவனைப் பார்க்கிறாள்.

“யார் நீ?” என்று இவன் செக் மொழியில் கேட்க… அவள் பேசாமல் விழிக்கிறாள்.
“செக் தெரியாதா?” – இதற்கும் பதிலில்லை. “ஜெர்மனா?” ஆமாம் எனத் தலையாட்டுகிறாள் அப்போது இன்ஸ்பெக்டர் ஹேஜ்னா மோட்டார் சைக்கிளில்
வந்திறங்குகிறார். அவர் சரியான மது மோகி. பாட்டில்களைப் பார்த்துவிட்டு விசாரிக்கிறார். அவன் கூறியதைக் கேட்டுவிட்டு சொன்னார் இன்ஸ்பெக்டர்:

“இந்த வீடு யூதப் பிரபு ஒருவனுடையது. அவனை மரண வாயுக் கிடங்கில் தள்ளிவிட்டு இந்த மாபெரும் வீட்டை அபகரித்து வாழ்ந்தவன் ஹீனமான்.”

“யார் ஹீனமான்?” “தெரியாதா? புகழ்வாய்ந்த நாஜி. ஏராளமான மக்களைக் கொன்ற
ஃபாசிஸ நாஜி.” ஹீனமான் [HEINAMANN] கொடுமையான ஜெர்மன் நாஜிகளில்
ஒருவன். “கீழே பாத்திரம், தரையெல்லாம் தேய்த்துச் சுத்தம் செய்யும் பெண், ஹீனமானுடைய ஒரே மகள். இவள் கைதி முகாமிலிருக்கிறாள். உனக்கு உதவியாக அனுப்பியிருக்கிறேன்.

காலை எட்டு மணிக்குத் தினமும் இங்கே வந்து சமையல், துணி துவைக்கிறது, வீட்டைத் தேய்ச்சி சுத்தம் பண்ணிட்டு சாயங்காலம் கைதி முகாமுக்குத் திரும்பிடனும்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்”, என்றார் இன்ஸ்பெக்டர். சரக்குப் புட்டியை வாங்கி குடித்து காலி செய்தார். “எனக்கு வயிற்றில் புண் இருப்பதால் குடிப்பதில்லை” என்கிறான் லெஃப்டினண்ட் விக்டர். அவர் போனதும் அந்தப்
பெண்ணை நெருங்கி “பெயர் என்ன?” என ஜெர்மனியில் கேட்டான். “அடல் ஹைட்”, என்றாள். அவளிடம் வீட்டுச் சாவியொன்று தரப்பட்டது.

இன்ஸ்பெக்டர் மாலை வந்து அடுத்த பாட்டிலைக் காலி செய்தபடியே ஹீனமான் பற்றி மேலும் பேசினார். அவனது குற்றங்களுக்காக விசாரணை, சாட்சியம், தீர்ப்பு எல்லாம் முடிந்து விரைவில் தூக்கிலிடப்பட இருக்கிறான். இந்தப் பெண்ணும் விசாரிக்கப்பட்டு சுடப்படலாம் என்கிறார் இன்ஸ்பெக்டர். நாட்கள் போக, விக்டரும் அடல்ஹைடும் தங்கள் தனிமையும் இளமையும் ஒன்று சேரத் துடிப்பதை உணர்கிறார்கள். மறுநாள்
இன்ஸ்பெக்டரிடம் புதிய மதுப்புட்டியொன்றைக் கொடுத்தபடியே தனக்கு இரவில் புதியதாக சாப்பாடு தயாரிக்கவேண்டுமென்று கூறி அடல்ஹைடை இரவு தங்க வைக்கும்படி கோருகிறான்.

யோசித்துவிட்டு சரியென்று ஒப்புதலளிக்கிறார் இன்ஸ்பெக்டர். அன்று முதல் அடல்ஹைட் அவனது படுக்கையை பகிர்ந்துக் கொள்ளுகிறாள். ஒருநாள் கருப்பு உடை தரித்த வயதான இரு பெண்கள் பைபிளோடு வந்து அடல்ஹைடை தனியாக அழைத்துச் சென்று ஒரு கடிதத்தைத் தருகிறார்கள். அதைப் படித்துவிட்டு அடல்ஹைட் சத்தமின்றி விசும்புகிறாள். விக்டர் வேகமாய்ச் சென்று விசாரிக்கிறான். அந்தக் கடிதத்திலிருக்கும் செய்தியை அவர்கள் கூறுகிறார்கள்.

“காலையில் அடல்ஹைடின் அப்பா ஹீனமான் தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டார்.” விக்டர் அவளைத் தொட்டு சமாதானப்படுத்துகிறான்.

இரண்டு நாட்கள் போனதும், குடிப்பதற்கு ஒரு போலீஸ்காரனை கூட அழைத்து வருகிறார் இன்ஸ்பெக்டர். சாப்பிடவும் ஏற்பாடு நடக்கிறது. வந்தவன் ஒருமாதிரி.

இன்ஸ்பெக்டர் அடல்ஹைடையும் குடிக்க அனுமதிக்கிறார். கூட அழைத்து வந்தவன் ஒருபுறமாய் படுத்து விடுகிறான். இன்ஸ்பெக்டரும் அதிகமாய்க் குடித்ததால்
படுத்துவிடுகிறார். அடல்ஹைடை தன் அறைக்கு அழைத்துப் போய்விடுகிறான் விக்டர்.

நள்ளிரவில் திடீரென துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்த விக்டர் கீழே வருகிறான். ஓர் அறையில் இன்ஸ்பெக்டர் சுடப்பட்டு ரத்து வெள்ளத்தில் கிடக்கிறார். ஓர் அறைக்குள் அந்நியன் ஒருவன் சிறு எந்திரத் துப்பாக்கியுடன் விக்டரைப் பார்த்ததும் சுடுகிறான். விக்டர் கதைவைச் சாத்திவிட்டு தரையில் கதவையொட்டி படுத்து விடுகிறான். அங்கு வந்து சேரும் அடல்ஹைட் ஒதுங்கி நிற்கிறாள். கதவைத் திறந்த அந்நியனை விக்டர் மடக்கித் தள்ளி இருவரும் பயங்கரமாய் சண்டையிடுகிறார்கள். அடல்ஹைட், “ஹான்ஸ் ஜார்ஜ்” [HANS GEORG] என்று கத்துகிறாள். பிறகு பெரிய இரும்புக்கோல் ஒன்றால் அந்த ஹான்ஸை அடித்துச் சாகடிக்கிறாள் அடல்ஹைட். போலீஸ் வருகிறது. ஒரு பெண்மணி விக்டரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறாள். “எனக்கும் யாருமேயில்லை. அடல்ஹைடுக்கும் யாருமில்லை.

அவள் அப்பாவி. அவளுக்கெதிராக நான் எதையும் சொல்வதிற்கில்லை” என்றே கூறுகிறான் விக்டர். அவளைத் தேடுகின்றனர். குளியலறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டிருக்கவே… உடைத்துத் திறக்கிறார்கள். அங்கே அடல்ஹைட்  தூக்கிலிட்டுக்கொண்டு பிணமாய்த் தொங்குகிறாள். லெஃப்டினண்ட் விக்டர் சோடோவிகியாக பீடர் செபெக் [PETRCEPEK ] என்பவரும் அடல்ஹைடாக எம்மா செர்னா [EMMA CERNA] என்பவரும் உணர்ச்சிகளை உள்ளுக்கு அமுக்கி கிழக்கு
ஐரோப்பிய நடிப்புப் பாணியில் முகத்தில் அரிதான பாவத்தை வெளிப்படுத்துகிறார்கள். இத்திரைப்படத்தின் சிறந்த வண்ண ஒளிப்பதிவை செக் கேமிரா கலைஞரான ஃப்ராண்டிசெக் உல்ரிச் [FRANTICEK ULRICH] சிறப்பாகச் செய்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

article Arul Narerikkuppam Venugopal Audio ayesha era natarasan Ayesha natarasan bharathi books Bharathi Publications Bharathi puthakalayam bharathi tv BJP Book day Bookday book review bookreview books Books Catalogue books for children catalogue children children story cinema corona virus coronavirus Covid -19 delhi education Era Ramanan Farmers Farmers Protest history India internet classroom interview kavithai Life Love mother Music Music life N.V.Arul narendra modi novel Online education People's Democracy poem Poems Poetries poetry Prof.T.ChandraGuru S.V. Venugopalan science Short Stories Shortstories short story Shortstory Speaking Book story Storytelling competition Suganthi Nadar Synopsis tamil article tamil books tamizh books thamizh books thamizhbooks Translation VeeraMani video web series கவிதை

Red Book Day 2024 in Tamilnadu