சோஷலிசம் என்ன செய்தது?
“எனக்குத் திருமணம் ஆனபோது, நாங்கள் புதிதாக ஒரு குடியிருப்பையும், வீட்டுக்கான மரச்சாமான்களையும் வாங்குவதற்காகக் கடன் பெற்றிருந்தோம். அந்தக் கடனை அடைக்க வேண்டிருந்ததால், நாங்கள் இருவருமே வேலைக்குப் போனோம். முதல் ஆண்டிலேயே எங்களுக்கு முதல் குழந்தை பிறந்துவிட்டது. “தாராளமான” 8 மாத பிரசவ விடுப்புக்குப் பிறகு, நான் வேலைக்குத் திரும்பினேன்.
அதிகாலை 5.30 மணிக்கு எங்கள் சின்னஞ்சிறு மகளை நான் மெல்ல எழுப்புவேன். காலை 6 மணிக்கே பகல்நேரக் குழந்தைகள் காப்பகம் திறந்துவிடும். டிராமில் அங்கு சென்றடைய 15 நிமிடங்கள் எடுக்கும். காப்பகம் சென்றதும் குழந்தைக்கு சீருடை அனுவித்துவிட்டு, 6.30 மணிக்கு என்னுடைய பணியிடத்தை அடைவதற்காகப் பேருந்தை அவசர அவசரமாகப் பிடிப்பேன். எனது மேல்கோட்டின் பாதி, பேருந்து கதவுக்கு வெளிப்புறம் மாட்டியிருக்கும் வகையில், பலசமயம் பேருந்தின் கதவு மூடிவிடும்.
மதியம் 2 மணிக்கு எனது கணவருக்கு வேலை முடிந்துவிட்டால், அவர் காப்பகத்திற்குப் போய் மகளை அழைத்துக்கொண்டு, கடைக்குப் போய் காய்கறி மளிகைபொருட்கள் வாங்கிக்கொண்டு, வீட்டுக்குப் போய் இரவு உணவை நேரத்திற்கே தயார் செய்வார். நான் ஐந்து மணிக்கு வீட்டுக்குத் திரும்புவேன். சாப்பிட்டுவிட்டு மகளைப் படுக்கையில் போட்டுவிட்டு நாங்கள் தூங்கச் செல்வோம். அந்த நாளின் அசதி எங்களை அசையவே விடாது. மறுநாளும் இதே சுழற்சி…”
இது ஒரு பெண் தொழிலாளியின் அனுபவப் பகிர்வு. எந்தக் காலத்தில், எந்த நாட்டில் இத்தகைய வாய்ப்புகள் அந்தப் பெண் தொழிலாளிக்குக் கிடைத்தன என்பதை உங்களால் கணிக்க முடியுமா?
சோஷலிசக் கொள்கையைப் பின்பற்றிய, கிழக்கு ஐரோப்பியத் தொகுதியின் அங்கமாக இருந்த செக்கோஸ்லொவேக்கியாவில், தனது அனுபவம் இவ்வாறுதான் இருந்தது! -இப்படி 1943-ல் செக் நாட்டில் பிறந்த ஒரு பெண்மணி 2017-ல் பகிர்ந்த தகவல் இது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மானுடவியல், கலாச்சார ஆய்வாளரும், ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய ஆய்வுப் பேராசிரியருமான, கிரிஸ்டென் காட்ஸீயிடம் அந்த முன்னாள் செக் நாட்டுப் பெண்மணி மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது.
சோஷலிச சமூகத்தில் பெண்களின் வேலைவாய்ப்பு, குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, பெண்களின் பாலுறவு, உறவுகள், குடியுரிமை, தலைமைத்துவம் எப்படி இருந்தது என்பதையும், முதலாளித்துவம் எப்படி பெண்களின் வாழ்க்கையை சிதைக்கிறது, பழைய அனுபவத்தில் இருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்ன என்பதையும் ஒரு சமூக ஜனநாயகவாதியின் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து பேராசிரியர் காட்ஸீ ‘Why women have better sex under socialism’ என்ற ஆய்வு நூலிலைப் படைத்துள்ளார். அந்த நூலில் இடம்பெற்ற முக்கியமான பதிவு இது.
ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தொழிலாளர் படையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக சோஷலிச அரசுகள், சமூகக் கட்டமைப்பில், சட்டங்களில் கொண்டு வந்த மாற்றங்கள் என்னென்ன? பெண்களின், குழந்தைகளின், சோஷலிச சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்த மாற்றங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தின?- என்பதை எல்லாம் புள்ளியியல் எண்ணிக்கையாக, தரவுகளாகப் படித்திருக்கிறேன். ஆனால், இந்தப் பெண்மணியின் பதிவு கண்களை ஈரமாக்கிவிட்டன. எப்படிப்பட்ட ஓர் உலகத்தை நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கப்பெருமூச்சை வரவழைத்தது.
தொடர்ச்சியான முதலாளித்துவ எதிர்ப்பிரச்சாரத்தாலும், சோஷலிச முகாமிற்குள் ஊடுருவிய முதலாளித்துவ சிந்தனைகள், முதலாளித்துவ தீயசக்திகளாலும், சோஷலிச முகாமிற்குள்ளேயே நிலவிய அதிதீவிரப் போக்காலும் சோவியத் யூனியன் இன்றைக்கு இல்லை. தொழிலாளர் புரட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோஷலிச அரசு தகர்ப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது.
இன்றைக்கு நவீன தாராளமய உலகில் பாட்டாளி வர்க்கம் மிகக் கொடூரமான சுரண்டலை அனுபவிக்கிறது. பாட்டாளி வர்க்கத்தில் பெண்களின் நிலையோ பாதாளத்தில் இருக்கிறது. அடிமையின் அடிமையாகப் பெண்கள் பாட்டாளி வர்க்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சமூகத்திற்கான உற்பத்தியில் ஈடுபடகிற தொழிலாளர் படையில் இருப்பதற்கான வாய்ப்புகள் பெண்களுக்கு குறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. ‘ஆண்களைக் காட்டிலும் குறைவாக ஊதியம் கொடுத்துச் கூடுதலாக சுரண்ட முடியும்’ என்கிற காரணத்தால் மட்டுமே பெண்கள் தொழிலாளர் படையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ சமூகத்தில் குழந்தைகள் முதல், குடும்பத்தின் வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கவனிக்கும் பொறுப்பு பெண்கள் மீது தனிப்பட்ட கடமையாக சுமத்தப்பட்டிருக்கிறது. பெண்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்த அதீதக் குடும்பப் பணிச்சுமையால் அவர்களால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. ஆண்களைச் சார்ந்து அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது.
இந்தச் சூழ்நிலையோடு அந்த செக் பெண்மணியின் கடந்தகால வாழ்க்கையைப் பார்த்தால், எப்படியான ஒரு கட்டமைப்பை இந்த லாபவெறி பிடித்த முதலாளித்துவமும், அதன் ஏற்படான ஏகாதிபத்திய சக்திகளும் தகர்த்திருக்கின்றன? எப்படியான உதாரணக் கட்டமைப்பை இந்த உலகம் இழந்துள்ளது?! – என்ற உண்மை பொட்டில் அறைந்த மாதிரி நம்மை உலுக்குகிறது.
1. இந்த செக் பெண்மணி குறிப்பிடுகிற காலம் 1960-களாக இருக்கும். இவர்கள் நாட்டில் ஒரு இளம் தொழிலாளர் தம்பதிக்கு திருமணம் ஆன புதிதிலேயே வீடு வாங்குவது சாத்தியமாகி இருக்கிறது. இந்தக் காலத்தில் நமது நாடெல்லாம் எந்த நிலைமையில் இருந்தது?
2. அந்தப் பெண் தொழிலாளிக்கு 8 மாத பிரசவகால விடுப்பு உரிமையாகக் கிடைத்திருக்கிறது.
3. தனது குழந்தையைப் பற்றிய கவலை சிறிதும் இன்றி, அந்தப் பெண்மணி வேலைக்குச் சென்று பணியாற்றுவதற்கு வாய்ப்பளிக்கும்
வகையில், பகல்நேரக் குழந்தைகள் பராமரிப்பக/காப்பக வசதி அரசால் அந்நாட்டில் உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறது.
4. அதுவும், அந்தப் பெண் தொழிலாளியால் தன்னுடைய வீட்டில் இருந்து 15 நிமிட பயணத்தில் சென்றடையும் தொலைவில் அந்தக் காப்பக வசதி இருந்திருக்கிறது.
5. அந்தப் பெண்மணியின் கணவர், சமமான பொறுப்புணர்வோடு தனது வேலை முடிந்ததும் தங்கள் குழந்தையைக் காப்பகத்தில் இருந்து அழைத்துக்கொண்டு, வழியில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டுக்குச் சென்று இரவு உணவைக் குடும்பத்திற்காக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ‘சமையல், குழந்தை, வீட்டுப்பராமரிப்பு என்பது குடும்பத்தில் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது’ என்ற எண்ணம் அந்த ஆண் தொழிலாளர் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைக் கதையைப் படித்த பிறகு,
1) குழந்தை வளர்ப்பு, வீட்டை, குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு பிறவிப்பொறுப்பாக தங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதால் வேலைவாய்ப்புக்குப் போக முடியாத நிலையில் உள்ள பெண்கள், 2) வேலைக்குப் போனாலும் குறைவான வருமானத்தை குடும்ப சூழலின் காரணமாக வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளும் பெண் தொழிலாளர்கள், 3) வேலைக்குப் போகும் பெற்றோரின் கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் பராமரிப்பதற்குமான சமூகக் கட்டமைப்புகள் இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் வேலைக்குப் போவதற்கு படும் பாடுகள்- இவையெல்லாம் எனது மனதில் நிலைக்குத்தி நின்றன.
நமது ஊர்
சில காலத்திற்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு பெண் தொழிலாளி என்னை ஒரு சட்ட உதவி வேண்டி தொலைபேசியில் அழைத்தார். அந்தப் பெண் தொழிலாளி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் கர்ப்பமான விஷயம் தெரிந்ததில் இருந்து அவரை ராஜினாமா செய்திடுமாறு அவருடைய நிறுவனம் நிர்பந்தித்து வந்தது. அதனால், கடுமையான மன-உளைச்சலில் அந்தப் பெண் தவித்தார்.
“நிர்வாகத்தின் அழுத்தத்தையும் மீறி, எனக்கு மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும் என நான் மின்னஞ்சலில் விண்ணப்பித்தேன். என்னிடம் இருந்து விண்ணப்பமே தங்களுக்கு வரவில்லை என்பதைப் பொய்யாக நிறுவும் வகையில், எனது நிர்வாகம் சர்வரிலேயே எனது மின்னஞ்சலை அழித்துவிட்டது. நான் படுகிற வேதனையைப் பார்த்து எனது வீட்டார் எனக்குக் கருக்கலைப்பு ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார்கள். ‘எதற்கு உனக்கு வீம்பு? வேலையை விட்டுவிடு!’ என அவர்களும் அழுத்தம் தருகிறார்கள்” என்றார்.
எனது கேள்வி: நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள்?
அந்தப் பெண் தொழிலாளி: அது ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம்.
என்னது தொண்டு நிறுவனமா? யாருக்காக எந்தத் தளத்தில் அந்த நிறுவனம் வேலை செய்கிறது?
தனித்து வாழும் பெண்களுடைய குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த நிறுவனம் பணியாற்றுகிறது.
எனக்குத் தலைசுற்றியது. அரசு சாரா தொண்டு நிறுவனமாம்! தனித்துவாழும் பெண்களின் குழந்தைகள் மேம்பாட்டிற்காக உழைக்கிறதாம்! தன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளருக்கு, சட்டப்படி உரித்தான மகப்பேறு கால ஊதிய விடுப்பை வழங்காதாம்! ‘நீங்களாக ராஜிநாமா செய்ய வேண்டும்’ எனக் கட்டாயப் படுத்துமாம்! என்ன உலகம் இது?
அந்தப் பெண்ணுக்கு மனத்தைரியம் கிடைக்கும்படி, ஆறுதலாகப் பேசி, இலவச சட்ட உதவி மையத்தின் தொடர்புகளைக் கொடுத்தனுப்பினேன். மறுநாள் அந்தப் பெண், “மேடம்! என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சட்டப்போராட்டம் முக்கியமென்றாலும், மேன்மேலும் மன-உளைச்சலை நான் அனுபவிக்க வேண்டிவரும். சட்டப் போராட்டத்தில் என்னால் வெற்றிபெற முடியும் என்றாலும், அதற்குக் காலமெடுக்கும். இடைப்பட்ட காலத்தில் கர்ப்பம், பிரசவம் இவற்றை நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மேற்கொண்டு மன-அழுத்தத்தை என்னால் தாங்க முடியாது. எனது குழந்தையை இழந்துவிடுவேனோ என்ற பதட்டம் எனக்கு எழுகிறது. இரவு-பகல் முழுவதும் சதா இந்த அழுத்தத்திலேயே நான் இருக்கிறேன். என்னுடைய மனநிலையாலும், சூழ்நிலையாலும் நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்” என்றார்.
சோஷலிச நாடல்லாத முதலாளித்துவ நாடுகளில் எல்லாம், பெண் தொழிலாளர்களுக்கான உரிமைகளை சட்டங்கள் ஏட்டளவில் வழங்கிடும் என்பது உண்மைதான். 8 மணிநேர வேலை, பேறுகால உரிமைகள், சம வேலைக்கு சமகூலி எல்லாம் சட்டத்தில் எழுத்துகளாக இருக்கும். ஆனால், தனக்குரிய சட்டப்படியான உரிமைகள் பறிக்கப்படும் போது, வழக்கு தொடர்ந்து அவற்றை நிலைநாட்டும் வாய்ப்புகளும், சூழலும் எல்லா பெண் தொழிலாளர்களுக்கும் வாய்க்குமா? ‘சரி! போய்த் தொலையட்டும்! எனது வயிற்றெரிச்சல் அவர்களை சும்மா விடாது!’ -இப்படித் தான் பெண் தொழிலாளர்கள் தாங்கள் வஞ்சிக்கப்படும்போது, தங்களுடைய முதலாளியையும், நிறுவனத்தையும் மனத்திற்குள் சபித்துவிட்டு தங்கள் வாழ்க்கைக்கான போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.
இந்தப் புள்ளியில்தான், எட்டு மாத பேறுகால விடுப்பைத் தனது பெண் தொழிலாளர்களுக்கு 1960களிலேயே உறுதிசெய்த சோஷலிச செக்கோஸ்லொவேக்கியா நாட்டை நினைவில் கொள்ள வேண்டும். எத்தைகைய கொள்கையை அந்த நாடு ஏற்றுக்கொண்டதால், அங்கு பெண் தொழிலாளர்களுக்கு இந்த உரிமை கிடைத்து என்பதை உணர வேண்டும்.
கவிஞரும் எழுத்தாளருமான தோழர் பிருந்தா சேது ஒற்றைப் பெற்றோராக தனது மகளை பகல்நேர காப்பகத்தில் சேர்த்து, வேலைக்குச் சென்று, தனது மகளைப் படிக்க வைத்து ஆளாக்கிய கதையைப் பகிர்ந்துகொண்டார். ஒன்றரை வயது கைக்குழந்தை பருவம் முதல், எட்டாம் வகுப்பு படித்த காலம் வரை அவருடைய பெண் குழந்தைக்கு பகல்நேரப் பராமரிப்பகம் தேவைப்பட்டிருக்கிறது.
“எனது சூழல் வீடு-அலுவலகம்-வீடு, எனது மகளின் சூழல், வீடு-பள்ளி-பகல்நேரக் குழந்தைகள் காப்பகம்-எனது அலுவலகம்-வீடு என சுழன்றது” என்கிறார் பிருந்தா. குழந்தையின் இரண்டரை வயது வரை கணவருடன் இணைந்து வாழ்ந்த காலத்தில், குழந்தையை அழைக்க பள்ளிக்கு விரைவது, பராமரிப்பகத்துக்கு விரைவது எல்லாம் சமூகமும், எனது குடும்பமும் என் மீது மட்டுமே விதித்த பொறுப்புகளாக இருந்தன. காப்பக விடுமுறை தினங்களில் குழந்தையைப் பராமரிக்க நான் விடுப்பு எடுக்க வேண்டும். இல்லையெனில் அலுவலகத்திற்கு அழைத்து வந்து பார்த்துக்கொள்ள வேண்டும். காப்பக உரிமையாளர், ‘நீங்கள் ஒரு வாரம், உங்கள் கணவர் ஒருவாரம் விடுப்பு எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டியதுதானே!’ எனக் கேட்டார். எனக்கோ, ‘ஓ! ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் நான் எதிர்பார்க்க முடியுமா?’ என்பதே கேள்வியாக எழுந்தது.
நான் வசித்த பகுதியில் இருந்த தனியார் காப்பகங்கள் என்பவை, 10க்கு 8 அடி அறைகள் தான். அதற்குள் நிறைய குழந்தைகள் வீச்சம் அடிக்கும் சூழலில் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருந்தார்கள். நான் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணி நடத்திய கிண்டர்கார்டன் பள்ளியோடு இணைந்த ஒரு காப்பகத்தைக் கண்டுபிடித்து எனது மகளை சேர்த்திருந்தேன். விளையாடும் பகுதி, காற்றோட்டத்துடன் இருந்த கட்டமைப்பு அது.
எனது வருமானத்தில் ஏழில் ஒரு பங்கு காப்பகத்திற்குப் போய்விடும். எனது குழந்தையின் இரண்டரை வயதில் கணவரைப் பிரிந்து தனித்து வாழத்தொடங்கிய காலத்தில் எனது வருமானத்தில் நான்கரை பங்கு எங்கள் வீட்டு வாடகைக்குப் போய்விடும். மீதம் இருக்கும் ஏழில் ஒன்றரை பங்கில் நாங்கள் இருவரும் சாப்பிட வேண்டும். எனது அம்மா, உடன்பிறந்தவர்கள் தொலைவில் இருந்ததால், எங்கள் வாழ்க்கையின் முழுப்பொறுப்பும் என்னுடையது மட்டுமே.
எனது மகள் ஐந்தாம் வகுப்பு படித்தபோது பராமரிப்பகத்தை மூடப்போகிறோம் என்றார்கள். ஐந்தாம் வகுப்புக்கு மேல் வளர்ந்துவிட்ட குழந்தைகளைப் பராமரிப்பது என்பது காப்பகத்தில் பெரிய வேலை இல்லை. பெற்றோர் வரும் வரையில் அவர்கள் காப்பகத்தில் இருக்கப் போகிறார்கள் என்பதால், வளர்ந்துவிட்ட எட்டு குழந்தைகளுக்கு மட்டும் காப்பக வசதியை நீட்டித்தார்கள். அதனால், எனது மகளால் எட்டாம் வகுப்பு வரை பராமரிப்பகத்தில் இருக்க முடிந்தது. 5.30 மணி வரை அந்தக் காப்பகம் இருக்கும்.
6 மணி வரை நேரத்தை நீட்டிப்பார்கள். ஒரு நிமிடம் தாமதமாகப் போனாலும் பராமரிப்பகத் தொழிலாளர்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். பதட்டத்துடன் விரைந்து ஓடியே வாழ்க்கை ஓடியது. இப்படி, காப்பக உதவியாளர்கள் உதவியோடு எனது மகளை நான் தனியாகவே வளர்த்தேன். கவிதை, எழுத்து, இலக்கியம் என நான் பயணித்துக்கொண்டே எனது மகளை கராத்தே, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்தினேன். அவளோடு இணைந்து நானும் கராத்தே கற்றுக்கொண்டேன்”
தோழர் பிருந்தா சேதுவின் அனுபவம் நமக்குச் சொல்வது இதுதான்:
1. இந்தியாவில் கல்வி, முறைசார் வேலைவாய்ப்புகள் பெற்ற மத்திய வர்க்கப் பெண் தொழிலாளி வேலைக்குப் போகவேண்டும் என்றால், தனது வருவாயில் பெரும் பகுதியை தனியார் குழந்தைகள் காப்பகத்திற்கு செலவிட வேண்டி இருக்கிறது. அந்தப் பெண் ஒற்றைப் பெற்றோராக இருந்தால், அவர் தாங்க வேண்டிய பொருளாதாரச் சுமையை கற்பனையே செய்ய முடியாது. மத்திய வர்க்கப் பெண் தொழிலாளி நிலையே இந்த அளவுக்கு மோசம் என்றால், முறைசாரா பணியில் ஈடுபடும் பாட்டாளி வர்க்கப் பெண் தொழிலாளி நிலை?
2. ஒரு நாட்டில் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்கள் வேலைவாய்ப்பில் இருப்பதற்கு அந்நாட்டின் அரசு, குழந்தைகள் காப்பகத்தை உறுதி செய்திட வேண்டும். நம்மில் எத்தனை பேர் அரசு குழந்தைகள் காப்பகத்தைப் பார்த்திருக்கிறோம்?
3. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களான அங்கன்வாடி மையங்களில் பெண் தொழிலாளர்கள் குழந்தைகளை விடலாம். ஆனால், இந்த மையங்களின் பிரதான பணி ஊட்டச்சத்துப் பணிமட்டுமே. இந்த மையங்கள் மதியம் வரைதான் செயல்படும். அதன் பிறகு குழந்தைகளை யார் பொறுப்பில் விடுவது? பெரும்பாலான தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றிவிட்டு வீடு திரும்புவதற்கே இரவு 7-8 மணி விடும். இந்நிலையில் குழந்தைகள் இருக்கும் பெண்களால் எப்படி வேலைக்குப் போக முடியும்?
4. எனவே, முறையான படிப்பில்லாத வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்களாலும் சரி, படித்த பெண்களாலும் சரி, இன்றைக்கு வேலைக்குப் போக முடியாமல் இருப்பதற்குப் பிரதான காரணம், பெண்கள் மீது முழுமையாகத் திணிக்கப்பட்டுள்ள குழந்தைகள் வளர்ப்பு, குடும்பப் பராமரிப்புப் பணிகள்தான்.
தொழிலாளர்கள் சமூகத்திற்காக கூட்டு உழைப்பில், கூட்டு உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சமூக உற்பத்திக்கான வேலையில் ஈடுபடுகிற நேரத்தில் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது அரசின் கடமை. அந்தக் கடமையை முதலாளித்துவ அமைப்பும், முதலாளித்துவ நாடுகளுக்கான அரசுகளும் ஏற்றுக்கொள்வதே இல்லை.
அமே…ரிக்காவில் கதை
சரி! இந்தியாவின் நிலைதான் இப்படி. உலகிலேயே சக்தி வாய்ந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசு அமெரிக்கா. பாட்டாளி வர்க்கத்தின் உருக்குக் கோட்டையாகத் திகழ்ந்த சோவியத் யூனியனுடன் பனிப்போரில் ஈடுபட்டு, அந்த அமைப்பை தகர்த்தே விட்டது. மனித குலத்துக்கே உதாரணமாகத் திகழ்ந்த ஓர் அமைப்பை சிதைத்துவிட்டு, ‘இனி உலகில் மனிதர்களுக்கு உதாரண வாழ்நிலையை நாங்கள் தான் உருவாக்கித் தருகிறோம்!’ என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி! வளர்ச்சி! எனக் காட்டுக் கூச்சல் போடுகிறது. இப்படியான அமெரிக்காவில் பணியாற்றும் மத்தியவர்க்கப் பெண் தொழிலாளர்கள், குழந்தைகள் இருந்தால் எப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்? அதையும் பார்த்து விடுவோம்!
பேராசிரியர் காட்ஸீயுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். அந்தப் பெண் தாயாவதற்கு முன்னரே தனக்கான வேலையை வலுவாக உறுதிப்படுத்திக்கொண்டவர். வேலையை எக்காலத்திலும், எக்காரணத்தாலும் விட்டுவிடக்கூடாது என்ற வைராக்கியத்தை அவர் கொண்டிருந்தார். குழந்தைகளைக் கவனிப்பதற்காக அந்தப் பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய வேலைநேரத்தைக் குறைத்துக்கொண்டு குறைவான ஊதியத்திற்கு வேலை பார்த்தார்கள். அந்தப் பெண் முக்கால்வாசி வேலைநேரம் மட்டும் பணியாற்றுவது என முடிவெடுத்தார். அதற்காக மிகக் குறைந்த ஊதியம்தான் அவருக்கு வழங்கப்பட்டது.
இருந்தாலும் அதை சகித்துக்கொண்டார். அவருடைய கணவர் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தார். இருவரும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நாட்களை ஒதுக்கியதுபோக, வாரம் மூன்று நாட்களுக்கு ஒரு பொறுப்பாளரை அந்தப் பெண் நியமித்துக் குழந்தைகளைக் கவனிக்க வேண்டி இருந்தது. தான் வாங்கிய சம்பளத்தில், வருமான வரி, காப்பீட்டுக் கட்டணம், குழந்தைகள் பராமரிப்பு செலவு போக அவர் கையில் மாதம் நின்ற தொகை வெறும் 70 செண்டுகள் மட்டுமே (ஒரு டாலர் 100 செண்டுகள்). பெண் தொழிலாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்க ஏகாதிபத்திய அமெரிக்காவில் அரசுக் கட்டமைப்புகள் இல்லை. இந்நிலையில், ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அந்த அமெரிக்கப் பெண், ஓராண்டில் ஈட்டியது வெறும் 9 டாலர்கள் மட்டுமே!
‘இதற்குப் போய் ஏன் நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். வீட்டிலேயே இருக்கலாம் தானே!’ என காட்ஸீ கேட்டதற்கு, அந்தப் பெண் சொன்னது: “நானும் யோசிக்காமல் இல்லை. ஆனால், எனது பணி அனுபவத்தில் இடைவெளி விழுந்தால், எனது பணித்தகுதியில் மிகப்பெரும் கருந்துளை அல்லவா விழுந்துவிடும்? என்னுடைய குழந்தைகள் பள்ளிக்குப் போகும் வயதுவரை இவ்வாறு கஷ்டப்படப் போகிறேன். பரவாயில்லை. இந்தக் கஷ்டத்தின் பலனை ஒரு காலம் நான் அனுபவிக்க வாய்ப்பிருக்கிறதல்லா?”
பிரசவ விடுப்பின் காரணமாக பணி அனுபவத்தில் இடைவெளி விழுந்துவிட்டால்? நம்மால் இந்த ஜென்மத்தில் மீண்டெழுந்து ஓடவே முடியாது! வாழ்நாள் முழுவதும் கணவனை சார்ந்தே வாழ வேண்டி இருக்குமே! விவாகரத்து ஆகிவிட்டால் இன்னும் சுத்தம்! இவ்வளவு காலம் வேலைவாய்ப்பில் இல்லாத சூழலில், அங்காடி, உணவு விடுதி சிப்பந்திப் பணியோ, ஸ்டெனோ வேலையோ- இப்படிக் கிடைக்கிற ஏதாவது ஒரு வேலையைப் பற்றிக்கொண்டு, குறைவான ஊதியத்தை சகித்துக்கொண்டு, வாழ்க்கையைக் கடத்த வேண்டும். இதுதான் உலகின் அதிபராக்கிரம நாடான அமெரிக்காவிலேயே மத்திய வர்க்கப் பெண்களின் நிலையாக உள்ளது. இவைதான் ஸ்வீட் கேப்பிடலிசம் பெண்களுக்குத் தந்த ‘இனிமையான’ பரிசுகள்!
ஒரு எளிய ஒப்பீடு
அடுத்து, சோஷலிச நாடுகளிலும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் எப்படி இருந்தன எனக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்துவிடுவோம்! 2000 ஆம் ஆண்டில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறிப்பிடும் தகவல்கள் இவை:
1980 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன், ஐரோப்பாவின் சோஷலிச நாடுகளின் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 211 மில்லியன் (21.1 கோடி). இவர்களில் பொருளாதாரச் செயல்பாட்டில் பங்கேற்ற பெண்கள் எண்ணிக்கை 99 மில்லியன் (9.9 கோடி) அதாவது 46.2%. ஏறத்தாழ பாதி பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர் படையில் இருந்தார்கள்.
- வேலைக்குப் போகும் வயதுடைய பெண்களில் வேலைக்குச் சென்றவர்கள் சதவிகிதம்: பல்கேரியாவில் 85%, ஹங்கேரியில் 77%, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் (கிழக்கு ஜெர்மனி) 82.7%, சோவியத் யூனியனில் 82.5%, செக்கோஸ்லொவேக்கியா நாட்டில் 78.8%. ஆக, இந்த ஷோஷலிச நாடுகளில் எல்லாம், உழைக்கும் வயதில் இருந்த பெண்களில், முக்கால்வாசி பேருக்கும் மேலானோர் தொழிலாளர் படையில் இருந்தனர்.
- 1983-ஆம் ஆண்டில் ஷோஷலிச நாடுகளின் ஒட்டுமொத்த தொழிலாளர் படையில் பெண்களின் சதவிகிதம்: பல்கேரியாவில் 49.2%, ஹங்கேரியில் 44.3%, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் 47.3%, செக்கோஸ்லொவேக்கியா நாட்டில் 45.7%. சோவியத் யூனியனில் 47.8% (1979).
- சோஷலிச நாடுகளில் 60-70% சமூக உற்பத்தி பெரும் தொழிற்சாலைகளில் நடைபெற்றிருக்கிறது. அந்தளவுக்கு உற்பத்தி முறை அங்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்களில் எல்லாம் பெண் தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் பணியாற்றி இருக்கிறார்கள். இது சோஷலிச நாடுகளில் பெண்களின் வேலைவாய்ப்பில் காணப்பட்ட மிக முக்கியமான அம்சம். உதாரணமாக, 1983-ல் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களில் பல்கெரியாவில் 33.7%, ஹங்கேரியில் 39.8%, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் 34.9%, செக்கோஸ்லொவேக்கியா நாட்டில் 36.2% பெண்கள் பெருந்தொழிற்சாலை உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
- 1976-85 பத்தாண்டு காலத்தில் சோஷலிச நாடுகளில், ரசாயணம், இயந்திரக் கட்டுமானம், மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல், மின்சார உற்பத்தி போன்ற புதிய, நம்பிக்கை அளிக்கும் உற்பத்தித் துறைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அதேசமயத்தில், ஜவுளி உற்பத்தி, ஆடை உற்பத்தி, உணவு உற்பத்தி, பதப்படுத்தல் போன்ற, பாரம்பரியமாகப் பெண்கள் பணியாற்றி வந்தத் துறைகளில், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. பாலின பேதம் இன்றி பாரம்பரிய, நவீன தொழில்களில் ஆண்/பெண் தொழிலாளர்களுக்கு சமவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இந்தச் சூழல் எடுத்துரைக்கிறது.
- விவசாயப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களில் கணிசமானோர் தொழிற்துறைக்கு பணி மாறினார்கள். சோவியத் யூனியனில் 1975-ல் கூட்டுப்பண்ணைத் தொழிலில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் 47%, 1982-ல் இது 46%.
- சோஷலிச நாடுகளில் பொதுவாகவே தொழிலாளர்கள் பெற்றிருந்த கல்வித் தகுதிகள், மேம்பட்ட தொழிற்துறை பயிற்சிகள் ஆகியவற்றால், நிர்வாகப் பணிகள், தொழில்நுட்பப் பணிகளில் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிந்தது. 1982-ல் பல்கேரியாவின் நிபுணர்களில் 53.4% பெண்கள்; இவர்களில் 46.5% பேர் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள்; 56.8% பேர் கல்லூரி அல்லது உயர்-நிலைப் பள்ளி சான்று பெற்றவர்கள். ஹங்கேரியில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களில் 43% பேர் பெண்கள்; ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் நிபுணர்களாகப் பணியாற்றிய பெண்களில் 60% பேர் கல்லூரி அல்லது உயர்-நிலைப் பள்ளிச் சான்று பெற்றவர்கள், 36% பேர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள். சோவியத் யூனியனில் 59% நிபுணர்கள் பெண்கள். செக்கோஸ்லொவேக்கியா நாட்டில் அதிகம் கற்ற நபர்களில் 52% பேர் பெண்கள். தாங்கள் பெற்றிருந்த தொழிற்பயிற்சியால், நிபுணத்துவத்தால் இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெண் தொழிலாளர்கள் அளித்த பங்களிப்பின் தரம் பல மடங்கு அதிகம்.
- தேசப் பொருளாதார வளர்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் மிகப் பெரும் பொறுப்புகளில் பெண்கள் பணியாற்றினார்கள். நிர்வாகம், முடிவெடுக்கும் பொறுப்புகளில் மிகப்பெரும் அளவில் செயல்பட்டார்கள். உதாரணத்திற்கு சோவியத் யூனியனில் மட்டும் 5 லட்சம் பெண் தொழிலாளர்கள், தொழிற்சாலை மேலாளர், கட்டுமானப் பணியிட மேலாளர், அறிவியல் துறைகளின் இயக்குனர் போன்ற உயர் பொறுப்புகளில் பணியாற்றினார்கள்.
“1) திட்டமிட்ட பொருளாதார முறையைக் கொண்ட சோஷலிச நாடுகளின் தேசப் பொருளாதாரம் அடைந்த வளர்ச்சி 2) அந்த வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட உழைப்பு 3) இந்த நாடுகளின் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கான அங்கீகாரத்திற்காகவும், தங்களுடைய தொழில் வாழ்க்கைக்கான அங்கீகாரத்திற்காகவும் மேற்கொண்ட முயற்சிகள் – இவற்றால்தான் இவ்வளவு பெரிய மாற்றம் இந்த நாடுகளில் நடந்திருக்கிறது” – இப்படி சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு குறிப்பிடுகிறது.
அமெரிக்காவில்?
1950-ல் சோவியத் யூனியனின் மொத்த தொழிலாளர் படையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 51.8%; கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் 40.9%. வட-அமெரிக்காவில் வெறும் 28.3%. மேற்கு ஐரோப்பாவில் வெறும் 29.6%.
ஐக்கிய நாடுகள் சபை 1975-ஆம் ஆண்டை சர்வதேசப் பெண்கள் நாடாக அறிவித்திருந்தது. இந்த ஆண்டு நிலவரப்படி சோவியத் யூனியனின் தொழிலாளர் படையில் பெண் தொழிலாளர்கள் 49.7% வகித்தார்கள்; கிழக்கு ஐரோப்பிய பகுதியில் 43.7% வகித்தார்கள். வட-அமெரிக்காவில் பெண் தொழிலாளர்கள் சதவிகிதம் வெறும் 37.4%, மேற்கு ஐரோப்பாவில் வெறும் 32.7%.
இந்த சோஷலிச நாடுகளில் எல்லாம் சோஷலிசம் மலர்ந்ததும், அதுவரை சமூகத்தில் வேர்பிடித்திருந்த ஆணாதிக்க முறையும், மக்கள் மனதில் படிந்திருந்த ஆணாதிக்க மனப்பான்மையும் இரவோடு இரவாக ஒன்றும் தகர்ந்துவிடவில்லை.
மறைந்துவிடவில்லை. காலங்காலமாகப் புரையோடிப் போயிருந்த ஒரு சமூகப் புற்றை அவ்வளவு துரிதமாக ஒழித்துவிடவும் முடியாது. ‘சமூகத்தில் மனிதரை மனிதர் ஒடுக்கும் அவலத்தை ஒழிக்க வேண்டும்’ என்ற நோக்கம் கொண்ட அரசுகள் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இந்த நாடுகளின் சோஷலிச அரசுகள் அத்தகைய நடவடிக்கைகளை எடுத்தன. ஆணாதிக்க வழக்கங்களை, மரபுகளை, சிந்தனைகளை ஒழிப்பதற்காக, மக்கள் சிந்தனையிலும், சமூகத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப் போராடின. பாலின சமத்துவத்தை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.
முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்துவிட்ட பிறகு, சோஷலிச சமுதாயத்தைக் கட்ட வேண்டும் என்ற புதிய சூழல். எதிர்ப்புரட்சி, ஏகாதிபத்தியம் ஏவிவிட்ட போர்கள், பஞ்சம், உற்பத்திக் குறைபாடு-இவை எல்லாம் பிரச்சனைகள். இவற்றோடு பாலின சமத்துவத்துவத்தை எட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்ற வேண்டும். சில சமயங்களில் நிர்ணயித்த இலக்குகளைக் கைவிடும் சூழலுக்கும் இந்த நாடுகள் தள்ளப்பட்டன. எடுத்த சில முற்போக்கு நடவடிக்கைகளில் பின்வாங்கின. என்றாலும், சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கிய காலங்களில் கூட, அந்த நாடுகளில் பெண்கள் இருந்த நிலைக்கு உலகில் ஈடு-இணை இன்றுவரை கிடையாது என உறுதியாகச் சொல்லலாம். மேலே நாம் கண்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தரவுகளே இதற்கு சாட்சி!
தொடரும்…
ஆதாரங்கள்:
Women in Economic Activity: A global statistical survey (1950-2000), Joint Publication by ILO and UN Research and Training Institute for Advancement of Women
Why women have better sex under socialism: A nd other arguments for Economic Independence, Kristen R Ghodsee, 2018, The Bodley Head, London
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.