வணக்கம் நண்பர்களே,
இன்றைய கால கட்டத்தில் பொதுவாக நவீன இலக்கியம் என்று ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றி நாலு பேர் கூடிக்கதைக்கும் போது, அதிகமான நபர்களிடம் இருந்து வரும் சொற்கள் என்று பார்த்தால், என்னத்த எழுதப்போகினம், சும்மா இந்த நடந்து முடிந்த ஈழப்போராட்டதையும் அதன் அழிவுகளையும், அதில் ஈடுபட்ட போராளிகளையும் தான் எழுதுவினம். இதனை ஒருவர் சொல்லும் போது மற்றவர்களும் ஆமாம் என்றுதான் மேலும் கீழுமாகத் தலையாட்டி ஆமோதிப்பார்கள். (நானும் தான்) இது ஒருவித நோயாகத் தொடர்வதை அவதானிக்கலாம். கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்தவர்கள், கி. மு (கிறிஸ்துவுக்கு முன்) கி. பி (கிறிஸ்துவுக்குப் பின்) என்ற வரையறைபோல், ஈழப்போராட்டத்திற்கு முன் (ஈ. மு) ஈழப்போராட்டத்திற்குப் பின்(ஈ. பி) என்று பார்த்தால், முன்னைய காலத்தில் ஈழத்து இலக்கியங்கள், சாதிக் கொடுமைகள், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வேறுபாடுகள், தராதரப்படுத்துதல், இதுபோன்ற பல சம்பவங்களையும், பின்னைய (ஈ. பி) காலகட்டங்களில் போராட்ட நிகழ்வுகளை மையமாக வைத்தே பல படைப்புக்கள் வெளி வருவதைக் காணலாம். அதுதான் உண்மையும் கூட.
ஈழப் போரடாட்டத்தின் சிதறுண்ட பல பாகங்கள் எங்கோ ஒரு இடத்திலாவது, ஏதோவொரு வடிவத்தில் நுளைந்துவிடுவதை நாம் நாவல்களிலும், கதை மற்றும் கட்டுரைகளிலும் காணக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றே எண்ணுகிறேன்.
குறிப்பாக உலக மொழிபெயர்ப்பு நூல்களையே விரும்பி வாசித்து வரும் எனக்கு (ஈழத்து நாவல்களும் வாசிப்பதுண்டு) எனது உற்ற குடும்ப நண்பன் க. விஜயகுமாரன் அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று இந் நாவலை வாசித்து முடித்தேன். இதன் மூலம் அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு முதல் முறையாக அறிமுகமான படைப்பாளி யதார்த்தனன் அவர்கள்.இப்படியாகச் சொல்கிறார் ஆசிரியர்.
“சாகிறதுக்கு பயமில்லை. வாற பீஸ் கழுத்துக்கு வந்திடோணும் இழுத்து அலைக்கழிக்காமல் நோகாமல் சாவோணும், காயம்பட்டு கிடந்து இழுபடகூடாது” என்ற அடிக்கடி சொல்வது. ஆனால் உண்மையில் அப்படித்தானிருக்கிறதா, பயமில்லை, பொருட்டில்லை என்ற வார்த்தைகளின் பின்னால் இருக்கும் விரக்தியின், பதட்டத்தின் வாழ்வு பற்றிய அச்சத்தின் நிழல்கள் எல்லா மனிதர்களின் கண்களிலும் விரவிக் கிடப்பதை எல்லோரும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டேதானிருக்கிறோம். ஆனால் யாரும் யாரையும் காட்டிக் கொடுத்தோமில்லை. தனக்கும் பிறருக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த பொய்யின் தைரியத்தைப் பிடித்துக்கொண்டுதான் எல்லோரும் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். ஒவ்வொரு முறை ஷெல் வரும் போதும் தலைகளை இழுத்து நிலத்தோடு நம்மைப் புதைத்துக்கொள்கிறோம். அப்போது அந்த வார்த்தைகளின் நெஞ்சு கச்சிதமாக அரியப்பட்டு உள்ளிருக்கும் நிழல்கள் உடலை ஆட்டிப்படைக்க வெளியே விடப்படுகின்றன.
இந் நாவல் புனைவா அல்லது புனைவற்றதா என்று ஆசிரியர் கொடுக்கவில்லை. அத்துடன் முகவுரையோ, அணிந்துரையோ அல்லது பதிப்புரையோ ஏதும் இல்லாது உடனடியாகவே நாவலுக்குள் இழுத்துச் செல்கிறார். வாசிப்பாளர்களாகிய நீங்களே எந்த வகை நாவல் என்று கண்டுபிடியுங்கள் என்று கூறுவது போல் உள்ளது.
நகுலாத்தை என்ற இந் நாவல் முழுக்க முழுக்க ஒரு கிராமத்தில் நடைபெறும் கூட்டுமொத்த நிகழ்ச்சியாகவே என் பார்வையில் தோன்றுகிறது. அட்டைப் படத்தில் காளி தனது உடுக்கையுடன் காட்சி தருவதால், இங்கே மிக முக்கியமான பாத்திரத்தில் பங்களிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக இங்கே ஆசிரியர் தனது மொழி நடையினை மிகவும் மெச்சக்கூடிய வகையிலும், தமிழ் மொழி இன்றைய காலகட்டத்தில் மறைந்து போகும் தன்மையில் இருக்கும் போது, அவருடைய சிந்தனைப் புத்துணர்ச்சியினையையும், நவீன இலக்கிய வாசனையையும் அப்படியே அள்ளி வீசியிருக்கிறார் என்றே சொல்லலாம். அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அதிகமாக வட்டாரப் பேச்சுத் தமிழில் நாவலை நகர்த்தியிருப்பது, மறைந்து போகும் மொழியினை மீண்டும் வாசிப்பாளர்கள் மத்தியில் மீட்டெடுக்கப்படுவது மிக அருமை. இலங்கையை விட்டு வெளியேறிய மக்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ, அங்குள்ள மொழியினைக் கற்றோ அல்லது காதால் கேட்டோ அவற்றைத் தமிழ் மொழியுடன் கலந்து (ஊடுருவி) உரையாடுவதையும் எழுதுவதையும் பல இடங்களில் காணலாம். அதனைத் தகுந்த முறையில் மீட்டெருக்கிறார் ஆசிரியர் யதார்த்தன் அவர்கள்.
என்னைப் பொறுத்தவரை, இங்கே கதை மாந்தர்கள் கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறார்கள். எல்லோரையும் நிலைநிறுத்திப் பார்க்க முடியாவிட்டாலும், சில பாத்திரங்கள் நாவலின் முடிவுவரை தங்களது இருப்பிடத்ததைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். சின்னராசா காட்டுக்குள் இறங்கி வேட்டையாடுவதில் தொடங்கி, அம்மான் கண் எவ்வி மண்ணுக்குள் புதைக்கப்படுதுடன் நாவல் நிறைவடைந்தாலும், பல இடங்களில் நாவலில் அவர்களது உரையாடல்கள் எங்களையும் ஆங்காங்கே இழுத்துச் செல்வதை உணரலாம்.
கீரிப்பிள்ளை மேட்டில் நடைபெறும் இரகசியங்களையும், அங்கு மக்களால் கொண்டாடப்படும் மதசம்பந்தமான ஆதிகாலத்து சடங்குகளையும் அக்கிராமமக்கள் இன்றும் தங்களது மூடநம்பிக்கையில் இருந்து ஒரு துளி கூடத் தவறாது பின்பற்றி வருவதை ஆசிரியர் சிறப்பாகப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆச்சியின் கட்டுப்பாட்டில் ஆத்தா ஓடித்திரியும் மாயா ஜாலங்கள் நாவலில் வலம் வருவதை உணரலாம். இக்கிராமத்திற்கு வந்தவர்களின் வரலாற்றை விளக்கும் ஆசிரியர், ஒவ்வொரு மாந்தர்களினதும் குணங்களை அவர்களுக்குள் புகுந்து பார்த்த உணர்வினை வாசகனுடன் பகிர்வது மிச்ச சிறப்பாக அமைந்துள்ளது.
கிராம மக்களின் நம்பிக்கைத் தெய்வமான நகுலாத்தையை ஆச்சி எப்படியெல்லாம் அதற்கு மேலும் வலுவூட்டினாள், அதன் கண்ணிலிருந்து வீசிய ஒளி மக்களை எப்படி நம்பிக்கை கொள்ள வைத்தது, இதற்கு ஆச்சி கையாண்டிருந்த கலை, சூட்சுமங்களை அப்பப்போ விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். குரங்கு மடைபோட்டு அதனைக் கட்டினால் தான் (தாட்டான்) ஊரில் நடமாட முடியும். அதற்கான நம்பிக்கையூட்டும் சொற்களையும் (சன்னாசி சன்னாசி குரங்கைப்பிடி) அவர்கள் சொல்லி விரட்டினாலும் கடைசில் அவற்றுக்கு பழக்கப்பட்ட சொல்லாக மாறியதும் வேடிக்கையாகவே உள்ளது.
சின்ராசன், காங்கேசன்,ஆச்சி, துரிதம், வெரோனிக்கா, தாமரை, விந்தன், ஏவா, மரியதாஸ், நிர்மலா, சினகைக்கிழவி, கிளியன்ரி, அறுமர் தாத்தா, யோகம், அனு, அட்சயன் இப்படியாக ஏராளமான கதைமாந்தர்கள் வந்தாலும் அதில் குறிப்பிட்ட சிலரே வாசகனின் நெஞ்சிலிருந்து அகலாது இடம் பிடித்தனர் என்று கூறலாம்.
பஞ்சமர்களின் வாழ்வியல் நாவலில் ஊடுருவி இருப்பதாக நான் அறிகிறேன். அதனை எந்தளவிற்கு வாசகனிடம் எடுத்துச் சென்றுள்ளன என்பதனை வாசகனே வாசித்து அறிந்துகொண்டால், அவர்களது அன்றாட வாழ்வியலைப் புரிந்து கொள்ளலாம் என்பதில் சந்தேகமில்லை.
வேள்விகள் செய்வதும், பலி கொடுப்பது, மந்திரங்களால் கட்டிப்போடுவதும், அறிவு பூர்வமாக இல்லாமல், நடந்த ஒரு துர்சம்பவத்தை வைத்துக் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக நம்பிவந்த நம்பிக்கைகளை இன்றும் கூட அதனை மக்களிடத்தில் பயத்தின் மூலம் புகுத்தி, தொடரும் வேடிக்கைகளை இந் நாவல் விவரிக்கின்றது.
இங்கே சாதத் ஹசன் மண்ட்டோவின் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. கடையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தேடிக் காவற்படையினர் வருகிறார்கள் என்ற சேதி கேட்டதும், களவாக எடுக்கப்பட்ட பொருட்களை அவர்கள் வீதிகளில் வீசி எறிந்தனர். அதில் ஒருவன் 2 மூட்டை சக்கரை எடுத்தவன், வீதியில் எறிய முடியாமல் அக்கிராமத்தில் மத்தியிலுள்ள கிணறு ஒன்றில் போட்டான். 2வது மூட்டையைப் போடும்போது அவனும் சேர்ந்து விழுந்தான். அவனை அயலவர்கள் தூக்கிய சில நிமிடங்களில் இறந்தான். பின் அக்கிராம மக்கள் கிணற்று நீரை குடித்தபோது இனிப்பாக இருந்தது. அன்றிலிருந்து அவருக்கு விளக்கு வைத்து வழிபாட ஆரம்பித்தனர்.
இதேபோல்தான் கீரிப்பிள்ளை மேட்டிலும், முனிக்குப் பூசை, குரங்கு மடை, குறி சொல்வது, காக்கைவதன் சடங்கு, தயிர்வளைக்குப் பிடித்த பேயை விரட்ட கிளியன்ரி பூனாறிச் செடிகளைக் கண்டுபிடிக்கப்பட்டபாடு, நண்பர்களே வசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை(நகைச்சுவை அல்லது பயம் போன்ற) நீங்களும் உள்வாங்குவீர்கள் என்பதில் ஐயமில்லை.
இந் நாவலில் முற்பகுதியில், மற்றும் சில இடங்களில் நாவலின் தொடர் முறிவதுபோல் எனக்குத் தோன்றுகிறது. பிற்பகுதியில் நாவலில் காத்திரமான சம்பவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் ஈழப் போராட்டத்தின் பங்கும், அதிலும் குறிப்பாக பெண் போராளிகளின் வீரதீரச் செயல்களை நிலை நிறுத்துகிறார் ஆசிரியர் யதார்த்தன் அவர்கள். எல்லாமே கீரிப்பிள்ளை அண்டிய பகுதிகளில் வாழும் பதின்மவயதிற்குட்பட்டவர்களின் பங்களிப்பே முக்கியமாகக் காணப்படுகிறது. ஈழப் போரடாட்டத்தின் இறுதிக்காலங்களில் கட்டாய ஆட்சேர்ப்பு (வலுகட்டாயமாகத் துரத்திப் பிடிப்பது) நிகழ்வுகளை கடுமையாக விரிவாக ஆய்வு செய்து பதிவு செய்கிறார் ஆசிரியர்.
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு போராளி எதன் அடிப்படையில் அங்கு போய் தனது பங்களிப்பை செய்கிறான், அதற்கான மூலகாரணம் என்ன, தானாக முன்வந்து போவதும், குடும்பசூழ்நிலை, காதல் விவகாரம், சாதி வேற்றுமை, சகோதர பாசம், இப்படியாகப் பல காரணங்களை எடுத்து முன்வைக்கபடுவதைக் காணலாம்.
தனக்கு ஒருநியாயம், ஊருக்கு ஒரு நியாயம் என்ற கோட்பாட்டை ஆச்சி மூலம் உடைக்கிறார்கள் ஆசிரியர். ஊருக்கெல்லாம் நகுலாத்தையின் கருணையால் பல இடர்பாடுகளை (ஆச்சியின் இடைவிடாத நம்பிக்கை) வெட்டியெறியும் ஆச்சி, தனது வளர்ப்பு மகளை இயக்கம் கொண்டுபோனபோது நகுலாத்தையைப் பார்த்து மண் அள்ளித்திட்டாத குறையாக, இஞ்ச என்ன நடக்குது, அடியே நீயும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறியோ, உனக்குக் கண் இல்லையா? என்ர பிள்ளையை இயக்கம் கொண்டு போட்டுதோ, இதனை நான் மேலிடத்தின் செல்வாக்கால் மீட்டு வருவேன் என்று காளியிடத்தில் சண்டை போடும் காட்சி, வழமையாக சமுதாயத்திலிருக்கும் மனநிலையை யதார்த்தன் மிகச் சிறப்பாகக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.
இந்நாவலின் வரும் கதைமாந்தர்களே பெண் போராளிகளாகச் சித்தரிக்கப்பட்டுகிறார்கள். விடுதலைக்காகத் தாமே முன்வந்து போனவர்களையும், கட்டாய ஆட்சேர்ப்பு முறையில் போனவர்களையும், அவர்களது பெற்றோர், உறவினர், சகோதரர்கள் பார்ப்பதற்கான பார்வையாளர் தினத்தில், ஓட்டு மொத்த அனைவருமே தங்களது அன்பையும், விட்டுப்பிரிந்த துயரத்தையும், கண்களினூடாகவும், சொற்களினூடாகவும் பகிர்ந்து கொள்ளும் காட்சி, உண்மையிலேயே அவர்களது மனக்குமுறல்களை யதார்த்தன் பக்கத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதைப் போல் ஒரு உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது நண்பர்களே.
போராட்ட காலத்தில் போராளிகள் எதிர்கொண்ட சம்பவங்கள், அவர்களது பயிற்சி முகாம், அவர்களது சாப்பாடு முறை, போராளி ஒருவர் குற்றம் செய்தால் என்ன தண்டனை (மெடிக்ஸ் முகாம் உட்பட) இரகசியத் தொடர்பு சாதனங்கள், இரகசியக் குறிப்புகள், போன்றவற்றையும் தருகிறார் ஆசிரியர்.
இறுதியாக சாரங்கன் நந்திக் கடலுக்குள் இழுத்துச் செல்வது, அவருடன் நூற்றுக்கணக்கான நாய்களும், மகள்கள் கூட்டத்தை இப்படியாக ஆசிரியர் பார்க்கிறாரா?அம்மான் கண் என்று அவர்கள் தங்களது நம்பிக்கைகளைப் புதைத்தார்களா அல்லது வெற்றியடையாத ஈழத்தைப் புதைத்தார்களா? கீரிப்பிள்ளை மேட்டில் வாழ்ந் மக்களின் பண்டைய நம்பிக்கைகளை இருதரப்பு யுத்தத்தினால் அவர்களது அபிலாசைகள் யாவும் ஒழித்தது,குளத்தைக் குண்டு வைத்துத் தாக்கி அழித்ததுபோன்ற நிகழ்ச்சியை ஆசிரியர் மறைமுகமாகக் காட்டுகிறார் போல் தெரிகிறது.
நண்பர்களே, தழிழ் மொழி நடையிலும், தமிழின் நவீன இலக்கியத்தின் உச்சக்கட்டத்தில் தோன்றும் ஒரு சிறந்த படைப்பாகவே பார்க்க முடிகிறது. மிக அருமையான படைப்பு.
பொன் விஜயகுமார். சுவிஸ்
புத்தகத் தலைப்பு:- நகுலாத்தை.
ஆசிரியர் :- யதார்த்தன்
நூல் வெளியீடு :- வடலி வெளியடு.
பக்கங்கள் : – 480
விலை :- 750/-
விற்பனைத் தொடர்பு:-கருப்புப் பிரதிகள், சென்னை-600014,
மொபைல்: 8610242696
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பதி